766 views

 

 

ஈர்ப்பு 29

 

ராகுல் கூறியதைக் கேட்ட நான், “வாட்…” என்று கத்தினேன். இம்முறை சற்று அதிர்ச்சி அதிகமே…

 

“சோ, அவங்களுக்கு வேண்டியது நான்னா என்னை கடத்தப் போறாங்களா?” என்றேன் சற்று பயத்தோடு.

 

“கடத்தலா? அந்த ஸ்டேஜ்ஜெல்லாம் அவங்க அப்போவே தாண்டிட்டாங்க. டைரெக்டா மர்டர் தான்.” என்று அவன் கூற, “அடப்பாவி நீயே என்னை கொண்டு போய் அவனுங்கிட்ட விட்டுட்டு வந்துடுவ போல!”

 

“ஏன் நீயே சமாளிக்க மாட்டீயா அவனுங்கள? வாய் மட்டும் இவ்ளோ பேசுற!” என்று அவன் கூற, “ஹலோ, எங்களை பாதுகாக்க தான் நீங்க இருக்கீங்க. உங்க வேலையை எதுக்கு நான் பார்க்கணும்?”என்று மிதப்பான பார்வையுடன் கூறினேன்.

 

“ஆமா, ஒரு சிபிஐ ஆபீஸர்ங்கிற மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க!” என்று அவன் கேட்க, ‘அச்சோ கவனிச்சுட்டானா?’ என்று நினைத்த நான், “ஹிஹி, அது ஒரு ஃப்ளோல வந்துடுச்ச.” என்று சமாளித்தேன்.

 

“ஹ்ம்ம், இப்போ ஓகேயா? கன்டினியு பண்ணலாமா.” என்று அவன் கேட்க, என் மனநிலை உணர்ந்து அவன் காட்டிய பரிவில் எனக்குள் அவன் மீதான காதல் இன்னும் இன்னும் கூடியது.

 

நான் ஒரு தலையசைவில் சம்மதம் தெரிவிக்க, அவன் தொடர்ந்தான்.

 

“அவங்க உன்னை கொலை பண்றதுக்கு தான் பிளான் பண்ணிருக்காங்க.”

 

“என்னை எதுக்கு கொல்லணும்? என் தம்ப் பிரின்டும் ரெட்டினல் ஸ்கேன்னும் போதும்ல!”

 

“ஹ்ம்ம், அந்த பேங்க்ல அக்கௌன்ட் வச்சுருக்கவங்க இறந்தா, அந்த லாக்கர்ல இருக்குறது எல்லாம் அவங்க  கார்டியனுக்கு போய்டும். சோ உன்னை கொலை பண்ணிட்டா, அவங்களுக்கு கார்டியன்னு சொல்லி அந்த டாக்குமெண்ட் எடுக்குறதுக்கும் ஈஸி, அதுக்கு சாட்சியான நீயும் உயிரோட இருக்க மாட்ட. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!”

 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “இது தாமோ அங்கிளுக்கு தெரியுமா?” என்று கேட்ட என் குரல் லேசாக நடுங்கியது.

 

அவரை என் அப்பா போல நினைத்திருந்தேன். ஆனால் அவர் இதை இவ்வளவு நாட்களாக என்னிடமிருந்து மறைத்தது எனக்கு வருத்தமளித்தது.

 

“இல்ல தாமோ அங்கிளுக்கு உன்னோட தம்ப் பிரின்டும் ரெட்டினல் ஸ்கேன்னும் தான் உங்க மாமா யூஸ் பண்ண போறாருன்னு ஃபர்ஸ்ட் தெரியாதாம். உங்க மாமா இதை சொன்னதும் ரொம்ப கோபப்பட்டாராம். ஏன் ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை பணயம் வைக்குறன்னு திட்டினாராம்.”

 

இதைக் கேட்டதும் தான் எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. 

 

“என்ன மேடம், இப்போ ஓகே வா?” என்று முகத்தை பார்த்து அவன் வினவ, அவன் கேட்க வருவது புரிந்தது போல, “ம்ம்ம் ஓகே தான், பட் என்கிட்ட இவ்ளோ நாள் மறைச்சதால அவருக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் இருக்கு.” என்றேன்.

 

“அது உனக்கும் அவருக்கும் இருக்க டீலிங்.” என்று தோளை குலுக்கிக் கொண்டான் ராகுல்.

