ஆர்யான் சிதாராவின் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, தன்னவனின் விழி நீர் தந்த வெம்மையில் சிதாராவின் விரல்கள் மெதுவாக அசைந்தன.
ஆர்யான் மினி… மினி… என குரலில் மொத்த காதலையும் தேக்கி வைத்து அவள் பெயரை விடாது உச்சரித்தவன் சில நொடிகளில் அப்படியே உறங்கி விட்டான்.
நன்றாக இரவாகி விட சிதாராவின் வயிற்றில் தலை வைத்து அவளை லேசாக அணைத்தபடி படுத்திருந்த ஆர்யானின் தலையில் மெதுவாக ஒரு கரம் பதிந்தது.
அதில் விழிப்புத் தட்டிய ஆர்யான் அவசரமாக தலையை உயர்த்திப் பார்க்க சிதாரா தான் கண் விழித்து ஆர்யானின் தலையில் கை வைத்திருந்தாள்.
கண்கள் கலங்க, “மினி….” என மகிழ்ச்சியின் உச்சத்தில் கத்திய ஆர்யான், “மி…மினி… நீ கண்ணு முழிச்சிட்டியா… தேங்க் காட்… நீ நல்லா இருக்கேல்ல….” என்றான் பதட்டமாக.
சிதாரா கஷ்டப்பட்டு ஏதோ கூற முனைவதைக் கண்டு அவள் முகத்தினருகே சென்று,
“என்ன மினி… ஏதாவது சொல்லனுமா…” எனக் கேட்டான்.
சிதாரா தலையை மேலும் கீழும் அசைத்து ஆம் என்றவள் கண்களால் ஆர்யானை இன்னும் சற்று நெருக்கமாக வரக் கூறினாள்.
அவளை நெருங்கிய ஆர்யான் சிதாரா கூறுவதைக் கேட்க வேண்டி தன் காதை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல,
“ரொ… ரொம்…ப.. பயந்..துட்டி..யா..” எனப் புன்னகையுடன் கேட்டாள் சிதாரா.
சிதாரா அவ்வாறு கேட்டதும் மேலும் கண்ணீர் வடித்த ஆர்யான் பட்டென அவளை அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன்,
“ஐம் சாரி மினி… என்ன மன்னிச்சிரு… என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு… நான் மட்டும் உன் மெசேஜ பார்த்து கரெக்ட் டைமுக்கு அங்கு வந்திருந்தேன்னா உனக்கு இப்படி ஆகி இருக்காதுல்ல… சாரிடி…” என்று அழுதான்.
சிதாரா கடினப்பட்டு கையை உயர்த்தி ஆர்யானின் தலையை வருடி விட்டாள்.
சிதாராவிடமிருந்து விலகிய ஆர்யான் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “இரு மினி… நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன்..” என்று விட்டு அறையிலிருந்து வெளியேறிவன் சில நிமிடங்களில் டாக்டருடன் வந்தான்.
சிதாராவைப் பரிசோதித்த டாக்டர், “ஷீ இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் நவ்… உங்க அன்பும் நம்பிக்கையும் தான் அவங்கள கியுர் பண்ணி இருக்கு… எப்பவும் இப்படியே ஒத்துமையா இருங்க ரெண்டு பேரும்… ஃபிட்ஸ் வந்ததுனால இவங்க உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கும்… சோ டூ டேய்ஸ்க்கு இப்படி தான் இருப்பாங்க… பேச கூட கொஞ்சம் கஷ்டமா இருக்கும்… அதுக்கப்புறம் சரி ஆகிடும்… மத்தபஞி வேற எந்த பிரச்சினையும் இல்ல…” என்றவர் இன்னும் சில பல அறிவுரைகள் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
அவர் செல்லவும் ஆர்யான் சிதாராவைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட புன்னகைத்த சிதாரா எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.
“வைட் மினி… நான் ஹெல்ப் பண்றேன்…” என்றவன் சிதாராவை மெதுவாக எழுப்பி கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.
