Loading

 

 

ஈர்ப்பு 26

அடுத்த நாள் காலை, பரபரப்பாக கிளம்பினேன். பொடிக்கிற்கு விரைவாக சென்று அவனை எப்படி கண்டுபிடிக்க என்று திட்டம் தீட்டத்தான் இந்த பரபரப்பு!

‘ச்சே, பப்ளிக் எக்ஸாமுக்கு கூட இவ்ளோ சீக்கிரம் எழுந்து கிளம்புனதில்ல. என்னை போய் இப்படி கிளம்ப வச்சுட்டானே!’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே கிளம்பினேன்.

அங்கு என் அம்மாவோ நான் கிளம்புவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் பார்வை பொறுக்காமல், “என்ன ம்மா, இப்போ தான் பார்க்குற மாதிரி என் மூஞ்சியவே வெறிச்சு பார்த்துட்டு இருக்க?” என்று நான் வினவ, “ஹ்ம்ம், எல்லாம் புதுசா தான் இருக்கு. என் பொண்ணா இவ்ளோ சீக்கிரம் கிளம்புறான்னு ஆச்சரியமா இருக்கு! என்கிட்ட உண்மையை சொல்லு டி யார பார்க்க போற?” என்றார் அவர்.

“அம்மா மாதிரியா பேசுற நீ! இத்தனை நாள் பொறுப்பில்லன்னு திட்ட வேண்டியது. இப்போ பொறுப்பா இருந்தா, அதுக்கும் சந்தேகப்பட வேண்டியது!” என்று கூறி சமாளிக்க முயன்றேன்.

“பார்க்கிறேன் டி, இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன்.” என்று உதட்டை சுழித்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

‘ஷப்பா, ஒரு வழியா இந்த அம்மாவை சமாளிச்சாச்சு.’ என்று நான் ஆசுவாசப்பட… அடுத்தடுத்து வரிசையாக இதே பொய்யை மாற்றி மாற்றி என் அப்பாவிடமும் அபியிடமும் சொல்ல வேண்டியதாயிற்று!

‘நல்லவேளை அபி நேத்து நடந்ததுல மூழ்கிட்டதுனால நான் சொன்ன பொய்ய கண்டுபிடிக்கல. அவன் மட்டும் ஸ்டடியா இருந்துருந்தா இன்னைக்கு என் கதை க்ளோஸ்!’

ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு, ஷீலாவிடம் பேசிவிட்டு அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொஞ்சி விட்டு பொடிக்கிற்கு கிளம்பினேன்.

வெளியே என் வாகனத்தை கிளப்ப எத்தனித்த போது, அங்கு வந்த ஆனந்தை கண்டேன்.

‘ஓஹ், சார் நேஹாக்கு டிரைவர் வேலை பார்க்க வந்துட்டாரா? க்கும், நேத்து அந்த ‘ஹல்க்’ கிட்ட மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆனேல, இன்னைக்கு இருக்கு உனக்கு!’ என்று கறுவிக்கொண்டேன்.

அங்கு நேஹாவோ தரையிலிருந்து பார்வை அகற்றாமல் மெல்ல அவனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவனோ பார்வையாலே அவளை மொய்த்துக் கொண்டிருந்தான்.

‘அடப்பாவிங்களா, நடுரோட்ல கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குதுங்களே இதுங்க ரெண்டும்! ஹ்ம்ம், விட மாட்டேன். இன்னைக்கு எப்படி நீ ரொமான்ஸ் பண்றன்னு நானும் பார்க்குறேன்.’ என்று நினைத்தவாறு வேகமாக என் வாகனத்தை கிளப்பி அவர்கள் இருவருக்குமிடையே நிறுத்தினேன்.

அப்போது தான் அவர்கள் இருவரும் சுயத்திற்கே வந்தனர்.

ஆனந்தை பார்த்து விஷமமாக சிரித்துவிட்டு, “ஹே நேஹா, காலேஜ் தான போற. நானும் அந்த வழியா தான் போறேன். வா உன்னை ட்ராப் பண்ணிடுறேன்.” என்றேன்.

