Loading

    உயிருள்ளவரை உன்னுறவு – 3

 

அத்தியாயம் – 3

  

 

    மருத்துவமனையின் வாசலில் தலை சாய்த்தவாறு அமர்ந்திருந்தாள் விதுரா. அவளுடைய மனநிலை அத்தனை நன்றாக இல்லை. தன்னை நினைத்து அவளுக்கே கோவமாக வந்தது. அத்தனைக்கு அவளது தகப்பன் அவளுக்கு என்ன தீங்கு செய்துவிட்டார். தகப்பனார் மரணத்தின் அரசன் எனும் எமனிடம் உயிர்பிச்சை வாங்கி அவளுக்காக மீண்டு வந்திருக்கிறார். ஆனால் அதுவே அடுத்த நாள் தான் தெரிந்திருக்கிறது. அவளது மனம் இலக்கின்றி அலைபோல கொந்தளிக்க, அவளை உலுக்கினான் பப்பு. 

 

      “என்ன விது… என்ன யோசனை… இத்தனை தூரம் கூப்டுறேன் தட்டுறேன். ஆனா எந்த ரெஸ்பான்ஸூம் இல்லாம இருக்குற… ஆர் யூ ஓகே…?

 

    பப்புவின் கேள்விக்கு எந்த பதிலும் கொடுக்காமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். 

 

     “விதுமா எழுந்து உள்ள போய் அப்பாவ பாத்துட்டு வந்துடுடா… உசுரு பொழைச்சு வந்துருக்காங்க… உன்னைய எதிர்பார்ப்பாங்கமா…”

 

அவளை எழுப்பி தந்தையைக் காணச் செல்லும் முனைப்பில் பப்பு இருக்க,        “ஏன்த்தா ஊரு உலகத்துல உனக்கு வேற ஆஸ்பத்திரியா (மருத்துவமனை) கிடைக்கல… போயும் போயும் இங்க சேத்துருக்க” 

 

       விதுராவின் தந்தையின் காரியதரிசிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டதும் உடனே கிளம்பியவர், காலையில் தான் வந்து சேர்ந்தார். வந்த உடனேயே தன் ஐயாவை அரசு மருத்துவமனையில் தான் வைத்திருக்கின்றனர் என்றதும் அதனை ஏற்க அவருக்கு மனம் வரவில்லை.

 

   யாரென நிமிர்ந்து பார்த்தவள், “இல்ல…‌ நான்… நா… “ அதற்கு மேல் பேச முடியாமல் தலைகுனிந்து விட்டாள்.‌

 

   “யாரு நீங்க…” என்றபடி வந்தான் பப்பு. 

    “நீ தான்” என்றவரிடம்

    “என் பெயர் வளவன்” 

    “அப்ப பப்புங்குற பையன் இங்க இல்லையா” எனத் தேட, புருவம் முடிச்சிட ஒருகணம் ஊன்றி பார்த்தவன், “விதுராக்கு மட்டும் நான் பப்பு. மத்தவங்களுக்கு நான் வளவன்‌” என்று  பொறுமையாக அவருக்கு பதில் கொடுத்தான். 

 

    அவன்தான் பப்பு என்றறிந்ததும் அகத்தில் இருந்த கலக்கத்திற்கு மத்தியிலும்கூட முகத்தில் சின்ன புன்னகை அரும்பியது. 

 

     “எத்தா… இப்படியா ஓஞ்சுபோய் கெடப்பீக…ஐயா உங்களையப் பாக்க எம்புட்டு ஆசையா வந்தாக தெரியுமா… அந்த ஆண்டவன் எல்லாம் நல்லதுக்குத்தான் செய்வான். நீங்க கலங்காதீய… நீங்க கலங்குதினிகனு தெரிஞ்சா அவக மனசு தாளாது ஆத்தா…”

 

   நிமிர்ந்து பார்த்தவள் ஏதும் சொல்லாமல் கண்ணோரம் துளிர்த்த உவர்நீரைத் துடைத்துக் கொண்டாள். 

 

    “உள்ளப்போய் பாருங்க ஐயா… நான் டாக்டர பாத்துட்டு வந்துடுறேன்” என்றவள் பப்புவையும் அழைத்துக் கொண்டு செவிலியர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

 

    இப்பொழுது நினைத்தாலும் அதிசயமாகத்தான் இருக்கிறது. அவள் ஒன்றும் டேட் லிட்டில் பிரின்சஸ் என்று பாசத்தை வாரி வாரிப் பெற்றதில்லை. வாய்மொழி உதிர்க்காத சொல்லப்படாத அன்புக்குச் சொந்தக்காரி. 

