காவ(த)லன் 9
“உன் வீடு வந்தாச்சுடா” என்றவாறு வெற்றி வண்டியை நிறுத்த,
“கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டிங்களோ?” எனக் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து கதிர் இறங்கினான்.
கதிரின் உடைமைகளை வண்டியிலிருந்து இறக்கிய வெற்றி, மீண்டும் வண்டியிலேறி அதனை இயக்கினான்.
“உள்ள வந்துட்டு போடா” என்ற கதிரை நேருக்கு நேர் பார்த்த வெற்றி,
“அதுக்கான நேரம் இன்னும் வரல” எனக்கூறி நான்கடி தூரம் சென்றிருப்பான்…
“அய்யோ அம்மா” என்கிற அலறலில் சட்டென்று வண்டியை நிறுத்தியிருந்தான். ஏனெனில் கத்தலுக்கான சொந்தக்காரி அவனவள்.
தங்கையின் குரலில் கதிரும், அமரிக்கு என்னவானதோ என வெற்றியும், ஒன்றாக குரல் வந்த பக்கம் பார்வையை செலுத்த வீட்டினுள் இருந்து அமரி கத்திக்கொண்டே ஓடிவர அவளை அன்னம் கையில் துடப்பத்துடன் துரத்திக்கொண்டு வந்தார்.
அக்காட்சியினை கண்டதும் ‘நம்ம ஆளு ஏதோ சேட்டை பண்ணிருக்கா(ள்)’ என நினைத்த வெற்றி நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
அவனின் எழிலை சைட் அடிக்கிறான் என்பதே சரியாக இருக்கும்.
வாசலில் நின்றிருந்த கதிரை கண்டதும், “வாண்ணா… இப்போதான் வரியா?” எனக்கேட்ட அமரி அவன் பதில் சொல்கிறானா என்பதைக்கூட கவனியாது அவனை சுற்றி ஓட,
அன்னமோ “ஏய் தள்ளுடா” என்றவராய் கதிரை தள்ளிவிட்டு அமரியின் கையினை பிடிக்க அவள் அகப்படாது உடலை வளைத்து திரும்ப அவளின் நீண்ட பின்னல் அன்னத்தின் கையில் சிக்கியது.
பார்த்திருந்த வெற்றிக்குத்தான் அன்னம் பிடித்த பிடியில் ‘தனது எழிலுக்கு தலை வலிக்குமே’ என சிறு பதட்டம் ஏற்பட்டது.
‘இதெல்லாம் ரொம்ப அதிகம்’ என அவனின் மனசாட்சி அவனை அடக்கியது.
தன்னைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த இருவரும் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இருவரையும் எப்படி தடுப்பது என்றும் தெரியாது அவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கினான் கதிர்.
அந்நிலையிலும் தங்கையின் மீது அடி விழாது பாதுகாக்க அவன் தவறவில்லை.
அந்நேரம் பஞ்சு பாட்டியும் “இன்னும் நாலடி சேத்து போடட்டி, சேட்டைக்கு ஒரு வரைமுறை வேணாம்” என்று குரல் கொடுத்தார்.
‘என்னடா இது யாருமே என்னை கண்டுக்கவேயில்லையே’ என மனதில் புலம்பிய கதிர்… தன் அன்னை அடித்து விடாதவாறு தங்கையை மறைத்து, “அடி வாங்குற அளவுக்கு அப்படி என்ன பண்ண?” என அமரியிடம் வினவினான்.
“அதை நான் சொல்லுறேன்” என்ற அன்னம் தன் மகள் மீது மேலும் நான்கு அடிகளை போட,
தன் மீது அடி விழாத போதும்…
“அய்யோ, அம்மா வலிக்குதே… அய்யய்யோ” என அலறினாள்.
அமரியின் செயலில் வெற்றியின் உதட்டில் தானாக புன்னகை வந்தமர்ந்தது.
கிளம்பிய வெற்றி செல்லாது நின்றதும் அவன் மீது ஒரு கண் வைத்த கதிருக்கு இப்போது வெற்றியின் புன்னகை ‘தான் நினைத்திருப்பது உண்மையாக இருக்குமோ’ என்கிற சந்தேகம் வலுப்பெற்றது.
வெற்றியின் மீது கவனமாக இருந்த கதிரின் நினைவுகளை மீட்டது அமரியின் கத்தல்.
“ஏய் ஆத்தா, அவள அடிக்கிறத மொத நிறுத்து… இப்போ என்ன நடந்துச்சுன்னு சுத்தி சுத்தி சின்ன புள்ள கணக்கா ஓடி ஓடி அவள அடிக்கிற?” எனக் கடுப்புடன் கேட்டான் கதிர்.
“இவ(ள்) பண்ணதுக்கு அந்த தொடைப்பைக் கட்டை பிஞ்சி போகுற அளவுக்கு அடிக்கணும்” என இடை புகுந்தார் பஞ்சவர்ணம்.
“தலையும் புரியல, வாலும் புரியல…” கதிர் சொல்ல அன்னம் நடந்தவற்றை விவரித்தார்.
பஞ்சாயத்து கூடிய தினம் அமரியை பெண் பார்க்க வருவதாக இருந்தோர் தங்கவேலு தாத்தாவின் வார்த்தைக்காக அடுத்த நாள் வர திட்டமிட அது முடியாது போகவே இன்றைய தினம் வந்தனர்.
அவர்களும் பெண் பார்க்கும் நிகழ்விற்காக வரவில்லை. இந்த பக்கம் ஏதோ மாத்து சோலியாக வந்திருந்த பையனின் பெற்றோர் பெண்ணை பார்த்துவிட்டு போகலாமே என்கிற எண்ணத்தில் அமரியின் வீட்டிற்கு வந்தனர்.
