Loading

அவளை ‘வா’ வென்று அழைக்க இயலாமல் அவன் தடுமாற, அவன் செய்ததை முழுதாய் மன்னித்து, ஏற்க இயலாமல் அவள் தவிக்க என இரு உள்ளங்களும் காதல் நோயில் வாடியது.

மனையாளைப் பத்திரமாக இங்கு விடுவதற்காக தான் வந்தான். ஆனால், விட்டுச் செல்ல தான் இயலவில்லை.

அவனிடம் கோபம் கொண்டு தான் அவளும் பிரிந்து வந்தாள். ஆனால், இப்பிரிவை ஏற்க இயலவில்லை.

‘என்னை பொய் சொல்லி ஏமாத்தாம இருந்துருக்கலாம்ல.’ என்ற ரீதியில் கண்ணில் நிறைந்து நின்ற நீருடன் அவனைக் குற்றப் பார்வை வீசிய சத்யரூபாவின் பார்வையில் நெஞ்சம் துடித்தது அவனுக்கு.

அவள் கோபத்தைக் கடினமாக காட்டும் போது கூட, இறுகி தான் இருந்தான். ஆனால், இந்த அமைதியான கண்ணீர் அவனது உயிரையே வாரி சுருட்டுவது போல வலித்தது.

‘தன்னை நம்பினாளே! அவளது கோபத்திற்கு பயந்து, உண்மையை கூறாமல் இருந்தது, அவளை இந்த அளவு பாதிக்கும் என்று எண்ணவில்லை!’ தன்னையே அதற்காக நிந்தித்தவன், அவளை நிமிர்ந்து பாராமல் கிளம்பி விட, அவளுக்கோ அழுகையுடன் கோபமும் பொத்துக் கொண்டு வந்தது.

‘விட்டுட்டு போறதுக்கு எதுக்கு கூடவே வந்தானாம்?’ மூக்கை உறிஞ்சி, வெளிப்படையாகவே கோபத்தை காட்டும் நோக்கில், அங்கிருந்த நீர் சொம்பை மடாரென போட்டு உடைத்தாள்.

—–

காயத்திற்கு மருந்திடும் பொருட்டு, மருத்துவமனைக்கு சென்றிருந்தனர் எழிலும் வைஷாலியும்.

அங்கு, மற்றவர்களின் காயத்தைக் கண்டு காதல் உள்ளங்கள் வலிக்க, சிகிச்சை முடிந்து இருவரும் வீடு நோக்கி நடந்து வந்தனர். ஆட்டோ பிடிக்கிறேன் என்றவனைத் தடுத்து, “கொஞ்ச நேரம் காலாற நடக்கலாமா அத்தான்” என வைஷாலி கேட்டதில், மறுக்காமல் ஒப்புக்கொண்டான்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, “என்னை நிஜமா பிடிச்சு இருக்கா அத்தான்?” எனக் கேட்டாள் மெதுவாக.

அதில் ஒரு நொடி நின்றவன், ‘என்ன கேள்வி இது?’ என்பது போல அவளை முறைத்து வைக்க, “அதில்ல அத்தான்… செஞ்ச தப்ப மன்னிச்சு மறக்கலைன்னா, எவ்ளோ கஷ்டமா இருக்கும்ன்னு புருஞ்சுக்கிட்டேன். நீங்க தீயில மாட்டிக்கிட்ட நேரம், நானும் உள்ள வந்து செத்துடலாம்ன்னு நினைச்சேன்.” என அழுகுரலில் கூறியவளின் வாயைப் பொத்தினான் எழில்.

“என்ன பேச்சு இது பேபி. நீ சாகுறதுக்கா, உன்னை வெளில அனுப்புனேன். என்னால நீ செத்துற கூடாதுன்னு தான அனுப்புனேன்…” என்றதும்,

“நீங்க இல்லாம வாழுறது சாகுறதுக்கு சமம் தான அத்தான்…” எனத் தவிப்புடன் கூறியவளை திகைப்பாய் பார்த்தான்.

தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன், “நம்ம அவ்ளோவா பேசிக்கிட்டது கூட இல்ல. எப்படி வைஷு பேபி என்னை இவ்ளோ லவ் பண்ற” என வியப்பாய் கேட்டான்.

“பேசுனா தான் லவ் வருமா என்ன?” என்று முணுமுணுப்பாக கூறியவளைக் கண்டு, மென்னகை புரிந்தான். 

“இப்பவாவது, உன் லவ்வை சொல்லேன் பேபி…” வெகு ஏக்கத்துடன் வந்த அவனது குரல் அவளைக் கட்டிப்போட, விழியோரம் நீர் துளிர்த்தது.

அதனைக் கண்டதும், “அடடடா, ரொமான்டிக்கா ப்ரொபோஸ் பண்ணுவன்னு பார்த்தா, சென்டிமெண்டா தான் சொல்லுவ போலயே. இதெல்லாம் செல்லுபடி ஆகாது. எனக்கு இப்போ ஒரு ரொமான்ட்டிக் ப்ரோபோசல் வேணும். டாட்!” என்று பிடிவாதம் பிடித்தவனைக் கண்டு புன்னகைத்து விட்டாள்.

“சொன்னா தான் தெரியுமா அத்தான். நீங்க கல்யாணம் பண்ணிக்க கேட்ட அடுத்த செகண்டே ஒத்துக்கிட்டேனே. அதுலயே உங்களுக்கு புரியலையா. ஐ லவ் யூ அத்தான். இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வராதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ, நீங்களும் என் கூடவே இருக்கீங்க.  அம்மாவும் நம்ம கூட இருந்துருக்கலாம்.” என்றவள், அவனது மனநிலையைக் கெடுக்க விரும்பாமல்,

“அதனால என்ன… நமக்கு பொண்ணா பிறந்து, நம்ம கூடவே இருப்பாங்க. பொண்ணு பிறந்தா அம்மா பேரை வச்சுடலாம்” என வெட்கம் நிறைந்த தொனியில் கூற, அவன் தாமரையின் நினைவில் வாடினான்.

“ம்ம். அத்தையே நமக்கு பிறந்தா நல்லா தான் இருக்கும்…” என்றவன், விழிகள் பளிச்சிட “ஹே… நீ இப்ப என்ன சொன்ன?” விழி விரித்துக் கேட்டான்.

அவள் கீழுதட்டைக் கடித்து, “இதுக்கு மேல எப்படி அத்தான் ப்ரொபோஸ் பண்ண…” என முகத்தை மூடிக்கொள்ள, மகிழ்வில் வானில் பறந்தவன், சாலை என்றும் பாராது, “பேபி” என அணைத்துக் கொண்டான் உணர்ச்சி பெருக்குடன்.

——

எழிலும் வைஷாலியும் மருத்துவமனைக்கு சென்றிருந்ததில், நீரஜா மட்டுமே வீட்டில் இருக்க, கணவனையும் தோழனையும் வாசலுக்கு சென்று வழியனுப்பி வைத்தவள், சொம்பு நொறுங்கும் சத்தம் கேட்டு அவசரமாக உள்ளே வந்தாள்.

“என்ன ஆச்சு சத்யா?” எனப் பதறி கேட்க,

“ஒண்ணும் ஆகல…” என்றாள் உச்சஸ்தாதியில்.

“ஆத்தாடி!” என இரு காதையும் மூடிக் கொண்டவள், “உண்மையாவே ஸ்பீக்கரை முழுங்கிட்டியா சத்யா.” என்றாள் பரிதாபமாக.

“அவ்ளோ கஷ்டமா இருந்தா நீங்களும் அவங்க கூட கிளம்பி இருக்க வேண்டியது தான. நான் ஒண்ணும் இருக்க சொல்லலக்கா.” என்று மீண்டும் கத்திட,

அவளை பெருமூச்சுடன் பார்த்த நீரஜா, “கொஞ்சம் மெதுவா பேசேன் சத்யா. கோபத்துல அவனை நாலு மிதி கூட மிதி. இல்லையா, அவன் முகத்துலயே முழிக்காம பேசாம கூட இரு, உண்மைய ஏன் மறைச்சீங்கன்னு, எங்க எல்லாரையும் அடிக்க கூட செய். நாங்க வாங்கிக்குவோம்.

