காவ(த)லன் 10
“சார் திரும்பவும் நகரத்தில் போதை பொருட்கள் விற்பனை ஆவதா தகவல் வந்திருக்கு. அதைப்பற்றி உங்ககிட்ட பேசுவதற்காக ஐஜி காவல் நிலையம் வந்திருக்கிறார்.”
ராம் சொல்லியதும் வெற்றி தன்னுடைய காவலர் குடியிருப்பிலிருக்கும் தனது இல்லம் சென்று காக்கி உடை அணிந்து மிடுக்காய் காவல் நிலையம் நோக்கி விரைந்து சென்றான்.
காக்கிச்சட்டை ஒரு சிலருக்கு மட்டுமே தனியானதொரு நிமிர்வை கொடுக்கும். தனக்கு முன் நீண்ட எட்டு வைத்து வரும் வெற்றிக்கு அத்தகைய நிமிர்வு இருப்பதை அவனின் கம்பீர தோற்றத்தைக் கண்டு எப்போதும் வியப்பதை போல் இப்போதும் வியந்து பார்த்தார் ஐஜி.
ஐஜி’யின் அருகில் சென்று விறைப்பாக சல்யூட் ஒன்றை வெற்றி வைத்த பிறகே அவர் இமை சிமிட்டினார்.
வரும் போதே மூர்த்திக்கு அழைத்திருந்த வெற்றி காவல் நிலையத்தில் என்ன நடந்ததென்று கேட்டு தெரிந்து கொண்டான்.
“ஏய்யா வேலை நேரத்துல ஆபிசில் இல்லாம எங்க ஊர் சுத்த போனீரு?” நக்கலாக ஐஜி வினவினார்.
வெற்றி ராமினை ஒரு பார்வை பார்க்க,
“சார்… வெற்றி சார் இன்று ஒருநாள் தனிப்பட்ட விடுப்பு எடுத்திருக்கார் சார், விடுப்பு அளித்தது நீங்க தான்… உங்க கையெழுத்திட்ட விடுப்பு விண்ணப்பம்” என்று ராம் ஒரு தாளினை ஐஜி’யிடம் கொடுக்க… அவரின் தடுமாற்ற நிலையை கண்டு வெற்றியின் இதழோரம் எள்ளல் தோன்றியது.
“என் விடுப்புக்கு அனுமதி அளித்ததை நீங்களே மறந்துட்டிங்களா?” என்ற கேள்வி வெற்றியின் எள்ளலில் தொக்கி நின்றது.
“நான் விடுப்பு எடுத்திருந்தாலும், நீங்கள அழைத்ததற்காக எனது விடுப்பு காரணத்தைக்கூட விட்டுட்டு வந்திருக்கேன்… என்ன விஷயமாகங்க வர சொன்னீ…ங்க?”
பார்ப்போருக்கு என்னவோ வெற்றி மரியாதையாக பேசுவதைப்போல் தான் இருந்தது. ஆனால் அவனின் விஷமம் ஐஜி’க்கு மட்டுமே புரிந்தது.
‘இவனிடம் மல்லுக்கு நிக்க முடியாது’ என மனதோடு கூறிக்கொண்டவர் தான் வந்த வேலையை பார்க்கலானார்.
“அந்த போதைப்பொருள் வழக்கை ஏதாவது காரணம் சொல்லி மூடிடு.”
“நீங்க சொல்லுறது சரியா விளங்கலைங்களே!”
“இன்னைக்கு யாரோ கல்லூரி மாணவர்கள் வேடத்தில் சிலர் போதைப்பொருள் விற்பதா புகார் கொடுத்தார் தானே, அதனை ஏற்கக் கூடாது… அந்த வழக்கு முடித்து விட்டதைப் போல் கோப்புகளை என்னிடம் ஒப்படைத்து விடு.” இம்முறை எவ்வித பூசலுமின்றி நேரடியாக சொல்லியிருந்தார்.
ஐஜி அவ்வாறு சொல்லியதும் வெற்றி ராமினை பார்க்க, அவனது பார்வையின் பொருளுணர்ந்த ராம் வேகமாகக் சென்று போதைப்பொருட்கள் அடங்கிய கோப்பினை கொண்டு வந்து வெற்றியிடத்தில் கொடுத்தான்.
அதனை வெற்றி பிரித்துக்கூட பாராது, இன்று ஒருவர் அளித்த புகாருடன் சேர்த்து ஐஜி’யிடத்தில் ஒப்படைத்தான்.
“அவ்வளவுதான சார்… நான் கிளம்புட்டுமா?” என்ற வெற்றி, ஐஜி தன்னை ஆச்சரியமாக பார்ப்பதை கண்டு கொள்ளாது “இன்னைக்கு முழுக்க தானுங்க நான் விடுப்பு எடுத்திருந்தேன்… இந்த நாளு முடியறதுக்கு இன்னும் ஆறு மணி நேரம் இருக்குதுங்களே, நான் போயி என் வேலையை பார்க்குறேனுங்க” எனக்கூறி வழக்கமான தன்னுடைய இதழோர குறுஞ்சிரிப்புடன் வெளியேறினான்.
காவல் நிலையமே வெற்றியின் செய்கையில் ஆச்சரியம் அடைந்திருந்தது. அதற்கு காரணம், ஒரு சிறு வழக்கு என்றாலும் தனது பார்வைக்கு வந்து விட்டால் யார் சொல்லியும் கேட்காது, அதனை இறங்கி ஒரு கை பார்க்கும் வெற்றி இன்று ஐஜி சொன்னார் என்பதற்காக கோப்பினை அவரிடம் ஒப்படைத்தது அதிர்வை விட ஆச்சரியமாகத் தானிருந்தது.
“இவன் வழக்கமாக இப்படி நடந்துக்கும் ஆளில்லையே…” என யோசித்த ஐஜி, “என்னவோ மேலிடம் சொன்ன மாதிரி செஞ்சாச்சு… நம்ம வேலைக்கு ஆப்பு வரமலிருந்தால் சரிதான்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவரும் வெளியேறினார்.
நடப்புக்கு மீளாமல் வெற்றியின் செய்கையின் தாக்கத்திலேயே சிலைபோல் நின்றிருந்த ராமினை தொட்டு நினைவுக்கு மீட்டார் மூர்த்தி.
“வெற்றி சார் செயலுக்குப் பின்னால் வலுவான காரணமிருக்கும், நீங்க இங்க நடந்ததையே நினைச்சிட்டு கனா காணாம போயி வேலையை பாருங்க சார்” என்றார் மூர்த்தி.
“என்ன அண்ணே சாரைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரியுமோ?” எனக் கேட்ட ராமிற்கு…
“நிறையவோ கொஞ்சமோ, ஆனால் அவர் காரணமில்லாமல் எதுவும் செய்ய மாட்டாரு… வீணா எதையும் யோசிக்கிறேன்னு உங்கள நீங்களே போட்டு படுத்திக்காதீங்க, சாருக்கிட்ட கேட்டாக்கா அவரே சொல்லுவாரு” என்று பதிலளித்த மூர்த்தி சிறு புன்னகையுடன் நகர்ந்தார்.
________________________
வீட்டிற்கு வந்த விநாயகம் தன் குடும்பத்தாரிடம் அருவியில் நடந்தவற்றை தெரிவிக்க, முதலில் பயந்தோர் அடுத்து அவருக்கு ஒன்றுமாகவில்லை என்பதில் நிம்மதி அடைந்தனர்.
காப்பாற்றிய நல்லுவுக்கு எந்தவித பகையும் பாராது மனமார உள்ளத்திலேயே நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
“அண்ணி உங்க அப்பா ஹீரோ வேலையெல்லாம் பார்த்திருக்கிறார்” என்று அமரி, வாணியிடம் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி பேச வாணி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வாணியின் அச்செயலில் ‘தன்னால் முடிந்த உதவியை வாணிக்கு செய்ய வேண்டும்’ என்று உறுதியாக முடிவெடுத்தாள்.
“இதுக்குதான் சொல்லுறேன் அமரிக்கு சுருக்க கல்யாணத்த முடிக்கிற வழியைப் பாருங்க” என்றார் பஞ்சு.
அங்கு நடப்பவற்றைக் கேட்டு மற்றும் பார்த்துக் கொண்டும் தனது அறையிலிருந்து அவர்கள் அருகில் வந்து நின்றான் கதிர்.
கதிரை கண்டதும் தங்கவேலும், விநாயகமும் மகனின் நலம் விசாரித்து… அடுத்து அவன் இங்கு தான் இருக்கப் போகிறான் என்பதில் மகிழ்ந்தனர்.
“அடி ஒன்னும் படலையே?” தனது தந்தையிடம் கேட்ட கதிர், அவர்
“எனக்கு ஒன்னுமில்லப்பா” என்றதும், பஞ்சுவிடம் திரும்பி “இப்போ அமரி கல்யாணத்துக்கு என்ன அவசரம் பாட்டி?” என்று வினவினான்.
“உன் அப்பன் எப்பேர்ப்பட்ட கண்டத்துல இருந்து தப்பியிருக்கான்… எல்லாம் அந்த சோசியக்காரன் சொன்னது உண்மையாகிப்புடும் போல” என்றுக் கூற அமரி விக்கித்து நின்றாள்.
தன் தங்கையின் தோற்றம் கண்ட கதிர்… “அதான் அவளுக்கு இருபது வயசு முடிஞ்சிப்போச்சே, இன்னமும் என்ன ஜோசியம் அது இதுன்னு… உங்க மூட நம்பிக்கையெல்லாம் உடப்பில் போடுங்க” என சினந்தான்.
மேற்கொண்டு பேச வாய்திறந்த பஞ்சுவை விநாயகம் அடக்கினார்.
“உன் வார்த்தைக்காகதான் என் பொண்ண பதிமூணு வருசமா பிரிஞ்சியிருந்தேன் இனியும் அது முடியாது.” விநாயகம் திடமாக உரைக்க, அமரி ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்துக் கொண்டாள். அவரும் பரிவுடன் மகளின் தலையை வருடிக்கொடுத்தார். அமரியின் பார்வை பஞ்சுவை கெஞ்சலாக பார்த்தது.
