216 views

அந்த ரம்யமான பொழுதை இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் காதலுடன் நோக்கியவாறு ரசித்துக் கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒலித்த ஹார்ன் ஒலியில் தான் இருவரும் தன்னிலை மீண்டனர்.

 

அப்போது தான் பிரணவ் வண்டியை சிக்னலில் நிறுத்தி இருப்பது புரிய, அவன் இருந்த நிலையில் சிக்னலில் காரை நிறுத்தியதை கூட உணராது இருந்ததை எண்ணி வெட்கத்தில் ஒற்றைக் கையால் முகத்தை மறைத்துக் கொண்டான்.

 

அனுபல்லவியும் சிவந்த முகத்துடன் மறுபுறம் திரும்பிக்கொள்ள, மீண்டும் பின்னால் இருந்த வாகனங்கள் ஹார்ன் அடிக்கவும் விரைவாக தன் காரை உயிர்ப்பித்தான் பிரணவ்.

 

சற்று நேரத்திலேயே கார் பார்ட்டி நடக்கும் இடத்தை அடைய, முதலில் காரை விட்டு இறங்கிய பிரணவ் அனுபல்லவி இறங்குவதற்காக மறுபக்கம் வந்து கதவைத் திறந்து விட்டான்.

 

‘என்ன இவர் இப்படி எல்லாம் பண்ணுறார்?’ எனப் புன்னகையுடன் எண்ணியபடியே காரில் இருந்து இறங்கினாள் அனுபல்லவி.

 

இருவருமே ஒன்றாகவே பார்ட்டி நடக்கும் ஹாலுக்குள் நுழைய, அந்த ஹாலின் பிரம்மண்டத்தைக் கண்டு அசந்து போன அனுபல்லவியின் கண்கள் விரிந்தன.

 

“ஹேய் மிஸ்டர் பிரணவ்…வெல்கம்… ஹவ் ஆர் யூ மேன்?” என பிரணவ்வை வரவேற்றபடி வந்தார் மிஸ்டர் மெஹெரா. 

 

பிரணவ், “ஐம் குட் மிஸ்டர் மெஹெரா…” எனப் புன்னகையுடன் பதிலளிக்கும் போதே அனுபல்லவியைக் கண்டு கொண்ட மிஸ்டர் மெஹெரா, “ஹாய் மிஸ் பல்லவி… நைஸ் டு மீட் யூ…” என்க, “ஹாய் சார்… மீ டூ…” எனப் பதிலளித்தாள் அனுபல்லவி.

 

மெஹெரா, “மிஸ்டர் பிரணவ்… திஸ் பார்ட்டி இஸ் அரேன்ஜ்ட் டு செலிப்ரேட் அவர் சக்சஸ்ஃபுல் ப்ராஜெக்ட்… யூ டூ ஆர் தி மோஸ்ட் இம்பார்டன்ட் கெஸ்ட் டுடே… சோ ப்ளீஸ் என்ஜாய் தி பார்ட்டி…” எனும் போதே, “ஹேய் மை பாய்…” என கையில் மதுக் குவளையுடன் வந்து பிரணவ்வை அணைத்துக் கொண்டார் நடுத்தர வயது ஒருவர். அவர் தான் ராமலிங்கம். பிரணவ்வின் தாய் மாமன்.

 

அவரைக் கண்டதும் முகம் மலர்ந்த பிரணவ்விற்து ஆகாஷ் கூறியதும் சேர்ந்து நினைவு வந்து அது பற்றி இன்று அவரிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்தவன், “நல்லா இருக்கேன் மாமா…” என்றான்.

 

மெஹெரா, “ஹேய் காய்ஸ்… ஆர் யூ ரிலேடிவ்ஸ்?” எனக் கேள்வியாக நோக்கவும் பிரணவ்வின் தோளில் கரத்தைப் போட்ட ராமலிங்கம், “ஹீ இஸ் மை நெஃபிவ்…” என்றவர் பிரணவ்விடம் திரும்பி, “பிரணவ்… நானும் மிஸ்டர் மெஹெராவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்…” என்கவும் புன்னகையுடன் தலையசைத்தான் பிரணவ்.

