296 views

அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரணவ் ஆகாஷை விட்டு விட்டு தனியாக பல முறை எங்கோ கிளம்பிச் சென்றான்.

 

இயன்றளவு அர்ச்சனா எதையும் அறியாமல் பார்த்துக் கொண்டான்.

 

இடையில் ஒரு நாள் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனியில் ப்ராஜெக்ட்டை யாருக்கு வழங்குவது பற்றிய மீட்டிங்கும் நடந்தது.

 

ஒரு பார்ட்டி போல் வைத்து அனைத்து சக நிறுவனங்களையும் அழைத்து ப்ராஜெக்ட் பற்றி கூற முடிவெடுத்தாள் அனுபல்லவி.

 

அதன்படி மறுநாள் அந்தப் பார்ட்டி நடக்க இருந்தது.

 

பிரணவ் இரவு குளியலறையில் குளித்துக் கொண்டிருக்க, அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

 

அர்ச்சனாவாகத் தான் இருக்கும் என்று சலிப்புடன் சென்று கதவைத் திறந்த ஆகாஷ் அங்கு சாருமதியை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

 

“மதி… நீ இங்க என்ன பண்ணுற?” என அதிர்ச்சியுடன் கேட்டான் ஆகாஷ்.

 

“அனு இங்க தான் இருக்கான்னு நீ சொல்லிட்ட… என்னால அவள பார்க்காம அங்க நிம்மதியாவே இருக்க முடியல…” என்றாள் சாருமதி வருத்தமாக.

 

ஆகாஷ், “நான் தான் உன்ன நான் சொல்லும் வரை வர வேணாம்னு சொன்னேன்ல…” எனக் கோபமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “யாரு ஆகாஷ்?” எனக் கேட்டவாறு தலையைத் துவட்டியபடி வந்தான் பிரணவ்.

 

“பாஸ் அது…” என ஆகாஷ் தயங்கும் போதே சாருமதியைக் கண்டு கொண்ட பிரணவ், “நீங்க எப்போ வந்தீங்க சாருமதி?” எனக் கேட்டான்.

 

ஆகாஷ் வாய் திறக்க முன் தானே முந்திக்கொண்ட சாருமதி, “என் ஃப்ரெண்ட் ஒருத்திய மீட் பண்ண வந்தேன் சார்… பார்த்து ரொம்ப வருஷமாச்சு… அப்படியே ஆகாஷையும் பார்த்துட்டு போலாம்னு தான் இங்க வந்தேன்…” எனப் பதிலளித்தாள்.

 

ஆகாஷ் அவளை ஏகத்துக்கும் முறைக்க, “ஓஹ்…” என்று மட்டும் கூறினான் பிரணவ்.

 

சாருமதி, “சார்… இஃப் யூ டோன்ட் மைன்ட் ஆகாஷை கொஞ்சம் நேரத்துக்கு என் கூட கூட்டிட்டு போகட்டுமா?” என அனுமதி கேட்கவும், “என் கிட்ட எதுக்கு பர்மிஷன் கேட்குறீங்க சாருமதி? உங்க பாய் ஃப்ரெண்ட்… நீங்க எங்க வேணாலும் கூட்டிட்டு போகலாம்…” என்றான் பிரணவ்.

 

உடனே, “தேங்க்ஸ் சார்…” என்று விட்டு ஆகாஷை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள் சாருமதி.

 

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் சாருமதியின் கரத்தை உதறிய ஆகாஷ், “என்ன பண்ண போற மதி நீ? அதுவும் இந்த ராத்திரில? எங்க போறோம் நாம?” எனக் கேட்டான் கோபமாக.

 

“ஆஹ்… உன்ன ரேப் பண்ண போறேன்…” என்ற சாருமதியின் பதிலில் ஆகாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, “த்தூ… மூஞ்ச பாரு… கேட்குறான் பாரு கேள்வி… வேற எங்க? அனுவ பார்க்க தான் போறோம்…” என்றாள் சாருமதி.