ஆர்யானை தன்னருகில் அழைத்த சிதாரா, “பசிக்..கிது ஜிர்..ராஃபி…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“ச்சே.. நான் ஒரு லூசு… அதை மறந்துட்டேன் பாரு… இரு நான் கேன்டீன் போய் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன் மினி..” என்றவன் சிதாரா சரியென தலையசைக்கவும் அவசரமாக கேன்டீன் சென்றான்.
ஆர்யான் செல்லும் திசையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.
வரும் போது கையில் சிதாராவுக்கு பழங்கள் மற்றும் உணவுடன் வந்தவன் சிதாராவுக்கு அவனே ஊட்டி விட்டான்.
ஆர்யான் ஊட்டி விட சிதாரா அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து சிரித்த ஆர்யான், “என்ன மினி.. அப்படி பாக்குற… என்னமோ இன்னைக்கு தான் முதல் தடவ பார்க்குறது போல…” என்க,
“இவ்வளவு வெளிப்படையா அவன சைட் அடிப்பியா சித்து…” என மனதில் தன்னையே திட்டிக் கொண்டவள் பதில் எதுவும் கூறாது ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.
சிதாராவுக்கு முழுவதையும் ஆர்யான் ஊட்டி முடிக்கவும் தான் ஆர்யான் இன்னும் சாப்பிடாமல் இருப்பது சிதாராவுக்கு நினைவு வந்தது.
ஆர்யான் கையைக் கழுவி விட்டு வரவும் சிதாரா, “நீ சாப்…பிடலை..யா ஜிர்..ராஃபி…” எனக் கேட்ட,
வலிக்காமல் அவள் தலையில் குட்டு வைத்த ஆர்யான், “எனக்கு இப்ப பசிக்கல… நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்… நீ இப்போ தூங்கு… உனக்கு தான் உடம்புல இன்னும் தெம்பில்லல்ல.. அப்புறம் எதுக்கு பேசி ஸ்ட்ரைன் பண்ணிக்குற…” எனக் கடிந்து கொண்டான்.
அவனை முறைத்த சிதாரா, “நீ முதல்..ல ஏதாவது சாப்டு… அதான் இன்..னைக்கு ஃபுல்லா தூங்கி..னேனே.. நான் அப்..புறமா தூங்குறேன்…” என ஒவ்வொரு வார்த்தையாக கடினப்பட்டு பேச,
இதற்கு மேலும் தான் உண்ணாமல் இருந்தால் தன்னவள் கஷ்டப்படுவாள் என எண்ணிய ஆர்யான் சிதாராவுக்காக வேண்டி அங்கிருந்த பழங்களை எடுத்து உண்டான்.
பின் சிதாராவை படுக்க வைத்தவன் அவள் அருகில் கதிரையைப் போட்டு அமர சிதாரா ஏதோ கூறவும் கீழுதட்டைக் கடித்து கண்களாலே அவளை மிரட்டியவன் தூங்கு என கண்களை மூடி சைகை காட்டினான்.
ஆர்யானைப் பார்த்து உதட்டை வளைத்த சிதாரா கண்களை மூடிக் கொண்டாள்.
சிதாராவின் செய்கையில் புன்னகைத்த ஆர்யான் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு விட்டு சிதாராவின் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் அவளின் முகம் பார்த்தவாறு அமர்ந்த வண்ணமே கட்டிலில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
காலையிலிருந்தே இருந்த குழப்பத்திலும் சிதாராவைத் தேடித் திரிந்த அலைச்சலிலும் உடனே ஆர்யானை உறக்கம் தழுவிக் கொண்டது.
ஆர்யான் உறங்கி சிறிது நேரத்தில் அவ்வளவு நேரம் தூங்குவது போல் நடித்த சிதாரா மெதுவாக ஒற்றைக் கண் திறந்து ஆர்யானைப் பார்க்க,
அவன் தூங்கி விட்டதை உறுதி செய்தவள் ஆர்யானின் தூக்கம் களையாதவாறு எழுந்து அமர்ந்தாள்.
ஒரு கையை மடித்து அதில் தன் கன்னத்தைத் தாங்கிய சிதாரா நிர்மலமான முகத்துடன் குழந்தை போல் உறங்கும் தன்னவனை விழி எடுக்காமல் ரசித்தாள்.
