அத்தியாயம் – 10
“நாளைக்கு இன்டர்னல் பரிட்சை இருக்குங்க… நான் போகட்டுமா…”
“டேய் டேய் முடியலடா எப்பா… நீ கிளம்புமா தாயே… “ என்று விரட்டி அனுப்ப, கிளம்பினாள் விதுரா.
சுற்றம் மறந்து காதல் உலகில் சஞ்சரிக்கத் துவங்கினர். முதிர்ச்சி இல்லாத காதல்… மனதில் இருந்ததைக் கொட்டினரே தவிர, எதோ கையை விரித்தால் பறந்து செல்லும் குருவியென ஒருவரை ஒருவர் இறுக்கி அமிழ்த்தி விடும் வேகம் அவர்களிடத்தில்.
சற்று நேரம் பிரிந்து அமர்ந்து நிலை உணர்ந்து செயல்படும் நிதானமின்றி இருந்தனர். இரண்டு வருடம் மனதில் உருப்போட்டக் காதல் தான். ஆனால் சற்றும் நிதானம் இல்லையே…
வீட்டிற்கு வந்து அமர்ந்திருந்த விதுராவைக் கண்டு மீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்களாக அவளும் பார்க்கிறாள் தானே… அடிக்கடி வகுப்பைத் தவிர்த்து வெளியே செல்கிறாள். வகுப்பில் இருந்தாலும் கவனம் இல்லை அல்லது தூங்கி வழிகிறாள். இரவில் நெடுநேரம் அலைபேசியில் பேச்சு… எத்தனை நாட்களுக்கு இந்தப் பரபரப்பு…
மீரா தனது காதல் கதையை ‘எட்டு வருச காதல்றா’ என்று வெறுமனே சொல்லவில்லை… காதலை உணர்ந்து சுகித்து காத்துக்கிடந்து அனுபவித்திருக்கிறாள்.
சிறு வயது காதலாகவே இருக்கட்டுமே… பதிமூன்று வயதில் பூத்த காதல் தான்… அவள் வெளிப்படுத்தியது என்னவோ பதினேழு வயதில் தான்… இந்த மூன்று வருடங்களில் அப்படி ஒன்றும் நிதானம் தவறி நின்றதில்லை.
காதலில் பல வகை உண்டு தான். ஆனால் எந்த வகையான காதலுக்கும் நிதானம் அவசியமே… நிதானமில்லாத வண்டி எப்பொழுது கவிழும் என்று யாருக்கும் தெரியாது… அப்படி தான் இவர்கள் நிலையும் மாறுமோ என்ற எண்ணம் மீராவினுள் வந்தது.
பேசிக் கொண்டிருந்த விதுராவின் அலைபேசியைப் சட்டெனப் பிடுங்கினாள் மீரா… அதை சற்றும் எதிர்பாராதவள் அலைபேசியை ஸ்பீக்கரில் போட, வேந்தனின் முத்த மழைகள் வெளியில் ஒலித்தது. சத்தத்தில் முகம் சுருங்க, அழைப்பைத் துண்டித்தாள் மீரா.
“என்னது இது… என்ன பண்ணிட்டிருக்கனு உனக்குப் புரியுதா?..“ சற்று கோபமாக மீரா வினவ,
“நீ தான் என் ஃபோன பிடுங்கின… அதான் தெரியுதுல்ல பேசிட்டு இருக்கேன்னு…”
“உனக்குப் புரியுதா விதுரா… நீ குழில விழுந்துட்டு இருக்க… நான் காதலைத் தப்புனு சொல்லல… அந்தக் காதல் உன்ன உயர வைக்கணும். உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாது… செய்ற விஷயத்தைத் தெரிஞ்சு புரிஞ்சு பண்ணு“ சற்று வேதனை படிந்த முகத்துடன் கூறினாள் மீரா.
ஆனால் விதுராவோ உணரும் நிலையில் இல்லை… காதல் தந்த மயக்கத்தில் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் வேந்தன் அழைக்க, மீராவிற்கு மிகுந்த கோபம் உண்டாகி விட்டது.
“விது… ஏன் ஃபோன கட் பண்ணுன… கால் கட் ஆச்சுனா திரும்ம கால் பண்ணி இருக்கலாம்ல…” கொஞ்சம் சத்தமாகப் பேச, மீராவிற்கு அவனை அடிக்கலாமா என்று இருந்தது.