 

யாரோ அழைக்கவும், “ஐ வில் கெட் யூ பெக்…” என்று விட்டு மெஹெரா அங்கிருந்து சென்று விட, அப்போது தான் பிரணவ்வின் அருகில் தயக்கமாக நின்று கொண்டிருந்த அனுபல்லவியைக் கவனித்தார் ராமலிங்கம்.

 

பிரணவ் அங்கு வந்த ஒரு தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருக்க, ராமலிங்கமின் பார்வை அனுபல்லவியை மேலிருந்து கீழாக அங்குலம் அங்குலமாக அளவிட, அனுபல்லவியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

 

தன்னை அறியாமலே பயத்தில் பிரணவ்வின் கரத்தை பற்றிப் பிடித்தவளை குழப்பமாகப் பார்த்தவன் அவள் பார்வை சென்ற திக்கில் பார்வையைத் திருப்ப, அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன.

 

அவன் கூலர்ஸ் அணிந்து இருந்ததால் யாரின் கண்களுக்குமே புலப்படாமல் போக, அனுபல்லவியின் இடை பற்றி தன் அருகே நெருக்கமாக நிற்க வைத்தவனின் அணைப்பு அனுபல்லவியின் பயத்தை ஓரளவு குறைத்தது. 

 

ராமலிங்கம், “அப்புறம்… யாரு மாப்பிள்ளை இது? எத்தனை நாளைக்கு இந்த கேஸ்?” என அனுபல்லவியைப் பார்த்துக் கொண்டு கேட்க, அனுபல்லவியின் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.

 

பிரணவ் ராமலிங்கத்திடம் கோபமாக ஏதோ கூற முனையும் போது அந்த பார்ட்டி ஹால் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளடைந்து மேடையில் மட்டும் ஒளி பிறப்பிக்கப்பட்டது.

 

ஒலிவாங்கியுடன் மேடையில் நின்ற மெஹெரா, “ஹெலோ எவ்ரிபாடி… ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஐ வுட் லைக் டு எக்ஸ்ப்ரெஸ் மை க்ரடிடியுட்  டு எவ்ரிவன் ஹூ எக்சப்டட் மை ரிகுவெஸ்ட் என்ட் கேம் ஹியர்… திஸ் பார்ட்டி அரேன்ஜ்ட் டு அப்ரிசியேட் மிஸ்டர் பிரணவ் ஃபார் கம்ப்ளீட்டிங் மை ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுலி…” என்கவும் அங்கு வந்திருந்த அனைவரும் கை தட்ட, பிரணவ் புன்னகைத்தான்.

 

மெஹெரா, “ஓக்கே காய்ஸ்… லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி…” என்கவும் பாடல்கள் ஒலிக்க, அங்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள் எனப் பாகுபாடின்றி அனைவருமே கையில் மதுக் குவளைகளுடன் நடனமாட, அதனைக் கண்டு முகம் சுழித்தாள் அனுபல்லவி.

 

வெய்ட்டர் ஒருவர் மதுக்குவளைகளை ஏந்திக் கொண்டு பிரணவ் இருந்த இடத்திற்கு வர, அதிலிருந்து ஒரு குவளையைக் கையில் எடுத்தவன் வெய்ட்டரிடம் ஆரேன்ஜ் ஜூஸ் ஒன்று கொண்டு வரும்படி கட்டளை இட்டான்.