 

“இப்போ என்னை எப்படி அந்த மினிஸ்டரோட ஆளுங்க கிட்டயிருந்து காப்பாத்த போறீங்க?” என்று பரபரப்பாக நான் வினவ, அதில் பாதியளவு கூட இல்லாதவாறு, சர்வசாதாரணமாக, “அதெல்லாம் இப்போவே சொல்லிட்டா இன்டெரெஸ்டிங்கா இருக்காது பப்ளி!” என்று கூறி கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

 

‘நானே உயிர் போற பயத்துல இருக்கேன். இதுல இன்டெரெஸ்டிங்கா வேற இருக்கணுமா?’ என்று மனதிற்குள் முணுமுணுக்க, அதை எப்படியோ அறிந்து கொண்டவனாக, “டோன்ட் ஒர்ரி பப்ளி, யூ ஆர் இன் சேஃப் ஹாண்ட்ஸ் நவ். உன்னை சுத்தி உன்னை பாதுகாக்கவே நிறைய பேரு இருக்காங்க.” என்றான் அவன்.

 

அப்போது தான் எனக்கு அது தோன்றியது. “ஹே இந்த விஷயம் யாரு யாருக்கெல்லாம் தெரியும்?” என்று அவனிடம் வினவ, “நீ யாரையெல்லாம் இப்போ யோசிச்சியோ, அவங்க எல்லாருக்கும் தெரியும்.” என்றான் அவன்.

 

“அப்போ அபி, ப்ரியா, சாண்டி, நேஹா… எல்லாருக்கும் தெரியுமா?”

 

“ம்ம்ம் தெரியும், இன்னும் ஒரு வாரத்துல அந்த மினிஸ்டர் கேஸ்ல ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கப் போறாங்க. சோ, இந்த ஒரு வீக் நமக்கு ரொம்ப ஆபத்தானது. உன்னை எப்பவும் எங்க கவனத்துலேயே வச்சுக்குறது கஷ்டம். அதான் உன்னை சுத்தி இருக்குறவங்க கிட்ட உன்னோட பாதுகாப்புக்காக இந்த கேஸ் பத்தி பேசுனோம். போன வாரம் தான் எல்லாருக்கும் தெரியும். அபியை தவற!”

 

“ஓஹ், அப்போ அபிக்கு முன்னாடியே தெரியுமா?”என்று புருவம் சுருக்கி நான் வினவ, “ஆமா, அவன் ரெஸ்டாரண்ட் திறக்குறதுக்கு முன்னாடியே ஒரு நாள் என்கிட்ட வந்து எதுக்கு அவன் தங்கச்சியை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்னு கேட்டான். அப்போ தான் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன்னை பார்த்துக்க சொன்னோம்.” என்றான்.

 

‘ஓஹ், அது தான் பயபுள்ள கொஞ்ச நாளா ரொம்ப பாசத்தை கொட்டுறானோ!’ என்று நினைத்துக் கொண்டேன்.

 

திடீரென்று அந்த சந்தேகம் தோன்ற, “அது மட்டும் தான் அபிக்கு தெரியுமா?” என்று அவனிடம் கேட்டும் விட்டேன்.

 

“ஆஹான், மேடம் வேற என்ன தெரியணும்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்க?” என்றான் சன்ன சிரிப்புடன்.

 

“க்கும்… அதெல்லாம் ஒன்னும் இல்லயே!” என்று நான் சமாளிக்கும்போதே, என் அலைபேசி அழைப்பை விடுக்க, அதில் தெரிந்த என் அப்பாவின் பெயரில் ‘ஜெர்க்’கானேன். நான் வந்து ஒன்றரை மணி நேரம் கழிந்திருந்தது.

 

“அச்சோ ஹிட்லர் போன் பண்ணிட்டாரு. நான் கிளம்புறேன். பை..” என்று அவனிடம் அவசரமாக கூறிவிட்டு, அவனின் மறுமொழிக்காக கூட நிற்காமல் நடக்க ஆரம்பித்தேன்.

 

இரு அடிகள் எடுத்து வைத்திருப்பேன். அவனின் ‘பப்ளி’யில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே தேங்கி நின்றேன்.

 

அவன் என் அருகில் வந்து, என் கைகளை பற்றி, “உனக்கு எதுவும் ஆகாது. பயப்படாம ரிலாக்ஸா இரு. அட் தி சேம் டைம் கவனமா இரு. டேக் கேர் பப்ளி!” என்றான். நான் அவனிடம் தலையசைத்துவிட்டு கிளம்பினேன்.

 

*****

 

இரவு என் அறையில்…  நடந்த நிகழ்வுகள் அனைத்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. நிறைய அதிர்ச்சிகள் ஆச்சரியங்கள் என்று உணர்ச்சி குவியலாக இருந்தது அன்றைய நாள்.

 

ஆனால், இவை அனைத்திற்கும் மத்தியில், என்னை உயிர்ப்போடு இருக்கச் செய்தது அவன் மட்டுமே!

 

இத்தனை கனமான உணர்ச்சிகளுக்கிடையே கொஞ்சம் மகிழ்ச்சியையும் எனக்கு அளித்தது அன்றைய நாள். அதுவும் அவன் மூலம் என்பது கூடுதல் ஸ்பெஷல்… 

 

இது தான், இத்தனை நாட்களில், என்னவனுடன் நான் கழித்த அதிகபட்ச நேரமாகும். அந்த ஒன்றரை மணி நேரத்தில் அவன் என் மீது வைத்திருக்கும் அக்கறை, பரிவு, பாசம், காதல் என்று எல்லாவற்றையும் நான் நேரில் கண்டு உணர்ந்தும் கொண்டேன்.

 

நான் முகம் சுருக்கியது கூட பொறுக்காமல், என்னை இயல்பாக்கியது, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தது என்று இன்று அவன் செய்த யாவும், மேலும் மேலும் என்னை அவன் மேல் பித்தாக்கியது உண்மையே! 

 

இதுவரை நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இருவரும் நன்கு உணர்ந்திருந்தோம். 

 

மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் செய்வது, டேட்டிங் செல்வது, கேண்டில்-லைட் டின்னரோடு பிறந்தநாள் கொண்டாடுவது என்று மற்றவர்களுக்கு  தங்கள் காதலை பறைசாற்றுவது தான் காதலின் அடையாளமா என்ன?

 

ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் அல்லாமல், உணர்வுகளால் பகிர்வதும் காதலே! இரு மனங்கள் உணர்ந்து கொண்ட பின் வார்த்தை பகிர்வதெதற்கு? பகிர்தலின் உணர்தல் சுகமல்லவா!

 

‘அட நதி, லவ் வந்ததுக்கு அப்பறம் நீ யோசிக்கிறது எல்லாம் கவிதையாவே வருதே, அடடே ஆச்சர்யக் குறி!’ என்று என்னை நானே பாராட்டிக்கொண்டு அந்த இரவு முழுவதும் இப்படியே பைத்தியம் போல் ஏதோ பிதற்றிக் கொண்டு, விடியலில் கண்ணயர்ந்தேன். அந்த விடியல் எனக்காக வைத்திருப்பதை அறியாமல்!

 

*****

 

இரவு முழுவதும் காதல் கனவுகளில் மூழ்கியதால் விடியலில் கண்ணயர்ந்த என்னை அடித்துப் பிடித்து எழும்பச் செய்து தன் வேலையை செவ்வனே செய்தது என் அலைபேசியில் நான் வைத்த அலாரம்… 

 

இரண்டு மணிநேரமே தூங்கியிருந்ததால் கண்கள் இரண்டும் சிவந்திருக்க, என்னால் சிறிது நேரம் கூட கண்களை திறக்க முடியவில்லை. ஆனாலும், நடைப்பயிற்சிக்கு செல்ல ஆயத்தமானேன் உற்சாகத்துடனே!

 

மிகுந்த சிரமத்துடன் கண்களை திறந்து வைத்துக் கொண்டே மெல்ல நடந்து சென்றேன். சற்று நேரத்தில் ராகுலும் வந்து என்னுடன் சேர்ந்துக் கொண்டான்.

 

என் கண்களை பார்த்து, “என்ன பப்ளி நைட் ஃபுல்லா தூங்கலையா? யாரை நினைச்சு தூக்கம் வரல உனக்கு?” என்று வேண்டுமென்றே கேட்டான்.

 

எனக்கு அவன் கேள்வியில் உள்ளே பட்டாம்பூச்சிக்கள் பறந்தாலும், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல், “எனக்கு யாரு நினைப்பும் இல்லையே. என்னை சுத்தியிருக்க ஆபத்துலயிருந்து எப்படி தப்பிக்கலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேனா, அதான் நைட் தூங்க நேரமாயிடுச்சு.” என்றேன் ஏற்ற இறக்கத்துடன்.

 

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “நீ நைட் ஃபுல்லா யோசிச்சியா? அதுவும் அவங்க கிட்டயிருந்து எப்படி தப்பிக்கலாம்ன்னு! சரி இப்படி வெறித்தனமா யோசிச்சுருக்கியே கண்டிப்பா ஏதாவது ஐடியா தோணிருக்குமே.” என்றான் கிண்டலாக.

 

‘ஐயையோ லூசுத்தனமா எதையோ உளறி வச்சுட்டேன். இப்போ இவன் ஐடியா வேற கேக்குறானே!’ என்று யோசித்த நான், “அது… அது வந்து… ஹான்… எனக்கு மறந்துருச்சு.” என்றேன் வேகமாக.

 

அவன் என்னை ஒரு மாதிரி பார்க்க, அவன் பார்வையை அலட்சியப்படுத்தி சுற்றியிருந்த காட்சிகளில் என் கவனத்தை திருப்பினேன்.

 

எங்கும் பனி நிறைந்திருக்க, மார்கழி மாதக் குளிரனால், நான் போட்டிருந்த ஸ்வெட்டரை என்னுடன் இறுக்கிக் கொண்டேன். அப்போது தான் நாங்கள் செல்லும் வழி எப்போதும் செல்லும் வழி அல்ல என்பதை உணர்ந்தேன்.

 

அதை அவனிடம் சொல்லத் திரும்பிய போது, நான் சொல்லவருவதை ஏற்கனவே அறிந்ததை போல சிரித்துக் கொண்டே, “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு பப்ளி. இப்போ எதுவும் என்கிட்ட கேட்காத.” என்றான்.

 

‘என்ன நடக்குது இங்க? நேத்துலயிருந்து ஒரே அதிர்ச்சியா இருக்கு! இன்னைக்கு என்ன அதிர்ச்சி தர காத்திருக்கானோ?’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனுடன் நடந்து சென்றேன்.

 

சிறிது நேரத்திலேயே ஒரு இடத்தில் நின்றோம். பனி சூழ்ந்திருந்த காரணத்தினாலும், சரியாக தூங்காததினால் கண்ணில் ஏற்பட்ட எரிச்சலினாலும் அது என்ன இடம் என்று எனக்கு சரிவர தெரியவில்லை.

 

பனி விலகியதும், அங்கு தென்பட்ட காட்சியில் வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் நின்றிருந்தேன். தரை முழுவதும் சிறு புற்கள் முளைத்திருக்க, அவற்றின் நுனியில் இருந்த பனித்துளிகளைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை எனக்கு.

 

சற்று தூரம் நடந்து சென்றால், சிறிய அளவில் பள்ளம். அதற்குள் விழுந்து விடாதபடி தடுப்பும் இருந்தது. அங்கிருந்து மேலே பார்த்தால், பனி விலகியதும் சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எல்லா திசைகளிலும் செலுத்தி அவற்றின் மேல் தன் ஆதிக்கத்தை புதுப்பித்துக் கொண்டான். 

 

இவ்வளவு நேரம் குளிரினால் ஜில்லென்றிருந்த உடல், சூரியனின் காலை நேரத்து மிதமான வெப்பத்தினால் சற்று இயல்பாகியது. இந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த நான், அருகில் உணர்ந்த அரவத்தில் சிந்தை கலைந்து திரும்பிய போது, அங்கு அவன், என்னவன்! தன் மென்மையான புன்னகை முகத்துடன், என் அருகில் வந்து, ஒரு காலை மடித்து கீழே அமர்ந்தான்.

 

அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்து மிதமான அதிர்ச்சியில் இருந்தேன் நான்!

 

இதோ அவன் காதலை என்னிடம் சொல்லப் போகிறான். இதுவரை உணர மட்டுமே வைத்த அவன் காதலை என்னிடம் பகிரப்போகிறான். இந்த காலை நேரத்தில், இப்படியொரு அழகான இடத்தில் அவன் என்னிடம் மனம் திறக்கப் போவதை என் மனம் சந்தோஷமாக வரவேற்க தயாராக இருந்தது…

 

‘அச்சோ இன்னைக்கா ப்ரொபோஸ் பண்ண போறான்? இன்னைக்குன்னு பார்த்து நான் அழகாவே கிளம்பி வரலையே! மூஞ்சி தூக்கக் கலக்கத்துல டையர்டடா வேற இருக்கே. ப்ச், நேத்தே ஒரு ஹிண்ட் கொடுத்துருந்தா அழகா கிளம்பி வந்துருப்பேன்.’ என்று அந்த நேரத்திலும் நான் சலித்துக் கொள்ள, ‘அடியேய், உனக்கெல்லாம் யாராவது ப்ரொபோஸ் பண்றதே பெரிய விஷயம். இதுல முன்னாடியே சொல்லலன்னு எதுக்கு இந்த வெட்டி அலப்பறை? ஒழுங்கா மைண்ட் வாய்ஸ்ல பேசுறத நிறுத்திட்டு நடக்குறத கவனி.’ என்று என் மனசாட்சி என் மைண்ட் வாய்ஸிற்கு எண்டு-கார்டு போட, அது சொல்வதிலும் சில உண்மைகள் இருப்பதால் அமைதியானேன்.

 

இவையனைத்தும் அவன் தன் ஒற்றைக்காலில் அமர்ந்த நொடி என் மனதிற்குள் தோன்றியவை. அதிலிருந்து விடுபட்டு அவனைக் கண்டேன். அவனும் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அடுத்த நொடி அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்த சிறிய பெட்டியைத் திறந்து, “பப்ளி, வில் யூ மேரி மீ அண்ட் பீ மை பெட்டர்-ஹாஃப் போர் தி ரெஸ்ட் ஆஃப் மை லைஃப்?” என்று கேட்டான்.

 

அவன் உருகி அழைத்த ‘பப்ளி’யிலேயே என் வசம் நான் இல்லை… சிறகே இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். அவன் அப்போது கூட தன் காதலை சொல்லாமல் என்னை மணக்கக் கேட்டது எனக்குள்  சொல்லவியலாத உணர்வுகளை ஏற்படுத்தியது.

 

மகிழ்ச்சியில் பேச்சிழந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ, “பப்ளி, எவ்ளோ நேரம் தான் இப்படியே இருக்குறது? சீக்கிரமா ‘யெஸ்’ சொல்லு!” என்றான்.

 

‘பார்றா, அவ்ளோ கான்ஃபிடேன்ஸா நான் யெஸ் தான் சொல்வேனு. கொஞ்ச நாள் இவனை அலையவிட்டா என்ன?’ என்று என் மனம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், என் சம்மதமே இல்லாமல் என் தலை ‘ஆம்’ என்பதைப் போல் அசைந்தது.

 

‘ச்சே, இது என்ன நான் ஒன்னு நினைக்க, நானே வேறெதோ செய்றேன்! ஹ்ம்ம், என் ஒவ்வொரு பார்ட்டும் அவனுக்கு ‘அடிக்ட்’டாகிட்டு  இருக்கு.’ என்று நான் செல்லமாக சலித்துக் கொள்ள  “என்ன பப்ளி, மனசில ஏதோ நினைச்சுட்டு வெளிய வேறெதோ செய்ற மாதிரி இருக்கு?” என்று அவன் சரியாக கேட்டான்.

 

அவன் பேச்சில் இயல்பிற்கு மீண்ட நான், “அதெல்லாம் இல்லையே.” என்று சமாளித்தேன்.

 

அவன் அந்த பெட்டியில் இருந்த மோதிரத்தை எடுக்க, நான் ஆவலுடன் அதை பார்த்தேன். அது ‘என்’ என்ற ஆங்கில எழுத்தின் முடிவில் அதனோடு இணைந்தவாறு ‘ஆர்’ என்ற எழுத்து வருமாறு அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அதன் அழகை பார்த்து ஒரு நொடி வியந்த நான், அவன் அதை எனக்கு அணிவிக்க வரும்போது தயங்கினேன்.

 

அவன் ‘ஏன்’ என்பது போல் பார்க்க, நானோ இறைஞ்சும் பார்வையோடு, “இது இப்போ போட வேண்டாமே.” என்றேன். அவன் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“அது வந்து, இது நீங்க எனக்கு கொடுக்குற ஃபர்ஸ்ட் கிஃப்ட். அதை யாருக்கிட்டயும் காட்டாம மறைச்சு வச்சு போட எனக்கு பிடிக்கல. அதே மாதிரி இத ஒன்ஸ் நீங்க என் விரல்ல மாட்டினா அதை நான் எப்பவுமே கழட்டக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று அவன் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன் கூறி முடித்தேன்.

 

அவனோ அதை எளிதாக எடுத்துக் கொண்டு, “ஓகே மேடம், நம்ம எங்கேஜ்மெண்ட்ல இதை நான் உனக்கு போட்டுவிடுறேன். அப்போ போட்டுவிட்டா பப்ளிக்கு ஓகேவா?” என்று கேட்டான்.

 

நானும் வெட்கச் சிரிப்புடன் தலையசைத்தேன். அப்போது என் வெட்கத்தை கலைத்தது என் அலைபேசி. அதில் தெரிந்த என் அம்மாவின் பெயரில், என் முகமோ வெளிறி, ஏதோ தவறு செய்ததை போல எனக்கு வியர்க்க துவங்கியது.

 

அதை உணர்ந்த அவன் ஆறுதலாக என் கைகளைபள் பற்றிக் கொண்டு எடுத்து பேசுமாறு தலையசைத்தான். 

 

என் அலைபேசியை உயிர்ப்பித்ததும் அங்கிருந்த என் அம்மா போட்ட சத்தம், அலைபேசி வாயிலாக அல்லாமல் நேரடியாகவே என் காதுகளில் சேர்ந்தது போல் இருந்தது.

 

“எங்க டி இருக்க? மணி பார்த்தியா என்ன ஆச்சுன்னு? எப்பவும் எட்டு மணிக்கு முன்னாடி எழுந்துக்காத நீ, இந்த ஒரு வாரமா ஒரு மார்க்கமா தான் டி இருக்க.” என்று என் அம்மா புலம்ப ஆரம்பிக்க, நானோ என் அருகில் இருப்பவனுக்கு இவையெல்லாம் கேட்கக்கூடாது என்ற வேண்டுதலில் இருந்தேன்.

 

ஆனால், அவன் சிரிப்பே அனைத்தையும் அவன் கேட்டுவிட்டான் என்பதை கூறியது.

 

என் விதியை நொந்து கொண்டு என் அம்மாவிடம், “ஸ்ஸ்ஸ் ம்மா, இப்போ எதுக்கு புலம்பிட்டே இருக்க? நான் வந்துட்டே இருக்கேன்.” என்று அவர் அடுத்து பேசும்முன் இணைப்பை துண்டித்தேன்.

 

‘உஃப்’ என்ற பெரு மூச்சுடன் நான் திரும்புகையில், அவன் இன்னும் நகைத்துக் கொண்டிருக்க, நான் அவனை முறைத்தேன்.

 

“ஓகே ஓகே வா போலாம்.” என்று சரண்டரானான். 

 

செல்லும் வழி முழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காதபோது பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். வீடு வந்ததும் அவனை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல முற்பட்டேன்.

 

அப்போது அவன் ‘பப்ளி’ என்று விளிக்க, திரும்பி அவனைப் பார்த்தேன். அவனோ ‘ஐ லவ் யூ’ என்று உதட்டை அசைத்து கண்ணடித்து அவன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

 

நானோ அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். அவன் சற்று நேரத்திற்கு முன் என்னை மணக்க கேட்டபோது கூட இவ்வளவு அதிரவில்லை நான். அவனின் அந்த ‘ஐ லவ் யூ’ என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்க, கன்னத்தில் தோன்றும் வெட்கச் சிவப்பை மறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன்.

 

அப்போது என் முதுகில் விழுந்த அடியில் திடுக்கிட்டு திரும்பினேன். அங்கோ என் அம்மா ‘புசுபுசு’வென மூச்சுக்காற்று அனல் காற்றாய் மாறி என்னை பொசுக்கிட துடிக்கும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.

 

“என்ன பண்ண இவ்ளோ நேரம்?” என்று அவர் வினவ, ‘அச்சோ இங்க நடந்ததை பார்த்திருப்பாங்களோ?’ என்ற பயத்துடனே, “வா… வாக்… க்கும்… வாக்கிங் போயிட்டு வந்தேன்.” என்றேன்.

 

“இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு, நானும் இவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன், நீ வேற எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருக்க?”  

 

‘ஹப்பா நல்ல வேளை, அம்மாக்கு எதுவும் தெரியல!’  என்று பெருமூச்சு விட்டு, “அது ம்மா, பொடிக்குக்கு ஒரு ஐடியா தோணுச்சா அதான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று ஒருவாறு அவரை சமாளித்துவிட்டு உள்ளே சென்றேன், அங்கு என் அப்பாவும் இதை கவனித்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல்!

 

*****

 

அன்று பொடிக்கிற்கு சென்றபோது தான் க்ரிஷ்ஷை பற்றி நினைவே வந்தது.

 

‘அச்சோ அவனை வேற கண்டுபிடிக்கணுமே. நாளைக்கு மட்டும் தான இருக்கு.’ என்று யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சாண்டி, “என்ன டி இன்னைக்கு உன் முகம் பளபளன்னு இருக்கு. என்ன டி நடந்துச்சு?” என்றாள் ஆவலாக.

 

நான் ஒன்றும் கூறாமல் வெட்கத்துடன் அமர்ந்திருக்க, “அடியேய், என்ன டி வெட்கமெல்லாம் படுற? எனக்கே ஷாக்கா இருக்கு டி. என்னன்னு சொல்லு டி எரும.” என்றாள்.

 

“அது… அவங்க… ப்ரொபோஸ் பண்ணாங்க.” என்று எனக்கே என் குரல் கேட்காதவாறு  கூறினேன். 

 

“வாட்… ப்ரொபோசலா? அதை இவ்ளோ லேட்டா சொல்ற. நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? சோ ஹாப்பி ஃபார் யூ டி.” என்று என்னை கட்டிப்பிடித்தாள்.

 

இப்படி என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்விற்கும் தானும் சந்தோஷப்படும் நட்பை பெற்றது எனக்கு பெருமையாகவே இருந்தது.

 

ஒருவாறு நானே இயல்பாகிக் கொண்டு அவளிடம், “என் லவ் சக்ஸஸ் ஆனது இருக்கட்டும், உன் மேட்டர் என்னாச்சு?” என்றதும் அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள் தன் சிரிப்பை தொலைத்தாள். அதிலிருந்தே அவள் மனநிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

 

“ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கோம். நான் உள்ள போய் வேலைய பார்க்குறேன்.” என்று கூறி சென்று விட்டாள்.

 

‘ப்ரோ நீங்க ரொம்ப பாவம்!‘ என்று நினைத்துக் கொண்டு அன்றைய வேலையை துவங்கினேன். 

 

வேலை ஒருபுறம் நடந்தாலும், என் மனதிற்குள் ‘எவ்வாறு  க்ரிஷ்ஷை கண்டுபிடிப்பது’ என்று யோசித்துக் கொண்டே தான் இருந்தேன்.

 

அப்போது கேட்ட, “ஹாய் சிஸ்!” என்ற குரலில் என் யோசனையிலிருந்து மீண்டேன்.

 

அங்கு சிரித்த முகமாக நின்றிருந்த கிருஷ்ணாவை பார்த்து, “ஹாய் ப்ரோ, இப்போ தான் உங்களை பத்தி நினைச்சேன், அதுக்குள்ள வந்துட்டீங்க.” என்றேன்.

 

“என்னது என்னை பத்தியா? நல்ல விதமா தான நினைச்சீங்க?”

 

“ஹாஹா, ப்ரோ நீங்க ரொம்ப பாவம்னு நினைச்சேன்!”

 

“அது சரி, தியா எங்க?” என்று அவன் வினவ, “தியாவா அப்படி யாரும் இங்க இல்லையே.” என்றேன் கண்களை சுருக்கி.

 

“ஸ்ஸ்ஸ், சந்தியா… சாண்டி எங்கன்னு கேட்டேன்.” என்று அவன் திணற, “பார்றா, அதுக்குள்ள செல்ல பேரா! கலக்குங்க ப்ரோ. உங்க ஆளு உள்ள தான் இருக்கா. போய் பாருங்க.” என்றேன்.

 

அவன் கையில் உள்ள ஃபைல்லை அங்கே விட்டு சென்றான். அவனை அழைத்த நான், “ப்ரோ, உங்க ஆளை பார்க்க போறேங்கிற ஆர்வத்துல இந்த ஃபைலை இங்கயே விட்டுட்டு போறீங்க.” என்றேன்.

 

“சிஸ் அது ராகுல் கிட்ட ஒரு கேஸ் விஷயமா சைன் வாங்கிட்டு வந்தேன். அப்பறம் சிஸ் காங்கிரட்ஸ்.” என்றான்.

 

அவனின் வாழ்த்து எதற்கென்று புரிந்ததால் சிரிப்புடன், “தேங்க்ஸ் ப்ரோ, ஆனா நீங்க கூட என்கிட்டயிருந்து மறைச்சுட்டீங்கள.” என்று புருவம் உயர்த்த, “சிஸ் எல்லாம் உங்க ஆளோட ஆர்டர்! எதுவா இருந்தாலும் அவன்கிட்ட கேட்டுக்கோங்க.” என்றான்.

 

அவன் ராகுல் பெயரை கூறியவுடன் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

 

“என்ன சிஸ் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க, திடிர்னு சைலண்ட் ஆகிட்டீங்க?” என்று அவன் நக்கலாக வினவ, “ப்ரோ உங்க ஆளை பார்க்க நேரம் ஆகலையா?”என்று அவனை கிளம்புவதிலேயே குறியாக இருந்தேன்.

 

“ஹாஹா, சிஸ் அந்த ஃபைல் உங்க கிட்டயே இருக்கட்டும். உங்க பிரெண்டை பார்த்துட்டு வந்து எடுத்துக்குறேன்.” என்று கூறியவாறு சென்றுவிட்டான்.

 

அவன் உள்ளே சென்றவுடன் அந்த ஃபைலை பார்த்ததும், ‘ம்ம்ம், நம்ம ஆளு சைன் பண்ணது. எடுத்து பார்ப்போமா?’ என்று யோசித்தவாறு யாரவது பார்க்கிறார்களா என்று சுற்றி பார்த்தேன்.

 

யாரும் இல்லை என்ற தைரியத்தில் அதை எடுத்து பார்த்தேன். அது ஏதோ கேஸ் பற்றிய ஃபைல். எனக்கு எதுவும் புரியவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பிய நான் கடைசி பக்கத்தில் இருந்த பெயரையும் அதற்கு மேலிருந்த கையெழுத்தையும் பார்த்து அதிர்ந்தேன். நேற்றிலிருந்து இது மூன்றாவது அதிர்ச்சி எனக்கு! 

 

அதில் இருந்ததோ, ‘ராகுல் கிருஷ்ணா’ என்ற பெயரும் அவனின் கையெழுத்தும் தான்.

 

‘என்னாது இவன் பேரும் கிருஷ்ணாவா?!’ என்று அதிர்ந்தேன் நான்.

 

அப்போது ஏதோ ஞாபகம் வர, மெசஞ்சரில் அவன் அனுப்பிய செய்திகளை வேகவேகமாக ஸ்க்ரால் செய்தேன், நான் தேடுவது கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு. அவன் முன்பு அனுப்பிய புகைப்படத்தை பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.

 

‘ச்சே இதை ஏன் முன்னாடியே பார்க்கல!’

 

அது ராகுலின் வீட்டில் இருந்த அதே பீச் போட்டோ தான்!

 

‘அச்சோ நதி, இவ்ளோ ட்யூப்-லைட்டா நீ!  கைலேயே வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலஞ்சிருக்க!’ என்று நானே என்னை திட்டிக் கொண்டேன்.

 

‘ஸ்ஸ்ஸ், இப்போ அதுவா முக்கியம்? சரியான ஃப்ராட் பையன்! இவ்ளோ நாள் என்னை ஏமாத்திருக்கான்? இன்னைக்கு இருக்கு அவனுக்கு. இவ்ளோ நாள் செஞ்சதுக்கு மொத்தமா அனுபவிக்கப் போறான்!’ என்று சபதம் போட்டுக் கொண்டேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
19
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *