அத்தியாயம் 5
காலையில் எழுந்ததும் தன்னவளின் குரல் கேட்ட துள்ளலோடு, அன்றைய நாளுக்கான காரணம் அளித்த சந்தோஷத்தோடு முகம் விகசிக்க கீழிறங்கி வந்த தமிழின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் தனம்.
“என்னம்மா?”
“உன் முகத்துல ஏதோ எக்ஸ்ட்ராவா தெரியுது தமிழு!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா” என்று சிரித்துக்கொண்டே கூறியவனின் முன் திடீரென குதித்த வர்ஷினி, “ஆமாம் அத்தான். அத்தை சொன்ன மாதிரி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க” என்றாள்.
“சரி இருக்கட்டும்” என்று தமிழ் நகர,
“என் பேத்தி எவ்வளவு ஆசையா கிட்ட வறாள். நீ அவளை என்னவோ எரிச்சிக்கிட்டுப் பேசுற?” என்று மறித்தார் அகிலாண்டம்.
“உங்க பேத்தியை முதலில் அரியர் கிளியர் பண்ண சொல்லுங்க. அப்புறம் மத்ததை நோட் பண்ணலாம்” என்றான் தமிழ்.
“இப்போ நீ அழகா இருக்கன்னு அவள் சொன்னதில் என்ன? அவளுக்கு உரிமை இருக்கு” என்ற அகிலாண்டத்திடம் தன் தந்தையை கொண்டு கோபத்தைக் காட்டிட முடியாது பார்வையால் உறுத்துவிட்டு…
“உங்களால் தான் அவள் வீணாப்போகிறாள்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“நீதான் அந்த பேப்பர் ரெண்டையும் எழுதி பாஸ் பண்ணேன் வர்ஷினி” என்று பேத்தியின் தலையில் கொட்டினார் அகிலாண்டம். தமிழ் தன்னை மதிக்காது நின்று பேசக்கூட செய்யாது சென்ற கோபம். அத்தோடு, வர்ஷினியுடன் திருமணப்பேச்சு பேசிடும் போது, எங்கே அவள் படிப்பை முடிக்காததை காரணம் காட்டிவிடுவானோ என்கிற பயம். இரண்டிற்கும் சேர்த்து வர்ஷினியைக் கொட்டியிருந்தார்.
“எதுக்கும்மா அவளை மத்தவங்க முன்னாடி அடிக்கிறீங்க?” தெய்வானை வர, தனம் பூர்வியை தேடிச் சென்றுவிட்டார்.
கூடத்தில் அமர்ந்திருந்த தேவராஜ்…
“மத்தவங்கன்னு யாரை சொல்ற நீ?” என்று கேட்க…
“சொல்ல வேண்டியவங்களைத்தான்” என்றார் தெய்வானை.
“உன்னிடமெல்லாம் மனுஷன் பேசுவானா?” என்று கேட்டுவிட்டு தேவராஜ் வெளியில் செல்ல வீட்டு முன்னிருக்கும் தோட்டத்து கல் மேடையில் அமர்ந்திருந்தான் தமிழ்.
“கொஞ்சம் வாய் அடக்கு தெய்வா.”
செல்லும் மகனை பார்த்தவாறு அகிலாண்டம் மகளை கடிந்தார்.
“இப்போ எதுக்கும்மா என்னைய கடியுற?” என்ற தெய்வானை “எல்லாம் உன்னால” என்று வர்ஷினியின் முதுகில் அடி ஒன்றை வைக்க… அவளோ, “போம்மா” என்று ஓடிவிட்டாள்.
“வூட்டை சுத்துறதுக்கு தான் லாயக்கு” என்று தெய்வானை இருக்கையில் அமர…
“இனியும் இப்படியே நாட்டாமை பண்ணிக்கிட்டு திரியாதடி. உன் அண்ணங்காரன் உன்கிட்ட பேசுறதே இல்லை. அவன் பெத்தது ரெண்டும் உன்னைய மதிக்கிறது கூட கிடையாது. எனக்கப்புறம் நீயெப்படி குப்பைக் கொட்டுவன்னு கூறு வேணாம்?” எனக் கேட்டவர், “பூர்வி கல்யாணம் முடிஞ்ச கையோட… தமிழுக்கு வர்ஷியைக் கட்டி வைக்கப்பாரு. இல்லையா உன் புருஷன் கூடவாவது சேரப்பாரு” என்றார்.
“அந்தாளு கூட இனி போயி…?” தெய்வானை ராகம் இழுத்தார்.
“சொத்தெல்லாம் போச்சுன்னு தானே அவன்கூட போமாட்டன்னு சொன்ன? இப்போதேன் ஒண்ணுக்கு மூணு மடங்கு சொத்து சேர்த்துப்புட்டானே அப்புறம் என்ன? போயி அங்க காட்ட வேண்டியதுதானே உன் நாட்டமையை” என்று இடித்துரைத்தார்.
“அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா. திரும்ப போனால் அந்தாளுகிட்ட எனக்கென்ன மரியாதை இருக்கு?” என்ற தெய்வானைக்கு, மணிக்கு அப்புறம் எல்லாம் தானாக தன் கைக்கு வரவிருக்கும்போது… இங்கு சொகுசாக இருக்கும் வாழ்வை விட்டு, தான் ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் தான் இன்றும் தெய்வானைக்கு.
“இப்போ போனால் அந்தாளு அம்மாவை கவனிச்சிக்கணுமேம்மா. அது மண்டைய போடட்டும். அப்புறம் யோசிக்கிறேன்” என்ற தெய்வானை, “எது எப்படியிருந்தாலும் வர்ஷிக்கு தான் தமிழ். அதை உன் மவனும், மருமவளும் வேண்டான்னு சொல்லிடுவாங்களா?” என்று கேட்டார்.
“அவங்க ரெண்டு பேரும் சேர்த்தி இல்லடி… தமிழ்… அவன் சொல்லணும். வர்ஷியை கட்டிக்கிறேன்னு. அவன் பார்வையை மீறி இங்கதேன் ஒன்னும் நடக்கிறதில்லையே!” என்றார். அங்கலாய்ப்பாக.
“உன் கொட்டமெல்லாம் அந்த தனத்துகிட்டதான்…” என்று அன்னையை சாடினார் தெய்வானை.
“என்னவோ உன் பேத்தியை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொல்லிட்டு இருந்த. யாரையும் காணும்?”
“பத்து மணிக்கு மேல வராங்கலாம்.”
“அதுசரி…” தெய்வானை தொலைக்காட்சியில் மூழ்கிப்போனார்.
இருவருக்கும் வீட்டில் இப்படி யாரைப்பற்றியும் கவலைப்படாது பேசிக்கொள்வது தான் பொழுதுபோக்கு. இன்றும் காலையே தொடங்கிவிட்டனர்.
மகன் தோட்டத்தில் அமர்ந்திருக்கவும் அவனருகில் சென்று அமர்ந்தார் தேவராஜ்.
“என்ன தமிழு யோசனை?”
“எப்படிப்பா இவங்களால நிம்மதியா இருக்க முடியுது? அதுவும் அத்தை… ஒரு நல்லவரோட வாழ்க்கையை வீணடிச்சிட்டோமேன்னு கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம இருக்காங்க” என்றான். அவனுள் அவனது மாமனை நினைத்து அதீத மனத்தாங்கல் தெய்வானையின் மீது.
“நீங்க தப்பு பண்ணிட்டிங்கப்பா… அப்பவே இருக்க இடம் கொடுக்க முடியாதுன்னு நீங்க வெளியில் அனுப்பியிருக்கணும்” என்றான்.
“காலம் கடந்துப்போச்சு தமிழு. இனி பேசி பயனில்லை. நடப்பதை பார்ப்போம்” என்றார்.
“தரகர் போன் பண்ணாராப்பா?”