 

பிரணவ் மதுக் குவளையை கையில் எடுத்ததுமே அனுபல்லவியின் முகம் வாட, அதனைக் கவனித்தவன், “என்னாச்சு?” எனக் கேட்கவும் ஒன்றுமில்லை எனத் தலையாட்டிய அனுபல்லவி அப்போது தான் தன் இடையைச் சுற்றி இருந்த பிரணவ்வின் கரத்தைக் கவனித்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

அந்த நேரம் ஏதோ ஒரு கோபத்தில் அவளை அணைத்திருந்தவனுக்கும் அப்போது தான் அது புரிய, “ஓஹ்… சாரி பல்லவி… ரியலி சாரி…” எனத் தன் கரத்தை விலக்கிக் கொண்டான் பிரணவ்.

 

அனுபல்லவியின் முக மாற்றத்தைக் கண்டு, தான் அவளை அணைத்ததை அவள் விரும்பவில்லை போல எனத் தவறாக எண்ணிய பிரணவ்விற்கு மனதில் வலி உண்டாக, அதனை மறைக்க கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

 

ஆனால் உண்மையாகவே பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியின் காதல் கொண்ட மனதை ஏதோ செய்ய, உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தது.

 

சற்று நேரத்திலேயே பிரணவ் கேட்ட ஜூஸுடன் வந்த வெய்ட்டர் அதனை அனுபல்லவியிடம் நீட்ட,பிரணவ் கண் காட்டவும் தயக்கமாக அதனை எடுத்துக் குடித்தாள்.

 

அனுபல்லவி அந்த ஜூஸைப் பருகுவதை தூரத்திலிருந்து விஷமச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.

 

பிரணவ், “பல்லவி… நீங்க அந்த டேபிள்ல உட்காருங்க… நான் ஒருத்தர் கூட பேசிட்டு வரேன்…” என்றவன் அனுபல்லவி தலையசைக்கவும் அங்கிருந்து சென்றான்.

 

அனுபல்லவிக்கும் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க ஏதோ போல் இருக்க, பிரணவ் கூறவும் உடனே வந்து ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

 

திடீரென்று லேசாக தலை சுற்றுவது போல் இருக்க, வாஷ்ரூம் செல்வதற்காக எழுந்தாள்.

 

அனுபல்லவி வாஷ்ரூம் செல்லவும் விஷமமாகப் புன்னகைத்த ராமலிங்கம் அவளை மெதுவாகப் பின் தொடர்ந்தார்.

 

முகத்தில் நன்றாக நீரை அடித்த அனுபல்லவி, “என்னாச்சு எனக்கு? ஏன் இப்படி தலை சுத்துது?” என்றவளால் நேராக நிற்க கூட முடியவில்லை.

 

“ஏன்னா நீ குடிச்ச ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து இருந்தது…” எனக் கூறியபடி அங்கு வந்தார் ராமலிங்கம்.

 

அவரை அங்கு எதிர்ப்பார்க்காத அனுபல்லவி, “நீ…நீங்க… இங்…க…” என்றவள் சமநிலை இழந்து விழப் பார்க்க, அவசரமாக அவளைப் பிடித்துக் கொண்டார் ராமலிங்கம்.

 

அனுபல்லவி, “ச்சீ… என்னை விடுங்க…” என முகம் சுழித்தவள் ராமலிங்கத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராட, “என்ன பேபி நீ? என் மருமகனுக்கு மட்டும் தான் கம்பனி கொடுப்பியா? எனக்கு எல்லாம் கொடுக்க மாட்டியா?” என முழுப் போதையில் வக்கிரமாகக் கேட்டவரின் பார்வை அனுபல்லவியின் உடலில் மேய்ந்தது.

 

மயக்க மருந்து அதன் வேலையைக் காட்டத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த அனுபல்லவி, “பி…பிரணவ்…” என முணுமுணுக்க, ராமலிங்கமோ அனுபல்லவியின் முகத்தை வருடியபடி, “செக்ஸி…” என்றவர் அவளின் தோளில் இருந்த சேலையை மெதுவாக விலக்கி விட்டு அவள் இதழை நோக்கி நெருங்க, அவரை இழுத்து அவரின் முகத்திலே ஒரு குத்து விட்டான் பிரணவ்.

