Loading

காதல் 9

 

 

தர்ஷு மற்றும் சஞ்சு, ரஞ்சுவுடன் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர். இன்னும் கூட சஞ்சு முணுமுணுத்துக் கொண்டே தான் இருந்தாள்.

 

“ப்ச், இந்த நேரம் பார்த்து எங்க அம்மாவும் ஊர்ல இல்ல, மலர் ஆன்ட்டியும் இல்ல. நீ எப்படி தனியா… ப்ச், நான் வேணா இப்பவே அம்மாக்கு கால் பண்ணி வர சொல்றேன்.” – என்று சொல்லிக் கொண்டிருந்த சஞ்சுவின் பேச்சை இடைவெட்டிய ரஞ்சு, “நான் போய் என்னன்னு பாத்துட்டு சொல்றேன் சஞ்சு. தேவையில்லாம எதுக்கு அவங்களை அலைய வைக்கணும்?” என்றாள்.

 

இப்போது அவளின் மனம் சற்று சமன்பட்டிருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

 

“பஸ் ஏறிட்டேன்ல. நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க? ரெண்டு பேரும் கிளம்புங்க.” என்று ரஞ்சு கூற, பேருந்து கிளம்பியதும் தான் செல்வோம் என்று மறுத்து விட்டனர் இருவரும்.

 

அப்போது தான் ரஞ்சுவிற்கு ராதாவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு செல்வதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது. இருவரிடமும் அதைப் பகிர, அவர்களோ அவளில்லாமல் செல்லப்போவதில்லை என்று சொல்லிவிட்டனர்.

 

“ச்சு, நான் வரலைன்னா என்ன? நமக்காக அவங்க வெயிட் பண்ணுவாங்க. மார்னிங் நீ வேற அவங்க கிட்ட கண்டிப்பா வருவோம்னு சொல்லிருக்க. செஞ்சதெல்லாம் வேஸ்ட்டாகுறது ஒரு பக்கம் இருந்தாலும், அவங்க காத்திருப்பை ஏமாத்துற மாதிரி இருக்காதா? இப்போ இங்கயிருந்து நேரா அவங்க வீட்டுக்கு தான் போறீங்க.” என்று பேசிப் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தாள்.

 

அவர்களும் அரைமனதாகவே சம்மதித்தனர். என்ன தான் குடும்ப விஷயம், அதனால் ரஞ்சு தனியே செல்வது தான் சரியாக இருக்கும் என்று வெளியே சொன்னாலும், தர்ஷுவிற்கும் ஏனோ மனம் அலைப்பாய்ந்தது உண்மையே.

 

பேருந்து கிளம்ப, இருவரும் ரஞ்சுவிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி விடைபெற்றனர், அன்றைய இரவே அடித்து பிடித்து ஊருக்கு செல்லப்போவதை அறியாமல்!

 

*****

 

சஞ்சீவ் அவனின் மகிழுந்தில் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு மூலையில் தான் செய்வது சரி தானா என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

இப்படி யாரோ ஒருவன் அழைப்பு விடுத்து வர சொல்ல, தானும் அவனை நம்பி அங்கே செல்வது முட்டாள்தனமாகப் பட்டாலும், ஏதோவொன்று அவனை அங்கு அழைத்துச் சென்றது என்று தான் கூற வேண்டும். இல்லையெனில், தன் அண்ணனிற்கு தெரியாமல், ஏன் வந்ததிலிருந்து அவனுடனே சுற்றும் நண்பனிற்கு கூட தெரியாமல் செல்வானா!

 

சஞ்சு மற்றும் ரஞ்சு இருவருமே ஒரே வழித்தடத்தில் சென்று கொண்டிருக்க, அவர்களின் வாழ்வை மாற்றப் போகும் நிகழ்வை விதி அங்கு தான் நடத்தப்போகிறது என்பதை இருவருமே அறியவில்லை.