வந்திருந்தோர் வீட்டிலுள்ள ஆண்கள் ஊர் வேலையாக வெளியில் சென்றிருப்பதை அறிந்து பெண்ணை மற்றொரு நாள் பார்த்துக்கொள்வதாக சொல்ல, வந்தவர்களை வெளியோடு அனுப்புவது முறையாகாது என்ற எண்ணத்தில்…
“செத்த இளப்பாறிட்டு போலாம். உள்ள வாங்க” என வரவேற்றார் பஞ்சு.
வந்திருப்போர் மாப்பிள்ளையின் பெற்றோர் என்பதை அறிந்த அன்னம் அவசரமாக பின்கட்டுக்கு ஓடினார்.
கிணற்றடியில் மோட்டார் இயங்கிக் கொண்டிருக்க தண்ணீர் அங்கிருந்த தொட்டியில் கொட்டியது.
தனது நீண்ட கூந்தலை கொண்டையிட்டிருந்தவள், பாவாடையை தூக்கி இடை சொருகி, ஒரு கையில் தேங்காய் நாரும் மற்றொரு கையில் குவளையுமாய் காட்சியளித்தவள்… தொட்டியிலிருக்கும் நீரினை மோண்டு தனது செவப்பியை பார்த்து பார்த்து குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அமரி.
உடை நனைந்து, முழங்கை வரை சாணமேறி, நெற்றி கன்னம் என சாம்பல் படிந்து, வியர்வையில் குளித்தவளாக அவள் நின்றிருந்த கோலம் பார்ப்பதற்கே அன்னத்திற்கு என்னவோ போலிருந்தது.
மகளை நெருங்கியவர், “செத்த நேரத்துக்கு உள்ளுக்க இந்த கோலத்துல வந்துடாதடி, உன்னைய பொண்ணு பார்க்க இருக்க பையனோட பெத்தவங்க வந்திருக்காங்க” என்று அவசரமாக உரைத்த அன்னம் வந்திருப்போரை கவனிக்க உள் சென்றார்.
“பொண்ணா பார்க்க வந்திருக்கீங்க, இதோ வரேன்” என்றவளாய் தானிருக்கும் கோலத்தை சிறிதும் மாற்றாது அப்படியே வீட்டிற்குள் அவர்கள் அமர்ந்திருக்கும் கூடம் வரை வந்து… “அம்மா… கூப்பிடுறது காதுகள்ல விழலையா?, செவப்பிக்கு பருத்திக்கொட்டைய எங்க வச்சிருக்க?” என்றுக் கத்திக் கேட்டாள்.
கையிலிருக்கும் தேங்காய் நாரினைக் கூட கீழே போடாது அப்படியே வந்தவளை கண்டு பஞ்சவர்ணம் பாட்டி தலையில் அடித்துக் கொண்டார்.
“இவ(ள்)தான் நீங்க பார்க்க வந்திருக்கும் பெண்.” சிறு தயக்கத்துடன் பல்லெல்லாம் தெரிய பஞ்சு தெரிவிக்க… அவர்கள் “நல்லாயிருக்கியாம்மா?” என விசாரித்தனர்.
ஏறயிறங்க பார்த்தவள், “ம்” என்று ஒற்றையாய் சொல்லி மேற்கொண்டு அவர்களை கவனியாது…
“உன்னைதான் கேட்டுட்டு இருக்கேன் வெரசா எடுத்துட்டு வா” என்றவளாக மீண்டும் செவப்பியிடம் சென்று விட்டாள்.
வந்தவர்கள் பஞ்சு பாட்டியிடம் நேரடியாகவே “எங்களுக்கு ஒத்து வரும் தோணலைங்க, நீங்க உங்களுக்கு தோதுபடுற வேற இடம் பார்த்துக்கோங்க” எனக்கூறி சென்றனர்.
அவர்கள் அவ்வாறு சொல்லியது அன்னத்திற்கு தன் மகள் மீது கோபத்தை ஏற்படுத்தியது.
“நீ போயி சொல்லாமல் இருந்திருந்தாலே அவ இங்க வராம இருந்திருப்பா(ள்)” என்று பஞ்சு பாட்டி கூற அன்னம் தன் மகளிடம் சென்றார்.
“இனிமே தினமும் நான் உன்னை குளிக்க வைக்கிறேன் செவப்பி, அப்புறம் பாரு உலகழகி போட்டியில உனக்குதான் முதலிடம்” என அமரி அந்த வாயில்லா பிராணியிடம் பேசிக்கொண்டிருக்க அதுவும் “ம்மா” என அழைத்தும், கழுத்தில் தொங்கும் மணி சத்தம் எழுப்ப தலையை ஆட்டியும் அவளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தது.
“வந்தவங்க கிட்ட மானத்தை வாங்கிபுட்டு, இங்க அதுகூட அரட்டையா அடிச்சிட்டு இருக்க” என்றவாறு அன்னம் அமரியின் அருகில் வர, செவப்பியை சுத்தம் செய்ய அமரி உபயோகித்த சோப்பு துகள்கள் எல்லாம் கிணத்தடி தரை ஈரத்தில் சிதறி கடக்க, அதில் தெரியாது கால் வைத்த அன்னம் வழுக்கி விழுந்தார்.
“ஆத்தே…” என்ற சத்தத்தில் திரும்பிய அமரி, தனது அன்னை விழுந்து கிடந்ததை பார்த்து பதறி தூக்காது அடக்கமாட்டாது சிரித்தாள்.