அவளோ முழித்துக் கொண்டே என்னையும் ஆனந்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓய் என்ன பாக்குற?” என்று நான் அவளிடம் வினவ, “இல்ல… அவங்க…” என்று ஆனந்தை நோக்க, அவன் முகமோ விளக்கெண்ணெய்யை குடித்தது போல கொடூரமாக இருந்தது.

அவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவாறு, “அட நம்ம ஆனந்த்! அதெல்லாம் ஒன்னும் பெருசா எடுத்துக்க மாட்டாரு. என்ன அப்படி தான?” என்று கண்களாலேயே அவனை மிரட்டினேன்.

“க்கும், நேஹா நீ நதி கூடவே போ.” என்றான் என்னை முறைத்துக் கொண்டே.

“அப்பறம் ஆனந்த் சார் நேத்து விட்ட டிஸ்கஷனை இன்னைக்கு கம்ப்லீட் பண்ணனும். சோ, சேம் ப்ளேஸ் சேம் டைம்.” என்று சத்தமாக கூறிய நான், “நேத்து மாதிரி உங்க பிரென்ட்டையும் கூட்டிட்டு வந்தா நாளைக்கும் நேஹாவை நான் ட்ராப் பண்ண வேண்டியதிருக்கும்.” என்று அவனிடம் முணுமுணுத்தேன்.

“அடிப்பாவி, நேத்து தான் என் ஆளு கூட ரொமான்ஸ் பண்ண விடலைன்னு இன்னைக்கு சீக்கிரம் அவளை பார்க்க வந்தேன். அப்படியே காலேஜ்ல ட்ராப் பண்ணி அவளை பிக்-அப் பண்ணிடலாம்ன்னு நினைச்சா, வில்லி மாதிரி வந்து என் நினைப்புக்கு எண்டு-கேட் போட்டுட்டியே பாவி! உனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில ரொமான்ஸ் நடக்காது. இது என் சாபம்!” என்றான் ஆனந்த்.

“ஹலோ சாபம் கொடுக்குற நல்லவரே, நீங்க ரொம்ப லேட்டு. எனக்கெல்லாம் நேத்தே ரொமான்ஸ் நடந்துருச்சு!” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினேன்.

“அடப்பாவிங்களா! என்னை சிங்கிளா சுத்தவிட்டு நீங்க மட்டும் டபுள்ஸா எஞ்ஜாய் பண்ணிருக்கீங்களா?” என்று புலம்பினான் ஆனந்த்.

இவ்வளவும் நாங்கள் மெதுவாக நேஹாவிற்கு கேட்காத மாதிரி தான் பேசினோம்.

“நதிக்கா டைம் ஆச்சு, கிளம்பலாமா?” என்றாள் நேஹா.

நானோ ஆனந்தை பார்த்து நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு, “பை ஆனந்த்.” என்றேன்.

அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

நேஹாவும் மெல்லிய குரலில் அவனிடம் விடைபெற, நான் அங்கிருந்து கிளம்பினேன்.

சிறிது தூரம் வந்த பின்பு தான் ஏதோ உறுத்த, ‘இப்போ நேஹா அவனை ஆனந்த்னு கூப்பிடலையே. வேற எப்படி கூப்பிட்டா?’ என்று நான் மனதிற்குள் நினைக்க, அதை அவளிடமும் வினவினேன்.

“நேஹா இப்போ ஆனந்த எப்படி கூப்பிட்ட?” என்று நான் வினவ, அவளோ பதில் சொல்லவில்லை.

‘என்னாச்சு இவளுக்கு?’ என்று பின்னால் திரும்பி பார்க்க, அவளோ வெட்கத்தில் முகத்தை தாழ்த்தியிருந்தாள்.

அவளின் வெட்கத்தை கவனித்தவாறே, “ஓய் நேஹா, என்ன பதிலே காணோம்?” என்றேன்

“அ… அது… வந்து… நதிக்கா… எல்லாரும் ஆனந்த்ன்னு கூப்பிடுறதால, நான் க்.. க்ரிஷ்னு சொன்னேன்!” என்றாள்.

“என்னாது க்ரிஷா!” என்றவாறே சடன் பிரேக் போட்டேன்.

“என்னாச்சு நதிக்கா?” என்றாள் அவளும் பதறியவாறே.

“ஹான்… ஒன்னும் இல்ல.” என்று சமாளித்தேன்.

“எதுக்கு அவனை ‘க்ரிஷ்’ன்னு கூப்பிடுற?” என்றேன், ‘அடுத்து என்ன அதிர்ச்சி காத்திருக்கப் போகுதோ’ என்ற எண்ணத்துடன்.

“அவங்க ஃபுல் நேம் ஆனந்த கிருஷ்ணன் தான, அதான் க்ரிஷ்ன்னு கூப்பிடுறேன்.” என்று அவள் கூற, ‘என்னாது இன்னொரு க்ரிஷா?’ என்று குழம்பினேன் நான்.

*****

யாருமற்ற பொடிக்கில் முற்றிலும் குழப்பமாக அமர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பு நேஹா கூறிய செய்தி என்னை நன்றாக குழப்பியிருந்தது. அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு நான் எவ்வாறு பொடிக் வந்து சேர்ந்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

என் மனதினுள் ஆனந்தை சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தேன். சில நிகழ்வுகளினால் என் மூளை அவன் க்ரிஷாக இருக்கலாம் என்று கூறினாலும் என் மனம் அதை ஏற்க மறுத்தது.

‘ஆனந்த் தான் பொடிக் ஆரம்பிச்ச அன்னைக்கு வந்தான். அந்த கிருஷ்ணா அன்னைக்கு வரலைல?’

‘ஓஹ், ஆனா க்ரிஷ் என்கிட்ட அன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லி அதுக்கு அடுத்து தான வந்ததா சொன்னான். அப்போ கிருஷ்ணாவா இருக்க தான நிறைய சான்ஸ் இருக்கு!’

‘ஆனா கிருஷ்ணா ஒரு போலீஸ். க்ரிஷ் என்ஜினியர் தான?’

‘ஆமால, ஆனந்த் என்ன வேலை பார்க்குறான்?’

எவ்வளவு யோசித்தும் அவன் என்ன வேலையில் செய்கிறான் என்று தெரியவில்லை.

‘ச்சே, இவ்ளோ நாள் பழகியிருக்கோம். என்ன வேலை பார்க்குறான்னு கூட சொன்னது இல்ல. ஹ்ம்ம், இப்போ என்ன பண்றது?’

மீண்டும் மூளையைக் குடைந்து யோசித்ததில், அவனைப் பற்றி ஷீலா சொன்னது நினைவு வந்தது.

‘ப்ச். அவ பணக்காரன்னு தான சொன்னா?’

‘இப்படி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு அவன் கிட்டயே கேட்டுடலாம்.’ என்று நினைத்தவாறு அலைபேசியில் அவனை அழைத்தேன்.

“ஹலோ மிஸ்டர் ஆனந்த்…”

“சொல்லுங்க மிஸ் கரடி…”

“ஹலோ…” என்று கோபமாக நான் பேச, “அதான் ஃபர்ஸ்டே ஹலோ சொல்லிடேல அப்பறம் எதுக்கு திரும்பியும் ஹலோ சொல்லுற?” என்று இம்முறை அவன் என்னை வெறுப்பேற்ற, “இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிப்ப!” என்றேன்.

“அம்மா தாயே தெரியாம ஒரு ஃப்லோல கலாய்ச்சுட்டேன். நீ இதெல்லாம் மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல கும்மி அடிச்சிறாத மா.” என்று உடனடியாக பம்மினான்.

“ம்ம்ம், அந்த பயம் இருக்கட்டும். சரி என் கூட எவ்ளோ நாள் பழகிருக்கீங்க மிஸ்டர் ஆனந்த்?” என்று நான் வினவ, “அது இருக்கும் ஒரு ஆறு மாசம் ஏன் கேட்குற?” என்றான் சந்தேக தொனியில்.

“ஆறு மாசம் என் கூட பழகியிருக்கீங்க, ஆனா இன்னும் என்ன வேலை பார்க்குறீங்க, எங்க வேலை பார்க்குறீங்கன்னு சொன்னதே இல்லையே. ஏன்?” என்றேன் நான்.

“அ.. அத்…அது வந்து…. நதி மா… நீ தான் என்கிட்ட கேட்கவே இல்லையே?”

“ஓஹ், அப்போ கேட்டா தான் சொல்வீங்க?”

“ச்ச, அப்படி எல்லாம் இல்ல. கொஞ்சம் பிஸியா…”

“எது டிரைவர் வேலை பார்க்குறது தான் உங்க ஊருல பிஸியா இருக்கிறதோ!”

“இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்படி?” என்று அவன் பாவமாக கூறவும், நானும் சிறிது மனமிரங்கி, “சரி சரி ஓவர் ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது. இப்போ சொல்லு என்ன வேலை பார்க்குறன்னு.” என்றேன்.

“அச்சோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்வேன்?”

“ஹலோ, உண்மைலேயே நீ வேலை பார்க்குறியா இல்ல.… ஹே அப்போ நீ உண்மைலேயே டிரைவரா? அதான் எப்போ பார்த்தாலும் ‘பிக்-அப்’பு ‘ட்ராப்’புன்னு பேசுனியா?”

“எம்மா கொஞ்சம் உன் கற்பனைய ஸ்டாப் பண்ணு மா. நீ பேசுறதை பார்த்தா எனக்கே நான் டிரைவரான்னு சந்தேகம் வந்துடும் போல!”

“சார் இன்னும் உங்க ஜாப் பத்தி சொல்லையே.”

“ஹான் அது வந்து… நான் என்ஜினீயர்.”

“ஹப்பா இதை சொல்றதுக்கு இவ்ளோ நேரமா? சரி எங்க ஒர்க் பண்ணுற?”

“அதான் என்ன வேலை பார்க்குறேன்னு சொல்லிட்டேன்ல, அப்பறம் என்ன?”

“ஹ்ம்ம் என்ஜினீயர்னு சொன்னா போதுமா, என்ன ப்ரான்ச்னு சொல்ல வேண்டாமா?”

“இப்போ அதை தெரிஞ்சுட்டு நீ என்ன எனக்கு வேலை தர போறீயா?”

“ம்ம்ம், ஆமா இங்க பொடிக்கை கிளீன் பண்ண ஆள் வேணும், அதான் போன்ல இன்டெர்வியூ எடுத்துட்டு இருக்கேன்.”

“அந்த பொட்டிக் கடையை கிளீன் பண்ண ஒரு இன்டெர்வியூ, அதுக்கு குவாலிஃபிகேஷன் என்ஜினீயரா? ச்சே, என்ன ஒரு கிரேட் இன்சல்ட்!”

“ஹலோ கிளீன் பண்ணுறதுனா என்ன அவ்ளோ மட்டமா? வெளிய போய் பாருங்க நிறையா என்ஜினீயர்ஸ் வேலை இல்லாம அதை தான் பண்ணிட்டு இருக்காங்க. பொடிக்னு வாயில வராததெல்லாம் என்ஜினீயரா?”

“அச்சோ நதி மா, மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேன். நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத, சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்பறமா கால் பண்ணட்டா?”

“ஓஹ், அப்போ எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?”

“அச்சோ வேலை இருந்தா அதை பாரு டா தங்கம், நான் அப்பறம் கூப்பிடுறேன். பை…”

“ஹலோ… ஹலோ…” என்று நான் கத்த கத்த அலைபேசியை துண்டித்து விட்டான்.

‘ச்சே, எங்க வேலை பார்க்குறான்னு சொல்லாம காலை கட் பண்ணிட்டானே. சரி அவன் ஒரு என்ஜினீயருன்னாவது தெரிஞ்சுதே!’

‘அப்போ ஆனந்த் தான் க்ரிஷ்?’

‘இல்ல இல்ல, ஆனந்த் க்ரிஷா இருக்க இது மட்டும் போதுமா?’

‘க்ரிஷ் தான் இந்த ஒன் வீக்ல எப்போவாவது பொடிக்குக்கு வரேன்னு சொல்லிருக்கான்ல, அப்பறம் என்ன இன்னும் ஒன் வீக் இருக்கு. ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!’

இவ்வாறு எனக்குள்ளேயே இரு பக்கமாக பிரிந்து ஆலோசித்து அப்போதும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் இருந்தேன். எதேச்சையாக வாசலை பார்த்த போது அங்கு சாண்டி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹே என்ன டி ஏதோ ஏலியனை பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க?”

“ஷப்பா ஒரு வழியா ரியாலிட்டிக்கு வந்துட்டீயா! நான் உன்னை பார்க்க ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு. உன் பேரை சொல்லி பத்து முறை கூப்பிட்டுட்டேன். இப்போ தான் அதுக்கு ரியாக்ட் பண்ணிருக்க நீ!”

“அது… ஒன்னும் இல்ல, சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்.”

“என்னாது யோசிச்சியா, நீ யோசிச்சு நான் பார்த்ததே இல்லையே டி.”

“ஹே நீ வேற ஏன் டி கடுப்பேத்துற?” என்று சலித்தவாறே நடந்ததை சொன்னேன்.

“ஹாஹா இதெல்லாம் உனக்கு தேவையா. நமக்கு நைட் வச்ச பொருளை காலைல கண்டுபிடிச்சு எடுக்கவே கஷ்டமா இருக்கும். இதுல நீ இது வரைக்கும் நேர்லயே பார்க்காத ஒருத்தனை கண்டுபிடிக்க போறீயா? அதுவும் ஒன் வீக்ல! ஏன் டி காலைலேயே காமெடி பண்ணிட்டு இருக்க?”

“ஓய், என்ன உங்களுக்கெல்லாம் இந்த நதியை பார்த்தா காமெடியா இருக்கா? இன்னும் ஏழே நாள்ல அவனை கண்டுபிடிச்சு காட்டுறேன் டி. இது உன் மேல சத்தியம் டி!”

“அடிப்பாவி, நீ கண்டுபிடி இல்ல கண்டுபிடிக்காம தோத்து போ. அதுக்கு ஏன் டி என் உசுரை பணயம் வைக்கிற. எரும மாடு!” என்று அவள் என்னை துரத்த நான் ஓடினேன். இவ்வாறு கலகலப்பாக ஆரம்பித்தது அந்த நாள்.

*****

அன்று முழுக்க பொடிக்கிற்கு வருவோரையெல்லாம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே இருந்தேன் நான். சாண்டி கூட என்னை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் என் வேலையை தொடர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து, “என்ன உங்க பொடிக்ல நடமாடும் சிசிடிவியா நீ?” என்ற குரலில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கு கிருஷ்ணாவும் ஜீவியும் நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்ததும், “ஹே ஜீவி வா…” என்று அவளை லேசாக அணைத்து வரவேற்றேன்.

“க்கும், ஃபர்ஸ்ட் பேசுனது நான். ஆனா, கட்டிப்பிடிச்சு வரவேற்குறதெல்லாம் அவளையா?” என்றான் கிருஷ்ணா.

“ஹாஹா, ப்ரோ உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க, உள்ள ஒருத்தி இருக்கா. அவ உங்களுக்கு நிறையா கொடுத்து வரவேற்பா. அவகிட்ட சொல்லட்டா?” என்று அவனை நோக்கி கண்ணடிக்க, “ஏன் மா ஏன் இந்த நல்லெண்ணம்! ஒரு போலீஸ்காரன் பப்ளிக் பிளேஸ்ல திட்டு வாங்குறதை பார்க்க அவ்ளோ ஆர்வமா?” என்றான் அவன்.

“ஹாஹா, ப்ரோ என்ன இப்படி ஆகிட்டீங்க? உங்களை கெத்து போலீஸ்ன்னு நினைச்சேன். கடைசில திட்டப்போறா அடிக்கப் போறான்னு பயந்துட்டு இருக்கீங்க?” என்று நான் சிரிக்க, “நதிக்கா நீங்க வேற, எங்க அண்ணன் எப்பவும் கஞ்சி போட்ட சட்டை மாதிரி வெறப்பா தான் இருப்பாரு. யாரு செஞ்ச மாயமோ? இப்படி குழைஞ்சு போய் இருக்காரு.” என்று ஜீவி கூற நாங்கள் இருவரும் ஹை-ஃபை அடித்துக் கொண்டோம்.