 

*****

 

அவள் எப்போதும் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கியவள், தன் கண்களை சுழலவிட்டாள். இங்கிருந்து தன் அப்பாவுடன் உற்சாகமாக கதைகள் பல பேசியபடி சென்றதெல்லாம் முன்னொரு காலத்தில் நடந்ததைப் போல தோன்றியது. தான் பேசுவதற்கெல்லாம் பதில் பேசாவிட்டாலும், எப்போதும் ஒரு புன்னகையுடன் அவளை கூட்டிச்செல்வதே அவளிற்கு போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போதோ அவரைக் கண்களால் கண்டே பல மாதங்களாயிற்று.

 

ஒரு பெருமூச்சுடன் தன் பயணப்பொதிகளை சுமந்து கொண்டு, தன் வீடு நோக்கி நடந்தாள்.

 

அவள் இறங்கியதும், சவாரிக்காக ஆட்டோக்காரர்கள் அவளை வட்டமிட, ஏனோ நடந்து செல்ல வேண்டும் என்று தோன்றியதால், அவர்களை மறுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவளின் மனம் எப்போதும் போல தன் குடும்ப சூழல்களை அலசிக் கொண்டிருந்தது.

 

விஸ்வநாதன் – கமலா இருவரும் மருத்துவர்கள் என்பதால் ஒருவித பரபரப்புடனே காணப்படுவர். அவர்களுக்கு மகள்களிடம் ஆற அமர்ந்து பேச நேரமே கிடைக்காது. அதனால் அந்த குடும்பத்தில் ஒட்டுதல் என்பது அவ்வளவாக இருக்காது.

 

சாதாரண நாட்களில் தான் இப்படி என்றால், ஏதாவது விழாவிற்கு கூட இருவரில் ஒருவர் தான் சென்று வருவர். அவர்களின் வேலை அப்படி! மகள்களை பெரும்பாலான விழாக்களிற்கு அழைத்துச் செல்வது கூட இல்லை. ரஞ்சு மற்றம் அவளின் தங்கை சுபத்ராவிற்கு அவர்களின் உறவினர்கள் யாரும் நினைவில் கூட இருக்க மாட்டார்கள்!

 

காலையில் நேரமே சென்று விட்டால், கணவனும் மனைவியும் இரவு எப்போது வீடு திரும்புவர் என்பது அவர்களுக்கே தெரியாது. ரஞ்சு கல்லூரி செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளும் விடுதியில் தங்கி படிக்கிறாள். சுபத்ரா பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியை அதே ஊரில் தொடர் விரும்பியதால், அவள் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்வாள்.

 

கல்லூரி சேரும் போது, ரஞ்சுவும் இங்கயே படிப்பதாக சொன்னபோது, இதே சுபத்ரா தான் அவளை வெளியூரில் தங்கி படிக்குமாறு கூறியது. அதற்கு அவள் கூறிய காரணம் இப்போதும் கூட ரஞ்சுவிற்கு விரக்தி சிரிப்பை வரவழைத்தது.

 

“உங்களுக்கு எப்பவும் அவ தான் செல்லம். அவ அது நல்லா பண்றா, இது நல்லா பண்றா, அவளை பார்த்து கத்துக்கோ. இப்படி எப்பயும் அவளை தான் தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறீங்க. கொஞ்ச நாள், அவ பக்கத்துல இல்லனா தான் என்னோட அருமை தெரியும்.” என்று சுபத்ரா கூறியதற்கு, அன்று அவளின் பெற்றோர்கள் இருவரும் அவளைத் திட்ட, அவளின் பார்வையோ ரஞ்சுவின் மேல் வஞ்சமாக பதிந்தது.

 

அதை பெற்றோர்கள் பார்க்கவில்லை என்றாலும் ரஞ்சு பார்த்தாள். சிறிது நாட்கள் விலகி இருக்கலாம் என்று முடிவு செய்தவள், அவளே தான் வெளியூர் சென்று படிப்பதாக கூறினாள்.

 

இதைக் கேட்ட சஞ்சு மற்றும் தர்ஷு சுபியின் செயலில் எரிச்சல் அடைந்தாலும், அவர்களும் ரஞ்சுவுடன் படிக்கப் போவதாக கூற, ‘த்ரீ ரோசஸ்’ கேங் இன்று வரை பிரியாமல் இருக்கிறது.

