காவ(த)லன் 8
“வாணி உன்னை ஆசிரியர் கூப்பிடுறார்.”
உடன் பணி புரியும் கோமதி சொல்லியதும், செய்து கொண்டிருந்த பணியை நிறுத்திவிட்டு ஆசிரியரின் அறைக்கு முன்பு சென்று நின்றாள் வாணி.
‘உள்ளே போனால் எப்படியும் மண்டகப்படி நிச்சயம்’ என மனதில் நினைத்தவள் கைகளை பிசைந்துகொண்டு வெளியவே நின்று கொண்டாள். கதவினைத் தாண்டி உள்ளே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. வலியச் சென்று வசவு வாங்குவதா என்ற எண்ணம் அவளுக்கு.
கண்ணாடி கதவுக்கு வெளியே வாணி நின்றிருப்பதை கவனித்த ஆசிரியர்.பேரறிவாளன் “உள்ளே வாங்க திருமதி.வாணி” என்று மரியாதையாக அழைக்க… ‘வசவு உறுதி’ என்று அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
அவர் நேரடியாக அழைத்த பிறகும் செல்லாமல் இருப்பது மரியாதையற்ற செயல் என்று உணர்ந்தவள் உள்ளே சென்றாள்.
“வணக்கம் சார்.”
வாணியை அவர் ஆழ்ந்து பார்த்தார்.
“உன்னோட வணக்கம் எனக்குத் தேவையில்லை, செயல் தான் முக்கியம்” என்று அவரின் பார்வை சொல்லாமல் சொல்லியது.
“சார் அது வந்து…” வாணி என்ன கூறி சமாளிப்பதென்று தெரியாமல் வார்த்தைகளை முடிக்காது இழுத்தாள்.
“செய்தி சேகரித்து கட்டுரை தயார் செய்துட்டிங்களா?”
அவரின் அழுத்தமான கேள்விக்கு இல்லையென தலையசைத்த வாணி, “என்னால் காட்டுப்பகுதிக்கு போக முடியல சார். அங்கு செல்ல வீட்டில் யாரும் அனுமதிப்பதில்லை” என பதில் அளித்தாள்.
“உங்க தோழன் குமரனின் மரணம் உங்களுக்குள் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை போலிருக்கே” என்றவர் வாணி பதிலேதும் கூறாது அமைதியாக இருக்கவும் மேலும் பேசினார்.
“குமரன் உங்கள் குழுவை சேர்ந்தவர், அவர் செய்த பணியை உங்களிடம் பகிர்ந்திருக்கலாம்… அதனால் அவரால் பாதியில் விடப்பட்ட பணியை தொடர்வதற்கு உங்களுக்கு சுலபமாக இருக்குமென்பதாலும், அவரின் மரணத்துக்கான காரணமும் இதில் இருப்பதால் தான் உங்களிடமே ஒப்படைத்தேன்” என விளக்கம் கொடுத்தார்.
“சார் நானும் முயற்சி செய்யாமலில்லை” என்ற வாணி “நடந்த நிகழ்விற்கான தகவல்கள் கிடைத்தால் தான், செய்தியை பற்றி நான்கு வரிகளாவது எழுத முடியும் சார்” எனக்கூறி அறையை விட்டு வெளியேறினாள்.
______________________
ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் செல்லியம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
சுனை அருவிக்கும் மேலருவிக்கும் நடுவில் தீர்த்த அருவி ஒன்றுள்ளது. எவ்வளவு தான் மேலருவியில் காட்டாறாய் நீர் கொட்டினாலும் தீர்த்த அருவியிருக்கும் இடத்தில் தீர்த்த அளவில் மட்டுமே நீர் கொட்டும். அதில் கொட்டும் நீர் அங்கிருக்கும் பாறைகளால் உருவான சிறு குளத்தில் தேங்கி சில அடி தூரத்திற்கு பாய்ந்து அதன் பின்பே சுனை அருவியாய் கொட்டுகிறது.
அம்மன் விளையாடுவதற்கு தீர்த்த அருவிக்கு அடிக்கடி செல்வாள் என்பதும், அப்படி அவள் அங்கு செல்லும் நேரம் அருவி முழுக்க சலங்கை ஒலி எதிரொலிக்கும் என்பதும்… அங்கு வாழ்ந்த முன்னோர்களின் நம்பிக்கை. ஆதலால் அங்கிருந்து கொண்டு வரும் நீரினாலே அம்மனுக்கு அபிஷேகம் நடத்துவர். அதனை இன்று வரையும் பின்பற்றுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் திருவிழாவிற்கு முன்பு நாள் குறிக்கும் போது அங்கிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்த பிறகே நாள் குறிப்பர். அம்மன் மக்கள் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் தீர்த்த நீரில் நனைந்தால் சாந்தமடைந்து மக்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று கொள்வாள் என்று அங்கிருப்போர் நம்புகின்றனர்.
ஒவ்வொரு முறையும் திருவிழாவினை நடத்தும் பிரிவினரின் தலைக்கட்டு தீர்த்த அருவிக்கு மேலேறி சென்று நீர் கொண்டு வருவர். இம்முறை இரு பிரிவினரும் ஒன்றாக சேர்ந்து திருவிழா நடத்துவதால் நல்லுவையும், விநாயகத்தையும் கூட்டாக சென்று நீர் எடுத்து வருமாறு நாட்டாமை கூற முதலில் தயங்கினாலும் தெய்வ காரியம் தங்களது வீம்பால் தடைபட கூடாதென்று ஒப்புக்கொண்டு சென்று வர சம்மதித்தனர்.
சக்தியும் சசியும் தங்களது பழத் தோட்டத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தனர். நல்லுவையும் சேதுவையும் கோவிலில் விட்டுவிட்டு அப்போதே தோட்டத்திற்கு வந்திருந்தனர்.
ஊட்டி ஆப்பிள் எனப்படும் பிளம் பழங்கள் ஏற்றுமதி செய்வதற்காக தோட்டத்தில் அதன் பறிப்பு வேலை நடைபெறுகிறது.
“தரமான பிளம் மரத்தின் வளர்ச்சி மூன்று முதல் நான்கு வருடங்கள். அதன் பிறகு கனி கொடுக்கத் துவங்கும். பழத்தின் தரத்தினை நிறத்தை வைத்து மதிப்பீடு செய்யலாம்.” சக்தி சசிக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க அவனோ அதனை கவனியாது பழத்தினை சுவைத்துக் கொண்டிருந்தான்.
“பழம் செம ருசியா இருக்குதுடா, நீயும் சாப்பிட்டு பாரேன்”, சசி.
“வேலை செய்யுற இடத்துல உன்னைய மாதிரி நானும் சாப்பிட்டுட்டு திரிஞ்சா பொழப்பு விளங்கிடும். நம்மள பார்த்துதான் வேலையாளுவ வேலை செய்வாங்க” என்ற சக்தி குவிந்து கிடக்கும் பழங்களை வேலையாட்களுடன் சேர்ந்து அள்ளத் துவங்கினான்.
பணி செய்யும் இடத்தில் முதலாளியாக நடந்து கொள்ளாது எப்போதும் தானொரு தொழிலாளி என்று இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்போது தான் முன்னேற முடியும் என்பது வெங்கடாசலத்தின் கருத்து. அதனை தனது வாரிசுகளுக்கும் பழக்கியிருந்தார். அத்தகைய பண்பு சக்தியிடத்தில் இருந்தது.
இங்கிருந்து பழங்கள் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரித்து பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வேலையெல்லாம் முடிந்ததும் தனியாக எடுத்து வைத்திருந்த பழங்கள் சிலவற்றை சசியிடம் கொடுத்த சக்தி, “மதிக்கு இந்த பழம் ரொம்ப பிடிக்கும்… அவங்க வீட்டுல கொடுத்துட்டு வந்திடு” என்றான். அவனின் கண்கள் முதல்முறையாக மதியின் மீது அவன் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
“அந்தபுள்ள என்னைய கட்டிக்கிடுன்னு கெஞ்சிட்டு இருந்தப்பலாம் இந்த பாசத்தை எங்க ஒளிச்சு வச்சிருந்தடா?” எனக் கேட்ட சசி சக்தி சொல்லியதை செய்ததோடு மட்டுமில்லாது மதியிடம் “உனக்கு இந்த பழம் ரொம்ப பிடிக்குமோ?” எனக் கேட்டான்.
மதியும் “ஆமாம் ரொம்ப பிடிக்கும்… உனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினாள்.
சசியோ அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது மற்றொன்றைக் கூறினான்.
“இந்த சக்தி பய உன்னைய விரும்பியிருப்பான் நினைக்கிறேன்.”
“என்ன சொல்லுற நீ, விரும்புறவங்க தான் என்னைய கட்டிக்க மாட்டேன்னு அமைதியா இருந்தாங்களோ?”
“எனக்குது தோணுது புள்ள…”
“அப்படியா! நிசமாவா?”
“அதை நீதான் கண்டுபிடிக்கணும்” என்ற சசி சென்றுவிட்டான்.
சசிக்கு ஏற்கனவே மதியை சக்திக்கு பிடிக்குமென்று தெரியும். ஆனால் மதியே வந்து தன்னை கல்யாணம் செய்துகொள்ளென்று கேட்கும்போது எவ்வித பதிலளிக்காது ஏன் மௌனமாக இருந்தானென்று தெரியவில்லை. ஒருவேளை மதி காதலிக்கிறேன் எனக் கூறியிருந்தால் சம்மதம் சொல்லியிருப்பானோ என நினைத்தே, மதியும் கொஞ்சம் சிந்திக்கட்டுமென்று “சக்தி விரும்புறானோ?” என்று சந்தேகமாக சொல்லிவிட்டு வந்தான். சக்தியை பற்றி யோசிக்கும் போதாவது அவன் மீது இவளுக்கு காதல் வரட்டுமே என்பது சசியின் எண்ணம்.
சசி சொல்லிச் சென்றதிலே மதி உழன்றுக் கொண்டிருந்தாள். சசி, சக்தி, மதி ஒரே வயதினர். மதி வாணியின் திருமணத்திற்கு முன்பு வரை, அதாவது வெற்றியின் குடும்பம் அவனின்றி அமைதியை தத்தெடுக்கும் வரை வெற்றியின் வீட்டில் தான் எப்போதும் இருப்பாள்.
வாணி, சசி, மதி மூவரும் கலகலப்பாக பேசி பொழுதை கழிக்கும் இடத்தில் சக்தி இருந்தாலும் அமைதியாக அனைத்தையும் கவனிப்பானேத் தவிர அவர்களது அரட்டையில் பங்கு கொள்ள மாட்டான். ஆனால் மதியின் பேச்சுக்கள் செயல்களை மட்டும் ஆழ்ந்து உள்வாங்குவான்.
மதி இருக்கும் இடங்களில் கண்டிப்பாக சக்தி இருப்பான். இதனை வைத்து வாணி பலமுறை மதியை ஓட்டியிருந்தாலும் “அவன் என் நண்பன், அதான் நானிருக்குமிடத்தில் அவனும் இருக்கிறான்” என சாதாரணமாக மதி கூறுவாள்.
வாணி அவ்வாறு ஒருமுறை மதியை கலாய்ப்பதை கவனித்த சக்தி அன்று முதல் தூரத்திலிருந்து மதியை பார்ப்பதோடு நின்றுவிட்டான்.
“நமக்கு சந்தேகம் வந்ததும் இவன் உசாராகிட்டான்” என்று சசி வாணியிடம் சொல்ல, “விடு மச்சி எப்படியிருந்தாலும் ஒரு நாள் தெரியும்” என்றதோடு அவர்கள் சக்தியை வைத்து மதியை கலாய்ப்பதை நிறுத்தியிருந்தனர்.
இன்று இதனை யோசிக்கும்போது மதிக்கும் சசி சொல்லிச் சென்றது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது.
“என்னைய விரும்புறாங்கக சரிதான், பின்ன எதுக்கு கல்யாணம் கட்டிக்கக் கேட்டதுக்கு எதுவும் சொல்லாம என் மண்ட காய விட்டாங்க?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள்…
“இந்தாடி மதி இப்படியெல்லாம் யோசிச்சு நீயே ஒரு விடை கண்டுபிடிக்கறதெல்லாம் உன் வழக்கம் இல்லடி… என்ன ஏதுன்னு அவன்கிட்டவே கேட்டுடு” என்று முடிவெடுத்தவள் அப்போதே சக்தியை சந்திக்க புறப்பட்டாள்.
______________________________
வாயிலில் நின்றிருந்த வெற்றியை கதிர் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி வரவேற்றான். உள்ளே வந்தவனிடம் எவ்வித காரணமும் கதிர் கேட்கவில்லை. எதற்காக வந்தேனென்று வெற்றியும் எதுவும் கூறவில்லை.
பயணக் களைப்பு தீர குளித்து முடித்து அறையை விட்டு வெளியில் வந்த வெற்றி நேராக சமையலறைக்குள் நுழைந்தான்.
கதிருக்கு மிகவும் பிடித்த காலை உணவான அவல் உப்புமா, தேங்காய் சட்னி செய்தவன் அதனை அங்கிருந்த சிறு மேசையில் எடுத்து வைத்தான்.
அலுவலகத்திற்கு செல்ல தயாராகி வந்த கதிர், “சிவம் கையில சாப்பாடு வாங்கி கொடுத்தனுப்பறேன், சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழு… நான் வந்திடுறேன்” என்க,
“அதெல்லாம் எதுவும் வேணாம். நானே செஞ்சிட்டேன், வா சாப்பிடலாம்” எனக்கூறி கதிரை நாற்காலியில் அமர வைத்த வெற்றி தட்டில் உணவினை வைத்து அவன் முன் நீட்டினான்.
தனக்கு பிடித்த உணவு…
வெற்றியின் கையில், பார்த்ததும் வெற்றியின் அன்பில் கதிரின் கண்கள் பனித்தன.
“இது அவ்வளவு பெரிய விடயமில்லையே, முதலில் சாப்பிடு” என்ற வெற்றி கதிர் உணவினை வாயில் வைத்ததும் தனக்கும் ஒரு தட்டில் உணவினை பரிமாறியவனாய் அவனின் அருகில் அமர்ந்தான்.
வெற்றியின் கைகள் உணவினை வாயில் திணித்துக் கொண்டிருக்க கண்கள் தங்களுக்கு முன்னால் இருந்த தொலைக்காட்சியில் பதிந்திருந்தது. வெற்றி ஒருவார்த்தைக் கூட கதிரிடம் பேசவில்லை. பேச முற்பட்ட கதிரையும் சாப்பிட்டு முடிக்க வலியுறுத்தினான்.
சில நிமிட நீண்ட மௌனத்திற்கு பிறகு,
“ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டி கையால சமைச்சுப் போட சொல்லி சாப்பிடாம, அவளோட அண்ணன் செஞ்சு கொடுக்கிறத மொக்கிட்டு இருக்கான்.” கதிருக்கு கேட்க வேண்டுமென்றே சத்தமாக புலம்பினான் வெற்றி.
கதிரின் முகத்தில் இறுக்கம் மறைந்து இளநகை தோன்றியது. நண்பனின் முகத்தில் சிரிப்பினைக் கண்ட பிறகே வெற்றிக்கு மனம் நிறைவானது.
உணவினை முழுதும் உண்டு முடித்த கதிர், “சாரிடா மாப்ள, ஏதோ அழுத்தம் அதான் நேத்து உனக்கு ஃபோன் பண்ணல” என்றவன் வெற்றியை பார்க்காது தரையை பார்த்திருந்தான்.
கதிர் சொல்லியதை கேட்ட வெற்றி அடக்கமாட்டாது சிரித்து, “நீ பேசலன்னுதான் ஏழு மணிநேரம் பயணம் செஞ்சு வந்திருக்கேனா… போடா” என்றவன் எழுந்து கை கழுவச் சென்றான்.
வெற்றி மறுத்தாலும் அதுதான் உண்மையென கதிருக்குத் தெரியும். வழக்கமாக கதிர் அழைக்கும் நேரம் கடந்து அழைத்தாலே, அவனுக்கு என்னவானதென்று வெற்றியின் மனம் சிந்திக்கத் துவங்கிடும். கதிருக்கு ஒன்றென்றால் முதலில் துடிப்பது வெற்றியாகத்தான் இருக்கும். கதிருக்கு என்னவானது என்பதை சிவத்திற்கு அழைத்து தெரிந்து கொண்டவன் உடனே கிளம்பிவிட்டான்.
“சரி… வெ..வ்..வெற்றி நான் அபீஸ் கிளம்புறேன்.”
“ம்… ஃபைல்ஸ் எல்லாத்தையும் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு, நீ கிழிச்சுப்போட்ட உன்னோட ட்ரான்ஸ்ஃபெர் ஆர்டரையும் வாங்கிட்டு வந்துடு… இன்னும் ஒரு மணி நேரத்தில நம்ம ஊருக்கு கிளம்பணும்.”
வெற்றி சொல்லியதற்கு கதிரிடத்தில் சரியென்ற தலையாட்டல் மட்டுமே.
விரைந்து அலுவலகம் வந்த கதிர் தனது மேலதிகாரியின் முன் நின்றிருந்தான். பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அனைத்து விலங்குகளின் பட்டியல் அடங்கிய கோப்புகள் மற்றும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மரங்களின் வகைகள், அதன் எண்ணிக்கையென பல கோப்புகளை அவரிடம் ஒப்புவித்தவன் ஏதும் பேசாது அவர் நீட்டிய பதிவேட்டில் கையெழுத்திட்டு, தனது பணி மாற்றத்திற்கான உறையை பெற்று அங்கிருந்து அரை மணி நேரத்தில் கிளம்பினான். மறக்காது சிவத்திடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
‘தோரணையாக நேற்று இங்கிருந்து செல்லமாட்டேன் என்று அவர் சொல்லியதென்ன, இன்று வெற்றி தம்பி சொன்னதற்காக மறுவார்த்தை ஏதும் சொல்லாது இங்கிருந்து புறப்படுவதென்ன’ மனதில் நினைத்த சிவம் இவர்களின் நட்பை கண்டு வியந்தார்.
கதிர் அப்படித்தான், வெற்றியின் பேச்சிற்கு மறுபேச்சு அவனிடத்தில் கிடையாது. வெற்றி இதைத்தான் நினைக்கின்றானென அவனுக்குத் தெரிந்தாலும் அதை செய்து முடிப்பான்.
கதிர் வருவதற்குள் வெற்றி அவனின் உடைமைகள் அனைத்தையும் எடுத்து வைத்து தயாராக இருந்தான்.
கதிர் வந்ததும் “நீ சொல்லியதை நான் செய்து விட்டேன்” எனும் விதமாக ட்ரான்ஸ்பெர் ஆர்டரை வெற்றியின் கையில் கொடுக்க, தான் சொல்லியதை தனது நண்பன் மீற மாட்டானென்று தெரிந்து வைத்திருக்கும் வெற்றி அவன் கொடுத்த உரை என்னதாக இருக்குமென்று அறிந்து அதனை பிரித்துக்கூட பாராது “வா கிளம்பலாம்” எனக்கூறி காரில் ஏற கதிரும் வெற்றியை பின்தொடர்ந்து காரில் ஏறினான்.
நண்பர்கள் இருவரது பயணமும் ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
_______________________
சக்தி தேயிலை தொழிற்சாலையில் இருப்பதாக சசியிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட மதி இருசக்கர வாகனத்தில் அவனைக் காண புறப்பட்டாள். ஊரினை கடந்து வயல் பரப்புகளின் பாதையில் பயணிக்கும் போது சக்தியே எதிரில் வந்து கொண்டிருந்தான்.
அவனை கண்டதும் வண்டியை நிறுத்தியவள், அவனும் வண்டியை நிறுத்திவிட்டு தன்னிடம் பேச வருவானென்று மதி எதிர்பார்க்க சக்தியோ அவளை பார்த்தும் பார்க்காததைப்போல் கடந்து சென்று விட்டான்.
மதிக்கு அவனின் செயல் கோபத்தை ஏற்படுத்தியது.
‘இவன் பார்த்தானா பார்க்கலையா?’ என யோசித்தவள் “இது நான்கு வழி சாலை பாரு பார்க்காமல் போவதற்கு” என்று வாய்விட்டே புலம்பினாள்.
“வீட்டுக்கு தானே போற, போடி போ… அங்கு வந்து உன்னை வச்சிக்கிறேன்.” முணகியவள் சக்தியின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினாள்.
அவனின் உதாசீனம் தன்னை ஏன் கோபம் கொள்ள செய்கிறதென்று சிந்தித்திருந்தாலும் மதிக்கு அவளின் காதல் மனம் புரிந்திருக்கும்.
மதி சக்தியின் வீட்டிற்குள் சென்றபோது அவன் உணவு உண்டு கொண்டிருந்தான். முதலில் அவன் சாப்பிட்டு முடிக்கட்டுமென்று வரவேற்பறையிலிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.
“பார்த்துடி, என் புருஷன் உட்காரும் இருக்கை… நீ பாட்டுக்கு உடைச்சு போட்டு போயிடாத” என்றவறாய் செண்பகம் பாட்டி அவளின் அருகில் அமர்ந்தார்.
“இந்த நாற்காலி உடைஞ்சா உன் புருஷனை மடியில உட்கார்த்திக்கோ கெழவி” என்றுக் கூறியவள் நொடித்துக் காண்பித்தாள்.
“மருமகளா வரதுக்கு முன்னாடியே இந்த வெட்டு வெட்டுற, பார்த்துடி கழுத்து சுளிச்சிக்க போவுது” என்ற செண்பகம் பாட்டியின் வார்த்தைக்கு,
“இங்க வந்ததும், உன்னை முதலில் துறத்தனும் கெழவி” என்றாள் மதி.
“ஹேய் யாரடி கெழவிங்கற, மல்லுக்கு நின்னா என் முன்னாடி நீயெல்லாம் எம்மாத்திரம்.” பாட்டி மதியிடம் வம்பு வளர்க்க நினைத்து பேச்சினை நீட்டிக்க அங்கு ஜானகி வந்தார்.
“என்னம்மா உச்சி வேளையில்” எனக் கேட்டுக்கொண்டே மதியின் கையில் குளிருக்கு ஏற்ற சூடான கருப்பட்டி பானத்தை திணித்தார். அருவி கரையில், காடுகள் நிறைந்த கிராமம் என்பதால் எப்போதும் சில்லென்று இருக்கும்.
ஒரே மடக்கில் வாயில் சரித்தவள், உணவு கூடத்தை பார்க்க அங்கு சக்தி இல்லை… அறைக்கு சென்றுவிட்டான் என்பதை யூகித்து, சக்தியின் அறை பக்கம் அடி வைத்தபடியே…
“உங்க மகனதான் பார்த்துட்டு போலாமுன்னு வந்தேன் அத்த” என்க,
“ஏய் இந்தாடி நில்லு” என செண்பகம் பாட்டியின் குரல் தடை செய்ய மதி நின்று திரும்பினாள்.
“வயசுப்பையன் அறைக்கு போறியே, உனக்கு வெட்கமா இல்லை.”
“வயசுப்பையன் அறைக்கு போவாமா, உன் கெழவன் அறைக்கா போவாங்க கெழவி… என்னவோ புதுசா போற மாதிரி தடுக்குற” என்றவள் சக்தியின் அறை கதவை அதிரடியாக திறந்து உள் நுழைந்தாள்.
மதியின் பதிலில் வாயில் கை வைத்த செண்பகம் பாட்டி, “இவ(ள்) பேசுற பேச்சுக்கு கல்யாணம் கட்டிக்கிட்ட அடுத்த மாசமே புள்ள பெத்துப்பா பாரு” என்று ஜானாகியிடம் கூறியவர் தனது மருமகளுடன் சேர்ந்து சிரித்தார்.
“சக்தியோட அமைதிக்கு நம்ம மதி மாதிரி அதிரடி பொண்ணுதான் சரி அத்த” என சிரிப்புனூடே பதிலளித்த ஜானகி தனது மாமியார் அருகில் அமர்ந்தார்.
மதிய வேளையில் மாமியாரும் மருமகளும் ஒன்றாக அமர்ந்து பல கதைகள் பேசுவதோடு தங்களுக்குள் தோன்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்வர். மனம் விட்டு பிறர் பேச அனுமதித்து, அதனை காது கொடுத்து கேட்டாலே குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது.
சக்தியின் அறைக்குள் மதி நுழைந்த போது அவன் யாரிடமோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.
அவன் வரும் வரை என்ன செய்வதென்று தெரியாமலும், வெளியே சென்றால் மீண்டும் சக்தியை காண செண்பகம் பாட்டி அறைக்குள் விடாது என்பதாலும் அங்கிருந்த நீண்ட இருக்கையில் அமர்ந்தவள் அறையை சுற்றி பார்வையை சுழலவிட்டாள்.
மதி பலமுறை இங்கு வந்திருந்தாலும் சக்தியின் அறைக்குள் வருவது இதுதான் இரண்டாவது முறை. முதல் முறை இரவில் வந்ததால் அவனின் அறையை முற்றிலும் பார்க்க முடியாமல் போனது. இன்று ஒவ்வொன்றாய் ஆழ்ந்து பார்க்கும்போது அது மதியின் கண்ணில் பட்டது.
வார்ட்ரோப் திறந்திருக்க சக்தியின் துணிகளுக்கு நடுவில் வெண்ணிற கைக்குட்டை ஒன்று கீழே விழவா வேண்டாமா என தொங்கிக் கொண்டிருந்தது. அந்த கைக்குட்டை மதியை ஈர்த்ததற்கு காரணம் அது அவளுடையது.
இருக்கையிலிருந்து எழுந்து வார்ட்ரோப் அருகே சென்றவள் கைக்குட்டையை கையில் எடுக்கவும் சக்தி அவளின் பின்னால் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. மதி வந்ததை, யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போதும் அவன் கவனித்துவிட்டான்.
என்ன செய்கிறாளென்று பார்ப்பதற்காகவே காணாதது போல் பேசிக்கொண்டிருந்தான்.
கைக்குட்டையை கையில் எடுத்தவள் பிரித்து பார்க்க அது அவளுடையது தான் என்பதற்கு அடையாளமாக ஒரு மூலையில் பிறை நிலவின் ஓவியம் பூத்தையல் போட்டிருந்தது.
‘இது என்னுடையதாச்சே!’ மதி யோசிக்கும்போது கைக்குட்டையை பறித்தவன் இருந்த இடத்திலேயே வைத்து வார்ட்ரோப்பினை மூடி தாழிட்டான்.
“கைக்குட்டை என்னோடது தானே?”
“இல்லையே.”
“பொய் சொல்லாத… கல்லூரியில் ஒரு முறை உன் கையில் அடிப்பட்டதுன்னு நான் கட்டிவிட்ட கைக்குட்டை அது, என்னோடது தாங்கிறது அதிலிருக்கும் பூத்தையல் சொல்லுது, நிலவுன்னா மதின்னு ஒரு அர்த்தமிருக்கு.”
“ஆமாம்… உன்னோடதுதான் இப்போ என்ன அதுக்கு?”
“அதுதான் உன்னுடையதுன்னு தெரிஞ்சுடுச்சே இப்போ என்ன செய்யப்போறா?” என்கிற திமிர் அவனின் பதிலில் இருந்தது.
இல்லை என்று சொல்லியிருந்தால் ஏன் பொய் சொல்லுகிறாய், ஏன் இன்னும் வைத்திருக்கிறாயென ஏதாவது கேட்கலாம்…
ஒப்புக்கொள்பவனிடம் என்ன வாதம் செய்ய முடியும். அமைதி காத்தவள் வந்த விடயத்தை நேரடியாகக் கேட்டாள்.
“நீ என்னைய நேசிக்கிறேன்னு சசி சொன்னான், உண்மையா அது?”
“அவன் சொல்லிதான் உனக்கு தெரியுது… உனக்காத் தோணல,” மதியின் முகத்திற்கு நேராக கேட்டவன் நொடியும் தாமதிக்காது அங்கிருந்து சென்றுவிட்டான்.
‘அவன் ஆமாம் என்கிறானா? இல்லை என்கிறானா?’ புரியாது குழம்பியவள் புரிந்ததும் மகிழ்ச்சி அடையாது… “அப்புறம் எதுக்கு நான் கட்டிக்கிட கேட்டப்போலாம் அமைதியா இருந்தான்?” என்று மீண்டும் குழம்பினாள்.
_______________________
கதிர் உர்ரென்றே முகத்தினை வைத்துக்கொண்டு வர வெற்றிக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது. அவனுக்குத் தெரியும் கதிர் தன்மீது கோபமாக இருக்கின்றானென்று, ஆனால் அவனது கோபமெல்லாம் சூரியனை கண்ட பனி போல் சில நேரம் மட்டுமே,
வெற்றியே “நீ என்மீதுகோபமாக இருக்கிறாய்!” என்று கூறும் வகையில் அமைந்துவிடும்.
கதிர் வெற்றியுடன் இருந்தால் அவனுக்கு வாய் ஓயாது ஏதேனும் வெற்றியிடம் பேசிக்கொண்டே வர வேண்டும். இப்போது கோபம் எனும் பெயரில் பேசாமல் அவனது அருகிலேயே அமர்ந்திருப்பது கதிருக்கு அவஸ்தையாக இருந்தது.
மனதில் எழும் வினாவை கேட்க வருபவன் கேளாது வாயினை மூடிக் கொள்வதும், சன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்ப்பதைப்போல் நடிப்பதையும்… வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் கவனித்த வெற்றி கதிரிடத்தில் எதுவும் கேட்க முற்படவில்லை.
‘நான்தான் பேசல, அவனாது ஏதாவது பேசுறானா பார்… நல்ல நேரத்திலேயே அதிகம் பேச மாட்டான் இப்போ சுத்தம், அழுத்தக்காரன்.’ மனதில் வெற்றியை நிந்தித்தான்.
“கூப்பிடியா மச்சான்?” , வந்த சிரிப்பினை வாய்க்குள்ளே புதைத்தவனாய் வெற்றி கேட்க… கதிர் கொலைவெறியானான்.
வெற்றி சொல்லிய மச்சான் அவனின் விஷமத் தனத்தை கதிருக்கு காட்டிக்கொடுத்தது. அவன் பேசிய இரண்டு வார்த்தைகள் கதிருக்கு போதுமானதாக இருந்தது.
“இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு இப்போ கேளு கூப்பிடியான்னு, அங்க காட்டுல ஏதோ… ஏதோ என்ன ஏதோ எல்லாமே தப்பா தெரியுது. இதுல அமைச்சர், உயர் அதிகாரிகள் எல்லாருக்கும் பங்கு.