 

ஆகாஷ், “உன் கிட்ட அனு வீட்டு அட்ரஸ் கிடைச்சிடுச்சுன்னு சொன்னது தப்பா போச்சு…” எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

 

அவனை முறைத்த சாருமதி ஆகாஷை விட்டு தனியே சென்று ஆட்டோ பிடித்தாள்.

 

“ஹேய் இரு டி நானும் வரேன்…” எனக் கத்திய ஆகாஷ் அவசரமாகச் சென்று சாருமதியைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறினான்.

 

ஆகாஷும் சாருமதியும் அனுபல்லவியின் வீட்டை அடையவும் வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு வாயை பிளந்தாள் சாருமதி.

 

“ஆகாஷ்… நீங்க சொன்னப்போ கூட நான் நம்பல… ஆனா இவ்வளவு பெரிய வீட்டுல நம்ம அனுவா?” என சாருமதி ஆச்சர்யப்பட்டாள்.

 

“அவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டியா இருக்கா… இந்த வீடெல்லாம் எம் மாத்திரம்?” என்றான் ஆகாஷ் நக்கலாக.

 

இவர்கள் இங்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்த செக்கியூரிட்டி டிவைஸில் இவர்கள் வந்ததைப் பார்த்து விட்ட அனுபல்லவி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

 

அதுவும் பல வருடங்கள் கழித்து தன் உயிர்த் தோழியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொள்ளக் கட்டளை இட்டது மனம்.

 

இருந்தும் அவளால் அதனை செய்ய இயலவில்லை.

 

“நான் அவங்கள உள்ள வர சொல்லிட்டு வரேன்…” என பிரதாப் செல்லப் பார்க்கவும், “வேணாம் இருங்க மாமா…” என அவனைத் தடுத்த அனுபல்லவி வாட்ச்மேனிற்கு அழைத்து அவர்களை உள்ளே விட வேண்டாம் என்றும் ஏதாவது கூறி உடனே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கவும் எனவும் கட்டளை இட்டாள்.

 

ஆகாஷ் வாட்ச்மேனிடம் சென்று அனுபல்லவியைக் காண வேண்டும் என்று கூற, “மேடம் வீட்டுல இல்ல… அவங்க ஹஸ்பன்ட் கூட வெளிய போய் இருக்காங்க…” என மறுத்தார் வாட்ச்மேன்.

 

அனுபல்லவி வீட்டில் இல்லை. அதுவும் கணவனுடன் வெளியே சென்றிருக்கிறாள் என்று கூறவும் முகம் வாடிய சாருமதி, “அண்ணா… அது… அனு ஹஸ்பன்ட்னு சொன்னீங்களே… அது… பிரதாப்பா அவர் பெயர்?” என வாட்ச்மேனிடம் கேட்டாள் அவர் இல்லை என்று கூற வேண்டும் என எதிர்ப்பார்த்தபடி.

 

ஆகாஷும் அதே கேள்வியுடன் வாட்ச்மேனின் முகம் நோக்க, “ஆமாங்கம்மா… சார் பெயர் பிரதாப் தான்…” என வாட்ச்மேன் கூறவும் வேறு எதுவும் கூறாது இருவருமே அங்கிருந்து கிளம்பினர்.

 

வெளியே நடப்பதை ஒன்று விடாமல் செக்கியூரிட்டி டிவைஸ் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் விழிகளோ கண்ணீரை சிந்தின.

 

“அவங்க போனதுக்கு அப்புறம் இப்படி அழுறதுக்கு பேசாம அவங்க கூட போய் பேசி இருக்கலாம்ல…” என பிரதாப் முணுமுணுக்க, அது அனுபல்லவியின் காதில் தெளிவாகவே விழுந்தது.

 

சட்டெனத் திரும்பி பிரதாப்பை முறைத்தவள், “எந்த மூஞ்சோட போய் அவங்க முன்னாடி நிற்க சொல்றீங்க?” என ஆத்திரத்துடன் கேட்டு விட்டு விருட்டென அங்கிருந்து சென்று விட்டாள்.

 

************************************

 

மறுநாள் மாலை பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பிரணவ் மிகவும் உற்சாகமாக அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

 

“பாஸ்… ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல… ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு கிடைக்கணும்னு ஏதாவது தகிடுதனம் பண்ணிட்டீங்களா என்ன?” எனக் கேட்டான் ஆகாஷ் சந்தேகமாக.

 

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், “என்ன ஆகாஷ் இப்படி கேட்டுட்டீங்க? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” எனக் கேட்கவும், “பார்த்தா அப்படி தெரியல… ஆனா பண்ணுற காரியம் எல்லாம் அப்படி தானே இருக்கு… எந்த நேரத்துல என்ன பண்ணுவீங்கன்னு கெஸ் பண்ணவே முடியாது…” என முணுமுணுத்தான் ஆகாஷ்.

 

பிரணவ், “ஏதாவது சொன்னீங்களா ஆகாஷ்?” எனக் கேட்கவும், “இ…இல்ல பாஸ்… ஒன்னுமில்ல… நான் சும்மா தனியா உளறுறேன்…” என்றான் ஆகாஷ் அவசரமாக.

 

“அது சரி… ஆமா சாருமதி ஊருக்கு கிளம்பிட்டாங்களா? அவ ஃப்ரெண்ட பார்த்தீங்களா?” எனக் கேட்டான் பிரணவ் தன் கோர்ட்டை அணிந்தபடி.

 

ஆகாஷ், “இல்ல பாஸ்… அவ ஃப்ரெண்ட் நாங்க போகும் போது அவங்க ஹஸ்பன்ட் கூட வெளியே போய் இருந்தாங்க… அதான் மீட் பண்ண கிடைக்கல… மதியும் இதே ஹோட்டல்ல தான் தங்கி இருக்கா… எப்படியும் பார்ட்டி முடிஞ்சி கிளம்பிடுவோம் தானே… அதான் எங்க கூடவே போக இருக்க சொன்னேன்…” என்றான்.

 

“ஓஹ்… பார்ட்டி முடிஞ்சதும் நீங்க கிளம்பிடுவீங்களா? ஹ்ம்ம்… அதுவும் நல்லதுக்கு தான்…” என்ற பிரணவ்வின் கூற்றில் குழம்பிய ஆகாஷ், “அப்போ நீங்க வரலயா பாஸ் எங்க கூட?” எனக் கேட்டான் புரியாமல்.

 

பதிலுக்கு மந்தகாசப் புன்னகை ஒன்றை சிந்திய பிரணவ் அறைக் கதவு தட்டப்படவும் அவனே சென்று கதவைத் திறந்தான்‌.

 

அர்ச்சனா முழங்கால் வரை மட்டுமே இருந்த பளிச்சென மின்னும் மார்டன் ட்ரெஸ் அணிந்து பார்ட்டிக்கு செல்லத் தயாராகி நின்றிருந்தாள்.

 

அவளின் உடையைக் கண்டு ஆகாஷ் முகம் சுழிக்க, பிரணவ்வோ அர்ச்சனாவின் தோளில் கை போட்டு, “போலாமா?” எனக் கேட்டான் புன்னகையுடன்.

 

ஆகாஷ் அதிர்ச்சியில் கண்களை அகல விரிக்க, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாக பிரணவ்வை மேலும் நெருங்கி நின்று, “போலாம் பேபி…” என்றாள் கண்கள் மின்ன.

 

“ஆகாஷ்… சீக்கிரமா பார்ட்டிக்கு வந்துடுங்க… கூடவே உங்க ஃபியான்சியையும் கூட்டிட்டே வாங்க…” என்ற பிரணவ் அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு முன்னே நடக்க, “என்ன ஆகாஷ் நடக்குது இங்க?” என்ற சாருமதியின் குரலில் தன்னிலை அடைந்தான் ஆகாஷ்.

 

ஆகாஷுடன் ஏதோ பேச வந்த சாருமதி பிரணவ் அர்ச்சனாவின் தோளில் கரம் போட்டு செல்வதைக் கண்டு ஆகாஷைப் போலவே அதிர்ச்சி அடைந்தாள்.

 

சாருமதியின் குரலில் தன்னிலை அடைந்த ஆகாஷ், “ஹ்ம்ம்… என்ன பண்ணுறது? அனுவே வேற கல்யாணம் பண்ணிட்டா… இவருக்கு அர்ச்சனா தான்னு இருந்திருக்கு போல… அதை விடு மதி… சீக்கிரம் நீயும் பார்ட்டிக்கு கிளம்பு… அங்க போனா உனக்கு அனுவ மீட் பண்ண முடியும்… இன்னைக்கு விட்டா திரும்ப அவள பார்க்க முடியாம போயிடும்…” என்றான்.

 

அவனைப் புரியாமல் பார்த்த சாருமதி, “ஏன் இன்னைக்கு விட்டா பார்க்க முடியாது?” எனக் கேட்டாள்.

 

ஆகாஷ், “அவ அஞ்சி வருஷம் கழிச்சி இந்தியா வந்து இருக்குறதே இந்தியால இருக்குற பிஸ்னஸை இங்க யாருக்கோ ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு ஃபாரின்ல பிஸ்னஸை கவனிக்கிற ஐடியால தான்… இன்னைக்கு பார்ட்டி அதைப் பத்தி இன்ஃபார்ம் பண்ணவும் சேர்த்து தான்… பாஸ் கிட்ட இன்னும் இதைப் பத்தி சொல்லல…” என்றான்.

 

************************************

 

ஆடல், பாடல், கொண்டாட்டம் என பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தின் பார்ட்டி பிரம்மாண்டமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.

 

அனுபல்லவியின் பார்வை மட்டும் கண்களில் கோபம் மின்ன ஒரு இடத்தை வெறித்திருந்தது.

 

அங்கு ஒரு கையில் மதுக் குவளையுடன் மறு கையால் அர்ச்சனாவை வளைத்தபடி ஆடிக் கொண்டிருந்தான் பிரணவ்.

 

அதனைக் காணக் காண அனுபல்லவியின் முகம் கோபத்தில் சிவக்க, கண்களோ கலங்கின.

 

சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பார்ட்டியில் தானும் அவனும் ஒன்றாகக் கலந்து கொண்டதும் அன்று தன் காதலை அவனிடம் பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்து அனுபல்லவியை வாட்டியது.

 

ஓரக் கண்ணால் அனுபல்லவியைப் பார்த்த பிரணவ் அவளின் பார்வை தம் மீது இருப்பதைக் கண்டதும் அர்ச்சனாவை மேலும் நெருங்கி நின்று கொண்டான்.

 

திடீரென முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு கையில் ஒரு குளிர்பானக் குவளையை எடுத்த அனுபல்லவி நேராக பிரணவ்வை நோக்கி வரவும் பிரணவ்வின் விழிகள் குழப்பத்தைத்‌ தத்தெடுத்தன.

 

அர்ச்சனாவோ பிரணவ்வின் நெருக்கம் தந்த மயக்கமும் லேசாக ஏறியிருந்த போதையும் சேர்ந்து பாட்டுக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தாள்.

 

அனுபல்லவி அவர்களை நோக்கி நடந்தவள் அவர்களைத் தாண்டி திரும்புவது போல் திரும்பி கால் தடுக்கி விழப் போவது போல் அர்ச்சனாவின் உடையில் தன் கையில் இருந்த குளிர்பானத்தைக் கொட்டி விட்டாள்.

 

பிரணவ் உதடு மடித்து சிரிக்க, “அச்சோ… சாரி சாரிங்க… தெரியாம கால் தடுக்கிடுச்சி…” என்றாள் அனுபல்லவி மன்னிப்பு வேண்டும் குரலில்.

 

“இடியட்… கண்ணு தெரியலயா? என் ட்ரெஸ்ஸ இப்படி ஸ்பாய்ல் பண்ணிட்டியே… ச்சே… அறிவிருக்கா?” என அர்ச்சனா திட்ட, “அர்ச்சனா…” என்ற பிரணவ்வின் கடுமையான குரலில், “பாருங்க பிரணவ்… வேணும்னே ஜூஸை என் மேல கொட்டிட்டா…” எனக் குற்றப் பத்திரிகை வாசித்தாள் அர்ச்சனா.

 

“அதான் அவங்க தெரியாம பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்களே… நீ பண்ண மாட்டியா? போ… போய் அதை வாஷ் பண்ணிட்டு வா…” என பிரணவ் கடுமையாகக் கூறவும் அனுபல்லவியை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா செல்லவும் அனுபல்லவியும் அங்கிருந்து நகரப் பார்க்க, அவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் பிரணவ்.

 

அதனை எதிர்ப்பார்க்காத அனுபல்லவி பிரணவ்வின் மீது வந்து மோத, “என்ன பல்லவி மேடம்? எதுக்காக இப்படி பண்ணீங்க?” எனக் கேட்டான் பிரணவ் புன்னகையுடன்.

 

“அ…அது… அதான் சென்னேனே தெரியாம கொட்டிடுச்சுன்னு…” என அனுபல்லவி எங்கோ பார்த்தபடி கூறினாள்.

 

“ஓஹ்…..” என இழுத்த பிரணவ்வின் பார்வை அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்க, அப்போது தான் அவனின் பிடியில் தான் இருப்பதைப் புரிந்து கொண்ட அனுபல்லவி பிரணவ்வை விட்டு வேகமாக விலகினாள்.

 

பிரணவ் இன்னுமே தன் பார்வையை மாற்றாமல் இருக்க, “என் அனுமதி இல்லாம என்னைத் தொடாதீங்க மிஸ்டர் பிரணவ்…” என விரல் நீட்டி எச்சரித்த அனுபல்லவி அங்கிருந்து வேகமாகக் கிளம்பினாள்.

 

பிரணவ்விடமிருந்து விலகி வேகமாக வந்த அனுபல்லவி திடீரென யார் மீதோ மோதவும், “சாரி சாரி…” என மன்னிப்பு வேண்டியபடி தலையை உயர்த்த, அவளைத் தீயாக முறைத்தபடி நின்றிருந்தாள் சாருமதி.

 

“சாரு…” என்ற அனுபல்லவியின் வாயில் இருந்து காற்று தான் வெளி வந்தது.

 

அனுபல்லவியின் கையைப் பிடித்து அவளை அங்கிருந்து சற்று தள்ளி இழுத்துச் சென்ற சாருமதி அனுபல்லவியின் கரத்தை விடுவிக்கவும் “சாரு…” என அனுபல்லவி மகிழ்ச்சியாக அழைக்க, மறு நொடியே அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சாருமதி.

 

கன்னத்தில் கை வைத்து கண்ணீருடன் தன்னைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவியை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சாருமதி.

 

“சாரி சாரு‌‌…” என அனுபல்லவி கண்ணீர் வடிக்க, அவளை விட்டு விலகியவள், “பெஸ்ட்டி… பெஸ்ட்டின்னு என்னைப் பெயருக்கு தான் சொன்னேல்ல நீ…” எனக் கேட்டாள் சாருமதி பதிலுக்கு கண்ணீருடன்.

 

அனுபல்லவி மறுப்பாகத் தலையசைக்க, “அப்போ ஏன் என் கிட்ட கூட சொல்லாம வந்துட்ட? இதெல்லாம் எப்படி? யார் அனு நீ? இது தான் நீயா? இது நீன்னா எங்க கூட இருந்த அனு யாரு?” எனக் கேட்டாள் சாருமதி புரியாமல்.

 

“உன் கிட்ட வேணும்னு மறைக்கல டி… என் சூழ்நிலை அப்படி… ஏதேதோ ஆகிடுச்சு… நான் உன் கிட்ட எல்லாமே தெளிவா சொல்றேன்…” என்றாள் அனுபல்லவி.

 

சாருமதி, “இனியும் உன்ன விட முடியாது… ஆகாஷ் சொன்னான் நீ அவங்க கூட பேச கூட விருப்பப்படலன்னு… எங்க என்னைப் பார்த்தாலும் அதையே தான் நீ சொல்லுவன்னு நினைச்சேன்…” என்க,

 

“அவங்களும் நீயும் ஒன்னா?” எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.

 

“அவங்களும் நானும் ஒன்னில்ல சரி… அப்போ பிரணவ் சாரும் அந்த அவங்களுக்குள்ள தான் வராரா?” எனக் கேட்டாள் சாருமதி புருவம் சுருக்கி.

 

பெருமூச்சு விட்ட அனுபல்லவி, “அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே… அதுவும் இல்லாம அவருக்கு தான் என்னை சுத்தமா ஞாபகம் இல்லயே… என்னைப் பத்தி தெரிஞ்சி இனிமே அவர் என்ன பண்ண போறார்? அர்ச்சனா கூட அவர் சந்தோஷமா இருக்கட்டும்…” என்றாள் கசந்த புன்னகையுடன். 

 

சாருமதி, “நிஜமாவே உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா அனு?” எனக் கேட்டாள் கவலையாக.

 

அனுபல்லவி, “நான் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் சாரு? எல்லாமே என் கை மீறி போயிடுச்சு… இது தான் இனிமே என் லைஃப்னு நான் ஏத்துக்கிட்டு ரொம்ப நாளாச்சு…” என்றவளின் கண்கள் கண்ணீரை உகுத்தன.

 

சாருமதி, “சரி அதை விடு… நான் நிஜமாவே உனக்கு ஃப்ரெண்ட்னா தயவு செஞ்சி இப்பவே நடந்த எல்லாத்தையும் சொல்லு…” என்றாள் உறுதியாக.

 

அனுபல்லவி மேலோட்டமாக தன்னைப் பற்றிக் கூறவும் அதிர்ச்சி அடைந்தாள் சாருமதி.

 

“என்ன டி சொல்ற? என்னால நம்பவே முடியல… இப்படி எல்லாமா மனுஷனுங்க இருப்பாங்க?” எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.

 

அனுபல்லவி, “இருக்காங்களே… அதனால தானே நான் இன்னைக்கு எனக்கு பிடிச்ச எல்லாரையும் விட்டு விலகி இந்த நிலமைல இருக்கேன்…” எனக் கண் கலங்கினாள்.

 

“ஆனா நீ என் கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அனு…” எனச் சாருமதி கூறவும் தலை குனிந்தாள் அனுபல்லவி.

 

அப்போது சரியாக, “மேம்… அனவுன்ஸ்மன்ட் பண்ணுற டைம் சரி…” என அனுபல்லவியின் பீ.ஏ வந்து கூறவும் தன் கண்களைத் துடைத்துக்கொண்ட அனுபல்லவி, “சாரு… ப்ளீஸ் உன் கிட்ட கெஞ்சி கேட்குறேன்… நான் சொன்ன எதையும் யார் கிட்டயும் சொல்லாதே… எனக்காக இதை மட்டும் பண்ணு…” என்று விட்டு சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்