 

சிறிது நாட்கள் விலகி இருக்கலாம் என்று நினைத்த ரஞ்சு, அடுத்தடுத்து வந்து சென்ற நாட்கள் தான் அதை உணர்ந்தாள். எப்போதும் ஒட்டுதல் இருக்காது தான் என்றாலும், அவள் விடுதி சென்ற பிறகு, ஏனோ விலகுதலை அதிகமாக உணர்ந்தாள்.

 

அதுவும் கடந்த ஓராண்டாகவே சுபியின் ஏளன பார்வையை சந்தித்து வருகிறாள். இப்போது யோசிக்கும்போது, ஓராண்டாக தான் அன்னையும் அவளிடம் சரியாக பேசவில்லை என்றும் அவளின் மனதிற்கு பட்டது.

 

ஒரு பெருமூச்சுடன், தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை சந்திக்க சற்று தயாராகியே சென்றாள்.

 

*****

 

அலைபேசியில் அவர்கள் கூறிய இடத்திற்கு வந்தான் சஞ்சீவ். பழைய குடவுன் போன்ற இடம் அது. (அதே வில்லனின் இடம் தான்) சுற்றிலும் ஆராய்ந்தவாறே உள்ளே நுழைந்தான்.

 

அவன் வந்ததை கண்டுகொண்ட மிஸ்டர். காண்டாமிருகம், “வாங்க சஞ்சீவ். பரவாலையே சொன்ன நேரத்துக்கு சரியா வந்துட்டீங்களே.” என்று சிரித்துக் கொண்டே கூறினாலும், அவரின் நக்கல் குரலில் கலந்திருந்ததை சஞ்சீவும் கண்டுகொண்டான்.

 

‘இவருக்கு இருக்க நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!’ என்று புலம்பியது லோகேஷ் தான்.

 

சஞ்சீவ் எதுவும் கூறாமல் அவரையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனின் பார்வை எதிரிலிருப்பவருக்கு அசௌகரியமாக இருந்தது போலும், “என்ன தம்பி பார்த்துட்டே இருக்கீங்க? உள்ள வாங்க.” என்று அழைத்தார். அவனும் பார்வையை மாற்றாமல் உள்ளே சென்றான்.

 

அங்கு அவர்களுக்குக்கான மேஜை போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தனர் இருவரும்.

 

“தம்பி, என் பேரு அருணாச்சலம்.” என்று மிஸ்டர். காண்ட்ஸ் அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சீவோ வெறுமனே தலையசைத்தான்.

 

அவன் தன் பெயரைக் கூறுவான் என்று எதிர்பார்த்தவருக்கு சற்று அவமானமாக தான் இருந்தது. மனதிற்குள், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் என்னை அவமானப்படுத்துனான். இப்போ இவன். பண்ணுங்க டா பண்ணுங்க. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு.’ என்று வீராப்பாக சபதம் போட்டுக் கொண்டார்.

 

லோகேஷ் தான் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான், அருணாச்சலத்தின் முகம் போன போக்கை கண்டு!

 

இந்த சம்பவம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே, அங்கிருப்பவர்களை அளவிட்டுக் கொண்டான் சஞ்சீவ். திடகாத்திரமாக நால்வர் இருந்தனர். அருணாச்சலத்தின் அடியாட்கள் போலும். அவர்களைத் தவிர்த்து லோகேஷ் மற்றும் அருணாச்சலம், அவனுடன் சேர்த்து மொத்தம் எழுவர் இருந்தனர் அந்த இடத்தில்.

 

மனதிற்குள் அவன் ஒரு கணக்கை போட, இவர்களை ஆட்டுவிக்கும் விதியோ, அவனும் தீர்க்கப்படாத கணக்கை காட்டவே அவனை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை!

 

ஒரு பெருமூச்சுடன், “என்கூட என்ன பேசணும்னு வர சொன்னீங்களோ, அதைப் பத்தி பேசலாமா?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

 

அவரோ சுதாரித்துக் கொண்டு, “ஹான் அது தான் தம்பி, உங்க அண்ணா கூட உங்களுக்கு சண்டையாமே. அதான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, உங்க அண்ணாக்கு எதிரா, அண்ணாவ எதிர்த்து…” என்று முதலில் நன்றாக ஆரம்பித்தவர், அவனின் பார்வையில் திக்கினார்.

