Loading

காவ(த)லன் 2 :

அதிகாலை கண்விழித்த வெற்றி தனக்கு முன் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் குடும்ப புகைப்படத்தினைக் கண்டு ஒரு நொடி மனம் கனத்தாலும் அடுத்த நொடி தன்னை உறவுகளிடமிருந்து மீட்டு எடுத்தான்.

குடும்பம் தான் அவனுடைய பலமென்பது எந்தளவிற்கு உண்மையோ அதேயளவு உண்மை அவனின் பலவீனமும் அவனது குடும்பம் தான். அதனை வெற்றியும் நன்கு தெரிந்து வைத்துள்ளான்.

இருப்பினும் குடும்பத்திலிருந்து அவன் பிரிந்திருப்பதற்கான காரணம் வாணியின் திருமணம்.
திருமணம் என்பது நினைவுக்கு வந்ததும், தன்னைச்சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி நின்று நடைபெற்ற வாக்குவாதம் நினைவிற்கு வர கண்களை இறுக மூடி நினைவுகளை பின்னுக்குத் தள்ளினான்.

குளியலறைக்குள் புகுந்து பத்து நிமிடங்களில் வெளியில் வந்தவன், ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த காக்கி உடையினை விரல்களால் மெல்ல வருடினான். அந்த உடையின் மீது அவன் கொண்ட ஆசையும், அவனின் வேலையின் மீது அவன் கொண்ட காதலும் அவனின் கண்களில் மிளிர்ந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு காக்கிச்சட்டையை அணிய போகின்றான்.

தானாக அவனது உடல் மொழியில் கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அதே கர்வத்தோடு காக்கிச்சட்டையை அணிந்தவன் மிடுக்குடன் வீட்டை விட்டு வெளியேறி காவல்நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தை செலுத்தினான்.

வெற்றியின் வண்டி வந்து நின்றதும் காவல்நிலையமே பரபரப்பானது. முழுதாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் இரண்டாவது உயிராய் (முதல் உயிர் யாரென்று பின்னால் பார்ப்போம்.) நேசிக்கும் காவல் நிலையத்தில் காலெடுத்து வைத்தான். அவன் உடல் முழுக்க சிலிர்ப்பு ஓடி அடங்கியது.

தன்னை பார்த்து சல்யூட் அடித்த மற்ற காவலர்களை சிறு தலையசைப்புடன் கடந்து தனது இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தான்.

சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் நான்கு முக சிங்கத்திற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் ‘வாய்மையே வெல்லும்’ எனும் வாசகத்தை படித்தவனின் நினைவுகள் தான் செய்த என்கவுண்டரை நோக்கி பயணித்தது.

திலீபன் ஆளும்கட்சி அமைச்சர் சிதம்பரத்தின் ஒரே மகன். அவன் செய்யாத தவறுகளே இல்லை. உலகில் இருக்கும் அனைத்து கெட்டப்பழக்கங்களும் அவனிடத்தில் குடி கொண்டுள்ளன.

வெற்றி அவனை பல வழக்குகளில் கைது செய்திருக்கின்றான். ஆனால், அவன் தந்தையின் அரசியல் பலத்தை வைத்து அடுத்த அரை மணி நேரத்தில் வெளிவந்துவிடுவான்.

பெண் கற்பழிப்பு வழக்கில் ஒருமுறை அவன் வெற்றியிடம் மாட்ட, ஆதாரங்கள் அனைத்தும் திலீபனுக்கு எதிராக அமைந்தும் அவ்வழக்கிலிருந்து மிக எளிதாக வெளியேறிவிட்டான். அதில் வெற்றிக்கு அவன் மீது கோபம் மிகுந்தது.