“சீனியர் ஃபோன் அவகிட்ட இல்ல… என்கிட்ட தான் இருக்கு. நீங்க அப்றம் கால் பண்றீங்களா?…”
“ஏன்மா … அவளுக்கு என்னாச்சு… ஃபோன் அவகிட்ட குடேன்…” வேந்தன் திரும்ப கேட்க,
“மணி பதினொன்று ஆகிடுச்சு சீனியர். மார்னிங் பேசுங்களேன்” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினாள்.
“குடும்மா ப்ளீஸ்மா…”
“ஏங்க சொன்னா புரியாதுங்களா உங்களுக்கு?“ என்றிடும்போதே விதுராவின் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆனது.
“இப்ப சந்தோஷமா, திருப்தியா இருக்குமே… நாளைக்கு அவங்க என்ன என்ன சொல்ல போறாங்களோ… நீ உன்னோட எட்டு வருச காதல புராணம் பாடு போமா போமா…” என்று என்ன பேசுகிறோம் என்பதை உணராது பேசினாள் விதுரா.
அவள் பேசுவதைக் கேட்ட மீராவிற்கு கோபமும் கவலையுமாக இருந்தது. இந்த அளவிற்கா சுற்றம் மறந்து திரிய வேண்டும்… இப்படி வேகமாய் வந்திட்ட காதல் என்ன என்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என்ற பயம் வேறு…
விதுரா மீராவை முறைக்க, அலைபேசியை சார்ஜரில் இட்டவள், தனது அலைபேசியில் விதுராவிடம் இருந்து எண்ணைப் பெற்று அழைத்தாள்.
வேந்தனும் தன் அலைபேசியை எடுக்க,
“நான் மீரா பேசுறேன் சீனியர். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு… அதான் அதுல பேச முடியல… விதுவ எதும் தப்பா நினைக்காதீங்க “ முன்னெச்சரிக்கையாகப் பேசினாள்.
“ஓகே மா” என்றவனுக்கு இதற்கு மேலும் எப்படி விதுராவுடன் பேசுவது என்ற எண்ணம்… அடுத்தவரின் அலைபேசியைத் கேட்க சங்கடமாகவும் இருந்தது.
“அண்ணே…”
“ஹான் சொல்லுமா…”
“அண்ணேனு கூப்பிடலாம் தானே…”
“அதுக்கென்னமா… தாரளமா கூப்பிடு”
“சரி நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்… இப்போதைக்கு என் ஃபோன் அவகிட்ட கொடுக்கிறேன். இரண்டொரு வார்த்தை பேசிட்டு வச்சுருங்க…
ஆனா நாளைக்கு மதியம் சாப்பிடும்போது கேன்டீன் வாங்க. உங்களுக்கும் நானே சாப்பாடு கொண்டு வர்றேன். அப்புறம் உங்க லவ்வர் கிட்ட பேசிட்டு என் ஃபோன செல்ஃப் ல வைக்க சொல்லிடுங்க அண்ணே…” என்றவள் மேசையில் தன் அலைபேசியை வைத்து விட்டு அடுத்த நாளுக்கானப் பொருட்கள் அடுக்கி, வீட்டின் சமையலறையை ஒதுக்கி வைத்துவிட்டு தூங்கச் சென்றாள்.
“வேந்தா…”
விதுராவின் குரல் சோர்ந்து உடைந்த நிலையில் இருந்து வெளி வந்தது.
“என்ன ஆச்சு விதுமா… உன் குரல் ஏன் ஒருமாதிரி இருக்கு…”
“நாம எதும் தப்புப் பண்றோமா …”
“என்னடா இப்படி பேசுற”
“எப்பயும் என்ன விட்டுப் போக மாட்ட தானே…”
“டேய் என்னடா பேச்சு இது…”
“என்னமோ தெரியல வேந்தா…
இரண்டு வாரமாவே மனசு நிலையா இல்ல… அந்தத் தவிப்புனால தான் அப்பயாவது என் காதல வாய் விட்டுச் சொன்னேன். ஆனா என் தவிப்பு அதிகமாகத்தான் செய்தது “
“ஒன்னும் இல்லடாமா… நீ நல்லா தூங்கு“ என்றிட,
“என் தவிப்பு உனக்குப் புரியல… அந்த தவிப்பு மறைய தான் எப்பயும் உன்னையே ஒட்டிக்கிட்டுத் திரியுறேன்… என்னால நிம்மதியா மூச்சுவிடக்கூட முடியலடா… ஐ கான்ட்… பேசாம நான் நைட் டியூட்டிக்குப் போகவா…” என்று விக்கி விங்கி அழ, வேந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவனும் சாதரண மனிதன் தானே… அவன் மட்டும் என்ன செய்திட முடியும். என்ன காரியம் என்று தெரிந்தால் அதற்கு தீர்வு சொல்லலாம். பிரச்சினை எதுவென்றே தெரியாத நிலையில் அவனும் என்ன செய்ய இயலும்…
அவளை மெல்ல மெல்ல எவற்றையும் யோசிக்க விடாது தூங்க வைத்தவன், நானும் தூங்கினான்.