சற்று நேரத்தில் ஆர்யானிடம் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.
அதன் சத்தத்தில் கண் விழித்த ஆர்யான் சிதாராவைப் பார்க்க அவள் தூங்குவது தெரிந்ததும் அவள் வயிற்றை சுற்றி கை போட்டு அணைத்தபடி மீண்டும் உறங்கினான்.
_______________________________________________
மறுநாள் கதிரவன் உதித்து சில மணி நேரத்தில் ஆர்யான் எழுந்து கொள்ள சிதாராவோ சோர்வில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
சிதாரா எழும் முன் காலைக் கடன்களை முடித்து விட்டு வர நினைத்த ஆர்யான் அந்த அறையிலேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
நேற்றே ஆர்யான் தன் நண்பன் ஒருவனிடம் கூறி சிதாராவின் மருத்துவ அறிக்கைகளையும் இருவருக்கும் தேவையான பொருட்களையும் எடுத்து வர வைத்திருந்தான்.
எல்லாம் முடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வர ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.
அதன் சத்தத்தில் சிதாராவின் தூக்கம் களைய முன் அவசரமாக அழைப்பை ஏற்றான்.
ரவி தான் அழைத்திருந்தான்.
ரவி, “சாரிடா மார்னிங்கே கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றதுக்கு… தங்கச்சிக்கு இப்போ எப்படி இருக்கு… இன்னும் ரெகவர் ஆகலையா…” என்க,
ஆர்யான், “இல்லடா… நைட்டே மினி கண் முழிச்சிட்டா… டாக்டர் செக் பண்ணிட்டு எல்லாம் ஓக்கேன்னு சொன்னாங்க… இப்போ தூங்கிட்டு இருக்காள்… ஆமா நீ எதுக்குடா கால் பண்ணின… அதை இன்னும் சொல்லவே இல்ல…” என்றான்.
“ஆஹ்… நீ இப்போ ஃப்ரீயா மச்சான்… கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா…” என ரவி கேட்கவும்,
ஆர்யான், “ஃப்ரீ தான்டா… நானும் உன்ன சந்திக்க வரணும்னு தான் நெனச்சேன்… வைட் பண்ணு.. ஒரு ஃபிப்டீன் மினிட்ல வந்துட்றேன்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அங்கிருந்து நர்ஸிடம் தான் வரும் வரை சிதாராவைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிய ஆர்யான் ரவியை சந்திக்க கிளம்பினான்.
நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனை அடைந்த ஆர்யான் நேரே ரவி இருந்த அறைக்குச் சென்றான்.
ரவி, “வா ஆரு… உட்காரு…” என்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த ஆர்யான்,
“ஏதோ பேசணும்னு சொன்னியே ரவி… என்ன விஷயம்…” எனக் கேட்டான்.
ரவி, “இன்னைக்கு ஆதித்யாவ கோர்ட்ல ஆஜர் பண்றோம்டா… நம்ம கிட்ட இருக்குற எவிடன்ஸ கோர்ட்ல சப்மிட் பண்ணினா யூ.எஸ் ரூல்ஸ் படி கண்டிப்பா அவனுக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்…” என்றான்.
பதிலேதும் கூறாமல் அமைதி காத்த ஆர்யான் பின், “மினிய கடத்த ட்ரை பண்ணினதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ணு ரவி…” என்று கூறவும் அதிர்ந்தான் ரவி.
ரவி, “என்னடா சொல்ற… உனக்கென்ன பைத்தியமா… தங்கச்சிக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் அந்த ராஸ்கல்… நான் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க ட்ரை பண்ணா நீ கடத்த முயற்சி பண்ணதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ண சொல்ற… அப்படி மட்டும் பண்ணினா வெறும் மூணோ நாலோ வருஷம் ஜெயில்ல இருந்துட்டு ஈஸியா வெளிய வந்துடுவான்…” என்றான் கோவமாக.
