அத்தியாயம் 23
அடுத்த வாரத்தில் ஒருநாள் துணி மற்றும் நகைகள் எடுக்க செல்லலாமென்று அதற்குரிய நாளினை கூறி, வெண்பாவை தமிழுடன் அனுப்பி வைத்தனர்.
எல்லோரும் தத்தம் வேலையில் மூழ்கிட, தனியாக அமர்ந்திருந்த தேவராஜிடம் வந்தார் அகிலாண்டம்.
“வெண்பா பொண்ணை தமிழு விரும்புறானா ராஜூ?” என்று எவ்வித மறையுமின்றி நேரடியாகவேக் கேட்டார்.
அவர் தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாரே! அத்தோடு தனம் வெண்பாவிற்கு முத்தம் வைத்த போது, பூர்வியும், வர்ஷியும் தமிழை கேலி செய்ததை கேட்கவும் செய்திருந்தார்.
தேவராஜ் தடுமாறவெல்லாம் இல்லை. அன்னையின் முகம் பார்த்து ஆமென்றார்.
“ஹோ…” என்ற அகிலாண்டம், “பொண்ணு நல்ல பொண்ணாதான் இருக்கு. ஆனால் நம்ம வீட்டிலே பொண்ணை வச்சிக்கிட்டு வெளியில் எடுக்கிறது நல்லாயிருக்காதேப்பா” என்றார்.
பழைய அகிலாண்டமாக இருந்திருந்தால் உத்தரவாக, அதிகாரமாகக் கூறியிருப்பார். ஆனால் இப்போது ஏனோ மற்றவர்களின் விருப்பத்தினையும் யோசித்து பார்க்கச் சொல்லியது அவரது மனம். முன்பு போல் பட்டென்று மனதில் பட்டதை பேசவே ஆயிரம் யோசித்தார். நல்ல மாற்றம் தான். ஏனோ தன்னுடைய பேரனுக்கு தனது பேத்திதான் என்று பல வருடமாக நினைத்துக் கொண்டிருக்கும் நினைப்பை உதற முடியவில்லை.
“இதில் நம்மளோட விருப்பம் என்பதைவிட, பிள்ளைங்களோட விருப்பம் ரொம்பவே முக்கியம்மா” என்ற தேவராஜ், “உங்களுக்கு அப்படியொரு ஆசையிருந்தால் இப்போவே மாத்திக்கோங்க. வர்ஷிக்கும் தமிழ் மீது எந்தவொரு ஈடுபாடுமில்லை” என்றார்.
அகிலாண்டம் அடுத்து எதுவும் பேசாது மௌனமாக இருந்திட,
“பேரனோட ஆசைக்கு மதிப்பு கொடுப்பீங்கன்னு நம்புறேன்” என்று எழுந்துச் சென்றிருந்தார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த தனம் அகிலாண்டத்தின் அருகில் வந்து,
“உங்களுக்கு வெண்பாவை பிடிக்கலையா அத்தை?” எனக் கேட்டார்.
எங்கே மகனது திருமணப் பேச்சினை துவங்கினால் இதனை கொண்டு வீட்டில் ஒரு பிரச்சினை உருவாகுமோ என்ற பயத்தில் வந்து கேட்டிருந்தார்.
“பிடிக்கலன்னு இல்லை தனம். வர்ஷி நம்மளோடவே இருப்பாளேன்னு நினைச்சேன்” என்றார். தன் மனதை மறையாது.
முதல் முறையாக தனம் கேட்டு அதற்கு முகம் காட்டாது பதில் சொல்லியிருக்கிறார் அகிலாண்டம். தனத்திற்கு பெரும் ஆச்சரியம்.
“அத்தை…” தனம் மனதால் நெகிழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?” அகிலாண்டம் கேட்டிட தனத்தால் நம்பவே முடியவில்லை. இவரா தன்னிடம் இப்படி தன்மையாக பேசுகிறார் என்று இருந்தது.
“நீங்க நாலு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சு சந்தோஷமா பேசிட்டு இருக்கிறதை பார்த்தப்போதான், தெய்வானை எதை இழந்திருக்கான்னு எனக்கு புரிஞ்சுது. நான் சரியான தாயாகவும் நடந்துக்கல… நல்ல மாமியாராகவும் நடந்துக்கல” என்றவர், “என் வயசுக்கு மன்னிப்புக் கேட்க என்னவோ மாதிரி இருக்கு. அதனால் நீயே என்னை மன்னிச்சிடு தனம்” என்றார்.