அச்சமயம் தான் திலீபன் தன்னை காதலிக்க மறுத்ததற்காக தன்னுடன் படிக்கும் மாணவியின் மீது திராவகத்தினை வீசினான். நகரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அப்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, திலீபன் தன்னுடைய விருந்தினர் மாளிகையில் நண்பர்களுடன் கேளிக்கை விருந்தென்று கொட்டமடித்துக் கொண்டிருந்தான்.

திலீபன் தான் குற்றவாளியென கண்டுகொண்ட வெற்றி அவனை கைது செய்ய திலீபனிருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான். அங்கு அவனிருக்கும் நிலையை பார்த்ததும் வெற்றி ஆத்திரம் அடைந்தான்.

ஒரு பெண்ணை உயிருக்கு போராட வைத்திருக்கின்றோமே என்கிற குற்றவுணர்ச்சி சிறிதுமில்லாமல் அரை போதையில் பெண்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

வெற்றி அவனை கைது செய்து இழுத்து வந்து வண்டியில் ஏற்றினான்.
“எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் வெளியில் வரப்போறேன். அதுக்கு எதுக்கு போலீஸ் என்னை கைது செய்து சீன் போடுகிற” என்று திலீபன் நக்கலாகக் கேட்க,
வெற்றியுடன் வந்திருந்த துணை ஆய்வாளர் ராம் திலீபன் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

“எல்லாம் பணத் திமிரு சார்” என்ற ராம் மீண்டும் திலீபனை அறையப்போக,

“அவன் சொல்றதும் நிஜம் தானே ராம், இதுவரை எத்தனை முறை அவனை பிடித்து உள்ள வைத்திருப்போம்… ஒரு தடவையாவது அவனுக்கு தண்டனை கிடைத்திருக்கா?” என்ற வெற்றி “அவனை அடிப்பதும் வீண் தான்” என்றான்.

“மருத்துவமனையில் வலி தாங்க முடியாது, இவனால் பாதிக்கப்பட்ட பெண் கதறும் அழுகையை காது கொடுத்து கேட்க முடியல சார்”, என்ற ராமின் வார்த்தைகளை ஏற்பதுபோல்…

“வயது வந்த பெண்ணின் தந்தையாக பார்க்கும் போது, இவன் போன்ற மிருகங்களை கொன்னு புதைக்க வேணும் சார்” என்றார் மூர்த்தி.

“ஸ்டாப் தி கார் மூர்த்தி.”

“சார்”… தான் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென வெற்றி வண்டியை நிறுத்த சொல்லியதும் மூர்த்தி புரியாது வெற்றியை பார்க்க,

“வண்டியை நிறுத்துங்க மூர்த்தி அண்ணா” என்றான் மிகப் பொறுமையாக.

வண்டியை மூர்த்தி நிறுத்தியதும், அதிலிருந்து இறங்கிய வெற்றி  அவ்விடத்தை சுற்றி தன் பார்வையால் அலசினான். ஆளரவமற்று, நீண்டு காணப்பட்ட தார் சாலையின் இருமங்கிலும் அடர்ந்த மரங்கள் நின்றிருக்க அமைதியாக காட்சியளித்தது.

“அருமையான இடம்”.

மூர்த்திக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறிய வெற்றி வண்டிக்கு பின்புறம் சென்று கதவினை திறந்து திலீபனை போகுமாறு சைகை செய்தான்.

“என்னா பெரிய போலீசு, பயந்துட்டியா” எனக் கேட்டு ஏளனமாக சிரித்தான்.
திலீபனை பார்த்து இதழோரம் சிரித்த வெற்றி, “எதுக்கு வீண் அலைச்சல்… எப்படியும் வெளியில் வரப்போற, எங்களுக்கு தான் கோர்ட், ஸ்டேஷன்… டைம் வேஸ்ட், பெட்ரோல் வேஸ்ட், நீ போ” என்றான்.

“புரிந்தால் சரி” என்ற திலீபன் வண்டியிலிருந்து இறங்கினான்.