ஆர்யான், “மினிய தயா அப்படி பண்ண நெனச்சதால உன்ன விட பல மடங்கு அவன் மேல கோவம் இருக்கு எனக்கு… அவன் அப்பா அவனுக்கு நல்லத சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தா அவன் இன்னைக்கு இந்த நிலமைல இருப்பானா… சின்ன வயசுல இருந்தே அவன விட முன்னுக்கு வரனும்.. அவன ஜெய்க்கனும்னு சொல்லி வளர்த்தா இவன் வேற என்ன பண்ணுவான்… எல்லாத்தையும் விட அவனுக்காக ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு… பொறந்ததுல இருந்தே அப்பா பாசத்த அனுபவிக்காத அந்த குழந்தை என்ன பாவம் பண்ணிடுச்சு… என் மினி கூட அதை விரும்பமாட்டா… சில வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்தா அவன் திருந்திடுவான்… இல்லன்னா திரும்ப எங்கள பழி வாங்க தான் முயற்சி பண்ணுவான்… என் மேல இருந்த பொறாமைல தான் அவன் அப்படி பண்ணான்… நான் அவனுக்காக இதை பண்ணல… அந்த குழந்தைக்காக பண்றேன்..” என்க, மனமேயின்றி சம்மதித்தான் ரவி.
ஆர்யான் ஆதித்யாவைப் பார்க்க அவனை அடைத்து இருந்த சிறைக்குச் செல்ல தரையில் முகத்தை ஒரு கையால் மூடியவாறு படுத்திருந்தான் ஆதித்யா.
ஆர்யானின் அரவம் கேட்டு எழுந்தமர்ந்த ஆதித்யா தரையில் பார்வையை செலுத்தி இருக்க அவனை நெருங்கிய ஆர்யான்,
“என் முகத்த பார்க்க கூட தயக்கமா இருக்கா…” என்றான்.
ஆதித்யா பதிலளிக்காமல் இருக்கவும், “எனக்கும் உன் கூட பேசவோ உன் முகத்த பார்க்கவோ விருப்பமில்ல… ஆனா நான் இன்னைக்கு பேசியே ஆகனும்… அதான் வந்தேன்… ” என்று நிறுத்திய ஆர்யான்,
“எனக்கு நிறைய ஃப்ரென்ட்ஸ் இருக்காங்க… யாரு கூட வேணாலும் சீக்கிரமா ஃப்ரென்ட் ஆகிடுவேன் நான்… என் கேரெக்டர் அப்படி… பட் நீ கொஞ்சம் ஸ்பெஷல்… உன் ஃப்ரென்ட்ஷிப்ப நான் ரொம்ப மதிச்சேன் தயா… ஆனா அப்போ எனக்கு தெரியல நீ என்ன ஏமாத்த தான் இப்படி பண்றன்னு… என் கிட்ட நிறைய பேரு வந்து சொன்னாங்க நீ என் பேர யுனில டேமேஜ் பண்றன்னு.. பட் நான் எதையும் நம்பல… ஆனா அன்னிக்கு நீ உன் வாயாலயே எல்லாம் சொல்லி ஒத்துக்கொள்ளவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது… எல்லாரு முன்னாடியும் உன்ன அடிச்சது கூட நீ என்ன நம்ப வெச்சி ஏமாத்தினதுக்காக இல்ல… ஒரு பொண்ணோட லைஃப்ல நீ விளையாடி இருக்கன்னு தான்… எங்க அம்மா எனக்கு சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்கள எப்படி மதிக்கனும்னு கத்துத் தந்து இருக்காங்க… அதனால தான் அன்னைக்கு யாரோ ஒரு பொண்ணுக்கு நீ அதுவும் என் க்ளோஸ் ஃப்ரென்ட் அப்படி பண்ணவும் கோவத்துல உன்ன அடிச்சிட்டேன்… அதுக்கப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன் அதை நினைச்சி… என்ன இருந்தாலும் ஒரு பொறாமையில தான் நீ இதெல்லாம் பண்ணி இருக்கன்னு எனக்கு புரிஞ்சது… அதான் உன் கூட பேச ட்ரை பண்ணேன்… ஆனா முடியல… உன்னையும் யுனிய விட்டு தூக்கிட்டாங்க… ஆனா என்னைக்கு என் மினி மேல நீ கை வெச்சியோ அப்பவே உன்ன கொல்லனும்னு நெனச்சேன்… உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயம் இல்ல… ஆனா அதுக்கப்புறம் யாருக்காக நான் இதெல்லாம் பண்ணினேனோ அவள் கஷ்டப்படுவா… அதான் உனக்கு சட்டத்தால தண்டனை வாங்கி தரனும்னு நினைச்சேன்… நீ பண்ண வேலைக்கு உனக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்… ஆனா நான் தான் உன் குழந்தைக்காக அத தடுத்திருக்கேன்…” என்கவும் அவ்வளவு நேரம் ஆர்யான் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா ஆர்யானைப் புரியாமல் ஏறிட்டான்.