 

     தந்தையின் நலத்தினை அறிய மருத்துவர் முன்பு அமர்ந்தவளுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்துவிட்டது போன்ற பிரம்மை. நழுவும் மனதை இறுக்கிப் பிடித்து மருத்துவரின் வார்த்தைக்காகக் காத்திருந்தாள். 

 

     “உங்க அப்பாவுக்கு ஃபர்ஸ்ட் ஹார்ட் அட்டாக் வந்துருக்குமா… இனிமே கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. 

குறைந்தபட்சம் மூன்று மாசமாவது பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும். 

 

    4 டு 5 மந்த்ஸ் பெருசா ட்ராவல் எதும் வேண்டாம். சாப்பாடுல உப்பு எண்ணெய குறைச்சுக்கோங்க… இப்போதைக்கு செமிசாலிட்டா ஃபுட் குடுங்க… மனசளவுல கொஞ்சம் தெம்பா வச்சுக்கோங்க. எதும் ஸ்ட்ரெயின் பண்ண வேணாம். இப்போதைக்கு இது போதும். மேற்கொண்டு டிஸ்சார்ஜ் பண்ணும்போது சொல்றேன்” என்றவர், அடுத்த நோயாளியின் நிலையை கவனிக்கச் செல்ல, இவர்களும் எழுந்து வந்தனர். 

 

    இந்த உலகில் வெகுசிலரே தந்தையின் அன்பை முழுமையாகத் திளைத்து சுகிக்கிறார்கள். ஒரு சிலர் தன்னிடம் இருக்கும் அன்பை வெளிப்படையாகக் கொடுக்காததினால் அந்த அன்பு புலப்படாமல், இருந்தும் இல்லாமலே போய்விடுகிறது. இன்னும் பலர் தந்தை அன்பு எப்படிப்பட்டது என்பதை அறியாமலும் சிலர் பிறரின் தந்தை அன்பைக் கண்டு ஏங்கியபடியும் இந்த உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். 

 

    அப்படியாக வெளியே சொல்லப்படாத, இருந்தும் புலப்படுத்தப்படாத அன்பாகத்தான் விதுரா மற்றும் அவள் தந்தையின் அன்பும் இருந்தது‌. யார் முதலில் தொடங்குவது என்ற சொல்லப்படாதப் போட்டியினால் உறவுக்குள் மெல்லிய திரை விழுந்து விட்டது. தந்தையின் மனதில் அது பாசம் என்றும் மகளின் வரையில் மரியாதை என்றும் சொல்லப்படுகிறது. 

 

**** 

‘அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்கச் சிவப்பு

மச்சான இழுக்குதடி’

 

   பாட்டு பாடுகிறேன் என்ற பெயரில் வீட்டையே அலற விட்டுக் கொண்டிருந்தான் எழில்வாணன். 

 

“பார்த்தியா வேந்தா… இவனுக்காகத்தானே இவ்வளவு நேரமும் வக்காலத்து வாங்குன… ஆடுன காலு ஓயாதுடா… இவன் அங்க வந்தும் இதைத்தான் பண்ணுவான்” 

 

‘டேய் மடச்சாம்பிராணி… உன்ன என்ன செஞ்சாடா தகும்…’ வெளியே சொல்ல இயலாமல் மனதினுள்ளே எழில்வாணனை அர்ச்சித்துக் கொண்டான் குறிஞ்சி வேந்தன். 

 

“அது லாம் நான் அவனை அடக்கி இருக்க வைக்குறேன்பா… என்மேல நம்பிக்கை இருக்குல… அப்புறம் என்னப்பா…” 

 

“உன்ன மட்டும்தான்பா நம்புறேன். அந்தக் கழுதை தடிமாடு போல வளர்ந்தாலும் சின்ன குழந்தை போல… ஏற்கனவே உசுரு பொழச்சு வந்ததே உன்னால தான். ஹ்ம்ம் என்னமோ சொல்லுற… பாத்துக்கூட்டிட்டு போ…” என்று வார்த்தைகள் தளர்ந்த நிலையில் வெளி வந்தன. 