அவனிடமிருந்து கைப்பற்றிய அவனது அலைபேசியை வெற்றியை பார்த்தவாறே ராம் கொடுக்க, அதனை வாங்கியவன் யாருக்கோ அழைத்தவாறு நடந்து சென்றான்.

“அப்புறம் ராம் செம வெதர் (weather)… அப்படியே சில்லுன்னு இருக்குல” எனக் கேட்டவாறே தன் கைகளை தலைக்கு மேலுயர்த்தி சோம்பல் முறித்த வெற்றி கண் இமைக்கும் நேரத்தில் திலீபனின் பின்னந்தலையில் குறி பார்த்து சுட்டிருந்தான்.

குண்டு பாய்ந்த வேகத்தில் ரத்தம் தெறித்து கீழே விழுந்த அடுத்த நொடி மரணத்தை தழுவினான்.

ராம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாரன்.

இது எனக்கு பழக்கம் தான் எனும் வகையில் மூர்த்தி அமைதியாக பார்த்திருந்தார்.

வெற்றி வேலைக்கு சேர்ந்தது முதல் அவனின் நடவடிக்கைகளை பார்க்கின்றாரே, அவருக்குத் தெரியாதா வெற்றியின் சிறு செயலுக்கு பின்னாலும் ஆயிரம் அர்த்தம் இருக்குமென்று.

என்ன தான் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் கண்ணுக்கு முன்னால் குண்டடிப்பட்டு ஒருவன் இறந்து கிடப்பது சிறு பயத்தை தோற்றுவிக்க, “என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே” என்றான் ராம்.

“இவன் உயிரோடு இருந்து என்ன செய்யப்போறான், இன்னும் பல பெண்களின் அழுகைக்கு காரணமா இருப்பான்… அதுக்கெதுக்கு இவன் உயிர் வாழனும். இவன் உயிரோடு இருப்பது டோட்டல் வேஸ்ட்.” என்ற வெற்றி “அடுத்து என்ன என்பதை பாருங்க” என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அதன் பின்னர் விசாரணை கமிஷன் வைத்து விசாரிக்க,
திலீபனின் தவறுகளை ஆதாரங்களுடன் சமர்ப்பித்த வெற்றி,

“அவன் தப்பி ஓட முயன்றது மட்டுமில்லாது… துணை ஆய்வாளாரைத் தாக்க முயன்றதால் திலீபனின் காலுக்கு குறி வைக்க, குண்டு பாயும் நேரம் அவன் கல் இடரி கீழேவிழ குண்டு அவனது தலையில் பாய்ந்துவிட்டது” என்றான் அமர்த்தலாக.

அதிகாரிகளும் சுவாரஸ்யமான கதை கேட்பதைப்போல் கேட்டனர். சம்பவம் நடந்தபோது உடனிருந்த ராம் மற்றும் மூர்த்தியை விசாரிக்க அவர்களும் வெற்றி சொல்லியதையே சொல்ல… சொல்லப்பட்டது உண்மையில்லை என்று அறிந்தபோதும் வெற்றியை போன்றோரு அதிகாரியை இழக்க விரும்பாததால் இரண்டு மாதங்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததோடு தங்களது விசாரணையை முடித்துக் கொண்டனர்.

நினைவிலிருந்து மீண்ட வெற்றி ராமிடம் தான் இல்லாதபோது நடந்த வழக்குகள் அடங்கிய கோப்புகளை எடுத்துவருமாறு பணியிட்டான்.
ராம் கோப்புகளை கொண்டு வந்து கொடுக்கவும், சங்கர் தன் கட்டுப்போட்ட கையின் வலி பொறுக்க முடியாது முகம் சுளித்தபடி உள்ளே வந்தவன் யாரையும் கண்டுகொள்ளாது தனது இருக்கையில் அமர்ந்தான்.

“மூர்த்தி, டீ வாங்கிட்டு வாங்க.” என்ற சங்கரின் முன் மூர்த்தி காக்கி உரை ஒன்றை நீட்டினார்.

