
அத்தியாயம் -22
சிற்பி நிரஞ்சன் கொடுத்த சாக்லேட்டையும் அவன் சொன்ன வார்த்தையையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது பூர்ணா வரவும் சாக்லெட்டை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள்.
பூர்ணாவோ “ரொம்ப நல்லா பசங்க சிற்பி எனக்கு ஏற்கனவே அவங்க பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு அவங்க பழகின முறையில் இன்னும் ரொம்ப பிடிச்சு போச்சு சிற்பி” என்று புன்னகையோடு சொன்னார்.
அவளும் ஆமாம் என்பது போல் தலையசைத்துக் கொண்டிருந்தாள்.பூர்ணா சிற்பியிடம் “சிற்பி நிரஞ்சனுக்கு உன் மேல ரொம்ப அக்கறை தான் போல” என்று கேட்டார்.
உடனே சிற்பி “எப்படி அத்தை இந்த மாதிரி சொல்லுறீங்க? எப்பவும் என்மேல கோபத்தை காட்டுறதே நிரஞ்சன் சார் தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே” என்று அவள் சொல்லவும் பூர்ணாவோ “நிரஞ்சன் உன்கிட்டே நடந்துக் கொண்ட முறையில் எனக்கு நீ சொன்ன மாதிரி இல்லைன்னு படுது ரொம்பவும் அக்கறையா இருக்கான்” என்றார்.சிற்பி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
பூர்ணா சிற்பியிடம் பதில் வராததால் “நீ அவனை தப்பா புரிஞ்சு இருக்கியோன்னு படுது சிற்பி.எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சு பாரு” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அன்றைய இரவு சிற்பிக்கு தூக்கமே வரவில்லை.
விழித்துக் கொண்டிருந்தாள்.
ஏதேதோ யோசனைகள் மனதில் வந்து தேவையில்லாத எண்ணங்களாக வந்து போனது.அவளுடைய வேலையைப் பற்றிய கவலைத் தான் இப்பொழுது பெரிதாக இருந்தது என்றால் நிரஞ்சனின் அந்த பார்வை,அக்கறை எல்லாம் புதிதாகவே அவளுக்குத் தெரிந்தது.
அப்பொழுது கைப்பேசியில் இருந்து ஒரு சின்ன சத்தம் குறுஞ்செய்தி வந்திருந்தது.யாரென்றுப் பார்த்தவளுக்கு புதுஎண்ணாக இருக்க செய்தியைப் பார்த்தாள்.
“தூங்கிட்டீயா?” என்று மட்டும் இருந்தது.
இவளும் யாரென்று தெரியும் ஆவலில் “நீங்க யாரு?” என்று கேட்டதற்கு சிரிப்பது போல் இமோஜி வந்தது.அதைப் பார்த்து கோபமானவள் “யார்னு தெரியாமல் நான் பேசுறது இல்லை” என்று பதில் அனுப்பவும் மறுபக்கத்திலிருந்து “நிரஞ்சன்” என்று பதில் வந்தது.
அவன் அனுப்பிய அந்த வார்த்தையை பல தடவை வாசித்துப் பார்த்தவள் நம்ப முடியாமல் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தாள்.அவனோ திரும்பவும் “ரொம்ப யோசிக்காதே நிரஞ்சன் தான் பேசுறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
அதைப் பார்த்து “சொல்லுங்க” என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.உடனே அவனோ “சிற்பி நீ நல்லாத் தானே இருக்கே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அன்னைக்கு நடந்த விஷயத்தை என்னால மறக்க முடியலை. உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கு” என்று அனுப்பினான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.நிரஞ்சன் இவ்வளவு பேசுவானா? அதுவும் வார்த்தைகளை இவ்வளவு கோர்வையாக பேச முடியுமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள் “அதெல்லாம் ஒன்னுமில்லை சார் நான் நல்லா இருக்கேன் நீங்க கவலைப்படாதீங்க” என்று ஒரு வரியில் பதில் அனுப்பினாள்.