 

“அதாவது என் அண்ணனை போட்டுத் தள்ளுறது, அதான உங்க பிளான்?” என்றான் பொருள் விளங்கா குரலில்…

 

அவனின் இந்த வெளிப்படையான பேச்சில், எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்.

 

“அது தம்பி…” என்று மேலும் ஏதோ பேச வர, அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்து தள்ளி எழுந்தவன், “எங்களை என்னன்னு நினைச்சீங்க? நாங்க ரெண்டு பேரும் எப்படி வேணா அடிச்சுக்குவோம். அதுக்குன்னு மத்தவங்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்போம்னு இல்ல. புரிஞ்சுதா? இப்போ நான் வந்தது கூட, அவனுக்கு அப்படி யாரு அந்த எதிரின்னு தெரிஞ்சுக்க தான். ரொம்ப நாள் அவனுக்கு யாரோ குடைச்சல் கொடுத்துட்டு இருக்காங்களாமே. அதான் யாருன்னு பார்க்கலாம்னு வந்தேன்.” என்றான் நக்கல் சிரிப்புடன்.

 

அவன் தோரணையில் சற்று அதிர்ந்த அருணாச்சலம், தன் ஆட்களைக் கண்டு நிம்மதியுற்றவராக, “என்ன தம்பி, ரொம்ப எகுருறீங்க? நீங்க இருக்குறது என் இடம். இதோ நாலு பேரு இருக்கானுங்க. நீங்க ஒத்த ஆளு, இதென்ன சினிமாவா? ஒருத்தன் நாலு பேரை அடிக்க?” என்று கிண்டலாக வினவினார்.

 

அவர் கூறிய நால்வரை ஒரு பார்வை பார்த்தவன் கோணல் சிரிப்புடன், “சரியா தான் சொல்றீங்க. இது சினிமா இல்ல தான். என்னால ஒரே நேரத்துல நாலு பேர அடிக்க முடியாது தான். ஆனா, சமாளிக்க முடியும். ப்ச், என்ன இந்நேரம் நான் இங்க வந்த தகவல் அவனுக்கு போயிருக்கும். நீங்க என்னை வெல்கம் பண்ணி, உங்க பேரை சொல்லின்னு நிறைய டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க அருணாச்சலம். இப்போ பாருங்க அவன் வந்துட்டே இருப்பான். நானாவது கொஞ்சம் இரக்க குணம் உள்ளவன். அவன் வந்தா இங்க யாரும் உயிரோடவே போக மாட்டீங்க.” என்றான் சஞ்சீவ்.

 

உள்ளுக்குள் அச்சம் தோன்றினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்ன டா பயமுறுத்துறியா? வர சொல்லு டா உங்க அண்ணனையும். ரெண்டு பேரையும் எதுக்கு தனி தனியா போட்டுக்கிட்டு? ஒரேடியா ஜோலியை முடிச்சுடுவோம்.” என்றார் வீராப்பாக.

 

“த்சு, இப்போ கூட உங்க ஆளுங்களை என்னை அடிக்க சொல்லியிருக்கலாம். ஹ்ம்ம், இந்த வில்லனுங்களே சம்டைம்ஸ் காமெடியனா போயிடுறாங்க.” என்று அவரைப் பார்த்து கேலியாக கூறினான் சஞ்சீவ்.

 

அதில் கோபம் அடைந்த அருணாச்சலம், தன் ஆட்களில் ஒருவனிற்கு கண்ணை காட்ட, அவனும் பின்னிலிருந்து சஞ்சீவை தாக்க வந்தான். ஆனால், சஞ்சீவோ முன்னரே அருணாச்சலத்தின் கண்ணசைவின் மூலம் இந்த தாக்குதலை உணர்ந்தவன் சற்று குனிந்து அதிலிருந்து தப்பியவன், அந்த அடியாளின் கைகளை பின்னால் மடக்கி, அவன் கால் முட்டியின் பின்பகுதியை காலால் உதைத்து அவனை மண்டியிட செய்து, கழுத்தை லேசாக திருப்பினான்.

 

இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க, இப்போது அருணாச்சலத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது.

 

“இதோ காமெடியன்னு சொல்லி வாயை மூடல, அதுக்குள்ள இப்படி ஒரு பிளான்! எப்படியெப்படி நீங்க கண்ணால சொல்றதை உங்க ஆளுங்க கேட்பாங்களா? அப்படி கண்ணால பேசுறதையாவது ரகசியமா பேசித் தொலையுறீங்களா? க்கும், ஒரு நல்ல புத்தியுள்ள வில்லன்னா என்ன பண்ணிருக்கணும், எல்லாரையும் ஒண்ணா தாக்க சொல்லிருக்கணும்.” என்று அருணாச்சலத்திற்கு ‘கிளாஸ்’ எடுத்துக் கொண்டிருக்க, அவரின் மற்ற அடியாட்களோ வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

“டேய் லூசுப்பயலுங்களா, அவன் பேசிட்டு இருக்கான்னு, நீங்களும் வாயப்பொழந்து பார்த்துட்டு இருக்கீங்க. போடுங்க டா அவனை.” என்று கத்தினார் கடுப்பான காண்ட்ஸ்!

 

பிறகென்ன அங்கிருந்த பொருட்கள் உடைய, ஒரு அதிரடி சண்டை காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே தற்காப்பு கலை பயின்றதால், சஞ்சீவ் மூவரையும் நன்றாகவே சமாளித்தான்.

 

சண்டையில் இருவரை வீழ்த்தியவனின் செவியில் அந்த குரல் ஒலிக்க, அவனின் மூளையோ சற்று நேரம் ஸ்தம்பித்து தான் விட்டது. அந்த ஒரு நொடி தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்ட அருணாச்சலத்தின் அடியாள் அவனை மண்டையில் இரும்பு கம்பி கொண்டு தாக்க, தலையிலிருந்து ரத்தம் வழிய கீழே சரிந்தான் சஞ்சீவ்.

 

அதே நேரம், வெளியில் சில மகிழுந்துகளின் சத்தம் கேட்க, உஷாரான அருணாச்சலம் அங்கிருந்து வேறு வழியில் தப்பித்து சென்றார்.

 

*****

 

ரஞ்சு தன் வீட்டில் நுழைந்த போதே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். கதவைத் திறந்து உள்ளே சென்றவள் கண்டது, பெரிய பெரிய பைகளை நடுகூடத்தில் அடுக்கி வைத்திருந்ததை தான்.

 

‘வீடு காலி பண்றாங்களா? அதான் என்னையும் வர சொன்னாங்களா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கமலாவிடம் பேசியவாறு வெளியே வந்தாள் சுபத்ரா.

 

வாசலில் ரஞ்சுவைக் கண்டதும் ஒரு நக்கல் சிரிப்புடன், “வந்துட்டா உங்க தத்து பொண்ணு! ஹ்ம்ம், சீக்கிரம் அவகிட்ட சொல்லிட்டு, என்னை கூப்பிடுங்க கிளம்பலாம். அதுவரைக்கும் என் ரூம்ல இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.

 

எப்போதும் இப்படி அவள் பேசும்போது கண்டிக்கும் தாயும் தந்தையும் அமைதியாக இருக்க, அதுவே சுருக்கென்றிருந்தது ரஞ்சுவிற்கு. அப்போது தான் சுபி கூறியது அவளின் மூளைக்குள் சென்றது.

 

‘தத்து பொண்ணா? நானா? என்ன சொல்றா இவ? என் காதுல சரியா தான் விழுந்துச்சா?’ என்று குழம்பியவள், பெற்றோரின் முகம் பார்க்க, இருவரின் முகமும் இறுகியிருந்தது.

 

மூளைக்குள் சென்ற விஷயம் குழப்பினாலும், சிறிது நேரத்திலேயே விழித்துக் கொண்டது அவளின் மூளை. இத்தனை நாட்களாக அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான காரணம் அவளிற்கு தெரிந்து விட்டது. ஆனால், அப்படி தெரிந்த விஷயம் தான் உவப்பாக இல்லை.