“உங்ககிட்ட நான் என்ன கேட்டேன், வந்ததும் எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்யணுமா?” என்று பொறுமினான்.

“அப்படி சார் என்ன வேலை செய்து விட்டார்” இரண்டு மகளிர் காவலர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொள்ள, அவர்களைத் தீயாய் முறைத்தான் சங்கர்.

இவனிடம் காலத்தை வீண் செய்யக்கூடாதென்று, “சார் இது உங்களுடைய பணி நீக்க உத்தரவு” எனக்கூறி உரையை மேசையின் மீது வைத்துச் சென்றார்.

மூர்த்தி கூறியதும் அதிர்வுடன் நாற்காலியிலிருந்து எழுந்த சங்கர், உரையை பிரித்துப்பார்க்க அதில் காவல்துறையிலிருந்தே முற்றிலும் அவன் நீக்கப்படுகிறான் என்கிற செய்தியோடு அவனின் உயர் அதிகாரிகள் கையெழுத்து போட்டிருந்தனர்.

“என்ன எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா சொல்லு, சரிசெய்து அனுப்புறேன்.”

கேலியாக ஒலித்த குரலில் நிமிர்ந்து பார்த்த சங்கர், தன் முன் சிங்கத்தின் தோற்றத்துடன் கம்பீரமாக நின்றிருந்த வெற்றியை பார்த்து மின்சாரத்தை மிதித்தது போல் அதிர்ந்தான்.

“என்னை டிஸ்மிஸ் செய்ய காரணம் என்ன?” தெரிந்து கொண்டே கேட்டான்.
வழக்கம்போல் இதழோரம் சிரித்தவனாய், நாற்காலியில் கால்மேல் காலிட்டு தோரணையாக அமர்ந்தான் வெற்றி.

“நீ… நீங்க சஸ்பென்ஷனில்…”
சங்கர் தடுமாற, “அது நேற்றோடு போச்சு” என்றான் வெற்றி. இரவு வெற்றி அலைபேசியில் நேரத்தை பார்த்து சிந்திய புன்னகையின் அர்த்தம் இப்போது சங்கருக்கு புரிந்தது.

‘இவனை அமைச்சரிடம் சொல்லி மொத்தமா காலி பண்ணலாம் நினைச்சா, இவன் என்னை காலி பண்ணிட்டானே.’ சங்கர் தான் நினைத்தது தன்னையே தாக்குமென்று எதிர் பார்க்கவில்லை. ஆதலால், மனதோடு புலம்பினான்.

“யார் காலியானால் என்ன?, யாரோ ஒருவர் காலியானால் சரி.”
உன்னுடைய மனம் யோசிப்பதைக்கூட என்னால் கண்டறிய முடியுமென்று தன் வார்த்தைகளால் உணர்த்தினான் வெற்றி.

உள்ளுக்குள் வெற்றியை நினைத்து பயமிருந்தாலும் அதனை சங்கர் வெளிக்காட்டிக் கொள்ளாது, “இந்த டிஸ்மிசை(dismiss) என்னால் ஏற்க முடியாது” என்றான்.

“அப்போ ஒரு குறும்படம் பார்க்கலாமா” எனக் கேட்ட வெற்றி தன் அலைபேசியை எடுத்து காணொளி ஒன்றை ஓடவிட்டான். அதில் நேற்று இரவு சங்கர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டது பதிவாகியிருந்தது. அதனை பார்த்து சங்கர் அரண்டு விழித்தான்.

“என்ன படம் செமயா வந்திருக்கா? இதனை என்னால் மீடியாக்களிடம் ஒப்படைத்து உன்னை ஒன்னுமில்லாமல் செய்ய முடியும். நான் அப்படி செய்தால் உன் பெயர் கெட்டுப்போறது மட்டுமில்லை, உன் மனைவி, மகள்களே உன்னை வெறுத்து ஒதுக்கிடுவாங்க. மேலிடம் சொல்லியும் உன் மகள்களை கருத்தில் வைத்து இதனை மறுத்துவிட்டேன். ஒழுங்கா இந்த டிஸ்மிஸ் லெட்டரை எடுத்துக்கிட்டு வெளிய போயிடு”. பொறுமையாக சொல்லிய வெற்றி இறுதியில் சிங்கமெனக் கர்ஜித்தான்.

“உன்னைப் போன்றோரெல்லாம் காவல்துறைக்கே சாபக்கேடு.”

ஒன்றும் பேசாது வெளியேறினான் சங்கர்.

வெற்றியை பற்றி முழுதாக தெரியவில்லை என்றாலும் ஊடங்கங்களின் மூலம் ஓரளவு தெரிந்து வைத்திருந்த சங்கருக்கு அவன் தன்னை இத்தோடு விட்டதே போதுமென்று எண்ணினான்.

சங்கர் வெளியேறியதும் அவரவர் தங்கள் பணிகளை கவனிக்கலாயினர்.
கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த வெற்றியின் கையில் அந்த வழக்கு சிக்கியது.

“இந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது ராம்?'”

“இது  வனத்துறை பகுதியில் வருது சார், இன்னும் அங்கிருந்து எந்தவொரு ரிப்போர்ட்டும் நமக்கு வரல” என்று வெற்றியின் கேள்விக்கு பதிலளித்தான் ராம்.

“சரி, இதைப்பற்றி தகவல் எதுவாயிருந்தாலும் எனக்கு உடனடியா இன்பார்ம் பண்ணிடுங்க” என்ற வெற்றி, “அந்த போதைப்பொருள் வழக்கு என்னாச்சு?” எனக் கேட்டான்.

“சார் அது…”
ராம் என்ன சொல்வதென்று தெரியாமல் இழுக்க… வெற்றி பார்த்த பார்வையில்,

“அந்த வழக்கை இப்போதைக்கு விசாரிக்க வேண்டான்னு கமிஷனர் சொன்னார் சார்” என்று மிக வேகமாகக் கூறினான் ராம்.

“ம்” என்ற வெற்றி அடுத்த வழக்கு அடங்கிய கோப்பினை கையில் எடுத்தான்.

______________________________________

வீட்டில் நடுநாயகமாக அமர்ந்திருந்த வெங்கடாசலத்தின் கைகளில் அன்றைய தின நாளிதழ் இடம் பெற்றிருந்தது.

அவருக்கு மோர் கொண்டு வந்த ஜானகி “எத்தனை முறை தான் அந்த காகிதத்தை பொரட்டுவிங்களோ, அதுக்கு உயிரிருந்தா கதறியிருக்கும்” என்றார்.

உடனிருந்த செண்பகம் சத்தமாக சிரிக்க அவரை வருத்தமாக பார்த்தார் தாத்தா.

செய்தித்தாளில் வாணி எழுதிய கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையின் கீழிருக்கும் வாணியின் பெயரை பார்த்தே அவரின் வருத்தம். காரணத்தை நொடியில் புரிந்துகொண்ட ஜானகியின் கண்களில் நீர் சுரந்தது.
அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த சேது மனைவியின் கண்ணீரில்…

“எப்படியிருந்த வீடு இப்படி கலையிழந்து போச்சே” என்று மனம் கலங்கினார். அவரின் பார்வை மனைவி மீதே நிலைத்திருந்தது.
அவருக்கு பின்னால் வந்த சக்தி அவர் அப்படியே நிற்பதற்கான காரணம் புரியாது அவரின் பார்வை போகும் திக்கை பார்த்து சூழ்நிலை புரிந்து மாற்றும் பொருட்டு,

“யாரோ என் அம்மாவை சைட் அடிக்கிறாங்க போலிருக்கே, ஈவ்டீஸிங் கேசில் உள்ள போட சொல்லணும்” சக்தி சத்தமாகக் கூறினான்.