அமரி சிரித்ததில் ஆத்திரமடைந்த அன்னம், அருகில் கிடந்த தொடப்பத்தினை கையிலெடுக்க வழக்கம் போல் செவப்பி காலினை தரையில் தேய்த்து முன்னுக்கு வர…
“உனக்கும் நாலடி போட்டா எல்லாம் சரியாப்போகும், நாளையிலிருந்து பருத்திக்கொட்டையே உனக்கு காட்டுறதில்லை” என்றவர் திரும்ப, அமரி அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்குள் ஓடினாள். ஓடும் போது பிடிக்க வந்த பஞ்சுவை வேண்டுமென்றே கீழேத் தள்ளிவிட்டு ஓடினாள்.
அன்னம் தனது மாமியாரை தூக்க வர, “என்னைய நான் பார்த்துக்கிறேன், அவள மொதல்ல பிடி… தப்பிச்சுடப் போறா(ள்)” என்ற பஞ்சுவின் வார்த்தையை மீறாது அன்னம் தனது மகளை துரத்திக்கொண்டு ஓட, அமரி முற்றம் தாண்டி வீட்டு வாசலுக்கு செல்ல அப்போதுதான் கதிர் வந்து இறங்கியிருந்தான்.
அன்னம் சொல்லியதைக் கேட்ட கதிர் சத்தமாக சிரித்தானென்றால் தன்னவளின் சேட்டையை ரசித்து உள்ளுக்குள் சிரித்தான் வெற்றி.
அகத்தின் அழகை முகம் பிரதிபலிப்பதைப் போல் வெற்றியின் அகச் சிரிப்பினை கதிருக்கு காட்டிக் கொடுத்தது அவனின் முகத்தின் பொலிவு.
‘மச்சான் உறுதி ஆகிடுச்சுடா’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட கதிர், “நீ ஏன் அம்மா வர வேண்டான்னு சொல்லியும் அப்படியே அங்க வந்த?” என்று அமரியிடம் வினவினான்.
“எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.” சாதாரணமாக சொல்லிய அமரி வீட்டிற்குள் செல்ல அடி வைக்க,
வெற்றியை பார்த்துக்கொண்டே அமரியிடம், “ஏன் இந்த மாப்பிள்ளையை பிடிக்கலையா?” என்றான்.
வெற்றிக்கும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிய வேண்டுமென கதிர் நினைத்தான்.
“எனக்கு கல்யாணத்திலேயே விருப்பம் இல்லைங்க.”
“எவடி அவ கூறு கெட்டவ, இப்போ கட்டிக்காமா வேறெப்போ கட்டிக்க?”
அமரியின் பதிலுக்கு பஞ்சு பாட்டி நொடித்துக் காண்பித்தார்.
“ஏன்?” பஞ்சுவின் வார்த்தைகளை கருத்தில் கொள்ளாது கதிர் வினவ,
“ஏதோ ஜோசியம் அது இதுன்னு நான் ஒரு நாள் கூட நம்ம வீட்டுல இருந்தது இல்லைங்களே, இப்போதான் இங்க உங்க கூட ஒண்ணா இருக்கேன்… அதுக்குள்ள கல்யாணம் கட்டி தொரத்தி விட பாக்குறீங்களே” என மனம் கலங்கி பேசியவள் அனைவரின் முகமும் வாடுவதை கண்டு,
“இன்னும் கொஞ்ச நாளுக்காவாது உங்க எல்லாரோடவும் ஒண்ணா இருந்து உங்களைலாம் தொல்லை பண்ணணுமே” என்று சிரிப்புடன் கூறியவளாய் வீட்டிற்குள் ஓடிச்சென்றாள்.
அமரி விளையாட்டாய் பேசினாலும் முதலில் அவள் மனம் கலங்கி பேசியதிலேயே வருத்தமடைந்து நின்றவர்களை வெற்றி சென்ற வண்டியின் சத்தம் நடப்புக்கு மீட்டது.
செல்லும் வெற்றியையே பார்த்திருந்த கதிர் ‘போடா போ, இன்னும் எத்தனை நாளுக்கு மறைக்கிறன்னு பாக்குறேன்’ என்றவனாய் உள் சென்றான்.
வெற்றியின் மனம் இறுகியிருந்தது. அனைவரும் இருந்தும் தனித்து இருப்பது எவ்வளவு வலி நிறைந்ததென அவனுக்கும் தெரியுமே, தான் சில காலமாக அனுபவிக்கும் தனிமையை தன்னவள் பல காலமாக அனுபவித்திருக்கிறாள் என்பதில் அவனது எழிலுக்காக வருத்தம் கொண்டான்.
அந்நொடி தன்னுடைய எழிலை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு காதலனாக தீர்மானித்தான்.
_______________________
இப்போது இருக்கும் சூழலில் அருவிக்கு மேலேறிச் சென்று நீரினை எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்த நல்லு தீர்த்த அருவி தேங்கி விழும் குளத்திலேயேநீரினை மோண்டு செல்ல தீர்மானித்து விநாயகத்திடம் தெரிவிக்க, மறுப்புத் தெரிவித்த விநாயகம் நல்லு சொல்வதையும் கேளாது தீர்த்த அருவியின் உச்சிக்கு சென்றார்.
‘தன்னால் சொல்ல மட்டும் தான் முடியும்’ என்று நினைத்த நல்லு அம்மனை மனதில் நினைத்து கிழக்கு பார்த்து வணங்கி குளத்தில் குனிந்து நீரினை செம்பில் நிரப்பி நிமிர்கையில் “நல்லு காப்பாத்துப்பா” என்ற விநாயகத்தின் குரல் அவ்விடமெங்கும் எதிரொலித்தது.