அதைப் பார்த்த அவனோ “இவ்வளவு பேசியிருக்கேன் நீ என்னன்னா ஒரே வார்த்தையில் முடிச்சிட்டே” என்று அவளிடம் சண்டைப் போட்டான்.அவன் கேட்ட கேள்வியில் சிற்பிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.அதனால் அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் விடாமல் “என்கிட்ட பேச விருப்பம் இல்லையா? பரவாயில்லை” என்று வேறு அனுப்பவும் சிற்பியால் அவனை சமாளிக்க முடியாமல் நேராக அவனுக்கு பேச அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும் “ஹலோ” என்றதும் அந்த பக்கம் அமைதியாக இருந்தது.
சிற்பி திரும்பவும் “ஹலோ நிரஞ்சன் சார் தானே பேசுறீங்க”
“ம்ம்…” என்று பதில் மட்டும் பதில் வந்தது.
“நேர்ல எதுவும் என்னைப் பற்றி விசாரிக்காமல் நோயாளிக்கு சாக்லெட் கொடுத்திட்டு போறீங்க? என்னது இது? அதுவும் வேகமாக மெஸேஜ் வரலைன்னு அதுக்கும் என்கிட்ட சண்டைப் போடுறீங்க எனக்கு வேகமாக டைப் பண்ண முடியாது அப்படின்னு தெரியாதா மிஸ்டர் சிடுமூஞ்சி? என்றவள் வேகமாக “சாரி சாரி நிரஞ்சன் சார்” என்றாள்.
அவனோ “என்னச் சொன்னே? திரும்பச் சொல்லு சரியா கேட்கலை” என்றான்.
அவளோ “ப்ச் அதெல்லாம் எச்சில் தொட்டு அழிச்சாச்சு திரும்ப எல்லாம் கேட்கக் கூடாது”
அவனோ கொஞ்சம் அதிர்ச்சியாகி “என்னது எச்சில் தொட்டா ச்சீ…ச்சீ… இன்பெக்ஷன் ஆகிடும்” என்றான்.
அதைக்கேட்ட சிற்பிக்கோ எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாமா? என்று இருந்தது.
நிரஞ்சனோ “சிற்பி உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது ஹைஜினிக் ரொம்ப முக்கியம் அதனால கவனமாக இருக்கனும் சரியா?” என்றான்.
அவளோ வேறு வழியில்லாமல் “ம்ம்… நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
அவனோ “நீ நல்லா இருக்கத் தானே அதைக் கேட்கத் தான் மெஸேஜ் செய்தேன்” என்றான்.
சிற்பியோ “நான் நல்லா இருக்கேன் நிரஞ்சன் உங்களால எனக்கு ஒன்னும் ஆகலை அதோட இது சின்ன காயம் தான் நாளைக்கு உங்களுக்கு போட்டி இருக்குல்ல அதனால நல்லா ரெஸ்ட் எடுங்க நீங்க நாலு பேரும் போட்டியில் ஜெயிக்கனும் அதுதான் எனக்கு வேணும்” என்றாள்.
உடனே நிரஞ்சன் “கண்டிப்பா இந்த முறை வெற்றி உனக்காக சிற்பி நீயும் நல்லா ரெஸ்ட் எடு சரியா?” என்றான்.
அவன் சொன்ன அந்த வார்த்தை “உனக்காக” கொஞ்சம் அதை அவன் அழுத்திச் சொல்லியது அவளுக்கு ஏதோ ஒன்று போல் இருந்தது.அதனால் யோசனையும் தயக்கமும் சேர்ந்துக் கொள்ள “சரி ஆல் த பெஸ்ட்” என்று அவள் சொல்ல அவனோ “குட் நைட்” என்றான்.
காந்தன் கொஞ்ச நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்தவன் நிரஞ்சனின் அறையில் பேச்சு சத்தம் கேட்கவும் லேசாக கதவை திறந்துப் பார்க்கும் பொழுது அவன் “குட் நைட்” என்று சொல்லி சிரிப்போடு கைப்பேசியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டதைப் பார்த்தவன் யோசனையாக ‘இந்நேரம் யார்கிட்டே பேசிட்டு இவ்வளவு சந்தோஷமா இருக்கிறான்.நான்கைந்து வருடங்களுக்கு பிறகு நிரஞ்சனின் முகத்தில் ஒரு அன்பான சிரிப்பை பார்த்தவனுக்கு யாராக இருக்கும்? என்ற யோசனை வந்தாலும் அவனின் புன்னகை இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணமும் வேண்டுதலுமே அதிகமாக இருந்தது காந்தனுக்கு.
சிற்பியோ இன்னும் யோசனையோடு தூங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் எல்லோரும் சுறுசுறுப்பாக எழுந்து போட்டிக்கு செல்லத் தயாரானார்கள்.இம்முறை இவர்களுடன் செல்வதற்கு சபரி வந்திருந்தார்.
எல்லோரும் காரில் ஏறி அமர்ந்ததும் நிரஞ்சன் எல்லோரையும் வைத்து ஒரு சுயபடம் எடுத்துக் கொண்டவன் அதை சிற்பியின் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பியவன் “நாங்க கிளம்பிட்டோம்” என்று அனுப்பினான்.
மூவரும் நிரஞ்சன் சுயபடம் எடுத்ததையும் அவன் கைப்பேசியை பார்த்துக் கொண்டே வரும் இந்த திடீர் மாற்றத்தினை பார்த்தனர்.
நிரஞ்சன் “பார்த்தி நாம இந்த மாதிரி போட்டிக்கு கிளம்புறோம்னு நம்ம பேன் பேஜ்ல அப்லோடு பண்றேன் அப்போத் தான் நமக்கு இன்னும் நிறைய பாலோவர்ஸ்ஸீம் ஆசிர்வாதமும் கிடைக்கும்” என்றான்.
அதைக் கேட்டு மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.நிரஞ்சன் தொடர்ந்து “நாம இனி என்ன செய்யப் போறோம்னு மெயின் விஷயத்தை மறைச்சு சின்னச் சின்ன போட்டோஸ் ஒரு துணுக்கல் இப்படி கொடுக்கலாம் அப்போ நம்ம ப்ரோகிராமை எல்லோரும் பார்க்க ஆர்வப்படுவாங்க” என்றான்.
இதைக் கேட்ட காந்தன் “இதை தான் நானும் யோசிச்சேன்.ஆனால் நீ ஓகே சொல்லுவியான்னு யோசிச்சேன் இப்போ நீயே இதுல ஆர்வமா செய்யிறப்போ எங்களுக்கும் ஓகே தான் நாங்களும் உன்னை மாதிரியே பாலோ பண்றோம்” என்றான்.
நிரஞ்சன் சிற்பிக்கு புகைப்படத்தை அனுப்பி விட்டு தங்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் அவர்களின் புகைப்படத்தை போட்டு விட்டான்.நால்வரும் ஏற்கனவே பாடிய சினிமா பாடலை இன்னொரு முறை அழகாக பாடினார்கள்.
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் இசையிலே
நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைக்கின்ற
இரசிகர்கள் இராஜ்ஜியம் எனக்கே தான்…
மடைதிறந்து தாவும் நதியலை
நான் மனம் திறந்து கூவும் சிறு
குயில் நான் இசைக்கலைஞன்
எங்களின் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோய்… என்று நால்வரும் ஒன்றாக பாடி ஒரு வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் போட்டனர்.
இவர்களின் ரசிகர்களின் பக்கத்தில் சாம்பவியும் இருந்தாள்.அவளும் எல்லாவற்றையும் பார்த்தாள்.அவளுடைய நிறுவனத்தின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது.
அவர்களின் ரசிகர்களின் பக்கத்தில் நால்வரும் எந்த இடத்திற்கு செல்கிறார்கள்? என்பதை அலசலும் கேள்வியும் தொடர்ந்தது.இறுதியில் ஒருவர் அவர்கள் செல்லும் இடத்தைப் பற்றிய அறியவும் இந்த குழுவின் மிகுந்த ஈடுபாடான ஒரு ரசிகை அவர்கள் செல்லும் இடத்தைப் பற்றிய விவரங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் போடவும் போட்டி நடக்கும் அந்த இடத்திற்கு முக்கியமான ரசிகைகள் செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
இது எதுவும் தெரியாமல் நான்கு பேரும் தங்களின் பயிற்சியைப் பற்றி பேசிக் கொண்டு வந்தனர்.இதற்கிடையில் நிரஞ்சன் சிற்பி தன்னுடைய குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பி இருக்கிறாளா? என்று பார்த்தால் அவளுக்கு இன்னும் சென்றதாகவே காட்டவில்லை.
நிரஞ்சன் மனதினுள் ‘தூங்கி இருப்பாள்’ என்று நினைத்துக் கொண்டான்.ஒருமணி நேர பயணத்தில் போட்டி நடக்கும் அரங்கத்திற்குச் செல்லலாம் என்று நினைத்தால் வாயிலிலேயே ஓரளவு கூட்டமாக இருந்தது.
இவர்களும் எதற்காக இப்படி கூட்டம் நிற்கிறது என்று யோசித்துப் பார்க்கும் பொழுது தான் இவர்களின் பெயரை தாங்கிய பலகையோடு நிற்கும் பெண் ரசிகைகளைக் கண்டதும் நால்வருக்கும் ஒரு ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டது.
சபரியும் அங்கே காவலுக்கு நின்றிருந்தவர்களை வைத்து நால்வரையும் அந்த ரசிகர்களின் கூட்டத்தில் சிக்காமல் அவர்களை உள்ளே அழைத்து வந்தனர்.அவர்கள் அப்படி வரும் பொழுது ஒவ்வொருவரும் சத்தமாக “நிரஞ்சன்,காந்தன்,பார்த்தி,
சஹா என்று ஒவ்வொருவரின் பெயரையும் தனியாக அழைத்து நல்லா பாடுங்க ஆல் த பெஸ்ட்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
இவை எல்லாம் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்திலும் தொலைக்காட்சியிலும் பேசும் பொருளானது.சாம்பவி தன்னுடைய நிறுவனத்தை இன்னும் அதிகமான உயரத்திற்கும் அவர்களுக்கு தேவையானதை இன்னும் நன்றாக செய்வதற்கான ஆதரவாளர்களை தேடிக் கொண்டிருந்தாள்.
இந்த ஒரு பரவல் செய்தினால் சில முக்கியமான பெரிய நிறுவனங்களின் ஆதரவும் அவர்களின் பொருட்களுக்கான மாடல்களாகவும் சங்கீத மேளாவுடைய இசைக் கலைஞர்களைக் கேட்டனர்.
அதனால் சாம்பவி இன்னும் பெரிய மகிழ்ச்சியில் இருந்தாள்.இவை எல்லாம் எந்தளவிற்கு சாத்தியப்படுவத்துவதில் பெரிய விஷயமாக நினைத்து இருந்தவளுக்கு இன்று சமூக வலைத்தளமும் அவர்களின் ரசிகர் பட்டாளமும் அவளுக்கு அதை எளிதாக்கி கொடுத்து இருந்தனர்.
பார்த்தி நிரஞ்சனிடம் “நிரஞ்சா சரியான நேரத்துல நீ எடுக்கிற முடிவு எப்பவும் நமக்கு நல்லா விதத்துல அமையுது ரொம்பவே தாங்ஸ்” என்றான்.
உடனே நிரஞ்சன் “நம்மளுடைய கடின உழைப்பே இந்த மதிப்பையும் நம்ம திறமையும் தெரியனும் தானே நாம அடுத்தடுத்து பாடப் போகும் போது இதே மாதிரி சின்னதாக ஒரு அறிவிப்பு விடலாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -21
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -23
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான கதை நகர்வு 👌👌
நிரஞ்சன் மனசுல இருந்த அழுத்தம் போனதால அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு நல்லா யோசிக்கிறான் ..
உண்மை தான் மனம் லேசாக இருந்தால் தான் எதையும் செய்ய முடியும்
அருமையான பதிவு
நிரஞ்சன் இப்ப கொஞ்சம் தெளிந்து விட்டான்.