அத்தியாயம் 21
அகிலாண்டம் உட்பட அனைவரும் உணவு மேசை இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அகிலாண்டத்தை பூர்வி தான் சென்று அழைத்து வந்திருந்தாள்.
அவர் வரும்போது வெண்பா தமிழுடன் உணவு மேசைக்கு அருகில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருக்க…
“மாப்பிள்ளையோட தங்கச்சியா இது?” என்று பூர்வியிடம் கேட்டவர் வேறென்னவோ சொல்ல முற்பட, “தமிழோட ஃபிரண்ட் பாட்டி. காலேஜ்ல ஒரே டிப்பார்ட்மெண்ட்” என்று வேகமாக சொல்லியிருந்தாள் பூர்வி.
“ம்ம்ம்.”
“பார்த்ததும் யாரையும் எடைபோடக் கூடாது பாட்டி” என்றாள் பூர்வி.
அவருக்கு சின்னவளிடம் கொட்டு வாங்கிய உணர்வு.
‘இளையவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டார். இந்த வயதில் அவருக்கு இருக்க வேண்டிய பக்குவம், இந்த இளம் வயதிலேயே இவர்களிடம் உள்ளதே என்று எண்ணினார்.
‘தன்னைவிட பல வயது சிறியவர்களிடம் தான் இன்னும் இன்னும் தாழ்ந்து போகிறோமே’ என்று வருந்தினர்.
அகிலாண்டம் அருகில் வந்ததும் தமிழ் வெண்பாவுக்கு அவரை அறிமுகம் செய்ய…
வெண்பா கரம் குவித்து “வணக்கம் பாட்டி” என்று சிரித்த முகமாக சொல்லி அவரின் நலன் விசாரித்திட, அவருக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெண்பா தமிழுடன் உரசியவாறு நின்று பேசிக்கொண்டிருந்ததை தரம் இறங்கி நினைத்ததை எண்ணி வெட்கினார்.
“உட்காரும்மா சாப்பிடலாம்” என்று அவரே அவளை அமர வைத்தார்.
எல்லோருக்கும் இலை வைத்து தனம் உணவு பரிமாறிட, பூர்வி உதவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் தெய்வானை வந்தார்.
வந்ததும் அவரின் பார்வை வெண்பாவில் தான் அழுத்தமாக படிந்தது.
வெண்பாவுக்கு அந்த பக்கம் அகிலாண்டமும், மறுபக்கம் தமிழும் அமர்ந்திருக்க, அவருக்கோ காதில் புகைச்சல்.
அத்தோடு என்றுமில்லா நிகழ்வாக வர்ஷினி மணியுடன் அமர்ந்திருக்க, அவருக்கு வயிறு காந்தும் உணர்வு.
“என்னோட நாத்தனார் அத்தை” என்று பூர்வி, நாத்தனாரில் அழுத்தம் கொடுத்திட…
“ம்ம்ம்… ம்ம்ம்…” என்ற தெய்வானையை பார்த்து, வெண்பா “ஹாய் ஆண்ட்டி” என்றாள்.
“இருக்கட்டும்… இருக்கட்டும்…” என்றவர், “இலை போடு தனம்” என்றார். குரலில் அதிகாரம்.
நீண்ட மேசையில் அந்த முனையில் தனம் தேவ்ராஜ்ஜுக்கு உணவு வைத்துக்கொண்டிருக்க, இந்த முனையில் அமர்ந்த தெய்வானை அவரை அழைத்தார்.
“இலை போட்டிருக்கு ஆண்ட்டி. ஓபன் பண்ணுங்க” என்று வெண்பா எதார்த்தமாக சொல்லிட…
“அது எனக்குத் தெரியும். விருந்தாளியா வந்தாக்கா வந்த வேலையை மட்டும் பாரு” என்றார். சுள்ளென.
“இப்போ என்ன தப்பா சொல்லிட்டாங்க. உங்க முன்னாடி வைச்சிருக்க இலையை திறந்துக்கக்கூட உங்களால் முடியாதா?” தமிழ் எப்போதும் போல் தான் தெய்வானையின் அல்டாப்பு செயலுக்கு கண்டனம் தெரிவித்தான். ஆனால் தெய்வானைக்கு வெண்பாவிற்கு துணை நின்றது போல் தோன்றியது.
“புது சொந்தம் வந்தால் பழசுலாம் கண்ணுக்குத் தெரியாமல் போயிடும் போல.” தெய்வானை குத்தலாகக் கூறினார்.
“எல்லாம்…”
தமிழை பேசவிடாது, “சீனியர்” என்று அவனின் கரம் பற்றி தடுத்தாள் வெண்பா.
“அவங்க பெரியவங்க. பேசினால் பேசட்டுமே! எதுக்கு ஆர்க்யூ பன்றிங்க” என்றாள் வெண்பா.
அந்த ஒரு வார்த்தை வெண்பாவின் குணத்தை அறிந்திட போதுமானதாக இருந்தது. அங்கிருந்தவர்களுக்கு.
தெய்வானைக்கு தமிழின் கையை பிடித்திருந்த வெண்பாவின் கை மீதுதான் பார்வை.
“சாரி ஆண்ட்டி” என்ற வெண்பா, தானே அவரின் முன்பு மூடியிருந்த இலையை திறந்து வைத்தாள்.
“சிலருக்கு இடம் கொடுத்தால் நமக்குதான் கழுத்து வலி. தோளில் உட்கார்ந்துப்பாங்க” என்றான் தமிழ்.
அதனை அவர் கண்டுகொள்ளவே இல்லை.
“அதுக்குள்ள சொந்தத்திடம் ஒண்ணுக்குள்ள ஒன்னு ஆகியாச்சுப்போல?”
“நல்லது தானே ஆண்ட்டி” என்ற வெண்பா உணவில் கவனம் வைத்தாள்.
தமிழ் உணவில் கை வைக்காது இருக்க…
“நான் சாப்பிடட்டுமா? வேணாமா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் வெண்பா கேட்க, உணவில் கை வைத்தான்.
“சேர் இருக்கே! நீங்களும் உட்காருங்க அத்தை. அண்ணி நீங்களும்” என்றாள்.
“இருக்கட்டும். நீங்க சாப்பிடுங்க” என்று தனம் சொல்லிட அவளால் அதற்கு மேல் வற்புறுத்திட முடியவில்லை.
தேவராஜ் வெண்பாவின் ஒவ்வொரு செயலையும் கவனித்தார். அவருக்கு வெண்பாவின் குணம் பிடிபடவே செய்தது. எதனால் மகனுக்கு அவளை இத்தனை பிடிக்கிறது என்பதும்.
தேவராஜ்ஜிற்கு தெரிந்தமட்டில் தமிழின் கோபத்தை எளிதில் கட்டுப்படுத்திட முடியாது. ஆனால் இன்று வெண்பாவின் ஒற்றை பார்வைக்கு அமைதியாகியிருந்தான்.
அதுவே அவருக்கு சொல்லியது, தமிழ் வெண்பாவிற்கு மட்டுமே இறங்கி வருவானென்று. அவளுக்காக மட்டுமே அவனாக இருப்பானென்று.
தமிழ் வெண்பாவிற்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவள் உண்டு முடிக்கும் வரை தானே அவளுக்கு உணவினை எடுத்து வைத்து கவனித்தான். யாரையும் அவன் பொருட்படுத்தவில்லை. காதலை அனைவருக்கும் தெரியப்படுத்தியாயிற்று. இதற்கு மேல் மறைத்து செய்திட எதுவுமில்லை என்கிற எண்ணம் அவனுக்கு.
வெண்பாவிற்குத்தான் எல்லோருக்கும் முன்பான அவனின் கவனிப்பு ஒரு மாதிரி சங்கடத்தைக் கொடுத்தது. யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்று அச்சமாகவும் இருந்தது.
வெண்பாவின் முகம் வைத்தே அகத்தை கண்டுபிடித்தவன்,
“நான் பொள்ளாச்சி வந்தால் எனக்கு இதெல்லாம் நீ செய்யமாட்டியா?” என மெல்லொலியில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவன் கேட்டிட, அதன் பின்னர் எதற்கும் அவள் தயக்கம் காட்டிடவில்லை.
“அவன் கவனிக்கிறான்னு நான் அமைதியா இருக்கேன். இல்லை நான் ஊட்டியே விட்டுடுவேன்” என்று பூர்வி கலகலப்பாக பேசி வெண்பாவின் சிறு சிறு தயக்கத்தையும் போக்கினாள்.
பூர்வி வேண்டுமென்றே தெய்வானையின் முன்பு வெண்பாவை தாங்கினாள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரே நாளில் நாத்தனாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று தெய்வானைக்கு புரிய வைத்திட முயன்றாளோ? அது அத்தனை எளிதல்ல என்று தெரிந்தும். அவளாலான முயற்சியை மேற்கொண்டாள்.
அனைவரும் வெண்பாவை அது அவளது வீடாக நினைக்க வைத்தனர் என்றே சொல்ல வேண்டும்.
அகிலாண்டம் கூட தன்னுடைய பேரன் ஒரு பெண்ணிடம் இத்தனை நெருக்கம் காட்டுவதை அதிசயம் போல் பார்த்தார். அவன் உடன் வளர்ந்த வர்ஷினியிடம் கூட அதிகம் பேசியோ, அவளிருக்கும் இடத்தில் அமர்ந்தோ பார்த்ததில்லை. அப்படியானவன், வெண்பாவுடன் பேசிக்கொண்டே அவளுக்கு என்ன வேண்டுமென்று கவனித்தபடி உண்ணுவது ஆச்சரியமாக இருந்தது. அவரின் அனுபவம் என்னவோ உள்ளதென்று ஆராயவும் தூண்டியது.
இருவருக்குமான உண்மை தெரியாத தெய்வானை இருவரின் நெருக்கம் கண்டு எள்ளும் கொள்ளும் வெடிக்க பார்த்திருந்தார். அவரால் வர்ஷினி இடத்தை வெண்பா பிடித்துவிடுவாளோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மகளைத்தான் மனதில் வறுத்தெடுத்துவிட்டார்.
ஒருநாளில் வெண்பா தமிழை தன்பக்கம் இழுத்துக்கொண்டாள் என்று தன்னுடைய மனப்போக்கில் கடுகடுத்தபடி இருந்தார்.
அனைவரும் உணவை முடித்துக்கொண்டு எழுந்து செல்ல… எப்போதும் உண்டு விட்டால் அறைக்குள் சென்று தொலைக்காட்சியில் மூழ்கிவிடும் தெய்வானை இன்று மணி இருப்பதையும் பொருட்படுத்தாது வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியை உயிர்பித்து அமர்ந்துகொண்டார்.
தேவராஜ் கூட தெய்வானையை ஆச்சரியமாக பார்த்தார். பின்னே மணி அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது உள்ளே சென்றுவிடாமல் உட்கார்ந்திருக்கிறாரே! மணிக்கும் அதே ஆச்சரியம் தான். ஆனால் காட்டிக்கொள்ளாது, என்றும் இல்லாது இன்று மகள் தன்னிடம் நெருங்க முயல்வதை மகிழ்ந்தவாறு வர்ஷினியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
வர்ஷினி மணியிடம் விலகி நின்றதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. இழந்ததை கொடுத்து சரி செய்வோம் என்று அன்பை மட்டும் காட்ட நினைத்திருந்தாள்.
இறுதியாகத்தான் தமிழும், வெண்பாவும் கை கழுவிட எழுந்து சென்றனர்.
“ஏன் உம்முன்னு இருக்கீங்க?”
கை கழுவிக்கொண்டு திரும்பிய தமிழிடம் வெண்பா கேட்டாள்.
“இல்லையே…”
“உங்களை ஹர்ட் பண்ணிட்டனா?”
“இத்தனை வருஷமா அம்மா என்ன பண்ணிட்டு இருக்காங்களோ அதேதான் இன்னைக்கு நீயும் பண்ணிருக்க” என்றான். ஆதங்கமாக. தெய்வானையுடன் நடந்த நிகழ்வை சுட்டி பேசினான்.
“விடுங்க பாஸ்… இதுக்கா உர்ருன்னு இருக்கீங்க” என்றவள் கையினை குழாய் நீரில் அலம்பியபடி, “நம்ம வீட்டுக்கு நான் வந்ததும் ஓடவிட்டுடலாம்” என்றாள்.
அவள் சொல்லிய வார்த்தையின் பொருள் உணர்ந்தவனுக்கு எப்படி இருக்கிறதாம்? அவள் வெளிப்படையாக காதலை சொல்ல வேண்டுமென்பதே அவனுக்குத் தேவையில்லை. அவள் தான் தன்னை அறியாது அவன் மீதான நேசத்தை சிறு செயலாலோ, வார்த்தையாலோ வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறாளே!
அகம் நிறைந்திட்ட மகிழ்வை முகத்தில் மின்ன விட்டவனாக, வெண்பாவிற்கு கை துடைத்திட சிறு துண்டை எடுத்துக் கொடுத்து நகர்ந்தான்.
பூர்வி, சாப்பிடுவதற்கு தனத்தை அமர வைக்க முயற்சித்திட, “உனக்கு எடுத்து வச்சிட்டு நான் சாப்பிடுறேன்” என்று தனம் மறுத்துக்கொண்டிருந்தார்.
“ரெண்டு பேரும் உட்காருங்க நான் எடுத்து வைக்கிறேன்” என்று வெண்பா உரிமையாக தனத்தை தோளில் கை வைத்து இருக்கையில் அமர்த்தினாள்.
வெண்பா பரிமாற இருவரும் உண்டனர். தமிழும் அவர்களுடன் அமர்ந்துகொண்டான். நால்வரும் சிரித்து பேசியபடி இருந்தனர். தமிழும், வெண்பாவும் தங்களின் கல்லூரி நிகழ்வுகளை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்க, நால்வரிடமும் அப்படியொரு சிரிப்பு. மற்றவர்கள் கவனித்தாலும் அவர்களுக்கு நடுவே செல்லவில்லை.
தேவராஜ் கலகலத்து சிரிக்கும் மனைவியை தான் ஆதுரமாக பார்த்திருந்தார். தனத்தை மகிழ்வாகத்தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால் ஒருநாளும் இதுபோல் சத்தமிட்டு வெளிப்படையாய் சிரித்து அவர் பார்த்தது இல்லை. வெண்பா தனத்தை அவரது கூட்டிலிருந்து வெளிவர வைத்திருந்தாள். தன் பேச்சின் மூலம். தமிழும், பூர்வியும் கூட அதை உணர்ந்தனர்.
“இந்தப்பொண்ணு அதிகப்படியா நடந்துகிற மாதிரி இருக்குலம்மா?” தெய்வானை அகிலாண்டத்திடம் கேட்டார்.
“நமக்கு தனம் எடுத்து வச்சாளே… அவளும் சாப்பிடணும்ன்னு, நீயோ, நானோ இதை செய்திருந்தால் அந்தப்பொண்ணு ஏன் செய்யப்போகிறாள்” என்றார் அகிலாண்டம். அவர் சொன்னது என்னவோ முற்றிலும் உண்மை. தெய்வானையால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“உன் பேரன் ரொம்பதான் இடம் கொடுக்கிறான்!”
“ரெண்டேறும் ஒண்ணா படிச்சாங்களாம்!”
“இவள் இப்போதானே பரீட்சைய முடிச்சான்னு சொன்னாங்க?”
ஏனோ தெய்வானைக்கு தமிழும், வெண்பாவும் சிரித்து, இயல்பாக தொட்டு பேசிக்கொள்வது பிடிக்கவில்லை. மகளின் மனம் அறியாது வர்ஷினிக்கு போட்டியாக வந்துவிடுவாளோ என்று அச்சம் கொண்டார்.
“ஒரே படிப்பு. தமிழு ரெண்டு வருசம் முன்னவாம்!”
“அதுதான் அவள் சீனியருன்னு கூப்பிட்டாளாக்கும்!”
“இப்போ நீ எதுக்கு வெண்பாவை பற்றியே கேட்டுட்டு இருக்க?” அகிலாண்டத்திற்கே தெய்வானையின் திருகு கேள்விகள் கோபத்தை கொடுத்தது.
“தமிழை வளைச்சு போட்டுடுவாளோன்னு தான்.”
மகளை முதல்முறை அருவருப்பாக பார்த்தார்.
“பார்த்ததும் யாரையும் எடை போட்டுடக்கூடாது தெய்வா! உனக்கும் ஒரு பொண்ணிருக்கா. நினைவில் வை” என்று சற்று காட்டமாகவேக் கூறினார்.
பூர்வி உணர்த்திய பாடம். உணர்ந்து கொண்டவர் மகளுக்கு கற்பிக்க நினைத்தார். தெய்வானை ஏற்றுக் கொண்டால் தானே!
“என் பொண்ணுக்காகத்தான் யோசிக்கிறேன்” என்ற தெய்வானையிடம் அதற்குமேல் பேச முடியாதென அகிலாண்டம் மகனிடம் சொல்லிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
மணியும் வர்ஷினியை கூட்டிக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று வருவதாக எழுந்திட, தேவராஜ் தெய்வானையைத்தான் பார்த்தார்.
தெய்வானை வெண்பாவின் நினைவில் சுழன்று கொண்டிருக்க, நிகழ்வில் அவர் இல்லைவே இல்லை.
தெய்வானை மணியுடன் வர்ஷினி செல்வதைப்பற்றி எதுவும் சொல்லாது இருப்பதை நம்ப முடியாதுதான் இருவரையும் தேவராஜ் அனுப்பி வைத்தார்.
“உன் பாட்டி உன்னை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” வர்ஷினியிடம் சொல்லிய மணி தான், உண்மையில் அதீத சந்தோஷத்தில் இருந்தார்.
தெய்வானையின் முன் அமர்ந்திருக்க விருப்பமற்று தேவராஜ்ஜும் எழுந்து உணவு மேசையில் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
“பார்த்ததும் ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேங்க. நம்ம தமிழுகிட்ட காலேஜில் என்னவெல்லாம் சேட்டை பண்ணியிருக்காள்” என்று கண்ணில் நீர் வருமளவுக்கு சிரித்தபடி தனம் சொல்ல…
“சீனியர் எக்ஸ்ட்ராவா சொல்றாங்க அத்தை. நான் சைலண்ட் தான். வேணுன்னா பூபேஷ் அண்ணாக்கு கால் பண்ணி கொடுக்கிறேன். கேளுங்க” என்று வெண்பா முகம் சுருக்கிக் கூறினாள்.
அதில் தமிழ் சத்தமாக சிரித்திட…
“பூபேஷை அரண்டு ஓடவிட்டிருக்க போல” என்று பூர்வி கேட்டதில் வெண்பா முகம் போன போக்கில் மற்ற மூவரிடமும் வெடி சிரிப்பு கிளம்பியது.
அவர்களை திரும்பி பார்த்த தெய்வானை முகம் சுளித்தவராக, ‘இதனை பார்க்கும் பொறுமை எனக்கில்லை’ என்று சென்று விட்டார். கடுப்போடு. சென்றுவிட்டாலும், தமிழ் வெண்பாவுடன் நெருக்கமாக இருக்கவிடக்கூடாது என்று எண்ணியபடி தான் இருந்தார்.
“அதெல்லாம் நிறையவே ஓடவிட்டிருக்காள்” என்ற தமிழ், “ஒருநாள்” என்று ஏதோ சொல்ல முற்பட… அவனிற்கு நேரெதிரில் அமர்ந்திருந்த வெண்பா வேகமாக எழுந்து மேசை மீது அமர்ந்தவளாக, “சீனியர் வேண்டாம்” என்று அவனது வாயினை கை வைத்து மூடியிருந்தாள்.
அவர்களின் தொடுகையெல்லாம் விரல்களோடு தான். அவனவளின் முதல் தீண்டல். அதிர்வை உள்வாங்கினாலும் முதலில் சுற்றத்தை கருத்தில் கொண்டு சுதாரித்தது தமிழ் தான்.
“ஓகே ஓகே… சொல்லல.”
வெண்பா எதையும் உணரவில்லை.
“இவங்க எது சொன்னாலும் நம்பாதீங்க அத்தை” என்றவளாக மீண்டும் இருக்கையில் அமர, இயல்பாக நடந்து கொண்டிருக்கிறாள் என்று மற்றவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.
அந்நேரம்…
“செம்மொழியான…
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்…
தமிழ் மொழி, தமிழ் மொழி,
தமிழ்மொழி… ஆஹான்ன்ன்…”
என்று அந்த பாடலில், ஸ்ருதிஹாசன் உச்ச டெசிபலில் பாடும் வரிகள் அதீத சத்தத்தில் ஒலித்தது.
ஒரு கணம் வீடே அதிர்ந்து ஸ்தம்பித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
“மொபைல் ம்யூட் பண்ணலையாடா?” என்ற பூர்வி, “பர்ஸ்ட் ஆஃப் பண்ணு” என்று தமிழிடம் சொல்ல,
“என்னோடது இல்லை பூர்வி” என்று தமிழ் வெண்பாவை பார்த்தான்.
“அச்சோ… சாரி… சாரி” என்றவள், வேகமாக எழுந்து சென்று வரவேற்பறை டீபாயின் மீதிருந்த தன்னுடைய கை பையிலிருந்து அலைபேசியை எடுத்து அணைத்தவளாக, இவர்களை பார்த்து அசடு வழிய, மூவரும் தமிழைத்தான் அர்த்தமாக எறிட்டனர்.
“அது…” என்று தமிழ் எப்படி சொல்ல என திணற,
“புரிஞ்சிடுச்சு” என்றனர் மூவரும் ஒருசேர.
தமிழ் தோள்களை உயர்த்தி கீழிறக்கினான்.
“அண்ணா” என்று வாய் அசைத்த வெண்பா…
“சாரிண்ணா! வந்ததும் நீங்கலாம் கொடுத்த சர்ப்ரைஸில் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணவே மறந்துட்டேன்” என்று அஸ்வினிடம் மன்னிப்பு வேண்டினாள்.
“தமிழ் மெசேஜ் பண்ணிட்டான் அம்மு” என்ற அஸ்வின் அவள் எப்போது கிளம்புகிறாள் எனக்கேட்டு வைத்திட்டான்.
“சாரி… பதற வச்சிட்டனா” எனக் கேட்டுக்கொண்டே அவர்களின் அருகில் வந்தமர்ந்த வெண்பா, “மியூட் பண்ண மறந்துட்டேன்” என்றாள்.
“இது எங்களுக்கு பழக்கம் தான்” என்ற தனம், தமிழை பார்த்தார்.
அப்போதுதான் வெண்பாவுக்கு தமிழ் வைத்திருப்பதும் இதே இசையென நினைவு வந்தது.
“ம்யூட்ல வைக்கிறதுக்கு எதுக்கு ரிங்டோன்?” எனக்கேட்ட பூர்வி, “மைல்டா ஏதும் வச்சு, நார்மல் மோட்லே வச்சிக்கலாமே?” என்றாள்.
ஒரு நொடி தமிழை பார்த்து மீண்ட வெண்பா…
“வால்யூம் கம்மி பண்ணால் போதும். எதுக்கு சேன்ஞ் பண்ணனும். நல்லாதானே இருக்கு?” என்றாள்.
“ரைட்… ரைட்…” என்று விஷமப் புன்னகையோடு பூர்வி தலையசைக்க, தேவராஜ்ஜும் தனமும் கண்டும் காணாததைப்போல் இருந்தனர்.
“ட்ரெயின் எப்போ? கிளம்பலாமா?”
“அஸ்வின் கிளம்ப சொல்லிட்டாரா?” பூர்வி தான் கேட்டாள்.
“இல்லை இல்லை…” என்ற வெண்பா, “ஜஸ்ட் தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றாள்.
மணியை பார்த்த தமிழ்,
“ஈவ்வினிங் கிளம்பலாம்” என்று எழுந்து சென்றான்.
வெண்பா உடனே ஒப்புக்கொண்டவளாக சரியென்றாள்.
“எங்கடா?”
“காலிஃபிளவர் செடிகளுக்கு மருந்தடிக்க சொல்லியிருந்தேன் ம்மா. வேலை முடிஞ்சுதா கேட்டுட்டு வரேன்” என்று அலைபேசியை காண்பித்தவனாக நகர்ந்து சென்றான்.
“எனக்கும் கணக்கு பார்க்க வேண்டிய வேலையிருக்கு. இன்னும் பார்க்கலன்னு தெரிந்தால் தமிழ் கடிவான்” என்று சன்னமான சிரிப்போடு அறைக்குச் சென்றார்.
தனமும் உணவு பாத்திரங்களை ஒதுங்க வைத்திட கிச்சன் சென்றுவிட்டார்.
“தமிழை ரொம்ப பிடிக்குமா வெண்பா?”
கேட்ட பூர்வியை ஏனென்பதுபோல் பார்த்தாலும்,
“பிடிக்கும் அண்ணி. ஹீ இஸ் மை வெல்விஷ்ஷர்… புரொட்டெக்டர்…” என்ற வெண்பா, “லைக்… சொல்லத் தெரியல அண்ணி. எனக்கு ஒன்னு தேவைன்னா, அதுக்கான ஆன்சர் சீனியர்கிட்ட இருக்கும்” என்றாள்.
இப்படியொரு பதிலை பூர்வியும், பேசி முடித்து வந்து தற்செயலாகக் கேட்க முடிந்த தமிழுமே எதிர்பார்க்கவில்லை.
“ஹ்ம்ம்… உங்களுக்குள்ள நல்ல வேவ்லென்த்” என்றாள் பூர்வி.
“எப்படி சொல்றீங்க?”
“ரெண்டு பேரும் சொல்லி வச்சி ட்ரெஸ் பண்ணிங்களா?”
“இல்லையே” என்ற வெண்பா தமிழை திரும்பி பார்க்க… அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் நின்றிருந்த தமிழ் வேகமாக மறுபக்கம் பார்த்தவாறு அலைபேசியை காதில் வைத்திட, அப்போதுதான் அவனின் ஆடை நிறத்தை கவனித்து பார்த்தாள்.
“ஜஸ்ட் கோ-இன்சிடெண்ட் அண்ணி. காலேஜ் டைமில் நிறைய டைம் நடக்கும் இப்படி” என்றாள்.
“ஹோ” என்ற பூர்வி, “அவன் ட்ரெஸ் என்ன கலர்ன்னு இப்போதான் நோட் பன்றியா?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்” என்ற வெண்பா, “சீனியர் பக்கத்தில் இருந்தால் அவர் கண்ணை தவிர வேறெங்கும் பார்த்து பேச வராது அண்ணி. ஒருமாதிரி படபடப்பாவே இருக்கும். ஆனால் அவங்க தூரமிருந்தால் நல்லா சைட் அடிப்பேன்” என்று குரலை தாழ்த்தி ஒற்றை கண்ணடித்துக் கூறி சிரித்தாள்.
“அடிப்பாவி… இதை என்கிட்டவே சொல்ற நீ?” என்று போலியாக முறைத்தாள் பூர்வி.
“அவங்கக்கிட்டவே எப்படி அண்ணி சொல்ல முடியும்?” என்று குறும்பாக வெண்பா கேட்டதில் பூர்வி வாயில் கை வைத்தாள்.
கேட்டுக்கொண்டிருந்த தமிழுக்குத்தான் அவஸ்த்தையாகிப்போனது. உள்ளுக்குள் மென் சாரல் தூவியது.
“நீ வாலு பொண்ணு தான். தமிழ் உன்னை அராத்து சொல்வதில் தப்பே இல்லை” என்று பூர்வி சொல்லிக்கொண்டிருக்க,
“அண்ணியும், நாத்தனாரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருக்கீங்க போல” என்று அவர்கள் பேசியது ஒன்றுமே கேட்காதவனைப்போல் பக்கம் வந்து அமர்ந்தான்.
“உன்னைப்பற்றித்தான் பேசிட்டு இருந்தோம்” என்ற பூர்வியிடம்,
“என்ன?” என்று தமிழ் கேட்க,
பூர்வியோ வெண்பாவிடம் சொல்லட்டுமா என்று சைகை செய்தாள்.
வேண்டாம் என்பதைப்போல் பார்வையால் வெண்பா இரைஞ்சிட அதையெல்லாம் பூர்வி கண்டு கொண்டால் தானே!
“வெண்பா உன்னை சைட் அடிப்பாளாம்!” என்று டக்கென்று சொல்லிவிட…
விழிகள் தெறித்து, வெண்பா நெஞ்சில் கை வைத்து தமிழை அதிர்ந்து ஏறிட்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
43
+1
1
+1
2