2,512 views

மறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது ஜீவாவுக்கும் கயலுக்கும்.

மன்னவன் நெஞ்சில் துயில் கொண்டிருந்த மங்கையவள், லேசாக கண் விழிக்க, வெகு அருகில் ஜீவாவின் முகத்தைக் கண்டதில், முந்தைய இரவு நினைவு வர, கன்னம் சிவந்து “சரியான வில்லன்” என்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு, எழும்பப் போனாள்.

ஆனால் ஜீவா பிடித்து இழுத்ததில், மீண்டும் அவன் மேலேயே விழுந்து விட, “யாருடி வில்லன்… நான் எவ்ளோ சாஃப்ட் ஆ…” என்று ஆரம்பிக்க, அவள் அவனின் வாயை மூடி “காலங்காத்தால என்ன பேசுறீங்க ஜீவா? முதல்ல என்னை விடுங்க. மணி 9 ஆகுது.” என்று அவனிடம் இருந்து விடுபட முயல, அவன் அவளை இடும்புப் பிடியாய் பிடித்து, அவளை ரசித்தான்.

ஜீவாவின் பார்வையில் வெட்கியவள், “ஜீவா விடுங்க” என்று வெளிவராத குரலில் கூற,

அவன் “நான் வில்லனா” என்று மீண்டும் கேட்டான்.

கயல் சிறு சிரிப்புடன், “ம்ம் எனக்கு எப்போவுமே நீங்க வில்லன் தான்” என கூற,

“அடிங்க” என்று அவள் மேல் படர்ந்தவன், “வில்லன் என்ன பண்ணுவான்னு காட்டவாடி” என்று மிரட்டி அவளிடம் வில்லத்தனத்தை காட்ட, அவனிடம் இருந்து அதோ இதோவென தப்பித்து வெளியில் வர, மணி 12 ஐ கடந்திருந்தது.

இதில், ஹாலிலேயே கார்த்தியும், அஸ்வினும் வேறு அமர்ந்திருக்க, அவளுக்குத் தான் வெட்கமாக போய் விட்டது.

அவளை பார்த்த கார்த்தி, “கயல், முதல்ல போய் சாப்பிடு ரொம்ப நேரம் ஆச்சு…” என்று சாதாரணமாய் பேச, அவளும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில், கீழே வந்த ஜீவா, கயலைத் தேட, அஸ்வின் “அண்ணா அண்ணி கிட்சன்ல” என்று நக்கலாக கூற, அவன் எனக்கு தெரியும் என சொல்லி விட்டு, அடுக்களைக்கு சென்று அவளிடம் குறும்பு செய்ய, அவள் தான் தவித்துப் போனாள்.

இப்படியாக, அவர்களின் திருமண வாழ்க்கை, பல கசப்பிற்கு பிறகு தித்திப்பாய் நகர, ஜீவா கயலின் அன்பிற்கு அடிமையாகவே ஆகி விட்டான்.

இதற்கிடையில் அஸ்வினின் கல்யாண வேலையும் ஜோராக நடக்க, கார்த்தி எப்போதும் போல் பூவரசியிடம் பேச ஆரம்பித்தான். அவளும், மனதில் காதலை மறைத்துக் கொண்டு அவனிடம் பேச, இந்நிலையில் அஸ்வினின் திருமண நாளும் அழகாக விடிந்தது.

ஜீவா பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க, கயல் பட்டுப் புடவையில் மின்ன, அதில் ஜீவா கயல் பின்னால் தான் சுற்றி கொண்டிருந்தான்.

அவள் செல்லும் இடமெங்கும், “ஸ்வீட் ஹார்ட், ஸ்வீட் ஹார்ட்” என்று குட்டி போட்ட பூனையாக சுற்ற, மண்டபத்தில் இருவரின் ஜோடி பொருத்தத்தை பற்றித் தான், அனைவரும் பேசினர்.