 

‘அப்போ நான் அவங்க பொண்ணு இல்லயா? இத்தனை நாள் இதை மறைச்சுட்டாங்களா? சின்ன வயசுலயிருந்து அது தெரியாம தான நல்லபடியா வளர்த்தாங்க. இப்போ என்ன?’ என்று மனது விம்மியது ரஞ்சுவிற்கு.

 

அதிர்ச்சி பாதி கவலை மீதியென உணர்ச்சி குவியலில் இருந்தவள், அவளின் முகம் காட்டும் பாவனைகளைக் கண்டும் அமைதியாக, இல்லை இல்லை இறுக்கமாக அமர்ந்திருந்த பெற்றோரைப் பார்த்து, “ஏன்?” என்று ஒரு வார்த்தையில் அவளின் மொத்த உணர்வுகளையும் கொட்டினாள்.

 

‘ஏன் இதை முன்னாடியே எனக்கு சொல்லல?’

‘இப்போ மட்டும் ஏன் இதை சொல்றீங்க?’

‘இத்தனை நாள் இல்லாம இப்போ மட்டும் ஏன் விலகி போறீங்க?’

‘ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?’

இவையனைத்தும் அவள் கேட்க தான் நினைத்தாள், ஆனால், அவளின் குரல் அதற்கு ஒத்துழைக்க மறுக்க, ஒற்றை வார்த்தையில் தன் கேள்விகளை சுருக்கிக் கொண்டாள்.

 

ஒரு பெருமூச்சுடன் கமலா பேசத் துவங்கினார்.

 

“ஆமா, நாங்க தத்தெடுத்த பொண்ணு தான் நீ. நீ பிறந்தப்போவே, உங்க அம்மா உன்னை எங்ககிட்ட கொடுத்துட்டாங்க. எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ஆனா, ஏனோ சுபிக்கும் உனக்கும் ஒத்துவரல. நாங்களும் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாகிடும்னு நினைச்சோம். ஆனா, அது எப்பவும் சரியாகாதுன்னு எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. எங்களுக்கு ‘எங்க’ பொண்ணு தான் முக்கியம். அதான் இப்போ நாங்க இந்த ஊரை விட்டே போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.” என்று மின்னாமல் முழங்காமல் ரஞ்சுவின் தலையில் இடியை இறக்கினார்.

 

தான் அவர்களின் தத்துப் பெண் என்பதிலேயே அதிர்ச்சியில் உறைந்தவள், அடுத்தடுத்து அவர் கூறியவற்றை ஜீரணிக்க கூட முடியாமல், அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள்.

 

அவளின் நிலை கண்டு அந்த இறுக்கமானவர்களுக்கும் பரிதாபம் எழுந்ததோ, “உன்னை அப்படியே விட்டுட்டு போற அளவுக்கு நாங்க கல் நெஞ்சக்காரவங்க கிடையாது. உன் பேர்ல இருக்க அக்கவுண்ட்ல அஞ்சு லட்சம் டெபாசிட் பண்ணிருக்கோம். உனக்குன்னு சேர்த்து வச்ச நகை பேங்க்ல இருக்கு. அது போக இந்த வீட்டை கூட உன் பேர்ல மாத்தி எழுதியாச்சு. அதுக்கான பத்திரம் இதோ.” என்று அவள் கைகளில் எதையோ திணித்தார் கமலா.

 

அதைக் கண்டவள் விரக்தியாக சிரித்துக் கொண்டாள். ஒரே நாளில் எத்தனையை தான் அவள் தாங்குவாள்? இத்தனை நாள் யாரை அம்மா, அப்பா என்று அழைத்தாளோ, அவர்கள் அவளின் பெற்றோர் இல்லை. எப்போதும் முறைத்துக் கொண்டே திரிபவள், அவளின் சொந்தத் தங்கையும் இல்லை. அது மட்டுமில்லாமல், இத்தனை நாட்கள் ஒன்றாக வாழ்ந்த வீட்டில், இன்று அவளை மட்டும் விட்டுவிட்டு இதோ அனைவரும் கிளம்பிச் செல்லப் போகின்றனர்.