ஆர்யான், “என்ன பார்க்குற… நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சு கர்ப்பமாக்கிட்டு விட்டு போனேல்ல… ரேவதி… உன் காதல் எப்படியோ… ஆனா அவளோட காதல் உண்மைன்னு சொல்லி தன்னோட குடும்பத்தை எதிர்த்து குழந்தைய பெத்துக்கிட்டு சிங்கிள் மதரா அந்த குழந்தைய வளர்க்குறா… இன்னும் நீ திரும்பி வருவேன்னு நம்பிட்டு இருக்கா… அவ நம்பிக்கைய பொய்யாக்க எனக்கு மனசு வரல… அந்த பச்ச குழந்தைக்காக தான் நான் உன்ன மன்னிக்கிறேன்…. இனிமேலாவது திருந்துற வழிய பாரு… ஆனா திரும்ப பழி வாங்குறேன் அது இதுன்னு என் மினிய காயப்படுத்த நெனச்ச…” என விரல் நீட்டி எச்சரித்தவன்,
“அதுக்கப்புறம் பார்ப்ப இந்த ஆர்யான் யாருன்னு….” என்றவன் அங்கிருந்து சென்றான்.
ஆர்யான் சென்றதும் அவன் கூறிச் சென்றதை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டான் ஆதித்யா.
அவன் மனம், “ரேவா… என்ன மன்னிச்சிருடி…” என்று அழுதது.
ரவியிடம் சொல்லிக் கொண்டு இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினான் ஆர்யான்.
ஆர்யான் சிதாரா இருந்த அறைக்குள் நுழையும் போது சிதாரா கட்டிலில் இருக்கவில்லை.
அவள் எங்கே எனத் தேட குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் சிதாரா.
அவசரமாக அவளிடம் ஓடிய ஆர்யான், “என்ன பண்ற மினி.. தனியா போயிருக்க… உனக்கு துணையா நான் ஒரு நர்ஸ் வெச்சிட்டு தானே போனேன்… எங்க அவங்க..” என்க,
அவன் கை பிடித்து கட்டில் வரை வந்த சிதாரா, “நான் இப்போ நல்லா இருக்கேன் ஜிராஃபி… கொஞ்சம் டயர்டா இருக்கு.. அவ்வளவு தான்… அதான் அந்த நர்ஸ போக சொன்னேன்… அவங்க எனக்கு ப்ரேக்ஃபஸ்ட தந்துட்டு போய்ட்டாங்க… நீ டென்ஷன் ஆகாதே.. ஆமா நீ காலைலயே எங்க போன.. இப்போ தான் வர…” எனக் கேட்டாள்.
“உட்காரு சொல்றேன்..” என சிதாராவை கட்டிலில் அமர வைத்த ஆர்யான்,
“நான் உன் கிட்ட சொல்லாம ஒரு விஷயம் செஞ்சிட்டேன் மினி..” என்றான்.
சிதாரா அவனைக் கேள்வியாகப் பார்க்கவும் தனக்கும் ஆதித்யாவிற்கும் இடையிலான கடந்த காலத்திலிருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் கூறினான் ஆர்யான்.
ஆர்யான் கூறி முடித்த பின்னும் சிதாரா முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க,
ஆர்யான், “சாரி மினி… உனக்கு இதுல சம்மதமான்னு கூட நான் கேட்கல.. உறக்கு நிச்சயம் என் மேல கோவம் வரும்..” என்றான் கவலையாக.