மகனின் எண்ண ஓட்டம் தந்தையாகிய அவருக்கா புரியாது… நொடியில் தன்னை மீட்டவர் வருத்தத்திலிருக்கும் மற்றவரையும் திசை திருப்பும் முயற்சியில் மகனுக்கு உதவி புரிந்தார்.

“என்னடா, என் பொண்டாட்டியை நான் சைட் அடிக்கிறதுக்கு ஈவ்டீஸிங் கேசெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா?” என்று சேது பாவமாகக் கூறினார்.

குரல் கேட்டு அனைவரும் வாசலை நோக்க, அசடு வழியும் சேதுவை கண்டு அனைவரும் சிரித்தனர்.

“அப்போ வெற்றி அண்ணா கிட்ட சொல்லி ஒரு நல்ல கேசில் உங்களை உள்ள போட சொல்லுறேன்” என சக்தி மீண்டும் தன்னுடைய தந்தையை சீண்ட அவர் ஒன்றும் கூறாது அமைதியாக சென்று பெரியவரின் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டார்.

வெற்றி என்றதும் அனைவரும் அவனின்றி இந்த வீடு சித்திரமில்லா சுவராகக் காட்சியளிப்பதாய் நினைத்து வருந்தினர்.

‘அண்ணா பெயரைச்சொல்லி எல்லாரையும் மீண்டும் வருத்தப்பட செய்துட்டோமே! எப்படி இவங்களை சமாதானம் செய்றது?’ எனத் தெரியாமல் சக்தியும் அவர்களுக்கு இணையாக வருத்தம் கொண்டான்.

தனது சகோதரனும், சகோதரியும் இல்லாது, தான் மட்டும் இவ்வீட்டில் தனித்திருப்பதைப்போல் தனிமையை உணர்ந்தான்.

அந்நேரம் அறையிலிருந்து வெளியே வந்த நல்லு சக்தியின் தோள் மீது கைபோட்டு… “நீ ஒருத்தன் போதும்டா, நம்ம குடும்பத்தை கட்டிக்காக்க… எதுக்கு வெசனப்பட்டு நிக்குற?” எனக் கேட்டார்.

அவரின் வார்த்தையில் அனைவரும் நல்லுவை முறைக்க,
“இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு மொறைக்குறீங்க, வரவர இந்த வீட்டுல எனக்கு மரியாதை இல்லாமப் போச்சு” என்றார் நல்லு.

“உங்களை இங்க யாரும் மதிக்காம இல்ல, எங்களுக்கு சக்திக்கு முன்ன ஒரு மவ(க)ன் இருக்கிறான், அவனை விட்டுட்டு பேசுனா இப்படித்தான்” என முதல் முறையாக தனது அண்ணனிடம் கோபமாக பேசினார் சேதுராமன்.

“சரி சரி விடு… நானு ஏதோ தெரியாம சொல்லிபுட்டேன், வேணுன்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.”

இதுதான் சரியான தருணம் என நினைத்த ஜானகி “எந்தவொரு விசேஷமா இருந்தாலும், வெற்றி இல்லாம செய்தது இல்லை. அவன் இங்க இருந்தாதான் சாமி கூட கும்பிடுவோம். அவன் சரி சொல்லிய பிறகு தான் எல்லாம் நடக்கும், இப்போ இங்க அப்படி நடக்கலையே” என்றார்.

ஒரு தாயாக ஜானகியின் வார்த்தைகளில் ஆதங்கம் இருந்தது.

வெற்றியை வீட்டிற்கு அழைப்பதைப்பற்றி நல்லுவிடம் பேச வேண்டுமென்று சமயம் பார்த்துக்கொண்டிருந்த சேதுவும் இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்து, தன் மனைவியைத் தொடர்ந்து பேசினார்.