“அத்தை…” என்ற தனத்திற்கு வார்த்தையே வரவில்லை.
“கவலைப்படாத, வர்ஷி மாதிரி தமிழும் எனக்கு முக்கியம். அவன் ஆசையை கொல்லனுமுன்னு ஒருநாளும் நினைக்க மாட்டேன். தமிழுக்கு பொறந்தவ வெண்பாவா இருக்கும்போது, வர்ஷிக்கு ஒருத்தன் பொறந்து தானே இருப்பான். இனியாவது குடும்பம் சச்சரவு இல்லாமல் இருக்கட்டும்” என்றவர், “தெய்வா குழப்பம் பண்ணாமல் இருக்கணும்” என்றார்.
‘என்ன குழப்பம்?’ என நினைத்தாலும் தனத்திற்கு அதனை வெளிப்படையாக அகிலாண்டத்திடம் கேட்டிட வாய் வரவில்லை. அவர் முன்பு அமைதியாகவும், அவர் சொல்வதற்கு தலையாட்டியுமே பழகிவிட்டார் அல்லவா? புதிதாக மனதில் இருப்பதை பேசிடவெல்லாம் சட்டென்று வரவில்லை.
“நீ கொஞ்சம் வாய் திறந்து பேசலாம்” என்ற அகிலாண்டம், “உன் சத்தம் வெளி வந்திருந்தால் தெய்வா இங்க அழுத்தமா நின்னிருக்கமாட்டாளோ? நானும் இப்போ செய்ய நினைப்பதை எப்போதோ செய்ய நினைத்திருப்பனோ?” என்று சொல்லிச் சென்றவரை அதிர்ந்து பார்த்தார் தனம்.
தனத்திற்கு இவர் தன்னை இன்னும் குறை கூறுவதாகத்தான் அக்கணம் தெரிந்து. முன்பு கடிந்து பேசுபவர், இப்போது சத்தமின்றி பேசுகிறார். அவ்வளவே வித்தியாசம் என்று எண்ணிக்கொண்டார்.
அகிலாண்டத்தின் உட்பொருள் தனத்திற்கு புரியவில்லை. இந்த சூட்சுமம் எல்லாம் தெரிந்திருந்தால் என்றோ குடும்ப அரசியலில் பிரதமராகி இருப்பாரே அவர்.
‘அத்தை மாறிட்டாங்களா? உண்மைன்னா, திடீரென மாற காரணம் என்ன?’ மனதிற்குள் எழுந்த கேள்விக்கு விடை தேவைப்பட்டிருக்கவில்லை அவருக்கு.
‘இப்போதிருக்கும் அமைதியையாவது காலத்திற்கும் கொடு இறைவா’ என்று ஒட்டு மொத்த கடவுள்களிடமும் அவருக்கு வேண்டிக்கொள்ள மட்டுமே தோன்றியது.
“என்னம்மா நின்னுகிட்டே கனவா? மேல பார்த்திட்டு இருக்கீங்க?” என்று வந்த பூர்வி, “அஸ்வின் போன் பண்ணாங்கம்மா. தாத்தா அப்பாவிடம் பேசணும் சொன்னாங்களாம். அப்பாவை ஃபிரியா இருக்கும்போது கால் பண்ண சொன்னாங்க. அப்பாவிடம் சொல்லிடுங்க” என்று நீள் இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்பித்தாள்.
தனம் பதிலேதும் சொல்லாது அப்படியே நின்றிருக்க…
“ம்மா…” என்று விளித்தாள் சத்தமாக.
“ஆங்” என்று அதிர்ந்து பார்த்தவரிடம், “நான் சொன்னதை கவனிச்சீங்களா இல்லையா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் கேட்டுச்சு” என்ற தனம் மகளின் அருகில் அமர்ந்து, “உன் பாட்டி என்னென்னவோ பேசுறாங்க பூர்வி. இத்தனை வருசத்தில் இன்னைக்குத்தான் அவங்க என்கிட்ட சத்தமில்லாமல் பேசி கேட்டேன்” என்று அகிலாண்டம் பேசியதைக் கூறினார்.
“எனக்குத்தான் ஒன்னும் விளங்கல” என்றார்.
“அல்டாப்பை புருஷன் கூட சேர்த்து வைக்கணும் உன் மாமியாருக்கு இப்போ தான் தோணிருக்கு. எது பேசினாலும், மாமியார் பேசிட்டாங்கன்னு எக்ஸைட் ஆகாமல் எப்பவும் போலவே தள்ளியே இருந்துக்கோம்மா. நமக்கு அதுதான் நல்லது” என்றாள்.
தமிழ் தனக்கு விவரம் தெரிந்தது முதல் எப்போதும் தனத்திற்கு இப்படியான அறிவுரைகள் வழங்கிக்கொண்டு தான் இருப்பான். அவனுக்கு அவனுடைய அம்மாவை, தாயும் மகளும் சேர்ந்துகொண்டு அடிமைப்படுத்துவதாக எண்ணம். அதிலிருந்து அன்னையை வெளிக்கொண்டுவர பலவாறு முயன்று தோற்றுவிட்டான். இருந்தும் தொடர்ந்து முயன்று கொண்டு தான் இருக்கிறான். அந்நேரங்களிலெல்லாம் தனத்திற்கு தமிழ் தனக்கு அறிவுரை வழங்கும் தந்தையாகத்தான் தெரிவான். இன்று பூர்வியும் அந்நிலையில் தான் தெரிந்தாள் அவருக்கு. தாய்க்கு உபதேசம் செய்யும் மகளாக.
சன்னமாக சிரித்தும் கொண்டார்.
“என்னம்மா சிரிப்பு…”
“என்னை பாதுகாக்கத்தான் நீயும் உன் தம்பியும் இருக்கீங்களே” என்றவர், “எங்க சொத்தே நீங்க ரெண்டு பேரும் தான். கண்ணுக்கு நிறைஞ்சு பாசமா, ஒற்றுமையா இருக்கும்போது இதைவிட வேறென்ன வேணும்?” என்றார்.
“உன்னலாம் மாத்தவே முடியாதும்மா” என்ற பூர்வி, “தமிழ் இன்னும் ஆளே காணோம். அப்படியே பொள்ளாச்சி போயிட்டனா?” என மணியை பார்க்க…
தமிழும் அங்கு ரயில் நிலையத்தில் தன்னவளை அனுப்பி வைத்திட முடியாது அவளுடன் சென்று திரும்புவோமா என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
“ட்ரெயின் வர கால் மணி நேரம் லேட்டாகுமாம். முன்னடி ஸ்டேஷனில் சிக்னல் போட்டிருப்பாங்களா இருக்கும்” என்று அவர்கள் வந்தும் ரயில் வர தாமதமாகிய தகவல் அறிந்து வந்து சொல்லிய தமிழ், வெண்பாவின் அருகில் இடைவெளிவிட்டு அமர்ந்தான்.
“நம்ம வீடு உனக்கு ஓகேவா?”
தமிழ் என்ன அர்த்தத்தில் கேட்கிறானென்று புரியவில்லை. அவனையே பார்த்திருந்தாள்.
“என்ன?”
“ம்ப்ச்” என்று உதடு அசைத்தவள், புருவங்களை சுருக்கி விரித்தாள்.
“கேட்டதுக்கு பதில் சொல்லல!”
“ரொம்பவே கம்ஃபோர்டபுளா ஃபீல் பண்ணேன். புதுசா ஒரு வீட்டுக்கு வந்திருக்கேன்னு எங்கையும் தோணல” என்று அந்நொடி என்ன தோன்றியதோ அதை கூறினாள்.
அடுத்து என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.
அவளுக்கு அவனோடு ஒட்டி உரசி நின்ற நிமிடங்கள் மனதில் எழுந்து அவனருகில் நிலையாக இருந்திட முடியாது படபடப்பைக் கூட்டின.
தமிழுக்கும் அந்நொடிகள் மனதில் ஆர்பரிக்கத்தான் செய்கின்றன. அவள் போல் அவன் அதில் படபடக்கவில்லை. இனிமையாக இதயத்தில் இதம் அனுபவித்தான்.
“நெக்ஸ்ட்?”
“ஹான்… என்ன பாஸ்?”
“அடுத்து என்ன?”
“அடுத்து…” என்று யோசித்தவள், “நெக்ஸ்ட் வீக் ரிசல்ட். அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் மெயில் வரும். ஜாப் போகணும். தென்… அண்ணா மேரேஜ் நல்லா என்ஜாய் பண்ணனும். இப்போதைக்கு இவ்வளவு தான்” என்று பாவனைகளோடு கூறினாள்.
“வேற?”
“தெளிவா கேளுங்க. நான் பதில் சொல்றேன்.”
“நத்திங்” என்றவனுக்கு பேரவஸ்தை. காதலை சொல்லிட முயல்கிறான். முடியவில்லை.
“பூபேஷ் அண்ணா கோத்தகிரில?”
“ஹ்ம்ம்…”
வெண்பாவிடம் லாலிபாப் ஒன்றை நீட்டினான். தர்பூசணி சுவை கொண்டது.
“இன்னைக்கு முழுக்க எனக்கு பிடிச்சதாவே சாப்பிடுறேன். உங்களால் தான்” என்றவள், “தேன்க்ஸ் சொல்ல மாட்டேன். எனக்காக நீங்க பன்றது ரொம்ப பிடிக்குது” என்றாள்.
வெண்பா உன்னையே பிடிக்கிறது என சொல்லிவிட்டதைப்போல் அகம் மகிழ்ந்தான்.
“நான் தான் உங்களுக்கு பிடிக்காததை செய்துட்டேன்” என்றாள். பக்கவாட்டாகத் திரும்பி தமிழின் முகம் பார்த்து வருத்தமாகக் கூறினாள்.
“பிடிக்கல தான்… பட், என்னையும் கண்ட்ரோல் பண்ண ஆளிருக்குன்னு எனக்கு ஹேப்பி தான்” என்று சொன்னவன், அவளின் முகத்தில் படர்ந்திருந்த சிறு சிறு முடி இழைகளை இயல்பாய் ஒதுக்கிவிட்டான்.
அவளுக்கு மூச்சே நின்று விட்டது.
அவன் விரல் தீண்டிய நெற்றி சட்டென்று வியர்வைத் துளிகளால் பூத்து விட்டது.
தன் கைக்குட்டை கொண்டு தானே துடைத்துவிட்டான்.
அவளின் முகத்தில் சிறு கலவரம்.
தன்னவளின் சிறு அசைவையும் உள்வாங்கி சிலிர்த்தான்.
“கோம்ப் பண்ணியிருக்கலாம்.” அவளின் உணர்வுகளை கண்டு கொண்டதைப்போல் காட்டிக்கொள்ளாது பேசினான்.
வெண்பாவுக்கு சீக்கிரம் ரயில் வந்துவிட்டால் தேவலாம் போலிருந்தது.
கல்லூரி நாட்களில் தமிழுடன் நெருக்கம் என்றாலும், எப்போதும் இப்படி அவன் தீண்டியதெல்லாம் இல்லை. மற்றவர்கள் கண்களுக்கு தங்களின் பிணைப்பு தவறாக தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் வெண்பாவுடன் இரண்டடி தள்ளி தான் நிற்பான். விரல் தீண்டல்களே அரிதானது தான். ஆனால் இன்றைய ஒருநாளில் நிறைய மாற்றங்கள். உணரவே செய்தாள். அவன் உணர்த்திட முயன்றதில்.
“டைம் ஆகியிருக்கும் பாஸ்” என்றாள்.
“ம்ம்ம்ம்…” என்ற தமிழ்,
“உன்கிட்ட” என ஆரம்பித்து, “நத்திங்…” என்று சொல்லாதுவிட்டான்.
அவளுக்கு என்னவென்று கேட்டிட ஆர்வம் எழுந்தாலும், ஏனோ கேட்காதுவிட்டாள்.
“போகணுமா மொழி?”
ரயில் வந்து நிற்க தமிழ் கேட்டிருந்தான்.
எழுந்து நின்றவள் அவன் கேட்டதில் அடி வைத்திடாது உறைந்திருந்தாள்.
அவனது மொழி என்கிற விளிப்பு எப்போதும் போல் இப்போதும் அவனின் உணர்வுக் குவியலாக வெளிவந்திருந்தது.
அந்த குரலுக்கும், பெயர் அழைப்பிற்கும் மொத்தமாக கட்டுண்டுப் போகிறவள், இக்கணமும் அப்படியே!
“இப்போ போய்தானே ஆகணும்!”
“ம்ம்ம்ம்…” என்றவன், ‘இப்படியே திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும் தோணுது. இல்லை உன்னோடவே வந்திடனும் போலிருக்கு. பித்து பிடிக்க வைக்கிற. உன் பக்கத்தில் நான் நானாகவே இருக்க முடிவதில்லை.’
அவளின் விழிகளோடு தன் கூர் விழிகளை கலக்க விட்டபடி தான், அத்தனையையும் மனதில் நினைத்தான்.
அவளுக்கு அகம் சேர்ந்ததா என்று அவள் தான் சொல்ல வேண்டும்.
ரயில் புறப்படுவதற்கான ஒலியில் தான் இருவரும் சுயம் மீண்டனர்.
விழிகளின் சங்கமத்தில் இதயத்தை ஊடுருவியிருந்தனர்.
வெண்பா போய் வருவதாக மெல்ல தலையசைத்திட…
“வீட்டுக்கு போயிட்டு கால் பன்றேன்” என்றான்.
“ம்ம்ம்ம்” எனும் விதமாக தலையை அசைத்தவள், வேகமாக சென்று ரயிலில் ஏறி கம்பியினை பிடித்தபடி தமிழை பார்த்திட… வண்டி தன் இயக்கத்தை மெல்ல துவங்கியது.
“சீனியர், உங்க ரூமிலிருந்து ஒன்னு சுட்டுட்டேன். காணோம்ன்னு தேடாதீங்க” என்று சொல்லி உள்ளே சென்று மறைந்தாள்.
அவளின் பிம்பமும், ரயிலும் மெல்ல அவனது காட்சியிலிருந்து மறைய, விரைந்து வீட்டிற்கு வந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த பூர்வி,
“ஏன்டா இவ்வளவு நேரம்?” என்று கேட்டிட, அவளுக்கு நின்று கூட பதில் சொல்லாது…
“ட்ரெயின் லேட் க்கா” என்று மூன்று, நான்கு படிகளாக தாவி ஏறி தனது அறைக்குள் நுழைந்திருந்தான்.
தமிழின் ஓட்டம் கண்டு பூர்வியும் அவன் பின்னால் வந்திருந்தாள்.
அறைக்கு மையத்தில் இடையின் இரு பக்கமும் கைகளைக் குற்றி நின்றவன், மெல்ல விழிகளை அவ்விடம் முழுக்க சூழல விட்டான்.
“என்ன தேடுற?”
தமிழின் முதுகு பக்கமிருந்து எட்டி பார்த்தாள் பூர்வி.
“எதையோ எடுத்துக்கிட்டேன் சொன்னாள். என்னன்னு தெரியல?” என்ற தமிழின் கரு விழிகள் அறையைச் சுற்றி உருண்டு கொண்டு இருந்தது.
“என் ரூமில் கூட, தமிழ்’ன்னு பாரதியார் முகம் வச்சு ஒரு கீ செயின் ஹேங்கரில் மாட்டியிருந்தனே, எடுத்துக்கவான்னு கேட்டாள். எதுக்குன்னா பாரதியார் பிடிக்கும்ன்னு சொல்றாள்.”
“கேடி…”
“என்னையும், வர்ஷியையும் மாற்றி மாற்றி பார்த்துக்கிட்டே கேஷுவ்லா பேக்கில் வச்சிக்கிட்டாள்” என்ற பூர்வி, “அவளும் உன்னை விரும்புறான்னு அப்பட்டமா தெரியுது. எப்போ சொல்லப்போற?” எனக் கேட்டாள்.
“அது அவ்வளவு ஈஸி இல்லைன்னு இன்னைக்கு தெரிஞ்சுது” என்றவன், “இப்போ சொல்ல ட்ரை பண்ணேன். அவள் முகத்தை பார்த்தால் வார்த்தையே வரமாட்டேங்குது பூர்வி” என்றான்.
“மெசேஜ்ல சொல்லிடு. சிம்பிள்.”
“ம்ஹூம்… எனக்கு அவள் கண்ணை பார்த்து சொல்லணும். நான் சொல்லும்போது அந்த கண்ணுல வர உணர்வை நான் பார்க்கணும்” என்றான்.
“ரொம்பத்தாண்டா” என்ற பூர்வி, “என்னன்னு தெரிஞ்சுதா?” என்றாள்.
“இல்லை. என்ன எடுத்தான்னு தெரியல” என்றவன், “நானே அவளுக்குதான்! எடுத்தது என்னவா வேணாலும் இருக்கட்டும்” என்றான்.
“வெண்பாவோட ஹேர் ரொம்ப பிடிக்குமோ” என்று சுவற்றில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு வினவினாள்.
“கண்டுபிடிச்சிட்டிங்களா?”
இல்லையென இட வலமாக மண்டையை ஆட்டிய பூர்வி, “உன் மொழியே சொன்னாள். அவளுக்கு பிடிச்சவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்!” என்று இழுத்து சொல்லியவள், “அதுக்காகத்தான் அவ்ளோ லாங் மெயின்டெயின் பண்ண கஷ்டமாயிருந்தாலும் கட் பண்ணாமல் இருக்காளாம்” என்றாள் பூர்வி.
இதைத்தான் வெண்பா சொல்லும்போதே தமிழ் கேட்டிருந்தானே! உவகையை மறைத்தவனாக புதிதாகக் கேட்பதைப்போல் கேட்டிருந்தான்.
“அப்போ நீங்க ஃபுல்லா எங்களைப் பற்றி தெரிஞ்சிக்கத்தான் பேசியிருக்கீங்க. மாமா பற்றி ஒன்னுமே கேட்கலையா?” என்றான்.
“நான் அவங்ககிட்டவே கேட்டுப்பேன்” என்றாள் மிதப்பாக.
“நான் பர்ஸ்ட் டைம் காலேஜில் அவளோட பின் உருவம் தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அவ்ளோ லாங் ஹேர் யாருக்கும் பார்த்ததில்லை. உங்களுக்கும் இல்லையா? சோ, கொஞ்சம் கவனிச்சு பார்ப்பேன். அப்படியே பிடிச்சிருச்சு நினைக்கிறேன்” என்ற தமிழ், “அவளோட பின்னால் பார்க்கும்போதுலாம், ஏதோ ஒரு இன்சிடன்ட் கண்ணுலையும், மனசிலையும் ஓடும். பட் சரியா நினைவு வரமாட்டேங்குது. மே பீ காலேஜில் மீட் பண்ணுவதற்கு முன்பே அவளை வேறெங்கோ பார்த்திருக்கிறேனோ என்னவோ?” என்றான்.
“வெண்பாவிடமே கேட்டுடு.”
“சொல்லிட்டாலும்” என்ற தமிழ், “மாமாகிட்ட சொல்லணும் க்கா. மாமா என்னை முழுசா அக்செப்ட் பண்ணிக்கிறப்போ, நான் உண்மையா இல்லாமல் மறைக்கிற மாதிரி இருக்கு” என்றான்.
“ம்ம்ம். அஸ்வின் கண்டிப்பா க்ரீன் சிக்னல் தான்” என்ற பூர்வி, தனம் அழைத்திட சென்றுவிட்டாள்.
அடுத்து தமிழ் வெண்பாவுக்கு அழைத்து அவள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறாள் என பேச்சினை ஆரம்பித்து அவள் வீடு செல்லும்வரை பேசிக் கொண்டிருந்துவிட்டே இணைப்பைத் துண்டித்தான்.
வெண்பா அஸ்வினிடம் நடந்த எல்லாவற்றையும் முழுதாக, தெய்வானை பேசியவை உட்பட பகிர்ந்துகொண்ட பின்னரே உறங்கச் சென்றிருந்தாள்.
பெரும் சலசலப்பின்றி சென்று கொண்டிருந்த நாட்கள் தெய்வானையால் கரை தொட்டிட முடியா சுழலுக்குள் சிக்கிக்கொண்டது.
தோழமைகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழால் இணைவோம்.
புதிய கதையின் தலைப்பு 👇🏻
‘மேகோனின் மேன்மை நேசம்.’
வித்தியாசமான கதைக்களம். எனது பாணியில் புதிய முயற்சி. குடும்பம் காதல் காட்சிகளும் அடக்கம். நேசம் ஒன்றே பிரதானம். கீழே உள்ள படத்தை வைத்து என்ன மாதிரியான கதை என்று எளிதில் யூகிக்கலாம். தமிழ்மொழி கதை முடிந்ததும் இக்கதை தளத்தில் வரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
39
+1
+1