அவனை முறைத்த சிதாரா, “ஆமா.. எனக்கு கோவம் தான்..” என்க ஆர்யானின் முகம் வாடியது.
பின் ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவன் கன்னத்தில் கை வைத்து, “எனக்கு உன் மேல கோவம் தான் ஜிராஃபி… பட் அது நீ பண்ண வேலைக்கு இல்ல… எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு யோசிக்கிறியே… அதுக்குத் தான்… என் லூசு புருஷன் எது பண்ணாலும் அது சரியாத் நான் இருக்கும்… தனக்கு கெட்டது பண்ணவங்களுக்கு கூட அவன் நல்லது தான் பண்ணுவான்…” என்றதும் இன்ப அதிர்ச்சி அடைந்தான் ஆர்யான்.
அதிர்ச்சி மாறாமலே, “நான் பொண்டாட்டின்னு விளையாட்டுக்கு சொன்னாக் கூட அவ்வளவு கோவப்படுவ… இன்னைக்கு நீயே என்னை பார்த்து புருஷன்னு சொல்ற…” என்றான் ஆர்யான்.
உடனே பொய்யாக முகத்தைத் தொங்கப் போட்ட சிதாரா, “ஏன் நான் அப்படி சொன்னது உனக்கு பிடிக்கலையா ஜிராஃபி..” என்றாள்.
சிதாராவின் முகம் வாடவும் ஆர்யான், “ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி… எனக்கு பிடிச்சிருக்கு… கேக்க நல்லா இருக்கு…” என்றான் புன்னகையுடன்.
பின் ஆர்யான் தான் வரும் போது கொண்டு வந்த உணவை சிதாராவுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.
ஆர்யான், “சரி மினி… டாக்டர் உன்ன இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க… நான் போய் பில் பே பண்ணிட்டு வரேன்.. நாம கிளம்பலாம்..” என்க சரி எனத் தலையசைத்தாள் சிதாரா.
பணம் கட்டி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
இருவரும் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் போது மாலையாகி இருந்தது.
காரில் செல்லும் போது வெளியே பார்த்த சிதாரா தம் வீட்டுக்குச் செல்லும் வழி இல்லாமல் வேறு வழியில் செல்வதைக் கண்டதும் ஆர்யானைப் பார்த்து, “நாம எங்க போறோம் ஜிராஃபி… இது நம்ம வீட்டுக்கு போற வழி இல்லையே…” என்றாள்.
ஆர்யான், “நம்ம வீட்டுக்கு தான் மினி.. வெய்ட் பண்ணு…” என்க சிதாராவுக்கு குழப்பமாக இருந்தது.
சில மணி நேரத்தில் அவர்களின் கார் ஒரு வீட்டின் முன் நின்றது.
ஆர்யான் முதலில் இறங்கி சிதாராவுக்கு இறங்க கதவைத் திறக்க, காரிலிருந்து இறங்கிய சிதாரா சுற்றியும் குழப்பமாக பார்த்தாள்.
சிதாராவை அழைத்துக் கொண்டு சென்று வீட்டின் கதவைத் திறந்தவன், “வெல்கம் டு அவர் நியு ஹோம் பொண்டாட்டி…” என்றான் ஆர்யான்.
அதிர்ந்த சிதாரா, “என்ன சொல்ற ஜிராஃபி… நம்ம வீடா… எப்ப வாங்கின… ” என்றாள்.
ஆர்யான், “என் ஃப்ரென்ட் ஒருத்தனோட வீடு தான் மினி… அவன் வேற வீட்டுல இருக்கான் இப்போ… ஆல்ரெடி நம்ம திங்க்ஸ் எல்லாம் ஷிஃப்ட் பண்ணியாச்சு… அந்த வீடு அவ்வளவு சேஃப் இல்ல.. சுத்தி அவ்வளவா ஆட்கள் கூட இல்ல… நான் வர்க் போனா நீ மட்டும் தனியா இருப்ப… பட் இங்க எப்பவும் ஆட்கள் இருக்கும்… எந்த பிரச்சினையும் இல்ல… உன் ஸ்டடீஸ் முடிஞ்சு நாம ரிட்டன் இந்தியா கிளம்பும் வர இங்க தான் இருக்க போறோம்…” என்றான்.
