Loading

  • பகுதி-19

     

    பரந்தாமன் தனது வீட்டிற்குச் சென்று இருந்தார் பணத்தை மாற்றி விட்ட மகிழ்ச்சியில்.

    முத்தரசன் சாமியார், பரந்தாமனை அழைத்தார் கைபேசியில்.

    பரந்தாமன் உற்சாகத்துடன், “சாமி பணம் கைமாற்றி வந்து விட்டது உங்களுக்கான தொகை வந்து சேரும் அடுத்த முறை இருநூறு கோடி கைமாற்றி விட்டால் உங்க ஆசிரமத்திற்கான இடமும் கோவில் நிலமாக ரெஜிஸ்டர் ஆகிடும் பேருக்கு தான் அப்படி ,ஆனால் அதில் முழு உரிமை உங்களுக்குத் தான்” என்று ஆசை காட்டினார்.

    முத்தரசன் வாயெல்லாம் பல்லாக ,”நீ பணத்தை அனுப்பி வை பரந்தாமா … !! நான் நல்லசிவத்தை அனுப்புறேன்…  முதலில் ஆசிரமத்திற்கான ரெஜிஸ்டர் முடியட்டும் அடுத்து இருநூறு கோடி கைமாற்றித் தர நடவடிக்கை எடுக்கிறேன்..  ” என்றார்.

    ‘காரியத்தில் கண்ணாய் இருக்கிறானே…!! இவனை விட்டாலும் வேறு வழி இல்லை ‘என்று எண்ணியபடி , “சரி” என்று சம்மதித்தார் பரந்தாமன்.

    முத்தரசனோ துரிதமாக , நல்லசிவத்தை அழைத்துப் பணத்தைப் பெற்று வரும்படி பணித்தார்.

    “சாமி என்னோடு வேறு யாரையும் வரச் சொல்றீங்களா… ?” சந்தேகத்திற்குக் கேட்டுக் கொண்டான் நல்லசிவம்.

    முத்தரசனோ “ஏன் துரைக்குத் தனியா போக முடியாதோ …? பணம் பத்திரமாக வந்து சேரணும் ” என்றார்.

    “சரிங்க சாமி” என்ற நல்லசிவம் கிளம்பி விட்டான் பரந்தாமன் வீட்டிற்கு.

    திருநீறும் , எலுமிச்சை பழமும் கொண்டு சென்றான் நல்லசிவம்.  கேள்வியே கேட்கப்படாமல் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவன், திரும்பி வருகையில் இருவர் பணப்பெட்டியை  காரில் வைத்தனர்.

    “சுவாமிஜி உங்களை இரண்டு நாட்கள் கழித்துப் பார்ப்பதாகக் கூறி இருக்கிறார் ” பரந்தாமனிடம் தகவல் கூறி விட்டு விடை பெற்றான் நல்லசிவம்.

    மொத்தமாகப் பத்துகோடி கைமாறி இருந்தது. 

    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    நர்த்தனா திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள் . தன் கணவனின் அதிரடி மாற்றத்தில்.

    “என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க…?, அவங்களுக்குத் தான் பேசத் தெரியுமா …? யாரு கிட்ட…!!, என் பொண்டாட்டியை தப்பா பேசினா விட்டுடுவேனா நானு , இனிமே இந்த வீட்டில் நானும் இருக்க மாட்டேன், என் குடும்பமும் இருக்காது” என்று சொல்லிக் கொண்டே உடைமைகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

    நர்த்தனாவோ அவனது முடிவை மாற்றும் நோக்கில் .,”ஏங்க முடிவே பண்ணிட்டிங்களா…?,   அவங்க தான் அறிவில்லாம நடந்துக்கிறாங்க நாமளும் குடும்பத்தைப் பிரிக்கிற மாதிரி நடந்துக்கனுமா…? , அதுவும் தம்பி இல்லாமல் கதிர் மாமாவும் , உங்க அப்பாவும் எப்படி இருப்பாங்க… ??”என்று நைச்சியமாகப் பேசினாள்.

    ரமேஷோ மனதிற்குள் மனதின் குரலை ஒலிக்க விட்டான் .மனதினுள் மட்டும் தான்.

    ‘என்னென்ன கதை சொல்றா பாரேன்… !!’ என்று

    “ஏங்க ஒரு தடவை யோசித்துப் பாருங்களேன்…!!” கெஞ்சிய மனைவியைக் கண்டு சிரிப்பாய் வந்தது ரமேஷிற்கு.

    “குடும்பத்தைப் பிரிக்கிறதா ஒரு நல்ல மருமகளுக்கு அழகு. நான் அந்த வேலையைச் செத்தாலும் செய்ய மாட்டேன்…”என்று மூக்கை விடைத்தபடி பேசினாள்.

    ரமேஷ் மனதில் கவுண்ட்டர் கொடுத்தான்.  ‘அதுக்குப் பிள்ளையார் சுழியில் இருந்து சுபம் வரை போட்டவளே நீதானடி கிராதகி’

    நர்த்தனாவோ “ச்சே ச்சே இப்படியும் ஒரு மருமகள் இருப்பாளா…!!,   அவளை எல்லாம் காறி துப்பி வெளியே அனுப்பனும் ” வசவு பாடினாள்.

    ரமேஷின் மைன்ட் வாய்ஸ் ‘அப்போ கண்ணாடியைப் பார்த்து நீயே உன் மூஞ்சியில் துப்பிக்க … ‘

    “என் மனசுல எல்லாம் இப்படி ஒரு நினைப்பு வந்தாலே தீக்குளிச்சிடுவேன் …!!” பொரிந்து தள்ளினாள் நர்த்தனா.

    ரமேஷ் உதட்டை சுளித்தபடி ‘முதல்ல குளிடி அப்புறம் தீக்குளிக்கலாம்… !!’நினைத்துக் கொண்டான்.

    நர்த்தனா கோபத்துடன் “ஏங்க நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன டான்னா மரம் மாதிரி நிற்கிறிங்க  ஜாமானை எல்லாம் இறக்குங்க… !!”என்றாள்.

    ரமேஷோ ‘பைத்தியம் கூட எல்லாம் நான் பேசுறதில்லை நானாடி மரம்,   நீ தான் டி ஒண்ணுக்கு உதவாத முள்ளுமரம் ‘என இறுதியாக ஒரு கவுண்ட்டரை மனதில் கொடுத்து விட்டு, நர்த்தனாவை தீர்க்கமாகப் பார்த்தவன்,” இதோப்பாரு நரு ,அவங்க என் மனைவியை அசிங்கபடுத்தி இருக்காங்க அதை ஒருக்காலும் என்னால் மன்னிக்க முடியாது நீ வேணுன்னா பெருந்தன்மையாக மன்னிக்கலாம் ஆனா நான்…”  என்று நிறுத்தியவன்,  முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு .,”மன்னிக்கவே மாட்டேன் …”என்றான்.

    நர்த்தனாவோ மனதில் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள்.

    ‘இந்த மனுசனுக்கு இப்போ ன்னு பார்த்தா சூடு சொரணை  வெக்கம் மானம் எல்லாம் வரணும்…  இவரை யாரு  திருந்த சொன்னது  …?ஐயோ ..!மொத்த சொத்தும் போயிடும் போலவே …!!’நர்த்தனா மனதில் குமுறிக் கொண்டிருக்கும் போதே, அவன் மொத்த பொருட்களையும் வண்டியில் ஏற்றி விட்டான்.

    தனது தந்தையிடம் சொல்ல ,அவரோ .,”நல்லபடியாகப் போயிட்டு வாப்பா …!!”என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.

    நர்த்தனாவோ பல்லைக் கடித்துக் கொண்டு ‘கெழவன் எப்போ எப்போனு காத்திருந்திருப்பான் போல ,நல்லபடியா போயிட்டு வரணுமாம்…  போயிட்டு எங்கே இருந்து வர்றது அதான் மொத்தமா துரத்தி விட்டுட்டாளே இனிமே எப்படி இந்தச் சொத்து நமக்குக் கிடைக்கும்.. கடவுளே ஏன் என்னை இப்படிச் சோதிக்கிற…?’ என அலுத்துக் கொண்டாள்.

    ரமேஷின் மகனோ,”  தாத்தா நானு  லீவு விட்டா வரேன்”  என்று செல்லங்கொஞ்சி விட்டு கதிரிடமும் , மேகாவிடமும் போய் நின்றான்.

    “பெரியம்மா, நான் லீவ் விடும் போது வருவேன். நீங்க தான் எனக்குப் பால் பாயசம் செஞ்சு தரணும்” என்றான்.

    மேகா சிரித்துக் கொண்டே,” அதுக்கென்னடா செஞ்சு தரேன். நீ நல்லா படிக்கணும் சரியா…!!” என்று முத்தமிட்டு கீழே இறக்கி விட , நர்த்தனா மேகாவை முறைத்துக் கொண்டே மகனை தூக்கிச் சென்றாள்.

    கதிருக்குச் சங்கடமாக இருந்தது. 

    கதிர் “ப்ப்ச் மேகா அஸுக்குட்டியை நினைச்சா தான் கவலையா இருக்கு” என்று வேதனையுடன் பேசினார்.

    மணிமேகலையோ, “கொஞ்ச நாளைக்குத் தான் கதிர். அவள் சரியாக வேண்டும் என்ற எண்ணம் இல்லையா உங்களுக்கு ! அமைதியாக இருங்க” என்று விட்டு ரமேஷைப் பார்க்க, அவனோ,’ போய் வருகிறேன் ‘என்று தலையாட்டி விட்டுக் கிளம்பினான்.

    இருவரையும் அனுப்பியாயிற்று இதற்கு மேலும் அவளைக் கண்காணிப்பது தான் மேகாவின் முக்கிய வேலையாகத் தோன்றியது..

    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    வேதாந்த் ஜீவனின் முன்பு முறைத்துக் கொண்டு நின்றான்.

    ஜீவனோ அவனது முறைப்பைக் கண்டு கொள்ளாமல், “என்னை ஏன் டா சைட் அடிச்சுட்டு நிற்கிற…?  விஷயம் என்னனு சொல்லு…!!  ” என்றான் மடிக்கணினியில் இருந்து கண்ணை அகற்றாமல்.

    வேதா முறைத்துக் கொண்டே “ப்ப்ச் கேம் விளையாடுறதை நிறுத்திட்டு ,நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு …?” என்றான்.

    ஜீவன் நக்கல் தொனியில் “நீ இன்னும் கேட்கவே இல்லையே மச்சி …?”

    “நடிக்காத டா இப்போ எதுக்கு எனக்குக் கல்யாணம்…??” 

    ஜீவன் கண்களைச் சுருக்கி பார்த்தபடியே, “அப்போ எப்ப பண்ணிப்ப…??” என்று கேட்டான்.

    வேதாவோ, “அதையே நானும் கேட்கலாம் .இவர் மட்டும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாராம் நான் மட்டும் பண்ணிக்கணுமாம்… ” என்றான் அதே நக்கல் நிறைந்த குரலில்

    “உன்னை மட்டும்  கல்யாணம் பண்ணிக்கச் சொல்வேனா, அனுவோட சேர்ந்து பண்ணிக்கடா , இருமனம் இணைந்தால் தான் அது திருமணம் இல்லாட்டி அது கல்யாணம் கிடையாது…”திருமணப் போஸ்டரில் வசனமெல்லாம் கூறிக் கொண்டிருந்தான் ஜீவன்.

    “ப்ப்ச் கலாய்கிறதா நினைப்பா… ? , இப்போ இவ்வளவு அவசரமா கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டு எதுக்கு மறுபடியும் ஸ்டேட்ஸ் அனுப்புற… ” நண்பனின் மனதை படித்திடும் ஆர்வம் வேதாவிற்கு.

    ஜீவன் அமைதியாக, “அனுவோட உயிருக்கு ஆபத்து இருக்கு…  அவளையும் ,தேவாவையும் காப்பாத்தணும், அவங்க பேரண்ட்ஸ் கண்டுபிடித்தால் அவங்க உயிருக்கு ஆபத்து , அதனால் தான் எனக்கு அனுவைப் பிடிச்சிருக்கு . நீ வாக்கு கொடுத்திருக்க…!!, நான் பார்க்கிற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அதனால சத்தியத்தைக் காப்பாத்து” என்றான்.

    வேதா மூக்கை விடைத்தபடி, “இப்படி மடக்குறதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. அவ என்னைக் கண்டாலே வம்பு செய்யத் தான் பார்ப்பா இதுல வாழ்க்கை முழுவதும் அவளா டா !!”சலித்துக் கொண்டான்.

    “டாம் அண்டு ஜெர்ரி கூடத் தான் சண்டை போட்டுட்டே இருக்கு ஆனால் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிஞ்சதே இல்லையே …!!” சிறப்பாய் விளக்கினான் ஜீவன்.

    வேதாவிற்கு அனாயசமாக இருந்தது மெதுவாக “நல்ல விளக்கம் ஆனால் என்னால் தான் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவ இதுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டா வீணா ஆசையை வளர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை” என்று தீர்க்கமாகக் கூறி விட்டான்.

    ஜீவனோ வேதாவை கூர்ந்து பார்த்து விட்டு,”அப்போ உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அப்படித் தானே…?” என்றான்.

    வேதா தடுமாற்றமாக,” அது அது…  நீ என்னைப் போட்டு வாங்காத டா ..!!”என்றவன் நில்லாமல் ஓடி விட்டான்.

    ஜீவன் சிரித்தபடியே “ஆசை இருக்கு ஆனா காட்டிக்க மாட்ட …!!”என்றபடி தன் வேலையைக் கவனித்தான் .

    இங்கே அனுவிடமும் தேவான்ஷி திருமணம் பற்றித் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    அனுவோ ,”அக்கா உனக்கு இந்த மேரேஜ் ல சம்மதம் தானே..!! அப்போ எனக்கும் ஓகே. இதில் பெருசா பேச எதுவும் கிடையாது, அப்பா அம்மா பார்த்திருந்தால் என்ன சொல்வேனோ அதைத் தான் உன்னிடமும் சொல்கிறேன் போதுமா …!!”என்று ஒரே முடிவாகக் கூறி விட்டாள்.

    “அனு இருந்தாலும் நீ யோசி உனக்கு நிஜமாகவே வேதா அண்ணாவை பிடிச்சிருக்கா…  அப்படிப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லு. எனக்காகச் சொல்ல வேண்டாம், ஏன்னா நாளைக்கு வாழப் போறது நீங்க ரெண்டு பேரும் தான் நானோ  ஜீவனோ கிடையாது” என்று சொல்ல

    அனு சிரித்தபடியே ,”அக்கா நமக்கென்று ஒரு முடிவு என்னைக்காவது இருந்திருக்கா…?அம்மா, அப்பா என்ன சொல்றாங்களோ அதைத் தான் கேட்டு நடந்திருக்கோம்…!! அவங்களும் இதுவரை நம்ம விருப்பத்திற்கு மாறாக ஏதாவது செஞ்சு இருக்காங்களா…!! சொல்லு” என்றாள்.

    “அது தான் அவங்க சொன்னா உயிரையும் விட்டுடுவோம் என்று நினைச்சுட்டாங்க போலிருக்கு…”வேதனையுடன் பேசினாள் தேவான்ஷி.

    அவளின் வேதனையைத் தாங்காமல் “அக்கா அப்பா அம்மாவுக்காக உயிரையும் விடலாம், நிச்சயம் இது அவங்க கொடுத்த உயிர்  அவங்களுக்காகத் தரலாம் நம்ம உயிரைக் கொடுத்து அவங்களைக் காப்பாற்ற முடியும் என்றால் செய்து இருப்போம்…  ஆனால் அவங்களுக்காக அதைக் கேட்கவில்லையே எவனோ ஒருத்தன் மந்திரவாதி. அந்த ஏமாத்துக்காரனுக்காகவும் , அவங்களுடைய மூடநம்பிக்கை பலிக்கவும் தானே நம்ம உயிரை நம்ம அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்ள நினைச்சாங்க, அது தான் அக்கா தாங்க முடியவில்லை என்னால்” என்று குமுறினாள் அனுகீர்த்திகா.