“ஆமாண்ணே, ஏழு வருசத்துக்கு ஒரு தரம் நடக்குற நம்ம ஊரு செல்லியம்மன் திருவிழா, சுத்துபத்து ஊருல இருந்து சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க… வீடே நிறைஞ்சு கிடக்கும், அந்த நேரத்துல நம்ம புள்ள இல்லைனா எப்புடிண்ணே… வெற்றியை இந்த திருவிழாவை சாக்கா வச்சு வீட்டுக்கு கூட்டியாந்துடலாம்ண்ணே” சேது சற்று நயமாகவே பேசினார்.

“பார்த்தீங்களா ஐயா என் பிள்ளைக்காக என்கிட்டவே எவ்வளவு  பேசுறாங்க” நல்லு தன்னுடன் அமர்ந்திருந்த வெங்கடாசலத்தின் காதில் மெல்ல பேசினார். அதற்கு சிரிப்பினை உதிர்த்தவர், “அவன் கேட்பதும் சரி தானே” என்றதோடு “எனக்கும் வெற்றியை பார்க்கணும் போல இருக்கு” என கவலை படிந்த முகத்தோடுக் கூறினார்.

“நாளைக்குத்தானே திருவிழா பேச்சை ஆரம்பிக்கவே போறாங்க, எல்லாம் முடிவாகட்டும் பார்ப்போம்” என்றவர் “என்னைய விட அவன் தான் உங்களுக்கெல்லாம் முக்கியமா போய்ட்டான்ல?” என்றார்

“ஆமாம்டா, வீட்டின் மூனாவது தலைமுறையின் முதல் ஆண் வாரிசு அவனில்லாமல் எங்களுக்கு இந்த திருவிழாவில் கலந்துக்க விருப்பமில்லை” என்ற தாத்தாவின் கூற்றை மற்ற உறுப்பினர்களும் ஆமோதிப்பதைப்போல் பேச,

“அப்போ சரி, இந்த வீட்டுக்குள்ள உங்க மகன் வரனுமுன்னா என் மகளும் வரனும்… இதற்கு சம்மதமுன்னா இப்போவே போய் அவனை கூட்டியாந்துருங்க” என்ற நல்லு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்.

“வாணியை வீட்டுக்குள் சேர்ப்பதா?”

தன் முதுகுக்கு பின்னால் ஒலித்த சேதுவின் கேள்வியில் தனது நடையை நிறுத்தி திரும்பிய நல்லு… “வாணி செஞ்சது தப்புன்னா, அதுக்கு காரணமான வெற்றி பண்ணதும் தப்பு தான்” என்றார்.

“அதுக்கு வாணியை சேத்துகிட்டா அந்த பயலுவயெல்லாம் ஒறவுமொறையை சொல்லிக்கிட்டு நம்ம வீட்டு பக்கம் வரதுக்கா?” வெங்கடாசலம் காட்டமாக வினவினார்.

“தப்பு செஞ்சா அது யாரா இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை ஒண்ணாதான் இருக்கணும்” என்ற நல்லுவிடம் “அவளை (வாணி) எப்பவும் எம்மவளா என்னால ஏத்துக்க முடியாது”. சொன்னது ஜானகி.

“அவள் பண்ணதுக்கு வெற்றியும் உடந்தை… வெற்றி இந்த வீட்டு உள்ளார வரணுமுன்னா, வாணியும் வரணும்” அழுத்தமாகக் கூறிச் சென்றார் நல்லு.

அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர்.
வீட்டின் இரண்டு வாரிசுகளை குடும்ப உறுப்பினர்கள் ஒதுக்கி வைத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
48
+1
71
+1
3
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. வாணி லவ் மேரேஜ் பண்ணிட்டு போய்ட்டாளா? அதுக்கு வெற்றி உடனடியாக இருந்தானா? அதுக்காக தான் எல்லாரும் அவங்கள குடும்பத்தை விட்டு அனுப்பி விட்டாங்களா?