அதில் கடுப்பான அஸ்வின், கார்த்தியிடம் “டேய் இன்னைக்கு நான் மாப்பிள்ளையா இல்லை இவரு மாப்பிள்ளையா. நான் கூட இவ்ளோ ரொமான்ஸ் பண்ணல” என்று கதற, அஞ்சலி “ஆமா நீ பண்ணி கிழிச்ச” என்று முறைத்தாள்.

அதில் கார்த்தி, “சே கிரேட் இன்சல்ட்” என நகைக்க, “உனக்கு கல்யாணம் ஆகும்ல அப்போ பார்த்துக்கறேன் உன்னை…” என்று சபதம் செய்தான்.

அதில், அவன் பூவரசியைப் பார்க்க, அவளும் சரியாக அவனை தான் பார்த்தாள்.

இருவரும் விழிகளால் ஒருவரை ஒருவர் தீண்ட, கார்த்தி சட்டென்று பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டான்.

மதியம் சாப்பிடும் போதும், அஸ்வின் அஞ்சலிக்கு ஊட்டும் முன்பு, ஜீவா கயலுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தான்.

அஸ்வின் தான் கடுப்பாகி, “போங்கடா எனக்கு கல்யாணமே வேணாம். நான் கோபமா கிளம்புறேன்” என்று எழும்ப அவர்கள் இருவரும் அவனை கண்டுகொள்ளவே இல்லை.

அஞ்சலி, “உனக்கு ஏண்டா பொறாமை… நீயும் ஸ்கோர் பண்ணு உன்னை யாரு வேணாம்னு சொன்னா…” என்று கிண்டலடிக்க,

அவன் “ஸ்கோர் பண்ணனுமா” என்று அங்கிருந்த ஜிலேபியை எடுத்து அவள் வாயில் திணித்தான்.

அதில் அவள் தலையில் அடித்து “ரொமான்டிக் – ஆ குடுடான்னா… வாயில அடைச்சு கொலை பண்ண பார்க்குற…” என்று முறைக்க, அவன் அழகாய் சிரித்து விட்டு, அவள் இதழில் ஒட்டி இருந்த ஜிலேபியை, தன் விரலில் எடுத்து சுவை பார்க்க, அவள் சிவந்து விட்டாள்.

கிண்டலும், கேலியும், ரொமான்ஸுமாக இவர்களின் திருமணமும் நன்முறையில் முடிய, இரு ஜோடிகளும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். அஸ்வினின் திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே, கார்த்தி, கோயம்பத்தூரில் இருக்கும் ஜீவாவின் அலுவலகத்தை அவன் பார்த்து கொள்வதாக சொல்லி, அங்கு சென்று விட்டான் ஜீவா மறுத்தும்.

பூவரசிதான் அவன் பிரிவில் வாடி விட்டாள்.

இருந்தும், அவன் செல்லும் போது “எனக்கு குருதட்சணை தரேன்னு சொல்லிருக்க. நீ தான் காலேஜ் டப்பாரா இருக்கணும்” என்று கண்டிப்பாய் கூறிவிட்டு தான் சென்றான்.

என்றுமே கையில் கிடைக்காத கானலான காதல் தன்னுடையது என நினைத்தவள், அவனின் நினைவுகளுடனே வாழத் தொடங்கி விட்டாள். அவ்வப்பொழுது அவன் ஊருக்கு வந்தாலும், அந்த நினைவுகளையும் பொக்கிஷமாய் மனதில் சேமித்தவள், இனி வாழும் காலம் முழுதும் இந்த நினைவு மட்டுமே நம் உயிர் மூச்சு என உணர்ந்து கொண்டாள்.

4 வருடங்களுக்கு பிறகு..

இதோ அதோவென, பூவரசியும் படிப்பை முடித்து, இப்போது ஆசிரியை ஆகி விட்டாள். கல்லூரியின் டாப்பரும் அவளே.

இதோ இன்னும் சற்று நேரத்தில், அவள் அவளின் காட்டிற்கே செல்லப் போகிறாள் வெறும் பூவரசியாய் அல்ல, அந்த காட்டில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் குருவாக.

அவர்களுக்கு உலக நடப்பைப் புரியவைத்து, அவர்களை உயர்த்தும் ஒரு சாவியாக. பல வருடம் கழித்து தன் பிறந்த இடத்திற்கு செல்லப் போகிறாள்.

ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்று தன்னை வழியனுப்ப கார்த்தி வருவானா என்று ஆயாசமாக இருந்தது. அவனை பார்த்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது.

நான்கு வருடமாக, அவன் பேயாய் உழைத்ததில், ஜீவாவின் கம்பெனி கோயம்பத்தூரில் மட்டும் இல்லாது, பல ஊர்களில் கிளைகளாக விரிந்திருந்தது.. ஜீவாவுக்கும் கார்த்தியின் இந்த வளர்ச்சி பெரும் சந்தோசத்தைக் கொடுத்தது.

பூவரசி யோசனையில் நின்றிருக்க, திடீரென முகத்தில் யாரோ தண்ணீர் அடிப்பது போல் இருந்தது.

அதில் திடுக்கிட்டு அருகில் பார்த்தவள், அங்கு நிற்பவனை கண்டு சிறு சிரிப்புடன்,

“ஓய் எதுக்குடா தண்ணியை ஊத்துன” என்று மிரட்டலாக கேட்க, ஜீவா – கயலின் மூன்று வயது நிரம்பிய அரும்பெரும் செல்வன் உதய் கையில் வாட்டர் கன்னுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் சித்தி. நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க…” என்று புருவத்தை தூக்க,

அவள் அதில் சிரித்து “அச்சோ என்னை கூப்பிட்டீங்களா சாரி டா தங்கம். எதுக்கு கூப்டீங்க…” என்று கேட்டாள் கொஞ்சலாக.

“அப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு பா பா” என்று இழுத்துக் கொண்டு செல்ல, ஹாலில் இருந்த கயல், “பூவரசி எல்லாம் எடுத்து வச்சுட்டியா…” என்று கேட்க, அவள் “ம்ம் வச்சுட்டேன்க்கா…” என்று தலையாட்டினாள்.

ஜீவா, “இப்போவே கிளம்பிடலாம் இல்லைன்னா இருட்டிடும்” என்க, அஸ்வின் கையில் அவனின் இரண்டு வயது பெண் நிரோஷாவை தூக்கி கொண்டு, “அண்ணா… கார்த்தி வரலையா” என்று கேட்க, பூவரசி ஆர்வமாக பார்த்தாள்.

“இல்லைடா அவனுக்கு ஏதோ வேலை இருக்காம் அதான் வரல” என்று விட, அவள் முகம் வாடிவிட்டது.

கயல், உதய்க்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்து, “குட் பாயா இருக்கணும். அப்பாவை விட்டுட்டு எங்கயும் ஓடக் கூடாது” என்று எச்சரிக்க,

அவன் “மா ஃபாரஸ்ட்ல சிங்கம் புலிலாம் இருக்குமா?” எனக் கேட்டான் கண்ணை உருட்டி.

“ம்ம் ஆமா இருக்கும் நீ போனா உன்னை கடிச்சு வச்சுரும்” என்று கயல் மிரட்ட,

“நான் அதை கடிச்சு வச்சுருவேன் மா. இல்லைன்னா அப்பாகிட்ட சொல்லி அதை வெட்டி கொழம்பு வச்சு சாப்புட்ருவேன்” என்க, அவள் அவனை முறைத்து, “எப்போ பாரு, அப்பா மாதிரி வயலெண்டா தான் பேசுறது…” என்று தலையில் தட்டினாள் சிரிப்புடன்.

ஜீவா, பின்னால் கை கட்டி நின்று “என் பையனாச்சே” என்று சிரிப்பாய் சொல்ல, அவள் தன் ஐந்து மாத வயிற்றுடன், “ரொம்ப தான் பெருமை…” என்று சலித்துக் கொண்டு,

“பார்த்து போயிட்டு சீக்கிரம் வாங்க…” என்றதும், ஜீவா பேச வரும் முன், உதய் “மா, நாங்க கேர்ஃபுல் ஆ இருப்போம், நீயும் பேபியும் சமத்தா இருக்கணும்” என்று விட்டு,

அவள் வயிற்றில் கை வைத்து, “பேபி நீயும் அம்மாவை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது” என்று ஜீவா எப்போதும் சொல்லும் வசனத்தை கூறினான். ஜீவா எப்போதும், வெளியில் செல்லும் போது இதனை சொல்லிவிட்டு தான் செல்வான்.

அதனை கவனித்துக் கொண்டே இருந்தவன், அவனை போலவே சொல்லவும் கயல், அவனை நெட்டி முறித்து முத்தம் கொடுத்து விட்டு, “இவன் உங்களை மாதிரியே பண்றான் ஜீவா” என்று சொல்ல அவன் பெருமையாய் சிரித்து கொண்டான்.

முதலில், அவளும் அவர்களுடன் பூவரசியை விடுவதற்கு காட்டிற்கு செல்வதாக தான் இருந்தது. ஆனால் அவளுக்கு பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவளை மட்டும் விட்டு விட்டு செல்வதாக ஏற்பாடானது. ஆனால் அஞ்சலியும், அக்காவிற்கு துணைக்கு நான் இருக்கிறேன் என்று விட, அவர்களை தவிர ஆண்கள் இருவரும் தன் குழந்தைகளுடன் அவளை அழைத்துச் சென்றனர்.

அந்த காட்டுப்பகுதியே கோலாகலமாக இருந்தது. இருக்காதா பின்னே? பல வருடம் கழித்து படித்து முடித்து அவர்களின் பெண் அங்கு வருகிறாள். பூவரசியின் தாயே அவள் மேல் இருக்கும் கோபத்தை மறந்து, அவளுக்காக அவளுக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து வைத்திருந்தார்.

அவளின் மாமன் சிக்கண்ணன், இவளுக்காக காத்திருப்பது வீண் என நினைத்து, அந்த காட்டில் இருக்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.

பூவரசி காட்டிற்குள் செல்லவும் மிகவும் பரவசம் ஆகி விட்டாள். பறந்து சென்ற பறவை மீண்டும் தன் கூட்டிற்கு வந்தது போன்றதொரு திருப்தி அவளுக்கு.

மேலும், அந்த காடே நிறைய மாற்றங்கள் கண்டது போல் இருந்தது. வெறும் மண் குடில்கள் எல்லாம் ஓட்டு வீடாகி, அந்த பகுதிக்கு வருவதற்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி என அனைத்தும் இருப்பதை கண்டவள், அதிசயித்து போனாள்.. இதில், அங்கு லேண்ட்லைன் போன் வசதியும் இருந்தது.

எப்படி இதெல்லாம் என்று யோசித்து கொண்டு aval இடத்திற்கு சென்று சேர்ந்தவளை அவளின் தாய் தந்தையர் பெருமையாய் அணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. பின் அங்கிருந்த அனைவரிடமும் கட்டிப்பிடித்து பேசியவளை, உதய் பிடித்து இழுத்து, “எதுக்கு சித்தி எல்லாரும் உன்னை கட்டிப்பிடிக்கிறாங்க…” என்று கேட்க,

அவள், “அதுவா ரொம்ப நாள் கழிச்சு என்னை பார்க்குறாங்கல்ல அதான்” என்று அவனுக்கு விளக்கம் கொடுக்க அவனும் ஓ என்று அமைதி ஆகிவிட்டான்.

அஞ்சலியை “சித்தி” என அழைப்பவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே தன்னிச்சையாக பூவரசியையும் சித்தி என்றே அழைக்க பழகி இருந்தான்.

அது கார்த்தியின் ட்ரெயினிங் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ஒன்று.

அங்கு சென்றதற்கு பிறகு தான் தெரிந்தது, ஜீவா அந்த காட்டை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்திருப்பது. அதில் வியந்தவளை பெரிய சாமி, “தாயி… அந்த மலைப்பக்கம் போய் பாரேன் நீ இன்னும் சந்தோசப்படுவ.” என்று அனுப்ப, அவளும் புரியாமல் அங்கு செல்லப் போனாள்.

உதய், நானும் வருவேன் என்று அவள் கையைப் பிடித்து அங்கு செல்ல, அந்த இடத்தில் கட்டி இருந்த நடுநிலை பள்ளியை பார்த்து, அதிர்ந்து விட்டாள்.

எப்படி இங்க பள்ளிக்கூடம் வந்துச்சு… என்று குழம்பியவளை, “சித்தி, வா உள்ள போய் பார்க்கலாம்…” என்று இழுத்து கொண்டு போக, ஒன்றும் புரியாமல், ஒவ்வொரு வகுப்பறையையும் பார்த்து கொண்டே வந்தவள் ஒரு இடத்தில் சிலையாகி நின்று விட்டாள்.

அங்கு சாட்சாத் நம் கார்த்தியே தான், ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் “சித்தப்பா” என்று அவனிடம் ஓடிய உதய், அவன் மேல் ஏறிக்கொள்ள, பூவரசி நடப்பது எதுவுமே புரியாமல் திகைத்தாள்.

அவன் குறும்புடன் “என்ன காட்டுவாசி ஓவரா ஷாக் ஆகுற…” என்று சிரிப்புடன் கேட்க,

“அது… நீ எப்புடி இங்க… இங்க பள்ளிக்கூடம் எப்புடி” என்றாள் குழப்பமாக.

குறும்புடன் தலையை சரித்தவன், “என் காட்டுவாசிக்காக நான் கட்டுனது தான்” என்று அவளை காதலாய் பார்த்து சொல்ல, அவள் என்ன என்று அதிர்ந்தாள்.
.

கார்த்தி அவள் அருகில் வந்து, “ஹே காட்டுவாசி. போதும் நீ ஷாக் ஆனது. உன் படிப்பு முடியிறதுக்காக தான் நான் நாலு வருஷமா வெயிட்டிங். என்னை கட்டிக்கிறியா” என்று தலையை சாய்த்து கேட்க, அவளுக்கு நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை.

கண்ணெல்லாம் கலங்கி விட,”கா கார்த்தி…” என்று பேசமுடியாமல் திணற, அவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு,

“உன் மனசுல நான் இருக்கேன்னு எனக்கும் எப்போவோ தெரியும் அரசி. என் மனசுலயும் நீ மட்டும் தான் இருக்க.

ஆனால் ஏதோ வயசுக்கோளாறுல காதல் அது இதுன்னு சுத்திருக்கேன். அதுல நிறைய ஏமாற்றமும் அடைஞ்சுருக்கேன். பார்த்ததும் வர்றதுக்கு பேர் தான் காதலன்னு நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். உன்னையும் உன் கண்ணுல எனக்கான காதலையும் பார்த்ததும் தான் புரிஞ்சுது காதல்ன்னா என்னன்னு.

ஆனா அப்போவே என் காதலை சொல்லி உன் மனசை கலைக்க விரும்பல. உன் இலட்சியத்தை நீ அடைய என் காதல் தடையா இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதான் உன்னை தவிர்த்தேன். இந்த நாலு வருஷத்துல நான் ஒரு விஷயத்தை மட்டும் நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். நான் சாகுற வரை என் காதல் நீ மட்டும் தான்னு… லவ் யூ காட்டுவாசி” என்று அவன் காதலை அழகாய் எடுத்துரைக்க, அவனின் காதலை கண்டு, இவ்வளவு நாள் மனதில் வைத்திருந்த வலி எல்லாம் கண்ணீராய் வெளிவரக் முகத்தை மூடி கொண்டு அழுதாள் பூவரசி.

அவள் அழுததை கண்டதும், உதய் “சித்தப்பா நீயும் சித்தியை கட்டிப்பிடி. ரொம்ப நாள் கழிச்சு சித்தியை பார்த்தா கட்டிபிடிக்கணும். அதான் சித்தி அழுவுது” என்று பெரியமனிதன் போல் விளக்கம் கொடுக்க, பூவரசி லேசாக புன்னகைத்து விட்டாள்.

கார்த்தியோ “அதுக்கென்ன கட்டிப்பிடிச்சு சமாதானம் படுத்திட்டா போச்சு…” என்று உதயை இறக்கி விட்டு அவளை நெருங்க,

பூவரசி, “யோவ் என் பக்கத்துல வந்த உன்னை அடிச்சு பிச்சுருவேன்” என்று பொய்யாய் மிரட்ட, அவன் மேலும் நெருங்கி, “எங்க அடிடி பார்க்கலாம்” என்று இடையை பிடித்து இழுக்க அதில் அவள் தான் அவனிடம் முழுதாக சரணடைந்தாள்.

அவள் காதினுள் “சாரி காட்டுவாசி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நான் இவ்ளோ நாள் இப்படி பண்ணல…” என்று பேச வர, அவனை தடுத்தவள், எதுவும் பேசாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். ஒரு அணைப்பிலேயே அவளின் காதலை நிறைவாய் கொடுத்தவளை இறுக்கி அணைத்தவன் முத்த மழை பொழிந்தான்.

கார்த்தியை பிடித்து இழுத்த உதய், “கட்டி மட்டும் தான் பிடிக்கணும். கிஸ் பண்ணக்கூடாது இட்ஸ் பேட் ஹேபிட்.” என்று மிரட்ட,

அவன் “டேய் நீ ரொம்ப பேசுறடா” என்று முறைக்க, அதில் பூவரசி அவனிடம் இருந்து தப்பித்து வெளியில் ஓடி விட்டாள். அங்கோ, அவர்களின் திருமணத்தை பற்றி தான், ஜீவா அவள் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தான். பூவரசி கார்த்தியை காதலிப்பது கயலுக்கு எப்போதோ தெரியும். அவள் பார்வையை வைத்தே உணர்ந்தே தான் இருந்தாள்.

ஆனால் கார்த்தி என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் அமைதி காத்தவள், அவன் இவளுக்காக காட்டில் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பிக்கையில் முடிவே செய்து விட்டாள்.

அதன் பிறகு அவனை அழைத்து கேட்கையில் அவனும் உண்மையை ஒப்புக்கொண்டான். ஜீவாவுக்கும் இதில் முழு சம்மதமே… அவள் படிப்பு முடிவதற்காக தான் அனைவரும் அமைதி காத்தனர்.

முதலில் யோசித்த, அந்த மலைவாழ்மக்கள், பிறகு மகிழ்வுடன் சம்மதித்து விட, அவர்களின் திருமணமும் அடுத்த ஒரு மாதத்தில் வெகு சிறப்பாக அரங்கேறியது.
அந்த பள்ளியின் வேலையும் முடிந்து விட, அங்கு ஆசிரியர்களை நியமித்து விட்டு,, பூவரசி வாரம் இரு முறை அந்த பள்ளிக்கு சென்று பார்த்து கொள்வதாகவும், கார்த்தியுடன் கோயம்பத்தூர் செல்வதாகவும் முடிவாகியது.

அவனின் திருமணத்திலும், ஜீவாவும் கயலுமே ஸ்கோர் செய்தனர். கயல் வயிற்றில் தன் இரண்டாம் கருமணி இருப்பதில், அவளுக்கு ஒரு மணி நேரம் ஒரு முறை ஜூஸ் கொடுக்க, சாப்பிட வைக்க என்று, அவள் வேலை செய்யும் போது அதனை தடுத்து, அவள் பின்னாலேயே ஜீவா சுற்றி கொண்டிருக்க, அப்போதும், அனைவரும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை தான் கண் குளிர பார்த்தனர்.

அதில் கடுப்பான கார்த்தி, அஸ்வினிடம் “அண்ணா நான் மாப்பிள்ளையா இல்ல அவரு மாப்பிள்ளையா?” என்று முறைக்க,

அவன் “ஹா ஹா… இப்படி தான எனக்கும் இருந்துருக்கும். என்னை கிண்டல் பண்ணுணீல நல்லா அனுபவி.” என்று விட்டு, அவன் அஞ்சலியின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்க,

அவன் “ஒவ்வொன்னு ஒவ்வொரு டிசைன்ல இருக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டான். பின், ஆறு பேரும் சேர்ந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துகொண்டனர்.

அனைத்து சடங்கும் முடிந்து மண்டபத்தில் இருந்து கிளம்ப போகையில் கயல் திருமண பொருட்கள் இருக்கும் அறையில் எதையோ எடுக்க போக, அவள் பின்னே சென்ற ஜீவா,

“ஸ்வீட் ஹார்ட்… என்ன வேணும்னு சொல்லு நான் எடுத்து தரேன். நீ ஏன் இப்படி மாடி ஏறி இறங்குற” என்று செல்லமாக அதட்ட,

அவள், “ஜீவா நீங்க ஏன் என் பின்னாடியே சுத்துறீங்க. எல்லாரும் கிண்டல் பண்றாங்க…” என சிணுங்கினாள்.

மெல்ல இதழ் விரித்தவன், “நீ தான் என்னை காந்தமா இழுத்து வச்சுருக்கியே ஸ்வீட் ஹார்ட். நீ எங்கபோனாலும், என் கால் தானாவே உன் பக்கத்துல வந்து நின்னுடுது” என்று அவளை ரசனையை பார்த்து சொல்ல, அவள், அவனை போலியாய் முறைத்து, வெளியில் செல்ல எத்தனித்தாள்.

ஜீவா அவளைத் தடுத்து, “ஸ்வீட் ஹார்ட்… இன்னைக்கு என்ன உன் லிப்ஸ் ரொம்ப ரெட் ஆ இருக்கு…” என்று அவளை நெருங்க,

“ஐயோ ஜீவா… யாரவது வந்துட போறாங்க போங்க” என்று பதற, அவன் அதனை கண்டுகொள்ளாமல் அவள் உதட்டையே பார்த்து, “இந்த லிட்டில் லிப்ஸ் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது ஸ்வீட் ஹார்ட்” என்றவன், அதற்கு தக்க தண்டனை கொடுத்து விட்டு, “எனக்கு?” என்று கண்ணை மூடி நின்றான்.

அவள் அவன் செயலில் சிவந்து, பின், “ப்ச் அதெல்லாம் வீட்டுக்கு போய் தரேன் இப்போ விடுங்க” என்று விலக அவன் விடாமல்,

“இப்ப நீ கொடுக்கல… நான் உன்னை கீழ தூக்கிட்டு போய் எல்லாரு முன்னாடியும் குடுப்பேன்…” என்று மிரட்ட, அவள் தான் மிரண்டாள்.

அவன் விடாப்பிடியாய் நிற்கவும், சிறு சிரிப்புடன் முத்தத்தை வழங்கியவளிடம், ” நான் சொன்னதை நீ பண்ணலைன்னா நானே உன்னை பண்ண வைப்பேன் ஸ்வீட் ஹார்ட்” என்று குறும்பாய் கூற, அதில் “வில்லன்” என்று முணுமுணுத்தவள் அவனை என்றும் தீராத நேசத்தோடு ரசித்தாள்.

சுபம் சுபம் சுபம்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
48
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்