செய்வதை முறையாக செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில் தீர்த்த அருவி கொட்டும் உச்சிக்கு விநாயகம் சென்றார். தண்ணீர் சொட்டுமிடத்தில் செம்பினை பிடித்து நின்றவர், செம்பு நீர் நிறைந்து வழியவும் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்கையில் நிலை தடுமாறி பாறையிலிருந்த பாசி வழுக்கி கீழே விழ, பயத்தில் அருகிலிருந்த நீண்ட பாறையின் நுனியினை கெட்டியாகப் பிடித்து உச்சியில் தொங்கினார்.
அவரின் நிலையைக் கண்டு பதறிய நல்லு என்ன செய்வதென்று தடுமாறி நின்றது ஒரு நொடி தான்.
மேலருவியிலிருந்து தீர்த்த அருவி தொடங்கும் சமதளப் பரப்பிற்கு சென்றால் தான் விநாயகத்தினை காப்பாற்ற முடியும். ஆனால் நல்லு அங்கு செல்லும் வரை விநாயகத்தின் பிடி தளராமல் இருக்காது, ஒருவேளை அவர் கையினை விட்டு விட்டால் விநாயகத்தின் தலை கீழே இருக்கும் பாறையில் சிதறுவது உறுதி.
நினைக்கையிலேயே நல்லுவின் உடல் ஆட்டம் கண்டது.
‘பயந்து குழம்பி நிற்பதற்கான தருணம் இதுவல்ல’ என்று உணர்ந்தவர் வேட்டியை மடித்துக் கட்டி, விநாயகம் தொங்கிக் கொண்டிருந்த பாறைக்கு நேரெதிரே ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பருத்த மரத்தின் மீது சரசரவென்று ஏறி இருந்தார்.
அம்மனை மனதில் நிறுத்தியவர், “ஆத்தா காப்பாத்தும்மா” என முணுமுணுத்தவராக, நீண்டு அருவியை உரசிக் கொண்டிருந்த கிளையின் மீது நடக்கத் தொடங்கினார். கிளையின் நுனி பகுதியை நெருங்க நெருங்க தண்டின் தடிமன் மெலிந்து கொண்டே போக, நல்லுவால் பாதத்தினை கிளையில் சரியாக ஊன்றி வைக்க முடியவில்லை.
ஒருகட்டத்தில் கால் இடறி கிளையிலிருந்து விழுந்தவர்,
“தாமும் விழுந்து விட்டோமா” என்ற அதிர்வில் இறுக மூடிய கண்களைத் திறக்க அருவி தொடங்கும் இடத்தில் எவ்வித ஆபத்துமின்றி நின்றிருந்தார். உடனடியாக அம்மனுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்தவர், விநாயகத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.
கற்பரப்பில் தவழும் நீரில் படுத்தவர் தன் உடலை நெளித்து கையினை விநாயகத்திடம் நீட்ட அந்தோ பரிதாபம் இருவரின் கையும் இணையவில்லை. என்ன செய்வதென்று யோசித்த நல்லு, விநாயகத்தின் பயம் சுமந்த விழிகளை கண்டு தானிருப்பதாக தனது கண்களை மூடி ஆறுதல் அளித்தவர் தன்னுடைய தலையில் பூசாரி கட்டிவிட்ட பரிவட்டத் துண்டினை அவிழ்த்து விநாயகத்தினை நோக்கி வீசினார்.
நல்லு கண் மூடி நானிருக்கின்றேன் என சொல்லாமல் செய்கையால் அளித்த ஆறுதல் விநாயகத்திற்கு மலையளவு திடத்தினை அளித்தது.
துன்பம் அருகிலிருக்கும் போது மனதிற்கு நாம் அளிக்கும் திடமே நம்மை அந்த துன்பத்திலிருந்து பாதி காப்பாற்றி விடும். அந்நொடி அத்தகைய உணர்வை பெற்றார் விநாயகம்.
நல்லுவின் முயற்சியோடு தாமும் துணிய வேண்டுமென்ற எண்ணம் தோன்ற, பாறையின் பிடியிலிருந்து மெல்ல ஒரு கையினை உயர்த்தி நல்லு எரிந்த துண்டின் முனையை பிடித்து கையினில் வளைத்து சுற்றிக் கொண்டார்.
நல்லுவிற்கு விநாயகத்தினை மேலே இழுப்பது சற்று சிரமமாகவே இருந்தது. இருப்பினும் முயற்சித்து வேகமாக இழுக்க துண்டு பாறையில் உராய்ந்து அறந்து, பாறையின் பிடியுமின்றி விநாயகம் விழ இருந்த தருணம் நல்லு அவரின் கரம் பற்றியிருந்தார்.
_____________________________
ஆசிரியரிடம் மறைமுகத் திட்டினை வாங்கிய வாணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீடு வந்து சேர்ந்தாள்.
“இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாவது தகவல்கள் சேகரிக்க முயற்சி செய்யுங்கள்” என்ற ஆசிரியரின் வார்த்தைகள் வாணியின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
வீட்டினுள் நுழைந்த வாணி கண்டது,
அலைபேசியில் குத்து பாட்டினை ஒலிரச் செய்து, அதற்கேற்றவாறு ஆடிக்கொண்டே தரையை மாப்பினால்(mob) சுத்தம் செய்து கொண்டிருந்த அமரியைத் தான்.
‘உன்னால் தான் நான் திட்டு வாங்கினேன்’ என்று பற்களை கடித்த வாணி பாடல் ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்து அணைத்தாள்.
“என்ன அண்ணி பாட்டு பிடிக்கலையா, இந்த பாட்டு வேண்டான்னா வேற பாட்டு போடுங்க… ஆடிக்கிட்டோ இல்லை பாடிக்கிட்டோ வேலை செஞ்சாதாங்க களைப்பு தெரியாது” என்று நீளமாக பேசிய அமரி, “நாள் எப்படி போச்சு அண்ணி” என எதார்த்தமாக வினவினாள்.