மறுநாள் காலையில் கல்லூரியில் பார்க்க, பெண்ணவள் முகம் சற்று வீங்கிப்போய் இருந்தது. காலையிலேயே மீரா காலை உணவைக் கொடுத்து விட்டுச் சென்றாள். அவன் பேச எத்தனிக்க, மதியம் பேசுறேன் ண்ணா என்ற வார்த்தைகளோடு கடந்து சென்றாள். வகுப்பிற்கு நேரமாவது உணர்ந்து அவனும் சென்று விட்டான்.
மதிய நேரத்தில் பன்னிரண்டரை மணி போல மீரா கேன்டினிற்கு வர, அவளின் பின்னே விதுராவும் பொறுமையாக வந்து சேர்ந்தாள். இத்தனை நாள்களில் புதிதாக மீராவின் மௌனம் விதுராவை கொஞ்சம் பாதித்தது. இரு வாரங்களாக காதலில் திளைத்திருந்த போது உணராத வெறுமை இப்பொழுது நிதானிக்கும்போது வெளிப்பட்டது.
“இந்தா ண்ணா… இதுல காளான் பிரியாணியும் காலிஃப்ளவர் ப்ரையும் வெங்காய ரைத்தாவும் இருக்கு “ என்று புன்முகமாகக் கூறியவள் தனது உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
“விதுராவுக்கு மா…”
“அவ கேன்டீன்ல தானே சாப்பிடுவா… அப்படினா கூட அவ தானே சாப்பாடு எடுத்து வருவா… என்னைய கேட்டா எனக்கு எப்படிணா தெரியும்… “
“ஏன்மா விதண்டாவாதம் பண்ணுற…”
“நான் விதண்டாவாதம் பண்ணல ண்ணா… இவ்வளவு நாளா நான் சாப்பாடு செய்து வைக்கிறேன் தான். அவ ஒரு நாளும் சாப்பாடு எடுத்து வந்தது இல்லையே… ஏன் இரவுலயும் சாப்பிட்டது இல்லையே… இப்ப என்ன புதுசா கேக்குறீங்க… “ என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
“அப்ப அவளோட மதிய சாப்பாடு… “
“அவளுக்கும் சேர்த்துதான் சமைக்குறேன். மதியம் சாப்பிட மாட்டா. சாப்பாடு மீதம் ஆகிடும். நைட்டும் சாப்பிட மாட்டா… சில நேரம் நீங்களே வெளில கூட்டிட்டு போவீங்க… மீதிய நான் சாப்பிட்டு எல்லாம் கழுவி ஒதுக்கிடுவேன். அவ்வளவு தான்…”
சற்றே அதிர்ந்தவன், “ இது எத்தனை நாளாமா நடக்குது” என்று கேட்க,
“உங்கக் காதல் மலர்ந்த நாள் முதலாகத்தான் “ என்றவள் தன் பாத்திரத்தில் இருந்த உணவைச் சத்தமின்றி உண்ண ஆரம்பித்தாள்.
அதிர்ந்திருந்த வேந்தனின் முகத்தில் துளியும் மாற்றமில்லை.
“என்னடி இது… “
“அவள கேட்க உங்களுக்கு உரிமையில்லைனு தான் நான் சொல்லுவேன்”
அவன் தவிப்பாக நோக்க, “ஆமா, உங்க காதல்ல கொஞ்சமாச்சும் நிதானம் இருக்கா?… சுத்தமா இல்ல… ஏன் இப்பவே மொத்த வாழ்நாளையும் இழந்து முதிர்வயதுலயா இருக்கிறீங்க… சில நேரங்களில் உங்கக் காதலைப் பார்த்தால் காதலா? கவர்ச்சியானு? தான் தோணுது…
உங்க காதல் எப்போதும் உங்கத் துணைய உயர்த்தணும்… குழில தள்ளக் கூடாது”
“என்னமா பேசுற நீ… குழில தள்ளுறேன்… அதுஇதுனு… என்னைய பார்த்தா அவளை விட்டுட்டுப் போயிடுவேன்னு தோணுதா?…” என்று வார்த்தையின் வீரியம் தாங்காது கேட்டான்.
“போற போக்கப் பார்த்தா அப்படி தான் தெரியுது…” என்றவள் இடைவெளி விட்டு “படிப்புல நல்லா ஸ்கோர் பண்ணுவா… அவ கிளாஸ்ல தூங்கி நான் பார்த்ததே இல்லை. ஆனா இப்போ கிளாஸ்ல தூங்குறானு பனிஷ்மென்ட் வாங்குறா… சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சு சாப்பிட்டு கொஞ்சம் காலம் ஆகுது.”
“நிஜ உலகத்துல வாழுங்க… ஒரேயடியாக டிரீம் உலகத்துல வாழாதீங்க… நீங்க இப்போ ஃபைனல் இயர். ஆனா அவ இப்ப தான் இரண்டாவது வருடம். நாம் எல்லாம் மனுஷ உடம்ப ஹேண்டில் பண்ண போறோம். சிபிஆர் குடுக்க தெரியாது உங்கக் காதலிக்கு… ஏன்னா கிளாஸ் கட் பண்ணிட்டு அவங்க தான் உங்க கூட வர்றாங்களே…”
“நீங்க ரிசர்ச்னு வெளிய போறீங்க… ஓகே. ஆனா அவ முக்கியமான க்ளாஸஸ் கட் பண்ணுறா… அட்டென்டன்ஸ் என்னாகும்னு யோசிச்சீங்களா?… காலேஜ் கண்ணுல மண்ணள்ளி போட்டு எஸ்கேப் ஆகலாம், ஆனா வாழ்க்கை…”
“என்ன நடந்தாலும் நான் ராணி போல வச்சுப்பேன் என்ற எண்ணத்தை விட்டுட்டு தனிமை நின்றாலும் வாழ்க்கைய பழக வைங்க… எந்த தவிப்போ, வலியோ, கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ தன்னுடையத தானே ஹேண்டில் பண்ணத் தெரியணும். இல்லைனா வாழ்க்கை திண்டாட்டம் தான்” என்றவள், சாப்பிட்டு முடித்துத் தன் பாத்திரத்தில் கைபடாமல் கொஞ்சம் சாப்பாட்டை ஒதுக்கி விதுராவிற்கு வைத்துவிட்டுச் சென்றாள்.
புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது . வார்த்தைகள் பேசாத இடத்தில் மௌனம் அழகு தான். ஆனால் சில நேரம் அந்த மௌனம் வெறுமையையும் வெறுப்பையும் உருவாக்கி விடும். இந்த மௌனமும் இருந்தது.
“விதுமா இப்ப எதும் பேச விரும்பல… நீ சாப்பிட்டுக் கிளம்பு… அந்தப் பொண்ணு சொன்னதும் நியாயம் தான்… என் காதல் உன்ன உயர்த்தாம கீழ தான் தள்ளுது… நீ உயரணும்… பெருசா வளரணும்… நீ உன் படிப்புல கரெக்டா இரு… படிச்சு முடி…”
“நம்ம காதலுக்கும் ஒரு பொறுமை நிதானம் வேணும்… ஈசியா கிடைச்சதுனால அதோட அருமை நமக்கு புரியல போல… கொஞ்சம் மூச்சு முட்டாம நிம்மதியா நிதானமா தான் காதலிப்போமே தப்பில்லையே” என்றவன் அவளுக்கு உணவை ஊட்டி விட்டு அவள் முன்நெற்றியில் முத்தம் பதித்து அவ்விடம் விட்டுச் சென்றவன், அறியவில்லை அதுவே அவர்களின் கடைசி காதல் பேச்சாக இருக்குமென்று. அறிந்திருந்தால் போயிருக்க மாட்டானோ என்னவோ?…
தொடரும்…