அவள் மண்டையில் கொட்டியவாறே, “ஒரு வாலு இருந்தாலே தாங்க முடியாது. இதுல ரெண்டு! அதுவும் அறுந்த வாலா வேற இருக்கீங்க. இனிமே என் நிலைமை ரொம்ப பாவம்.” என்று கூறினான் கிருஷ்ணா.

“ஹலோ ப்ரோ, என்ன ரெண்டு வாலா? அப்போ உங்க ஆளு மட்டும் என்ன ரொம்ப சமர்த்தா. அவ தான் எல்லாருக்கும் சேர்த்து பெரிய வாலு. பார்க்கத்தான போறேன் அவளை எப்படி சமாளிக்கப் போறீங்கன்னு.” என்று சிலுப்பிக் கொண்டேன்.

“நீங்க ரெண்டு பேரும் இப்படியே வெட்டியா பேசிட்டே இருங்க. நான் என் அண்ணியை பார்க்கப் போறேன்.” என்று ஜீவி கூற, “ஜீவி, எப்பவும் அண்ணியா அக்காவான்னு குழப்பிட்டே இருப்ப. எப்போ அண்ணின்னு கன்ஃபார்ம் பண்ண?” என்று நான் வினவினேன்.

“என் அண்ணா முகத்துல எரிஞ்ச பல்ப பார்த்ததுல இருந்து தான்.” என்று கூறி அவள் உள்ளே ஓடிவிட்டாள்.

“ப்ரோ உங்க முகத்துல பல்பு எரியுறது இருக்கட்டும். அவ முகம் டல்லாவே இருக்கே. அப்படி என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்?” என்று நான் விசாரிக்க, மெல்ல சிரித்தவன், “உன் பிரெண்டுட்ட நீ கேட்டுருப்பியே.” என்றான்.

“அதெல்லாம் அன்னைக்கே கேட்டுட்டேன். எல்லாம் சொன்ன மேடம் கடைசியா ஏதோ சொல்ல வந்து அப்பறம் மறைச்சுட்டா. அதான் அதை உங்க கிட்ட கேட்குறேன். என்னாச்சு ப்ரோ? ஏதாவது ரொமான்ஸ் சீன்னா!” என்று கண்சிமிட்டி நான் வினவ, என் தலையை லேசாக தட்டி, “ரொமான்ஸ் கதையை கேட்குறதுல அவ்ளோ ஆர்வமா! ஆனா அப்படி எதுவும் நடக்கல. ரொம்ப கஷ்டப்பட்டு அவளை நார்மலா பேச வச்சேன். அப்படி பேசிட்டே நடக்கும்போது கீழ ஏதோ தட்டி விட்டு விழப்போனவளை தாங்கி பிடிச்சேன். உடனே மேடம் கோபமா ஏதோ திட்டுனாங்க!” என்றான்.

“ஓஹ், அப்போ ஏற்கனவே திட்டெல்லாம் வாங்கிட்டேங்களா. அவ திட்டுனதும் நீங்க சும்மாவா விட்டீங்க?” என்று பதிலுக்கு நான் கேட்க, “அது எப்படி சும்மா விடுறது? நானும் பதிலுக்கு திட்டிட்டு அவ சொல்றதை கூட கேட்காம வந்துட்டேன்.” என்றான் வீராப்பாக.

“ஹாஹா, மறுபடியும் திட்டிடுவான்னு தான ஓடி வந்துட்டீங்க.” என்று நான் கேட்க, அதில் சிரித்தவன், “அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க மாதிரி தெரிஞ்சது. அதான் வேற எதுவும் பேசாம வந்துட்டேன்.” என்றான்

“ப்ரோ உங்களுக்கு அவ பாஸ்ட் பத்தி…” என்று நான் இழுக்க, “எல்லாம் தெரியும் நதி. ஆர்.கே சொன்னான்.” என்றான் அவன்.

“ஆர்.கேவா?” என்று நான் குழம்ப, “ஓஹ், சாரி ராகுல் சொன்னான்.” என்றான்.

அவன் சொன்னதில் ஏதோ தோன்ற, ஆனால் அதை ஆழமாக அலச முற்படவில்லை நான்.

“அவளை உங்களை நோக்கி அடியெடுத்து வைக்க நீங்க ரொம்ப கஷ்டப்படணும் ப்ரோ.” என்றேன் மெல்ல.

“லைஃப்ல எல்லாமே சேலஞ் தான் எனக்கு. அதே மாதிரி இதையும் எடுத்துக்குறேன். மோரோவர் ஐ லவ் சேலஞ்ஸ்.” என்று சிரிப்புடன் கூறினான் கிருஷ்ணா.

“ஆல் தி பெஸ்ட் ப்ரோ.” என்று நானும் முகம் மல்ர்ந்தேன்.

இவ்வாறு சிறிது நேரம் சென்றது. அதற்குள் ஜீவி அவளுக்கு தேவையானதை சாண்டியின் உதவியோடு எடுத்தாள். சாண்டியோ கிருஷ்ணாவை பார்ப்பதையே தவிர்த்தாள். எனக்கு அது புரிந்தாலும், அது அவர்கள் இருவருக்கும் உள்ள பெர்சனல் என்பதால் நான் அதில் தலையிடவில்லை.

எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்பும்போது, ஜீவி எங்கள் இருவரையும் அணைத்து விடைபெற்றாள். கிருஷ்ணாவோ என்னிடம் கூறிவிட்டு சாண்டியிடம் சிறிய தலையசைப்புடன் விடைபெற்றான்.

அதுவரை அமைதியற்ற நிலையிலிருந்த அவள், கிருஷ்ணாவின் தலையசைப்பில் சற்று இயல்பானாள். இதை கண்ட எனக்கு அவளின் வாழ்க்கையும் சிறிது நாட்களிலேயே இயல்பாகும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

*****
அந்த நாள் அதற்கு மேல் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றது. நான் தான் க்ரிஷிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன். ஆனால் அன்று அவன் வருவான் என்று நான் ஏமாந்தது தான் மிச்சம்.

அன்று இரவு அவன் மீது கோபத்தில் இருந்தேன். அவன் ஆன்லைனும் வராததால் இன்னும் பதறினேன்.

‘ஹ்ம்ம், இன்னும் ஒன் வீக் தான். அதுக்கு அப்பறம் இருக்கு அவனுக்கு!’ என்று கறுவினேன்.

அந்த அதிகாலையும் அழகாக விடிந்தது. இல்லை, எனக்கு அது நள்ளிரவு தான்! சரியாக பத்தாவது அலார சத்தத்தில் எழுந்தேன் நான். நேரம் ஐந்தரை என்று காட்டியது.

‘ப்ச், என்ன இப்படி இருட்டா இருக்கு? ஹ்ம்ம், எப்படி தான் இவ்ளோ சீக்கிரம் எழுந்து வாக்கிங் போறாங்களோ?’ என்று சலித்துக் கொண்டே காலை கடன்களை முடித்து நடைப்பயிற்சிக்கு தயாரானேன்.

ஆம், என் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஐந்தரை மணிக்கு எழுந்து கொண்டேன், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக! எனது இந்த முடிவிற்கு காரணம் ராகுல் தான்.

அன்று இரவு நான் அவன் மேல் விழுந்தபோது நான் வெயிட்டாக இருப்பதாகக் கூறியது என்னை உசுப்பேற்றிவிட்டது.

‘என்னையா வெயிட்ன்னு சொன்ன? இன்னும் ஒரே மாசத்துல ‘ஜீரோ’ சைஸ் ஆகி காட்டுறேன்!’ என்று எனக்குள் நானே சபதம் எடுத்துக் கொண்டதன் தாக்கம் தான்!

என் அறையிலிருந்து வெளியே வந்த நான், எதிரில் வந்த என் அம்மாவின் ஆச்சர்ய பார்வையை கண்டுகொள்ளாமல் வீதியில் இறங்கி மெதுவாக நடந்தேன்.