இரண்டு அடுக்கு வீடு… கீழே ஹாலில் ஒரு கெஸ்ட் ரூமும் டைனிங் ஹாலும் கிச்சனும் இருந்தது.
மேல் மாடியில் பால்கனியுடன் கூடிய இரண்டு பெட்ரூம், ஒவ்வொரு பெட்ரூமிலும் அட்டேச் பாத்ரூம் என ஓரளவு பெரிய வீடாக இருந்தது.
ஆர்யான், “இப்போ சமைக்க டைம் இல்ல மினி.. சோ நான் நமக்கு டின்னர்க்கு ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு வரேன்… மாடில ஃபர்ஸ்ட் ரூம்ல நம்ம திங்ஸ் வெச்சிருக்கேன்… நீ போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ மினி.. ” என்று மொபைலை எடுத்துக் கொண்டு சென்றான்.
ஆர்யான் சென்றதும் மேலே தங்கள் அறைக்குச் சென்றவள் அறையை சுற்றிப் பார்த்து விட்டு பால்கனிக்கு சென்றாள்.
அங்கிருந்து பார்க்கும் போது சுற்றுப்புறம் அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது.
இரவு நேரம் என்பதால் நியுயார்க் நகரத்தின் அழகு பல மடங்கு கூடியது போல் இருந்தது.
சற்று நேரத்தில் ஆர்யான் வர சிதாரா குளித்து விட்டு இரவுடைக்கு மாறி வந்திருந்தாள்.
ஆர்யானும் சென்று குளித்து உடை மாற்றி வர சிதாரா இருவருக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் சேர்ந்து உண்டு விட்டு ஆர்யான் சொல்ல சொல்லக் கேட்காமல் சிதாராவே அனைத்தையும் கழுவுகிறேன் என கிச்சனிற்கு சென்றாள்.
ஆர்யானுக்கு ஆஃபீஸிலிருந்து கால் வரவும் அவன் தங்கள் அறைக்குச் சென்றான்.
சிதாரா எல்லாம் முடித்து விட்டு வர ஆர்யான் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.
சிதாரா சென்று கட்டிலில் ஆர்யானுக்கு அருகில் அமர அவனோ சிதாராவைக் கவனிக்காது லேப்டாப்பில் மூழ்கி இருக்க அவனைப் பார்த்து விஷமமாக புன்னகைத்த சிதாரா,
“என்ன புருஷா… நான் சுயநினைவு இல்லாம இருக்கும் போது மட்டும் தான் உன் காதல வெளிப்படுத்துவியா… நேர்ல எல்லாம் சொல்ல மாட்டியா… இரு உனக்கு இன்னெக்கி நல்ல வேலை பண்றேன்…” என மனதில் நினைத்தவள் லேப்டாப்பில் இருந்த ஆர்யானின் கரத்தின் இடையினால் தன் தலையை நுழைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
சிதாராவின் திடீர் செயலில் ஆர்யான் கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,
சிதாராவோ வேண்டுமென்றே இன்னும் நன்றாக அவன் மார்பில் சாய்ந்து, “என்ன பண்ணிட்டு இருக்க ஜிராஃபி…” என்றாள் அப்பாவியாக.
ஆர்யானோ சிதாராவிற்கு பதிலளிக்காது வேறு உலகில் இருந்தான்.
தன்னவளின் அருகாமை தந்த அவஸ்தையில் அவன் இதயம் வேகமாகத் துடிக்க எச்சில் விழுங்கிக் கொண்டவன்,
“ஏன் கடவுளே என்னை இப்படி சோதிக்குற… நானும் எவ்வளவு நாள் தான் என்னை அடக்கி வெச்சி அமைதியா இருப்பேன்… இவ என்ன கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்றா… ஐயோ ஆர்யான்… உனக்கு வந்த சோதனை… மினி இப்போ தான் பெரிய கண்டத்துல இருந்து தப்பி வந்திருக்கா... ஏதாவது ஏடாகூடமா நடக்க முன்னாடி அவள தள்ளி வை ஆரு…” எனத் தனக்கே சொல்லிக் கொண்ட ஆர்யான்,
“கொஞ்சம் பிஸியா இருக்கேன் மினி.. ஆஃபிஸ் வர்க்… நீ வேணா லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு… நான் ஹாலுக்கு போய் இந்த வேலைய பார்க்குறேன்..” என்றவன் சிதாராவை விலக்கி விட்டு அவசரமாக எழ முயன்றான்.
