அத்தியாயம் 9
நான்கு வருடங்களாக, வெண்பா தமிழின் உறவு என்பதால் யாரும் அவளை காதலென்று அனுகியது இல்லை. ஆதலால் அந்த சூழலை எப்படி கையாள்வது என்று தெரியாது அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருந்தாள் வெண்பா.
அவன் தீபக். வெண்பாவின் நட்பு வட்டத்தில் இருப்பவன். அவன் திடீரென இப்படி வந்து நிற்பானென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு அந்நொடி எப்படி எதிர்வினையாற்ற என்றும் தெரியவில்லை.
மாணவர்களின் உற்சாகமான கத்தலும் கூச்சலும் வேறு அவளை நிலைக்கொள்ள விடாது திணற வைத்தன.
தமிழிடம் பேசி வைத்திட்ட மாணவன், நேராக மேடையேறி தீபக்கை இழுத்துக்கொண்டு கீழிறங்கியிருந்தான்.
“டேய் சிவா விடுடா. அவள் இன்னும் ஒண்ணுமே சொல்லல.” தீபக் நண்பனின் இழுவைக்கு இழுபட்டு சென்றாலும், பார்வை வெண்பாவின் மீதே!
“டேய் வெண்பாவுக்கு சீனியர் தமிழ் மாமா பையன்டா” என்றான் சிவா.
“இருக்கட்டும். அதுதான் காலேஜூக்கே தெரியுமே” என்றான் தீபக்.
“டேய் எருமை… என் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு, கால் பண்ணிட்டாரு. ஒரே வரி தான் என்னை நடுங்க வச்சிட்டாரு” என்றான்.
“ஹாய் அண்ணா! சொல்லுங்க? எப்படியிருக்கீங்க? ஹாஸ்டல் டே செலபிரேஷன் போயிட்டு இருக்கு. அப்புறம் கால் பண்ணட்டுமாண்ணா?” தமிழின் காலினை ஏற்ற சிவா, அவனை பேசவிடாது பேசிட…
“நீ லாஸ்ட்டா வைத்த ஸ்டேட்ஸ் டெலிட் பண்ணு” என்றான் தமிழ். குரலில் அனல் தெறித்தது. சிவாவால் தமிழின் கோபத்தின் அளவை உணர முடிந்தது.
“அண்ணா… அது!”
“அந்த போட்டோ… ஐ மீன் வெண்பா இருக்க ஒரு போட்டோ கூட உன் மொபைலில் இருக்கக்கூடாது” என்று அழுத்தமாகக் கூறிய தமிழ், “நீ பண்ணிடுறியா? இல்லை நான் பசங்களை அனுப்பட்டுமா?” எனக் கேட்டிருந்தான்.
“இல்..இல்லை… நானே அழிச்சிடுறேன்” என்ற சிவாவிடம், “நான் லைனிலே இருக்கேன். பண்ணிட்டு சொல்லு” என்றான் தமிழ்.
சிவா… தமிழ் சொன்னதை செய்திட…
“ம்ம்ம்… உன் பிரண்ட்… அவன் தீபக் தானே? நீயா அவனை கீழிறக்கி கூட்டிட்டுப்போற” என்றான்.
தமிழ் இப்போது அங்கு படிக்கவில்லை என்றாலும், மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த பட்டமளிப்பு விழாவில் பார்த்திருந்தவனுக்கு… இன்னமும் கல்லூரியில் தமிழின் செல்வாக்கு உயர்ந்த நிலையில் இருப்பதை கண்டு,
சிவாவுக்கு தமிழின் பேச்சினை மீறும் துணிவில்லை.
“எக்ஸாம் முடிய இருக்க ஏழு நாளும் தீபக் பார்வை கூட வெண்பா மேல் படக்கூடாது” என்றான். கிட்டத்தட்ட எச்சரிக்கை செய்திருந்தான். குரலில் மிரட்டும் தொனி.
அடுத்த நொடி தீபக்கை இழுத்துக்கொண்டு சிவா சென்றிருந்தான்.
சிவா தீபக்கை கூட்டிச்சென்றதும் காற்றினை இதழ் குவித்து ஊதியவளாக ஆசுவாசம் கொண்ட வெண்பா கூட்டத்திற்கு நடுவில் புகுந்து விடுதியை விட்டு வெளியில் வர…
தீபக் சிவாவுடன் அவள் முன் வந்து நின்றான்.
எங்கே மீண்டும் பதில் கேட்டு நின்றிடுவானோ என பயந்த வெண்பா…
“எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை தீபக்” என்று வேகமாக தன்னுடைய பிடித்தமின்மையைக் கூறியிருந்தாள்.
“சாரி வெண்பா. தமிழ் சீனியர்கிட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிடு” என்று வெண்பாவின் வார்த்தைகளை கேட்டிடாதவனாக தீபக் ஓடியே விட்டான்.
வெண்பா தான் அவனது சாரிக்கான… அதுவும் தமிழிடம் எதற்கு என்ற காரணம் விளங்காது நின்றாள்.
கையிலிருந்த அலைப்பேசியில் மணியை பார்த்த வெண்பா… பதினொன்று எனக் காட்டவும்,
“தூங்கிட்டிங்களா?” எனக் கேட்டு செய்தி அனுப்பியவளாக தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள்.
“இனி தான்” என்று தமிழிடமிருந்து பதில் வர, “கால் பண்ணவா?” எனக் கேட்டு அனுப்பியிருந்தாள்.
அடுத்து பதில் செய்திக்கு பதிலாக தமிழிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹாஸ்டல் டே செலபிரேஷன் எப்படிப்போச்சு?” வெண்பா அழைப்பை ஏற்றதும் கேட்டிருந்தான்.
“ஆள் மட்டும் தான் இங்கில்லை. மத்தபடி அங்கிருந்தே எல்லாம் ஆட்டிவைக்குறீங்க” என்றவள் தமிழின் சிரிப்பில் இதம் உணர்ந்தாள்.
“எப்படி சீனியர்? எல்லா நேரமும் கரெக்ட்டா என்னை ப்ரோடெக்ட் பண்ணிடுறீங்க?” எனக் கேட்டாள்.
“நீ என்னை பொண்ணுங்ககிட்டேர்ந்து சேவ் பன்றியே அது மாதிரிதான்.” தமிழ் சிரியாது தீவிரம் போல் சொல்லிட…
“கிண்டல் பண்றீங்களா?” என்று சிணுங்கினாள்.
“இல்லையே!” தமிழ் சொல்லிய தொனியிலே அப்படித்தான் என்று வெண்பாவுக்கு விளங்கியது.
என்ன தான் நெருக்கமாக இருந்தாலும், தமிழ் இதுபோல் முன்பு பேசியதில்லை. அவளுக்கு எப்போதும் நட்பு என்கிற முறையில் அரணாக இருந்திருக்கிறான். பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அவளுக்கு ஒன்றென்றால் முன் நின்றிருக்கிறான். அவள் நினைத்தால் போதும், கண் முன் வந்திடுவான். அவளிடம் ஒவ்வொரு பேச்சும் அத்தனை கனிவாக இருக்கும்.
அதனாலே இப்போதைய தமிழின் சீண்டல் பேச்சுக்கள் அவளுக்கு புதிதாக இருந்ததோடு… தமிழ் எதையோ உணர்த்துகிறான் என்ற ஆராய்வும் மனதில் தோன்றியது.
“தீபக் அப்படி முன்னாடி வந்து நின்னதும்… நீங்க இல்லையேன்னு தான் தோணுச்சு. ஆனால், என்னோட தான் இருந்திருக்கீங்க. தேன்க்ஸ் சீனியர்” என்றவள், “என்னை சுத்தி ஸ்பை வச்சிருக்கீங்களா?” என வினவினாள்.
தமிழ் நடந்ததை சொல்ல…
“ஹோ” என்று கேட்டுக்கொண்டாள்.
“படிக்கலயா?”
“ரெண்டு நாள் கேப் இருக்கு” என்றவள், “எக்ஸாம்க்கு முன்னாடி கேம்பஸ் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன் சொன்னல… அங்கிருந்து மெயில் வந்திருக்கு. இந்த செம் ரிசல்ட் வந்ததும் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் மெயில் பண்றோம் சொல்லியிருக்காங்க” என்றாள்.
“பிஜி பண்ணலையா?”
“நோ” என்று பெரியதாகக் கூறியவள், “அதைவிட ஒரு முக்கியமான வேலை இருக்கு பாஸ். உள்ள போட்டு படுத்தி எடுக்குது. அதுக்கு ஒரு வழி பண்ணனும்” என்றாள்.
“என்னது?”
“உங்ககிட்ட சொல்லாமலா” என்றவள், “உங்கக்கிட்ட தான் சொல்லணும்” என்று மெல்லொலியில் முனங்கிய போதும் அவனுக்கு கேட்கவே செய்தது.
அவனுள் அவள் சொல்லியது என்னவாக இருக்குமென்கிற யூகம். மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.
இருவருக்குமே வைத்திட மனமின்றி ஏதேதோ பேசியபடி இருந்தனர்.
இறுதியாக அஸ்வினின் திருமணப்பேச்சில் வந்து நின்றாள்.
“அண்ணாக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்காம்?” என்றவள், “அதைவிட அவங்க தம்பியை அதிகமா பிடிச்சிருக்காம் பாஸ். விட்டால் அந்த தம்பிக்கு தாலி கட்டிடுவார் போல… ஆஹா ஓகோன்னு என்னாப்பேச்சு” என்றாள்.
தமிழ் பொங்கி வந்த சிரிப்பை வெளிக்காட்டிடாது கட்டுப்படுத்தினான்.
அடுத்து நினைவு வந்தவளாக…
“பொண்ணு உங்க ஊர் தான் சீனியர். இனி அடிக்கடி நாம் பார்த்துக்கலாம்” என்றாள்.
தமிழ் ம் மட்டும் கொட்டினான்.
“நீங்க சென்னை எப்போ வருவீங்க?”
“ஏனாம்?”
“காபி ஷாப் போக” என்றாள்.
“ஒரு காபி குடிக்க நான் சென்னை வரணுமா?”
தமிழ் அவ்வாறு கேட்டதில் அவளின் முகம் சுருங்கிப்போனது. இங்கு கல்லூரியில் அவன் படித்த காலத்தில் அவளுக்காக என்றால் எங்கிருந்தாலும் வந்து நிற்பவன், இப்போது அப்படி சொல்லவும் சட்டென்று கவலை கொண்டுவிட்டாள்.
சில நொடிகளிலேயே அவன் எதார்த்தமாக பேசியுள்ளான் என்பதை புரிந்தும் கொண்டாள்.
“காபி யாரோட குடிக்கிறோம்ங்கிறது இருக்குல” என்றாள் சுரத்தே இன்றி.
“ஹோ… அப்போ தமிழுக்கும் மொழியோட காபி குடிக்க விருப்பம் தான்” என்றவன், “நீ பொள்ளாச்சி வந்ததும், கோவையில் குடிக்கலாம். நீதான் காசு கொடுக்கணும்” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லியதும் பழைய நினைவில் வெண்பா பக்கென்று சிரித்துவிட்டாள்.
அன்று மட்டும் தமிழ் இல்லையென்றால் மானமே போயிருக்கும்.
என்ன தான் தமிழ் வெண்பாவுக்கு உறவினன் என்று இருந்தாலும்… இருவருக்குமான சந்திப்பு, இயல்பான பேச்சு, நட்பின் நெருக்கம் எல்லாம் உண்டாக காரணமாக அமைந்தது அந்த காபி ஷாப் நிகழ்வு தான்.
அன்று மாலதி மற்றும் வெண்பாவின் விடுதி தோழியின் பிறந்தநாள். அவள் வேறு துறை. விடுமுறை தினம்.
என்ன தான் தமிழ் பிரச்சினையை சரி செய்திட்டாலும், அம்மாணவனின் செயலுக்கு பின்பு வகுப்பு, விடுதி அறை என மட்டுமே இருந்த வெண்பாவை சகஜமாக்கும் பொருட்டு வெளியில் அழைத்து செல்ல நினைத்த மலாதி, ஜோஷியின் பிறந்தநாளை பயன்படுத்திக் கொண்டாள்.
வெண்பாவின் அறைக்குள் மாலதி வர, வெண்பா உறங்கவில்லை. ஆனால் கட்டிலில் படுத்திருந்தாள்.
“என்ன வெண்பா படுத்திருக்க. உடம்பு சரியில்லையா?” அவளின் அருகில் மாலதி அமர்ந்தாள்.
“நல்லாயிருக்கேன் க்கா… சும்மா படுத்தேன்” என்றவளிடம் மாலதி காரணத்தை சொல்ல…
“நான் வரலக்கா… படிக்க வேண்டியது இருக்கு” என்று வெண்பா மறுத்திட்டாள்.
அடுத்து ஜோஷியும் தன்னுடைய வகுப்புத் தோழி ஹீராவுடன் வந்து அழைக்க… வெண்பாவால் மறுக்க முடியாது போனது.
“சீக்கிரம் கிளம்புங்க… காபி ஷாப் போயிட்டு வெளியில் எங்காவது போகலாம்” என்று ஹீரா சொல்ல… அடுத்த அரை மணி நேரத்தில் நால்வரும் கிளம்பியிருந்தனர்.
“இன்னைக்கு என்னோட ட்ரீட். நல்லா என்ஜாய் பண்றோம்” என்றாள் ஜோஷி.
வேண்டா வெறுப்பாக கிளம்பிய வெண்பா, மாலதியின் இழுவையில் இழுபட்டு சென்றாள்.
நால்வரும் பெண்கள் விடுதியை விட்டு வெளியில்வர, தமிழ் பூபேஷுடன் அவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தான்.
“அங்க பாருடி தமிழ் சீனியர்” என்ற ஹீரா, “இனி வெண்பாவை வச்சிக்கிட்டு அவரை சைட்லாம் அடிக்க முடியாதுடி. என் மாமா பையன்னு உரிமைக்காரி சண்டைக்கு வந்திடுவாள்” என்று சோகமாகக் கூறிட, ஜோஷி சத்தமிட்டு சிரித்தாள்.
“ஹேய் எதுக்கு இப்படி சிரிக்கிற?” என்ற வெண்பா, ஜோஷியின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்த தமிழை சங்கடமாக ஏறிட்டாள்.
“உன்னை வைத்துதான் வெண்பாவை ஓட்டுதுங்க” என்று பூபேஷ் சொல்ல… “எனக்கும் கேட்டுச்சு. இதுவும் நல்லாதான் இருக்கு” என்று பூபேஷிடம் பேசினாலும், வெண்பாவை பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.
ஒன்னுமில்லையென வெண்பா இடவலம் வேகமாக தலையை ஆட்டிய பாவனையில் அவளின் உச்சியில் கையை வைத்து அழுத்த வேண்டுமென்று மேலுழும்பிய உணர்வை சிறு தோள் குலுக்களில் மறைத்து திரும்பிச் சென்றான்.
“வெண்பா ரொம்ப அமைதியான பொண்ணு போல தமிழ். உன் சேட்டையை அவள்கிட்ட காட்டிடாதே! உன் லவ் பொறுமையா சொல்லு” என்று பூபேஷ் சொல்லியதில்,
‘அவள் சரியான அராத்துடா’ என்று நினைத்து இதழோரம் சிரித்துக்கொண்டான் தமிழ்.
லேப்’ல் யாருமில்லையென அலைப்பேசியில் குத்துப்பாட்டினை ஓடவிட்டு அவள் போட்ட ஆட்டத்தினை தமிழால் என்றும் மறக்க முடியாது. அது கல்லூரி தொடங்கிய புதிதில் நடந்தது. அதன் பிறகான நிகழ்வில் அவள் தன்னை முழுவதும் சுருக்கிக்கொண்டாள் என்பது தமிழுக்குப் புரிந்துதான் இருந்தது.
பெண்கள் நால்வரும் மெல்ல அசைந்து கல்லூரிக்கு அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காபி ஷாப்பிற்கு நடந்தே வர, அங்கு தமிழ் மற்றும் பூபேஷ் அமர்ந்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“வெண்பாடா!” பூபேஷ் சொல்ல தமிழ் திரும்பி பார்த்தான். அவள் தன்னை பார்த்துக்கொண்டே வருகிறாள் என்றதும் ஐஸ் கிரீமில் கவனமானான்.
அது காபிஷாப், ஐஸ்கீரம் பார்லர், பேஸ்ட்ரி என்று மூன்று பிரிவுகளை கொண்ட ஒரே கடை.
மாலதி உள்ளிருந்த ஒரு மேசைக்கு அமர செல்ல…
“வேணாம்டி… அங்கு சீனியர் இருக்கிறார்” என்று தடுத்த ஜோஷி, தமிழுக்கு இரு மேசை முன்னிருந்த மேசைக்கு அழைத்துச் சென்றாள்.
“பர்ஸ்ட் கேக் கட் பண்ணலாம். கேக் செலவு என்னோடது” என்ற மாலதி, பேஸ்ட்ரி கவுண்டர் சென்று கேக்கினை ஆர்டர் செய்துவிட்டு வர, “கேக் வர வரை ஐஸ் க்ரீம் சாப்பிடலாம்” என்று ஹீரா வெயிட்டரை அழைத்தாள்.
“யாருக்கோ பர்த்டே போல தமிழ்.” அவர்களை கவனித்த பூபேஷ் கூறிட,
“நீயேன் அங்கு கவனிக்கிற?” என்று கேட்டாலும், தமிழின் ஓரப்பார்வை அவனவள் மீதுதான்.
“அப்போ நீ அங்கு பார்க்கவே இல்லை அப்படித்தானே?” என்ற பூபேஷ், தமிழ் ஆமென்று பார்த்த பார்வையில் “நீ நடத்துடா” என்று ஐஸ் க்ரீம் சுவைக்க குனிந்து கொண்டான்.
“வாட்டர்மெலன் பாப்ஸிகல்.” வெயிட்டரிடம் மென்குரலில் ஒலித்த வெண்பாவின் குரல் திமிழுக்கும் கேட்டது.
‘வாட்டர்மெலன் ரொம்ப பிடிக்கும் போலவே… கேண்டினிலும் எப்பவும் வாட்டர்மெலன் ஜூஸோடு தான் இருப்பாள்.’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
தன் காதல் வெண்பா தான் என்று உறுதியாக முடிவெடுத்த பின்பு அவளின் சிறு சிறு அசைவையும் இதயத்தால் உள்வாங்கினான் தமிழ் அமுதன்.
“வெண்பா இங்கிருந்து கிளம்பும் வரை நீயும் வரப்போவதில்லை. எவ்வளவு நேரம் தான் இதையே சாப்பிடுறது? வேற வாங்கித்தாடா” என்று கேட்ட பூபேஷ், “உங்க ட்ரீட்டை கொஞ்சம் சீக்கிரம் முடிங்கத்தா” என்று முனங்கிக்கொண்டான்.
வெண்பா பாப்ஸிகலை மெதுவாக சுவைத்து முடிப்பதற்குள் மூவரும் காபி, ஃபல்லூடா, பேஸ்ட்ரிஸ் என பல வகை உண்டிருந்தனர்.
“முடிஞ்சுதா? கிளம்பலாமா?” வெண்பா கேட்டிட… “கேக் கட்டிங் மட்டும் தான்” என்றாள் மலாதி.
மற்ற மூவரின் கைத்தட்டலுக்கு நடுவில் ஜோஷி கேக் வெட்டி முடித்து மேலும் சில நிமிடங்கள் கடந்திட…
“அண்ணா பில்” என்று கவுன்டரை பார்த்து குரல் கொடுத்த ஜோஷி, “ஓ ஷிட்” என்று தலையில் தட்டிக்கொண்டாள்.
“என்னாச்சு ஜோஷி?” ஹீரா கேட்டிட,
“ஸ்லிங் பேக் மாத்தி கொண்டு வந்துட்டேன். இது காலியா இருக்கு” என்று திறந்து காட்டினாள் ஜோஷி.
“உங்கக்கிட்ட இருந்தால் கொடுங்கடி. நான் ஹாஸ்டல் வந்ததும் கொடுத்திடுறேன்” என்று ஜோஷி சொல்ல, “ட்ரீட் உன்னோடதுன்னு நான் பேக்கே கொண்டு வரலடி” என்றாள் ஹீரா.
“நானும் கேக்குக்கு மட்டும் தான் பணம் எடுத்து வந்தேன்” என்ற மாலதி, “நீதான் வெண்பா கொடுக்கணும்” என்றாள்.
“நான் என் மொபைல் கூட கொண்டு வரலக்கா. நீங்க எங்க என்னை எடுக்கவிட்டீங்க? பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டிங்க” என்றாள் வெண்பா.
“போச்சு அவ்வளவு தானா? சீனியர்ஸ் முன்னாடி மானம் போகப்போவுது” என்று ஜோஷி புலம்ப…
“சீனியர்கிட்ட கேளுடி வெண்பா. உன் மாமா பையன் தானே” என்றாள் மாலதி.
“அங்க ஏதோ பிரச்சினை போலிருக்கு மச்சான்.” பூபேஷ் சொல்ல, தெரிகிறது என்பதைப்போல் தலையை ஆட்டினான் தமிழ்.
“நான் மாட்டேன். வேணுன்னா இங்கே வெயிட் பண்ணுங்க. நான் ஹாஸ்டல் போயிட்டு கொண்டு வரேன்” என்று வெண்பா எழ…
“நீ போயிட்டு வரதுக்குள்ள… எங்களை பேஸ்ட்ரிக்கு மாவு பிசைய விட்டுடுவாங்கடி. சீனியர் கிட்டவே கேளு ப்ளீஸ்” என்று மூவரும் கெஞ்சிட, வெண்பாவுக்கு தர்மசங்கடமான நிலை.
“காசு இல்லை போலிருக்குடா. பணம் எடுக்காம வந்துட்டு எம்புட்டு திண்ணுருக்குதுங்க…” பூபேஷ் கலாய்த்து சிரிக்க,
“வெயிட்டர்” என்று அழைத்து தானும், பூபேஷும் உண்டதற்கான பணத்தை செலுத்திய தமிழ் இருக்கையிலிருந்து எழ…
“அச்சோ போகப்போறார். அவரும் போயிட்டால் மானம் போயிடும்” என்று மாலதி அலற…
தனக்காக உதவி செய்யும் நோக்கில் தமிழ் சொல்லிய உறவு முறையை சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்ள அவளுக்கு ஏனோ மனம் வரவில்லை. கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தாள்.
பூபேஷுடன் வெளியேற நடந்த தமிழ் பெண்களின் மேசையை கடக்கும்போது ஓர இருக்கையில் அமர்ந்திருந்த வெண்பாவின் முன் மேசையில் தன்னுடைய வாலட்டை வைத்துச் சென்றான்.
வெண்பா இமை குடை விரித்து அதிர்ந்து செல்லும் தமிழை பார்க்க…
“ஹேய் அப்புறம் சைட் அடிடி… முதல் பில் பே பண்ணுடி” என்றாள் ஜோஷி.
“எதே சைட்டா?” என்று மேலும் அதிர்ந்த வெண்பா, ‘நீ அடித்ததே இல்லையா?’ எனக்கேட்ட மனதினை அடக்கி தமிழின் வாலட்டை திறந்து, தேவையான பணத்தை எடுத்து பில் பேடில் வைத்திட…
“சீனியர்க்கு தேன்க்ஸ் சொல்லிடு வெண்பா” என்றனர் மூவரும்,
“என்னது தேன்க்ஸ் மட்டுமா? பணம் திருப்பித்தர வேண்டாமா?” என்று வெண்பா கேட்டாள்.
“உனக்கு ரிலேட்டிவ் தான?” என்றபடி மூவரும் வெளியேறினர்.
வேகமாக அவர்களருகில் ஓடி வந்த வெண்பா, “4675 ரூப்பீஸ்” என்றாள்.
“உனக்காகன்னா அவரு கண்டுக்க மாட்டார் வெண்பா. நாம் கேட்காமலே கொடுத்தது உனக்காகத்தான்” என்று மூவரும் ஒரு சேர சொல்லிச் செல்ல… அதற்கு மேல் அவர்களிடம் எப்படி கேட்பதென்று வெண்பா விட்டுவிட்டாள்.
ஆனால் அடுத்தநாள் கல்லூரியில் தமிழைத்தேடி அவனது வகுப்பிற்கே சென்றாள்.
வெண்பாவை கண்டதும் அவள் உள்ளே வருவதற்கு முன்பு வேகமாக வெளியில் எழுந்து சென்றிருந்தான் தமிழ்.
அவன் வேகமாக வந்ததை கவனியாது சென்றவள் அவனது மார்பின் மீது தலை முட்டி இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
“சாரி… சாரி சீனியர். கவனிக்கல” என்று முகம் சுருக்கி நெற்றியை தேய்த்துக்கொண்டவள்… “ரொம்ப தேன்க்ஸ் சீனியர்” என்று நேற்றைய சம்பவத்திற்கு நன்றி தெரிவித்து வாலட்டை அவன் முன்பு நீட்டினாள்.
திறந்து பார்த்தவன் நேற்று தான் வைத்திருந்த பணம் அப்படியே இருக்கவும் அவளை கேள்வியாக ஏறிட்டான்.
“ஹாஸ்டல் வந்ததும் திருப்பி வச்சிட்டேன்” என்றவளுக்கு குரலே வரவில்லை.
“ஹோ…” என்று சுரத்தே இன்றி மொழிந்தவன்,
“மொழிக்கு தமிழோட பிரண்ட்ஷிப் வேண்டாமோ?” என்று கேட்டிருந்தான்.
அடுத்த கணம் அவனது வாலட்டை பறித்திருந்தவள்… அதிலிருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டவளாக…
“எப்பவும் வேணும்” என சொல்லி ஓடி மறைந்தாள்.
அன்று தொடங்கியது அவர்களுக்குள்… யாவும் இயல்பாய். அதுமுதல் ஒருவர் மற்றவருக்கு இன்றியமையாதவர்கள் ஆகியிருந்தனர்.
பூபேஷ் கூட தமிழிடம் ஒன்றை கேட்பதற்கு வெண்பாவை நாடும் அளவிற்கு நெருக்கமாகியிருந்தனர்.
பழையதை பேசியபடி இருவரும் உறக்கத்தை தழுவியிருந்தனர்.
மனதில் புதைத்து வைத்திருக்கும் காதலை இருவரும் வெளிப்படுத்திட இருக்கும் கணம் இதே இனிமையோடு இருந்திடுமா?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
37
+1
1
+1