Loading

உன்னில் சரணடைந்தேன்..
அத்தியாயம் 1

தரிசாய் மாறும் மனம் தனில்
துளிர் விதையாய் ஓர் பார்வை..
முளைத்தேனோ தினம் தினம்
வளைந்திடும் நெற்கதிராய்!
பிழையொன்றும் நேரவில்லை
பின் ஏனடி தண்டனையுன் சிரியில்…!
வைகறை விடியலும் என்னிடம்
தோற்கவே வான்திங்கள் நானாகிறேன்
வைதேகி உன் காலையில்…!
ஊணுடல் யாவும் நின் பிம்பம் காணவே
உதிக்கவே தகிக்கும் கதிரவன் நானும்
உருகினேன் உன்னுடல் உரசிடும் தென்றலாய் தேவதையவள் சுவாசமாய்
உன்னில் சரணடைவேனோ….!

அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலில் அமைந்த தென்காசி மாவட்டத்தில் உள்ள, இளஞ்சி என்னும் கிராமத்தில். உள்ள அந்த பெரிய வீட்டின் ஒரு அறையில், பசுக்கள் கழுத்தில் கட்டியிருந்த மணியின் சத்தமும், குருவிகளின் கீச் கீச் சப்தமும் இன்னும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிகளும் நம் நாயகனின் உறக்கத்தை கலைக்க போதுமானதாக இருக்க, சிறு புன்னகையோடு விழித்தான் அவன்.. தன் எதிரே மாட்டியிருந்த அவன் குடும்பத்தாரின் புகைப்படத்தில் விழித்தவன், “எல்லாரும் எப்படி இருக்கிய..? ம்ம் உங்களுக்கு என்ன.. என்னை மட்டும் தனியா விட்டு, எல்லாரும் ஒண்ணா ஜாலியா இருக்கிய.. இருங்க.. இருங்க..” என்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, அந்த புகைப்படத்தில் இருந்தவர்கள் அவன் பேசுவதை புன்னகையுடன் கேட்பது போல் இருந்தது..

“அப்பறம், எப்போ எப்போ எங்களுக்கு மழை தேவையோ அப்போ எல்லாம் இங்க மழை வரணும்..!! எப்பவும் போல இந்த வருசமும் விவசாயம் நல்லா செழிக்கனும் அப்ப தான எல்லாருக்கும் சோறு கிடைக்கும்.. சோ நான் போட்ட மனுவை அப்படியே உங்க பக்கத்தில இருக்கிற சாமிக்கிட்ட ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிடுங்க.. சரியா.. இப்போ நான் என் வேலையை பார்க்க போறேன்.. பிளெஸ் மீ..” தன் குடும்பத்தார் இருந்த புகைப்படத்திடம் தலை குணிந்தவன், அவர்களுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு
தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்கினான்..

அவன் சத்யேந்திரன்.. வயது 30. அப்பா செண்பகப்பாண்டியன், அம்மா திலகவதி, அண்ணா சத்யமூர்த்தி, அண்ணி எழிலரசி.. இதுதாங்க நம்ம நாயகனோட குடும்பம்.. இரண்டு வருடங்கள் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் ப்ரோஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த சத்யனுக்கு, ஒரு கட்டத்தில் அந்த வேலையில் திருப்தி இல்லாது போக, தன் சொந்த கிராமத்திற்கே வந்துவிட்டான்.. வந்தவனை.. அவன் குடும்பத்தார் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்..
பின்னே உட்கார்ந்து சாப்பிட்டால் மட்டும் இல்லை.. படுத்து உருண்டு சாப்பிட்டால் கூட பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்க, சார் மட்டும் யாரோ ஒருவனிடம் கைகட்டி வேலை பார்ப்பதா..?” என்ற ஆதங்கம் அவன் குடும்பத்தாருக்கு, சொந்த கம்பெனி வைத்து தருவதாக சொன்ன, தந்தையிடம் தானே உழைத்து சொந்த முயற்சியில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க போவதாக சொல்லவும், அவன் தந்தை செண்பகப்பாண்டியனுக்கு பெருமையே..!

ஆனால் சத்யேந்திரனுக்கு அந்த துறையில் திருப்தி இல்லாமல் போக, வேலையை விட்டு வந்துவிட்டான்.. வேலையை விட்டு வந்த சத்யனுக்கு நிற்க நேரமில்லாமல் போனது.. ஆம் அவ்வளவு பிஸியாக இருந்தான்.. அம்மா கையால் உண்பது.. உண்டது செரிக்க.. சிறிது தூரம் வயல் வெளியில் இயற்கையை ரசித்துக் கொண்டே, சுத்தமான காற்றை சுவாசித்தபடி நடப்பது.. மீண்டும் வீட்டிற்கு வந்து உண்பது,, உறங்குவது.. என்று வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்..

அந்த ஊரின் நாட்டாமை இவனின் தந்தை செண்பகப்பாண்டியன் தான் என்பதால்.. அவரை பார்ப்பதற்கு ஊரிலிருந்து ஆட்கள் வந்து போக இருக்க சத்யனின் வீட்டு அடுப்படியில் எப்போதும் பிஸியாகவே இருக்கும்..

அன்றும் அப்படித்தான் அன்னையிடம் வம்பளத்துக் கொண்டே, அவர் ஊட்டிய உணவை ரசித்து உண்டு கொண்டிருக்க, “ஏம்லே ஏழு கழுதை வயசாவுது இன்னும் அம்மையை ஊட்டி விட சொல்லி அடம்பிடிக்கிற.. போடா அங்கிட்டு..” என்று சத்யனின் வாயை பொத்தி அந்த உணவை தான் வாங்கி கொண்டான், மூர்த்தி, திலகவதி சிறு சிரிப்புடன் தன் பெரிய மகனுக்கும் ஊட்ட.. அத்தை.. உங்க ரெண்டு மகனுகளுக்கும் ஊட்டி விட்றீய.. உங்க மருமவ என்ன தப்பு செஞ்சேய்ன் எனக்கும் ஊட்டிவிடுங்க..” என்று வாயை திறக்க

வெளியே சென்றிருந்த செண்பகப்பாண்டியன், மூவரின் அட்டகாசத்தையும் மனநிறைவோடு பார்த்தவாறே, “ எடேய் என்னங்கடே எம் பொஞ்சாதியை கொடுமைபடுத்திட்டு இருக்கிய.. போங்கலே அந்தப்பக்கம்..” பொய்யாய்க மிரட்டியவாறு அருகில் வந்து அமர்ந்தார்.. உங்களுக்கு வேணுமின்னா நீங்களும் வாங்கிக்கிடுங்க.. அதுக்கு ஏன் நம்ம குழந்தைகளை கண்ணு வைக்கிறிய..?” திலகவதி கணவனை சாட, “அப்படி சொன்னால் தான என் பொஞ்சாதி இப்படி பேசுவா.. மத்த நேரமெல்லாம் அமைதியே இருப்பா அவ படபட பேச்சை கேக்கணும்தேன் அப்படி பேசினேன்..” என்றவாறே அவரும் தன் மனைவியிடம் உணவிற்காக வாய்திறக்க, ரொம்பத்தேன் என்று சடைத்தாலும் உணவை ஊட்ட மறுக்கவில்லை, வெளியே நாட்டாமையாக கெத்து காட்டும் செண்பகப்பாண்டியன்
வீட்டில் மனைவி சொல்லே மந்திரம் என்னும் கொள்கை உடையவர்..

அட்டகாசமாக காலை உணவு வேளை அரங்கேறிக் கொண்டிருக்க, “அய்யா..!” என்ற குரல் கேட்டு அவர் வெளியே வர, அங்கு வாசலில் ஒரு வயதான மனிதரும், அவரோடு பதினெட்டு வயது நிரம்பிய ஒரு யுவதியும், அவள் பக்கத்தில் பத்து வயது நிரம்பிய சிறுமியும் நின்றிருந்தனர்.. சத்தம் கேட்டு வெளியே வந்த சத்யனும் அவர்களை பார்த்தான்..

அந்த யுவதி இவர்களிடம் கவனம் செலுத்தாமல், அந்த சிறுமி கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருந்தாள்.. சத்யன் இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தவன் சிறுமியின் அருகில் வந்து மண்டியிட்டு “ஹாய் குட்டி உங்க பேர் என்ன..?” கேட்க,

அவன் திடீரென்று தன்னருகில் வந்து பேசவும், அதில் வெட்கம் கொண்டு, தன் அக்காவின் பின்னே ஒளிந்து கொள்ள, அந்த சிறுமியின் பாவனையில் வாய்விட்டு சிரித்தவன். “சோ க்யூட்…!!” கன்னத்தை கிள்ளி தன் உதட்டில் ஒற்றியவனை “நான் குட் கேர்ள் தான் டீச்சர் சொல்லுவாங்க..” சத்யன் சொன்னதை வேறு மாதிரி புரிந்த அந்த சிறுமி பெருமையாக சொல்ல, அவன் இன்னும் சிரித்தான்..

