காதல் 16
தன் வேலைகளுக்கு தொல்லை கொடுப்பது போல ஒலித்த அலைபேசி சத்தத்தில், முதலில் சலிப்புடன் அதை எடுத்துப் பார்க்க, அதிலிருந்த ‘அன்னோன் நம்பர்’ அவன் புருவங்களை சுருக்கச் செய்தது.
மற்ற சமயங்களில் இது போன்ற அழைப்பை ஏற்காதவனிற்கு, இப்போது ஏனோ ஆபத்து என்று மனதில் பட, சற்றும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றிருந்தான்.
“ஹலோ சஞ்சு, க்கும்… மிஸ்டர்.சஞ்சய். கால் எடுக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்.” என்று கிண்டலாக ஆரம்பித்தாள் ஷ்ரேயா.
சஞ்ஜயோ அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், “எதுக்கு இப்போ கால் பண்ணிருக்க?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.
“ஹ்ம்ம், இது தான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம். பாரு ப்ளா ப்ளான்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாம டைரக்ட்டா விஷயத்துக்கு வந்துட்ட.” என்று அப்போதும் அவள் அழைத்ததற்கான காரணத்தைக் கூறாமல் அவனை அலைகழித்தாள்.
சஞ்சயோ அவளின் பதிலில் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, “ச்சு ச்சு, இப்போ கோபத்துல உன் முகம் அப்படியே ரெட்டிஷா ஆகிருக்கும்ல. ப்ச், அதை நேர்ல பார்க்க முடியாம போயிடுச்சே! ஹ்ம்ம் பரவால, இனி அடிக்கடி உன் முகம் மாறுமே அப்போ பார்த்துக்குறேன். அப்பறம் இப்போ எதுக்கு உனக்கு கால் பண்ணேனா, நீ யாருக்காக எஸ்கார்ட்லாம் வச்சு பாதுகாக்கணும்னு நினைக்குறியோ, அவங்களுக்கு தன்னோட உயிர் மேல ஆசை இல்ல போலயே! தனியா ***** ஹோட்டல்ல உட்கார்ந்துட்டு யாரையோ எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க போல.” என்று அவனை பதற வைத்துவிட்டே விஷயத்திற்கு வந்தாள்.
‘ப்ச், தனியா போகாதன்னு சொன்னாலும் கேட்காம போயிருக்கா!’ என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருக்க, “என்ன சார், இன்னமும் லைன்ல இருக்கீங்க? இந்நேரம் பறந்து போய் அவங்களை காப்பாத்த வேணாமா? நான் வேற ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கேனா, சோ சட்டுன்னு யாருக்கும் தெரியாம அவளை கொலை பண்ற மைண்ட்செட்ல இப்போ இல்ல. சீக்கிரம் இங்க வாங்க பாஸ். நீங்க சொன்ன கேம்மை விளையாடுவோம்.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
அடுத்த நிமிடம் லோகேஷிற்கு அழைப்பு விடுத்து அவனை நன்கு திட்டியவன், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தன்னறையிலிருந்து வெளியேறினான்.
சஞ்சீவின் அறையைக் கடக்கும்போது, ஒரு நொடி நிதானித்து, அவனைக் காண, அவனோ மருந்தின் உபயத்தால் நித்திரையில் இருந்தான். இதற்காக அவனை எழுப்ப வேண்டாம், வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து வெளியே சென்று விட்டான்.
*****
ரஞ்சு, அவள் கையில் வைத்திருந்த முகவரிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே, அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்தாள். பாதையில் கவனமில்லாமல் மனதில் பலவற்றை உருப்போட்டுக் கொண்டே வந்தவள், தனக்கு பின்னால் அதிவேகத்துடன் வரும் ஸ்போர்ட்ஸ் காரையும் கவனிக்க தவறினாள்.
ரஞ்சுவை இடித்துவிடும் நோக்கில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த மகிழுந்தை கவனித்த சஞ்சய், வேகமாக அவளை தன்னை நோக்கி இழுத்திருக்க, தன் இலக்கு விலக்கப் பட்டதால், அதன் பாதையில் சர்ரென்று வழுக்கிக் கொண்டு போனது அந்த மகிழுந்து.
ரஞ்சுவிற்கு நடந்த சம்பவம் அதிர்ச்சி தான். அந்த மகிழுந்திற்கும் அவளிற்கும் சிறிதளவே இடைவெளி இருந்தபோது தான் தனக்கு பின்னே வாகனம் வருவதை, அதுவும் அதீத வேகத்தில் வருவதை உணர்ந்தாள். சட்டென்று என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தவளை, யாரோ கைப்பிடித்து இழுக்க, அந்த இழுப்பிற்கு சென்றிருந்தாள்.
இப்போது கூட யார் தன்னைக் காப்பாற்றியது என்று உணராமல், அவனின் கைகளில் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவளின் பயத்தை உணர்ந்த சஞ்சயோ, மெல்ல அவளை அவன் மகிழுந்து நிற்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான்.
அந்த இடைவேளையில் சுயத்தை அடைந்தவள், தன்னைக் காப்பாற்றியவன் சஞ்சய் என்பதை அப்போது தான் பார்த்தாள்.
மகிழுந்தில் அவளை அமருமாறு கண்களாலேயே பணித்தவன், சுற்றி வந்து ஏறிக் கொண்டான்.
இன்னமும் குழப்பத்திலிருந்து வெளிவராதவளின் தோற்றத்தைக் கண்டு பெருமூச்சு விட்டவாறே, “இன்னைக்கு காலைல தான தனியா போகாதன்னு சொன்னேன். அதையும் மீறி தனியா வந்துருக்கன்னா என்ன அர்த்தம்? மத்தவங்க உன் நல்லதுக்குன்னு சொல்ற எதையும் கேட்க கூடாதுன்னு முடிவுல இருக்கீயா? நான் மட்டும் சரியான நேரத்துல வரலைனா என்ன அகியிருக்கும்?” என்று கோபத்தை அடக்கியபடி வினவினான்.
ரஞ்சுவைப் பொறுத்தவரை சற்று முன்னர் நிகழ்ந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவமே. இவளிற்காக பல மணி நேரங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அவளிற்கு தெரியாதே! அப்படி இருக்கும் போது, சஞ்சய் இப்படிக் கூறியதைக் கேட்டவள் குழம்பித் தான் போனாள்.
“நான் தனியா வந்ததுக்கும் இப்போ நடந்ததுக்கும் என்ன சம்பந்தம்?” என்று குழப்பத்துடன் அவள் வினவ, ஏதோ யோசனையில் இருந்தவனும், “அது உனக்காக பிளான் பண்ண ஆக்சிடெண்ட்.” என்று கூறியிருந்தான்.
அவன் கூறியதைக் கேட்டவளிற்கு அதிர்ச்சியாக இருக்க, மீண்டும் ஒருமுறை நிகழவிருந்த சம்பவத்தை எண்ணி நெஞ்சம் பதைப்பதைத்தது.
அவளின் முகத்தைக் கண்டவனிற்கு அப்போது தான் அவன் கூறியது நினைவிற்கு வர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
“என்னை எதுக்கு… ஆக்சிடெண்ட்… யாரு…” என்று திக்கியபடி அவள் பேச, அவளின் கைகளில் தட்டிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ் சனா, அதான் ஒன்னும் ஆகலைல.” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
மேலும் மேலும் அவள் அதிலேயே உழல்வதைக் கண்டவன், ‘சாஃப்டா சொன்னாலாம் கேட்டுக்க மாட்டா. வழக்கம் போல நம்ம ஸ்லாங்லயே சொல்ல வேண்டியது தான்.’ என்று நினைத்தவன், “இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி நடந்ததையே நினைச்சுட்டு இருக்கப் போற? ஆமா, அப்படி என்ன விஷயத்துக்கு இந்த நேரத்துல இங்க தனியா வந்த?” என்று அவன் வழக்கமான தொனியில் வினவினான்.
அவனின் அழுத்தமான குரலிலேயே அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்தவள், அவன் அடுத்து கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று முழித்துக் கொண்டிருந்தாள்.
‘இவ முழியே சரியில்லயே! எதையோ எல்லாருக்கிட்ட இருந்தும் மறைச்சுருக்கா போலயே.’ என்று அவளை சரியாக கணித்தவன், கைகளை கட்டிக்கொண்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தான்.
‘அச்சோ இவரு பார்க்குற பார்வையில நானே உண்மையை சொல்லிடுவேன் போலயே!’ என்று ரஞ்சு நினைக்க, அவளின் மனமோ, ‘இப்போ அவரு கிட்ட உண்மைய சொன்னா தான் என்ன? எப்படியோ ஒரு நாள் எல்லாருக்கும் தெரிய தான போகுது! நீ என்ன தப்பா பண்ண போற?’ என்று கூற, அவளும் சஞ்சயிடம் சொல்லிவிடுவது என்ற முடிவிற்கு வந்தாள்.
அவளின் பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன மேடம், ஒரு வழியா என்னை நம்பி உண்மையை சொல்லலாம்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?” என்று கேலியாக வினவினான்.
‘இவருக்கு எப்படி மனசுல நினைக்கிறது எல்லாம் தெரியுதோ?’ என்று மனதிற்குள் நினைத்தவள், எங்கு அதையும் கண்டுபிடித்துவிடுவானோ என்று அவள் தனியே வந்ததற்கான காரணத்தைக் கூறத் துவங்கினாள்.
அவள் கூறியதை பொறுமையாகக் கேட்டவன், “இப்போ உன்னை விட்டுட்டு போனவங்களை சந்திச்சு என்ன பண்ண போற சனா?” என்று வினவினான் சஞ்சய்.
அதற்கான பதிலைத் தானே அவளும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். “தெரியல.” என்று சோகமாக பதில் கூறினாள்.
ஒரு பெருமூச்சுடன், “சரி இப்போ எங்க கிளம்பிட்ட அந்த வீட்டுக்கா?” என்றான். அவளோ பதில் கூறாமல், மண்டையை மட்டும் ஆட்டினாள்.
“ஓஹ், மேடமுக்கு மணி பார்க்க தெரியுமா? இல்ல லேட்டா தான் வருவேன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வந்துருக்கியா?” என்று கடுப்பாக கேட்டதும் தான், தன் தோழிகளின் நினைவே வந்தது.
“இவளுக்காக அங்க அவங்க ரெண்டு பேரும் அங்க தவிச்சுட்டு இருக்காங்க. மேடம் ரொம்ப கூலா நகர்வலம் போய்ட்டு இருக்காங்க.” என்று அவன் முணுமுணுத்தாலும் அது ரஞ்சுவிற்கு கேட்கவே செய்தது.
தான் செய்யவிருந்த காரியத்தை எண்ணி உதட்டைக் கடித்து அமைதியாக இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், “என்ன மேடம் இப்போயாச்சும் ஹாஸ்டல் போலாம்னு நினைப்பு இருக்கா? இல்ல வேற எங்கயாவது சுத்தணுமா?” என்று கடுப்பாகவே வினவினான்.
‘என்னது சுத்துறேனா, நான் என்ன வேலைவெட்டி இல்லாம பொழுது போகாம சுத்திட்டு இருக்கேனா? சும்மா சும்மா திட்டுறது!’ என்று மனதிற்குள் சிலுப்பிக் கொண்டவள், வெளியே அதை அப்படியே சொல்ல முடியாமல், “ஹாஸ்டல் போலாம்.” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
அவளின் கோபம் புரிந்தாலும், நடக்கவிருந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்தவனாக, அவளிடம் இலகிப் போக விரும்பவில்லை சஞ்சய்.
அந்த மகிழுந்து பயணம் அமைதியில் கழிய, நேராக சென்று அவளின் விடுதி இருக்கும் தெருவில் நிறுத்தினான்.
“இனி நீயே போயிடுவியா?’ என்று அவன் வினவ, அப்போதும் மொழிகள் இன்றி மௌனமாக தலையசைத்தாள்.
அவள் இறங்கி செல்லும் நிமிடம், “நாளைக்கு நீ போக நினைச்ச இடத்துக்கு போகலாம். ஆனா, உன் பிரெண்ட்ஸ் கிட்ட எங்க போறன்னு சொல்லிட்டு தான் வரணும் புரிஞ்சுதா? நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு ரெடியா இரு.” என்று கூறினான்.
அவ்வளவு நேரம் கூம்பியிருந்த முகம் பொலிவு பெற லேசான சிரிப்புடன் மீண்டும் தலையசைத்துவிட்டு சென்றாள். அவள் செல்வதையே பார்த்தவனின் மனம், ‘இதுக்கு பேரு லவ் இல்லயாமா?’ என்று கூறுவதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
*****
சற்று நேரத்திற்கு முன்பு, தனக்கு அலைபேசியில் வந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரேயா வெற்றி சிரிப்பு சிரிக்க, அவளின் அருகில் நின்றிருந்த ரிஷிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.
“ஷ்ரேயா, எதுக்கு இப்போ இந்த போட்டோவை பார்த்து இப்படி சிரிக்கிற?” என்று எரிச்சலுடனே வினவினான் ரிஷி. பின்னே, தான் ஒன்று திட்டமிட, நடப்பதோ வேறாக இருந்ததே.
‘ச்சே, இப்போ என்ன வேலை பார்த்துட்டு இருக்கேன்? விட்டா, என் செலவுல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவா போல!’ என்று கொதித்துக் கொண்டிருந்தான் ரிஷி.
அவளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஒரு போட்டோ போதும் அண்ணன் – தம்பிக்கு இடையில சண்டையை மூட்டி விடுறதுக்கு!” என்று வன்மமாகக் கூறினாள்.
மீண்டும் அதிலிருந்த சஞ்சயை நோக்கி, “அன்னைக்கு என்ன சொன்ன, உன் தம்பி தான் எல்லாமேன்னு சொன்ன தான? உன் தம்பியை வச்சே இந்த தடவை உன்னை தோக்கடிக்குறேன்.” என்று அவனிடம் பேசுவதைப் போல பேச, ரிஷிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
“இந்த போட்டோவால எப்படி சண்டை வரும்?” என்றவன் மீண்டும் அந்த புகைப்படத்தைக் கண்டான்.
சற்று முன்னர், அந்த மகிழுந்து இடிப்பதிலிருந்து காக்க ரஞ்சுவை இழுத்த சஞ்சயும், அவனின் இழுப்பிற்கு அவனிடமே சரணடைந்த ரஞ்சுவும் அந்த புகைப்படத்தில் அழகாக விழுந்திருந்தனர். நடந்த சம்பவத்தை அறியாதவர் பார்த்தால், இருவரும் ஒருவரையொருவர் அணைத்திருப்பதை போலவே தோன்றும்.
“என்னோட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட், தம்பியை போட்டோ பிடிச்சு அண்ணனுக்கு அனுப்பி வச்சேன். ஆனா, அவன் தம்பியை மட்டும் பார்த்து பாசத்துல வந்துட்டான். அண்ணனுக்கு சமமா, தம்பிக்கும் பாசம் இருக்கான்னு பார்க்க வேணாம்? அதுக்கு தான் இது.” என்று கிண்டலாக கூறியவள், “அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா, நம்மளால அவனுங்களை ஜெயிக்க முடியாது. அதான் ரெண்டு பேரையும் பிரிக்க போறேன்.” என்றாள் அழுத்தமான குரலில்.
“இந்த போட்டோ பார்த்தவுடனே சந்தேகம் வந்து பிரிஞ்சுடுவாங்களா?” என்று அப்போதும் சந்தேகத்துடனே ரிஷி வினவ, “நான் எதுக்கு இருக்கேன்.” என்று கோணலாக சிரித்தவள், “சஞ்சயை தான் என்னால ஈஸியா அணுக முடியாது. ஆனா சஞ்சீவ், ஹ்ம்ம் அவன் அன்புக்கு அடிமை. அவனை ஈஸியா நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்.” என்று திட்டமிட்டாள்.
“ஓகே அப்போ நம்ம ஆளுங்க மூலமா இந்த போட்டோ அவனுக்கு கிடைக்க ஏற்பாடு பண்றேன்.” என்று ரிஷி கூற, “ஹுஹும், என் ஜீவை நேர்ல பார்த்து எவ்ளோ நாளாச்சு? நானே போய் கொடுத்துட்டு வரேன்.” என்றாள்.
அவளின் முகத்தைக் கண்ட ரிஷி, “அப்படி என்ன அவன் உனக்கு ஸ்பெஷல்?” என்று லேசான பொறாமையுடன் கேட்க, அவளோ அது காதிலேயே விழாதவாறு அங்கிருந்து சென்றாள்.
அவளின் மனமோ அந்த கேள்வியிலேயே நின்றது. ‘ஆமா அவன் எனக்கு ஸ்பெஷல் தான்.’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.
*****
ரஞ்சுவை விடுதியில் விட்டுவிட்டு, லோகேஷை நேரிலும் பார்த்து திட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான் சஞ்சய். அவனின் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தான் சஞ்சீவ்.
நீள்சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு, இரு கைகளையும் இருபுறமும் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்த சஞ்சீவ் சஞ்சயை நோக்கி, “என்னை தூங்க வச்சுட்டு, நீ மட்டும் தனியா எங்க போய் சுத்திட்டு வர ப்ரோ?” என்றான்.
“ஆமா, நீ சின்ன பாப்பா, உன்னை ஏமாத்தி தூங்க வச்சுட்டு வெளிய போறேன்.” என்று கேலி பேசினான் தமையன்.
இருவரும் இப்படி பேசி எத்தனையோ வருடங்கள் ஆகியிருக்க, இருவருக்குமே அந்த நாட்கள் மனக்கண்ணில் வந்து போயின. இந்த ‘ஃபிளாஷ்பேக்’ துணுக்குகளால் தம்பி கேட்ட கேள்வியை இருவருமே மறந்து விட்டனர்.
சரியாக அப்போது கோகுலும் உள்ளே வந்தான். “ஷப்பா, என்ன அலைச்சல்! சஞ்சு, நீ வெட்டியா தான இருக்க, ஓடி போய் எனக்கு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வா பார்ப்போம்.” என்று சஞ்சீவின் அருகில் அமர்ந்து விட்டான்.
வந்தவனிற்கு, வாயில் எதிர்புறம் அமர்ந்த சஞ்சீவே கண்களுக்கு தெரிந்தான். பக்கவாட்டில் அமர்ந்திருந்த சஞ்சயை அவன் கவனிக்கவே இல்லை.
தான் பேசியதற்கு சஞ்சீவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, மூடிய கண்களை திறந்து பார்க்க, சஞ்சீவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன இப்படி முறைச்சுட்டு இருக்க? இதெல்லாம் நான் யாருக்காக பண்றேன்? எல்லாம் உன் அண்ணாக்காக தான் தம்பி. போ போய் ஜில்லுன்னு ஒரு ஜூஸ், ஹுஹும் நைட்க்கு அது வேணாம். கூலிங் பீர் இருந்தா கொண்டு வா.” என்றான் கால்களை ஆட்டிக் கொண்டே.
இப்போது வரையிலும் சஞ்சீவைப் பார்த்தே பேசிக் கொண்டிருந்ததால், எதிரில் அமர்ந்து அவனையே கூர்மையாக பார்த்திருந்த சஞ்சயை கவனிக்கவில்லை.
“பீர் மட்டும் போதுமா, இல்ல இந்த சைட் டிஷ்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே சஞ்சீவ் இழுக்க, “அட அட, இதுவல்லவோ நட்பு! நீ என்ன பண்றனா, வெந்தும் வேகாம இருக்க ஹாஃப்-பாயில் ஒன்னு, நல்லா பெப்பர் தூக்கலா போட்ட ஆம்லெட் ஒன்னு, ஹும் இப்போதைக்கு இது போதும். போ போ சீக்கிரம் கொண்டு வா. இன்னும் என்ன வாயை பாஎத்துட்டு இருக்க?” என்று விரட்டினான்.
“அப்படியே எந்த சஞ்சு கொண்டு வரணும்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்.” என்று இம்முறை எதிர்புறமிருந்து கேள்வி வர, பார்வையை அந்த புறம் திருப்பியவன் அதிர்ந்து போய் சரியாக அமர்ந்தான்.
‘அய்யயோ இவரு இங்க தான் இருக்காரா? இது தெரியாம, கொஞ்சம் ஓவரா வேற போயிட்டோமே!’ என்று மனதிற்குள் புலம்பியவனாக, வெளியில் இளித்து வைத்தான்.
“அட பாஸ், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா? அப்பறம் இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம், சும்மா காமெடிக்கு பாஸ். நீங்க ரெண்டு பேரும் அதை சீரியஸ்னு நம்பிட்டீங்க போல.” என்று ஏதோ உளறி வைத்தான்.
சஞ்ஜயோ அதை பெரிதுப்படுத்தாமல், “போன காரியம் என்னாச்சு?” என்று வினவினான்.
‘உஷ், நல்லவேளை இன்னைக்கு தப்பிச்சேன்.’ என்றுக்கு நினைத்தவனிற்கு தெரியவில்லை, இன்று அவனிடத்தில் ஏற்கனவே ஒருவன் திட்டு வாங்கியிருக்கிறான் என்று!
“பாஸ், அந்த ராஜசேகர் இங்க வந்ததுக்கான ப்ரூஃப் கிடைச்சுருக்கு. இங்க மெயின் ஏரியால இருக்க பத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்ல அவரு தங்கியிருக்காருன்னு ஒவ்வொரு ஹோட்டல்ல இருக்க சிசிடிவில பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டோம்.” என்று கூற ஆரம்பித்தான் கோகுல்.
“பத்து ஹோட்டலயா?” என்று சஞ்சீவ் வினவ, “ஆமா சஞ்சு, ஆனா எந்த ஹோட்டலயும் ரெண்டு நாளுக்கு மேல தங்குனது இல்ல. அதே மாதிரி, அந்தந்த ஹோட்டல்ல தங்குன நாள் எல்லாம் கணக்கு பண்ணி பார்த்தா, நடுவுல சில நாள் அந்த மனுஷன் எங்க போனாருன்னு தெரியல. அது தான் ரொம்ப குழப்பமா இருக்கு. இதே மாதிரி மத்த ஹோட்டல்ஸ்ல தேடுறதா, இல்ல வேற பக்கமா தேடுறதான்னு ஒன்னும் புரியல.” என்று சோர்வாக கூறினான் கோகுல்.
அவன் சோர்வே வேலைப் பளுவை கூற, இம்முறை அவன் கேட்காமலேயே அவனிற்கான பானத்தை எடுத்து வரச் சென்றான் சஞ்சீவ்.
சஞ்சயோ ராஜசேகரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவன், “அந்த ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் ஆன்லைன் மூலமா புக் பண்ணதா கோகுல்?” என்று வினவினான்.
“எல்லாமே ஆன்லைன் மூலமா தான் புக் பண்ணிருக்காரு பாஸ். ஆனா, புக் பண்ணி மேக்ஸிமம் அரை மணி நேரத்துலேயே ஹோட்டலுக்கு வந்துருக்காரு.” என்றான் கோகுல்.
“ஹ்ம்ம் ஸ்மார்ட் மூவ், ஒரே இடத்துல இருந்தா, சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்னு இப்படி இடத்தை மாத்திக்கிட்டே இருக்காங்க. அண்ட் அந்த ஹோட்டல் புக் பண்ணது கூட அவரா இருக்காது. நாளைக்கு ரெண்டு டீம்மா சர்ச் பண்ண ஆரம்பிங்க. ஒரு டீம் இங்க இருக்க மத்த ஹோட்டல்ஸ்ல போய் விசாரிங்க. இன்னொரு டீம் வேற எங்கயாவது அவரு மூவ் ஆகிருக்க சான்ஸ் இருக்கான்னு பாருங்க.” என்று அடுத்தடுத்த திட்டங்களை தீட்டினான்.
இவர்கள் பேசுவதைக் கன்னத்தில் கைவைத்து கவனித்துக் கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்த சஞ்சய், “சஞ்சு, டையர்ட்டா இருந்தா தூங்க போ.” என்க அவனை முறைத்த சஞ்சீவ், “ப்ரோ உனக்கே இது நியாயமா படுதா? இங்க வந்ததுலயிருந்து தூங்கி எழுந்து சாப்பிட்டுன்னு ரிப்பீட் மோட்ல பண்ணிட்டு இருக்கேன். மறுபடியும் தூங்க சொல்ற? இன்னைக்கு ஒரு நாள் இப்படி அடைஞ்சு கிடந்ததே கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் ஜெய், ஹோட்டல் கணக்குகளை எல்லாம் இங்க வர வச்சாவது பார்த்துக்குறேன்.” என்றான்.
சில பல நிமிட சமாதானங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் இடையே சஞ்சீவ் வீட்டிலிருந்து ‘ஓய்வாக’ பணியை மேற்பார்வையிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
*****
“ஹே ரஞ்சு, எங்க போயிருந்த? எதுக்கு இவ்ளோ நேரமாச்சு? நாங்க பயந்தே போயிட்டோம் தெரியுமா?” என்று ரஞ்சு விடுதியினுள்ளே நுழைந்ததுமே படபடவென்று பேச ஆரம்பித்தாள் சஞ்சு.
ரஞ்சுவிற்கு அவர்களிடம் மறைத்துவிட்டு சென்றதோடு, அவர்களை பதட்டப்படுத்திவிட்ட குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது. நுழைந்தது முதல் அவளின் முகத்தை மட்டுமே பார்த்து ஒன்றும் பேசாமல் இருந்த தர்ஷு சஞ்சுவிடம், “அவளே இப்போ தான வந்துருக்கா. முதல ரூமுக்கு கூட்டிட்டு போவோம் சஞ்சு.” என்றாள்.
அதைக் கேட்டதும் ரஞ்சுவின் முகம் மேலும் கூம்பிப் போனது. அவளை அறைக்கு அழைத்துச் சென்று, சாப்பிட வைத்த பின்னரே மீண்டும் விசாரணையைத் துவங்கினர்.
“கைட் கூப்பிட்டாங்க, போயிட்டு வந்தேன்னு பொய் சொல்லாம, இப்போயாச்சும் எங்க போன, அதுவும் எங்ககிட்ட மறைச்சுட்டு போறளவுக்கு அப்படி என்ன சீக்ரெட்னு சொல்றியா?” என்று தர்ஷு வினவ, தலை குனிந்து கொண்டாள் ரஞ்சு.
தர்ஷு பேசியதில் அதிர்ந்த சஞ்சு, ரஞ்சுவின் செய்கையைப் பார்த்து உண்மை என்னவென்று அறிந்து கொண்டவளும் ரஞ்சுவின் பதிலுக்காக காத்திருந்தாள்.
ஒரு பெருமூச்சுடன் நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள், தனக்கு நேரவிருந்த விபத்தைப் பற்றி மட்டும் மறைத்துவிட்டாள். அதைப் பற்றித் தான் அவளிற்கே ஒன்றும் தெரியாதே! அடுத்த நாள் சஞ்சயைப் பார்க்கும்போது இதைப் பற்றி வினவ வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.
“இதை எதுக்கு எங்ககிட்ட மறைச்ச ரஞ்சு? அவங்களை தேடிப் போறேன்னு சொன்னா, நாங்க மறுத்துடுவோமா என்ன?” என்று ஆதங்கத்துடன் சஞ்சு வினவ, “ச்சே, இதை உங்ககிட்ட மறைக்கணும்னு இல்ல சஞ்சு. இன்ஃபேக்ட் எனக்கே நான் செய்யுறது சரியான்னு தெரியல.” என்று கூறினாள் ரஞ்சு.
“சஞ்சய் கேட்டதை தான் நானும் கேட்குறேன் ரஞ்சு. அவங்களை கண்டுபிடிச்சு என்ன செய்யப்போற? அதுவும் உன்னை வேணாம்னு தூக்கிப் போட்டவங்களை தேடி போறேன்னு சொல்ற. ஹ்ம்ம், இதை நான் எப்படி எடுத்துக்கன்னு தெரியல ரஞ்சு.” என்று அவள் செய்யவிருந்த காரியம் தனக்கு பிடிக்கவில்லை என்பதை தன் பேச்சிலேயே காட்டினாள் தர்ஷு.
“தர்ஷு, நான் பழசை எதையும் கிளற போகல. என்னை வேணாம்னு முடிவு பண்ணவங்க எனக்கும் வேணாம். எனக்குன்னு சொல்லிக்க நீங்க எல்லாரும் இருக்குறப்போ, அவங்க எதுக்கு? ஆனாலும், எனக்கு ஒரே ஒரு கேள்வி அவங்களை பார்த்து கேட்கணும். என்னோட பிறப்பு பத்தி தெரிஞ்சதுலயிருந்தே என் மனசை போட்டு வருத்துற விஷயம். அதுக்கு மட்டும் பதில் கிடைச்சா போதும். ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.” என்றாள் ரஞ்சு.
சற்று நேரம் அமைதியாக இருக்க, “அப்போ நாளைக்கு நீ அந்த சஞ்சய் கூட போகப்போற. அப்படி தான?” என்று வினவினாள் தர்ஷு.
அவளைப் பாவமாக பார்த்த ரஞ்சு, “ப்ளீஸ்…” என்று வாயசைக்க, “சரி போயிட்டு வா. பட் இது தான் லாஸ்ட் திரும்பவும் இப்படி லூசு மாதிரி பண்ணமாட்டேன்னு எங்களுக்கு ப்ராமிஸ் பண்ணனும்.” என்றாள் தர்ஷு.
ரஞ்சுவும் சரியென்று தலையசைத்தாள். ஏனோ தர்ஷுவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. இல்லையென்றால், ரஞ்சுவுடன் அவளும் கிளம்பியிருப்பாள். தர்ஷு போகாததால், சஞ்சுவும் செல்லவில்லை.
“சரி சரி ரொம்ப சூடா இருக்கீங்க. வாங்க வெளிய போய் ஜில்லுன்னு ஒரு ஐஸ்-க்ரீம் சாப்பிட்டுட்டு வரலாம்.” என்றாள் சஞ்சு அவளின் காரியத்தில் கண்ணாக…
“நாங்க எல்லாம் ஜில்லுன்னு தான் இருக்கோம். உனக்கு வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளேன். அவங்க பேசுறதுலேயே கூலாகிடுவ!” என்று கிண்டலாகக் கூறினாள் தர்ஷு.
“க்கும், என்னை என் ஹிட்லர் மம்மி கிட்ட மாட்டிவிடலைன்னா உனக்கு தூக்கம் வராதே. வா ரஞ்சு நாம பாதாம் மில்க் பண்ணி குடிக்கலாம்.” என்று ரஞ்சுவை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“அதுக்கு எதுக்கு மேடம் அவளையும் இழுத்துட்டு போற?” என்று தர்ஷு வினவ, “ஹான் நானே மம்மி’ஸ் லிட்டில் பிரின்சஸ்ல, எனக்கு எப்படி பாதாம் பால் பண்ண தெரியும்?” என்று உதட்டைப் பிதுக்கினாள் சஞ்சு.
“எப்போ பார்த்தாலும் இதை சொல்லிடு. உன்னை எல்லாம் வருங்காலத்துல உன் ஹஸ்பண்ட் எப்படி மேய்க்க போறாரோ?” என்று ரஞ்சு கூற, “ஹ்ம்ம், இதுக்கு தான் நல்லா சமைக்க தெரிஞ்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.” என்று தோளைக் குலுக்கினாள் சஞ்சு.
“அந்த சமைக்க தெரிஞ்ச பையனுக்கு இப்போவே என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிச்சுக்குறேன்.” என்று ரஞ்சுவும் தர்ஷுவும் சிரித்துக் கொண்டனர்.
“இன்னும் கண்ணுலயே படாத என் வருங்காலம் இருக்கட்டும், அது என்ன ஹீரோயின்னுக்கு ஒரு கஷ்டம்னா உடனே ஹீரோ சார் என்ட்ரி கொடுத்துடுறாரு?” என்று ரஞ்சுவை கண்ணைக்காட்டி சஞ்சு கேலி பேசினாள்.
சஞ்சுவின் கேள்வியில், மனதிற்குள் உற்சாகம் ஏற்பட்டாலும், அதை வெளியில் சொல்லாமல், “அதெல்லாம் ஒண்ணுமில்ல சஞ்சு. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத.” என்றுவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டாள்.
தர்ஷு இவையனைத்தையும் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. முன்னே சஞ்சீவின் நடவடிக்கைகளில் அவளிற்கு ஏற்பட்ட குழப்பமே தீராத பட்சத்தில் இப்போது அவனை விட வேகமாக செயல்படும் சஞ்சயின் நடவடிக்கைகள் இன்னும் குழப்பத்தையே தந்தன. இவற்றை இன்றே ரஞ்சுவிடம் வெளிப்படுத்தி அவளையும் குழப்ப வேண்டாம் என்று நினைத்தாள்.
*****
அடுத்த நாள் அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது. பலரின் வாழ்க்கையை மாற்றக் கூடிய நாளாக மாறப்போகிறது என்று அப்போது அவர்களுக்கு தெரியாமல் போக, எப்போதும் போல ஒரு நாளாகவே அன்றைய தினத்தை ஆரம்பித்திருந்தனர்.
சஞ்சய் மற்றும் ரஞ்சுவின், அவளின் பிறப்பை பற்றி அறிந்து கொள்வதற்கான பயணம், ராஜசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக கோகுல் மேற்கொள்ளும் பயணம், சஞ்ஜீவின் மனதை கலைக்க ஷ்ரேயா மேற்கொள்ளும் பயணம்… இவற்றில் எந்தெந்த பயணங்கள் தங்களின் இலக்கை சரியாக அடைந்து வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
காதல் கொள்வோம்…