ஆர்யானின் நிலையைப் பார்த்து சிதாராவுக்கு சிரிப்பாக வந்தது.
ஆர்யான் காணாமல் அதை மறைத்தவள் அவனை எழ விடாது பிடித்துக் கொண்டு, “நீ இங்கயே இரு ஜிராஃபி… எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு..” என்றாள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.
ஆர்யான், “ஐயோ… எனக்கு உன் பக்கத்துல இருக்க பயமா இருக்குடி… நீ புதுசு புதுசா இப்படி எல்லாம் பண்ணும் போது எங்க என் கன்ட்ரோல் மிஸ் ஆகிடுமோன்னு பயமா இருக்குடி..” என மனதில் புலம்பியவன்,
“இப்போ நீ வெளிய போக ட்ரை பண்ணா நிச்சயம் இவ இப்படி ஏதாவது பண்ணி உன்ன தடுக்க பார்ப்பா… அது உனக்கு தான் பிரச்சினை ஆரு.. எப்படியாவது அவள தூங்க வெச்சிடு…” என நினைத்தான்.
ஆர்யான் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, “நான் எங்கயும் போகல மினி… நீ தூங்கு… நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்…” என்றவன் சிதாராவை ஒரு பக்கம் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு தானும் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.
ஆர்யான் படுத்ததும் கண்ணை மூடிக் கொள்ள வாயை மூடிச் சிரித்தாள் சிதாரா.
சிதாரா, “உன்ன அவ்வளவு சீக்கிரம் விடுவேனா ஜிராஃபி…” என நினைத்தவள் ஆர்யானை நெருங்கி அவன் மார்பில் தலை வைத்து ஆர்யானின் கையை எடுத்து தன்னை சுற்றிப் போட்டு அவனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.
கண்களை மூடி உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் செயலில் வேகமாக கண்களைத் திறந்தான்.
அவன் முகத்துக்கு மிக நெருக்கமாக சிதாராவின் முகம் இருந்தது.
சிதாரா ஆர்யானைப் பார்த்து புன்னகைக்க ஆர்யான், “எ..என்..என்னப் பண்..ற மினி..” என திக்கித் திணறிக் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கிய சிதாரா, “ஹக்கி பிலோவ் இல்லாம தூங்க முடியல ஜிராஃபி… அதான்..” என்றாள் மனதில் சிரித்துக் கொண்டு.
“ஓஹ்.. சரி…” என்ற ஆர்யான் அவசரமாக கண்ணை மூடி உறங்கப் பார்த்தான்.
அவன் எங்கே நிம்மதியாக உறங்க… அவன் மனையாள் விட்டாள் தானே…
ஆர்யான், “படுத்துறாளே… கன்ட்ரோல் ஆரு… கன்ட்ரோல்…” என கண்ணை மூடி அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் சிதாரா அவன் மார்பிலும் முகத்திலும் தன் விரலால் கோலம் போட்டாள்.
பெருமூச்சு விட்ட ஆர்யான், “இதுக்கு மேல முடியாது…” என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.
ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,
ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, “என்ன பண்ற…” என்றான் அழுத்தமாக.
“அ… அது… ஜி… நான்… வந்து…” என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.
சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.
ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.
அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.
❤️❤️❤️❤️❤️
மக்களே… கதை முடிவ நெருங்கிடுச்சி… இன்னும் ஒன்று அல்லது இரண்டு யூடில கதை முடிஞ்சிடும்… இவ்வளவு நாள் உங்க ஆதரவ தந்தமைக்கு நன்றி… இனியும் உங்க ஆதரவ எதிர்ப்பார்க்கிறேன்… படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க ☺️
– Nuha Maryam –
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.