 

“ப்பா… ” வேறு வார்த்தைகளின்றி வேந்தன் நிறுத்த, “இத்தனை நாள் நீதானே ப்பா அவனப் பாத்துக்கிட்ட… இனிமேலும் பாத்துக்க மாட்டியா என்ன… சரி எப்ப கிளம்புறீங்க…” தந்தையவர் நம்பிக்கையுடன் பதிலளித்து மலைக்கச் செய்தார். 

 

  ஒரு கணம் வியப்பு மேலிட நோக்கியாவின், “ நான் என்னோட ரிசர்ச் விஷயமா இரண்டு நாளைல கிளம்புறேன் ப்பா… அவன நான் அடுத்த வாரம் வந்து கூட்டிட்டு போறேன். இப்ப அவன் அத்தம்மா கூடவே இருக்கட்டும்” என்று பதிலளித்தான்.

 

“அது என்னடா நான் உனக்கு அப்பா. ஆனா அவ உனக்கு அத்தம்மாவா? நல்லா இருக்குடா உன் நியாயம்” என்று சொல்லிச் சிரிக்க, சிரிப்புடன் தனதறைக்குச் சென்றான் வேந்தன். 

 

அங்கோ எழில் , அடுத்த பாட்டாக 

‘வாடி பொட்டப்புள்ள வெளியே…

என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

வாடி பொட்டப்புள்ள வெளியே…

என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…’

 

என்று கண்களை ஐமாஸ்கினால் மூடியபடி ஆடிக் கொண்டிருந்தான். 

 

அவனது பின்னால் வந்து நின்ற வேந்தன், பின் பக்கமாக மிதிக்க, “அம்மா” எனக் கத்தியபடி விழுந்தான். 

 

“அடிங்க… என்னடா நினைச்சுட்டு இருக்குற உன் மனசுல…” 

 

“சத்தியமான உன்ன இல்ல” என்று கூறி கடுப்பேற்ற முனைய, அடிக்கத் துரத்தினான் வேந்தன் . ஓடிக்கொண்டிருந்த சுவரின் பக்கம் எழில் வாணன் விழப்போக, எட்டி அவனது இடையோடு பிடித்துக்கொண்டான் வேந்தன். 

 

அந்த நேரம் கதவைத் திறந்து எழல்வாணனின் தாயார் வர, “அத்தம்மா” என்று வேந்தனும் “ம்மீ” என்று எழில்வாணனும் கோரஸாக அழைத்திட , 

“அடச்சை அவனுகளாடா நீங்க… என் புருஷன் கிட்ட சொல்லிவைக்குறேன் இருங்க… சீச்சீ…” என்று திரும்பி போனார். 

 

அவர் மகன்களும் பின்னே ஓட, மீண்டும் படிகளில் விழப் போனான் எழில்வாணன். அவனை இழுத்துப் பிடிக்க முயன்ற குறிஞ்சி வேந்தன் எதிரில் வந்த தன் மாமனை பிடிமானத்திற்கு பிடிக்க , அதுவோ கடைசியில் முத்தக்காட்சியில் முடிந்தது. 

 

   படியின் கீழே நின்றிருந்த தாயார் அந்தக் காட்சியைப் பார்க்க, “ அடேய் அடேய் அந்தாளு என் புருஷன்றா… யோவ் உனக்கு கிஸ்ஸூ வாங்க வேற ஆளே கிடைக்கலயா… ச்சைக்” என்று புலம்ப , எழில்வாணனுக்கு ஒரே குஷியாகப் போனது. அதில் கடுப்பான தந்தையார் சப்பென எழில்வாணனை அறைந்தே விட்டார்.  

       “ கொன்னுடுவேன் ராஸ்கல். உன் நிலைமை என்னனு உனக்கு தெரியாது… விழுந்து வாருனா யாரு வச்சு பாக்குறது. புத்தி இருக்கா இல்லையா…” பயம் கலந்த கோபத்தில் கத்தியே விட்டார். 

 

      திடீரென தந்தையின் கத்தலில் எழில்வாணன் கலங்கிட, அவனை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் வேந்தன். தாயாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் அதிகமாக கணவர் கத்தி விட்டதாகத் தோன்றியது. 