 

அனுபல்லவியை விட்டு வந்தாலும் பிரணவ்வின் பார்வை முழுவதும் அனுபல்லவியைச் சுற்றியே இருந்தது.

 

அப்போது தான் அவள் தலையைப் பிடிப்பதும் கஷ்டப்பட்டு எழுந்து வாஷ்ரூம் செல்வதும் கண்ணில் பட, அவளைத் தொடர்ந்து செல்லப் போன பிரணவ்வைப் பிடித்துக் கொண்டார் மெஹெரா.

 

அவர் ஏதோ முக்கியமான விடயமாக பேசவும் பிரணவ்விற்கு அங்கிருந்து நகர முடியாத நிலை.

 

ஒருவாறு அவரை சமாளித்து விட்டு அவசரமாக அனுபல்லவி சென்ற திசையில் நடந்தவனுக்கு அனுபல்லவியின் கத்தல் சத்தம் கேட்கவும் எதுவும் யோசிக்காமல் வாஷ்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த பிரணவ் அவனின் மாமாவே தன்னவளிடம் தவறாக நடக்க முற்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்தவன் அவரின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

 

பிரணவ்வின் அடியில் வலியில் முகத்தைப் பிடித்தபடி கீழே விழுந்தார் ராமலிங்கம்.

 

“பல்லவி…” என அனுபல்லவியைத் தாங்கிக் கொண்ட பிரணவ் அவளின் தோளைச் சுற்றி சேலையைப் போர்த்தி விட்டு முகத்தில் தட்டியும் அனுபல்லவி கண் விழிக்கவில்லை.

 

உடனே தண்ணீர் பிடித்து அனுபல்லவியின் முகத்தில் தெளிக்கவும் மெதுவாக விழி திறந்தாள் அனுபல்லவி.

 

அதற்குள் எழுந்த ராமலிங்கம், “என்ன மாப்பிள்ளை? பார்ட்டில என்ஜாய் பண்ண தானே இந்த பொண்ண கூட்டிட்டு வந்த… உன் மாமன் கூட ஷேர் பண்ணிக்க மாட்டியா?” என்கவும் அனுபல்லவி முகம் சுழிக்க, ராமலிங்கத்தின் சட்டையை ஆவேசமாகப் பற்றிய பிரணவ், “எங்க அம்மாவோட தம்பின்னு பார்க்குறேன்… இல்ல இப்போ நீ பண்ண போன காரியத்துக்கு உன்ன வெட்டி போட்டு இருப்பேன்…” என்றான்.

 

அவனின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், “ஓஹ்… என்னவோ நீ உத்தமன் போல பேசுற… ஏற்கனவே ஒரு பொண்ணைக் காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினவன் தானே நீ…” என ஏளனமாகக் கூறவும் அனுபல்லவி அதிர்ச்சி அடைய, கோபத்தில் பல்லைக் கடித்த பிரணவ், “அன்னைக்கு ஆக்சிடன்ட் நடக்க காரணம் நீ தான்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… என்னைப் பகைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டி வரும்…” என மிரட்டினான்.

 

அதனைக் கேட்கவும் சத்தமாகச் சிரித்த ராமலிங்கம், “அப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சு போல மருமகனே… அதுவும் நல்லதுக்கு தான்… இனிமே உன் முன்னாடி நல்லவன் வேடம் போட வேண்டியதில்ல…” என்கவும் பிரணவ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

 

ஆகாஷ் அவரைப் பற்றிக் கூறியும் பிரணவ் அதனை நம்பவில்லை. இப்போதும் அவரின் வாயால் உண்மையை வரவழைக்கவே அப்படிக் கூற, ராமலிங்கம் உண்மையை ஒத்துக் கொண்டது பிரணவ்விற்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

ராமலிங்கம், “ஆமாடா… நான் தான் உன்ன ஆக்சிடன் பண்ண அந்த லாரி ட்ரைவரை செட் பண்ணேன்… கொஞ்சம் கூட உரிமையே இல்லாத நீ எப்படி எங்க அக்கா, மாமாவோட சொத்த உன் இஷ்டத்துக்கு அனுபவிக்கலாம்? ” என்கவும் பிரணவ் அவரைப் புரியாமல் நோக்க, “என்ன புரியலயா? ஹஹஹா… உன் பிறப்பை பத்தின பெரிய ரகசியம் ஒன்னு இருக்கு மருமகனே… அதைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?” என நக்கலாகக் கேட்கவும் அவரின் சட்டையைப் பற்றிய பிரணவ், “என்ன சொல்ற?” எனக் கேட்டான் கோபமாக.

 

“ரொம்ப ஆத்திரப்படக் கூடாது மாப்பிள்ளை… ஆல்ரெடி உனக்கு ஹெல்த் ப்ராப்ளம் வேற இருக்கு…” என நக்கலாகக் கூறவும் பிரணவ்வின் முகம் இறுக, “சீக்கிரமே உனக்கு எல்லா உண்மையும் தெரிய வரும்… வெய்ட் என்ட் சீ மருமகனே…” என்ற ராமலிங்கம் அங்கிருந்து நகர, பிரணவ்விற்கு குழப்பமாக இருந்தது.

 

அனுபல்லவி அப்போது தான் நன்றாக மயக்கம் தெளிந்திருக்க, தனக்கு நடக்க இருந்த கொடுமையை எண்ணி கூனிக்குறுகி பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள்.

 

அனுபல்லவியின் நினைவு வந்து அவள் பக்கம் திரும்பிய பிரணவ்விற்கு அனுபல்லவி நின்றிருந்த தோற்றம் மனதை வாட்ட, “பல்லவி…” எனப் பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

 

அவளிடம் இருந்து எந்த சத்தமும் வெளி வரவில்லை. ஆனால் பிரணவ்வின் மார்பு ஈரம் ஆகுவதிலேயே அனுபல்லவி அழுகிறாள் எனப் புரிந்து கொண்டவனின் அணைப்பு மேலும இறுகியது.

 

பிரணவ், “ஒன்னும் இல்ல பல்லவி… உனக்கு எதுவும் நடக்கல… உனக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன்…” என்றவாறு அனுபல்லவியின் தலையை வருட, “நீங்க மட்டும் வரலன்னா என்ன ஆகி இருக்கும்ங்க? அந்த… அந்த ஆள்… என்னை… என்னை…” என்ற அனுபல்லவியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

 

“ஷ்ஷ்ஷ்… ஒன்னும் இல்ல பல்லவி… அதான் நான் வந்துட்டேன்ல… என்னால தான் உனக்கு இந்த நிலமை… நான் தான் உன்ன ஃபோர்ஸ் பண்ணி பார்ட்டிக்கு வர வெச்சேன்… அப்படி கூட்டிட்டு வந்தும் நான் உன்ன சரியா கவனிக்கல… ஐம் சாரி…” என்ற பிரணவ்வின் கண்கள் கலங்கின.

 

சில நொடிகள் மௌனமாய் கழிய, “வா பல்லவி நாம போகலாம்… இனிமே இங்க இருக்க வேணாம்…” என்ற பிரணவ் அனுபல்லவியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றான்.

 

காரில் செல்லும் போது அனுபல்லவி ஓரளவு சமாதானம் அடைந்திருக்க, பிரணவ்வோ ராமலிங்கம் கூறியது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

பிரணவ்வின் இறுகிய தோற்றத்தைக் கவனித்த அனுபல்லவி, “அது… பீச் போலாமா?” எனத் தயங்கியவாறு கேட்கவும் அவளைக் கேள்வியாக நோக்கினான் பிரணவ்.

 

அனுபல்லவி, “இன்னைக்கு பௌர்ணமி… பீச்ல இருந்து கடல் அலை சத்தத்தோட சேர்த்து பௌர்ணமி நிலாவை ரசிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை… அதனால தான் சொன்னேன்…” என்கவும் சரி எனத் தலையசைத்த பிரணவ் கடற்கரையை நோக்கி வண்டியை செலுத்தினான்.

 

கடல் அலை பாதத்தை நனைக்க, சிறிது தூரம் காலாற நடந்தவர்கள் ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்தனர்.

 

இருவருமே வானில் தெரிந்த பௌர்ணமி நிலவை சில நொடிகள் ரசிக்க, “அவர் ஏன் உங்களை அப்படி சொன்னார்?” எனத் திடீரெனக் கேட்டாள் அனுபல்லவி.

 

பிரணவ், “நீ என்ன நினைக்கிற?” என அனுபல்லவியின் கண்களை ஆழமாகப் பார்த்தபடி கேட்க, “அது சும்மா உங்க மேல பழி போடுறார் போல…” என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

 

“அவர் சொன்னது உண்மை தான்…” என கடலை வெறித்தவாறு பிரணவ் கூறவும் அதிர்ந்தாள் அனுபல்லவி.

 

பிரணவ், “நான் ஒரு பொண்ண காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினேன் தான்…” என்றவன் சிறுவயது முதல் பெற்றோர் இருந்தும் அவர்களுடன் ஒன்றாக இருக்காதது பற்றியும் அதிலிருந்து அவர்களின் கவனத்தைக் கவர்வதற்கு வேண்டும் என்றே ஏதாவது தவறு செய்வது, அபினய்யின் நட்பு தொடக்கம் சிதாராவைப் பற்றியும் அனைத்தையும் கூறினான்.

 

தன் மனதில் இவ்வளவு நாளும் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை அனுபல்லவியிடம் கொட்டவும் நிம்மதியாக உணர்ந்த பிரணவ், “தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தண்டனையா தான் அன்னைக்கு எனக்கு அந்த ஆக்சிடன்ட் ஆகி என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாத நிலமைக்கு ஆளாகி இருக்கேன்… ஒரு பொண்ணைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்…” எனப் பெருமூச்சு விட்டான்.

 

சில நிமிடங்கள் மௌனமாய் கழிய, “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க தான்… பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க… நீங்க அந்த தப்பு உணர்ந்து அதுக்கு தண்டனையும் உங்களுக்கு கிடைச்சிடுச்சு… அதே நேரம் ரொம்ப ஆபத்தான நேரத்துல சிதாராவை நீங்க காப்பாத்தி இருக்கீங்க… எப்போ நீங்க உங்க தப்பை மனசார உணருறீங்களோ அப்பவே நீங்க திருந்திட்டீங்க… அதுக்கப்புறம் நீங்க எந்த தப்பும் பண்ணல தானே… இன்னும் ஏன் அப்போ அதை நினைச்சி ஃபீல் பண்றீங்க?” என அனுபல்லவி கூறவும் பிரணவ் அவளின் முகத்தை கேள்வியாக நோக்க, “கடவுளுக்கு தெரியும் எது உங்களுக்கு எப்போ கிடைக்கணும்னு… நிச்சயமா நீங்களும் ஒரு குழந்தைக்கு தந்தை ஸ்தானத்தை பெறுவீங்க… அப்புறம்…” என நிறுத்தி பிரணவ்வின் கண்களைப் பார்த்தாள் அனுபல்லவி.

 

பிரணவ்வும் அவள் என்ன கூற வருகிறாள் என அவளையே பார்த்திருக்க, “காதலிக்கவும், காதலிக்கப்படவும், கல்யாணம் பண்ணிக்கவும் எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு…” என்ற அனுபல்லவி பிரணவ்வின் கரத்தை அழுத்தப் பற்றினாள்.