“உன்கிட்ட சொன்னா நீ இங்கயே இருன்னு சொல்லுவன்னு நினைச்சேன், ஆனால் என்னைய மொத்தமா இங்க இருந்து காலி பண்ணிட்ட, வலுவான காரணம் இருக்குன்னு புரியுது… ஆனால் என்னன்னு தெரியல, கேட்டாலும் சொல்லமாட்ட” மொத்தமாக மனதில் உள்ளவற்றை வெளியில் கொட்டிய கதிர் இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான்.
“இந்த வழக்கு அங்கேயும் தொடரும்.”
வெற்றி சொல்லியதில் பட்டென்று கண் திறந்த கதிர்,
“என்னடா சொல்லுற? விளங்கிறாப்புல சொல்லு.”
கதிருக்கு வெற்றி உள் அர்த்தம் வைத்து பேசுகிறான் என்கிறளவு மட்டுமே புரிந்தது.
‘என்னவென்று கேட்டாலும் சொல்ல மாட்டான்’ என நினைத்தவன் வெற்றியின் முகத்தையே பார்த்திருந்தான்.
“நீ அங்க முதல்ல வேலையில சேரு… உனக்கே எல்லாம் புரியும்” என்ற வெற்றி “இந்த வழக்குல எனக்கும் கடமை இருக்கு, நானும் உன்னோட சேர்ந்து காட்டுல சுத்துற வாய்ப்பு இருக்குன்னு சொன்னா?
என்னோட இணைஞ்சு வேலை செய்ய மாட்டியா நீ?” எனக் கேட்டான்.
“வெற்றி…”
“என்ன மச்சான்?”
“நீயும், நானும் ஒட்டுக்காவா?” என்று மகிழ்வாய் கேட்ட கதிர்… ‘அதெப்படி?’ என சிந்திக்க,
“உன் வீடு வந்தாச்சு” என்றவாறு வண்டியை கதிரின் வீட்டின் முன்பு நிறுத்தினான் வெற்றி.
________________________________
மஞ்சள், குங்குமம் வைத்து வேப்பிலை மாலையிட்டு அலங்கரிக்கப்பட்ட இரு கலச செம்புகளை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக்கொண்டு நல்லு மற்றும் விநாயகம் தீர்த்த அருவியை நோக்கி புறப்படத் தயாராக,
பூசாரி இருவருக்கும் அம்மனின் குங்குமத்தை நெற்றியில் இட்டு, தலையில் பரிவட்டம் கட்ட… கூடியிருந்தோர் அனைவரும் பக்தியுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
சுனை அருவியினை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினர். சுனை அருவியை நெருங்கும் வரை எவ்வித தடங்கலுமின்றி அவர்களின் பயணம் தொடர, அருவியில் கால் பதித்த தருணம் பலத்த காற்று சுழன்றடித்தது. காற்று குளிர் நீரினை முட்டி மோத நான்கு பக்கமும் தெறித்து அவ்விடம் புயல் மழைப்போல் காட்சியளித்தது.
அதுவரை பத்தடி இடைவெளியில்… நீ முன்னே போனால் நான், நான் முன்னே போனால் நீயென நடந்த இருவரும் காற்றில் அடியெடுத்து வைக்க முடியாது, அதே வேளையில் கையிலிருக்கும் கலசத்தினையும் கீழே விட்டுவிடாமல் இருக்க தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டனர்.
‘ஆபத்திற்கு பாவமில்லை என்கிற எண்ணம்.’
அவர்கள் இருவரும் கைகோர்த்ததும், அதுவரை பேயாட்டம் போட்ட காற்று… மரங்களின் இலைகளின் அசைவின்றி அமைதியாகியது. தெறித்து சிதறிய அருவி நீர் வழமையாய் ஆர்ப்பரித்து தன் வழியில் கொட்டியது. சற்று நேரத்திற்கு முன்னால் நிகழ்ந்தது பொய்யோ என இருவரையும் எண்ணுமளவிற்கு இடம் நொடிப்பொழுதில் அமைதியாகியது.
அந்நேரம் இருவருக்குமே, வெற்றி சொல்லிய “ஊர் ஒற்றுமையாக வேணுமென அம்மனும் விரும்புறாளோ?” என்றது உண்மையாக இருக்குமெனத் தோன்றியது.
அதுமுதல் கோர்த்த கைகளை இருவருமே விட வேண்டுமென்று நினையவில்லை. இயற்கை கூட வெற்றியின் எண்ணத்திற்கு துணை நின்றது.
சுனை அருவியை கடந்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடினமாக அமைந்தது.
பாதகைகளற்று அந்த கரடுமுரடான கல் பரப்பில் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
சற்று நேரம் இளைப்பாறி செல்லலாம் என்றாலும் ஏற்கனவே பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது. சாயங்கால பொழுதிற்குள் கோவிலுக்குத் திரும்பி சென்றிருக்க வேண்டும். அதனை மனதில் வைத்து முன்னேறி செல்ல, அப்போதும் முடியாது ஓரிடத்தில் தலை சுற்றலை உணர்ந்த விநாயகம் கீழே அமர்ந்துவிட்டார்.