 

    “ இப்ப என்னவாம் உங்களுக்கு… வயசுப்புள்ளைங்க எந்த வீட்டுலயும் கத்தலயா… எதோ அதிசயமா கத்துனதாட்டும் எம் புள்ளைய எப்ப பாரு கத்துறீங்க. இதுவே கடைசியா இருக்கட்டும். பொத்திப் பொத்திப் பாத்துக்குறேன்னு ஒரேடியா அவன் மனசுல வில்லனா மாறிடாதீங்க…” 

 

தாயாருக்கு அதைக் கூட கத்திச் சொல்ல வரவில்லை. குழந்தை மனம் இப்பொழுதும்கூட. கத்திச் சொல்ல நினைத்தால் பேச்சு கீச்சிட ஆரம்பிக்கும். 

 

    சகுந்தலா ஞானசேகரன் தம்பதியர் – எழில்வாணனின் தாய் தந்தை. துசுயந்தரும் சகுந்தலை தேவியரும் காதலில் விழுந்து கந்தர்வ மணம் செய்ததுபோலவே ஒரு தேவாலயத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிக் காதலில் விழுந்தவர்கள், அந்த ஊரிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கந்தர்வ மணம் செய்து பின் சில காலங்களில் சேர்த்து வாழ ஆரம்பித்தனர். 

    இரு குடும்பமும் ஒப்புதல் தராத நிலையில் தாங்கள் வாழ்ந்த மதுரையை விட்டு வெளியே வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழத்தொடங்கினர். அவர்கள் காதலின் பலனாக உதித்தனர் எழிலரசி மற்றும் எழில்வாணன். எழிலரசியை ஒரு வருடத்திற்கு முன்பு திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். 

 

    குறிஞ்சி வேந்தன் சகுந்தலாவின் அண்ணன் மகன். பிள்ளை பெற்ற உடன் அவன் தாய் இறைவனடி சேர, தந்தையார் மறுதிருமணம் செய்துவிடவே , அவனை மகனெனப் பிறப்பு முதலாக சகுந்தலாவே பெயரிட்டுத் தாலாட்டி சீராட்டி தாயாகி வளர்த்தார். அத்தையின் அன்பில் தாயின் அன்பினைக் கண்டவன் அவரை விவரம் தெரிந்த நாள் முதலாக ‘அத்தம்மா’ என்று அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். 

   சகுந்தலாவின் திருமணத்தின்போது வேந்தனைத் தனித்து விட விருப்பமின்றி அவனையும் அழைத்துவர, ஞானசேகரனுக்கும் மூத்த மகனாக வேந்தன் இருந்தான். வேந்தனின் நான்கு வயதில் இருந்து ஞானசேகரன் அவனின் தந்தையாகிப் போனார். அவரது வித்தாக இரு பிள்ளைகள் வந்தபோதும் அவரது மூத்தப்பேறு வேந்தன் மட்டுமே… 

 

       காதலுக்கு சாதி மத பேதமில்லையே… சகுந்தலாவின் விருப்ப தெய்வம் இன்றும் தன் மிகுந்த காதலால் தெய்வத்தினைக் கணவனாக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்மையார் தான். ஞானசேகரன் இயேசுவை வழிபடுபவர். இருவரும் ஒருவரை ஒருவர் தன் தெயவத்தை வழிபட வற்புறுத்துவது இல்லை. அம்மனை வழிபட ஒரு அறை இருப்பதுபோல இயேசுவைத் துதிக்கவும் ஒரு அறை அவர்கள் வீட்டில் உண்டு… 

 

    ஆனால் தற்போது ஒரு வருடமாக ஞானசேகரன் தன்னிடம் எதையேனும் மறைக்கிறரோ என்பதாக சகுந்தலாவிற்கு ஒரு எண்ணம்… சிற்சில நாட்களாக வேந்தனும் ஞானசேகரனும் அடிக்கடி தனியே ரகசியம் பேசுவதையும் காணமுடிகிறது. அவரது செல்ல மகன் எழில்வாணன் செய்யும் சிறுசிறு சேட்டைகளைக்கூட அதிகமாக கண்டிக்கிறார். இன்று அது கொஞ்சம் அதீதமாக சென்று விட்டதாகத் தோன்றுகிறது.

 

     ‌அப்படி தன்னிடம் மறைக்கும் அளவிற்கு என்ன காரியம் இருக்கும் என்ற குழப்பமும் வருத்தமும் கலந்திட சமையலறை சென்றார் சகுந்தலா. 

 

 

நம் எண்ணங்கள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்திடும் என்று எண்ணினால் இறைவன் என்ற ஒருவன் இப்பூவுலகில் எதற்கு…? 

 

 

தொடரும்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்