“உன் புண்ணியத்துல சிறப்பா போச்சு” என்ற வாணி அமரியை முறைத்து பார்த்தாள்.
“நீங்க பார்க்குறதுக்கும் சொல்லுறதுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி தெரியுதுங்களே அண்ணி.”
அமரி அவ்வாறு சொல்லியது தான் அடுத்து வாணி பொறிந்து விட்டாள்.
“இதுவரை வாணியென்றால் எங்கள ஆசிரியரிடம் நல்ல மதிப்பு இருந்து, அது இன்னைக்கு மொத்தமா போச்சு… எல்லாம் உன்னால தான், நீ மட்டும் அன்னைக்கு ராத்திரி வந்து என்னை தடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு நான் திட்டு வாங்கியிருக்க மாட்டேன்… நான் திட்டு வாங்குனதுக்கு காரணம் நீதான், நீ மட்டுந்தான்.” உரைத்தவள் வேகமாக தனது அறைக்குள் சென்று கதவினை அடித்து சாற்றினாள்.
வாணி சொல்லிய “நீ மட்டுந்தான்” என்ற வார்த்தையில் அமரி விக்கித்து நிற்க, அவள் கதவினை அடித்து சாற்றியது தன்னையே அறைந்ததை போல் உணர்ந்தாள் அமரி.
”அப்படி காட்டுக்குள்ள என்னதான் நடக்குது, இவங்க எதுக்கு இந்த கத்து கத்திட்டுப் போராங்க… சரி நாம போய் என்னதான் நடக்குதுன்னு பார்த்துட்டு வந்து சொல்லிடுவோம்.”
‘அன்று தன்னால் தான் வாணி காட்டுக்கு செல்ல முடியாமல் போனது, அதற்காகத்தான் தன்மீது கோபமாக இருக்கின்றாள்’ என நினைத்த அமரி தானே காட்டிற்கு செல்லும் விபரீத முடிவை எடுத்தாள்.
‘அடுத்து என்ன செய்வது, எப்படி காவல்துறைக்கு முன்பு குமரனின் மரணத்திற்கான காரணத்தை கண்டு பிடிப்பது.’ வாணி சிந்திக்க சிந்திக்க தலை வெடித்து விடும் போலிருந்தது.
எப்படிப்பட்ட பெரிய ரவுடியாக இருந்தாலும், அவனை காவல்துறை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கையில் பத்திரிக்கைக்காரர்கள் மட்டும் அந்த குற்றவாளியை நேரடியாக சென்று பேட்டியே எடுத்து வருவர். அதெப்படித்தான் காவல்துறையினரால் அவர்கள் இருக்கும் இடத்தை கூட கண்டு பிடிக்க முடியாத போது ஊடகவியலாளர்கள் மட்டும் நேரடியாக சென்று சந்திக்கின்றனரோ. இன்றுவரை காவல்துறையினருக்கே புரியாத புதிர் தான் அது.
அதே மன நிலை தான் வாணிக்கும். அந்நொடி, தனது சகோதரன் காவல்துறையில் உயர் பதிவி வகிக்கும் காவலன் என்பதையும், சந்தேகத்தின் தொடக்கமாக இருக்கும் காட்டிற்கு பாதுகாவலன் தனது கணவன் என்பதையும்… அவர்கள் இருவரும் நினைத்தால் ஒரு நொடியில் தனது பிரச்சினை ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதையும் முற்றிலும் மறந்தாள் வாணி.
பாதுகாப்பை விட… இங்கு அவள் வகிக்கும் துறை(பணி) வென்று விட்டது.
துணிச்சல் இருக்க வேண்டுமே தவிர அசாத்திய துணிச்சல் ஆபத்தாகக் கூட சில இடங்களில் அமைந்துவிட வாய்ப்புள்ளது.
தனது துறையில் தனித்து ஜெயிக்க வேண்டுமென்கிற அவளின் எண்ணம் பிறரிடம் உதவி கேட்கும் மனப்பான்மையை தடை செய்திருந்தது. அவள் நினைத்திருந்தால் அன்றே அமரியையும் உடன் அழைத்துக்கொண்டு காட்டிற்குள் சென்றிருக்கலாம். இப்போது அமரியால் தான் தன் பணி கெட்டதென்று வீண் கோபம் இல்லாமல் போயிருக்கும்.
“பகலில் எவ்வளவு முயற்சித்தாலும் காட்டிற்குள் செல்ல முடியாது. யாராவது பார்த்துவிட்டால் வீட்டில் சொல்ல வாய்ப்பிருக்கு. இதுக்குமேல் சசியையும் அழைக்க முடியாது, ஏன்? எதற்கு? கேள்வி கேட்டே வீட்டில் போட்டு கொடுத்திடுவான். இரவில் எப்படி வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாம போவது.”
யோசிக்கிறேன் என்ற பெயரில் பெருவிரலின் நகத்தினை பற்களினால் கடித்து ஒரு வழி செய்து கொண்டிருந்தாள் வாணி.
அந்நேரம் தனது அறை குளியலறையிலிருந்து கதிர் வரவும் அதிர்ச்சியுடன் கூடிய அதிர்வு அவளிடத்தில்,
இவ்வளவு நாள் அவனுடன் எப்போது ஒன்றாக இருப்போம் என்கிற எண்ணம் மாறி, ‘இப்போ எதுக்கு இங்க வந்தான் இவன்’ என நினைத்தது வாணியின் மனம்.
‘எவ்வளவு நாளுக்கு இங்க தங்கப்போறான் தெரியலையே, ராத்திரி இவன் கூட இருக்கும்போது எப்புடி வெளிய போறது?’ உள்ளுக்குள் கவலை கொண்டாள்.
“என்னடி பொண்டாட்டி, அப்படியே நிக்குற… மாமன பார்த்ததும் துள்ளி குதிச்சு சந்தோசப்படுவேன்னு பார்த்தாக்கா இப்புடி பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்க?” எனக் கேட்டுக்கொண்டே கதிர் வாணியை நெருங்கி இருந்தான்.
“நீ… எ… ப்… எப்போ வந்த?” தன் கணவன் தன்னை அணைத்திருக்கின்றான் என்பதையே அவள் உணரவில்லை.
“நான் வந்தது மேடத்திற்கு பிடிக்கல போலிருக்கே”, அணைப்பிலிருந்து விலகியவன் ஆராயும் பார்வையுடன் புருவம் உயர்த்தினான்.
“அப்படியெல்லாம் இல்லை” எனக்கூறி சமாளித்தவள், “எத்தனை நாள் விடுமுறை” என்றாள்.
“மொத்தமா இனி இங்க தான், ட்ரான்ஸ்பெர் கிடைச்சிருச்சு” என கதிர் சொன்னதும் வாணியின் முகம் காற்றிறங்கிய பலூனாக சுருங்கி விட்டது.
‘போச்சு எல்லாம் போச்சு, என்னடி இது உனக்கு வந்த சோதனை’ மனதில் நினைத்தவள் வெளியில் உதட்டினை இழுத்து வைத்து சிரித்தாள்.
‘பேசாமல் இவங்க கிட்டவே உதவி கேட்போமா?’ என ஒரு நொடி யோசித்தவள்… “வேண்டாம், வேலைக்கு போனோமா ஏதாவது கட்டுரை எழுதினோமான்னு இரு, தேவையில்லாத ஆபத்தான வேலையெல்லாம் ஏன் செய்யுறன்னு சொற்பொழிவாற்றிடுவான்” என்று முணுமுணுத்தவள் கதிர் தன்னையே பார்ப்பதை கண்டு அவனை திசை திருப்ப முடியாது அசடு வழிந்தாள்.
“ஏதாவது திருட்டு வேலை பாக்குறியோ?” கதிர் அவ்வாறு கேட்டதும் எங்கு அவன் தன்னை கண்டு கொள்வானோ என்று பயந்தவள் கதிரை யோசிக்க விடாது செய்ய அவனின் முகமெங்கும் முத்தமிடத் தொடங்கினாள். அவளின் தொடக்கச் செயல் கதிரின் கணவன் செயலாக மாற்றம் பெற்றது.
______________________________
தனது உயிரை பணயம் வைத்து தன்னை காப்பாற்றிய நல்லுவிற்கு எப்படி நன்றி சொல்வதென்று விநாயகம் தயங்கி நிற்க,
“திருவிழாவ ஒட்டுக்கா செய்ய முடிவு செஞ்சவங்க… சம்பரதாயத்தையும் இணைஞ்சே செய்திருக்கணும் போல, ஆளுக்கொரு சொம்ப தூக்கிட்டு வந்திருக்கக் கூடாது, வழக்கம்போல ஒரு சொம்பு தண்ணீ, அதுவும் ஊர் ஒத்துமைக்காக ரெண்டு பிரிவினரும் இணைஞ்சு எடுத்துட்டு வரணுமுன்னு ஆத்தா தீர்மானிச்சிட்டாப் போல” என்று பேசிக்கொண்டே தான் மட்டும் சேகரித்த நீரினை கொட்டிய நல்லு,
“உங்க சொம்பு நடந்த நிகழ்வுல எங்க போச்சு தெரியல, வாங்க ஒட்டுக்கா சேர்ந்து இந்த சொம்புல நீர் மோண்டுவோம்” என்க, விநாயகம் ஆச்சரியமாக அவரை பார்த்தார்.
அவரின் ஆச்சரியத்திற்கான காரணம், இரு பிரிவினருக்குமிடையே சண்டையென்று வந்து விட்டால் நல்லு ஆடும் ஆட்டம் கிலியை கிளப்பிவிடும்.
அப்படிப்பட்டவரிடையே இவ்வளவு வெள்ளந்தியான மனமா என்பதே,
“உங்க பார்வைக்கான அர்த்தம் புரியுது, போட்டின்னா நாமதான் ஜெயிக்கணுமுங்கிற எண்ணந்தான் எல்லாருக்கும் இருக்கும், அது பகைக்கும் பொருந்தும்… இன்னொருத்தர்கிட்ட நம்மள நாமலே விட்டுக்கொடுத்திட முடியாதே! அதேன், அதுக்காக மனசாட்சி இல்லாதவன் இல்லை இந்த நல்லு…” எனகூறியவர் ஒரு பெரு மூச்சினை செறிந்தவராக…
“இதே உங்க இடத்துல, உன் ஆளுவ வேற எவனாவது… ஏன் போன சண்டைக்கு என்னைய ஒரு பய அடிக்க வந்தானே அவனே இருந்திருந்தாலும் நான் காப்பாத்திருப்பேன்” என்றார்.
“பகை என்பது மனம் விட்டு பேசினால் சரியாகி விடும். ஆனால், இங்கு யாரும் உட்கார்ந்து பேச தயாரா இருப்பதில்லை. இங்க பூமிக்கு வந்தா, ஒரு நாள் எல்லோரும் இங்க இருந்து போயிதான் ஆகணும்… நடுவுல என்னத்துக்கு யாரு பெரியவங்கிற போட்டி,
“சரி வாரும்… மணியாவுது, எல்லாரும் காத்துக்கிட்டு கிடப்பாங்க” என்ற நல்லு தான் விட்டுச்சென்ற சொம்பினை கீழே குனிந்து கையிலெடுக்க… அவரின் கையினை பிடித்து, “ரொம்ப நன்றி. நான் இப்போ உங்க முன்னுக்க நிக்க காரணமே நீவீர் தான்” என தழுதழுத்தார்.
சிறு புன்னகையில் விநாயகத்தின் நன்றியினை ஏற்றவர், அவரின் கையையும் சேர்த்து பிடித்து செம்பில் நீரினை மோண்டார்.
செல்வதை போலல்லாமல் வருவது மிகவும் எளிமையாக இருந்தது. அவர்கள் அருவிக்கரையை நெருங்கியிருந்தனர்.
“போயி ரொம்ப நேரம் ஆகுதுங்களே!”
“இருட்டத் தொடங்குனா ஆத்தா மலை ஏறிடுவாங்க.”
கூட்டத்தில் பேச்சு சத்தம் ஓயவில்லை.
இங்கு மகன்களை அனுப்பிவிட்டு, வெங்கடாசலம் மற்றும் தங்கவேலுவால் நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. சிறு தவறென்றாலும் திருவிழா நடைபெறாது, அதனால் உண்டாகும் பழியை யார் சுமப்பது என்கிற பயம். கோவில் மண்டபத்தினை குறுக்கும் நெடுக்குமாக இருவரும் அளந்து கொண்டிருந்தனர்.
“இதோ வந்துட்டாங்களே…” என்று ஒருவரின் சத்தம் கேட்டு வெங்கடாசலம் மற்றும் தங்கவேலு இருவரும் தங்கள் மகன்களை பார்த்த பிறகே ஆசுவாசம் அடைந்தனர்.
மனம் நிம்மதியாக இருந்தாலே தெளிவு பிறக்கும். அதேபோல் அவர்கள் மனம் சமன்பட்ட பிறகே அவர்களின் கண்ணில் அந்த காட்சி பட்டது.
நல்லு மற்றும் விநாயகம் இருவரின் நான்கு கைகளும் ஒரு சொம்பினை கோர்த்து பிடித்திருந்தது.
கூடியிருந்தோரின் சலசலப்பிற்கு அக்காட்சி காரணமானது.
_______________________
வண்டியில் சென்று கொண்டிருந்த வெற்றியின் சிந்தனை முழுக்க அவனின் எழிலே நிரம்பியிருந்தாள். அவளின் வருத்தம் தோய்ந்த முகம் கண் முன் தோன்றி இம்சை செய்தது. அவளை உரிமையாய் ஆறுதல் படுத்த முடியா தன்னிலையை நினைத்து நொந்தான். அந்நேரம் முதல் முறையாக அவளைக் கண்ட இடத்திற்கு செல்ல வெற்றியின் மனம் உந்த அவனும் அருவிக்கரைக்கு வந்திருந்தான்.
சுனை அருவி நீர் வழிந்தோடும் பகுதியில் பாறையின் மீது அமர்ந்து கால்களை தண்ணீரில் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த எழிலின் பிம்பம் எங்கும் தோன்றியது. அது தான் வெற்றி எழிலை முதன்முதலாகக் கண்ட காட்சி. அவளின் முகம் முழுக்க புன்னகை ஒளிர்ந்திருந்தது. எப்போதும் அவன் மனதில் தோன்றும் காட்சி, இன்று அமரியின் வருத்தத்தை நேரில் பார்த்த பிறகு அத்தகைய சிரிப்பு நிறைந்த முகம் மறைந்து போயிருக்க இங்கு வந்த பிறகு மீண்டும் அவனின் நினைவுகளில் துளிர்த்தெழுந்தது.
சிறிது நேரம் அந்த பாறையில் அமர்ந்திருந்தவன் பேச்சு சத்தம் கேட்டு அத்திசையினை நோக்க, அருகிலிருக்கும் கோவிலில் கூடியிருந்தோரை பார்த்த பிறகே அதற்கான காரணம் நினைவுக்கு வந்தது.
கோவிலுக்குள் செல்லலாமென நினைத்து அடி வைக்கையில் தான், வெற்றியுமே அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை கண்டான்.
‘வெற்றி நீ நினைச்சது சீக்கிரமே முடிஞ்சிடும் போலிருக்கே’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டே கோவிலுக்குள் சென்றான்.
வெங்கடாசலம் மற்றும் தங்கவேலு இருவரும் ஒரே நேரத்தில் நாட்டாமை செல்லச்சாமியை பார்க்க, அவரோ கோவிலுக்குள் ஒரு சொம்பு நீருடன் உள் நுழைந்த விநாயகம் மற்றும் நல்லுவிடம்,
“ரெண்டு சொம்பு கோவிலுக்குள் வரனும்ங்கிறது தானே கணக்கு” எனக் கேட்க கூடியிருந்தோரும் “அதெப்படி ரெண்டு முறை செய்யுற இடத்துல ஒரு சொம்பு மட்டும் வரது நியாயமாகும்” என ஆளாளுக்கு நாட்டாமையாக பேச வெற்றியின் குரல் அனைவரையும் அமைதி படுத்தியது.
“திருவிழாவை ஒண்ணா இணைஞ்சு செய்யும் போது எனக்கு செய்யுற சடங்குகளை மட்டும் ஏன் பிரிச்சு ரெண்டு ரெண்டா செய்யுறீங்கன்னு ஆத்தா அசரீரியா அவங்ககிட்ட சொன்னாளோ என்னவோ?” என்ற வெற்றி நாட்டாமையின் அருகில் சென்று அமர்ந்தான்.
என்ன சொல்வதென்று தடுமாறிய நல்லுவும், விநாயகமும் வெற்றி சொல்லியதை பிடித்துக்கொண்டு ஆமாம் போட்டனர்.