“அந்த வீட்டு பெரியவரே பண்ணாரு தமிழு. கிளம்பிட்டாங்களாம். அவரு, பையன், பையனோட பிரண்ட் ஒருத்தர். மூணு பேரு வராங்கலாம்” என்றவர், “அவரு தங்கச்சி வரலப்போலிருக்கு” என்றார்.
“ம்ம்ம்… எக்ஸாம் டைம். இன்னைக்கு கூட ஒரு பரீட்சை இருக்கு. அதான் வரல” என்று தன்னையறியாது தமிழ் கூறியிருக்க…
“அந்தப்பொண்ணு உனக்கு நல்ல பழக்கமா தமிழு?” எனக் கேட்டிருந்தார் தேவராஜ்.
அதன் பிறகே தேவையில்லாது வாய் விட்டோமென்று நினைத்தவன்,
“ஆமாம்’ப்பா. என் டிப்பார்ட்மெண்ட்டிலே நான் பிஜி பண்ணும் போது மூணு பொண்ணுங்க தான். அதுல மொழி நல்ல பழக்கம்” என்றான்.
“சரிப்பா” என்றவர், “அப்போ உனக்கு மாப்பிள்ளையை பற்றி நல்லா தெரியும் தானே?” எனக் கேட்டார்.
“ம்ம்ம்… அவள் அடிக்கடி சொல்லி கேட்டிருக்கேன். படிப்பை முடிச்சதும் அவங்க தாத்தாவை ஓய்வா இருக்க சொல்லிட்டு எல்லாம் இவர் தான் பொறுப்பா பார்த்துக்கிறார். சணல் ஆலை மட்டும் தான் வச்சிருந்தாங்க. இவர் வந்த பிறகு, தேங்காய் ஆலை ஒன்றை தொடங்கி, ஆயில், கோகனெட் புட் ஐட்டம்ஸ் அப்படின்னு தயார் செய்து வெளிநாடுகளுக்கெல்லாம் எக்ஸ்போர்ட் பன்றாங்க” என்றான்.
மகன் அத்தனை விளக்கமாக சொல்லும்போதே அவனுக்கு இந்த சம்மந்தத்தை விட விருப்பமில்லை என்பது தேவராஜுக்கு புரிந்தது.
“பூர்வி பார்த்துட்டு என்ன சொல்றான்னு பார்ப்போம்” என்றார்.
“பூர்வி முடிவு தான்’ப்பா” என்றான் அவனும் தந்தையின் மனம் புரிந்தவனாக.
“மொழிக்கு இன்னும் என்னோட அக்கான்னு தெரியதுப்பா” என்றான் கூடுதல் தகவலாக.
“நீ சொல்லலையா?”
“இன்னைக்கு அவளும் வருவாள். ஷாக்கிங் சர்ப்ரைஸா இருக்கும் நினைத்து சொல்லல. எக்ஸாம் சொதப்பிடுச்சு” என்றவன், “நேரிலே தெரியட்டுமே!” என்றான்.
“அதென்ன மொழி?”
“மொழி வெண்பா. முழுப்பெயர்.”
“ஹ்ம்ம்…” என்ற தேவராஜுக்கு தமிழ் வெண்பாவை பற்றி பேசும்போது அவனது முகம் கூடுதல் தேஜசகா இருப்பதைப்போன்று இருந்தது.
அவன் இப்படியெல்லாம் யாரைப்பற்றியும் இத்தனை விளக்கமாக, இவ்வளவு நேரமாகவெல்லாம் பேசியது இல்லை. அவன் நண்பன் மகேஷ், பூபேஷ் பற்றியே அதிகம் பேசியதில்லை. ஆதலால் அவன் வெண்பாவை பற்றி பேசும்போது மகனை நன்கு கவனித்துப் பார்த்தார்.
“என்னப்பா? பார்த்துட்டே இருக்கீங்க?”
“என் பையன் மனசை புரிஞ்சிக்க முடியுதான்னுதான் பார்க்கிறேன்” என்றார்.
“ஏதும் புரிஞ்சுதாப்பா?”
“நல்லாவே!”
“அப்போ நான் சொல்ல வேண்டிய அவசியமில்லையே?”
இரு பக்கமும் தலையை ஆட்டிய தேவராஜிடம் மகனின் வெட்கம் கண்டு மலர்ச்சி.
அவனும் வெளிப்படையாக சொல்லவில்லை. அவரும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இருவருக்குமே அவன் என்ன சொல்ல வேண்டும்… அவர் என்ன கேட்க நினைத்தார் என்பது புரிந்தது.
“நேரமாவுது தமிழு மாப்பிள்ளை (மணி) வரன்னாரு ஒரு போனை போட்டு வரேன்” என்று தேவராஜ் நகர…
“அப்பா” என்று அழைத்து நிறுத்தியிருந்தான்.
அவர் நின்று “என்னப்பா?” எனக் கேட்டிட…
“நான் இன்னும் சொல்லலப்பா” என்றான்.
“ஹ்ம்ம்… உங்க ரெண்டு பேர் பேச்சு இப்போ இல்லை” என்றவராக சென்றுவிட்டார்.
தேவராஜூக்கு மகன், மகளின் விருப்பம், ஆசை தான் பிரதானம். அத்தோடு மகனும் பக்குவமற்று மற்ற இளம் வயது பிள்ளைகள் போல் பொறுப்பற்று இல்லையே! தொழிலை கையிலெடுத்த பின்னர் அவரே எதிர்பாராத ஆளுமை அவனிடம். அதனை கண்டு பிரம்மிப்போடு பூரித்து இருக்கிறார். அவன் இன்று பழைய சிறுவனாக தன்னிடத்தில் தயக்கம் காட்டியிருக்க… மகனின் சந்தோஷமே அவருக்கு முக்கியமாகப்பட்டது. தெய்வானை, அகிலாண்டம் போல் வர்ஷினியை என்றும் அவர் தமிழுக்கென நினைத்ததுமில்லை. அதனால் தமிழின் காதலை அவரால் இயல்பாக ஏற்றிட முடிந்தது.
‘அவளுக்குத் தெரியும் முன்பு வீட்டிலிருக்கும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும் போல. அவளைப்பற்றி பேசினால் உன் முகமே காட்டிக்கொடுத்திடுது தமிழ்.’ சந்தோஷமாக மனதில் அலுத்துக்கொண்டான்.
அந்நேரம் மணி வருகை தர, வேகமாக வாயிலுக்குச் சென்றவன்…
“வாங்க மாமா” என்று வரவேற்றான்.
“பத்து நாளாச்சு நீங்க இங்க வந்து” என்று செல்லமாகக் கோபம் கொண்டான்.
“நித்தம் நீ வரியே கண்ணா என்னை பார்க்க. அப்புறம் என்ன இங்க வேலை?” என்றார் அவரும். வீட்டுக்குள் நுழைந்திருக்க… அங்கு அமர்ந்திருந்த தெய்வானையை பார்த்துக்கொண்டே.
“ம்க்கும்” என்று நொடித்த தெய்வானை எழுந்து உள்ளே சென்றுவிட்டார். அகிலாண்டம் வாங்க என்று கூட மரியாதைக்கும் சொல்லவில்லை.
‘இவங்களை மாத்தவே முடியாது.’ தமிழ் மனதில் நினைத்துக்கொண்டான்.
தனம் மோர் கொண்டு வந்து கொடுக்க…
“அப்பா எங்க தமிழு?” எனக் கேட்டார்.
தமிழ் வீட்டிற்குள்ளதானே வந்தாரென்று பார்க்க…
“நான் வரும்போது தான் வண்டி எடுத்துட்டு வெளியில் கிளம்பினார். மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாங்களாம். மெயினிலிருந்து உள்ளே வர வழி கேட்டிருப்பாங்க போல. நான் போய் கூட்டியாரேன்னு போனார்” என்றார் மணி.
“அந்தத் தரகுக்கு தெரியுமே!” அகிலாண்டம் இழுத்தார். அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
“அப்போ நான் போய் டீ கலக்குறேன்” என்று தனம் பரபரப்பைக் காட்டிட…
“நான் பூர்வி ரெடியான்னு பார்த்திட்டு வரேன் மாமா” என்று தமிழ் சென்றான்.
“உள்ள வரலாமா?” மூடியிருந்த கதவினை தட்டி தமிழ் கேட்டிட…
“வா தமிழ்” என்று அழைத்த பூர்வி கண்ணாடி முன்பு அமர்ந்து கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டிருந்தாள்.
“ப்பா… யாரது? தமிழோட அக்கா பூர்வியா இது?” வாயில் கை வைத்து தமிழ் கேட்ட பாவனையில், எழுந்து நின்று இடையில் கை குற்றி பூர்வி அவனை முறைத்தாள்.
“ஹேய்… சில்” என்ற தமிழ் பூர்வியின் தோளில் கைபோட்டு, “புடவையில் அழகா இருக்கீங்க?” என்றான்.
பூர்வி “தேன்க்ஸ்” என்றிட…
“ஆமாம்… ரொம்ப அடக்கமா தெரியுறீங்க?” என்று சிரித்திடாது தமிழ் சொல்லிட…
“அடிங்… பிச்சிடுவேன் படவா!” என்று பூர்வி அவனை அடிக்கத் துரத்திட… அறைக்குள்ளே அவளின் கையில் அகப்படாது ஓடிய தமிழ்…
“இப்போதான் பூர்வின்னு நம்ப முடியுது” என்றவனாக லாவகமாக வெளியேறி, “வந்தாச்சு. சீக்கிரம் டச்சப் முடிச்சிக்கோங்க” என்று ஓடிவிட்டான்.
“வாலு” என்று சொல்லி சிரித்த பூர்வி கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு அமர்ந்தாள்.
கீழே பேச்சு சத்தம் கேட்டிட வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது.
புகைப்படத்தில் பார்த்ததை விடவே அஸ்வின் நேரில் இன்னும் ஜம்மென்று இருந்தான்.
“வாங்க… வாங்க…” நால்வரையும் வரவேற்று அமர வைத்தனர்.
“இவங்க தான் மாப்பிள்ளை பையன். நான் அவரோட தாத்தா… அது மாப்பிள்ளை பிரண்ட்” என்று சண்முகம் தங்களை முறையாக அறிமுகப்படுத்திக்கொள்ள…
“நான் தேவராஜ். பொண்ணுக்கு அப்பா” என்றவர், “லட்சுமி” என்றழைத்து மனைவியை முன் வரவழைத்து… “எங்க வீட்டம்மா, தமிழ் அமுதன் எங்க பையன். இவரு இந்த வீட்டு மாப்பிள்ளை. லட்சுமி அண்ணனைத்தான் என் தங்கை தெய்வானைக்கு முடித்தது. இவங்க அகிலாண்டம். இந்த வீட்டோட மூத்த தலைமுறை. அவள் வர்ஷினி, தங்கச்சிப் பொண்ணு” என்று விவரமாகக் கூறினார்.
உண்மையில் தேவராஜுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அதனால் உறவுகளை அடையாளப்படுத்தி பேச்சை ஆரம்பித்தார்.
“பையன் என்ன படிச்சிருக்காங்க?” கேட்டது தெய்வானை.
சண்முகம் அஸ்வினைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்க,
“அல்டாப்பு ஆரம்பிச்சிடுச்சு.” தமிழின் அருகில் அமர்ந்திருந்த அஸ்வினுக்கு அவன் முனகியது கேட்டுவிட்டது.
அஸ்வின் வேகமாக தமிழின் முகம் பார்த்தான்.
“கேட்டுருச்சா?” மெல்லிய சிரிப்போடு தமிழ் உதடசைக்க, அஸ்வின் ஆமென்று இமை மூடி திறந்தான்.
“சும்மா…” என்று கண்ணடித்த தமிழ், அஸ்வினின் விரல்களின் நடுக்கத்தை பார்த்து, “நெர்வெஸா இருக்கீங்க!” என்றான்.
