அத்தியாயம் – 11
மனித கணக்கு ஒன்றாக இருக்க, இறைவன் கணக்கு வேறொன்றாக இருக்கிறது என்பதை அவன் செயல்கள் அடிக்கடி வெளிக்காட்டுகின்றன.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவிழந்து படுத்திருந்தாள் விதுரா. ஆதரவின்றி அநாதையைப் போன்ற நிலைமை… என்ன செய்யவென்று தெரியவில்லை.
அதே மருத்துவமனையின் ஐசியூவில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் எழில்வாணன். அவன் உயிர்ப்பிச்சை வேண்டி ஞானசேகரனும் வேந்தனும் காத்துக் கிடந்தனர்.
“டாக்டர் பேசன்ட் நினைவு திரும்பிட்டாங்க… “
“அம்மா…” என்ற விதுராவின் குரல் அந்த இடத்தை நிரப்பியது.
“சத்தம் போடாத மா…” ஒரு செவிலியர் அதட்டினார். ஆனால் அமைதியாய் இருக்க முடியுமா… தன் தாயின் நிலை அறியாது நின்றிருந்தாள்.
“அ…அம்மா… என் அம்மா”
“கஷ்டப்பட்டு பேசாதமா… நீ பேசாம படுமா…”
அவர்கள் சத்தம் மீறி எதிரொலித்தது பெண்ணவள் குரல். தலையில் போட்டிருந்த கட்டில் இருந்து குருதி வழிந்தது. மூச்சு முட்டிட, “ஆ…ஆ…அம்மா…” தாயின் ஸ்பரிசத்துக்கு ஏங்கினாள். தாய் தந்த மூச்சுக் காற்று கூட கிடைக்காமல் அல்லாடினாள்.
“நர்ஸ் மாஸ்க் கனெக்ட் பண்ணுங்க… பல்ஸ் டவுன் ஆகுது…“ மருத்துவர் ஒருவர் குரல் கொடுக்க, அடுத்தடுத்த காரியங்கள் பரபரப்பாய் நிகழ்ந்தது.
கண்கள் இரண்டும் வெளியில் வந்துவிடுவது போல இருக்கா இருந்தது. அவள் உயிரோ இருக்கவா பிரியவா என்று அறியாத நிலை. அதையும் தாண்டி தன்னவனின் உடனிருப்பு கேட்டது உடல்… தந்தையின் கரத்தில் அழகாய் ஒளிந்து கொள்ளும் ஸ்பரிசம் அவனிடத்தில் கண்டாளே… ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
மெல்ல மெல்ல இமைகள் மூடிக்கொண்டது.
“பேஷன்ட் திரும்ப அன்கான்சியஸ் ஆகுறாங்க… பேஷன்ட் அட்டென்டர் இல்லையா?.. கால் தெம்“
கட்டளைகள் மீண்டும் பிறந்தது.
மற்றவர்கள் நகர்ந்த நேரம் “நீ செய்த தவறுக்கு தண்டனை அடையாம இந்த உலகத்தை விட்டுப் போகக் கூடாது. இது இந்த வேந்தனின் கட்டளை. காட் இட் “
அவன் குரலே… அவளவளின் தலைவன் குரல்… மெய்யானவளின் வேந்தன் குரல்… அவள் கொண்ட காதலின் ஆழம்… மூடிய விழிகள் திறந்தன. இயந்திரமாய் காரியங்கள் நடைபெற்றது.
காவலர்கள் வந்தனர் “ உங்க அம்மா இறந்துட்டாங்க … “ என்ற செய்தியுன்.
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். கண்கள் உவர்நீரைச் சொரிந்தன. அவளுக்கு கத்தி அழும் பாக்கியம் கூட கொடுக்கப்படவில்லை.
தாயாரின் உடல் பாகங்கள் தானம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தில் முன்னமே எழுதிக் கொடுக்கப்பட்டது
இந்தப் பக்கம் எழிலனுக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. மூளைக்குச் செல்லும் பாதையில் ஆக்கிஜன் மற்றும் ரத்தம் செல்வது தடைபடுவதால் உருவாவதே இந்த நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்ட முதல் 30 நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்தால் இந்த நோய்க்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டு குணமளிக்கப்படும். இல்லையெனில் அது வாழ்நாள் முழுவதும் சரியாகாது.
எழிலன் மருத்துவமனைக்கு முதல் 10 நிமிடங்களில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டதால் அவனுக்கு டிபிஏ (tPA) என்ற சிகிச்சை ஆரம்பமானதால் நோயிலிருந்து குணமடைந்தான்.
ஆனால் நடந்த விபத்தில் அவனுடைய வலது கண் முற்றுமா செயலிழந்து விட்டது. இனி அவனுக்கு கண் பார்வை வர, மாற்று கண்ணை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி தான் பார்வை வரவைக்க வேண்டும்.
காவலர்கள் என்ன நடந்தது என விசாரித்துக் கூறிய பதிலில் வேந்தன் விதுராவை வெறுத்து விட்டான். காதல் பைங்கிளியாய் சுற்றியவர்கள் வெவ்வேறு திசையில்… வேந்தன் கண்ணெத்தும் பார்க்கவில்லை. செய்யாத பழி ஏற்று மடந்தையவள் சிறை சென்றாள். ஆனால் அங்கு மனநலம் பாதிப்படைந்து மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜாண்போஸோ தன் காதல் மனைவி கண்ணீர் விட்டு பிரிந்த துக்கத்தில் தன் மகளை கவனிக்க மறந்தார். இன்னும் சொல்லப்போனால் விதுராவால் தான் தன் மனைவி இறந்தாள் என்ற எண்ணத்தில் அவளை ஒதுக்கி வைத்தார்.
அனைத்து பழியையும் ஏற்றவள் தனக்குள்ளே வெதும்பிப் போனாள். இந்த இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து கல்லூரி மெயின் தேர்வு பிராக்டிகலில் சிக்கிய மீரா, இரு மாதங்கள் கழித்து வந்து பார்க்க, விதுரா வேறு ஒரு கோலத்தில் இருந்தாள். அந்த நொடி வேந்தனின் மேல் தான் கோவம் வந்தது.
“விதுமா”
“விடுங்க… நான் கொலை பண்ணல… நான் எதும் பண்ணல…”
“டேய் இங்க பாருமா… நான் மீராடா… டேய் தங்கப்பொண்ணு பாருமா…”
எத்தனை தட்டியும் பயன் இல்லை… சுயநினைவு இன்றி எதோ ஒரு பயத்தின் பிடியில்… இதைத் தாண்டி அவளால் ஒரு குழந்தைத் தாயாக முடியாது. கருப்பை பலமாக அடிவாங்க, பெண்களின் சேய் தாங்கும் தாயவள் உறுப்பு வெட்டி எறியப்பட்டது.
இவை எல்லாம் தாண்டி எப்படி நடந்தது என்று மீரா விசாரிக்க ஆரம்பித்தாள் . விதுராவை மீட்க ஆதாரங்கள் தேடி அலைந்தாள்.
மதுரையில் தன் வீட்டிற்கு தன் தாயுடன் கிளம்பினாள் விதுரா. அதே நேரத்தில் எழிலனும் அவனது நண்பனும் காரில் மதுரை வழியாக பிரயாணம் மேற்கொண்டனர். சரியாக வண்டி ஓட்டத் தெரியாத எழிலன் மதுரையில் வைத்து தான் ஓட்டுவதாகப் பிடுங்கி ஓட்டியதில் விபத்தை ஏற்படுத்தினான்.
நிலைமை உணர்ந்து அவன் நண்பன் வெளியில் குதிக்க, உயிர் பிழைத்துக் கொண்டான். ஆனால் முன்னிருந்த விதுராவின் தாயின் உயிர் ஊசலாடி மருத்துவமனையில் பிரிந்தது. எழிலனும் தப்பினான். விதுராவோ அவள் வேந்தனின் ஒற்றைச் சொல்லுக்காக எமனிடம் போராடி மீண்டு வந்து விட்டாள்.
ஆனால் வேந்தனிடம் சொல்லப்பட்டதே வேறு. விதுரா வண்டி ஓட்ட தெரியாமல் நிதானமின்றி ஓட்டி பெருஞ்சேதம் உருவாக்கினாள் என்பதாக செய்தி வந்தது.
கடைசியாக மீராவின் வழியாக உண்மை செய்தி வேந்தனை அடைய, தன் தம்பியின் பெயர் அடிபடாத வண்ணமாக விதுராவின் தண்டனை மாற்றினான். ஆனால் குற்றவுணர்வு கொன்றெடுத்தது.
இதைத் தாண்டி ஜாண்போஸிற்கும் நிரூபித்தாள் மீரா. உண்மை நிரூபித்தவள் துன்பத்தின் காலத்தில் எட்ட நின்ற தந்தை உறவை பின்னும் தூரத்திலே நிறுத்திக் கொண்டாள்.
விதுராவின் விடயத்தில் என்ன செய்தும் பயன் இல்லை. நாட்கள் அதன் போக்கில் போக, காலம் அவள் காயத்தைக் கொஞ்சம் மாற்றியது.
நல்ல நட்பைத் துன்பத்தின் காலத்தில் அறியலாம். இதோ துன்பத்திலும் தாயின் அன்பைப் பொழிந்து காத்தாள். அந்த அன்பு அவளை ஆறு மாத காலப் போராட்டத்தில் மீட்டெடுத்தது. வேந்தன் இல்லாத உலகத்தை எதிர்கொள்ள பலன் கொடுத்தது.
திரும்பி வந்தாள் வேறொரு பெண்ணாக… தனி மனித வாழ்வின் இன்ப துன்பங்களை தானே சரிசெய்பவளாய்… எட்ட நிறுத்திய வரை வெகுதூரத்திலே நிறுத்தியவளாய்…
அவளால் மீண்டு கொள்ள இயலாத ஒரு உறவு அம்மா... எந்த நபராலும் ஈடு செய்ய இயலாத உறவு. தாயின் கண்கள் யாருக்குப் பொருத்தப்பட்டது என்ற கேள்வியை மட்டும் விடாமல் பதில் தேடத் துவங்கினாள்…
தேடலின் துவக்கம் பெரிதாய்ச் சென்றது.
தேடலின் பிடியில் வேந்தனின் மெய்யவள்…
தொடரும்…