Loading

முத்தரசன் வனஜாவை சந்தித்த நிகழ்வை எண்ணிப் பார்த்தார்.

வனஜா முதன் முதலில் பரந்தாமனை தன்னோடு நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டி தான் அவருக்கு வசியம் வைப்பதற்காகத் தான் முத்தரசனிடம் வந்திருந்தார்.  ஆனால் வந்த மாத்திரத்திலேயே கண்டு கொண்டார்…  இங்கிருப்பது சாமி அல்ல ஆசாமி என்று…

வனஜா கண்டு கொண்டாள் என்பதை அறியாத முத்தரசனோ தன் பாட்டிற்கு அள்ளி விட ஏளனப் புன்னகையுடன்  ,”குடிகாரன் முத்தரசனுக்குச் சாமி வேஷம் நல்லா தான் யா இருக்கு “என்று கேலி பேசினாள் வனஜா.

“ஹேய் நீ நீ எப்படி… ?உனக்கெப்படி தெரியும்..?” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்ட முத்தரசனைப் பார்த்து நக்கல் சிரிப்புடன்  ,”நானும் சேலம் தான் யா… என்னடா இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்…என் கணக்கு சரி தான்… இதுவும் நல்லதுக்குத் தான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் பேச வந்தா ரெண்டு பேருக்கும் லாபம் “என்று பணத்தாசை காட்டி இருந்தாள்.

முத்தரசன் புருவம் உயர்த்தி “அப்படி என்ன லாபம் கிடைக்கும்… ?? ” எனக் கேட்டார்.

வனஜாவோ, “பணம் தான் வேற ஒண்ணும் இல்ல… நான் யார் தெரியுமா ? அந்த **** கட்சி தலைவர் பரந்தாமனோட  இரண்டாவது மனைவி அவரை என் கிட்ட நிரந்தரமாக வரவழைக்கத் தான் உன்னைத் தேடி வந்தேன் நீ டுபாக்கூர் னு தெரிஞ்சு போச்சு அதனால நீ எனக்கு உதவி பண்ணு “என்றார்.

“அட என்ன உதவி னு சொல்லுமா..??”எரிச்சலடைந்தவராகக் கேட்டார் முத்தரசன்.

“நான் பரந்தாமனை வரச் சொல்றேன்… அந்த ஆளுக்கு ஆரூடம் சொல்லு… அதாவது அடுத்த ஆட்சியில் அவன் தான் மந்திரி னு அதுக்கு ஒரு பரிகாரம்  ஹோமம் னு சொல்லி வரச் சொல் பணத்தைச் செலவு பண்ண வைக்கிற விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் “என்று வனஜா சொல்ல முத்தரசன் சம்மதித்தார்.

பரந்தாமனை எடுத்ததும் அவர்கள் வழிக்குக் கொண்டு வர இயலவில்லை. டெண்டர் கிடைக்கவும், சில அரசு தரப்பில் சலுகைகள் கிடைக்கவும், ஏற்பாடு செய்த பிறகே அவர் வழிக்கு வந்தார்.  பரந்தாமனின் கைகளில் பணம் புழங்கத் துவங்கவும் மொத்தமும் தன் வாரிசுகளுக்கே சேர்த்தார் பரந்தாமன்.

வனஜா கொந்தளிக்க, முத்தரசன் மெதுவாகப் பரந்தாமனிடம் பணத்தைக் கறக்க துவங்கினார்.  ஆனாலும் மொத்தமாகப் பணத்தை எடுக்க இயலவில்லை .

ஒரு இடத்தில் பரந்தாமனும், அரசல் புரசலாக முத்தரசனின் ஏமாற்று வித்தையைக் கண்டு கொண்டார். இருந்தாலும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முத்தரசனை விட்டால் வேறு வழியில்லை என்று உணர்ந்து அமைதி காத்தார் பரந்தாமன்.

முத்தரசனுக்கு இது வசதியாகப் போய் விட, மூவரும் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதன் பிறகு தான் பணமதிப்பீடு இழப்பு ஏற்படும் என்று அறிந்து பதுக்கி வைத்த பணத்தை எப்படி மாற்றுவது என்று தவித்துப் போயினர்.

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அதிர்ஷ்டம் அடித்தது வனஜாவிற்கும், முத்தரசனுக்கும்  , இளங்கோவன் தன் பிரச்சினைக்காக முத்தரசனை சந்திக்க வந்த நேரத்தில்  தான் ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட  இளங்கோவனைப் பயன்படுத்த நினைத்தனர். அதன்படி அவருக்கும் பணத்தாசை காட்டி தங்கள் வழிக்குக் கொண்டு வந்திருந்தனர் .

முத்தரசனும் வனஜாவும் அனைவரையும் ஆட்டி வைத்து தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டிருந்தனர் . ஆனால் அவர்களையும் மிஞ்சிய சக்தி ஒன்று ஆட்டி வைக்கிறது என்பதை உணராதுப் போயினர்.

முத்தரசன் தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்து  எழுவதற்கும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் மின்விசிறி விழுவதற்கும் சரியாக இருந்தது.

பதறியடித்து நகர்ந்தவரோ ,சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே தேவான்ஷியின் முகம் சுவர் முழுவதும் தெரிந்தது.  கூடவே ராமமூர்த்தியின் உருவமும்…  மீண்டும் வியர்த்து விறுவிறுத்தது அவருக்குக் கொஞ்ச நாட்களாக இல்லாமல் இருந்த இந்த அமானுஷ்யம் மீண்டும் துவங்கியது.  பயத்தில் நடுங்கிட  இம்முறை தன்னைச் சுதாரித்து  அங்கிருந்து ஓடினார்.

வழக்கம் போல நல்லசிவம் தான் எதிர்கொண்டான்.

“சாமி என்ன ஆச்சு ?”என்று பதற ,”ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை” என்றபடி நெற்றி வியர்வையைத் துடைத்தபடி காளி சிலை இருந்த இடத்திற்குச் சென்றார்.

‘இதை இப்படியே விட்டால் சரியாக வராது ‘என்று எண்ணியபடி பரந்தாமனுக்கு அழைத்தார்.

விபரங்களைச் சுருக்கமாகக் கூறி முடித்து விட்டு,” எனக்கு யாரை சந்தேகப்படுறது னு தெரியலை அதனால நீ ஒரு யோசனை சொல்லு !! “என்றார்.

“சாமி ! நிஜமாகவே ஆவியா இருந்தா என்ன பண்ணுவீங்க…?”

“பைத்தியம் மாதிரி உளறாதே பரந்தாமா…!! இது எவனோ உள்ளிருந்து செய்ற வேலை… அந்த இளங்கோவன் மகளைத் தான் நான் கொல்லவே இல்லையே… அப்புறம் எப்படி ஆவியா வருவா…. ?”என்றார் குழப்பமாக

பரந்தாமனோ, “அது சரி தான் ஆனா அந்தப் பொண்ணு உங்க கிட்ட இருந்து தப்பிச்சு போய் எங்கேயாவது செத்திருந்தா… எவனாவது ஏதாவது பண்ணி இருந்தா என்ன பண்ணுவீங்க…?” இடக்காகக் கேள்வி கேட்டு வைத்தார்.

“எவனாவது ஏதாவது பண்ணி இருந்தா அவனைத் தானே போய் டார்ச்சர் பண்ணனும்,  என்னை எதுக்காகத் தொந்தரவு செய்யணும்,  இது ஏதோ உள்குத்து மாதிரி தான் தெரியுது… நீ ரெண்டு ஆளை மட்டும் ஏற்பாடு பண்ணி என் மடத்தில் சேர்த்து விடு அவங்களை விட்டுக் கண்காணிக்கச் சொல்றேன் நான் என்றவர் இணைப்பைத் துண்டித்தார் .

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வேதாந்த் மற்றவர்களை அழைத்துக் கொண்டு விருதுநகர் சென்று இருக்க ,இங்கே ஜீவன்  தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

ஜீவனோ, “சாமி நீங்க சொன்ன அத்தனை பொருட்களையும் வாங்கியாச்சு…  இன்னும் ஏதாவது வாங்க வேண்டுமா …?”பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டான்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் மகனே… ஒரு விஷயத்தை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்  நடுநிசியில் தான் பூஜை துவங்கும்… உன் தந்தையின் பொருட்களையும் கையோடு கொண்டு வந்து விடு…  விரைந்து வா மற்ற பக்தர்களும் வந்தாயிற்று… “என்றார் முத்தரசன்.

“சரிங்க சாமி வந்திடுறேன் “என்றவன் இணைப்பை துண்டித்து விட்டுத் தனக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் எடுத்து வைத்தான்.

விருதுநகர் வந்து விட்ட வேதாவுக்குக் குழப்பமாகவே இருந்தது.

“வேதா ஏன் டா டல்லா இருக்க … ?, ஜீவன் வரலையேன்னு கவலையா  …?, வந்திடுவான் டா நீ இங்கே உன் சொந்தம் யார் யாருக்கு சொல்ல வேண்டியது இருக்கு னு சொல்லு “என்றார் மணிமேகலை.

வேதாவோ அவரது கேள்விக்குப் பதில் அளிக்காமல், “அத்தை ஒரு விஷயம் கவனிச்சிங்களா…?” என்றான்.

மணிமேகலை புருவம் முடிச்சிட “என்னடா… ?” எனக் கேட்க

வேதா “அது வந்து  ஏன் ஜீவன் எல்லோரையும் அனுப்பி வச்சான்…?  என் மேரேஜுக்கு அவ்வளவு அவசரம் காட்டினான் ஏதாவது புரியுதா உங்களுக்கு…??, தேவ் உனக்குப் புரியுதா…!!  அவன் ஏதோ மறைக்கிறான் அத்தை. நாம அவனைத் தனியா விட்ருக்கக் கூடாது ஒரு வேளை மறுபடியும் மந்திரம் ஆவி பூதம் னு போயிட்டானோ… !?” என்று சந்தேகமாகக் கேட்க தேவான்ஷியின் முகம் மாறுதல் அடைந்தது.

அதைக் கண்டு கொண்ட அனுவோ ,”அக்கா உனக்கு ஏதாவது தெரியுமா ?உண்மையைச் சொல்லு அக்கா ஜீவா வேறெதுவும் செய்றாரா …?, மறுபடியும் அப்பாவைக் கொண்டு வரேன் னு அது மாதிரி எதுவும் சொன்னாரா உன் முகமே சொல்லுது ஏதோ விஷயம் இருக்கு னு” என்றாள்.

தேவா இல்லை என்று மறுத்திடவே கதிர்வேலன் அமைதியாக,” தேவா எதுவாக இருந்தாலும் சொல்லுமா…!! அவன் வேறெந்த விபரீத விஷயத்திலும் மாட்டிக்கக் கூடாது அதற்காகத் தான் கேட்கிறேன்… சொல்லுமா” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா… அவர் வந்திடுவார் அதான் சொன்னாரே பாஸ்போர்ட் ,விசா னு அலைய வேண்டி இருப்பதால் லேட் ஆகுது னு” என்று சமாளித்தாள்.

“ஏதோ சொல்ற ஓகே..!!” என்று மணிமேகலை பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, மற்றவர்களும் அமைதியைக் கடைபிடித்தனர்.

வேதாந்தின் பெரியப்பா குடும்பத்தினர் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“வேதா ஏதாவது உதவி வேண்டும் என்றாலும் கேளு செய்றேன்” என்று அவனது பெரியப்பா மகன் உதவிக்கு வந்தான்.

“ஒண்ணுமில்லை அண்ணா நம்ம சொந்தக்காரங்கங்களுக்கு மட்டும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு தர வேண்டும் அது மட்டும் தான் வேணும் !! ” என்றான் வேதா.

“கண்டிப்பாக டா ! நான் நீ அப்பா அம்மா எல்லோரும் சேர்ந்து போய் வைக்கலாம்… ” என்று கூற ,சரி என்று சம்மதித்தான்.

‘சொத்துக்களைப் பிடுங்கி விட்டாலும் , சற்று சகோதரபாசமாவது இருக்கிறதே !! ‘என்று மெச்சி கொண்டான் வேதா.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இளங்கோவன் , விஜயா இருவரும் மந்திரவாதி முத்தரசனைக் காண சென்னை வந்திருந்தனர். 

அதே சமயத்தில் நர்த்தனாவும் அங்கே வந்திருந்தாள்.

நர்த்தனாவோ, “சாமி அவ என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டா… நீங்க கொடுத்த தாயத்தைக் கட்டியும் எந்தப் பலனும் இல்லை இப்போ என்ன செய்வது சாமி… நான் மறுபடியும் அந்த வீட்டிற்குள் போக முடியாதா…?” என்று பாவமாகக் கேட்டு வைத்தாள் .

“மகளே கண்டிப்பாக உள்ளே செல்லலாம் ஆனால் அதற்குத் தகுந்த பரிகாரம் செய்து உள்ளே போக வேண்டும். உனக்கு இதை விட நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தித் தருகிறேன் நான் கூறுவது போலக் கேட்க வேண்டும் நீ” என்று பீடிகை போட்டார் முத்தரசன்.

நர்த்தனா விழிகள் விரிய ,” சாமி என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்க சாமி கண்டிப்பாகச் செய்கிறேன் இப்போ நான் வேறு மாசமா இருக்கேன் சாமி தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கு நீங்க என்ன செய்யச் சொல்றீங்களோ அதுபடி நான் செய்றேன்” என்று உறுதி கொடுத்தாள்.

முத்தரசனுக்கு முகம் பளிச்சிட்டது. மனதில் ஒரு கணக்குப் போட்டபடி “நல்லது மகளே  … என்னுடைய யாகத்தில் நாளை மறுநாள் கலந்து கொண்டு விடு நீ கொடுத்த ஐந்து லட்சம் போதுமானதாக இல்லை இருப்பினும் உன் நிலை கருதி உனக்காக ஒரு விஷயம் வைத்திருக்கிறேன் ” என்று சொல்ல,”  என்னனு சொல்லுங்க சாமி செய்றேன் “என்றாள்.

“ஒன்றுமில்லை மகளே !என்னிடம் சில லகரங்களில் ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன அதனை உனது பெயரில் போட்டு நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொடு நீ இலவசமாகவே யாகத்தில் கலந்து கொள்ளலாம் .அது மட்டுமில்லாமல் உனக்கு அதில் பத்துச் சதவீதம் பணத்தையும் கொடுக்கிறேன்” என்று ஆசை காட்டினார்.

நர்த்தனா உடனே சம்மதம் தெரிவித்து விட்டு மகிழ்ச்சியாக வெளியே வரவும் , விஜயா மீது அவள் மோதவும் மிகச் சரியாக இருந்தது.

மோதியதில் விஜயாவின் கையிலிருந்த ஜாதக நோட்டிலிருந்து  தேவான்ஷி , அனுகீர்த்திகா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படமும் கீழே விழுந்தது.

“அச்சோ!! சாரிங்க தெரியாம இடிச்சுட்டேன் … ” என்று புகைப்படம் நோட்டு இவற்றைத் துடைத்து விட்டு கொடுக்கும் போது தான் புகைப்படத்தைப் பார்த்தாள் நர்த்தனா.

“தேவான்ஷி ,அனு… இவங்க ரெண்டு பேரையும் உங்களுக்குத் தெரியுமா …?, யார் உங்க சொந்தமா…?”  என்று நர்த்தனா கேட்டு வைக்க இளங்கோவன், விஜயா இருவரும் அதிர்வாய் பார்த்தனர்.

“ஆமா இவங்க என் பொண்ணுங்க தான். உங்களுக்கு எப்படித் தெரியும் …?, எங்க பார்த்திங்க…?”  என்று அடுக்கடுக்கான கேள்வியில் நர்த்தனா திகைத்தாலும் ,ஒரு கணம் சுதாரித்து ,”பொண்ணுங்கனு சொல்றீங்க ஆனா எங்க இருக்காங்க னு தெரியாம இருக்கீங்க “என்று கேட்டாள்.

“இல்லம்மா ரெண்டு பேரும் கோவிச்சுட்டு சொல்லாம , கொள்ளாம ஊரை விட்டு வந்துட்டாங்க. இப்ப கூடச் சாமி கிட்ட அவங்களைப் பத்தின விபரம் தெரிஞ்சுக்கத் தான் வந்தோம்…  சீக்கிரம் சொல்லுமா நாங்கள் எங்க மகள்களைப் பார்க்காம தவிச்சுப் போயிருக்கோம் ” என்று இருவரும் கண்ணீர் உகுக்க , நர்த்தனா நெக்குருகி போனாள்.

“அழாதீங்க ப்ளீஸ் அவங்க ரெண்டு பேரும் என்னுடைய ஓரகத்தி வீட்டில் தான் இருந்தாங்க இப்ப ஒரு கல்யாணம் ஸ்ஸ்ஸ் ஆமா நாளைக்கு அனுவுக்கும் அந்த வீட்டில் இருந்த பையன் வேதாவுக்கும் கல்யாணம் னு சொல்லி என் வீட்டுக்காரர் சொன்னார்… ” என்றாள் வேகமாக

“அச்ச்சோ கல்யாணம் எங்கம்மா…?”  என்று பதற  விருதுநகரில் திருமணம் நடக்க இருப்பதைப் பற்றிக் கூறினாள்.

“ம்மா ! நீ எங்க கூட வந்து காட்டுறியா ! நான் உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்…  சாமி கிட்ட கூடக் கேட்டுக்க எங்களை நம்பு மா “என்று சொல்ல நர்த்தனா பணம் என்றதும் சம்மதித்து விட்டாள்.

முத்தரசனிடம் விஷயத்தைத் தெரிவிக்க, உடனடியாகச் செல்லும்படி அவரின் ஆட்களோடு இவர்களை அனுப்பி வைத்தார்.

நர்த்தனாவோ, ரமேஷிடத்தில் இனிக்க இனிக்கப் பேசி அவனையும் அழைத்துக் கொண்டு விருதுநகர் புறப்பட்டாள்.

அதிகாலை வேளையில்…  மணமக்கள் தயாராகிக் கொண்டிருக்க, முத்தரசனின்  ஆட்களோடு இளங்கோவன் , விஜயா தம்பதியர்  அனு தேவான்ஷியை பிடிப்பதற்காகச் சென்றனர்.  ஜீவனும் அதே நேரத்தில் விருதுநகர்  வந்தடைந்தான்.

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஒன்னு வந்தாலே சமாளிக்க முடியாது இதுலே ஒன்னா வராங்களே🤪🤪🤪🤪