காலையிலேயே காவல் நிலையத்துக்கு சென்றவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அவன் அனுபல்லவியின் உறவுக்காரர் தான் என்பதை அவளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட போலீஸுடன் பேசி அன்றே அனுஷியாவின் உடலை வாங்கினான்.
பிரதாப் தான் அனுபல்லவி பற்றிய தகவல்கள் செய்திகளில் வராமல் பார்த்துக் கொண்டான்.
அது பற்றி அறிந்த அனுபல்லவிக்கு பிரதாப்பின் செயல் நிம்மதியைத் தந்தாலும் ஏனோ அவனை முழுவதுமாக நம்ப மனம் ஒப்பவில்லை.
அதற்குக் காரணம் அடிக்கடி அவள் மீது பதியும் பிரதாப்பின் வெறுப்பான பார்வை ஆகும்.
பல முறை அதனை கண்டுகொண்டும், உணர்ந்தும் இருக்கிறாள் அனுபல்லவி.
அனுஷியாவின் உடலை அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குக் கொண்டு வந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
பிரதாப் தான் அனைத்தையும் முன் நின்று செய்தான்.
அனுபல்லவியிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தான் அவ்வாறு செய்வதாக தன்னையே பிரதாப் சமாதானம் செய்து கொண்டாலும் அவனின் உள் மனத்திற்குத் தெரியும் அனுஷியா மீது ஆழ் மனதில் இருந்த பாசம் தான் காரணம் என்று.
ஆனால் அதனை ஏற்கத் தான் அவனுக்கு மனம் வரவில்லை.
அந்தளவுக்கு பிரதாப்பை மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர் அவனது பெற்றோர்.
இறுதியாக அனுஷியாவின் உடலை கொண்டு செல்ல முயன்ற போது அனுபல்லவி தன் தாயின் உயிரற்ற உடலைக் கட்டிக் கொண்டு கதறிய கதறலில் பிரதாப்பின் இரும்பு மனமே இளகியது.
ஒருவாறு அவளை சமாதானப்படுத்தி அனுஷியாவின் உடலை எடுத்து சொல்ல, அனுபல்லவி தன் கையாலேயே தாய்க்கு கொள்ளி வைத்தாள்.
கொழுந்து விட்டெரியும் நெருப்பை வெறித்த வண்ணம் நின்றிருந்த அனுபல்லவியை அந் நொடியே தனிமையின் கொடுமை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.
ஒரு வாரம் கடந்திருக்க, பக்கத்து வீட்டுப் பெண்மணி அனுபல்லவியுடனே தங்கி அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்து விட்டு துணைக்கும் நின்றாள்.
இடைக்கிடையே பிரதாப் வந்து அனுபல்லவியைப் பார்த்து விட்டுப் போவான்.
அவனுக்கு அனுபல்லவியை எவ்வாறு அழைத்துச் செல்வது என்று யோசிப்பதற்கே நேரம் வேண்டிக் கிடந்தது.
அதுவுமில்லாமல் அவனுக்கு அனுபல்லவியுடன் ஏனோ சாதாரணமாக உரையாடவே முடியவில்லை.
தாயின் வார்த்தைகள் மட்டும் தான் அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கு நினைவுக்கு வரும்.
எங்கு தன்னையும் மீறி தன் நோக்கத்தை அவளுக்கு தெரியப்படுத்தி விட்டால் அனுபல்லவி தன்னுடன் வர மறுத்து விடுவாள் என்று பயந்தான்.
அதன்படியே அன்று காலை அனுபல்லவிக்குத் துணையாக நிற்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு ஏதோ அவசர வேலை என்று வெளியே சென்றிருக்க, அங்கு வந்தான் பிரதாப்.
அனுஷியாவின் புகைப்படத்தின் அருகே தரையோடு சாய்ந்து கிடந்தவளின் அருகே சென்று குரலை செறுமினான்.
கண் மூடிக் கிடந்த அனுபல்லவியோ தன் தாயுடன் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, பிரதாப்பின் வருகையை அவள் உணரவில்லை.
“அனு… அனு…” என பிரதாப் அழைக்க, அனுபல்லவி பதலளிக்காது போகவும், “அனு…” என்றான் பிரதாப் சற்று அதட்டலான குரலில்.
அதில் பதறிக் கண் விழித்தவளின் அருகே முகம் இறுக நின்றிருந்தான் பிரதாப்.
ஏனோ அவனைக் காணும் போதெல்லாம் அனுஷியா அவனின் பெற்றோரைப் பற்றிக் கூறியவைகள் தான் அனுபல்லவிக்கு நினைவுக்கு வந்தன.
பிரதாப்பைப் பற்றி அனுஷியா நல்ல விதமாகக் கூறி இருந்தாலும் அனுபல்லவியின் உள் மனம் அதற்கு மாறாகக் கூறியது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே ஒரு சம்பவம் முன் தினம் நடந்தது.
முன் தினம் அனுபல்லவியைப் பார்க்க வந்த பிரதாப் அவளிடம் சாதாரணமாக நலம் விசாரித்து விட்டுக் கிளம்ப, அவன் தன் பர்ஸை மறந்து அங்கேயே விட்டுப் போயிருந்தான்.
அதனைக் கண்ட அனுபல்லவி உடனே அதனை பிரதாப்பிடம் வழங்குவதற்காக அவசரமாக வெளியே ஓட, அங்கு வாசலில் சற்றுத் தள்ளி நின்றிருந்த பிரதாப் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனின் வார்த்தைகள் அனுஷியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம் மா. எல்லாம் நம்ம திட்டப்படியே நிச்சயம் நடக்கும். நாளைக்கே நான் அவள என்னோட கூட்டி வரேன். நீங்க கோயில்ல சிம்பிளா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. எங்க கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண அடுத்த நிமிஷமே அவ கையெழுத்த வாங்கி மொத்த சொத்தையும் நம்ம பெயருக்கு மாத்திக் கொள்ளலாம். அப்புறம் அவ அம்மா நம்ம குடும்பத்துக்கு செஞ்ச அநியாயம் எல்லாத்துக்கும் சேர்த்து அவங்க பொண்ணுக்கு நரகம்னா என்னன்னு நான் காட்டுறேன்.” என்றான் பிரதாப் வன்மமாக.
அவ் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த அனுபல்லவிக்கு அனுஷியா அவனைப் பற்றி எவ்வளவு நல்ல விதமாக எண்ணி இருந்தாள் என்ற நினைவு கண்ணீரை வரவழைத்தது.
அனுஷியாவின் நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டானே.
அதுவும் பெற்றோருடன் சேர்த்து என்ன அழகாகத் திட்டம் போடுகிறான் என் நினைத்த அனுபல்லவி பிரதாப்பை அடியோடு வெறுத்தாள்.
மறு நொடியே அச் சொத்துக்கள் தனக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இக் கயவர்களின் கையை சென்றடையக் கூடாது என முடிவு செய்தாள் அனுபல்லவி.
பிரதாப் பார்க்கும் முன்னே சத்தம் காட்டாது வந்த வழியே உள்ளே சென்றாள் அனுபல்லவி.
ஹேமாவுடன் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த பிரதாப் அப்போது தான் பர்ஸை மறந்து உள்ளேயே வைத்து விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் உள்ளே சென்றான்.
பர்ஸை இருந்த இடத்திலேயே வைத்த அனுபல்லவி அனுஷியாவின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.
அவளைத் திருப்பி ஒரு பார்வை பார்த்த பிரதாப் தன் பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
முகம் இறுக நின்றிருந்த பிரதாப்பையே அனுபல்லவி குழப்பமாக நோக்கவும் தன் முகத்தை சீராக வைத்துக்கொண்ட பிரதாப், “உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை. ஊருக்கு போகணும்.” என்றான்.
அதனைக் கேட்டு அனுபல்லவி அதிர்ந்து மறுப்பாக ஏதோ கூற முயல, “உன்ன இங்க தனியா விட்டுட்டுப் போக முடியாது என்னால. அங்க உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. நீ இங்க தனியா இருந்து கஷ்டப்பட அவசியம் இல்ல. அத்தை இருந்திருந்தா அவங்களையும் என் கூட கூட்டிப் போற முடிவுல தான் இருந்தேன்.” என வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பேசினான் பிரதாப்.
அனுஷியா அவனை வரவேற்ற விதத்தில் அவள் அனுபல்லவியிடம் தன் பெற்றோரைப் பற்றி தவறாக எதுவும் திரித்துக் கதை கட்டி இருக்க மாட்டாள் என எண்ணி விட்டான் அவன்.
ஆனால் அவன் அறியவில்லை அனுஷியா தன் மகளிடம் திரித்த கதை இல்லாமல் உண்மைகள் அனைத்தையும் கூறி விட்டாள் என்று.
பிரதாப்பின் வாய் ஒன்று கூறினாலும் அவனின் கண்கள் அனுபல்லவியைப் பார்க்கும் போது வெறுப்பை அப்பட்டமாகக் காட்டுவதை உணர்ந்த அனுபல்லவி அவன் வழியிலேயே சென்று அவனை மடக்க முடிவு செய்தாள்.
அனுபல்லவி உடனே சரி எனத் தலையசைக்க, அதனை பிரதாப் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.
“சரி மாமா. காலேஜ்ல என் சர்டிபிகேட் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. நான் போய் அதை வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம் எல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்றாள் அனுபல்லவி.
அது தான் அனுபல்லவி இவ்வளவு கோர்வையாக பிரதாப்பிடம் பேசியது.
அதிகம் கஷ்டப்படாமல் தன் காரியம் நடப்பதை எண்ணி மர்மமாகப் புன்னகைத்தான் பிரதாப்.
பின் அவன், “சரி நானும் உன் கூட காலேஜுக்கு வரேன். போற வழியில அப்படியே எடுத்துட்டு போயிடலாம்.” என்க,
“இல்ல மாமா. என் ஃப்ரெண்ட் வரேன்னு சொன்னா. நான் அவ கூட போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?” எனக் கேட்டாள் அனுபல்லவி.
அதற்கு மேல் அவளை வற்புறுத்தினால் எங்கு அவளுக்கு சந்தேகம் வந்து விடுமோ என எண்ணியவன், “சரி அப்போ. நீ எல்லா வேலையையும் முடிச்சிட்டு உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வை. எனக்கும் வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் அதெல்லாம் முடிச்சிட்டு நாளைக்கு உன்ன கூட்டிட்டுப் போக வரேன்.” என்று விட்டுக் கிளம்பினான் பிரதாப்.
அவன் அங்கிருந்து செல்லவும் தான் அனுபல்லவிக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
உடனே அடுத்து அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் திட்டமிட்டவள் யார் யாருக்கோ கைப்பேசியில் அழைத்துப் பேசினாள்.
அன்றே தன் தோழி ஒருத்தியுடன் கல்லூரிக்குச் சென்று தன் சான்றிதழ்களை வாங்கிய அனுபல்லவி அவளின் துணைக்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு உடைமைகளை எடுத்து வைத்தாள்.
சரியாக இரவானதும் வெளியே ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் யாருக்கும் தெரியாது இரவோடு இரவாக பேரூந்தில் பெங்களூர் கிளம்பினாள்.
அவளின் நம்பத் தகுந்த கல்லூரித் தோழன் ஒருவன் தான் அவளுக்கு பெங்களூரில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்தது.
மறுநாள் காலையிலேயே அனுபல்லவியைத் தேடி வந்த பிரதாப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.
பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் விசாரிக்க, அவருக்கும் தெரியாது என்று கூறி விடவே கோபத்தில் பல்லைக் கடித்தான் பிரதாப்.
அனுபல்லவியின் கல்லூரியில் சென்று விசாரிக்க, நேற்று காலையே வந்து சான்றிதழ்களை எடுத்துப் போய் விட்டதாகக் கூறினர்.
பிரதாப்பிற்கு அனுபல்லவியின் நண்பர்கள் யாரையும் தெரியாததால் அவர்களிடமும் விசாரிக்க முடியாமல் போனது.
இருந்தும் அவனுக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்க்க, எங்குமே அனுபல்லவி கிடைக்கவில்லை.
உடனே விஷயத்தைக் கூற ஹேமாவுக்கு அழைக்க, அழைப்பை ஏற்ற மறு நொடியே அவள், “பிரதாப் கண்ணா… வந்துட்டீங்களா? அந்த அனு உன் கூட தான் இருக்காளா? இங்க நானும் அப்பாவும் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டோம். இனிமே நமக்கு விடிவு காலம் தான். சொத்த நம்ம பெயருக்கு மாத்தினதும் அந்த அனுவ உண்டு இல்லன்னு பண்ணணும். அவ அம்மா எப்படி எல்லாம் எங்களுக்கு துரோகம் செஞ்சிட்டா. என் அண்ணன் அநியாயமா சாகவும் அவ தான் காரணம். அவளோட ராசி தான் எல்லாம்.” என பேசிக் கொண்டே செல்ல, “கொஞ்சம் நான் பேசுறத்த கேளுங்க ம்மா.” எனக் கத்தினான் பிரதாப்.
ஹேமா உடனே அமைதியாகி விட, “அந்த அனு அவ அம்மாவ போலவே எங்க கண்ல மண்ண தூவிட்டு தப்பிச்சு போய்ட்டா. ஓடுகாலி கழுதை. எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டேன். எங்கேயுமே அவ இல்ல.” என்றான் பிரதாப் கடுப்பாக.
“என்ன பிரதாப் சொல்ற? அவ தப்பிச்சுட்டாளா? நீ எப்படி அவள தப்பிக்க விட்ட? அவ கூடவே இருந்து இருக்கலாமே. போச்சு. எல்லாமே போச்சு. இந்தத் தடவையும் அந்த அனுஷியா தான் ஜெய்ச்சா. உன்னால ஒரு விஷயத்த கூட உருப்படியா பண்ண முடியாதா? நீ எல்லாம் ஆம்பளன்னு சொல்லிக்திட்டு…” என வாய்க்கு வந்தவாறு கோபமாகப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் ஹேமா.
பிரதாப்போ எல்லாவற்றிற்கும் காரணம் அனுபல்லவி தான் என்று அவள் மீது மேலும் மேலும் வன்மத்தை வளர்த்தான்.
அதன் பின் வந்த நாட்களிலும் அனுபல்லவியைத் தேடுவதை அவன் விடவே இல்லை.
பெங்களூர் வந்த அனுபல்லவி அவளின் நண்பன் கூறிய விடுதியில் தங்கி வேலை தேடினாள்.
பிரணவ்வின் கம்பனியில் அனுபல்லவியின் திறமைக்கு இலகுவாகவே வேலை கிடைத்து விட, அந்த சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாது தனிமை அவளை வாட்டியது.
ஆனால் ஒரே நல்ல விடயமாக அனுபல்லவிக்கு சாருமதியின் நட்பு கிடைக்க, இருவருமே சில நாட்களிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
சாருமதி அவளின் தந்தைக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் வாடகைக்கு இருப்பது தெரிய, அனுபல்லவியும் பாதி வாடகையைக் கொடுத்து அவளுடனேயே தங்கிக் கொண்டாள்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அனுஷியா மரணித்த தினத்தில் மட்டும் யாரிடமும் பேசாமல் அறையே கதியென தனியாக அழுவாள்.
சாருமதி எவ்வளவோ கேட்டும் அதன் காரணத்தைக் கூறவில்லை அனுபல்லவி.