“லைட்டா!” என்று அஸ்வின் மூச்சினை இழுத்து வெளியேற்ற…
“ஃபீல் பிரி… வேணுன்னா தோட்டத்துக்கு போவோமா?” எனக் கேட்டான் தமிழ்.
“போகலாமா? தப்பா எடுத்துக்கமாட்டாங்களா?” அஸ்வின் வேகமாக எதிர்கேள்வி கேட்டதிலே அவன் மிகவும் பதட்டமாக இருக்கிறான் என்பது புரிந்து,
“அப்பா… தோட்டத்தில் இருக்கோம்” என்று தேவராஜ்ஜிடம் கண்ணால் கேட்டான்.
“பையனை பொண்ணு பார்க்க வேண்டாமா?” தெய்வானை முந்திக்கொண்டு கேட்க, “எப்படியும் புள்ளைங்களை பேசிக்க விடனும் தானே. நீங்க போங்க தம்பி. பொண்ணை அனுப்பி வைக்கிறோம்” என்று தேவராஜ் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்.
அஸ்வின் சண்முகத்தை பார்க்க அவரும் சம்மதம் வழங்கினார்.
“சாரி ஆன்ட்டி. தப்பா எடுத்துக்காதீங்க. பர்ஸ்ட் டைம். அதனால் தான்” என்று தெய்வானையிடம் தன்மையாக சொல்லியவன் தமிழை பார்க்க, இருவரும் வீட்டுக்கு பின்னிருக்கும் தோட்டத்திற்கு சென்றனர்.
அஸ்வின் தெய்வானைக்கு பதில் சொல்ல வேண்டுமென்கிற அவசியமே கிடையாது. ஆனால் அவனது நிலையை மறைக்காது சொல்லிய பாங்கில் அவனது பண்பு புலப்பட, தேவராஜூக்கு மனதில் நிறைவு. அதுவே அவருக்கு அஸ்வின் மீது பிடித்தத்தையும் உண்டாக்கியது.
கண்ணிற்கு இதமாக பச்சை நிறம் எங்கும் பரவி கிடக்க… அஸ்வின் மனம் படபடப்பு நீங்கி லேசானது.
“தேன்க்ஸ் தமிழ்.”
“இட்ஸ் ஓகே. இப்போ பரவாயில்லையா?”
“யா… மூச்சு முட்டிடுச்சு” என்ற அஸ்வின் “தோட்டம் ரொம்ப நல்லாயிருக்கு” என்றிட அவனை அங்கிருந்த கல் பெஞ்சில் அமர வைத்தான் தமிழ்.
அங்கு மருதாணி கிளைகள் பரப்பி அடர்ந்த மரமாய் நின்றிருக்க, அதன் பூக்களும், கொத்து கொத்தாய் தொங்கிய காய் மற்றும் பழங்களும் அஸ்வினின் முகத்தில் இளநகை ஒன்றை தோற்றுவித்தது.
“என்னாச்சு? மரத்தை பார்த்து சிரிக்கிறீங்க?” தமிழ் கேட்டிட…
“எங்க வீட்டு வாலுக்கு மருதாணியை கையில் வைப்பதைவிட, அதோட பூக்கள் வாசனை ரொம்ப பிடிக்கும். பூ பூக்குற சீசனில், அந்த மரத்துக்கு அடியில் தான் நாளே கழியும். இங்கு பார்த்ததும் டக்குனு தங்கச்சி நியாபகம். தானா ஸ்மைல் வந்துருச்சு” என்றான் அஸ்வின்.
‘அவளுக்காக வைத்ததுதானே!’ மனதோடு நினைத்துக்கொண்டான் தமிழ்.
அடுத்து இருவருக்குமே என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை. தன்னவளின் உடன் பிறப்பு. இப்போது தனது உடன் பிறப்பிற்கு சொந்தமாகப் போகிறவன். அதனால் அஸ்வினுடன் தன் உறவு நல்ல முறையில் அமைய வேண்டுமென்று தமிழ் எண்ணம் கொண்டான்.
“உங்களுக்கு பூர்வியை பிடிச்சிருக்கா?” எவ்வளவு நேரம் தான் மௌனமாக இருப்பது என தமிழ் பேச்சை துவங்கினான்.
“நான் போட்டோ பார்க்கல. போட்டோ பார்த்து பிடிச்சுப்போயி, அவங்களுக்கு என்னை நேரில் பார்க்கும்போது பிடிக்கலன்னா கஷ்டமாகிடும். அதான் நேரிலே பார்த்துக்கலாம் அப்படின்னு விட்டுட்டேன்” என்றான்.
“ம்ம்ம்” என்ற தமிழ் அடுத்து என்னவென்று யோசித்திட…
“இப்படி நீங்களும் நானும் இருப்போம்ன்னு முன்னாடியே தெரிந்திருந்தால் நிறைய க்வெஸ்டின்ஸ் பிரிப்பேர் பண்ணியிருப்பீங்கல?” அஸ்வின் கேட்டதில் இருவருமே ஒரு சேர சிரித்துவிட்டனர்.
தமிழுக்குத்தான் அஸ்வினைப்பற்றி எல்லாம் தெரியுமே! அவன் வேறென்ன கேட்பது?
“நீங்க என்ன படிக்கிறீங்க?”
அஸ்வின் கேட்டிட,
“என்னை பார்த்தா படிக்கிற பையன் மாதிரியா தெரியுது?” என்று தமிழ் மீசையை முறுக்கிவிட…
“ஓ… சாரி சாரி… முடிச்சிட்டிங்களா?” என்றான்.
“ம்ம்ம்… ஒன் இயர் ஆகுது. அப்பா ஸ்டார்ட் பண்ண தொழில்… இப்போ நான் பார்த்துக்கிறேன். அப்புறம் ட்ரேட் பன்றேன்” என்றான்.
“குட்” என்ற அஸ்வின், “மேலிருந்து யாரோ நம்மளை நோட் பன்றாங்க?” என்று தரையில் தெரியும் நிழலை சுட்டிக்காட்டினான்.
பார்வையை உயர்த்திய தமிழ்,
“ஷீ இஸ் பூர்வி” என்றிட, அஸ்வினின் தலை வேகமாக பால்கனி நோக்கியது. பூர்வியின் அறை பால்கனி அது.
இருவரும் பார்த்தது பார்த்தபடி இருந்தனர். தமிழ் அங்கிருந்து சிறு புன்னகையோடு சென்றுவிட்டான்.
அஸ்வினை பார்த்த நொடி ஏற்பட்ட பிடித்தத்தால் பூர்வி தன் பார்வையை விலக்காது அவனை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
அஸ்வினுக்கும் அதே நிலை தான். தங்கையை மனதில் வைத்து விருப்பமற்று வந்த அஸ்வினுக்குள் பூர்வியின் முகம் மெல்ல ஆழம் நுழைந்தது.
அவளின் நேர்கொண்ட பார்வை அஸ்வினை என்னவோ செய்தது. அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை அவனால்.
வர்ஷினி வந்து பூர்வியை அழைத்திட… அவள் உள்ளே சென்ற பின்னரும் கூட அஸ்வினின் விழிகள் உயர்ந்தே இருந்தது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் பெரியவர்கள் அனைத்தும் பேசியிருந்தனர்.
பூர்வி வந்ததும் அனைவருக்கும் வணக்கம் வைத்திட…
“வாடாம்மா” என்று அழைத்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டார் சண்முகம்.
“மகாலட்சுமி மாதிரி இருக்கடா” என்றவர், “உன் மனசுக்கு எதுவாயிருந்தாலும் எங்களுக்கு சரிதான். பேசி பாருங்க” என்று தேவராஜ்ஜை பார்க்க… அவரோ,
“பின்னாடி தோட்டத்தில் இருக்கார் பூர்வி. போ!” என்றார் மகளிடம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
41
+1
1
+1