“எனக்கு மட்டும் என் பேத்தியை பிரிஞ்சியிருக்கனுமா ஆசை, ஏதோ போறாத காலம்” எனக்கூறிக் கொண்டே அமரியிடம் வந்தவர் “கல்யாணத்துக்கு ஒத்துக்கடி” என்றார்.
கதிருக்கு எரிச்சலாக இருந்தது.
“உங்களுக்கு உன் பையன் எவ்வளவுக்கு முக்கியமோ அதைவிட எனக்கு என் பொறந்தவ முக்கியமுங்க, இனி அமரி இங்கதான் இருப்பாள்… அவ(ள்) விருப்பப் பட்டாதான் கல்யாணம்” எனக் காட்டமாக மொழிந்தவன் தன் தங்கையை கூட்டிக்கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்று விட்டான்.
“இவன் என்ன இந்த எகிறு எகிறுறான்.” பஞ்சு பாட்டி வாயில் கை வைத்தார்.
“அதான் வந்த கண்டம் தலைப்பாகையோட போச்சே, இனிமேல் என்னட்டி… அமரி இங்கவே நம்மளோட இருக்கட்டும்.” தங்கவேலு அவ்வாறு சொன்னதும் அவரை மறுத்து பேச பஞ்சு பாட்டியால் முடியாது போனது.
___________________
“ஏன்டா சசி இந்த சக்தி பயல காணுமே, எங்க இருக்கான்?” ஜானகி உணவு உண்டு கொண்டிருந்த சசிக்கு பரிமாறியபடி அவனிடம் கேட்டார்.
சசியின் காதில் ஜானகி கேட்டது விழுந்தாலும், அவன் பதிலளிக்கவில்லை.
“சோறு தான் நமக்கு முக்கியம்” என்கிற ரீதியில் உணவினை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“மதி புள்ள வந்திட்டு போனதுல இருந்துதான் அந்தப் பய ஏதோ மந்திரிச்சு விட்ட கோழியாட்டாம் இருக்கான்… அந்த புள்ள அப்படி இப்பிடின்னு ஏதாவது பண்ணியிருக்குமோ?” ஜானகி சசியின் காதில் கிசுகிசுத்தார்.
“அப்படி இப்டின்னா!” சசி புரியாது வினவினான்.
“ஏய் கோட்டிப்பயலே, அதுதான்டா முத்தம் கித்தம்… அதைதான் உன் ஆத்தாக்காரி கேக்குறா” என பாக்கு இடித்துக் கொண்டிருந்த செண்பகம் கூறவும்,
‘தான் இவ்வளவு மெல்ல பேசனது தனது மாமியாருக்கு எப்புடி கேட்டச்சு’ என அசடு வழிந்த ஜானகி சசி தன்னையே ஆவென பார்ப்பதைக் கண்டு… “எம்மூஞ்சில என்னடா பராக்கு பாக்குற, நான் கேட்டதுக்கு பதில சொல்லு” என்றார்.
“ஆமா, அவ(ள்) கேட்டதுதான் நானும் கேக்குறேன்… ஏன்னா சக்தி உன் சோட்டு பய, உன்கிட்ட காரணத்தை சொல்லி இருப்பா(ன்)ல, அதான் கேக்குறோம்” என்க… இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவன்,
“எங்காவது ஒரு அம்மா, பாட்டி மாதிரியா பேசுறீங்க… இதுல ஏழு கழுத வயசாச்சு” எனக் கூறி சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை தட்டில் உதறியவனாக சென்று விட்டான்.
விடுவிடுவென தனது அறைக்குள் நுழைந்த சசி கதவினை சாற்றி தாழ்ப்பாளிட்ட பின்பே அக்கதவிலேயே சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தினான்.
“கொஞ்சம் மாட்டியிருந்தாலும் சின்னா பின்னமாகி இருப்படா, சேதரமாயி போயிருக்கும்… கெழவிங்க என்னா பேச்சு பேசுதுங்க” என்று புலம்பிய சசி மெத்தையில் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்தான்.
இரண்டு நிமிடம் கடந்திருக்கும் அவனின் அறைகதவு உடைந்து விழுமளவிற்கு யாரோ தட்டும் சத்தம் கேட்டு தூக்கிவாறிப்போட எழுந்து அமர்ந்தான்.
“இந்நேரத்தில பேய் பிசாசு ஏதாவது காத்து ரூபத்துல வந்து கதவ தட்டுதுங்களோ” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், ‘இதுங்கலாம் ராவுல தானே வரும்’ என்று உள்ளுக்குள் கூறியவனாக “யாரு” என்று வினவ எதிர் முனை யாரென்று சொல்லியது.
“இது பேய் பிசாச விட ஆபத்தானதாச்சே” என புலம்பியபடியே கதவின் தாழினை நீக்கினான்.
_________________________
“ஏய்யா உனக்கு அறிவு இருக்கா இல்லையா? அவன இங்க எங்க பக்கத்துக்கே மாத்தலாக்கி விட்டிருக்க.” அமைச்சர் கதிரின் களக்காடு மேலதிகாரியை திட்டி தீர்த்தார்.
“சார், அது வந்துங்க… அந்த கதிருக்கு சொந்த ஊர் உங்க பக்கம் போலிருக்குங்க… அது மட்டுமில்லாமல் அவன் ஏற்கனவே ட்ரான்ஸ்பெர்க்கு எழுதி கொடுத்திருக்கான்” என்று அவர் வார்த்தைகளை ஜவ்வாக இழுத்தார்.
“முழுசா சொல்லித் தொலையும். போன்ல உன்னை என்னால என்னடா பண்ண முடியும், மெல்லாம முழுங்காம சுருக்கமா விஷயத்தை சொல்லு” என அமைச்சர் அவரிடம் காய்ந்தார்.
“அதாங்க அவன் ட்ரான்ஸ்பெர் கேட்டிருக்கான்… நீங்க இங்கிருந்து அவனை தூக்கணும் சொன்னதும் அதை இதை செஞ்சு ஏற்பாடு பண்ணேன், எனக்கு உயரதிகாரி அவன் கேட்ட இடத்துக்கு போட்டு கொடுத்திட்டாருங்க…
இப்போ நீங்க சொல்லி விசாரிச்ச அப்புறம் தாங்க எனக்கே அவன் அங்கு ட்ரான்ஸ்பெர் வாங்கியிருக்கான் தெரியுது” எனத் திக்கித் திணறி சொல்லி முடித்தார்.
“ச்சேய், போனை வைடா…” அலுத்துக்கொண்ட அமைச்சர் அவனுக்கு இங்கிருந்து வேற இடம் மாத்த முடியுமான்னு பாரு” என தனது கையாள் ஒருவனிடம் கூறினார்.
“எங்கோ போன மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தான்னு, சனியனை தூக்கி பனியனுக்குள்ள விட்ட கதையாகிப் போச்சே” என்று அமைச்சர் புலம்பினார்.
“நீங்க நினைச்சா இங்கிருந்து வேற இடம் சொடக்கு போடுறதுக்குள்ள அனுப்ப முடியாதுங்களா, எதுக்கு இவ்வளவு டென்ஷன்.” அமைச்சருக்கு வலது கையாக செயல்படுவன் கேட்க,
“இதுல நான் நேரடியா இறங்க முடியாதுடா…
களக்காட்டுலயாவது கொஞ்ச சரக்கு தான், ஆனால் இங்க எல்லா இடத்துல இருந்தும் கொண்டு வர நம்ம மொத்த சரக்கும் பதுக்குமிடம் இருக்குடா… மாட்டுனா அவ்ளோதான், இதுக்காக எவ்ளோ வேலை, எத்தனை கொலை பார்த்திருக்கோம்… அத்தனையும் வரவ(ன்) கையில தூக்கி கொடுக்க நான் என்ன கே*** பயலா!” ஒரு ஆட்டம் ஆடி விட்டார் அமைச்சர்.
“ஐயா, ஒரு முறை மாத்தலானவங்க மருக்கா ஒருமுறை மாத்தலாக குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகுமாங்க.” விசாரித்தவன் வந்து தகவலை சொல்லிவிட்டுச் சென்றுவிட அமைச்சர் யோசிக்கத் தொடங்கினார்.
“ஏன்டா, நாம மறைச்சி செய்யுறது கொஞ்ச நாளுக்கு தெரியுற மாறி செஞ்சா என்னா?”
“எனக்கொன்னும் விளங்கலயே ஐயா.”
“அந்த கதிர் பயல வேலையிலிருந்து தானே மாத்த முடியாது, ஒரே அடியா வேலையிலிருந்து தூக்கிட்டா…
நாம பண்ற வேலையை அவன் மேலதிகாரி கண்ணுக்கு போற மாதிரி பண்ணாலே, அவன் கட்டுப்பாட்டில் நிறைய தப்பு நடக்குதுன்னு அவனை கொஞ்ச நாளைக்கு வேலையிலிருந்து நீக்கிடுவாங்க… திரும்ப அவன் வேலைக்கு வரதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சிடலாம்.”
அமைச்சர் விளக்கிக் கூற அவரின் வலது கை ஒத்து ஊதினான்.
இவரின் கணக்கு இப்படி இருக்க… வெற்றியின் கணக்கோ வேறு மாதிரி இருந்தது.
___________________________
“ராம்.”
வெற்றி அழைத்த அழைப்பிற்கு உணவு உட்கொண்டிருந்த ராம் அப்படியே ஓடி வந்திருந்தான்.
“இங்கிருந்த குமரன் ஃபைல் எங்கே?”
தனது மேசையை சுட்டிக்காட்டி மிகுந்த கோபத்துடன் கேட்டிருந்தான். வெற்றியின் கர்ஜனையில் காவல் நிலையமே ஆட்டம் கண்டது.
“சார்… குமரனின் கொலை… இல்லை இல்லை சார் குமரனின்,”
“உங்களோட ஸ்போக்கன் தமிழ் விளையாட எனக்கு நேரமில்லை.” காட்டமாக மொழிந்த வெற்றியின் வார்த்தைகளில் எனக்கு நேரடி பதில் உடனடியாக வேண்டுமென்கிற பொருள் இடம் பெற்றிருந்தது.
வெற்றியின் கோப முகத்தை முதன் முதலில் கண்ட ராம் பயத்தில் ஆடிப்போய் நிற்க,
வெற்றி மூர்த்தியை “எனக்கான பதில் உங்ககிட்ட இருக்கா?” என்பதைப்போல் பார்த்தான்.
“சார் நேத்து நீங்க ஐஜி’யிடம் பேசிட்டு போனதும் நானும் வெளியே போயிட்டேன்” என அவர் சொல்ல,
“உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?” என முதல் முறையாக அவரிடமும் கோபம் கொண்டு கத்தினான்.
இம்முறை வெற்றியின் கத்தலில் சுயம் பெற்ற ராம், “குமரன் மரணம் விலங்கு அடித்ததால் உண்டானதுன்னு சொல்லி ஐஜி தான் சார் நேத்து அந்த வழக்கு அடங்கிய கோப்பில் கையெழுத்திட்டு… முடிந்த வழக்குகள் உள்ள அறையில் வைக்க சொன்னார்.”
ராம் சொல்லி முடிப்பதற்குள்,
“இன்னும் ரெண்டு நிமிடத்தில் அந்த கோப்பு என் மேசையில் இருக்கனும்” என்று மூர்த்தியை பார்த்துக் கூறியவன் ராமிடம் திரும்பி,
“குமரன் வேலை செய்த பத்திரிக்கையில் அவனது குழுவைச் சேர்ந்தவர்களிடம் நான் பேச வேண்டுமென சொல்லியிருந்தேனே, அங்கு விசாரிச்சீங்களா?” எனக் கேட்ட வெற்றியின் குரல் தனது உறுமளிலிருந்து சற்றும் இறங்கவில்லை.
ராமின் அமைதியே ‘அவன் சொல்லியதை செய்யவில்லை’ என்பதை வெற்றிக்கு உணர்த்த “உங்களுக்கு அரை மணி நேரம் தருகிறேன்” என்றவன் மூர்த்தி கொண்டு வந்து கொடுத்த குமரன் கோப்பினை எடுத்துக்கொண்டு ஐஜி அலுவலகம் புறப்பட்டான்.
_________________________________
அமரி கிணற்றடியில் இருந்த சிறு கல் மேடையில் உடலை குறுக்கி கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் மனம் வெகுவாக காயப்பட்டிருந்தது. என்ன தான் கலகலப்பாக பேசி சிரித்து விளையாட்டுத் தனமாக சுற்றிக் கொண்டிருந்தாலும்… உறவுகள் இருந்தும் தனிமையில் வாழ்ந்த வாழ்வு அவளின் மனதினை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது.
வீட்டிற்கு வந்த பிறகு அந்த காயம் குணமடைந்தது என்றால் இல்லை. உறவுகள் அருகிலிருப்பதால் மேலும் ரணமாகமல் இருந்தது. ஆனால் இன்று பஞ்சு பாட்டியின் வார்த்தைகள் அவளின் மனக் காயத்தை மெல்ல கீறிவிட்டது.
‘என்னால் தான் உங்க உயிருக்கு ஆபத்தா அப்பா?’ மனதோடு கேட்டவளின் கண்கள் அவளறியாது கண்ணீரை சுரந்தது. கன்னம் தாண்டிய பின்னரே தான் அழுகிறோம் என்பதை உணர்ந்தவள் கண்ணீரை அழுந்த துடைத்து அழுத சுவடின்றி முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.
ஆரம்பத்தில் தனிமையில் யாருமின்றி விடுதியில் இருந்த போது அழாமல் உறங்கியதில்லை. ஆனால் அழுவது எதற்கும் தீர்வாகாது என்பதை சிறு வயதிலேயே வெகு விரைவாக புரிந்து கொண்டவள் எதற்கும் எளிதில் அழ மாட்டாள். சொல்லப்போனால் அழுவதே அவளுக்கு பிடிக்காது. அனைத்தையும் ஏற்க பழகிக் கொண்டாள் துன்பம் என்ற ஒன்றில்லை.
எதை எதையோ யோசித்தவள் சிவப்பியின் அழைப்பில் அவள் புறமாக திரும்ப, அது அமரியின் முகத்தினை நாவால் துடைத்து ஆறுதல் அளிக்க முயற்சித்தது. அதற்கு தனது எஜமானி சோகமாக இருப்பது பிடிக்கவில்லை போலும்.
‘இந்த வாயில்லா ஜீவனிடத்தில் இருக்கும் அன்பு கூட என்மீது இவர்களுக்கு இல்லையா?’ என நினைத்தவள் முன் தனக்கு எப்போதும் துணை நிற்கும் கதிர், தன்னிடம் எப்போதும் வேண்டுமென்றே வம்பு செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்யும் அன்னை, பரிவுடன் தலை கோதும் தந்தை, அன்பை வெளிக்காட்டத் தெரியாவிட்டாலும் வீட்டிலிருக்கும் நேரம் தன்னை அருகில் நிறுத்திக்கொள்ளும் தாத்தா, திட்டிக்கொண்டே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அப்பத்தா என அனைவரின் முகமும் தோன்ற நொடியில் அமரி எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.
‘வயதானோர்… பழங்கால மனிதர், சிலவற்றில் அவர் கொண்ட நம்பிக்கையின் காரணமாக அவருக்கு உள்ள பயம் நியாயமானது தான்’ என்று சிந்தித்தவளுக்கும்…
“ஒருவேளை அப்பத்தா சொல்றதைப்போல இன்னைக்கு அப்பாவுக்கு ஏற்பட்ட ஆபத்து என்னோட ஜாதகத்தால் தானோ?” என எண்ணத் தொடங்கினாள்.
ஒன்றைத் திரும்பத் திரும்ப சொல்லும் போது உண்மையில் அது அப்டித்தானோ என்று மனம் நம்ப வைத்து விடும். இப்போது அமரி விடயத்திலும் அது தான் நடந்துள்ளது.
பஞ்சு பாட்டி சொல்லி சொல்லியே தன்னால் தான் தனது தந்தைக்கு ஆபத்து என்று அவள் மனம் நம்பத் தொடங்கி விட்டது.
ஒருநேரம் இப்படி யோசித்தவள், சில நேரம் ‘நீயும் என்ன அமரி இதையெல்லாம் நம்ப ஆரம்பித்து விட்டாய்… அப்பத்தா சொல்வதைப் போலெல்லாம் இருக்காது’ என தனக்குத்தானே சொல்லவும் செய்தாள்.
“இப்படி தனியா உட்கார்ந்திருந்தா கண்டதை யோசிக்க சொல்லும் செவப்பி, நான் எழுந்து போய் அன்னத்துகிட்ட வம்பு இழுக்குறேன்” என்று மாட்டிடம் பேசியவள் வீட்டிற்குள் செல்ல, வெகு நேரமாக அவளின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருப்பதாக அன்னம் சொல்லியதும் அலைபேசியை எடுத்து யாரென்று பார்த்தாள்.
அழைத்தது அமரியின் கல்லூரித் தோழி.
“அமரி நாந்தான் கலை பேசுறேன்.”
“தெரியுது சொல்லுடி, இப்போதான் எங்க ஞாபகம் வந்ததோ?”
“உனக்கு வந்து புடிச்சு பாரு.”
இருவரும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த தினம் பேசியது. அதன் பிறகு குறுஞ்செய்தியில் கூட பேசிக் கொள்ளவில்லை. அதனாலே இருவரும் மாற்றி மாற்றி கடிந்து கொண்டனர்.
“சரி என்ன விஷயமா போன் பண்ண? நீ காரணமில்லாம போன் பண்ண மாட்டியே” என அமரி கேட்க,
“உங்க ஊருக்கு பஸ் ஏறிட்டேன், எங்க இறங்கனும்?.”
ஏதோ குச்சி மிட்டாய் வாங்கிட்டேன் என்கிற ரீதியில் பேருந்து ஏறிய பின்பு தடம் கேட்டாள் அவள்.
இந்த இடத்தில் கலை செய்த தவறு, தான் பேருந்து ஏறி எவ்வளவு நேரமாகிறது என்பதையும்… இப்போது பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் இடத்தின் பெயரையும் சொல்ல மறந்தது.
அமரியாவது பேருந்து கிளம்பி எவ்வளவு நேரமாகிறது எனக் கேட்டிருக்க வேண்டும். அவளும் அதனை செய்யவில்லை.
“எங்க ஊருக்குள்ள பஸ் வராதுடி, மலைப் பாதையில் இறங்கிக்கோ… கதிர் அண்ணாவ அனுப்பி வைக்கிறேன்” (அமரி சொல்லியது பேருந்தில் ஒலித்த ஹாரன் ஒலியால் கலைக்கு சரியாக கேட்காமல் போனது.) என்ற அமரி இணைப்பத் துண்டித்து கதிரை வீடு முழுக்கத் தேடியவள் வாணியிடம் “அண்ணா எங்கே?” எனக் கேட்க,
சில நொடி பதில் சொல்லாது அமைதியாக இருந்தாலும், பின்னர் “ஜார்ஜ் எடுத்துக்க ஃபாரஸ்ட் ஆபீஸ் போயிருக்கார்” எனக் கூறினாள்.
மணியை பார்த்தவள் கலை தனக்கு போன் செய்த போது தான் பேருந்தில் எறியிருக்கிறாள் என நினைத்து ‘மலைப்பாதைக்கு அரை மணி நேரத்தில் வந்துடுவாள், நான் இங்கிருந்து இந்த உடைஞ்ச மலை பாதையில் போறதுக்குள்ள அவ வீட்டுக்கே வந்திடலாம்… என்ன பண்ணாலும் அவ வந்து காத்திருக்கணும், அண்ணா டவுனுக்குள்ள இருக்கிறதால அண்ணாக்கு போன் செய்து பார்ப்போம்’ என மனதில் கணக்கு போட்டவள்,
“அண்ணா மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருமா?” என்று மீண்டும் வாணியிடம் வினவ, அவளோ “ம்” என்ற ஒற்றை வர்த்தையோடு நகர்ந்து விட்டாள்.
அமரி ஐந்தாறு முறை முயற்சித்தும் “நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்” என்ற பதிவு செய்யப்பட்ட குரலே ஒலித்தது.
அன்னத்திடம் சொல்ல, “வீட்டிலேயே உட்காந்து என்கிட்ட வம்பு வளக்குறதுக்கு நீயே போயி அந்த புள்ளைய கூட்டியாந்திடலாம்” என்று பேச்சு வாக்கில் கூறிய அன்னம் தான் செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தினார்.
“பேசாம நாமே போவோம், இப்போ கிளம்பனாலும் அவ வறதுக்குள்ள போக முயற்சிக்கலாம்” என்று முடிவெடுத்தவள் இருசக்கர வாகனத்தை இயக்கினாள்.
தொடர்ச்சியாக அமைந்துள்ள மலையில் இவளது கிராமத்திற்கு செல்லும் பாதை தொடங்கும் இடத்தில் உள்ள பிரதான பேருந்து நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி கலை வருவதாக சொல்லிய பேருந்திற்காக காத்திருந்த அமரி பதினைந்து நிமிடங்கள் கடந்தும் பேருந்து வரவில்லை என்பதால் அருகிலுள்ள தேநீர் விடுதியில் சென்று விசாரிக்க,
அந்நேரம் சரியாக ஒரு பேருந்து வந்தது. தன் தோழியை நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கும் ஆர்வத்தில் ஓடிச்சென்று பேருந்தில் பார்க்க கலையை காணவில்லை.
“இதுல வரல, அப்போ எங்கே?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் கலையின் அலைபேசி எண்ணிற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
‘ஒருவேளை இதுக்கு முந்தைய பேருந்தில் வந்திருந்தால்’ என்ற சந்தேகம் எழ… அருகில் சிறு பந்தல் போன்று போடப்பட்டிருந்த தேநீர் கடையில் சென்று,
“முந்தைய பேருந்தில் யாராவது பொண்ணு இந்த நிறுத்தத்தில் இறங்கினாங்களா?” என்று வினவினாள்.
அது தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால், காலை மற்றும் மாலை அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மட்டுமே வந்து செல்வர்… இடைப்பட்ட நேரத்தில் அங்கு வந்து செல்லும் பேருந்துகளிலிருந்து பயணிகள் இறங்குவது ஏறுவது அரிது. ஆதலால், அப்படி இறங்குவர் யாரென்று தெரியாவிட்டாலும் ஆணா பெண்ணா என எளிதில் சொல்ல முடியும்.
“ஒரு இளம் வயது பொண்ணு மட்டும் இறங்குச்சு, இங்க என் கடையில வந்து தண்ணீ வாங்கி குடிச்சிட்டு போச்சு” என்றார் கடைக்காரர்.
உடனடியாக தனது அலைபேசியிலிருக்கும் கலையின் புகைப்படத்தை எடுத்துக்காட்டி அவர் சொல்வது கலையென உறுதிபடுத்தியவள் அடுத்து என்ன செய்வது என்று தடுமாறி நின்றாள்.
‘இதுவரை அவள் இங்கு வந்ததில்லையே, எங்கு போயிருப்பா?’ என சுற்றி பார்வையை சுழலவிட்டவள்…
“எந்த பக்கம் போனாங்கன்னு பார்த்தீங்களா?” என்று சிறு தயக்கத்துடனே மீண்டும் கடைக்காரரிடம் கேட்டாள்.
“அருவிக்கரையில இருக்க செல்லியூருக்கு வழி கேட்டுச்சு அந்த புள்ள, நாந்தான் மலைப்பாதை சுத்துன்னு காட்டுப்பாதையில போக சொன்னேன்” என்றுக் கூறியவர்,
“கொஞ்சம் நேரம் யாருக்கோ போன்ல கூப்பிட்டு பார்த்துச்சு, யாரும் எடுக்கல போல, அப்புறம்… தோ, அந்த வழிதேன் நடந்து போறேன்னு போயிருச்சு” என கலை சென்ற பாதையை சுட்டிக் காட்டினார்.
கலை எங்கு இறங்க வேண்டுமெனக் கேட்டு அமரிக்கு அழைத்த போதே பேருந்து அருகில் நெருங்கியிருந்தது. கலைக்கு இப்பகுதி புதியது என்பதால் அவளுக்கும் கால நேரம் எவ்வளவு ஆகுமென்று தெரியாது போனது.
அவள் செல்லியூர் என பயணச்சீட்டு வாங்கியிருந்ததால் நடத்துனரே கலையை சரியாக அங்கு இறக்கிவிட்டிருந்தார்.
“நான் பேருந்திலிருந்து இறங்கிட்டேன்” என சொல்லுவதற்கு அமரியை அழைக்க, சரியாக அச்சமயம் அமரி கதிருக்கு முயற்சித்துக் கொண்டிருந்ததால் கலைக்கு அமரியிடம் பேச வாய்ப்பு கிட்டவில்லை.
அமரி ஊருக்குள் பேருந்து வராது என சொல்லியதையும், தனது அண்ணனை வர சொல்லுகிறேன் என சொல்லியதையும் கலை கேட்காமல் விட்டதால்… அவளே நடந்து செல்ல தீர்மானித்து தேநீர் கடைக்காரரிடம் வழிக் கேட்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.
இங்கிருந்து எவ்வளவு தூரமென்று கலையும் கேட்கவில்லை கடைக்காரரும் சொல்லவில்லை, ஒருவேளை தூரத்தின் அளவை அவர் சொல்லியிருந்தால் நடப்பதற்கு பயந்து கலை அங்கேயே நின்றிருப்பாள். அவர் தொலைவாக இருக்குமென்று சொல்லாததால் நடக்கும் தூரந்தானென்று யூகித்துக்கொண்டாள்.
தகவல்களை தெரிந்துகொண்ட அமரி தனது வண்டி அருகில் வந்து நின்று இரண்டு நிமிடம் கண்மூடி மனதினை சமன் செய்து, “தெரியாத இடம், கலையை நீதான் காப்பாத்தனும் ஆத்தா” என வான் பார்த்து அம்மனிடம் வேண்டியவள் கலை சென்ற பாதையில் சென்றாள்.
_______________________
மிகுந்த கோபத்துடன் ஐஜி அலுவலகம் வந்தான் வெற்றி. அனுமதியின்றி ஐஜி அறைக்குள் நுழைந்தவன் நெஞ்சை நிமிர்த்தி அவர் முன்பு நின்றான்.
வெற்றியின் முகம் இறுகியிருந்தது. கண்கள் சிவந்து, பார்ப்பதற்கே அவனின் தோற்றம் கிளியை ஏற்படுத்தியது. ஒரு நொடி வெற்றியை எதிர்பாராமல் தனக்கு முன்பு ருத்ர மூர்த்தியாக கண்டதும் ஐஜி ஆடிப்போனார்.
தனது பயத்தை வெளிக்காட்டாது, “என்ன வெற்றி என் அனுமதியில்லாம என்னோட அறைக்குள் இப்படித்தான் வருவீங்களா?” எனக் கேட்டார்.
எவ்வளவு முயன்றும் குரலில் நடுக்கத்தை அவரால் மறைக்க முடியவில்லை.
“இது நான் பார்க்கும் வழக்கு, விசாரணை நடந்துட்டிருக்கு… என்னைக் கேட்காமல் வழக்கினை மூடுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது?” கர்ஜித்தவன் கோப்பினை மேசையில் விசிறி, சட்டமாக அவர் முன்பே நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்தான்.
ஐஜி அவனுக்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்க,
“என்ன சார் அமைதியா இருக்கீங்க, யாருக்காக நீங்க இப்படி பண்ணீங்கன்னு நான் சொல்லட்டுமா?” என அழுத்தமாக வினவினான்.
“நான் இதில் ஈடுபடுவது உங்களுக்கு பிடிக்கலன்னா, நீங்க இந்த வழக்கை வேறு ஒருவரிடம் மாற்றியிருக்கலாம். ஆனால் அதை செய்யாம வழக்கையே மூடுவது சரியில்லையே…” என்று புருவம் உயர்த்தியவன்,
“இந்த வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு… அதனால் நான் விடுவதாக இல்லை” எனக்கூறி அவர் முன்பே வழக்கு மூடப்பட்டதாக அவர் கையெழுத்திட்ட தாளினை கோப்பிலிருந்து எடுத்து கிழித்துப்போட்டான்.
“வெற்றி…”
உரக்க அழைத்தவரை பார்வையால் அடக்கினான்.
“என் வேலைக்கு முன்பு யார் குறுக்கே வந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவன் அவரை மேலும் கீழும் ஆராய்ந்து “என் வேலையில் இடையூறு ஏற்படுத்துவதாக உங்கள் மீதே வழக்கு பதிவேன்… இன்னும் ஒரு மாதத்தில் பணி ஓய்வு, இடையில் என்கிட்ட உங்களுக்கு எதுக்கு வம்பு… போகும்போது நல்ல பெயரோடு போகும் வழியைப் பாருங்க” எனக்கூறி கம்பீரமாக அங்கிருந்து வெளியேறினான்.
வெற்றி சென்ற பிறகு அவ்விடம் புயலடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது. வெற்றியின் நேர்மை, கம்பீரம் பார்த்து பலமுறை அதிசயித்து பார்த்தவர் இம்முறை வியந்து பார்த்தார். வெற்றியை போல் தான் தனது பணியில் நேர்மையாக இல்லையே என வெட்கினார்.
காவல் நிலையம் சென்ற வெற்றி… மூர்த்தியைத் தவிர யாரும் அங்கில்லாததை கண்டு என்னவென்று வினவ,
“சார் மலை காட்டுப்பகுதியில் ஒரு பெண் சடலம் கிடப்பதா வனத்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததுங்க… அதான் பெண் காவலர்கள் உட்பட எல்லோரும் அங்க போயிருக்காக” என்றார் மூர்த்தி.
“பெண் சடலமா?” என்ற வெற்றி “ராம் போயிருக்காரா?” என வினவினான்.
அப்போதுதான் அவனுக்கே நினைவு வந்தது ராமை பத்திரிக்கை அலுவலகம் அனுப்பி வைத்தது.
மூர்த்தியும் அதையே சொல்ல, “நான் சம்பவ இடத்துக்கு போகிறேன், யாருமில்லை… அதனால் நீங்க இங்கேயே இருங்க” என்ற வெற்றி மூர்த்தி சொல்லிய காட்டுப்பகுதியை நோக்கி பயணித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
37
+1
1
+1
இந்த அமரிக்கு என்ன அப்படி ஒரு அவசரம் கலைகிட்ட பொறுமையா பேசி இருக்கலாம்ல.
காட்டில் இறந்து இருக்கிற பெண் கலையா??
அடுத்த பதிவில் sis