களைப்பு அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘தான் மட்டும் தனித்து சென்று கொண்டு வரலாமென்றால், இரு கலச நீரும் ஒன்றாக கோவிலினுள் நுழைய வேண்டுமென பூசாரி சொல்லியிருக்கிறார்… என்ன செய்வது?’ சிந்தித்த நல்லு அருகில் சலசலத்துக் கொண்டிருந்த நீரினைக் கொண்டு வந்து விநாயகத்திடம் குடிக்க சொல்லி கொடுக்க, சற்றுத் தயங்கினாலும் அதனை வாங்கிப் பருகியவர் சற்று தெம்பாக உணர்ந்தார்.
“வேணுன்னா செத்த ஓய்வெடுத்து போயிக்கலாம்.” வானத்தை பார்த்து உரைத்த நல்லு, தானும் ஒரு கல்லினை பார்த்து அமர்ந்தார்.
நேரமாவதை உணர்ந்து விநாயகம் எழுந்திருக்க,
“இப்போ பரவாயில்லையா, மேலேறி உங்களால வர முடியுமா?” என்று எவ்வித பகைமையையும் மனதில் நினையாது கேட்டார் நல்லு.
விநாயகம் பதிலேதும் சொல்லாது அமைதி காக்க,
“பகைங்கிறது மனுசனுக்குதான், மனித நேயத்தில் இல்லை… முடியாத நேரத்துல யாரு யாருக்கும் உதவுலாம்” என்று சொல்லிய நல்லு நடக்கத் தொடங்கினார்.
‘இந்த ஆள புரிஞ்சிக்கவே முடியலையே, சண்டைன்னா வரிஞ்சிக்கட்டிக்கிட்டு மொத முன்னுக்கு வர ஆளு இவுங்கதான்… இப்போ என்னடான்னா தன்மையா பேசுறாங்க’ என மனதில் குழும்பிய விநாயகம் “அதுசரி கோபம் இருக்குற இடத்துல தானே குணமும் இருக்கும்” என்று முணுமுணுத்தவராய் நல்லுவை பின்தொடர்ந்தார்.
சிறிது நேரத்திலேயே தீர்த்த அருவி அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது.
‘இன்னும் கொஞ்சம் தான்… அருவி வந்திடுச்சு’ என இருவரும் ஒன்றாக நினைத்து மேலே செல்ல அடி வைத்தனர்.
தீர்த்த அருவிக்கு செல்லும் வழி, கூர் கற்கள் பாதையில் படிந்து, முட்புதர்கள் மண்டி சீரற்று கிடந்தது.
ஒவ்வொரு அடியும் பார்த்து நிதானமாக வைக்கும் அளவிற்கு கரடுமுரடக காட்சியளித்தது.
அவ்வழிகளில் உள்ள மரங்களே ஓங்கி வளர்ந்து ராட்சத தோற்றத்துடன் பயமுறுத்தின.
இருவரும் பாதத்தினை பதம் பார்க்கும் கற்களை ஒதுக்கி முன்னேறி கொண்டிருக்க வானம் இருட்டத் துவங்கியது.
“மாரி(மழை) வரும் போலிருக்கே!”
நல்லு கூறியதற்கு “ம்” என ஒற்றையாய் தலையாட்டினார் விநாயகம்.
“இப்போதான் கருக்கத் தொடங்குது… காத்து பலமா வீசுறதால் மேகத்தை கலைச்சிடும், மாரி வரதுக்குள்ள போயிடலாம், நடையை எட்டி வைக்கலாம்.” விநாயகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரும் பெரும் துளியாய் மழை கொட்டத் துவங்கியது.
அந்நேரம் கோவிலில் கூடியிருந்தோர்,
“என்னடா ஆத்தா மாரியாய் இறங்கிட்டா போலிருக்கே, போனவங்க எந்த சேதாரமும் இல்லாம வந்திடுவாங்களா?”
“போயி ரொம்ப நேரமாகுதே, போனவுங்கல ஆளையே காணோம்?”
“அதெல்லாம் ஆத்தா அவுங்களுக்கு துணை நிப்பா(ள்).”
“போனவங்க நல்லபடியா திரும்புனும் ஆத்தா.”
அனைவரும் சென்றவர்களை நினைத்து கவலை அடைந்தனர்.
பேரிரைச்சலையாய் அருவியின் சத்தம் ஆர்பரிக்க அதற்கு இணையாய் இடியின் சத்தம் முழங்கியது.
தட்டுத்தடுமாறி ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து ஒருவழியாக இருவரும் தீர்த்த அருவியில் கால் வைக்க மழை சட்டென்று நின்றது.
சிறு குளமாய் தேங்கி இருந்த தீர்த்த அருவி நீரினை கலசத்தில் நிரப்பிய நல்லு நிமிர்ந்து பார்க்க, நீர் கொட்டும் அருவியின் பாறையில் தொங்கிக் கொண்டிருந்தார் விநாயகம்.
“நல்லு காப்பாத்துப்பா” என்ற அவரின் குரல் எல்லா திசைகளிலும் எதிரொலித்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
36
+1
1
+1
வெற்றி கதிர் ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த காட்டு மர்மத்தை விசாரிக்க போறாங்களா??
இயற்கையான நல்லு விநாயகம் ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க.
விநாயகையும் பாறையில் தொங்கிட்டு இருக்கார் வழுக்கி விழுந்துட்டாரா??