“உனக்கு இருக்குற குசும்பு யாருக்கும் இருக்காதுடா மாப்பிள்ளை.” வெற்றிக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறிய செல்லச்சாமி “அப்புறம் என்னங்கடா, யார் வந்து சொன்னாக்கா என்ன வெற்றி சொல்லுறது நியாயமாத்தானே இருக்கு… இணைஞ்சு செய்யுறத ஏன் ரெண்டா செய்யணும்?” எனக் கூட்டத்தை பார்த்துக் கேட்டார்.
“நாம ஒரு தடவை ஆத்தா பேரை எடுத்ததுக்கு, இவன் அதை சொல்லியே எல்லாத்தையும் சாதிச்சிப்புடுறா(ன்)… மறுக்க பேச கூட முடிய மாட்டேங்குது” என புலம்பிய தங்கவேலு பிரிவினர் அமைதியாக,
“வெற்றியே சொல்லுறப்போ நமக்கு என்ன?” என வெங்கடாசலம் பிரிவினர் ஒருமுறை சடங்கிற்கு ஒப்புக் கொண்டனர்.
அதன் பிறகு கூடியிருந்தோர் அமைதியாகிவிட, கொண்டு வந்திருந்த நீரினை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பூசாரி… பூ போட்டு கேட்கவும் ஒரு பூ வந்து சம்மதம் அளித்தது. அடுத்து கவுளி சத்தம் கேட்க உடுக்கை அடித்து சம்மதம் பெற்றனர். மூன்று முறை அம்மன் சம்மதம் அளித்தாலே திருவிழா நடத்துவர். ஒருமுறை இருமுறை ஒப்புதல் செல்லாது. அதையும் மீறி செய்தால் ஏதேனும் உயிர் பலி, ஊருக்கு கெடுதல் அல்லது திருவிழா பாதியில் நின்று போகும். அதனால் மூன்றாவது முறை சிரத்தையுடன் அம்மனை வணங்கிய பூசாரி கேட்டுடலாமா என அனைவரையும் பார்க்க…
எல்லோரும் இணைந்து அம்மனை வணங்கி ஆயத்தமாகினர்.
ஆபிஷேகத்தின் போது அம்மனின் பாதத்தில் வழிந்த நீரினை பஞ்ச பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தார் பூசாரி. அந்நீரில் சூடம் ஏற்ற தீப ஜோதியாக நன்கு எரிந்து அனைவரின் மனமும் குளிர்ந்தது. அம்மன் மும்முறையும் சம்மதம் வழங்கிய மகிழ்வில் திருவிழாவிற்கு தேதி குறித்தனர்.
இந்த மாதம் முடிந்து அடுத்து வரும் பௌர்ணமியில் திருவிழா என அனைவராலும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. சரியாக இன்று தொடங்கி நாற்பத்தி எட்டாம் நாள் திருவிழா.
கூட்டம் மெல்ல கலைந்தது.
வந்தது முதல் விநாயகத்தின் பார்வை நன்றி உணர்வை வெளிப்படுத்தியவாறு நல்லுவை பார்த்திருக்க, நல்லு கனிவுடன் விநாயத்திற்கு ஆறுதல் அளிப்பதை கவனித்த வெற்றி ‘ஏதோ நடந்திருக்கு, நடந்தது நன்மையா இருந்தால் சந்தோஷம்’ என நினைத்தவனுக்கு அவ்விருவரும் பெரும் அதிர்ச்சியை அளித்தனர்.
செல்லும்போது விநாயகம் விடைபெறும் விதமாக தலையசைக்க அதனை ஆமோதித்து நல்லுவும் தலையசைத்தார்.
‘என்னடா நடக்குது இங்க,’ என வெற்றி மனதோடு பேசிக் கொண்டிருக்கையில்…
“நீ நினைக்கிறது வெகு சுருக்கனே நடந்திரும் போலிருக்கே வெற்றி” என செல்லச்சாமியும் நீ கவனித்ததை நானும் கவனித்தேன் எனும் விதமாக செல்லும் நல்லு மற்றும் விநாயகத்தை கண் காட்டினார்.
“நடந்தா ஊரு அமைதியா இருக்குமே மாமா.”
“அதென்னவோ நிசந்தான் வெற்றி, ஆனால் பொறந்தவளுக்காகத்தானே இவ்வளவு செய்யுற… நீ ஆசைப்படுற மாதிரியே ரெண்டு குடும்பமும் இணைஞ்சிடுய்யா” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சொல்லியது போல் இரண்டு குடும்பமும் இணைவது அவனின் ஆசை தான் ஆனால் அது அவனின் தங்கைக்காக மட்டுமில்லை… அவனின் காதலுக்காகவும் தான்.
“செல்லச்சாமி மாமா சொன்னதை வெகு சீக்கிரம் நீதான் நடத்திக் கொடுக்கணும்” புன்னகை முகமாக வீற்றிருந்த அம்மனிடம் கூறியவன் கோவிலிலிருந்து வெளியில் வர வெற்றியின் அலைபேசி ஒலித்தது.
அழைத்தது உதவி ஆய்வாளர் ராம்.
“ஒரு நிமிஷம் நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க… இப்போ இவன் என்ன குண்ட போடப்போறான் தெரியலயே” என்று முணுமுணுத்தவன் அழைப்பினை ஏற்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
33
+1
2
+1
1
அமரி சேட்ட வேற லெவல் 😂😂😂
வெற்றி உன்னோட முயற்சி செய்கிறோம் நிறைவேறிடும் ரெண்டு குடும்பம் ஒன்று சேர்ந்து விடுவார்கள்
சேர்ந்து ஆகணுமே