 

இருவரின் கோர்த்திருந்த கரங்களையே பிரணவ் வெறித்துக் கொண்டிருக்க, “சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏங்கி இருக்கீங்க… ஆனா இனிமே அதுக்கு அவசியம் இல்ல… உங்களுக்கு தாயா, தாரமா, குழந்தையா, எல்லாமுமா நான் இருப்பேன் உங்க கூட கடைசி வரைக்கும்…” என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் கண்கள் கலங்கின.

 

பிரணவ் அனுபல்லவியையே பார்த்துக் கொண்டிருக்க, “அன்னைக்கு உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி உங்களை அந்த நிலமைல பார்த்ததும் ஏன்னே தெரியாம என் மனசு உங்களுக்காக ரொம்ப துடிச்சது… உங்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல… அது ஏன்னு அப்போ புரியல… அப்புறம் ஆஃபீஸ்ல உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ உங்களுக்கு எதுவும் ஆகல… நீங்க நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்… என் மனசு கொஞ்சம் கொஞ்சமா உங்க பக்கம் சரிய ஆரம்பிச்சது… நீங்க எப்பவும் ஏதோ ஒரு மாதிரி இறுக்கமாவே இருப்பீங்க..‌. அதைப் பார்க்குறப்போ எல்லாம் உங்க முகத்துல சந்தோஷத்தை கொண்டு வரணும்னு தோணும்… அப்போ தான் எனக்கு புரிஞ்சது என் மனசு முழுசா நீங்க இருக்கீங்கன்னு… உங்க பாஸ்ட் எப்படி இருந்தாலும் எனக்கு முக்கியம் இல்ல… அதெல்லாம் மறந்து போகும் அளவுக்கு என் காதல்ல உங்களை மூழ்கடிக்கணும்… ஐ லவ் யூ பிரணவ்…” என பிரணவ்வின் விழிகளை ஆழமாக நோக்கியபடி கூறிய அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் தன் முதல் இதழ் அச்சாரத்தைப் பதிக்க, அவளைப் பாய்ந்து அணைத்துக்கொண்ட பிரணவ் இத்தனை வருடமும் தான் கட்டுப்படுத்தி வைத்த மொத்த கண்ணீரையும் அனுபல்லவியின் தோளில் அழுது கரைத்தான்.

 

தன் மொத்த வலியையும் போக்கும் விதமாக அனுபல்லவியை அணைத்துக்கொண்டு கதறிய பிரணவ்வின் தலையை வருடியபடி எதுவும் கூறாது அழ விட்டாள் அனுபல்லவி.

 

சில மணி நேரம் கழித்து அழுது முடிந்த பிரணவ் மெதுவாக அனுபல்லவியை விட்டு விலகி அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

 

தனக்குரிய இடத்தை அடைந்து கொண்ட மன நிம்மதியோ என்னவோ அனுபல்லவியின் மடியில் தலை சாய்த்ததுமே பல வருடங்கள் கழித்து நிம்மதியாக உறக்கத்தைத் தழுவினான் பிரணவ்.

 

குழந்தை போல் புன்னகைத்தபடி தன் மடியில் துயில் கொள்ளும் தன்னவனையே விழி அகற்றாமல் பார்த்த அனுபல்லவி, ‘இன்னைக்கு என் மனசுல உள்ள காதலை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்னா இனி எப்பவுமே அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு தோணிச்சு பிரணவ்… அதனால தான் இன்னைக்கே எல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்… என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட என் மேல இதே காதல் உங்களுக்கு இருக்குமா பிரணவ்?’ என எண்ணியவளின் விழி நீர் பிரணவ்வின் கன்னத்தில் விழவும் திரும்பி அனுபல்லவியின் வயிற்றில் முகம் புதைத்தான் பிரணவ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *