Loading

ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ்‌.

“ஆர்யான்… நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்… அவளை நான் அடையாம விட மாட்டேன்… இந்த என்கேஜ்மென்ட் எப்படி நடக்கும்னு நானும் பார்க்குறேன்…” எனக் கோபமாகக் கூறியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து நசுக்கினான்.

************************************

மூர்த்தி மற்றும் லக்ஷ்மி தம்பதியினரின் ஒரே மகன் தான் பிரணவ். வசதி வாய்ப்பில் குறைவற்றவன். பணத்திலே வளர்ந்தவன். மூர்த்தி மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் எப்போதும் பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோள். அதனால் அடிக்கடி இருவரும் வேலை விஷயமாக எங்காவது கிளம்புவர். அப்போதெல்லாம் பிரணவ்வைப் பார்த்துக் கொள்வது வேலைக்காரர்கள் தான். அவனை சுற்றி எல்லாவற்றுக்கும் வேலைக்காரர்கள் காணப்படுவர். பிரணவ்வின் பெற்றோர் தகுதி பார்த்தே மற்றவர்களிடம் பழகுவர். தம்மை விட வசதியில் குறைந்தவர்களை கீழ்த்தரமாக நினைப்பவர்கள். அதனையே தம் மகனுக்கும் கற்றுக் கொடுக்க, பிரணவ்வும் தகுதி பார்த்தே பழகினான். அவனின் நண்பர்கள் கூட நன்கு வசதியானவர்களாகவே இருந்தனர். பெற்றோரைப் பின்பற்றி வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அனைத்திலுமே சிறந்ததை மட்டுமே விரும்பினான். ஆனால் அவனின் வாழ்வில் விதிவிலக்காக வந்து சேர்ந்தவன் தான் அபினவ்.

பிரணவ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அன்று அவனின் பிறந்தநாள். பெற்றோரிடமிருந்து வாழ்த்து வராது என்பதை அறிந்திருந்திருந்தும் எப்போதும் போல் அவர்களின் வாழ்த்துக்காக காத்திருக்க, அன்று முழு நாளுமே அவர்கள் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் போகவும் ஆத்திரம் அடைந்து பாதையைக் கடந்து மறுபக்கம் நிற்கும் தன் வண்டியில் ஏறச் சென்றவன் தூரமாக வந்த லாரியைக் கவனிக்கவில்லை. ஆனால் சரியான சமயம் எங்கிருந்தோ ஓடி வந்த அபினவ் பிரணவ்வை இழுத்ததால் நூலிழையில் தப்பித்தான் பிரணவ். அபினவ்விற்கு தான் கை கால்களில் லேசாக சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போது தான் அவன் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளோம் என்பதை புரிந்து கொண்டவன் தன் அருகில் விழுந்து கிடந்த அபினவ்விடம் சென்று, “ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ… எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க… நீங்க வரலன்னா என்ன நடந்து இருக்கும்னே நெனச்சி பார்க்க முடியல…” என்க,

“இட்ஸ் ஓக்கே… தேங்க்ஸ் எல்லாம் வேணாம்… நான் கிளம்புறேன்…” என்று விட்டு செல்ல முனைந்தான் அபினவ்.

பிரணவ், “முதல்ல வாங்க ஹாஸ்பிடல் போகலாம்… உங்களுக்கு காயம் ஆகியிருக்கு…” என்கவும் மறுத்த அபினவ், “அதெல்லாம் ஒன்னும் இல்லை… சின்ன காயம் தான் ப்ரோ… கொஞ்சம் நேரத்துல தானா ஆறிடும்…” என்றவனை வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்திட்டான்.

பின் இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரவும், அபினவ் கிளம்பப் பார்க்க, “ஒரு நிமிஷம் இருங்க ப்ரோ… எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க… உங்க நேம் என்ன? என்ன பண்றீங்க? எங்க தங்கி இருக்கீங்க?” எனப் பிரணவ் கேட்க,

“ஐம் அபினவ்… எம்.எஸ்.வி. காலேஜ்ல செகன்ட் இயர் டெக்னாலஜி படிக்கிறேன்… ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கேன்…” என்கவும் அதிர்ந்த பிரணவ், “ஹேய் அப்போ நீங்க எங்க க்ளாஸா? சாரி அபினவ்… எனக்கு தெரியல…” என்றான்.

அபினவ், “இட்ஸ் ஓக்கே பிரணவ்… பட் எனக்கு உங்கள தெரியும்… சரி எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு… நான் கிளம்புறேன்…” என்றவனை தடுத்த பிரணவ், “எங்க கிளம்புறீங்க… இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்… நீங்க ஹாஸ்டல்ல எல்லாம் தங்க வேணாம்… எங்க வீட்டுல தங்கிக்கோங்க…” என்க, “உங்க ஃப்ரெண்ட்ஷிப்ப நான் ஏத்துக்குறேன்… பட் நான் ஹாஸ்டல்லயே இருந்துக்குறேன்… எனக்கு அதான் கம்ஃபடபிளா இருக்கும்…” என்றான் அபினவ்.

பிரணவ், “அதெல்லாம் முடியாது… எங்க வீட்டுல நான் தனியா தான் இருக்கேன்… உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது… நிச்சயம் உங்களுக்கு கம்ஃபடபிளா இருக்கும்… ப்ளீஸ் மறுக்காதீங்க…” என்கவும் வேறு வழியின்றி சம்மதித்தான் அபினவ்.

அன்றிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாயினர். அப்போது தான் பிரணவ்விற்கு உண்மையான நட்பின் அர்த்தமே புரிந்தது. அவனின் பழைய நண்பர்கள் எல்லாம் எப்போதும் கூத்தும் கும்மாளமுமாகவும் இருக்கவும் வேறு எதாவது தேவைக்காகவும் தான் பிரணவ்வுடன் பழகினர். ஆனால் அபினவ்வோ பிரணவ்வின் தவறுகளை சுட்டிக் காட்டி தேவையான சமயம் கடிந்து கொண்டு அவனைத் திருத்தினான். பிரணவ் கொஞ்சம் கொஞ்சமாக தன் மற்ற நண்பர்களிடமிருந்து விலக ஆரம்பிக்கவும் அதில் ஆத்திரமடைந்தவர்கள் பிரணவ்வையும் அபினவ்வையும் பிரிக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். அபினவ்வின் சகோதரனான ஆதர்ஷ் அபினவ்வைக் காண வரும் போது பிரணவ்வுடன் பழகி இருவருக்கும் இடையில் நல்ல நட்பொன்று உருவாகியது.

நாட்கள் இவ்வாறு வேகமாகக் கடக்க, பிரணவ்வும் அபினவ்வும் தம் கல்லூரிப் படிப்பை முடித்தனர். அபினவ் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர, பிரணவ்வோ அவனின் தந்தை மூர்த்தி வற்புறுத்தியதால் அவர்களின் கம்பனிப் பொறுப்பை ஏற்றான். பிரணவ் அபினவ்வையும் தன் கம்பனியில் வேலைக்கு சேர கூற, அவனோ முடியாது என உறுதியாக மறுத்து விடவும் இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியாது என பிரணவ்வும் அமைதியாகினான்.

அபினவ்வின் ஊரான பூஞ்சோலைக் கிராமத்தில் ஊர்த் திருவிழா நடைபெறுவதால் பிரணவ்வையும் அழைத்துக் கொண்டு தன் ஊருக்குக் கிளம்பினான். அங்கு தான் முதன் முதலாக சிதாராவைப் பார்த்தான் பிரணவ். அபினவ்வின் காதலியான அக்ஷராவின் தோழி தான் சிதாரா. சிதாராவைப் பார்த்த நொடியே பிரணவ்வின் மனதில் ஏதோ ஒரு உணர்வு. சிதாராவையே அவன் கண்கள் பின் தொடர்ந்தன‌.

சிதாராவின் நினைவில் இருந்தவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதே மகிழ்ச்சியில் அழைப்பை ஏற்க, மறுபக்கம் அவனின் பழைய நண்பனான ராகுல் தான் அழைத்திருந்தான்.

பிரணவ் எடுத்ததும், “சொல்லு மச்சான்…” என உற்சாகமாகப் பேச, “என்ன பிரணவ்… புதிய ஃப்ரெண்ட் கிடைச்சதும் எங்கள எல்லாம் மறந்துட்டேல்ல நீ… கண்டுக்கவும் மாட்டேங்குற… ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குற…” என ஒரு மாதிரி குரலில் கூறவும் அதனை உணராத பிரணவ்வோ, “அப்படி எல்லாம் இல்லடா… இங்க அபி கூட அவங்க ஊர்த்திருவிழா பார்க்க வந்திருக்கேன்…” என்க,

ராகுல், “ஓஹ்… அதான் நீ அவ்வளவு குஷியா இருக்கியோ…” என வார்த்தையில் வன்மத்தை தேக்கி வைத்து கேட்க, அதை புரிந்து கொள்ளாத பிரணவ்வோ, “அதுவும் தான் மச்சான்…” என்றவன் சிதாராவைப் பற்றி ராகுலிடம் கூறினான்.

பிரணவ் கூறியதைக் கேட்ட ராகுல், ‘ஓஹோ… சார் லவ்வுல விழுந்திட்டீங்களோ… இதை வெச்சே உன்னையும் அந்த அபினவ்வையும் பிரிச்சு காட்டுறேன்டா… உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்டா… என்ன சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னும் தெரியும்டா…’ என மனதில் நினைத்தவன், “டேய்… பார்க்குறதோட நிறுத்திக்கோடா… லவ்வு கிவ்வுன்னு பண்ணி வெச்சிடாதேடா…” என்கவும் புரியாமல் முழித்த பிரணவ்,”என்னடா சொல்ற?” எனக் கேட்க,

“நீ சிட்டியிலேயே வளர்ந்தவன்டா… உனக்கு இந்த கிராமத்து பொண்ணுங்களை பத்தி சரியா தெரியாது மச்சான்… அதுங்க எங்கடா பணக்கார பையன் மாட்டுவான்னு பார்த்துட்டு இருப்பாளுங்க… நீ மட்டும் லவ்வுன்னு போய் நின்னா உடனே ஏத்துக்கிட்டு நல்லா உன் கிட்ட இருந்து பணத்தை கரந்துடுவாளுங்க… ஆனா அதுக்கு மேல ஒன்னும் நடக்காதுடா… அதுங்க யூஸ் பண்ணிட்டு தூக்கி போட மட்டும் தான் சரிப்பட்டு வரும்டா… பார்த்து இருந்துக்கோடா…” என ராகுல் கூறவும் அதனை உண்மை என நம்பியது தான் அவன் வாழ்வே திசை மாற காரணமாகியது.

அன்று இரவு மேடை நாடகம் நடந்து முடிந்ததும் ஆதர்ஷின் அத்தை மகளான லாவண்யா அவனுடன் ஏதோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் நின்ற சிதாராவையே பிரணவ்வின் கண்கள் மொய்த்தன. பிரணவ்வின் பார்வை கண்டு முகம் சிவந்தவள் தலை குனிந்துகொள்ள பிரணவ்வின் மனதில் ராகுல் கூறியவைகளே ஓடின.

அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட, பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.

இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,

“எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி…” என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.

அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற, “இங்க பாருடா… அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி… இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ…” என்றான்.

லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க, சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வரவும் அவளிடம் வந்த பிரணவ்,

“தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்…” என்று கூற,

அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.

பிரணவ், “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா… நீ ரொம்ப அழகா இருக்காய்… ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா…” என்க,

அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,

தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,

அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.

பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.

அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,

“பாய் தாரா… அப்புறம் கால் பண்றேன்…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

பிரணவ்விற்கு தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்றே புரியவில்லை. சிதாராவிடமிருந்து அவளின் எண்ணை வாங்கியும் அவளுக்கு அழைக்காமல் இருந்தவன் ஒருவேளை ராகுல் ஏதோ தவறாக கூறி இருப்பான் என எண்ணி மறுநாள் காலையிலேயே அவளுக்கு அழைத்தவன் சிதாரா அழைப்பை ஏற்றதும், “தாரா…” என்க, சிதாரா அவசரமாக, “ஏங்க நைட்டு கால் பண்ணல?” என்கவும் பிரணவ்வோ ராகுல் கூறியவை அனைத்தும் உண்மை என எண்ணிக் கொண்டான்.

பிரணவ், “என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா…” என்க, “ஹ்ம்ம்..” என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.

‘இந்த பிரணவ் கிட்டயே உங்க சீப்பான புத்திய காட்ட பார்க்குறியா? இருடி உனக்கு நல்ல வேலை பண்றேன்… லோ க்ளாஸ் புத்தியே இப்படி தான்… ச்சே…’ என மனதிற்குள் எண்ணிய பிரணவ், “உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா… இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்… அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு…” என்றான்.

சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.

அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.

திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.

அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.

ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, “அவ என் தங்கச்சிடா… அவளுக்கு குழந்தை மனசு… எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே..” என்பான்.

பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.

பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.

சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.

ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.

திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.

ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.

இவ்வாறிருக்க ஒருநாள் பிரணவ் தன் ஆஃபீஸில் வேலையாக இருக்கும் போது திடீரென சிதாரா அழைத்து என்ன ஏது என்று காரணம் கூறாது அவனை ஊருக்கு வருமாறு அழைக்கவும் சலித்துக் கொண்டவன் அனைத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நினைத்து அபினவ்விடம் கூட கூறாது சிதாராவை சந்திக்க பூஞ்சோலைக் கிராமத்துக்கு சென்றான்.

ஒரு கோயிலில் பிரணவ்விற்கு முன்பே சிதாரா வந்து அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, “எப்படி இருக்காய் தாரா… ஐ மிஸ்ட் யூ சோ மச்..” எனக் கூறி அவளை அணைக்க வரவும் அவனைத் தடுத்த சிதாரா,

“பிரணவ்… எனக்கு பயமா இருக்கு… தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க…” என்க,

அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ், “என்னாச்சு தாரா… உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்?” என்றான்.

சிதாரா, “எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்… எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க..” என்க,

பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, “இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே…” என்க சிதாரா அதிர்ந்தாள்.

பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா,

“என்ன விளையாடுறீங்களா பிரணவ்? நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்…” என்கவும்,

“நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா…” என்றான்.

“என்ன பிரணவ் சொல்றீங்க?  உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்… நீங்களும் என்னை காதலிக்கிறீங்கல்ல… அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க..” என அழுதபடி சிதாரா கேட்க,

அவள் கரத்தை விட்ட பிரணவ், “நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்?” என்றான்.

பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

சிதாரா, “திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க… அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க…” என்க,

சத்தமாக சிரித்த பிரணவ், “நீ என்ன லூசா தாரா… பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா… இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்… அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல… பார்க்க ஏதோ அழகா இருந்தாய்… பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… அவ்வளவு தான்…” என்றான்.

சிதாரா, “இல்ல… எனக்கு தெரியும்… நீங்க பொய் சொல்லுறீங்க… வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்…” என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,

அவள் கையை உதறியவன், “ஏய்… ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு… அறிவில்லயா… அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு… நீ ரொம்ப அழகா இருந்தாய்… உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி… அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்… முடியல… அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா…

அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே… இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா… நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்… உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது…

சாதாரண கிராமத்துக்காரி நீ… உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ… உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்… கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது… உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு… அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசைப்படாதே…” என்றான்.

பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.

பின், “வரட்டா பேபி…” என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க, பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,

“தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க… என்னால நீங்க இல்லாம வாழ முடியாது… உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… ப்ளீஸ்… உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்னை நான் மாத்திக்குறேன்… என்ன விட்டு மட்டும் போக வேணாம்…” என அழுது கெஞ்ச,

“ச்சீ… போடி அந்தப்பக்கம்..” என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.

************************************

தவறான நட்பினால் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனதை உடைத்து விட்டுச் சென்றவனுக்கு பரிசாக விதி என்ன வைத்துக் காத்திருக்கிறதோ?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்