இருவரையும் சிறு சிரிப்புடன் பார்த்திருந்தார் பாண்டியன், அந்த பெரியவர் கையில் தாம்புழ தட்டு இருப்பதை கண்டு “என்ன மருது கையில தட்டோடு நிக்கிறீரு..? என்ன விஷேசம்..? முதல்ல உள்ள வாவே..” என்றவாறே.. அவரை உள்ளே அழைக்க, ”இருக்கட்டும் அய்யா.. என் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கேன். நீங்க எல்லாரும் குடும்பத்தோடு வந்து ஆசீர்வாதம் செய்யணும்..” சொன்னவாறே தாம்புழ தட்டை கொடுக்க,

அதை வாங்க கை நீட்டிய பாண்டியனை தடுத்த திலகவதியை அனைவரும் குழப்பமாக பார்க்க, ”நல்ல சேதி சொல்ல வந்தவியள ஏன் வெளியவே நிக்க வச்சு பேசறிய உள்ள கூப்பிடுங்க..” என சொல்லவும், சத்யன் அந்த சிறுமியை உள்ளே அழைத்து செல்ல எழில் அந்த யுவதியை அழைத்து வந்தாள்..

உள்ளே வந்ததும் அந்த பெரியவர், திருமண அழைப்பிதழை கொடுக்க, அதை வாங்கி படித்து பார்த்துவிட்டு, “ஏவே உன் பேத்திக்கு பதினெட்டு வயசுதான ஆகுது.. எதுக்கு கல்யாணத்துக்கு இப்பவே அவசரப்பட்றீரு..” பாண்டியன் கேட்க,
’என்ன செய்ய இவகளை பெத்தவிய எட்டு வயசு குழந்தையாவும், இதோ இவளை கைகுழந்தையா என்கிட்ட விட்டு அந்த சாமிக்கிட்ட போய்ட்டாவ என்னால முடிஞ்ச அளவு வளர்த்துட்டேன்.. எனக்கும் வயசாட்டுல அதான் ஒரு நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா நான் நிம்மதியா போய்ருவே..” என்றவரை, “தாத்தா..!” என்று அந்த யுவதி அதட்ட, “நான் ஒண்ணும் சொல்லல ஆத்தா..” சமாதானம் செய்தவரை..
சத்யேந்திரன் குடும்பத்தார் புன்னகையுடன் பார்த்திருந்தனர்..

“என்ன இப்படி சொல்றிய.. உம்ம பேத்திகளை நாங்க அப்படியே விட்ருவொமா..? மருது.. உமக்கு அந்த பயம் இருந்தா அதை இதோட விட்ரும்.. நான் இருக்கேன்..” பாண்டியன் அவரை சமாதானம் செய்தவர், மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க, “ சொந்தம் இல்லயா அசலுதான்.. வந்த மாப்பிள்ளை எல்லாம் வேணாம் சொன்னவ. இப்ப வந்த மாப்பிள்ளை என் சின்ன பேத்தியையும் சேர்த்து பார்த்துக்கிறேன்’ சொன்னதால இந்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லிட்டா..” பெருமையாக தன் பேத்தியை பற்றி சொல்ல,

அதுவரை அந்த சிறுமியிடம் விளையாடி பேசிக்கொண்டிருந்த சத்யன் அந்த யுவதியை நிமிர்ந்து பார்த்தான்.. அந்த யுவதியின் கவனமெல்லாம் எங்கே தங்கை சேட்டை செய்து இவர்களிடம் திட்டு வாங்கிவிடுவாளோ என்ற எச்சரிக்கை உணர்வோடும், அப்படி சேட்டை செய்யும் முன் தடுப்பதற்கு தயாராக இருப்பது போல் நின்றவளை பார்க்க சிரிப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. சத்யனுக்கு..