    தேவான்ஷியின் விழிகள் கலங்கி இருந்தது.  கைகள் நடுங்கியது அன்றைய நிகழ்வை நினைத்து. 

    அரைமயக்க நிலையில் இருந்தவளை, ஒற்றைச் சிவப்பு துணியை மட்டும் கட்டி விட்டு நெற்றி நிறையக் குங்குமமும் தலை நிறைய மல்லிகையும் சூடி அந்தப் பலிபீடத்தில் படுத்திருந்த நிலையும் அறைகுறையாக மனக்கண்ணில் தோன்றியது . 

    வியர்த்து விறுவிறுத்து நின்றவளை நிகழ்வுலகிற்குக் கொண்டு வந்தாள் அனு.

    “அக்கா என்ன ஆச்சு…? அக்கா…!!” என்று உலுக்கிட

    “ஹ்ஹான் ஹான் ஒண்ணுமில்லை கீர்த்தி நீ … நீ.. ஷோரூம் கிளம்பு நான்  ஜீவா கிட்ட உன் மேரேஜுக்குச் சம்மதம் சொன்ன விஷயத்தைச் சொல்லிட்டு வரேன் சரியா நீ நீ…  கிளம்பு”  என்றவளோ நிற்க முடியாமல் அங்கிருந்து அகன்றாள்.

    தேவான்ஷி நேரே வந்தது ஜீவனின் அறைக்குள் தான்.

    தேவான்ஷி ஓடி வரவும், என்ன ஏதென்று விசாரிக்கும் முன்பே அவன் தோள் சாய்ந்து அழுதிருந்தாள் தேவா.

    தன்னவள் அழுவதைக் காண சகியாதவனோ,” தேவ் என்ன ஆச்சு ஏன் அழற தேவ்…  ?கேட்கிறேன் தானே…!! அனு எதுவும் சொல்லிட்டாளா  மேரேஜ் வேண்டாம் னு எதுவும்” என்று தவிப்பாய் கேட்டான்.

    கண்களை அழுந்த துடைத்தவள்,” இல்ல இல்ல ஜீவ் அது வந்து அவ ஓகே சொல்லிட்டா…!!” என்றதும்  ஜீவனின் முகம் மலர்ந்தது.

    “சூப்பர் தேவ் இதற்காகவா அழுத …?”என்று கேட்க , அவளோ தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.

    “தேவ் ஏன் மா…?, என்ன ஆச்சு…?,  ப்ப்ச் தேவ்…  ஆன்ஷி ப்ளீஸ் அழாதம்மா, ஏன் அழற…?”  தவித்துப் போனான் அவள் கண்ணீரை தாங்க இயலாதவன்.

    “ம்ம்ஹூம்… இல்ல நான் அழல…  ஜீவா” என்றவளோ, அது வந்து ஏன் ஜீவா அவங்களுக்கு நிஜமாகவே எங்களைப் பிடிக்கலையா…?, ஏன் கொல்ல நினைச்சாங்க..? நாங்க எந்தத் தவறும் செய்யவில்லையே , ஏன் எங்க மேல அவ்வளவு கோபம் அவங்களுக்கு…?, அதுவும் இவ்வளவு பாசமாக வளர்த்த பிறகு… கொல்ல நினைக்கிறது… ” என்றவளால் அதற்கு மேலும் பேச இயலவில்லை…  தன்னை நினைத்துக் கழிவிரக்கத்தில் கதறி அழுதாள்.

    “இதோ பாரு அவங்களுக்குத் தான் உங்களை மகள்களா பெற தகுதி இல்லை…  நீ விடு ப்ளீஸ் அழாதம்மா சரியா…  எதுவும் இல்லை  அவங்க போனா போகட்டும் நாங்க இருக்கோம் இல்லையா …” என்று சமாதானம் செய்தான் ஜீவன்.

    தேவான்ஷியை சமாதானம் செய்தவன் அவளை உறங்க வைத்து விட்டு வெளியே கிளம்பினான்.

    இங்கே அனுவும்,’  வேதாந்த் ஷோரூமில் இருப்பான் அவனிடம் திருமணம் பற்றிப் பேச வேண்டும் ‘என்று கிளம்பிட  ,ஜீவன் தயாராகி வந்ததும் அனுவிடம் “இப்போது வெளியே போக வேண்டாம்” என்று கூறி விட்டு ,வேதாவை அனுப்பி வைப்பதாகக் கூறி விட்டுக் கிளம்பினான்.

    அனு வேதாவின் வருகைக்காகக் காத்திருக்க  வீட்டின் அலைபேசி ஒலித்தது .

    “ஹலோ யாருங்க…?” 

    “இது வேதாந்த் வீடு தானே… ?, அவரோட மொபைல்ல ஹோம் என்று இந்த நம்பர் தான் இருந்தது… அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு இங்கே **** மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கார். சீக்கிரம் வாங்க “என்றதும் எதையும் யோசித்திடாமல் ,அனு கிளம்பி விட அவள் வெளியே வந்த அரை மணி நேரத்தில் மருத்துவ மனைக்கு ஓடி வர , அங்கே ஒருவன்  நின்றிருந்தான்.

    “இங்கே வேதாந்த்  ஆக்ஸிடன்ட் ஆகிட்டதா …” என்று வரவேற்பறையில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ,அவன் ஓடி வந்தான்.

    “மேடம் நான் தான் ஃபோன் பண்ணேன். நீங்க வாங்க அவர் பர்ஸ்ட் ஃப்ளோர் ல இருக்கார்… வாங்க சீக்கிரம்” என்று அவசரப்படுத்திட , அனு எதையும் யோசித்திடாமல் அவனோடு சென்றாள்.

    மாடிப்படியில் ஏறும் பொழுதே ஒரு அறையைக் காட்டியவன், உள்ளே செல்ல அனு அவன் பின்னால் சென்ற மறு நிமிடம் முகத்தில் மயக்க மருந்தை வைத்து அவளை மயக்கமடையச் செய்து விட்டு யாருக்கோ அழைத்தான்.

    “அண்ணா அவ மயங்கிட்டா… இப்போ எப்படி வெளியே கொண்டு வர்றது…?”

     

    “டேய் நீ அந்த ரூமில் இரு, இதோ வந்திடுவோம்…  ” என்று எதிர்முனையில் கட்டளையிட்டவனோ ,இணைப்பை துண்டித்து விட்டு விரைந்து செயல்பட்டான்.

    மயங்கி இருந்த அனுவை கட்டிலில் கிடத்தி விட்டு,  அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் அவன்.

    திடுமென அங்கே முகமூடி அணிந்த உருவமொன்று ,அலைந்து கொண்டிருந்தவனை, தாக்கி விட்டு அனுவைத் தூக்கி சென்றது.

    அனுகீர்த்திகா கண்விழிக்கும் போது இருள் சூழ்ந்த அறையே அவளை வரவேற்றது.

     

    …. தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. யார் அந்த மர்ம நபர்😱😱😦😦 வேதா தான் காப்பாத்திருப்பானோ

    2. அவசரகுடுக்கை அனு…யார்க்கிட்டையாவது சொல்லிய்டு கெளம்பி இருக்கலாம்ல. இப்போ பாரு யாரோ ஒரு கம்முனாட்டி கடத்திட்டான். ஆமா கடத்தகனவன அட்டாக் பண்ணிட்டு அனுவ தூக்கிட்டு போனது வேதா தானா?

      1. Author

        சொல்லி இருக்கலாம் அவ தான் அவசரகுடுக்கை ஆச்சே

    3. யார் அந்த முகமூடி போட்ட உருவம் வேதாந்த்தா?

      1. Author

        சீக்கிரம் சொல்லிடுறேன் மா நன்றி