எப்பவும் நம்ம கோபம் நியாயமாவே இருந்தாலும், அதை காட்டுற விதம்ன்னு ஒன்னு இருக்கு சத்யா. நீ அதை காட்டுற விதத்துல தான், அந்த கோபத்தோட ஆழமும் செஞ்ச தப்போட வீரியமும் சம்பந்தப்பட்டவங்களுக்கு புரியும். நீ இவ்ளோ ஹர்ட் ஆகிருக்கன்னா, அவனை அந்த அளவு நம்பிருக்கன்னு புரியுது சத்யா.” என்றாள் வருத்தத்துடன்.

சத்யா சட்டென மௌனமாகி, “எனக்கு கோபத்தை இப்படி தான் காட்ட தெரியும்” என முணுமுணுத்தவள், “இப்படியே பழகிடுச்சுக்கா. திடீர்ன்னு மாத்த முடியல.” என்றவளுக்கு குரல் கம்மியது.

பின் அவளே, “அப்பா இறந்தப்போ, ரொம்ப பெரிய பொண்ணு இல்லைன்னாலும், நான் சின்ன பொண்ணும் இல்ல. அந்த நேரத்துல, அப்பாவை அடக்கம் பண்ணுன, கொஞ்ச நேரத்துலயே வீட்ல ஒரு ஈ காக்கா கூட இல்ல. ரெண்டு பேருமே பொண்ணுங்கன்னு, எங்க பொறுப்பை யார் தலைலயாவது அம்மா கட்டிடுவாங்கன்னு பயந்து, எல்லாரும் ஓடிட்டாங்க.

எழில் மாமா மட்டும் தான் எங்க கூடவே இருந்தான். ஆனால், அவனால எவ்ளோ நாள் எங்க கூட இருக்க முடியும். மிஞ்சி போனா ஒரு வாரத்துல, அவனை வற்புறுத்தி ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்டுட்டாங்க.

பிறந்து வளர்ந்த ஊரு தான். ஆனால், வீட்ல ஒரு ஆம்பளை துணை இல்லாம, எங்களை பயமுறுத்துச்சு.” என்றவளின் விழிகள் கண்ணீரைக் கொட்டியது.

“எவன்னே தெரியாது… குடிச்சுட்டு வீட்டு வாசல்ல வந்து படுத்துருப்பானுங்க. 40 வயசு ஆளா இருப்பான்… நான் ஸ்கூலுக்கு போகும் போது, என்னை வழி மறிச்சு, ‘என்னை கட்டிக்க. உன் குடும்பத்தையே நான் பாத்துக்குறேன். எவ்ளோ நாளைக்கு, தனியா இருக்க முடியும்’ன்னு கேவலமா பேசுவான்.

எங்க ஊர்ல, பொண்ணுங்களை அவ்ளோலாம் படிக்க வைக்க மாட்டாங்க. ஆனா, அப்பாவுக்கு நாங்க ரெண்டு பேருமே படிக்கணும்ன்னு ஆசை. அந்த ஆசையை எங்களுக்கும் குடுத்துட்டு தான் போனாரு. அதை பத்தி யோசிக்க கூட விடாம, சுத்தி இருந்த ஆளுங்களோட கேவலமான புத்தி எங்களை பயமுறுத்த தான் செஞ்சுச்சு.

அதுவும் அம்மாவுக்கு, ரெண்டு பொண்ணுங்களையும் சேர்த்து பாத்துக்குறதுக்குள்ள தினமும் நொந்து போனாங்க. அதான், அக்காவை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு, அங்க இருந்தே படிக்க வைக்க நினைச்சாங்க. அட்லீஸ்ட் ஹாஸ்டல்ன்னா, பாதுகாப்பாவது இருக்கும். சொந்த வீட்ல அது கூட இல்ல. அவள் ஏற்கனவே பயந்த சுபாவம். எவனாவது மிரட்டுனா அத வெளில கூட சொல்ல மாட்டான்னு, படிக்க வேலை பார்க்கன்னு எல்லாத்துக்குமே அவளை வெளியூருக்கு அனுப்பியாச்சு.

அவளுக்கும் அது கஷ்டம் தான். கிட்டத்தட்ட பத்து வருஷமா, எங்க கூட முழுசா ஒரு நாலு நாள் கூட அவ இருந்தது இல்ல. சில நேரம், ஹாஸ்டலுக்கு போகும் போது அழுதுகிட்டே போறதை பார்க்கிறப்ப கஷ்டமா இருக்கும்.

இப்படியே பயந்துட்டு இருந்தா வாழ்க்கை முழுக்க பயந்துகிட்டே இருக்கணும்ன்னு, என்கிட்ட வம்பிழுக்குறவனுங்களை நல்லா கத்தி விட்டுடுவேன். நான் கத்துறதுல பயந்து, எல்லார் முன்னாடியும் அவமானம் ஆகிடுமோன்ற நினைப்புல ஓடிடுவானுங்க.

என் வீட்டு பக்கம் குடிச்சுட்டு சும்மா நடந்து போனா கூட, நல்லா பிடிச்சு திட்டி கத்திடுவேன். நான் கண்மூடித் தனமா கத்தி தான் என் கோபத்தையும், என் பாதுகாப்பையும் வெளிப்படுத்த வேண்டியதா போச்சு. அதுக்கு அப்பறம், அதுவே எனக்கு பழக்கமும் ஆகிடுச்சு.” என்றாள் உதட்டைக் கடித்து.

சிரஞ்சீவியும், இந்திரஜித்தும் ஆட்டோவில் வீட்டில் இருந்து கிளம்பி இருக்க, இந்திரஜித்திற்கு தான் இருப்பு கொள்ளவில்லை. கிளம்பும் போது ஏதோ உடையும் சத்தம் கேட்டது வேறு உறுத்திக் கொண்டே இருக்க, சஞ்சலத்துடன் தலையைப் பிடித்தவன், ‘என்னவானாலும் அவளுடனே இருந்து திட்டு வாங்கிக்கொள்ளலாம்’ என்ற முடிவெடுத்து, ஆட்டோவை நிறுத்தக் கூறினான்.

“டேய், இன்னும் ரெண்டு ஸ்டெப்பு கூட போகலைடா” என்ற சிரஞ்சீவிக்கு பதில் கூறாமல், விருட்டென இறங்கி நடந்தே வீட்டிற்கு சென்றவன்,
சத்யரூபாவின் பேச்சில், மனமுருக நின்றான்.

மேலும், பேச வந்தவள், இந்திரஜித் நிற்பதைக் கண்டு ஒரு நொடி திகைத்து, பின் தலையைக் குனிந்து அமைதியாகி விட்டாள்.

நீரஜாவிற்கு தான் ஆதங்கமாக இருந்தது. வைஷாலியின் மூலம், அவர்களின் வீட்டு நடப்பும், இழப்பும் தெரியும் தான். ஆனால், தகப்பனில்லை என்றால், என்னவெல்லாம் இடர்பாடுகளை சந்திக்க வேண்டியது இருக்கிறது. அதிலும், சொந்த ஊரில் சொந்த வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை பெரும் கொடுமை!

அவளைப் பரிவுடன் பார்த்தவள், தன்னருகில் நிழலாடுவதில் திரும்பிப் பார்க்க, அங்கு இந்திரஜித் நின்றதில், விழி விரித்து விட்டு, மெல்ல வெளியில் சென்று விட்டாள்.

இந்திரஜித் இறங்கியதுமே, தானும் இறங்கி உள்ளே வந்திருந்த சிரஞ்சீவிக்கும், அவளது நிலை புரிய, அவளது கத்தலுக்கு பின்னே உள்ள வலி தெரியாமல், அவ்வப்பொழுது கிண்டலடித்தது குற்ற உணர்வாக இருந்தது.

இனி, இந்த தவறை செய்யக்கூடாதென்று குறித்துக் கொண்டவன், பேருந்திற்கு தாமதமாவதை உணர்ந்து, “வாட்டர்… நீ போய் பேகை எடுத்துட்டு வா. நாம போலாம்.” என்றான்.

“நானா? இருந்துட்டு வர சொன்னீங்க. நான் வரல. நீங்க வேணா போங்க.” என்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,

“இப்ப தான் இந்தர் இருக்கான்ல. எப்படியும் அவன் இப்போதைக்கு வர மாட்டான். இங்க ரெண்டு கபிள்ஸ்க்கும் நடுவுல இருந்து நீ என்ன பண்ண போற. என் கூட வந்தா, நம்ம கபிள்ஸ் டு ட்ரிப்பிள்ஸா எப்படி மாறலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணலாம்…” எனக் குறும்புடன் கூற, அவள் சிவந்து போனாள்.

அவளை வம்படியாக இழுத்துச் சென்ற சிரஞ்சீவிக்கு, ‘இவனுங்க ஊருக்கு வர்றதுக்குள்ள, நம்ம ரொமான்ஸ்ல நெக்ஸ்ட் லெவல் போய்டணும். இல்லன்னா, அடுத்து ஏதாவது டிவிஸ்ட் வச்சு, ஆட்டத்தை கலைச்சு விடுவானுங்க…’ என்ற சபதத்துடன் கிளம்பினான்.

——

கட்டிட்டு தொங்க விடப்பட்டிருந்த கரத்தைப் பிடித்தபடி, மெதுவாக அவளருகில் சென்றான் இந்திரஜித்.

அவளோ பின்னால் நகர்ந்தபடி, “பஸ்ஸு போய்டும். கிளம்பு” என்றாள் அவனைப் பாராமல்.

இந்திரஜித் பதில் பேசாமல், கயிற்றுக் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டு, அவளைப் பார்வையால் துளைக்க, சத்யா வலுக்கட்டாயமாக அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“இங்க வா!” மெல்லிய குரலில் அடிபடாத கையை நீட்டி, தனது மடியைக் காட்டியவனிடம், “வர மாட்டேன் போ!” என சிறு பிள்ளையாய் தலையை சிலுப்பினாள்.

“வா தியாக்குட்டி.” இன்னும் உருகும் தொனியில் அவன் யாசகமாக அழைக்க, “என்னை விட்டுட்டு கிளம்புனீல. இப்போ ஏன் கூப்புடுற.” என மீண்டும் விறைத்தபடி நின்றாள்.

“ஆனா, போகலைல. உன்னையும் உன் நினைப்பையும் விட்டுப் போக முடியாம தான்டி இத்தனை வருஷமா தவிச்சுட்டு இருக்கேன்.” என்றான் உள்ளுக்குள் சிக்கித் தவிக்கும் காதலுடன்.

அவள் உம்மென்று நின்றதில், “புஜிலி… இங்க பாரு.” என அவளைப் பார்க்க வைக்க முயல, அவள் அவனைப் பாராமல் சாதித்தாள்.

“என்னை பார்த்து சண்டை போடுடி. இங்க பாரு…” என்று மீண்டும் கண்டிப்பாகக் கூறியதில், சத்யரூபா நிமிந்து ஒரு முறை அவனைப் பார்க்க, அவன் உதட்டைப் பிதுக்கி, “லவ் யூ புஜிலி” என வாயசைத்து, காற்றிலேயே முத்தத்தைப் பறக்க விட்டான்.

“நீ என்னை டிஸ்டராக்ட் பண்ற காண்டாமிருகம்…” என சட்டென சிவந்து போன கன்னங்களை அடக்கத் தெரியாமல், கொலுசொலியாய் சிணுங்கினாள்.

பக்கென புன்னகைத்து விட்டவன், “சரி. இங்க வந்து உட்கார்ந்து சண்டை போடு. நான் டிஸ்டராக்ட் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்.” என்று அவன் தலையில் அவனே கை வைத்துக் கொள்ள, அவள் இழுத்து பிடித்த கோபத்துடன் மெதுவாக அவன் அருகில் நெருங்கி விட்டு தயங்கி நிற்க, அவனோ அவளைப் பிடித்து, மடியில் அமர வைத்தான்.

ஒற்றைக்கையால், அவளது கொடி இடையைச் சுற்றி வளைத்துக் கொள்ள, அவள் காதலும் கோபமும் தாளாமல், அவனைப் படபடவென அடிக்கத் தொடங்கினாள்.

“ஏன்யா பொய் சொன்ன. என்னை டிராப் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு, என்னமோ பொண்ணு ஓடிப்போனதுனால உன் மானம் போக போற மாதிரி, சீன் போட்டு, என்ன கார்னர் பண்ணி… பிராடு பிராடு…” என்று விடாமல் அடிக்க, இந்திரஜித் மௌனமாக வாங்கி கொண்டான்.

ஒரு கட்டத்தில், அவளுக்கே கை வலித்து நிறுத்திக் கொள்ள, “ரெஸ்ட் எடுத்துட்டு. திரும்ப பஞ்சிங் பண்ணு தியாக்குட்டி.” என்றான் அவள் நெற்றியில் முட்டி.

“போயா… நீ என்கிட்ட எதையும் மறைக்க மாட்டன்னு உன்னை ரொம்ப நம்புனேன். அப்படியா, உன்னை விட்டு போய்ட போறேன். கோபப்படுவேன் தான். அதுக்காக, இவ்ளோ நாள் மறைச்சு வைக்கணுமா. முதல்லயே சொல்லி இருந்தா கூட எனக்கு ஒண்ணும் தெரிஞ்சுருக்காது. ஆனா, இவ்ளோ லவ் பண்ணிட்டு, என்னையும் உன் மேல பைத்தியமாக விட்டுட்டு, உண்மை தெரியவும் தான் என்னால தாங்கவே முடியல. அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாம தான், உன்னை ஹர்ட் பண்ற மாறி பேசிட்டேன்.

ஆனா, உன்னை விட்டுட்டு என்னால போகவே முடியல தெரியுமா. ஐ லவ் யூ ஜித்து. ஐ லவ் யூ…” என்று தேம்பியவள் அவன் கழுத்தினுள் கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.

தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனுக்கு, அவள் வாயால் காதலைக் கேட்ட தருணம் தேனாக இனித்தது.

தன் செயலால் அவள் காயப்பட்டது மனதை வருத்த, “சாரி தியாக்குட்டி. தப்பு என் மேல தான். வைஷுவோட ப்ரெண்டா இருக்கும் போதே, உன்கிட்ட இன்ட்ரோ ஆகி இருக்கணும். இல்ல அட்லீஸ்ட், ஜீவி உன் அக்காவை பொண்ணு பார்க்க வரும் போதாவது சொல்லி இருக்கணும். உங்கிட்ட அவ ப்ரெண்டா இன்ட்ரோ ஆக எனக்கு பிடிக்கல. உன்னை பார்க்குற மீட்டிங்கை எல்லாம், இன்டரஸ்டிங்  – ஆ மாத்தணும்ன்னு நினைச்சேன். நானே எதிர்பார்க்கல நம்ம கல்யாணம் இவ்ளோ சீக்கிரம் நடக்கும்ன்னு… அதுக்கு அப்பறம், உன்னை லவ் பண்ண வச்சுட்டு, சர்ப்ரைஸா, முன்னாடியே உன்னை லவ் பண்ணதை சொல்லலாம்ன்னு நினைச்சேன்.

ஆனா, நீ எழில் மேல இருந்த காதலை ஒரு செகண்ட்ல தூக்கி போட்டதை தெரிஞ்சதும், எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. நான் கேசுவலா எடுத்துகிற விஷயம் எல்லாமே, உன்னை பொறுத்தவரை சீரியல் இஸ்யூவா இருக்கும்ன்னு புரிஞ்சதும், என் சர்ப்ரைஸ் பிளான் ஊத்திக்கிடுச்சு.”
என்று பாவமாக கூறி, அவள் கண்ணீரை முத்தங்களால் துடைத்து விட, சத்யாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

கூடவே, “சும்மா சும்மா எழில் மேல இருந்த காதல்ன்னு சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு…” என்று முகத்தை சுளித்தாள். உண்மையில் அவளுக்கு அப்படி ஒன்று நிகழ்ந்தது கூட நினைவு இல்லை. அவன் மீது அப்படி ஒரு உணர்வு இருந்ததா என்று கூட தெரியவில்லை.

மனையாளின் பாவனையில் புன்னகைத்து, “ஓகே ஓகே… இனிமே சொல்ல மாட்டேன். போதுமா!” எனக் கொஞ்சியவனின் முகத்தை தள்ளி விட்டவள், “நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு ஊருக்கு வந்ததா அக்கா சொன்னா. ஏன் அப்பவே வந்து பேசல.” என்று கேட்டாள் முறைப்பாக.

அதற்கும் புன்சிரிப்பை பரிசளித்தவன், “அதுவா எல்லாம் உன்னால தான்” என்று சலித்தான்.

“என்னவாம் ரொம்ப தான் சலிச்சுக்குறீங்க.” என்றவளிடம்,

“பின்ன என்னடி, சும்மா ஊர சுத்தி பார்க்கலாம்ன்னு வந்தவனை, உன்ன சுத்த விட்டுட்டு, பேச்சை பாரு. நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். வைஷு உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கா. சில நேரம், நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ன்னு உனக்கு பயந்து கூட இருக்கா. அதுவும் லவ் பண்றதை கூட மறைக்கிறான்னா, நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரான்னு கொஞ்சம் கடுப்பு கூட ஆச்சு…” என்னும் போதே, சத்யரூபா முறைத்தாள்.

அதில், “ஹே புஜிலி. அது அப்போடி, உன்னை பார்க்குறதுக்கு முன்னாடி. அம்மா எப்பவுமே சொல்லுவாங்க, அக்கா, தங்கச்சி இருந்துருந்தா உனக்கு பொறுப்புன்னு ஒண்ணு இருந்துருக்கும். எதை பத்தியும் டீப்பா யோசிக்காம, விளையாட்டா பண்ணாதன்னு…” என முகம் சுருங்கியவன்,

“அப்போ நான் அதை பெருசா எடுத்துக்கல. வைஷு உங்களை பத்தி எல்லாம் சொல்லும் போது கூட, அவ்ளோ டீப்பா யோசிக்க மாட்டேன். நான் வீட்லயே ஹாஸ்டல் மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்கேன். வைஷு என்னனா, ஊர்ல இருந்து வரும் போது அழுது வடிஞ்சு வர்றாளேன்னு இருக்கும். எழிலை அவள் விரும்புனதை கூட அப்படி சாதாரணமா தான் எடுத்துக்குட்டேன். ஆனா, அவள் கல்யாணம் பண்ணிக்கிற சூழ்நிலை வரும் போது எழிலை பத்தி நல்லா விசாரிச்சுட்டு தான் அந்த பிளானையே சொன்னேன். அதுலயும் அரைவேக்காடுத்தனமா, அவன் குடும்பத்தை பத்தி விசாரிக்காம விட்டுட்டேன்.”

“அப்பா இல்லன்னா, இவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கணும்ன்னு எனக்கு புரியல தியா. பினான்சியலா, அவளும் ஸ்டேபிளா இருக்கா, சோ பேமிலியை பாத்துக்குறா… அதுக்கு மேல ஊருக்குள்ள, சொந்த பந்தத்தை சுத்தி தான் இருக்கீங்க. இதை தாண்டி என்ன பெருசா பிரச்சனை இருக்க போகுதுன்னு அசமந்தமா யோசிச்சுருந்தேன். அதுவும், எழிலும் என்ன பிரச்சனைன்னாலும் உடனே வீட்டுக்கு வந்துடுவான்னு சொல்லிருக்கா. சோ, எனக்கு எதுவுமே பெருசா தெரியல.

முதல் தடவை, வைஷு கல்யாணம் வேணாம்ன்னு போனதுக்கு நீ கோபப்பட்டப்ப தான், எனக்கு லேசா உறுத்துச்சு. அப்பறம் உன் கூட பழக பழக, உன் பாய்ண்ட் ஆஃப் வியூல நான் பண்ணது பெரிய தப்புன்னு புரிஞ்சுது தியா. அந்த தப்பை ஒத்துக்கிறதுல எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா, அதுக்கு அப்பறம் மாறி மாறி, வைஷு பிரச்சனை அத்தை இறந்ததுன்னு எல்லாம் நடக்கவும், சொல்ற தைரியமே போய்டுச்சு. அதுக்கான சந்தர்ப்பமும் கிடைக்கல. இனி, எவ்ளோ கோபம் வந்தாலும் கத்தியே கண்ணா பின்னான்னு திட்டு, நான் வாங்கிக்கிறேன். ஆனா, இப்படி கோச்சுட்டு கிளம்பிடாதடி. நீ இல்லாத, அந்த ஒரு நாள் நைட்டு நரகம் தியா… இனிமே அந்த மாதிரி ஒரு நாள் என் லைப்ல வரவே கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று கசங்கிய முகத்துடன் பேசியவனை ஆதூரமாகப் பார்த்தாள்.

“எனக்கும் அப்படி தான். ஏண்டா வந்தோம்ன்னு இருந்துச்சு.” என்றவள், “எனக்கு புரியுது ஜித்து. ஆனா, எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே, எதையும் சீரியஸா எடுத்துக்காத குணம் தான். நிறைய நேரத்துல, அது மன பாதிப்பை குறைக்கும்.” என புன்னகைத்தவள், “சார்… இப்பவாவது எந்த காலேஜ்ல படிச்சேன்னு சொல்லுவீங்களா?” என்றாள் நக்கலாக.

தன்னைப் புரிந்து கொண்டவளுக்கு, மென் முத்தத்தை பதிப்பித்தவன், “உன் அக்கா படிச்ச அதே காலேஜ் தான்டி போதுமா” என்றதில், அவள் குறுநகை புரிந்தாள்.

பின், “இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையாக்கும். என்னை எப்போ பார்த்தீங்க?” என அவன் மடியில் இன்னும் வாகாக அமர்ந்து கதை கேட்க தொடங்கினாள்.

இந்திரஜித் தான் கடியாகி, “ச்ச்சே… எவ்ளோ ரொமாண்ட்டிகா, எவ்ளோ சர்ப்ரைஸோட சொல்ல வேண்டிய விஷயத்த, ஏதோ காக்கா கதை கேக்குற மாதிரி கேட்குறியேடி.” என பெருமூச்சு விட, அவள் பக்கென சிரித்தாள்.

அதனை ரசித்தபடியே அவளைப் பார்த்த கணத்தை புன்னகை மின்ன கூறத் தொடங்கினான்.

—–

மூன்று வருடங்களுக்கு முன்பு, தீபாவளி விடுமுறை தொடர்ந்து 5 நாட்கள் வந்தது. ஆனால், கிளம்பும் நேரம் வரை, அலுவலகத்தில் ப்ராஜக்ட் வேலையில் மாட்டிக்கொண்ட வைஷாலிக்கு, அங்கிருந்து பேருந்து நிலையம் செல்லவே வெகு தாமதம் ஆகி விடுமே என்ற பதற்றம். இதில், போக்குவரத்து நெரிசல் வேறு!

நினைத்தது போன்றே பேருந்தையும் தவற விட்டவளுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

அந்நேரம் தான், இந்திரஜித் போன் செய்து, “கிளம்பிட்டியா வைஷுமா?” எனக் கேட்க, “இல்லடா வேலைல மாட்டிக்கிட்டேன்.  ப்ச், பஸ்ஸு போய்டுச்சுடா. இங்க பஸ் எல்லாமே ஃபுல். அட்லீஸ்ட் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னாடியாவது போலாம்ன்னு நினைச்சேன். இப்போ அதுவும் போக முடியாது போல.” எனக் கண் கலங்கி விட்டது.

இந்திரஜித்தின் வீட்டிலும், தந்தை வழி உறவினர் வீட்டில் விஷேஷம் இருக்க, வீட்டினர் அங்கு சென்று விட்டனர். இந்திரஜித்திற்கு விடுமுறை தீபாவளி அன்று மட்டும் தான் என்பதால், அவன் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

அவனோ, போனிலேயே சிரித்து விட்டு, “ஏழு கழுத வயசு ஆகுது. இன்னும், எல். கே. ஜி படிக்கிற பாப்பா மாதிரி, அழுதுட்டு இருக்க வைஷுமா நீ.” எனக் கேலி செய்தவன்,

“சரி, இப்ப என்ன நீ ஊருக்கு போகணும் அவ்ளோ தான. நீ அங்கேயே நில்லு. நான் கார் எடுத்துட்டு வந்து உன்னை ஊர்ல விடுறேன்” என்றான்.

“வேணாம்டா. நாளைக்கு வேற பஸ் பிடிச்சு போய்க்கிறேன். பக்கத்துலயா இருக்கு. அவ்ளோ தூரம் கார் ஓட்டணும்.” என மறுக்க,

“நீ ஊருக்கு போகணுமா வேணுமா? காலைல ஆண்ட்டி உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க தான வைஷுமா. இங்க வீட்லயும் யாரும் இல்ல. தீபாவளிக்கு தனியா பட்டாசு வெடிக்கணுமேன்னு இருந்தேன். இந்த வருஷ தீபாவளியை கிராமத்துல கொண்டாடிட வேண்டியது தான்.” என்றான் குதூகலமாக.

வைஷாலி தான், மறுக்க இயலாமல் நின்றாள். அவனை அழைத்துச் சென்றால், ஊரில் என்ன என்னவோ பேச்சுக்கள் எழுமே… எனத் தயங்கியவள், “இல்ல… இந்தர் அது…” என்று இழுத்தாள்.

அவனுக்கும் புரிந்து விட, “கூடவே நீரஜையும் அள்ளி போட்டுட்டு போகலாம். ஓகே வா…” என்றவன், கான்பரன்ஸில் நீரஜாவை அழைக்க,

அவளோ, “ஏன்டா வயித்தெரிச்சலை கிளப்புற. இந்த மேனேஜர் மாடு, நாளைக்கும் என்னை வேலை பார்க்க சொல்லிட்டான். தீபாவளி அன்னைக்கு தான் எனக்கு லீவ் ஸ்டார்ட் ஆகுது.” என்று புலம்பி விட்டு,

“நீங்க இன்னைக்கு கிளம்புங்க. நான் நாளைக்கு வேலையை முடிச்சதும் கிளம்பி வந்துடுறேன்” என்றாள்.

இந்திரஜித்தும், “அவள் வர்ற வரை, நான் ஏதாச்சு ஹோட்டல்ல தங்கிக்கிறேன் வைஷுமா. அவள் வந்ததும் உன் வீட்டுக்கு போலாம். என்னை மட்டும் தனியா கூட்டிட்டு போனா தான, ப்ராபளம். “என்று கண் சிமிட்டிக்கூற,

அவனை வீட்டிற்கு அழைக்க இயலாத சங்கடத்தில், “சாரிடா.” என்றாள்.

“லூசு… உன் சாரியை நீயே வச்சுக்க.” என்று அதட்டியவன், சொன்னது போன்றே வைஷாலியை காரில் அழைத்துச் சென்றான்.

இரவு முழுதும் பயணம் செய்து, இருவரும் ஊருக்கு செல்லவே காலை ஆறு மணி ஆனது.

“இந்நேரம் சத்யா வயல்ல தான் இருப்பா. அங்கேயே போலாமா இந்தர். அவகிட்ட மட்டும் உன்னை இன்ட்ரோ கொடுக்குறேன்” என்றதில் அசுவாரஸ்யமாக தான் அங்கு சென்றான்.

அங்கு ஆட்களும் யாரும் இல்லை. தோப்பும் துறவும் வயல்வெளிகளுமாக அவ்விடம் ரம்மியமாக காட்சியளித்தது.

அதில், மெரூன் நிற தாவணி மேனியை நிறைக்க, பாவாடையை லேசாக இடுப்பில் சொருகி இருந்த பெண்ணவள், அந்த காலை வேளையில் தோட்டத்தில் வேலை செய்யும் காட்சி ஆடவனை ஈர்க்க, அவளைப் பார்த்தடியே காரை சற்று தள்ளி நிறுத்தினான்.

வைஷாலி வேகமாக அவள் முன் சென்று நிற்க, அந்த சிறிய விழிகள் அழகாய் விரிந்தது.

“வைஷுக்கா!” என தமக்கையை கட்டிக்கொண்டவள்,

“பஸ்சை விட்டுட்டேன்னு சொன்னதும், நீ நாளைக்கு தான் வருவன்னு நினைச்சேன். இப்படி சர்ப்ரைஸ் குடுத்துட்ட.” என்று குதூகலிக்க, அதே உற்சாகம் வைஷாலியையும் தொற்றிக்கொண்டதில் வந்தவனை மறந்து விட்டு, தங்கையுடன் ஒன்றி விட்டாள்.

வந்தவனும், வந்த இடத்தை மறந்து விட்டு, பாவையின் அழகு முகத்தில் தொலைந்து விட்டான்.

‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ எல்லாம் அவன் நம்பியதில்லை.

இத்தனை நாட்கள் அதனை நம்பாமல் போனதற்கு, தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டான்.

இரு பெண்களும் அப்படியே  வீடு நோக்கி நடக்க, அப்போது தான் இந்திரஜித்தின் நினைவு வந்ததில், அவனது காரை தேடினாள் வைஷாலி.

அவன் காரினுள் அமர்ந்தபடியே, “நீ போ நான் அப்பறம் வரேன்” என்று குறுஞ்செய்தி அனுப்ப, அதனை பார்த்து விட்டு, அவளும் தங்கையுடன் சென்றாள்.

இவனோ, காரை விட்டு இறங்கி, மெல்ல நடந்து, அவர்களைப் பின் தொடர, அவனது கண்களோ இதயத்தை திருடிச் சென்ற நாயகியிடம் இருந்து நகரவே இல்லை.

இருவரும் வீட்டை நெருங்கியதும், மறைந்து நின்று சத்யரூபாவை தீவிரமாக சைட் அடித்துக் கொண்டிருந்தவன்,

‘ஊராவது மண்ணாவது இப்பவே சென்று அறிமுகமாகி விட வேண்டியது தான். யாரும் என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும்’ என்ற முடிவுக்கு வந்து, தலையை கையால் ஒரு முறை ஸ்டைலாக வாரிக்கொண்டு ஒரு எட்டு வைக்கப் போனான்.

அதற்குள், அவளது வீட்டு வாசலில் இரு ஆண்கள் குழுமினர்.

“என்ன வைஷு, லீவ் விட்டுட்டாங்களா?” என ஒருவன் கேட்க,

அவளும் சிறு ஸ்நேகப் புன்னகையுடன் “ஆமா பாண்டி. நீ நல்லா இருக்கியா.” எனக் கேட்டுக்கொண்டதோடு, பேச்சை கத்தரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அந்த பாண்டியோ, “உன் அக்கா ரொம்ப தான் சீனை போடுறா. ஏதோ ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோமேன்னு வந்து பேசுனா ஓவரா போறா.” என்று எகிற,

“இப்ப உன்னை யாருண்ணா வந்து முஸ்தபா சாங் பாட சொன்னது. அக்காவோட பிரெண்டுன்னு நீ தான் சொல்லிட்டு திரியிற. அவள், ஊருல இருக்குற ஆளுங்களை நிமிர்ந்து பார்த்து பேசவே பயப்படுவா…” என வாயைப் பொத்தி சிரித்தாள்.

உடன் வந்த மற்றொருவரும், “ம்ம்க்கும்… இங்க இவ்ளோ பயப்படுறவ. எப்படி தான் வெளியூர்ல வேலை பாக்குறாளோ.” என நொடித்துக்கொள்ள,

“உங்களை எல்லாம் பார்த்தா அவளுக்கு பூதம் மாதிரி இருக்கோ என்னவோண்ணா” என்றாள் நக்கலாக.

அவர்களோ, அவளை முறைத்து விட்டு நகர, உள்ளே சென்ற வைஷாலி மீண்டும் வெளியில் வந்து, “இன்னும் இவனுங்க போகலையா…” என்று விட்டு, “அம்மா குளிக்கிறாங்க போல…” என மேலும் பேசியவள், இந்திரஜித்தைப் பார்த்து விட்டாள்.

சத்யாவும், “ஆமாக்கா. நான் போய் இட்லி ஊத்துறேன்.” என்று உள்ளே சென்றிட, வைஷாலி யோசனையுடன் இந்திரஜித்தின் அருகில் வந்தாள். கூடவே சுற்றி முற்றியும் அலைபாய்ந்தது அவளது விழிகள்.

“என்னடா இங்க நின்னுட்டு இருக்க?” எனக் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல், அவன் சத்யரூபா சென்ற திசையையே பார்த்திருக்க,

“இந்தர், உன்னை தான் கேட்குறேன்” என்று குலுக்கினாள்.

வீட்டின் அருகில் வரை வர வைத்து விட்டு, உள்ளே அழைக்காமல் இருப்பது என்னவோ போல இருக்க, ‘பார்த்துக்கலாம்’ என்ற மனநிலையுடன், “உள்ள வா இந்தர். சத்யாவையும் அம்மாவையும் பாக்கலாம்” என்று அழைத்தாள்.

அவனோ, “இரு இரு இரு… இப்ப நான் உள்ள வந்தா, என்னை என்னன்னு இன்ட்ரோ குடுப்ப?” என அவன் தீவிரமாகக் கேட்க,

“இது என்ன கேள்வி கேணைத்தனமா இருக்கு. பிரெண்டுன்னு தான்.” என்றாள் அவள் குழப்பமாக.

“ம்ம்… நீ என்னை பிரெண்டுன்னு சொன்னதும், உன் தங்கச்சி என்னை எப்படி கூப்டுவா?” என விழிகளை உருட்டிக் கேட்டான்.

“டேய்… என்ன ஆச்சு உனக்கு… நீ என்ன அவளுக்கு மாமனா மச்சானா… அண்ணன்னு தான் கூப்டுவா.” என தலையை சொரிந்தாள்.

இந்திரஜித் தான், நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்து, “எது அண்ணனா? நினைச்சேன். உன் ஸ்கூல் ப்ரெண்ட்ஸையும் அண்ணன்னு கூப்பிடும் போதே…” எனப் புலம்பியதில், ஒன்றும் புரியாமல், ,”நீ வா உள்ள” என அவன் கையைப் பிடிக்க, அவனோ உதறினான்.

“ஓடிடு. நான் உள்ள வந்து, உன் தங்கச்சி என்னை அண்ணனா தத்து எடுக்கவா? நோ சான்ஸ். நான் வர மாட்டேன். ஊருக்கு கிளம்புறேன்” என்று வீம்பாக நிற்க, வைஷாலி தான் திகைத்து, “தீபாவளி இங்க கொண்டாடலாம்ன்னு வந்துட்டு என்னடா கிளம்புறேன்னு சொல்ற. என்ன ஆச்சு இந்தர்” எனக் கேட்டாள்.

“ப்ச் ஒண்ணும் இல்ல வைஷுமா. உன் தங்கச்சியை பார்த்ததுமே, உள்ள ஒரு பட்சி, இவள் தான் உன் லவபிள் லைஃப்ன்னு காட்டு கத்தா கத்திட்டு இருக்கு. அதை அடக்க முடியாம நானே திண்டாடுறேன். இதுல அவ என்ன அண்ணன்ன்னு கூப்டா என் லைட் வெய்ட் ஹார்ட் தாங்காதுடா.” என வெகு உருகளுடன் பேச, வைஷாலிக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

“நேத்து நைட்டு தூங்காம கார் ஓட்டிட்டு வந்ததுல உனக்கு ஏதோ மண்டை கோளாறு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சுது, உன்ன கொல்றதும் இல்லாம, உன்னை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு எனக்கும் சோத்துல விஷத்தை வச்சுருவா. அவளுக்கு, இந்த ஊரை விட்டு வரவே பிடிக்காது. கண்டதை உளறாத இந்தர்” என்றாள் படபடப்புடன்.

அவளை முறைத்துப் பார்த்தவன், “என்னை பார்த்தா அரை தூக்கத்துல உளறுறவன் மாதிரி இருக்கா. அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் உன் தங்கச்சியை லவ் பண்றேன். எனக்கு தான் நீ அவளை கல்யாணம் பண்ணி வைக்கணும். அப்படியே உன் தங்கச்சி பத்தின பெர்சனல் டீடைல்ஸ் எல்லாம் எனக்கு ஃபார்வர்ட் பண்ணுவியாம். நானும், அவகிட்ட உன் ப்ரெண்டா இல்லாம, ஸ்ட்ரேஞ்சரா இன்ட்ரோ ஆகி, காதல் செடியை தண்ணி ஊத்தி வளர்ப்பேனாம். டன்னா?” என்று அவளை திக்குமுக்காட வைத்தவன், அன்று ஊருக்கே சென்று விட்டான்.

அங்கு இருந்தால், வைஷாலி தன்னை அறிமுகப்படுத்தி விடுவாளோ என்ற பதற்றமும் ஒரு காரணம். அதன் பிறகு, சத்யரூபாவை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டான்.

இந்திரஜித் பற்றி நன்றாக அறிந்த வைஷாலிக்கும், அவன் தங்கையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. தனது திருமணம் முடிந்ததும், அவனைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறி இருந்தாள்.

சத்யரூபாவிடம் பேசுவதற்கு அருமையான வாய்ப்பாக கிடைத்தது ஜீவி வைஷாலியின் திருமண நாடகம். எனக் கூறி முடித்தவனை பொங்கிய சிரிப்புடன் பார்த்திருந்தாள் சத்யரூபா.

இருந்தும் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டவளை கொலைவெறியுடன் பார்த்தான் இந்திரஜித்.

“சிரிக்காதடி… இல்ல நானும் தெரியாம தான் கேட்குறேன். உன்னை பார்த்த செகண்ட்ல எனக்கு ஒரு ஸ்பார்க் வந்த மாதிரி, என்ன பார்த்தப்போ உனக்கு சின்ன ஸ்பார்க் கூட வரலையாடி. வைஷுவை பொண்ணு பார்க்க வரும் போது கூட்டத்தோட வந்தா தனியா தெரிய மாட்டேன்னு, தனியா என்ட்ரி குடுத்தேன். நீ என்னனா, வண்டியை இங்க பார்க் பண்ணாத அங்க பார்க் பண்ணாதன்னு, வாட்ச்மேன் மாதிரி, கத்திட்டு இருக்க. சரி, பர்ஸ்ட் இம்ப்ரெஷன் தான், ஊத்திக்கிச்சுன்னு, அப்பறம் பேச வந்தா, அப்பவும் ஏதோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி என்னை பார்த்து முறைச்சுட்டே இருந்த” என உதட்டைக் குவித்து கண்ணை சுருக்கி சிறுவனாக குறை கூறினான்.

அவன் பேச பேச சிரிப்பின் சத்தம் அதிகரித்துக் கொண்டே போக, அவளோ எழுந்து நின்றே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

“ஐயோ என்னால முடியல ஜித்து… ஹா ஹா…” என்று சத்தமிட்டு நகைத்தவளை அதிகமாக ரசித்தாலும் பொய்க்கோபம் கொண்டவன், “எதுக்குடி சிரிக்கிற?” என்றான் முறைப்பாக.

“இல்ல… ஒருவேளை வைஷுக்கா உங்களை எனக்கு இன்ட்ரோ குடுத்து, நான் உங்களை அண்ணன்னு கூப்பிட்டு இருந்தா உங்க ரியாக்ஷன் எப்படி இருந்துருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன்… ஹையோ ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல.” என்றாள் மூச்சு வாங்க.

“அப்படி ஒரு சிட்டுவேஷன் வந்துருந்தா, கொஞ்சம் கூட சுற்றுப்புறத்தை மதிக்காம, லிப் டு லிப் கிஸ் அடிச்சுருப்பேன்.” தோளைக்குலுக்கி அசட்டையுடன் அவன் கூறியதில், சட்டென சிரிப்பை நிறுத்தியவள், “ஹான்?” என மலங்க மலங்க விழித்தாள்.

“இதையும் நினைச்சு பாரேன்… நல்லா இருக்கும்ல…” அர்த்தப்புன்னகையுடன் இந்திரஜித் கேட்டதில், “போயா” என வெட்கம் கொண்டு சிணுங்கினாள் பாவை.

அவனும் அதனை ரசித்து விட்டு, “ஆனாலும் எனக்கு உன்மேல செம்ம கோபம் புஜிலி… இங்க ஒருத்தன் உன்னை உருகி உருகி காதலிச்சுட்டு இருக்கேன்… என்னை பார்த்ததும் கூட ஸ்பார்க் வர வேணாம். அட்லீஸ்ட் பார்க்க பார்க்க ஒரு பட்டாம்பூச்சி கூடவா உனக்கு ஓடல. மனசாட்சியே இல்லாம, ரொம்ப அசால்ட்டா வைஷுவை கல்யாணம் பண்ண சொன்னப்ப. எவ்ளோ ஹர்ட் ஆச்சு தெரியுமாடி.

எனக்கு இருக்குற பீலிங்ஸ், உனக்கு என் மேல இல்லைன்னு பச்சையா தெரிஞ்சதும், மனசே பிரேக் ஆன மாதிரி இருந்துச்சுடி. ஆனாலும் அதை அப்போ அப்போ ஒட்ட வைச்சு உன்னை லவ் பண்ண வைக்கிறதுக்குள்ள, என்னை சமாதானம் பண்றதே எனக்கு பெரும்பாடா இருந்துச்சு…” என்று விளையாட்டாக பேச வந்தவன், இறுதியில் அவனையும் மீறிய வேதனையுடன் முடித்தான்.

அதில் சட்டென முகம் மாறியவள், முன் போலவே, அவன் மடியில் அமர்ந்து, அவனது தோள்களில் கரங்களை மாலையாக்கி, “நீங்க என்னை லவ் பண்றதே எனக்கு தெரியாதே ஜித்து. உண்மையை சொல்லணும்ன்னா, பார்த்ததும் லவ் பண்ற நிலமைல நான் இல்ல. சொல்லப்போனா, காதல்ன்ற உணர்வே, உங்க கூட பழகி பார்த்ததுக்கு அப்பறம் தான் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுது ஜித்து. தெரியாத ஒரு விஷயத்தை, எப்படி உணர முடியும்?” எனத் தலை சரித்துக் கேட்டவள்,

“உங்களை முதல் முதல்ல பார்த்தப்ப வராத ஸ்பார்க், கல்யாணத்துக்கு அப்பறம், தினம் தினம் வந்துச்சு ஜித்து. என் மேல நீங்க காட்டுன பாசத்துலையும் அக்கறையிலையும் என் உணர்வுகளை மதிச்ச ஒவ்வொரு செகண்டும் உங்க மேல புதுசு புதுசா ஸ்பார்க் வந்துட்டே தான் இருந்துச்சு. ஏன், கல்யாணத்துக்கு முன்னாடி வந்தா தான் லவ் அட் பர்ஸ்ட் சைட்டா? கல்யாணத்துக்கு அப்பறம், உங்கள காதலோட பார்க்க ஆரம்பிச்சப்பவே அதுவும் லவ் அட் பர்ஸ்ட் சைட் தான். நம்ம பாக்குற கோணம் மாறும் போது, ஒவ்வொரு பார்வையும் புதுசு தான் ஜித்து. எனக்கு நீங்க தினம் தினம், புது கோணத்துல தான் தெரியுவீங்க. சோ, உங்களை பார்க்குற ஒவ்வொரு தடவையும் என் காதலும் புதுசாவே தான் இருக்கும். என்று அவன் கன்னத்தில் மென்முத்தம் பதித்தாள்.

அவளது காதலில் மூழ்கி இருந்தவனிடம், கமறிய குரலில், “சாரி ஜித்து. நான் பேசுனது உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சுல. சாரி…” என பேசும் முன்னே, அவளை நேசம் பொங்க பார்த்திருந்த இந்திரஜித், மேலும் பேச இயலாதவாறு இதழ்களை சிறை செய்தான்.

காதலை பேசி பேசித் தீர்த்த இரு ஜோடிகளும், இரு நாட்கள் கழித்து காயம் சற்று மட்டுப்பட்டதும் தான் சென்னைக்கு கிளம்பி வந்தது.

அவ்விரு நாட்களும், வைஷாலியும் சத்யாவும் வெகு நாட்கள் கழித்து, ஒன்றாக அவர்கள் வீட்டில் நேரத்தை செலவழித்தது, மனதிற்கும் இதமாக இருந்தது.

எழிலுக்கு தான் இன்னும் கூட தகப்பனின் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர இயலவில்லை. இந்திரஜித்தை காணும் போது ஏற்பட்ட குற்ற உணர்ச்சியையும் தடுக்க இயலாமல் போக, முதல் நாள் கண்டுகொள்ளாமல் விட்ட இந்திரஜித், மறுநாளும் அதுவே தொடர்ந்ததும்,

“ஓங்கி ஒண்ணு விட்டா தான் நீ நார்மல் ஆகுவன்னு நினைக்கிறேன். சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுட்டு கடுப்பை கிளப்பாத.” என்று அதட்டியதில் தான், அவனும் மனதை சரி செய்து கொண்டான்.

பின் நால்வரும், இரவு நெருங்கும் நேரத்திற்கு தான், சென்னைக்கு வந்து இறங்கினர். வீட்டு வாசல் வரை வந்து விட்ட, சத்யரூபாவிற்கு உள்ளே வர ஒரு தயக்கம்.

அங்கேயே நின்று விட்ட மனையாளை குழப்பமாகப் பார்த்த இந்திரஜித், “என்ன ஆச்சு தியாக்குட்டி?” எனக் கேட்க,

“நான் பாட்டுக்கு கோபத்துல, அத்தைகிட்ட சொல்லாம வந்துட்டேன். என் மேல கோபமா இருக்காங்களா?” என்றாள் பரிதாபமாக.

“இப்ப தான் உனக்கு அந்த சர்வாதிகாரியோட ஞாபகமே வருதாக்கும்” என கிண்டலாகப் பார்த்தவன், “எப்படியும் கன்னம் பழுக்கும்ன்னு நினைக்கிறேன்.” என நமுட்டு சிரிப்புடன் உள்ளே இழுத்து வந்தான்.

சத்யாவைப் பார்த்ததும் முறைத்து வைத்த பானுரேகா, மகனின் காயத்தைக் கண்டதும் பதறினார்.

“என்ன ஆச்சு இந்தர். இவ்ளோ பெரிய காயம் எப்படி ஆச்சு?” என்றவரின் சத்தத்தில் பாலகிருஷ்ணனும் அடித்து பிடித்து வெளியில் வந்து கலங்கினார்.

“என்னடா இது?” என ஆதங்கத்துடன் கேட்க, அதன் பிறகே நடந்ததை அறிந்து, இரு பெரியவர்களும் வருந்தினர்.

“பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு இருக்கீங்க. இனிமே இப்படி சொல்லாம கொள்ளாம யாராவது வீட்டை விட்டு கிளம்புனீங்கன்னா பாத்துக்கங்க…” என்று பானுரேகா மறைமுகமாக சத்யாவை அதட்ட, அவள் சுருங்கிய முகத்துடன் “சாரி அத்தை” என அவரை ஏறிட இயலாமல், கணவனை ஒட்டியே நின்றாள்.

“உனக்கு ஒரு பிரச்சனைன்னா, அதை எங்ககிட்ட சொல்லிட்டு கூட முடிவெடுக்க மாட்டியா?” என சீறிட, அவள் பாவமாக பார்த்தாள்.

“நீ வந்ததும் உன்னை சப்புன்னு அடிக்கணும்ன்னு தான் நினைச்சேன். இந்த சார் தான், என் பொண்டாட்டிக்கிட்ட உங்க வீரத்தை காட்ட கூடாதுன்னு காலைலயே போன் பண்ணி, பொண்டாட்டி புராணம் பாடுனாரு.” என்று இந்திரஜித்தை முறைத்தவர், “அப்போ கூட உனக்கு அடி பட்டத சொல்லலைல?” என்றார் தவிப்புடன்.

தாயையும் தந்தையையும் பேசி சமாதானம் செய்து அறைக்குஅனுப்பிய கணவனை காதலோடு நோக்கிக் கொண்டிருந்தாள் சத்யரூபா.

மெல்ல வெளியில் எட்டிப் பார்த்த சிரஞ்சீவி, “அப்பாடா… இந்த கலவரத்துல அம்மா நம்ம அவனுக்கு அடிபட்டதை மறைச்சதை மறந்துட்டாங்க.” என நிம்மதி பெருமூச்சுடன் வர,அறையில் இருந்து பானுரேகா குரல் கொடுத்தார்.

“ஜீவி உனக்கு தனியா இருக்கு. வந்து வச்சுக்குறேன்” என்றார் அதட்டலாக.

அதில் நொந்தவன், “சும்மா இருக்குற என்னை தான்டா எல்லாரும் அடிக்கிறீங்க” எனத் தம்பியை முறைக்க, அவன் வாய்விட்டு சிரித்தான்.

நீரஜாவும் வெளியில் வந்து அவர்களுடன் இணைந்து கொள்ள, சிரஞ்சீவியைக் காண தான் அத்தனை வெட்கமாக இருந்தது. கடந்து சென்ற இரவுகள், அவர்களுக்கு இனிய இரவாக அமைந்திருக்க, இன்னும் இருவரும் அந்த மோன நிலையில் இருந்து முழுதாய் வெளிவரவில்லை.

அவர்களின் பார்வைக் கொஞ்சல் மொழிகள் ஒரு புறம் ஓட,

வைஷாலி தான் தங்கையின் பார்வையைக் கண்டுகொண்டு, இந்திரஜித்திடம், “இந்தர்… அவள் உன்னை விடுற ஜொள்ளுல, இப்போ நீயே முங்கி நீச்சல் அடிச்சுடுவ போல” என வாரிட, அதில் வெட்க முறுவல் பூத்தவன், “அங்க மட்டும் என்ன வாழுதாம்… உன் ஆளு உன்னை பார்க்குற பார்வையில, சுனாமியே வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல…” என்று நக்கலடித்ததும் அவள் இதழ்களிலும் நாணப்புன்னகை.

இருவரும் குசுகுசுவென பேசியதில், எழிலழகனும் சத்யரூபாவும் ஒருசேர முறைத்தனர்.

“சது… நீ இவனை எல்லாம் மன்னிச்சுருக்கவே கூடாது. எப்படி ஏமாத்தி இருக்கான் பாரேன்” என்று வேண்டுமென்றே போட்டுக்கொடுக்க,

“வைஷுமா, அவன் உன் லவ்வை புருஞ்சிக்காம இருந்ததுக்கு, நீ இந்த ஜென்மத்துல அவன் கூட பேசிருக்கவே கூடாது” எனத் தன் பங்கிற்கு போட்டுக்கொடுத்தான் இந்திரஜித்.

அதில் எழில் கடுப்பாகி, “அவளை வைஷுமான்னு கூப்பிடாத” என்று பல்லைக்கடிக்க,

“நீயும் அவளை சதுன்னு கூப்பிடாத” என்று அவனும் முறைத்தான்.

அவர்களின் ‘பொசெசிவ்னெஸ்’ கண்டு இரு பெண்களும் தான் தலையில் அடித்துக் கொண்டனர். சிரஞ்சீவியோ, “ஐயோ… போதும் டா டேய்… நீ வா வாட்டர். இவனுங்களுக்கு மத்தில இருந்தோம்ன்னா, நமக்கு கிறுக்கு பிடிச்சுடும்” என்று மனையாளை இழுத்துச் சென்றான்.

இரு ஆடவர்களும் முறைத்துக் கொண்டே அவரவர் அறைக்கு சென்று விட, “ஏன் அத்தான் அவனோட மல்லுக்கு நிக்கிறீங்க?” என போலி முறைப்பை பரிசளித்தாள் வைஷாலி.

எழிலோ அவளை ஆழ்ந்து பார்த்தபடி, கதவை தாழிட்டு, “அப்போ உன்கூட மல்லுக்கு நிக்கவா பேபி…” எனக் கிறக்கத்துடன் கேட்டு அவள் முன்னே அடி எடுத்து வைத்தான்.

அவனது பார்வையில், நெஞ்சம் படபடக்க, இமைகள் பதட்டத்துடன் சிமிட்டிக்கொள்ள, “அத்… அத்தான்…!” என்று திணறியவள், லேசாக பின்னால் நகர எத்தனிக்கும் போதே, அவளை சுற்றி வளைத்து அவன் மீது மோத வைத்தான்.

ஆடவனின் நெருக்கம், காதல் கொண்ட பாவையை மயங்க வைக்க, எழில் அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

“நமக்கு பொண்ணு பிறக்க வேணாமா பேபி…” குறும்புடன் கேட்டவனை ஏறிட இயலாமல், தவித்தாள்.

“நீ தான ஆசைப்பட்ட?” என சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை வெட்கப்பட வைத்தான் எழில்.

“ஐயோ போதுமே அத்தான்! எனக்கு வெட்கமா இருக்கு” என்று முதுகு காட்டி நின்று கொள்ள, அவளது பின்னழகு அவனைக் கொள்ளையடித்தது.

பின்னங்கழுத்தில் மென்முத்தம் வைத்தவன், “இன்னும் எதுவுமே கொடுக்கல. போதும்ன்னு சொல்ற. இதுலாம் போங்கு பேபி…” எனக் குரல் தேய கூறினான்.

அவளோ, அவன் கொடுத்த முத்தத்திலேயே, மொத்தமாக சரணடைந்து கண்மூடி நிற்க, அதுவே, தன்னவளை முழுதாகக் களவாட வைத்தது.

—–

தனது அறையை சாவி கொண்டு திறந்த இந்திரஜித்தைப் புரியாமல் பார்த்த சத்யரூபா, “ரூமை பூட்டிட்டா வந்தீங்க. ஏன் ஜித்து?” எனக் கேட்டபடி உள்ளே சென்று, திகைத்தாள்.

அன்று, அவள் விட்டு சென்றது போன்றே இருந்தது அறையும், அந்த மெத்தையும்.

“என்ன ஜித்து, பெட்ஷீட்டை கூட மடிச்சு வைக்கலையா? எல்லாம் அப்படியே இருக்கு.” என வியப்பாக கேட்டதில்,

தன்னவளை பார்வையால் துளைத்தவன், “எதையும் ஒழுங்கு படுத்த தோணல. நீ எப்படி விட்டுட்டு போனியோ அப்படியே தான் இருக்கோம், நானும் என் ரூமும்.” என ஆழ்க்குரலில் கூறியதில், திகைத்து நின்றாள்.

கூடவே, “அதுவும், இந்த ஸ்வீட் மெமரியை என்னால கலைக்க முடியல” என கலைந்திருந்த மெத்தை விரிப்பைக் கண் காட்டியதில், ஜிவ்வென சிவப்பு பரவியது அவளுக்கு.

பெண்ணவளின் மேனி வெளிப்படுத்திய நாணம், அவனை மீண்டும் அன்று விட்ட மோக நிலைக்கு தள்ளி விட்டிருக்க, கையை ஏந்திக் கொண்டிருந்த ஸ்லிங்கை கழற்றினான்.

அதில் பதறி, “ஏன் ஜித்து அதை எடுக்குறீங்க வலிக்க போகுது” என்றிட,

“வலிக்கல தியாக்குட்டி. ஸ்வீட் மெமரியை ரீ கிரியேட் பண்ணலாமா?” என்றான் விழிகள் காட்டிய காதலோடு.

அவளுக்கு தான் வெட்கம் அத்து மீறி வந்து தொலைக்க, வேண்டும் என்று மனம் சொன்னாலும், கூச்சம் தடை செய்தது.

“இ… இப்பவா?” எனத் தடுமாறி கேட்டவளிடம், “இ… இப்போ தான்” என அழகு காட்டினான் அவளைப் போன்றே.

மந்தகாசப் புன்னகையுடனும், காதல் போதை தலைக்கேறி அவளை நெருங்கியவனை தள்ளத் தோன்றாமல் நின்றவள், லேசாக பின்னால் நகர்ந்திட, கட்டிலில் இடித்து விழுந்தே விட்டாள்.

அதற்கும், குறும்பு நகை வீசியவன், அவள் மீது மெல்ல படர்ந்து, பெண்ணவளை மெல்ல மெல்ல மலர வைத்து, பூவினும் மென்மையுடன் அவளை பூக்கச் செய்தான்.

கலைந்திருந்த மெத்தை விரிப்புகளை, மீண்டும் கலைய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மோகத்தோடு சேர்த்து, இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த காதலையும் அழகாய் பரிமாறிக்கொண்டனர்.

மேகா!

ஹாய் டியர் பிரெண்ட்ஸ்… ஒரு குட்டி எபிலாக் மட்டும் இருக்கு. அதை நைட்டுக்குள்ள போடுறேன்.

எப்பவும் போல உங்க சப்போர்ட் அண்ட் லவ் பார்த்து ஐ ஆம் சோ ஹாப்பி. Thank you soooo much all for ur wonderful support comments ratings stickers 🥰🥰🥰🥰 story epdi irunthuchu nu solunga drs… 🤩🤩🤩 I am waiting.

And romba sorry, ennala yarukum avlova reply pana mudiyala. Muidncha alavu apo apo vanthu reply panrrn drs .   🩷

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
140
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. பெண்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் கண்ட பல்வேறு அனுபவங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். தெளிந்த எழுத்து நடை. மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.