 

இவ்வளவு பேசியவர்கள், அவர்கள் எங்கே செல்கின்றனர் என்பதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. சொன்னால், ஒரு நாள் தேடி வந்துவிடுவாளோ என்ற பயமாக இருக்கலாம்! இவையே ரஞ்சுவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. அவள் எங்கு அமர்ந்தாளோ, அதே இடத்தில் இருந்து எதிரில் மாட்டப்பட்டிருந்த போஸ்டரில் பார்வையை பதித்திருந்தாள்.

 

‘லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் சர்ப்ரைஸஸ்’ என்ற வாசகம் அதில் எழுதியிருக்க, ரஞ்சுவின் மனமோ, ‘ஆமா, பல கசப்பான சர்ப்ரைஸஸ் நிறைஞ்சது தான் லைஃப் போல!’ என்று எண்ணிக் கொண்டது.

 

அப்போது வெளியே வந்த சுபி, “பேசியாச்சா, கிளம்பலாமா?” என்றாள்.

 

ரஞ்சு அவளை நிமிர்ந்து பார்க்க கூட இல்லை. அவளை மட்டுமல்ல யாரையும் பார்க்கவில்லை. பார்த்தால், எங்கு அவர்களை செல்ல வேண்டாம் என்று கதறி விடுவோமோ என்ற பயத்தில் இருந்தாள்.

 

அப்படி அவர்களை இழுத்துப் பிடிக்கவும் அவள் விரும்பவில்லை. ‘என்னை வேணாம்னு சொல்றவங்க எனக்கும் வேணாம்!’ என்ற வீம்பும், தனிமை பயமும் மாறி மாறி அவளை வாட்ட ஆரம்பித்தது.

 

அவள் தங்களை பார்ப்பாள் என்று சிறிது நேரம் காத்திருந்தவர்களோ, “நாங்க கிளம்புறோம்.” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

 

மௌனமாக கண்ணீர் வடித்தாள் பெண்ணவள். அப்போது அவளின் அருகில் நிழலாட கண்களை மட்டும் உயர்த்தி யாரென்று பார்த்தாள்.

 

அங்கு விஸ்வநாதன் கண்களில் ஒரு பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தார். இத்தனை நாள் மகளாக பாவித்து வளர்த்து வந்தவளை தனியே விட்டுச் செல்கிறோம் என்ற கவலையாக இருக்கும்…

 

‘அட்லீஸ்ட் இவராவது கொஞ்சம் ஃபீல் பண்றாரே!’ என்று எண்ணிக் கொண்டாள் ரஞ்சு.

 

“சாரின்னு ஒரு வார்த்தைல சொல்லிட முடியாது. உன்னை நான் கையில வாங்குனப்போ, இப்படி பாதில விட்டுட்டு போவேன்னு நினைக்கல. ஹ்ம்ம், நீ எப்பவும் நல்லா இருக்கணும் டா. உன் பிரெண்ட்ஸ் உன்னை பார்த்துபாங்க. அவங்க கூடவே இரு.” என்று அவளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

 

பின் என்ன நினைத்தாரோ, “உன் அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கணும்னா, மாடில இருக்க ஸ்டோர் ரூம் பரண் மேல ஒரு பாக்ஸ் இருக்கும். அதை பா ர்த்து தெரிஞ்சுக்கோ.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே சுபியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.

 

“கேர்ஃபுல்லா இரு டா. தனியா இருக்காத. இனிமேலாச்சும் உன் லைஃப்ல நிரந்தரமான ஒரு சொந்தம் உருவாக என் மனசார கடவுளை வேண்டிக்குறேன்.” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

 

அவர் கூறியவை அனைத்தும் செவி வழி சென்று மூளையின் ஒரு பாகத்தில் சேமிக்கப்பட்டது. ஆனால், அதை சிந்தித்துப் பார்க்கும் அளவிற்கு இப்போது அவளிற்கு தெம்பில்லை. அதே இடத்தில் விச்ராந்தியாக படுத்துவிட்டாள்.

 

*****

 

“ஜீவ், உன்னை பார்த்து எவ்ளோ நாளாச்சு?” என்ற குரலில் தூக்கிவாரிப்போட மயக்கத்திலிருந்து விழித்தான் சஞ்சீவ்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்