”ம்ம் பரவாயில்லையே இந்த வயசிலேயே இவ்வளவு பொறுப்பா இருக்காளே பேத்தியை நல்லா வளர்த்திருக்கிய.. சந்தோசம்..” என்று பாராட்டிய பாண்டியன்.. திலகவதியை பார்க்க, அவரும் புரிந்து சிறு புன்னகையுடன் உள்ளே சென்றார்.. திரும்பி வந்தவர் கையில் வெள்ளி தாம்புழத்தட்டில், பூ பழம், பட்டுப்புடைவை, பத்தாயிரம் பணமும் வைத்து கொண்டுவர, அதை இருவரும் சேர்ந்து அந்த யுவதியிடம் கொடுக்க, சில நொடிகள் தயங்கியவள்,

“ஐய்யா என்னை தப்பா எடுத்துக்காதிக.. எனக்கு உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்.. அதோட அன்பாக தரும் இந்த குங்குமம் போதும்.. இந்த புடவை பணம் எதுவும் வேணாம் அய்யா.. அது எனக்கு இனாமா வாங்கிற மாதிரி இருக்கு.. உங்களை மறுத்து பேசறேன்னு தப்பா எடுத்துக்காதிக..” என்று தன் சுயமரியாதையை விட்டு கொடுக்காமலும், அதே சமயம் தன் மறுப்பை அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசாமலும் சொல்லிய, அந்த பெண்ணை அனைவரும் வியப்போடு பார்த்திருந்தனர்..

“ஹ..ஹ.. உன்னை எதுக்கு ஆத்தா நாங்க தப்பா எடுத்துக்க போறோம்.. இந்த வயசிலேயே உன் சுயமரியாதையும், தெளிவான பேச்சும் எங்களை ஆச்சரியப்படுத்துது.. உன்னோட சுயமரியாதையை நாங்க மதிக்கிறோம் மா.. நீ போற இடத்துல சந்தோசமா இருப்ப..” அந்த பெண்ணின் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்க, அவள் இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்..மூவரும் சென்றதும்..

“இந்த காலத்தில இப்படி ஒரு பொண்ணு.. அவ போற இடம் பெருமை சேர்க்கும்.. தங்கச்சியவே இப்படி பார்த்துக்கிறவ, அவ புருசனை எப்படி பார்ப்பா..!! ம்ம் இவ குணம் அறிஞ்சு நடக்கிற புருசன் கிடைக்கனும் என்று அந்த கடவுளை வேண்டிக்கிறேன்..” செண்பகப்பாண்டியன் சொல்ல, அவர் துணைவியாரும் அதை ஆமோதித்தார்.. அவரவர் வேலையை பார்க்க செல்ல. ” தங்கச்சியவே இப்படி பார்த்துக்கிறவ, அவ புருசனை எப்படி பார்ப்பா..?’ அன்னையின் இந்த பேச்சு சத்யேந்திரன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, “ நீ முதல்லயே என் கண்ணுல பட்டிருக்கலாம்..’ ஆற்றாமையோடு மனதில் ஒரு நொடி நினைத்தவன்,

தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டு தன்னையே கடிந்தவன்..
“சே இன்னும் சில நாள்ள அடுத்தவனுக்கு மனைவியாக போற பொண்ணை பத்தி தப்பா நினைக்கிற முட்டாள்’ தன்னையே வைதவன், அடுத்தடுத்த வந்த நாட்களில் அந்த பெண்ணை மறந்து போனான்..
இடையில் ஒருநாள் அந்த பெண்ணின் திருமணத்திற்கு அவன் குடும்பத்தார் சென்று வர, சார் நண்பர்களோடு ஊர் சுற்ற சென்றிருந்தான்..

சந்தோசமாக சென்றிருந்த நாயகன் வாழ்க்கையில், ஒரே நாளில் சூறாவளி வீசி சென்றது.. அன்று தங்கள் குடும்பம் தழைக்க வீட்டின் மூத்த வாரிசு, மருமகளின் வயிற்றில் உதிக்க, அந்த குடும்பமே.. சந்தோசத்தில் மிதந்தது.. தங்கள் குடும்பம் தழைக்க வாரிசு வந்தால். குலசாமிக்கு கெடா வெட்டி பொங்கல் வைப்பதாக வேண்டுதல் வைத்திருந்தார் திலகவதி..

அதன்படியே அனைவரும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். சத்யன் அண்ணன் இரண்டு காரில் போகலாம் என்று சொல்ல, “ எதுக்குடே வீணா சுற்றுசூழலை மாசுபடுத்திட்டு.. நீங்க கார்ல போங்க.. நான் பைக்ல வர்றேன்..” என்று சத்யன் சொல்ல, மறுத்த பெற்றோரை ஏதேதோ சாமாதானம் சொல்லி அனுப்பிவைத்தவன்..