‘ஸ்ஸ்ஸ், என்ன இப்போவே தூக்கமா வருது? சரி வழில தான் யாரும் இல்லையே. லைட்டா கண்ணை மூடியே கொஞ்ச தூரம் நடப்போம்!’

மெல்ல நடந்த நான் எப்போது ஒரே இடத்தில் நின்று தூங்கினேன் என்று தெரியவில்லை. யாரோ என்னை உலுக்கியதும் சுயநினைவிற்கு வந்த நான், கண்களை கசக்கியவாறே சுற்றுப்புறத்தை உணர முயன்றேன். அப்போது தான் என் சபதம் நினைவிற்கு வந்தது.

‘ச்சே எப்படி நின்னுட்டே தூங்கிருக்கேன்? ஐயோ எத்தனை பேரு பார்த்தாங்களோ? என் மானமே போச்சு! அச்சோ, இப்போ யாரு என்ன எழுப்புனாங்க?’ என்று நிமிர்ந்து பார்த்தபோது கஷ்டப்பட்டு புன்னகையை அடக்கியபடி நின்றிருந்தான் ராகுல்.

‘ஐயையோ, இவன் முன்னாடியா நான் அசிங்கப்படணும்?’ என்று நினைத்தவாறே அவனை பார்த்து இளித்து வைத்தேன்…

“மேடம் என்ன நின்னுட்டே தூங்குற மாதிரி புது யோகாவா?” என்று அவன் கேலி செய்ய, அவனை பார்த்து முறைத்தேன். பின்பு இருவரும் மெல்ல நடந்தோம்.

“மேடமுக்கு இது மிட் நைட்டாச்சே~ எப்படி இவ்ளோ சீக்கிரமா எழுந்த?” என்றான் அவன்.

“அதெல்லாம் இல்லையே, இவ்ளோ நாள் வீட்டுக்குள்ளேயே எக்சர்சைஸ் பண்ணிட்டு இருந்தேன். இப்போ ஃப்ரெஷ் ஏர் ஃபீல் பண்ணனும்னு வெளிய வாக்கிங் வந்தேன்.” என்று அலுங்காமல் பொய்யை சொன்னேன்.

“ஹாஹா, உன்னை எழுப்ப உங்க அம்மா கத்துற கத்து அந்த தெருவுக்கே கேட்கும். இதுல மேடம் என்ன சொன்னீங்க, ‘ஃப்ரெஷ் ஏர் ஃபீல் பண்ண’ வாக்கிங் வந்தீங்களா?” என்று அவன் கூற, மனதிற்குள் என் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தேன்.

நான் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்க, “என் பாடு தான் ரொம்ப மோசம்!” என்று அவன் முணுமுணுத்தது எனக்குக் கேட்டது.

“என்ன சொன்னீங்க?” நான் கேட்டது சரி தானா என்று உறுதிபடுத்திக் கொள்ள அவனிடம் கேட்டேன்.

“ம்ம்ம், உன் ஃபியூச்சர் ஹஸ்பண்ட் ரொம்ப பாவம்னு சொன்னேன்.”

இப்பொழுதெல்லாம் அவனிடம் சற்று சகஜமாக பேசினேன் நான்.

அதனாலோ என்னவோ, “ஹ்ம்ம் என் ஹஸ்பண்ட், அவரே எல்லா வேலையும் செஞ்சுடுவாரு எனக்காக!” என்று சிரிப்புடன் கூறினேன், ‘எனக்காக’ என்பதில் சற்று அழுத்தம் கொடுத்து…

“ஹ்ம்ம் நினைப்பு தான்!” என்று அவன் சலித்துக் கொள்ள, அவனுக்கு முன்னாள் நடந்து கொண்டிருந்த நான், குறும்பு தலைத்தூக்க, “ஏன் எனக்காக நீங்க எல்லா வேலையும் செய்ய மாட்டீங்களா?” கண்ணடித்து கேட்க, இம்முறை அதிர்ச்சியடைவது அவன் முறை!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
22
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்