Loading

தீரஜின் வீட்டில் இருந்து, மனமுடைந்து வெளியில் வந்த நிக்கோலஸிற்கு கண்ணீர் சுரந்தது. நண்பனின் நல்லதற்காக செய்தாலும், அவன் வாழ்க்கையில் அதிகப்படியாக நுழைந்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு உறுத்திட, வீட்டின் அருகிலேயே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விட்டான் தளர்ந்து.

தேவிகாவிடமும் நிக்கோலஸ் அனைத்தையும் பகிர்ந்திருந்தான், இப்போது தீரன் உயிருடன் இருக்கிறான் என்பது வரை. வளைகாப்பிலேயே தீரன் வந்ததையும், கோபத்துடன் சென்றதையும் நிக்கி பார்த்திருந்தான். அதனை தீரஜிடம் பகிரும் முன், அவன் அறைக்குள் சென்று பின் வராது போக, செய்வதறியாமல் குழம்பினான்.

பின், தீரனே மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவான். வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணியவனுக்கு, ஆண்ட்ரூஸின் நடவடிக்கை தான் பயத்தை கொடுத்தது. உடல்நிலை தேறி வந்ததும், அவன் கூலிப்படை ஆட்களிடம் தொடர்பு வைத்திருப்பதை அறிந்தவன், செய்தி கிடைத்ததும் உடனடியாக தீரஜைக் காண வந்திருந்தான். இப்போதோ நண்பனின் கோபம் எண்ணி வருத்தமே மிஞ்சியது.

தன் தோழியின் வாழ்வில் ஆபத்து சூழ்ந்திருப்பதில், தேவிகாவிற்கும் உறக்கம் வரவில்லை. ‘நிக்கி தீரஜிடம் எச்சரித்து இருப்பானா?’ என்ற எண்ணமே மூளைக்குள் உறவாட, மனம் கேளாமல் நிக்கிக்கு போன் செய்தாள். அவளது அழைப்பைக் கண்டாலும் எடுத்து பேச இயலவில்லை அவனுக்கு. தன் அழைப்பை எடுக்காததால் மிரண்டவள், மீண்டும் மீண்டும் அழைத்து தோற்று, பின் நேரில் சென்று பார்த்து விட எண்ணி, தீரஜின் வீட்டிற்கே புறப்பட்டாள்.

சில நிமிடங்களில் வண்டியில் அங்கு விரைந்தவள், மரத்தின் அடியில் வேதனை மண்டிய முகத்துடன் அமர்ந்திருந்தவனைக் கண்டவளுக்கு அதிர்ச்சியே.

“நிக்கி, ஏன் இப்படி உட்காந்துருக்க? அதுவும் புளியமரத்துக்கு அடியில…” என மிரண்டு மரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவனோ, “தீரா என்னை வீட்டு விட்டு போக சொல்லிட்டான்…” என்று பாவமாக நடந்ததை கூற, அதில் கனிந்தவள்,

“விடு நிக்கி. அவனோட பாய்ண்டும் கரெக்ட் தான. என்ன இருந்தாலும் சொந்த அண்ணனை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?” எனக் கூறினாலும், “இருந்தாலும், அவனுக்காக தீரஜ் இவ்ளோ மெனக்கெட வேண்டாம். சரி இதுக்காகவா இப்படி உட்காந்து இருக்க. சோகமா உட்காந்தது தான் உட்காந்த ஒரு அரச மரத்துக்கு அடில உட்கார கூடாது. ஞானமாவது கிடைச்சுருக்கும்.” என அவனை இயல்பாக்கும் பொருட்டு பேச்சை மாற்றினாள்.

அவளை முறைத்தவன், “நான் என்ன போதி தர்மரா…” என்றான் கடுப்பாக.

மேலும் அவள் பேச வரும் போதே, தீரஜிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது, “கிட்னாப் ஆண்ட்ரூஸ். சேவ் சவி” என.

அதனைக் கண்டதும் தான் அவனுக்கு சவிதாவின் நினைவே வர, ‘கடவுளே… இந்த கலவரத்துல அவளை எப்படி மறந்தேன்’ எனத் தன்னையே அடித்துக் கொண்டவனுக்கு, உள்ளே ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.

ஆண்ட்ரூஸை எப்படி கடத்துவது என தீவிரமாக சிந்திக்கும் போதே, அவனுக்கு வேலை வைக்காமல், தீரஜின் வீட்டை ஆராய்ந்து கொண்டிருந்தான் ஆண்ட்ரூஸ். அவன் இன்னும் தீரஜை தான் தீரனென நம்பிக் கொண்டிருக்கிறான். சஹஸ்ராவை அவனிடம் இருந்து பிரித்து விட எண்ணி, கூலிப்படை ஆட்கள் இருவரை கூடவே அழைத்து வந்திருந்தான். அவனைக் கண்டதுமே, இருவரும் மரத்தின் பின் ஒளிந்து கொள்ள, ஆண்டிரூஸ் வேகமாக மின் கம்பத்தின் மீது ஏறினான்.

“எதுக்கு இவன் குரங்கு மாதிரி இதுல ஏறிட்டு இருக்கான்…?” கிசுகிசுப்பாக தேவிகா வினவ,

“ம்ம் இந்த பைத்தியம் பவர் கட் பண்ண போகுதாம்.” என சலித்தவன், அவனுக்கு தெரிந்த காவலரிடமும் உதவி கேட்க, ஆண்ட்ரூஸ் வயர்களை கட் செய்ய எத்தனிக்கும் போதே, காவலர்கள் அங்கு வந்து, கூலிப்படை ஆட்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.

அதனைக் கண்டு திகைத்த ஆண்ட்ரூஸ், காவலர்கள் அங்கிருந்து அகன்றதும், வேகமாக கீழே இறங்க, இறங்கிய ஜோரில் நிக்கோலஸ் அவனை அமுக்கி மடக்கி காரில் தள்ளினான்.

அதை திகிலுடன் பார்த்த தேவிகா தான், “என்னடா ஏதோ ஃபிகரை கடத்துற மாதிரி கடத்துற?” என நக்கலடிக்க, நிக்கி முறைத்ததில், “சரி சரி… தீரன்க்கு இவன் பிகரு தான…” என்று தோளைக் குலுக்கினாள்.

“மூடிக்கிட்டு வரியா?” என்ற நிக்கி, அவனை தாக்க முயன்ற ஆண்ட்ரூஸை சமாளித்து, டேஷ்போர்டில் வைத்திருந்த பிளாஸ்டரை எடுத்து வாயை காட்டியதோடு கையையும் காலையும் கட்டினான்.

அதனை ‘பே’ வென பார்த்த தேவிகாவோ, “இவனை தூக்க போறத பத்தியே தீரஜ் இப்ப தான் சொன்னான்… ஆனா கடத்த போறது முன்னாடியே தெரிஞ்ச மாதிரி, நீ எப்படிடா பிளாஸ்டர்லாம் கொண்டு வந்த?” எனக் கன்னத்தில் கை வைத்தாள்.

அவளின் பாவனையில் எழுந்த புன்னகையை அடக்கிக்கொண்டு, “எங்களுக்கு இதுவும் ஒரு தொழில் தான் தேவ்.” எனக் கண் சிமிட்டி, அவளது பிபியை ஏற்றினான்.

எப்படியும் ஆண்ட்ரூஸ் அமைதியாக இருக்கமாட்டான் என்பதே தீரஜ் நிக்கியின் கணிப்பு. அவசரத்திற்கு தேவைப்படும் என்றே, கத்தி, கயறு, பிளாஸ்டர் என முதலுதவிப்பெட்டி போல, முதலுதவி கடத்தல் கருவிப் பெட்டி ஒன்றை வாங்கி காரில் போட்டிருந்தான் நிக்கோலஸ்.

“எதே? கடத்தல் கருவிப் பெட்டியா?” எனத் தலையை சொறிந்த தேவிகாவைக் கண்டு, அடைக்கப்பட்டிருந்த புன்னகை வெளிவந்தது அவனுக்கு.

சிறிதும் இரக்கமற்ற தமையனின் பேச்சைக் கேட்ட தீரஜ், அவனறியாமல், டேபிள் மீதிருந்த போனில் நிக்கிக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். தீரனின் பார்வையும் சஹஸ்ரா மீது இருந்ததில் அவனும் அவனை கவனிக்கவில்லை.

இப்போதோ, தீரஜ் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தீரன், “ஆண்ட்ரூ?… ஆண்ட்ரூவ என்ன பண்ணுன தீரா? நீ தேவையில்லாமல், அவனை இதுல இழுக்கிற” என்று பதறினான்.

“அதையே தான் நானும் சொல்றேன். சுமூகமா முடிய வேண்டிய விஷயத்தை நீ தான் காம்ப்ளிகேட் பண்ற ஆது. சஹி மேலயும் என் குழந்தை மேலயும் ஒரு துரும்பு பட்டா கூட, தெரியாம நடந்த ஆக்சிடெண்ட்ட தெரிஞ்சே பண்ணுவேன்…” என கோபத்தணலுடன் கூறிய தீரஜ், இழிவான நகையுடன், “சே ச்ச்சே! உன்னை ஆக்சிடென்ட் பண்ண மாட்டேன் ஆது. அந்த ஆண்ட்ரூஸ தான் பண்ணுவேன்.” என்றான் அசட்டையாக.

அதில் மேலும் அதிர்ந்தவனுக்கு செய்வதறியாத நிலை தான். தான் உயிருடன் இருப்பதை இன்னும் அவன் ஆண்ட்ரூஸிடம் தெரிவிக்கவில்லை.

“வேணாம் தீரா. ஏற்கனவே, நான் போட்டு வச்ச மொத்த திட்டத்தையும் கெடுத்து என்னை இத்தனை மாசமா ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருந்த. இப்ப இன்னும் என்னை கோபப்படுத்தாத. நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…” என எகிற,

“நீ மிருகமா மாறி ரொம்ப நாள் ஆகிடுச்சு ஆது.” என உணர்வற்று கூறிய தீரஜ்,

“ஃபைனாலா கேக்குறேன். உனக்கு ஆண்ட்ரூஸ் வேணுமா வேணாமா?” எனக் கையை கட்டிக்கொண்டு கேட்க, எரிச்சலின் உச்சத்தில் இருந்தவன், “ஆண்ட்ரூ எங்க?” என்றான்.

“முதல்ல சவி எங்கன்னு சொல்லு. அவள் பத்திரமா என் கையில வர்ற வரைக்கும். ஆண்ட்ரூஸ் ஆபத்து கட்டத்துல தான் இருப்பான்” என்றான் கண்டிப்பாக.

“ப்ச்… சவிதா அவள் அம்மா வீட்ல தான் இருக்கா. அவளை கடத்தி அவள் வீட்லயே தான் வச்சு இருக்கேன். வினோதினி நான் சொல்லாம அவளை உன்கூட அனுப்ப மாட்டா.” என்றதில் சஹஸ்ரா திகைத்தாள்.

“தீரா நம்ம உடனே போய் சவியை கூட்டிட்டு வந்துடலாம் வாங்க” என பரபரக்க தீரஜ் சகோதரனை சந்தேகமாகப் பார்த்தான்

“உண்மையா சவிதா அங்க தானே இருக்கா? நீ பொய் சொன்னன்னு தெரிஞ்சது. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கடுகடுத்தவன் சஹஸ்ரவுடன் அவளது வீட்டிற்கு விரைந்தான்.

விழா முடிந்து அங்கிருந்து நகரும்போதே வினோதினி தீரனை பார்த்து விட்டாள் அவனைப் பார்த்ததும் வியப்பும் அதே நேரம் சஹஸ்ராவை தீரஜிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற எண்ணமும் வலுப்பெற்றது.

அதில் அவளே தீரனிடம் சென்று பேசிட ஒன்றுக்கு இரண்டாக சஹஸ்ரவை பற்றி கூறி வைத்தாள்.

ஏற்கனவே கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தவனுக்கு அவள் தூபமிட, அது சரியாக வேலை செய்தது. பின் அவனே “எனக்கு சஹஸ்ரா வேணும்” என முடிவாக கூறிவிட்டு, “அதுக்கு ஒரே வழி சவிதா தான்” என்றான். அதில் வினோதினி தான் புரியாமல் அவனை நோக்க, “புரியல? சவிதாவுக்கு ஒண்ணுன்னா அவ கண்டிப்பா துடிப்பா.

அந்த துடிப்பு தான் எனக்கு வேணும்.” என்றதில், வினோதினி யோசனையில் ஆழ்ந்தாள்.

அவனே மேலும், “என்ன உன் தங்கச்சியை எப்படி கடத்துறதுன்னு யோசிக்கிறியா? ஓகே… அந்த அளவு சாமர்த்தியம் இருந்திருந்தா இந்நேரம் தீராவை உன் பக்கம் வரவச்சு இருப்ப. உனக்கு தான் அந்த அளவு மேல் மாடில எதுவும் இல்லையே…!” என ஏளனமாக பார்த்தவனின் பார்வை அவளது தன்மானத்தை சீண்டியது.

அதில் அவன் அடகு வைக்க கூறியது அவளது சொந்த தங்கையை என்பதை கூட அவளது மூளை ஏற்க மறுத்தது.

சவிதாவை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கலாம். அத வச்சு அவளை என்ன வேணா பண்ண வைக்கலாம்” என்று அவள் தீர்மானமாகக் கூற மேலும் அத்திட்டத்தை இருவரும் நிறைவேற்றினர். சவிதாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வரையில் கூட சவிதாவிற்கு தன்னை கடத்திக் கொண்டுதான் செல்கிறார்கள் என்று புரியவே இல்லை.

“அக்கா நான் சஹா அக்காட்ட சொல்லாமலேயே வந்துட்டேன். என்ன தேட போறாங்க. என் போனையும் வச்சுட்டு வந்துட்டேன். போன் குடுங்க நான் பேசி சொல்லிடுறேன்” என நச்சரிக்க வினோதினி கடுப்பானாள்.

“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா? நீ யார்கிட்டயும் பேச கூடாது.” என அதட்டிட, சுலோச்சனா தான், “விடு வினோ. ஒரு தடவை சொல்லிடட்டுமே” என எதார்த்தமாகக் கூறி, அவரது போனையே கொடுக்க, அதனை வெடுக்கென வாங்கிய வினோதினி, “அம்மா உங்களுக்கு புரியாது. நீங்க முதல்ல உள்ள போங்க.” என்றாள் எரிச்சலாக.

‘இவள் ஏன் வித்தியாசமா நடந்துக்குறா?’ என்ற எண்ணம் தோன்றினாலும், அதற்கு மேல் மகளை தவறாக நினைக்கவில்லை அந்த தாயுள்ளம்.

அதற்குள் திடுதிடுவென வீட்டிற்குள் புகுந்த சில ஆட்கள், சவிதாவை கைவசப்படுத்த, சவிதா திகைத்தாள். வினோதினியும் தான்!

“யாரு நீங்க?” என வினோதினி வினவும் போதே, “தீரன் சார் தான், இந்த பொண்ணை தூக்கி வேற இடத்துக்கு மாத்த சொன்னாங்க.” என ஒருவன் கூறிட, ‘இந்த பிளானை அவன் என்கிட்டே சொல்லவே இல்லையே!’ எனக் குழம்பினாள்.

எப்படியும் சவிதா இருக்கும் இடம் தெரிந்து, தீரஜ் அங்கு செல்வான் என அவன் அறிந்தது தான். அதனாலேயே, வினோதினியிடம் கூட, அவன் முழு திட்டத்தையும் கூறவில்லை.

சுலோச்சனாவோ புரியாமல், “என்ன சொல்றாங்க இவங்க. வினோ யாரு இவங்கல்லாம்?” எனக் கேட்டார்.

அவள் பதில் பேசாமல் விழிக்க, அதற்குள், சவிதாவை அவர்கள் நெருங்கி இருந்தனர். சவிதாவோ அவர்களை தட்டி விட்டு, அங்கிருந்து நகரப்பார்க்க, நொடி நேரத்தில், அவளது மூக்கில் மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்கப்பட, சுலோச்சனா மேலும் அதிர்ந்தார்.

“டேய் யாருடா நீங்கல்லாம் என் பொண்ணை என்னடா பண்றீங்க?” என தடுக்க சென்றவரை வினோதினி தடுத்தாள்.

“அம்மா… ஒன்னும் ஆகாது. அவள் சேஃப் – ஆ தான் இருப்பா…” என அசட்டையாக கூறியதில், திகைத்தவர் “என்ன சொல்ற?” என்றார் தடுமாற்றத்துடன்.

அதற்குள் சவிதாவை அவர்கள் தூக்கி சென்றிருக்க, வினோதினி சுலோச்சனாவின் கையை இறுக்கிப் பற்றி இருந்தாள்.

“விடு வினோ… யாரோ நாலு பொறுக்கி பசங்க உன் தங்கச்சியை தூக்கிட்டு போறாங்க. நீ வேடிக்க பார்த்துட்டு இருக்க” என்று வெடிக்க, அவள் கூலாக அவளது திட்டத்தைப் பற்றி கூறியதில், ஒரு கணம் சிலையாகி விட்டார்.

தீரஜும் சஹஸ்ராவும் அவளது வீட்டிற்கு செல்ல, அங்கு சவிதா இல்லாததைக் கண்டு திகைத்தனர். சஹஸ்ராவிற்கோ வினோதினி மீது தான் கட்டுக்கடங்காமல் கோபம் எழுந்தது.

“உனக்கு புத்தி பிசகி போச்சாக்கா. சொந்த தங்கச்சியவே கடத்திருக்க. அறிவில்ல. இப்போ சவி எங்க இருக்கா?” என அதட்டிட, அதற்கு தோளை குலுக்கியவள், “நீயே கண்டுபிடிச்சுக்கோ!” என்றாள் நக்கலாக.

தீரஜோ, நெற்றியை நீவிவிட்டு, “என்னை கொலைகாரன் ஆக்காத வினோதினி. இப்ப நீ உண்மையை சொல்லல. இங்கயே கொன்னு சமாதி கட்டிருவேன்” என்றான் அமைதி கலந்த எச்சரிக்கையுடன்.

அவளுக்கு பீதி கிளம்பினாலும், தீரனின் ஆதரவு இருக்கும் தைரியத்தில், “என்ன கொன்னு சமாதி கட்டிட்டா. சவியை எப்படி கண்டுபிடிப்ப ரேயன். உங்களுக்கு சவி வேணும்ன்னா, அவளை தீரன்கிட்ட ஒப்படைச்சுட்டு, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ!” என்றதில், இவளென்ன பிறவி என்று தான் தோன்றியது.

அவள் கூற்றில் தான் சுயநினைவு வந்த சுலோச்சனாவிற்கு தலையே சுற்றியது. தன் மகள் பிடிவாதக்காரி என்று தெரியும் தான். சில நாட்களுக்கு முன்பு, தீரஜ் தீரனில்லை என்று அறியும் சமயம், கோபத்தில் நடந்தது அனைத்தையும் சுலோச்சனாவிடம் உளறி இருந்தாள்.

அதிலேயே அவருக்கு திகைப்பு தான். சஹஸ்ரா, தன் தங்கைக்காக வாழ்க்கையையே அடமானம் வைத்திருக்கிறாளே என்ற எண்ணமே நாளடைவில் அவருக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி விட்டது உண்மை தான். பின், சஹஸ்ரா கருவுற்ற விஷயம் அறிந்து உள்ளுக்குள் அவருக்கு மகிழ்ச்சியே. வினோதினி தான், அதனை கேட்டு மேலும் எரிச்சலுற, அவரது மகிழ்ச்சியை உள்ளுக்குள் அமிழ்த்திக் கொண்டார்.

அவளே சவியையும் நன்றாக பார்த்துக் கொண்டதில், நிம்மதியுற்றவர், தாங்கள் இருவரும் அவளது வாழ்க்கைக்குள் நுழையாமல் இருப்பதே உசிதம் என தள்ளியே இருந்தார். அவளுக்கு வளைகாப்பு போட்டு வீட்டிற்கு அழைத்து வர ஆசை தான். ஆனால், வினோதினிக்கு பயந்து அந்த ஆசையையும் மூட்டை கட்டி விட்டவருக்கு, அவள் விழாவிற்கு அழைத்ததே அத்தனை சந்தோசமாக இருந்தது. அதிலும் தன்னுடன் வரவிருப்பதை எண்ணி மகிழ்ந்தவருக்கு, அத்தனை சீக்கிரம் தன் ஈகோவை விட்டு, அவளிடம் சாதாரணமாக பேச இயலவில்லை. அதனாலேயே, சவிதா வயது வந்ததை பற்றி கூறாததில் கோபித்துக் கொண்டார்.

ஆனால், வினோதினி இத்தகைய கீழ்த்தரமான செய்கையில் இறங்குவாள் என ஒருபோதும் எண்ணியதில்லை. தன் வளர்ப்பை எண்ணி கூனி குறுகியவர், வினோதினியை அறைந்திருந்தார்.

“என்னடி செஞ்சு வச்சுருக்க. உன்ன பெத்து வளர்த்த பாவத்துக்கு, என் மத்த ரெண்டு பொண்ணையும் பலிகொடுக்க போறியா? உன் சுயநலத்துக்காக சின்ன பொண்ணை நாலு தடி பசங்கள கடத்த விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என்று கோபத்தில் பொருமியவர்,

“சஹா… இப்ப தான் சவிய ஏதோ ஒரு கும்பல் தூக்கிட்டு போச்சு. பக்கத்துல தான் போயிருப்பாங்க.” என கூறி முடிக்கும் முன்னே, தீரஜ் வெளியில் விரைய, சஹஸ்ராவும் அவனுடன் வந்தாள்.

“நீ இங்கயே இரு!” என்று கட்டளையிட, அதனை மீறி, “ம்ம்ஹும். நானும் வரேன். எனக்கு சவிய பாக்கணும்.” எனக் கண்ணில் நீர் கோர்த்தது அவளுக்கு.

“ப்ச்… புருஞ்சுக்கோடி இந்த நிலைமைல…” எனத் தலையை அழுந்தக்கோதியவன் “வா!” என்று அழைத்து சென்றான்.

அவர்கள் சவிதாவை கண்டுபிடிக்கும் முன், ஆண்ட்ரூஸை காப்பாத்த அவனைத் தேடினான் தீரன். எப்படியும் நிக்கோலஸ் தான் உதவி இருப்பான் என உறுதியாக தெரிந்தாலும், எங்கு வைத்திருக்கிறான் என்று தான் தெரியவில்லை. அவன் தான், ஆண்ட்ரூஸை காரில் ஏற்றியதில் இருந்து, நிற்காமல் ஊரையே சுற்றிக் கொண்டிருந்தானே!

சவிதாவைத் தேடி அலைந்த தீரஜிற்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சஹஸ்ராவிற்கோ நேரம் செல்ல செல்ல அச்சம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

“பயமா இருக்கு தீரா. சவி கிடைச்சுடுவாள்ல?” அவள் கேவியபடி கேட்க,

அவனுக்கும் பதற்றம் தான் என்றாலும், “கண்டிப்பா கிடைச்சுடுவாடி. நீ எமோஷனல் ஆகாத.” என சமாதானம் செய்து, தேடலை தொடங்கிட அதன் பலனோ பூஜ்யம்.

தீரஜ் குறுஞ்செய்தியை யாரிடமோ பேசிக்கொண்டே வர, இறுதியில் தீரனிடமே கேட்டு விட எண்ணி, மீண்டும் வீட்டிற்கு வந்தான்.

வந்தவனை தீரன் இழிவான புன்னகையுடன் ஏறிட, அவனை முறைத்தவன், “உனக்கு பைத்தியம் தான் பிடிச்சு இருக்கு ஆது. அதான், ஆண்ட்ரூஸை கடத்தி இருக்கேன்னு சொல்லியும் உன் பழி வெறி அடங்கல. அப்போ, உனக்கு அவன் முக்கியம் இல்ல அப்படித்தான?” என எரிச்சல் மண்ட கேட்க, ஒரு நொடி முகம் இருண்டாலும்,

“எனக்கு இப்போ இவளை பழி வாங்குறதை விட வேற எதுவுமே முக்கியம் இல்ல. நீ அவனை என்ன செஞ்சாலும் எனக்கு கவலை இல்ல. அதுக்கு முன்னாடி சவிதாவோட பாடி தான் கைல வரும்.” எனக் கூறும் போதே, தீரஜ் அவனது மூக்கை உடைத்திருந்தான்.

அதிர்ந்திருந்த சஹஸ்ராவிற்கு செய்வதறியாத நிலை தான். அதில் தீரஜை தடுத்தவள், “எனக்கு சவிதான் முக்கியம் தீரா. அவன் என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். இதெல்லாம் நான் ஆரம்பிச்சு வச்சது தான. என்னால, அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா, அப்பறம் நானும் உயிரோட இருக்க மாட்டேன்.” எனத் தீவிரமாக கூறியவளை அழுத்தமாக முறைத்தவன், “உன் இஷ்டம்!” என தோளைக் குலுக்கி, அவளை அங்கேயே விட்டு விட்டு வெளியில் சென்று விட்டான்.

அப்படி செல்வான் என அவளும் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றமும் பயமும் நெஞ்சை நிறைக்க, அவளையே கொலைவெறியுடன் பார்த்திருந்த தீரனைக் கண்டு கிலி பிடித்தது.

வெளியில் வந்த தீரஜிற்கு மனையாள் மீது கடுங்கோபம் என்றாலும், மூளையும் கையும் சவியை கண்டறியும் வேலையை கவனத்துடன் செய்தது.

ஆண்டிரூஸ் தன்னை முக்கியமில்லை எனக் கூறிய தீரனின் கூற்றில் அதிர்ந்து கலங்கி இருந்தான். கான்ஃபெரன்ஸ் மூலம், ஆண்ட்ரூஸையும் கேட்க செய்திருந்தான் தீரஜ். அவ்வொரு வார்த்தையிலேயே உடைந்து போன ஆண்ட்ரூஸை கரைத்து, அவனுக்கு ஏதேனும் விவரம் தெரிந்திருக்குமா என ஆராய, அவனோ முதலில் அழுது, பின் கோபத்துடன், இருவருக்கும் பொதுவான நண்பன் ஒருவனைப் பிடித்து விசாரிக்க, அவர்கள் மூலம் சவிதாவை கடத்தியது தெரிந்து, அவர்கள் இருக்கும் இடத்தையும் அறிந்து, தீரஜ் அங்கு காவலர்களை அனுப்பி இருந்தான்.

நல்லவேளையாக, சவிதாவை அவர்களே ஒரு உடைந்த கட்டடத்தில் கட்டி வைத்திருக்க, அவளை காப்பாற்றி காலவர்களும் தீரஜ் வீட்டை நோக்கி வர, நிக்கியும் ஆண்ட்ரூஸை அழைத்துக் கொண்டு வந்தான்.

அதே நேரம், வினோதினியை உருட்டி மிரட்டி அவளையும் அழைத்துக் கொண்டு, சுலோச்சனாவும் அங்கு வர, நடுங்கி கொண்டிருந்த சஹஸ்ராவிற்கு உயிரே வந்தது போல இருந்தது. சவிதாவைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுத்தவளை அவளும் பயத்துடன் அணைத்துக் கொண்டாள்.

சவிதாவைக் கண்டதும் திகைத்த தீரன், ஆண்ட்ரூஸ் அவனை அடித்ததில் மேலும் அதிர்ந்தான்.

“உன்னை போய் இவ்ளோ நான் நினைச்சுட்டு இருந்தேன்ல என்னை சொல்லணும். ஆரம்பத்துல இருந்து எத்தனை தடவை சொன்னேன், இந்த பொண்ணை கல்யாணம் பண்ணாத, எல்லாத்தையும் விட்டுடுன்னு. கடைசில உன் பழி வெறி என்னையவே மறக்க வச்சுடுச்சுலடா. இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத.” என தேம்பி தேம்பி அழுதபடி சென்ற ஆண்ட்ரூஸை சமன்செய்ய இயலாமல் தடுமாறியவன், அந்த கோபத்தை நிக்கி மீது காட்டினான்.

“உனக்கு மனசாட்சியே இல்லையாடா? இவ்ளோ நாளா என்னை தலைமறைவா இருக்க வச்சதும் இல்லாமல், ஆண்ரூவையும் என்கிட்ட இருந்து பிரிச்சுட்டீல” என அவன் சட்டையை பிடித்தவன், ஓங்கி அறைய போக, தீரஜ் அவன் கையை பிடித்தான்.

“மனசாட்சியை பத்தி நீ பேசாத. என் பிரெண்டு மேல கை வைக்கிற உரிமை உனக்கு கிடையாது ஆது. நடந்ததுக்கும், நடக்குறதுக்கும் முழு முதல் காரணம் நீ தான். நீ மட்டும் தான். அவன்கிட்ட எப்படி என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியாதோ, அதே மாதிரி அவனையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது…!” என விரல் நீட்டி எச்சரித்தவனை, நிக்கி வியப்பாக பார்த்தான். கூடவே கண்களும் கலங்கிட, தேவிகா அவனது கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.

பின், தீரஜ் வினோதினியைப் பிடித்து இழுத்து, “உன்னை பத்தி அசிங்கமா பேசுன ஜந்து இங்க நிக்குது. உன் கோபத்தை இவள்கிட்ட காட்டு.” என அவளை முன்னே நிறுத்த, அவளோ விழி வெளியில் வந்து விழுந்து விடும் அளவு விழித்தாள்.

“நா… நான் தப்பா பேசல…” என அவள் சமாளிக்க எண்ண, தீரஜ் அவள் கையைப் பிடித்து முறுக்கியதில், “வலி தாங்க முடியாமல், ஐயோ அம்மா… ஆமா ஆமா அன்னைக்கு அப்பாகிட்ட பேசுனது நான் தான். உண்மையை சொன்னா, உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தான் நான் மறைச்சேன்.” என வலியில் கத்த கத்த உண்மையை ஒப்புக்கொண்டதும் தான் அவளை விட்டான். அதனை கேட்டு மேலும் திகைத்தான் தீரன்.

“இப்பவாவது உண்மை புருஞ்சுடுச்சா. இன்னொரு தடவை என் பொண்டாட்டியை பழி வாங்குறேன், பப்ஸ் வாங்குறேன்னு கிளம்பி வந்த… கண்டிப்பா உன்னை நல்லா நடமாட விடமாட்டேன் ஆது. ஜாக்கிரதை…!” விழியில் நெருப்பைக் கக்க எச்சரித்தவனை எச்சிலை விழுங்கியபடி பார்த்தான்.

‘அப்போ தப்பு என்மேல தானா… நான் தான் தப்பா புருஞ்சுக்கிட்டேனா?’ என உள்ளுக்குள் குழம்பியவனை கண்டுகொள்ளாமல், அவன் அறைக்குள் சென்று விட, சஹஸ்ரா சவிதாவை ஆசுவாசப்படுத்தி உறங்க வைத்து விட்டு, அவளுடனே இருந்தாள். சுலோச்சனாவும் தான்.

வினோதினியோ, பயத்தில் அப்போதே அவளது வீட்டிற்கு சென்று அடைந்து கொள்ள, தீரனும் வீட்டில் இல்லை.

பின், சுலோச்சனாவிடம் சவிதாவை ஒப்படைத்து விட்டு, அறைக்கு சென்ற சஹஸ்ரா உறங்கி கொண்டிருந்த தீரஜின் கேசத்தை கோதி விட்டபடி, அவனருகில் அவளும் உறங்கிப் போனாள். சில மணித் துளிகளில் நிகழ்ந்த நிகழ்வுகள் மழை அடித்து ஓய்ந்தது போலொரு அமைதியைக் கொடுத்தது.

கடந்த ஒரு வாரமாகவே, கணவனை பேச வைக்க போராடி விட்டாள். அவனோ இவளை திரும்பியும் பார்க்கவில்லை.

“தீரா… தேவ்க்கும் நிக்கி அண்ணாவுக்கும் அடுத்த மாசம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு…!” இதனை பற்றி பேசினாலாவது அவன் வாயை திறப்பான் என்றெண்ணிய அவளது எண்ணம் பொய்யாகி விட, பார்வையை மடிக்கணினியில் புதைத்தபடி, “ம்ம்” மட்டும் கொட்டினான்.

திருதிருவென விழித்தவள், அவனது கையைப் பிடித்து, வயிற்றில் வைத்து, “இங்க பாருங்களேன் பேபி மூவ் ஆகுது…” என்று ஆர்வமாகக் காட்ட, அதனை உணர்ந்தவன், தனது குழந்தைக்கு அழுந்த முத்தமொன்றை கொடுத்து விட்டு, “குட் பேபி!” எனத் தடவிக் கொடுத்து, அடுத்த வேலையை பார்க்க, அவளோ நொந்து போனாள்.

அவன் பேசாமல் இருக்கும் காரணம் அவளும் அறிந்தது தானே! ஆனால், அவனை எப்படி சமன் செய்வது என்று தான் புரியவில்லை. இதற்கிடையில், தீரனும் சகோதரனிடம் கூட கூறாமல் வெளிநாட்டிற்கு பறந்திருந்தான். குற்ற உணர்வு ஒரு காரணம் என்றாலும், ஆண்ட்ரூஸ் அங்கிருப்பதால், அவனையும் சமாதானம் செய்யும் நோக்கமே இப்பயணம்.

அவன் சென்றதும் நன்மைக்கே… என்று பெருமூச்சு விட்டவன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான். வந்ததும், தன்னவளை தேடி விழிகள் அலைபாய்ந்தாலும், நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் கோபத்தீ மட்டும் அணைந்தபாடில்லை.

‘எப்பவுமே இவளுக்கு நான் முக்கியம் கிடையாது…!’ என ஆத்திரத்துடன் பல்லைக்கடித்தவன், அவளைக் காணாமல் தேடி விட்டு பின் மொட்டை மாடிக்கு சென்றான்.

இரவு நேர தென்றல் காற்று, பாவையின் மேனியில் மோதி, அவனையும் வந்து தழுவ, மூச்சை இழுத்து விட்டவன், சத்தமில்லாமல் நகர தான் நினைத்தான். ஆனால், அவன் வந்ததுமே பார்த்து விட்ட சஹஸ்ரா, அவனை பின்னிருந்து அணைத்துக் கொள்ள, “ப்ச் விடுடி” என்றான் கடுப்பாக.

“என்மேல கோபம்ன்னா நாலு அடி கூட அடிங்க தீரா. ஆனா, பேசாம இருக்காதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு!” என்றாள் அவன் முதுகில் முகத்தை புதைத்து.

“உன்னை அடிக்க நான் யாரு. உனக்கு நானா முக்கியம். இல்லைல… என்மேல கொஞ்சமாவது நம்பிக்கை தான் இருக்கா. அதுவும் இல்ல. சவியை காப்பாத்துவேன்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாம, அவன் என்ன சொன்னாலும் கேக்குறேன்னு என்னை விட்டு குடுத்துட்டீல. நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, இப்ப உனக்கும் அவனுக்கும் என்னடி வித்தியாசம்? ரெண்டு பேருக்கும் நான் வெறும் ஆப்ஷன் தான் இல்ல?” எனக் கூறும் போதே கோபத்தையும் மீறி, குரல் கமறியது ஆடவனுக்கு.

அவன் பேச பேச, வருந்திய பெண்ணவள் தான் இறுக்கத்தை அதிகப்படுத்தினாள். அவனோ அவளது கையை எடுத்து விட முயல, அம்முயற்சியை தன்னிறுக்கத்தால் தடை செய்தாள்.

அதில் சலிப்படைந்தவன், “என்ன சமாதானம் பண்றேன்னு ஸ்ட்ரெய்ன் பண்ணாத சஹி.” என அதட்டிட, “சாரி” என்றாள் அழுகுரலில்.

அக்குரல் அவனை அசைத்தாலும், வீம்பாக நின்றான்.

“சாரி தீரா.” மீண்டும் மன்னிப்பு கேட்டவள், “எல்லாம் என்னோட முட்டாள்தனத்துனால தான நடந்துச்சு. அவன் கோபத்துல அவளை ஏதாச்சு செஞ்சுட்டா, அப்பறம் அந்த குற்ற உணர்ச்சியே என்ன கொன்னுடும்…” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

சற்றே கோபமாக, அவளது கையை எடுத்து விட்டு, அவள் புறம் திரும்பிய தீரஜ், “அவள் என் பொறுப்புல இருக்கா சஹி. உன் அளவுக்கு அக்கறை எனக்கும் இருக்கு. அவளுக்கு சின்ன கீறல் பட்டுருந்தாலும் அதே குற்ற உணர்ச்சி எனக்கும் இருந்துருக்கும். ஏன்னா, இதெல்லாம் நடக்குறது என் அண்ணனால. அவனுக்காக நான் உன்னை விட்டுக்கொடுக்கவா? அப்படி செஞ்சுருந்தா தெரிஞ்சுருக்கும்” என பல்லைக்கடித்தான்.

உதட்டைப் பிதுக்கி அழத் தாயாரானவள், “தப்பு தான்!” என உள்ளே சென்ற குரலில் கூற, “தப்புன்னு தெரிஞ்சா சரி தான்…” என அவளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு, நகரப்போனவனின் கையை பிடித்தாள்.

முகமெல்லாம் வியர்த்திருக்க, “தீ… தீரா… வயிறு வலிக்குது.” என அரண்டபடி வயிற்றைப் பிடித்திருக்க, ஒரு நொடி அவனும் திகைத்தான். பிரசவ தேதிக்கு இன்னும் இரு வாரம் இருந்தது.

கோபமெல்லாம் எங்கோ போக, “என்ன பிரின்சஸ் ஆச்சு. இப்பவே பெயின் வந்துடுச்சு. உன்னை ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க தான சொன்னேன். இந்த டைம்ல ஏன் மாடிக்குலாம் ஏறி வந்த…” என அக்கறையை அதட்டியவாறு காட்டியவன், அவளை தூக்கிக்கொண்டு காருக்கு போனான்.

அவளோ வலியை பொறுத்துக் கொண்டு, “காலைல இருந்தே ஒரு மாதிரி தான் இருந்துச்சு. இப்ப ரொம்ப வலிக்குது” என வலியை பொறுத்துக் கொண்டு கூறியவளை திட்டவும் முடியாமல், அமைதி படுத்தவும் இயலாமல் பதறினான்.

“முதல்லயே சொல்ல வேண்டியது தானடி…! அறிவுகெட்டவளே!” எனக் கடிந்தவனிடம், “நீங்க கோபமா இருந்தீங்களா. உங்களை சமாதானம் பண்றதை பத்தியே யோசிச்சுட்டு இருந்ததுல ஹெல்த் டிஃபரன்ஸை கவனிக்கல” என்றாள் பாவமாக.

அவன் பதில் கூற கூட சிந்தனையற்று காரை வேகமாக ஓட்டி செல்ல, வலியும் அதிகமானது.

அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தவன், அவளை லேபர் வார்டினுள் அழைத்துச் செல்லும் போது மேலும் கலவரமானான்.

விஷயம் கேள்விப்பட்டு தேவிகாவும் நிக்கோலஸும் வந்து அவனை சமன் செய்ய, தீரஜ் எதையும் காதில் வாங்காமல் தவித்து போனான். சில மணி நேரம் வலியையும் தவிப்பையும் கொடுத்து விட்டே, தீரஜ் சஹஸ்ராவின் மகள் பிறந்தாள்.

பூக்குவியலாய் பெண்குழந்தையை கையில் வாங்கிய நொடி சிலிர்த்தது ஆடவனுக்கு. சிறிது நேரத்தில் சஹஸ்ராவைக் காண உள்ளே சென்றவன், சோர்ந்து களைத்து படுத்திருந்தவளைக் கண்டு கனிவுடன், “ரொம்ப படுத்திட்டாளா?” எனக் கேட்டான் அவளது நெற்றியை தடவியபடி.

மெலிதாய் முறுவலித்தவள், “உங்க அளவுக்கு இல்ல… என் பொண்ணு சமத்து தான்.” என்றதில் முறைத்தவன், அவளது முறுவல் கண்டு புன்னகைத்தான்.

“ஹப்பா. கோபம் போய்டுச்சா தீரா?” என அந்நிலையிலும் ஆர்வமாக கேட்க, அதில் மேலும் இதழ்கள் விரிய புன்னகைத்தவன், “ஏதோ என் பொண்ணால இப்ப கோபம் குறைஞ்சுடுச்சு.” என்றான் கெத்தை விட்டுக்கொடுக்காமல்.

அதில் அவனை முறைப்பது அவள் முறையாக, அதனை ரசித்தவன், குறும்பை விடுத்து, பாவையின் நெற்றியில் இதழ் பதித்து, “லவ் யூ பிரின்சஸ்! லவ் யூ அ லாட்.” என்றதில், நானும்…! என நிறைந்த புன்னகையுடன் தலை சாய்த்தாள் தீரஜின் பிரின்சஸ்.

முற்றும்!
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
96
+1
8
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்