அந்த கிராமத்து இயற்கை அழகையும், சுத்தமான காற்றையும், சாலையின் ஓரத்தில் பச்சை பசேலென்ற வயல்வெளியையும் ரசித்தவாறே வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்..

சத்யன் முன்னே செல்ல, அவன் குடும்பத்தார் பின்னாடி காரில் வந்து கொண்டிருந்தனர்.. அத்தனை பேரின் முகத்திலும் அத்தனை நிறைவு, சத்யமூர்த்தி காரை ஓட்டிக்கொண்டு வர, சத்யன் பைக்கை செலுத்தி கொண்டிருந்தான்.. சத்யனும், அவனின் அண்ணனும் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு வாகனத்தை செலுத்தி ரேஸ் வைத்து கொண்டிருந்தனர்.. இவர்களின் விளையாட்டுதனத்தை அன்னையாய் திலகவதி கண்டிக்க,

“இதெல்லாம் இந்த வயசுல செய்யாம எப்போ செய்வானுவ.. இதெல்லாம் கண்டுக்காத திலகா..” செண்பகப்பாண்டியன் சொல்ல, கணவனை முறைத்து விட்டு “புள்ளாத்தாச்சி புள்ள வண்டிக்குள்ள இருக்கான்னு நினைப்பிருக்கா உங்களுக்கு..” அதட்டவும் தான் அவருக்கும் அது நினைவு வர, வண்டியை மெதுவாக ஒட்ட சொன்னார்.. ஒரு கட்டத்தில் சத்யன் முன்னே சென்று உற்சாகத்தில் இரு கைகளையும் தூக்கி சத்தமிட,
சத்யமூர்த்தியும் சிரித்துக் கொண்டே சத்யனை முந்துவதற்கு அதிவேகமாக காரை செலுத்த போனவன் தந்தையின் சொல்லுக்கு அடிபணிந்து.. காரை மெதுவாக செலுத்த,
காரை நோக்கி ஒரு லாரி ஒழுங்கில்லாமல் தாருமாறாகவும் வேகமாகவும் வந்து கொண்டிருந்ததை பார்க்க, சத்யனுக்கு எச்சரிக்கை செய்தனர்.. அதற்கு முன்பே அந்த லாரியை கண்டவன் தன் பைக்கை ஒரமாக நிறுத்தினான்.. ஆனால் சத்யமூர்த்தி வந்த ஓட்டி வந்த கார் திடீரென்று தடுமாறியது..

அதை உணர்ந்த சத்யன், பதட்டமாக காரை நெருங்க, அவனை தள்ளி போகும்படி சைகி செய்தவர்கள் கட்டுப்பாடில்லாமல் சென்ற காரும் அந்த லாரியும் நேருக்கு நேராக பெரும் சத்தத்துடன் மோத, தன் கண்முன்னே நடந்த பயங்கரத்தில் சத்யன் அங்கேயே மயக்கமடைந்தான்..

சத்யன் கண்விழித்து பார்க்கும் போது, அவன் மருத்துவமனையில் இருந்தான்.. ஊர் பெரியவர்கள் சிலர் அவன் அருகில் இருந்தனர்.. அவன் கண்விழித்ததை அறிந்து “ தம்பீ எல்லாரும் நம்மளை விட்டு போய்ட்டாவளே.. நம்ம ஊருக்கே காவல் தெய்வமா இருந்தாரே உம்ம அய்யா.. இப்ப இந்த ஊரே அநாதயா கிடக்கே..!” என்று சொல்லி அழ,

சத்யன் தன் குடும்பத்தாரை வைத்திருந்த அறைக்கு சென்றான்.. வேகமாக வந்தவன், அங்கு முகம் மட்டும் தெரியுமாறு.. வைத்திருந்த தன் குடும்பத்தாரை பார்த்ததும் மீண்டும் மயக்கம் வருவது போல் இருக்க, தன்னை மிகவும் கஷ்டப்பட்டு நிலை நிறுத்தியவன், பாறையாய் கனத்த கால்களை மெதுவாக எடுத்து உள்ளே சென்றவன், காலையில் மஞ்சள் பூசி மங்களகரமாக இருந்த அன்னையின் முகம், குருதியில் குளித்திருப்பதை பார்த்தவன்,

மூச்சுவிடவே சிரமமாக இருக்க.. மற்ற யாரையும் பார்க்கும் சக்தியற்று வெளியே வந்துவிட்டான்.. கடைசியாக ஒருமுறை அனைவரையும் பார்க்குமாறு ஊர் மக்கள் சொல்ல, உறுதியாக மறுத்துவிட மற்ற காரியங்கள் அனைத்தும் கடகடவென்று நடந்தேறியது.. அனைத்து சடங்கிலும் இறுக்கத்துடனே செய்து முடித்தான்

சத்யன்,, அனைத்தும் முடிந்து, வீட்டிற்கு வந்தவன், வீடு வெறுமையாகை இருக்க,
அதுவரை அடக்கி வைத்திருந்த அவனின் துக்கம் மடைதிறந்த வெள்ளம் போல் வெளியே வர, வாய்விட்டு கதறி அழுதான்.. ஏதோ வெறி, கண்மன் தெரியாத கோபம் வர, கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தான்.. வீட்டையே அலங்கோலமாக்கியவன் தேற்றுவாறின்றி அழுது கரைந்தான்..
முழுதாக ஒருமாதம் வீட்டிலேயே அடைந்து கிடந்தவனை ஊர் பெரியவர்கள்

சமாதானம் செய்து, “தம்பி நடந்ததையே நினைச்சு அழுதுட்டு இருந்தால் எதுவும் நடக்காது.. இனி நீங்க தான் அய்யா இருந்த எடத்துல இருந்து எல்லாஞ் செய்யனும்.. எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீங்க தான் தம்பி, எழும்பி வாங்க தம்பி.. வந்து, உங்க குடும்பதையே நம்பி இருக்க இந்த ஊர் மக்களை நீங்க தான் பார்த்துக்கவேணும்..” என்று சொல்ல,
அவர்கள் பேசிய பாவனையில், அந்த சூழ்நிலைலேயும் சிரிப்பு வந்தது அவனுக்கு,

“ நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லங்க என்னை கவனிக்கவே ஒரு ஆள் வேணும்.. இதுல நான் எங்க ஊரை கவனிக்க..?” என்று மறுத்தவனை, “நாங்க இருக்கோம் தம்பி.. ஊர் சோலில கவனம் செலுத்துனியன்னா உங்க மனம் மாறும் தம்பி..” என்று சொல்லவும், அவனுக்கும் மன மாறுதல் தேவையாக இருக்க, அவர்களின் பேச்சிற்கு செவி சாய்த்தான்..

விளையாட்டு தனமாக அந்த பொறுப்பை கையில் எடுத்தவன், எடுத்த பிறகுதான் தெரிந்தது இத்தனை வருடம் தன் தந்தை எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்று.. முதலில் சிறிது தடுமாறியவன், பின் தந்தையை மிஞ்சும் தனையன் ஆனான்.. இளம் ரத்தம் சொல்லவா வேண்டும்..? அவன் எதிர்பார்த்த சுவாரஸ்யமும் சவால்களும் இதில் நிறைந்திருக்க தன் காயங்களை தற்காலிகமாக மறந்து ஊர் வேலைகளில் காவனம் செலுத்தினான்..

எட்டாம் வகுப்பு வரை இருந்த அரசு பள்ளியை தன் முயற்சியால் பன்னிரெண்டாம் வகுப்புவரை மாற்றினான்..அடுத்து கல்லூரி கட்டுவதற்கும் அரசாங்கத்திடம் மனு போட்டிருக்கிறான்.. அது சம்பந்தமாக இன்று அதிகாரியை சந்திக்க செல்லவிருக்கிறான்..

தன் கடந்தகாலத்தை நினைத்தவாறே தன் வேலைகளை செய்து முடித்தவன், காலை உணவிற்காக கீழே வந்தவன், உண்பதற்கு அமர, “மாமா..” என்ற கிள்ளை குரல் கேட்டு நிமிர்ந்தவன் அங்கு பாவாடை தாவணியில் இளம் பெண் தன் மாமனின் கம்பீரத்தை பார்த்து கண்ணில் மயக்கத்துடன் நின்றிருந்தாள்.. அதை கவனியாதவன், “ஹேய் வாமா வடிச்ச கஞ்சி..! என்ன காலையேலே இங்க தரிசனம் தந்திருக்கவ..” கிண்டலாக கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தவனை சிணுங்கலாக பார்த்தவள்,

“மாமா என் பேர் வடிச்ச கஞ்சி இல்லை வடிவுக்கரசி..” சிணுங்கலாக சொன்னவளை சிரிப்புடன் பார்த்தவன், “ எனக்கென்னமோ வடிவுக்கரசியை விட வடிச்ச கஞ்சிதான் நல்லா இருக்கு.!” என்று கேலி செய்தவன், ” நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலியே,,” என கேட்க, “அது அம்மா உங்களுக்கு காலை பலகாரம் குடுத்து விட்டுச்சு.. இங்க வாங்க..” அவனின் கை பிடித்து உணவு மேஜையில் அமர வைத்தவள், உணவை பரிமாற போக அவளை தடுத்தவன்,

“பாட்டி..! உள்ளே குரல் கொடுக்க.. ஒரு வயதான முதியவர் உள்ளே இருந்து வந்தார்.. பாட்டி எனக்கு சாப்பாடு பரிமாறுங்க.. “சொன்னவன், அருகில் நினிற வடிவிடம் ”நீயும் உட்கார்..!” என்று சொல்ல, அதுவரை முகத்தை உர்ரென்று வைத்திருந்தவள், சத்யன் அவளை சாப்பிட அழைக்கவும், அந்த மூதாட்டியை அலட்சியமாக பார்த்து எஜமானியின் தோரணையுடன் அமர,

அந்த மூதாட்டிக்கு அது புரிந்தாலும், கடவுளே எங்க ஐயாவை இந்த குடும்பத்திடம் இருந்து காப்பாத்திரு..” வேண்டியவாறே இருவருக்கும் உணவை பரிமாறினார்..

”அய்யா..!!” உணவை வாயில் வைக்க போனவன், வெளியே கேட்ட சத்தத்தில் அதை அப்படியே விட்டு வந்தான்.. வெளியே நடுத்தர வயதை தாண்டிய ஒரு ஆண் கண்ணிருடன் நின்றிருக்க “என்ன மருதண்ணே என்னாச்சு ஏன் அழறிய..?” கேட்டவாறே அவரை நெருங்க.. “அய்யா என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தி குடுங்கய்யா..” என்று அழுதவரை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழப்பத்துடன் மார்த்தவன்,

“ என்ன சொல்றிய..? மணிக்கு என்னாச்சு..? அவ புருசன் வீட்ல சந்தோசமாதன வாழ்றா..?” கேட்டவனை அழுகையுடன் ஆமோதித்தவர், அய்யா கல்யாணம் ரெண்டு வருசம் ஆகியும் என் பொண்ணுக்கு குழந்தை இல்லன்னு வெட்டிவிட போறேன்னுஞ் சொல்றாவ.. அவருக்கு ரெண்டாவதா கல்யாணம் செய்ய போறாவளாம்..” அழுதவாறே சொல்ல,

கேட்டுக் கொண்டிருந்தவன் முகம் இறுக, “ வேந்தா,,! இன்னும் அரைமணி நேரத்துல பஞ்சாயத்து ரெண்டு குடும்பமும் வந்தாகணும்..” என்றுவிட்டு உள்ளே சென்றான்.. வேந்தன்.. இளவேந்தன்.. சத்யேந்திரன் நண்பன்..!! சத்யன் சொல்வதை அச்சு பிசகாமல் நிறவேற்றும் நண்பன்..!

சத்யன் பஞ்சாயத்திற்கு சென்று கொண்டிருந்தவன், முன்னே ஒரு பெண் சைக்கிளில் பால் கேன் வைத்து சென்று கொண்டிருந்தாள்.. கேரியலில் பனிரெண்டு வயது மதிக்க ஒரு சிறுமி அந்த பெண்ணின் இடுப்பை சுற்றி கைபோட்டு அணைத்து உட்கார்ந்திருக்க, அவ்வப்போது அந்த சிறுமியை தொட்டு தொட்டு அவள் கீழே விழாமல் இருக்க பாதுகாப்பை சரிபார்த்து கொண்டாள்..

இதை பார்த்த சத்யனுக்கு ஐந்து வருடத்திற்கு முன் பார்த்த, சிறுமியும், அந்த யுவதியும் மனதில் வந்து சென்றனர்.

சரணடைவா(ள்)ன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்