Loading

காவ(த)லன் 7

ஊரில் என்ன நடந்தது, பஞ்சாயத்துக்கு வெற்றி சென்றானா என்பதை அறிந்துகொள்ள கதிர் வெற்றியை அழைத்திருந்தான். அப்போது காட்டில் நடந்தவைகளையும், அமைச்சர் மிரட்டியதையும் வெற்றியுடன் கதிர் பகிர்ந்து கொண்டான்.

‘அமைச்சரே தலையிடுவதால் கதிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ?’ என்ற கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்த வெற்றி ஏதோ ஞாபகம் வந்தவனாக உதவி ஆய்வாளர் ராமை அழைத்தான்.

இறந்து கிடந்த மிளாவின் தோற்றத்தில், தான் கண்ட வித்தியாசத்தினையும் கதிர் வெற்றியிடம் சொல்லியிருக்க, அதேபோல் தானும் எங்கோ கண்டதாக யோசித்துப் பார்த்த வெற்றிக்கு ஒன்றும் புலப்படவில்லை.

தனது அறைக்குள் கதவினை தட்டிவிட்டு உள்ளே வந்த ராமிடம்,
“நிரூபர் காட்டுப்பகுதியில் இறந்து கிடந்த வழக்கு என்னாச்சு ராம், அன்னைக்கு கேட்டப்போ வனத்துறையினரிடமிருந்து ரிப்போர்ட் வரல சொன்னீங்க, இப்போ வந்திருச்சா?” என்று வினவினான்.

“சார் விசாரிச்ச வரைக்கும், ஏதோ விலங்கு அடிச்சுதான் அவர் இறந்து போனதா சொல்றாங்க… அவர் இறந்து போன அன்னைக்கு பணியில் இருந்த வனப்பாதுகாவலர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டுவிட்டார்.”
ராம் சொன்ன பதில் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. மேலும் ஏதோ சந்தேகத்தையே அது கொடுத்தது.

“அந்த நிருபர் எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர்?”

“செய்திகள் ஆயிரம்” சார்.

“ம்.”

சற்று யோசித்த வெற்றி கதிருக்கு அழைத்து சில சந்தேகங்களை கேட்டுவிட்டு, “உனக்கு ட்ரான்ஸ்ஃபெர் கிடைக்குமா கிடைக்காதாடா?” என்றவன் “ஆமா, மொதல்ல அப்ளை பண்ணியா நீ?” என வினவினான்.

“அப்ளை செய்து ரெண்டு மாசம் ஆகுதுடா.”

“அப்போ சரி, உனக்கு நாளைக்கே மாத்தலுக்கான உத்தரவு வந்திடும்” எனக்கூறிய வெற்றி கவனமாக இருக்குமாறு வலியுறுத்தி அலைபேசியை வைத்தான்.

மாலை வெற்றி வீட்டிற்கு வந்த போது அவனுக்காக வாயிலிலேயே சக்தி காத்திருந்தான். சக்தியை பார்த்த வெற்றி உள்ளே வருமாறு கண்ணசைத்து கதவை திறந்தவன் அடுத்த பத்து நிமிடங்களில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடை மாற்றி இரு குவளை தேநீருடன் சக்தியின் முன் அமர்ந்தான்.

வெற்றி நீட்டிய குவளையை கையில் வாங்கிய சக்தி எதுவும் பேசாது அமைதி காத்தான். தான் தேநீர் பருகி முடிக்கும் வரை காத்திருந்த வெற்றி,

“மதியை நீ விரும்புற தானே? அப்புறம் என்ன யோசனை? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம உன் காதல் கை சேர போகுது, அதை நினைச்சு சந்தோசப்படாமல் ஏன் சோகப்பாட்டு வாசிக்கிற?”

வெற்றி நேரடியாகக் கேட்டதில் சக்தி அதிர்ந்தான்.

இதுநாள் வரை தன் காதல் யாருக்கும் தெரியாதென்று அவன் நினைத்திருக்க வெற்றி எனக்குத் தெரியும் என்பதைப்போல் பேசவும் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினான்.

“இன்னொன்னு சொல்லட்டுமா? நீ மதியை விரும்புறது அப்பாருக்கும் தெரியும். அதான் நேத்து ராத்திரி தாத்தா பேசி ஏதும் வம்பு வந்திடக் கூடாதுன்னு அவரே திருவிழாவுக்கு அடுத்து உங்க கல்யாணத்த நடத்திடலான்னு சொல்லி அனுப்பினாங்க” என்றான்.
இது மற்றுமொரு அதிர்வாக சக்திக்கு அமைந்தது.

“மதி என்னை விரும்புறன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்டிருந்தால், நீ சொல்ற மாதிரி ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும். ஆனால், அவ உன்னை கட்டிக்கிட்டா நான் மகிழ்ச்சியா இருப்பன்னு சொல்லுறா… அவ அவளுடைய வாழ்க்கை முழுமைக்குமான பாதுக்காப்பைத் தேடி தான் என்னைக் கட்டிக்கிட நினைக்கிறா. காதலில்லாமல் கல்யாண வாழ்க்கை நல்லாயிருக்குமா?”, சக்தி.

“நீ சொல்றதும் சரிதான்… ஆனால் மதிக்கு உன்மேல் காதல் இல்லன்னு யாரு சொன்னா? அவளுக்கு கல்யாணன்னதும் உன் முகம் மனசுல தோணுதுன்னா என்ன அர்த்தம்? அவ உன்னை விரும்புறத அவளே இன்னும் உணரல, கல்யாணம் கட்டிக்கிட்டு உணர வை.”

வெற்றி சொல்லிய பிறகு தான் சக்திக்கே புரிந்தது. மதியின் மனதிலும் தன்மீது உணராத காதல் உள்ளது என்று தெரிந்ததும், அவன் முகம் பிரகாசமாகியது.

“இப்போதான்டா உன் முகம் பார்க்க லட்சணமா இருக்கு, பஞ்சாயத்துல பார்க்க சகிக்கல” என வெற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போதே சக்தி சகோதரனை தாவி அணைத்துக் கொண்டான்.

இரவாகி விடவும், “சாப்பிட்டு போறியாடா?” என வெற்றிக் கேட்ட பின்பே ஜானகி வெற்றிக்காக கொடுத்தனுப்பிய மீன் குழம்பு நினைவுக்கு வர, அதனை வெற்றியிடம் கொடுத்தான்.

“உன் சோகத்தால என் மீன் குழம்பை மறந்துட்டியேடா” என வெற்றி சிரிக்க அவனை சக்தி ஆச்சரியமாக பார்த்தான்.

“என்னடா பாக்குற, நானா இப்படிலாம் பேசுறேன்னா? பிரிஞ்சிருக்கும் போதுதான் உறவுகளோட அருமை அதிகமா தெரியுது.”

பொதுவாக வெற்றி இப்படி பேசுபவன் அல்ல, உணர்வுகளை வெளிக்காட்ட பழகாதவன். அவனின் தனிமை அவனுக்கு உறவுகளிக்கிடையில் அமைந்திருக்கும் உணர்வுகளின் அருமையை உணர்த்தியது. மனதில் தோன்றும் உணர்வுகளை உறவுகளிடத்தில் அந்தந்த நேரத்தில் சரியாக பிரதிபலித்தாலே போதும், யாரும் இங்கு தனிமையில் இருக்க வேண்டிய நிலை வராது.

துக்கமோ, இன்பமோ நாம் அனைவரும் எந்நிலையிலும் வேண்டுவது ஆறுதலான உறவுகள் மட்டுமே… அத்தகைய அருமை வெற்றிக்குத் தெரியும். ஆனால், உணர்வுகளின் வெளிப்பாடு எத்தகைய சுகம் வாய்ந்தது என்று இப்போதுதான் புரிந்து கொண்டான்.

சிரிக்க வேண்டிய தருணங்களில் அனைவருடன் சேர்ந்து சிரிக்கும்போது வரும் மகிழ்வு தனிமையான சிரிப்பில் கிடைக்காது.

சோகமோ, அழுகையோ, மகிழ்வோ அந்தந்த தருணங்களில் வெளிப்படுத்துவது அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.

எந்தவொரு உணர்விற்கும் பகிர்தலே நிறைவாகும். கோபம் கூட வெளிப்படுத்திவிட்டால் பின்னாளில் அதனால் நடைபெறும் கசப்பான நிகழ்வுகளை தவிர்த்துவிடலாம்.
இந்த தனிமை அத்தகைய புரிதலை வெற்றிக்கு அளித்தது.

“நீயும் நம்ம வீட்டுக்கு வந்துடலாமே வெற்றி.”

“வறேன் சீக்கிரமா… நானில்லம்மலா உனக்கு கல்யாணம்? நான் வருவதற்கு முன்பு வாணியை நம்ம குடும்பத்தோடு ஒண்ணு சேர்க்கணும்” என்ற வெற்றியின் முகத்தில் சொன்னதை செய்துவிட வேண்டுமென்கிற தீவிரம் இருந்தது.

“என்னோட காதலை ஏத்துக்க முடிஞ்சவங்களால ஏன் வாணியுடைய காதலை ஏத்துக்கிட முடியல?”

“ஏன்னா, நீ பையன் அவ(ள்) பொண்ணு… இங்கு பல பேரால் ஆணோட செயல்களை ஏத்துக்க முடிஞ்ச அளவிற்கு பெண்களோட செயல்களை புரிஞ்சிக்க கூட முயற்சி செய்வதில்லை” என்றவன்… “வாணி விடயத்தில் குடும்ப பகைன்னு ஒண்ணு இருந்துச்சு, அதைத்தாண்டி கல்யாண முதல் நாள் வரை எனக்கே தெரியாது… ஆனால் உன் விடயம் அப்படியில்லை, மதுவுக்கு அவளோட காதலை உணர வை…” எனக்கூறிய வெற்றி சக்தியை வழியனுப்பி வைத்தான்.

இரவு உணவினை உண்டு முடித்து படுக்கையில் விழுந்தவனின் நினைவுகள் எல்லாம் அவனின் எழிலைச் சுற்றியே சுழன்றன.

‘உன்னைத் திருமணம் செய்யறதுக்காக எவ்வளவு தகிடத்தத்தோம் வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு’ என மனதோடு தன்னவளிடம் உரையாடியவன் இரு பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் பொருட்டு பஞ்சாயத்தில் செய்த திருட்டு வேலையை எண்ணி சிரித்துக் கொண்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனின் மூளை கதிர் சொல்லியவற்றையும், ராம் கூறிய நிருபரின் இறப்பு மற்றும் ஐஜி விசாரிக்க வேண்டாமென்று சொல்லிய போதைப்பொருட்கள் வழக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி யோசிக்க, பட்டென்று கண்களை திறந்து எழுந்தமர்ந்தான்.

அவனது மூளை அவனிற்கு எதையோ அறிவுறித்திட முற்படுகிறது. ஆனால் என்னவென்று அவனுக்கு சரியாக பிடிபடவில்லை. மனதை சற்று அமைதிபடுத்தி ஒவ்வொன்றாக சிந்திக்க… கதிர் சொல்லிய வித்தியாசமும் அவன் கண்ட வித்தியாசமும் ஒன்றாக இருப்பதைப்போல் பிம்பம் தோன்றி மறைய, தான் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்தவனாக உறங்கிப்போனான்.

___________________________

“என்னடா பஞ்சாயத்துல என்ன முடுவெடுத்தானுங்க?”

“வழக்கம்போல அடிதடியில முடிஞ்சிருக்கணுமுங்க, அந்த வெற்றி பய வந்து காரியத்தை கெடுத்துட்டான்.”

கேள்வி கேட்ட தனது முதலாளிக்கு தகுந்த பதிலை கூறினான் அந்த பணியாள்.

“அவனுவ அடிச்சிக்கிட்டு ஊர் பிரச்சனையிலேயே உழண்டு கிட்டு கெடந்தாதான் நம்ம நல்லா இருக்கு முடியும். அவனுங்க ஒண்ணு சேர விட்டாக்கா நம்ம பொழப்பு அவ்வளவுதான்” என்ற காத்தவராயன் அவ்வூரில் பெரும் தனக்காரர்.

நாட்டாமை செல்லச்சாமி எப்படி இரு பிரிவினருக்கும் பொதுவானவரோ அந்த வகையில் காத்தவராயனும் பொதுவானவர். ஆனால் இதுவரை ஊரின் எந்தவொரு நிகழ்விலும் அவர் பங்கேற்றது இல்லை. இரு பிரிவினருக்கும் இடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே இவர்தான்.

“திருவிழா எப்படி நடக்குதுன்னு பார்க்கிறேன்” என்ற காத்தவராயன் யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

______________________________

உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் அமரி. எப்போதும் படுத்த அடுத்த நொடி நித்திரையில் ஆழ்ந்து விடுவாள், காதுக்கு அருகில் இடி விழுந்தாலும் எளிதில் எழ மாட்டாள். அப்படி கும்பகர்ணனுக்கு பக்கத்துவீட்டு பெண்ணாக இருந்தவள் இன்று என்ன முயற்சித்தும் உறக்கம் வராமல் தடுமாறினாள்.

தலைகீழாக எண்களை எண்ணி பார்த்தாள், கண் மூடி எதுவும் நினையாதே என ஜெபம் போல் சொல்லியபடி படுத்திருந்தாள், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து வெளியேற்றி என ஏதேதோ செய்து பார்த்தும் உறக்கம் வரவில்லை. அதற்கு காரணம் வெற்றி.

“அய்யய்யோ, இவன் என்னை உறங்க விடமாட்டான் போலிருக்கே” என வாய்விட்டு புலம்பியவள் குப்புற படுத்து இரண்டு நிமிடங்கள் கடந்தன.

“டேய் நீ ஏதோ பார்க்க நல்லா இருந்தியேன்னு உன்னை கொஞ்சம் அதிகமா… இல்ல இல்லை ரொம்பவே அதிகமா சைட் அடிச்சேன் அவ்வளவுதான், இப்படி தூக்கம் வராமல் புலம்ப விடுவேன்னு தெரிஞ்சிருந்தா உன் பக்கமே திரும்பியிருக்க மாட்டேன்டா” என்று யாரென்றே முழுதாக தெரிந்திடாத வெற்றியை திட்டிக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

‘ஹேய் அமரி உனக்கு என்னடி ஆச்சு? நீயா இப்படி ஒரு பையனை நினைச்சிக்கிட்டு தூக்கம் வராமல் புலம்பறது’ என அவள் மனசாட்சி கேள்வி கேட்க, தனக்கெதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பாசமாக பார்த்தாள்.

“டேய் யாருடா நீ? எங்கடா இருக்க?” தன்னெதிரே இல்லாதவனிடம் கேள்வி கேட்டவள் எவ்வளவு நேரம் தான் அறையின் நான்கு சுவர்களையும் வெறிப்பது… மாடிக்கு செல்லலாமென அறையை விட்டு வெளியே வந்தாள்.
மாடிப்படிகளின் மீது கால் வைக்கும் போது தான் கவனித்தாள் ஒரு கருப்பு உருவம் வீட்டின் பின்பக்க தோட்டத்துக் கதவினை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இருட்டில் யாரென்று சரியாக அமரிக்குத் தெரியவில்லை.
‘நம் வீட்டு ஆட்களாக இருந்தால் இருட்டில் தடுமாற வேண்டாமே’ என நினைத்தவள் அடி மேல் அடி வைத்து அவ்வுருவத்தினை மெல்ல நெருங்கினாள்.

படியில் நின்றிருந்த அமரி மெல்ல அவ்வுருவத்தினை நெருங்கினாள். அவ்வுருவம் மரக்கதவின் தாழ்ப்பாளினை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
முக்காடு போட்டிருந்ததால் இருட்டில் யாரென அமரியால் யூகிக்க முடியவில்லை.
அமரிக்கு உள்ளுக்குள் அச்சமாக இருந்தது. எச்சிலைக் கூட்டி பயத்தினை தொண்டைக் குழியில் விழுங்கியவள், மெல்ல அவ்வுருவத்தின் தோளில் கரம் பதிக்க , முகத்தில் டார்ச் விளக்கின் ஒலியுடன் திரும்பிய வாணியைக் கண்டு பயத்தில் கீழே விழுந்த அமரி,
“பேய்… பேய்… அய்யோ அம்மா, அப்பா பேய் பேய்” என்று கத்த டார்ச் விளக்கினை கீழே போட்டுவிட்டு கத்தும் அமரியின் வாயினை பொத்தினாள் வாணி.

“ஹேய், யாருடா அது… விடுடா,”
அமரி உச்ச டெசிபலில் கத்தியபடி திமிறியவாறே வாணியின் கையினை கடித்து வைக்க,

வலித்த போதும் அதனை அசட்டை செய்த வாணி மேலும் அமரியின் வாயினை இரு கைகள் கொண்டு இறுக்கி மூடியபடி “அமரி நாந்தான், நாந்தான் வாணி… கத்தாதடி.”

“அண்ணியா! நான் நம்ப மாட்டேன்.”

“நம்புடி.”

“எங்க காலிருக்கா?” எனக் கேட்டுக்கொண்டே வாணியின் காலினை தொட்டு பார்த்தவள், “மூஞ்சிய காட்டுங்க” என்றாள்.

அப்போது தான் முகத்தை மூடியிருப்பதை உணர்ந்த வாணி தலையை சுற்றி போட்டிருந்த துணியை விலக்க அமரிக்கு பயம் நீங்கி மூச்சு சீரானது.

“கொஞ்ச நேரத்துல இப்படி பயம் காட்டிட்டீங்களே அண்ணி, ஆமா இங்க இந்நேரத்துல என்ன பண்ணுறீங்க?”
அமரியை வாணியிடம் காரணம் கேட்ட நொடி,

“ரெண்டு பேரும் அர்த்த ராத்திரியில என்னடி பண்றீங்க?”
தங்களுக்கு அருகில் கேட்ட பஞ்சு பாட்டியின் குரலில் அவர் பக்கம் திரும்பிய அமரி, “அது வந்து பாட்டி அண்ணி ஏதோ…”

அமரியின் கையினை அழுத்தி பிடித்து சொல்ல வேண்டாமென்று சைகை செய்தாள் வாணி.

“என்னடி வாய்குள்ளவே முழுங்குற? சரியா சொல்லுடி.”

“அது வந்து பாட்டி செவப்பி கத்தற மாதிரி கேட்டுச்சேன்னு கீழ வந்தேன்” என்று அமரி கூறி சமாளிக்க பஞ்சு வாணியை கேள்வியாய் நோக்கினார்.

‘இந்த கெழவிக்கிட்ட மாட்டுனா அம்புட்டுதான், என்ன சொல்லி தப்பிக்கிறது தெரியலயே’ வாணி மனதோடு புலம்ப…

“எனக்கு இந்நேரத்துல கீழே வர பயந்து வந்துச்சுன்னு அண்ணியை கூட்டியாந்தேன்” என்று வாணிக்கும் சேர்த்து அமரி பதில் சொல்ல,
“உங்க ரெண்டு பேத்தோட முழியுமே சரியில்லையே” எனும் விதமாக அவர்களை நோட்டமிட்ட பஞ்சு பாட்டி “நீ சொன்னதை நம்பிட்டேத்தா, போய் படுங்க” என்றதோடு மட்டுமில்லாது அவர்கள் இருவரும் அறைக்குள் நுழையும் வரை இருந்து பார்த்துவிட்டே நகர்ந்தார்.

“போச்சு போச்சு இந்த அமரியால எல்லாம் போச்சு.”

“என்ன அண்ணி என்னைய திட்டுறீங்களா?” அமரியின் குரல் பின்னால் கேட்க திரும்பிய வாணி,

“நீ உன் அறைக்கு போகலையா?” என்று கேட்டதோடு, “ஆமாம் உன்னதான் திட்டிட்டு இருக்கேன்” என்று வெடுக்கென பதில் கூறினாள்.

“சரி எதுக்கு இந்நேரத்துல வெளிய போக முயற்சி செஞ்சீங்க?”
அமரி அவ்வாறு கேட்ட பிறகு தான் அவளுக்கு சசியின் ஞாபகம் வந்தது. ‘அச்சச்சோ’ என மனதில் அலரியவள் சசிக்கு அழைத்தாள்.

நீண்ட அழைப்பிற்கு பிறகு நன்கு உறக்கத்திலிருந்த சசி அலைபேசியை ஏற்று காதில் வைக்க,

“சாரி மச்சி, என்னால வர முடியல… நீ வீட்டுக்கு போயிடு” என்ற வருத்தம் தோய்ந்த குரல் செவியில் நுழைய சசியின் உறக்கம் முற்றும் நீங்கி எழுந்து அமர்ந்தான்.

‘நல்லவேளை இவ(ள்) வரவில்லையா! என்னைய வர சொல்லியது நினைவில்லாமல் உறங்கிட்டேன்… இவ வந்து நான் போகாமல் இருந்திருந்தா அவ்வளவுதான், என்னைய காப்பாத்திட்ட ஆண்டவா’ மனதில் ஆண்டவனுக்கு அவசரமாக நன்றியினைத் தெரிவித்தவன்…

“ஏன் வரல?” கோபமாகக் குரலினை வெளிப்படுத்தியவன்,

“நீ வருவேன்னு எம்புட்டு நேரமா இங்க இந்த குளிருல நின்னுட்டு இருக்கேன் தெரியுமா?” எனக் கேட்டவன் வேண்டுமென்றே குளிரில் பற்கள் நடுங்குவதைப்போல் தந்தியடித்து பேச வாணிக்கு குற்றவுணர்வாகிப் போனது.

“சாரி டா, அங்க வரதான் கிளம்பினே… ஆனால் வர முடியல, மன்னிச்சிக்கோடா” மீண்டும் மீண்டும் வாணி பாவமாக மன்னிப்பினை வேண்ட சசியால் சிரிப்பினை அடக்க முடியவில்லை.
‘எங்கே தன்னுடைய சிரிப்பு தனது நடிப்பினை காட்டிக் கொடுத்துவிடுமோ’ என்று பயந்தவன் மன்னித்துவிட்டதாகக் கூறி அலைபேசியை அணைத்தான்.

வாணிக்கு தான் என்னவோ போலிருந்தது.

வாணியும் சசியும் நண்பர்கள் போன்று பழகியவர்கள். வாணிக்கு சக்தியை விடவே சசி தான் நெருக்கம். அதனால் தான் எந்தவோரு உதவியையும் சசியிடமே கேட்டு பழகியிருந்தவள் இன்றும் சசியிடமே கேட்க, கடைசி நேரத்தில் அமரி வந்ததால் அவளால் செல்ல முடியாது போனது.

‘அமரியால் தான் சசி குளிரில் இந்த ராத்திரி நேரத்தில் தனியாக காத்திருக்க வேண்டியதா போச்சுது, அதுமட்டுமில்லாமல் அவளால் தான் தனது மொத்த திட்டமும் பாழானது…’ என்று எண்ணியவள் “எல்லாம் உன்னால் தான் அமரி” என குற்றம் சாட்டினாள்.

அப்போது தான் வாணிக்கு அமரி அங்கே நின்றிருப்பதே நினைவுக்கு வந்தது.

“யாரு அண்ணி போனுல?”
என்ன சொல்வதென்று யோசித்த வாணி உண்மையினை செல்வதே சரியென நினைத்துக் கூறினாள்.
“சசி அண்ணா, காட்டுக்குள்ள போகணும்னு வர சொல்லியிருந்தேன்… இப்போதான் போவ போறதில்லையே அதான் வர வேண்டான்னு சொன்னேன்” என்றவள் நின்றிருக்கும் அமரிக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

காட்டுக்கு என்றதும் அமரி அதிர்ச்சியாகி, “அங்க எதுக்கு?” என்று வாணியின் அருகில் வந்தமர்ந்து கேட்க, வாணி சொல்லியதை கேட்ட அமரிக்கு தலை சுற்றியது. வாணி போகாததும் நல்லதுக்குதான் என்று எண்ணிய அமரி, “இனி காட்டுக்குள்ள போகணுங்கிறது மறந்துடுங்க… இல்லனா அண்ணன்கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கும்” எனக் கூறியவள் “போக மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றவளாய் வாணியின் அறையிலிருந்து வெளியேறினாள்.

வாணிக்கு அமரி தன்னை எச்சரித்ததாகவே தோன்றியது. இதனால் அமரியின் மீது சிறு சுணக்கும் ஏற்பட்டது.

_____________________________

இன்று அதிகாலையில் தான் பெண் புலி ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. அதனை அறிந்த கதிர் தகுந்த பாதுகாப்புடன், தனது பணியாளர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு ‘L’ வடிவ தடுப்பு வேலிக்குள் சென்றான்.

புலிகளின் கர்பகாலம் பதினாறு வாரங்கள். மூன்று முதல் நான்கு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றும். வெட்டவெளி அல்லாது அடர்ந்த புதர்கள் அல்லது குகை போன்ற மறைவான இடங்களில் தான் புலிகள் குட்டி போடும்.
புலியிருக்கும் குகைக்கு அருகில் சென்றதும் பதுங்கிய குழுவினர் மயக்க மருந்தினை செலுத்தி புலியை உறங்கச் செய்து, மூன்று குட்டிகளையும் மருத்துவ பரிசோதனை செய்து அவற்றின் நலனை உறுதி செய்தனர்.
புலிக்கு மயக்கம் தெளிய சில நிமிடங்கள் இருக்கும் சமயம் அங்கிருந்து புறப்பட்டனர். திரும்பி வருகையில் ஓரிடத்தில் பல காலடித் தடங்கள் தென்பட்டன. உடன் வந்தவர்களை அலுவலகம் செல்லுமாறு கூறியவன், காலடித் தடங்களை பற்றாகக் கொண்டு முன்னோக்கிச் சென்றான்.

இரவு மழை பெய்திருந்ததால், ஈரடியில் கால் தடங்கள் நன்றாகவேத் தெரிந்தன. கதிர் சென்று கொண்டிருக்க வானம் கருக்கத் துவங்கியது. குளிர்ந்த காற்று வீச, மேகங்கள் தூறத் துவங்கின. அடர்ந்த காடு என்பதால் பகலிலுமே சூரியனின் கதிர்கள் குறைவாகத் தான் விழும். இப்போது கரு மேகங்கள் சூழ்ந்ததால் மேலும் வெளிச்சம் குறைந்து காணப்பட்டது.

தூறல் மழையாக பொழியத் துவங்க, கதிர் முதல் முறையாக இயற்கையின் அற்புதமான படைப்பான மழையை நிந்தித்தான். இருப்பினும் பின்வாங்கிவிடக் கூடாது என்கிற உறுதியுடன் மேலும் நடந்தான். ஓரிடத்தில் இரண்டு வழித்தடங்கள் தென்பட்டன. மழையால் கால்தடங்களும் மறைந்திருக்க அதற்கு மேல் எப்படி முன்னேறுவதென்று தெரியாமல் தடுமாறி நின்றான்.

கதிருக்கு இடது புறமாக இருந்த பாதையில் ஒரு மரத்தின் கிளை வெட்டப்பட்டதற்கான அடையாளமாக நீர் வடிந்து கொண்டிருந்தது. அக்கிளை சிறிது நேரத்திற்கு முன்பு தான் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை அதிலிருந்து வடியும் நீரினைக் கொண்டு யூகித்தவன் அப்பாதையில் செல்ல அடி வைக்க அவனின் அலைபேசி ஒலித்தது.
அழைத்தது கதிரின் மேலதிகாரி.

“பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் எங்க சுத்திட்டு இருக்கீங்க கதிர், இன்னும் பத்து நிமிடங்களில் நீங்க அலுவலகத்தில் இருக்கணும்” எனக்கூற, கதிர் அதற்கு மேல் செல்லாது அலுவலகம் திரும்பினான்.

அவனுக்காகவே காத்திருந்தவர், கதிர் வந்ததும் அவனிடம் காக்கி உறை ஒன்றினை நீட்டி… “நீங்க கேட்ட மாற்றல் கிடைத்து விட்டது கதிர்” என்றவர் “புது இடத்திலாவது ஒழுங்கா உங்களுக்கு இட்ட பணியை செய்யுங்கள்” என அழுத்தமாகக் கூறினார்.

“எனக்கு இந்த மாற்றல் வேண்டாம் சார்” என்றவன் அவர் கொடுத்த உறையை அவர் முன்பே கிழித்தெறிந்தான்.

கதிர் தன்னை அவமானப் படுத்தியதாக கருதிய மேலதிகாரி ஏதோ பேச முற்படுகையில் கை நீட்டி அவரைத் தடுத்தவன்,

“நான் கேட்டபோதெல்லாம் கொடுக்காத மாற்றலை இப்போது ஏன் கொடுக்குறீங்க எனக்குத் தெரியும், காட்டுக்குள்ள சட்டத்திற்கு புறம்பா ஏதோ நடக்குது… அதுக்கு நீங்களும் உடைந்தை, அது என்னன்னு கண்டு பிடிக்கும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்.” கம்பீரமாக எவ்வித தடுமாற்றமுமின்றிக் கூறியவன் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“உங்க இடத்திற்கு வேறு ஆள் போட்டாச்சு கதிர், இன்னும் இரண்டு நாளில் அவர் இங்கு வந்து விடுவார்… அதற்குள் நீங்க இங்கு அனைத்து கோப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, உங்களுக்கு பணி நியமனமான இடத்திற்கு சென்று கையெழுத்திட்டு இருக்க வேண்டும்” என்றவர் “கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் அங்கு செல்லவில்லை என்றால் உங்களை பணியிலிருந்து முற்றிலும் நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது.” சற்று மிதப்பாகவே கூறினார்.

என்ன தான் அவர் அவ்வாறு கூறிச்சென்றிருந்தாலும் கதிர் இசைந்து கொடுப்பதாக இல்லை.
இரவு வீட்டிற்கு சென்றவன் வெற்றியிடம் கூட இதைப்பற்றி பகிராமல் உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை வீட்டில் ஒலித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கண் விழித்தவன் மணியினை பார்க்க அது ஏழு எனக் காட்டியது.

‘இவ்ளோ காலையில யாரா இருக்கும்’ என்கிற யோசனையோடு கதிர் கதவினை திறக்க புன்னகை முகத்துடன் அவனின் எதிரில் நின்றிருந்தான் வெற்றி.

_______________________

“ஜானகி.”

மனைவியை உரக்க அழைத்த சேது அனைவருக்கும் காலை உணவினை எடுத்து வைக்கக் கூறினார்.

வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உணவு கூடத்தில் கூட, அனைவரின் முன்பும் தலை வாழை இலை போடப்பட்டு அவரவர்களுக்கு ஏற்றவாறு பதார்த்தங்களை ஜானகி பரிமாறினார்.

என்ன தான் நாகரிக வளர்ச்சியின் மாற்றமாக விதவிதமான தட்டுக்களில் சாப்பிட்டாலும் வாழை இலையில் சாப்பிடுவதை போல் வராது.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். இதனின் மகத்துவத்தை நன்கு அறிந்ததாலே தன் குடும்பத்தாரை வாழை இலையில் உண்ணும் பழக்கத்திற்கு பழக்கினார் வெங்கடாசலம். நாளுக்கு ஒரு வேளையாவது இலையில் சாப்பிட வேண்டுமென்பது அவ்வீட்டில் அவரது எழுதப்படாத சட்டம்.

“காலையிலேயே இவ்வளவு சுருக்கா சாப்பிட்டுட்டு எங்க எந்த வண்டியை பிடிக்க கெளம்புறீங்க?”
செண்பகம் பாட்டி தனது மூத்த மகன் நல்லுவிடம் வினவினார்.

“திருவிழா ரெண்டு பிரிவும் சேர்ந்து நடத்தனும் முடிவாகிப்போச்சு, அதை மட்டும் செஞ்சா திருவிழா நடந்துடுங்களா… அதான் நாள் குறிக்க கோவிலுக்கு போறோம்” என தனது அன்னைக்கு விளக்கமாக பதில் கூறியவர் சேதுவை பார்வையால் ஏதோ வினவினார்.

அண்ணனின் பார்வையின் பொருள் பாசமிகு தம்பிக்கு புரியவில்லை.

“என்னண்ணா எனக்கொன்னும் விளங்கல?” என்று கேட்க, நல்லு வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டார்.

“வெற்றி அண்ணா வராங்களா இல்லையான்னு பெரியப்பாரு கேட்குறாங்கப்பா” என்ற சசி நல்லு பார்த்த பார்வையில் சக்தியின் பின்னால் ஒளிந்தான்.

“தெரியலங்க, நான் வேணுன்னா வர சொல்லட்டுங்களா?” சேது அவரின் நினைப்பு தெரியாது வெள்ளந்தியாக வினவ,

” டேய் சசி, அப்பாரு அவங்க அண்ணன் கிட்ட திட்டு வாங்க போறாருடா” என்று சக்தி சொல்லி முடிக்கும் முன்பு நல்லு சேதுவை திட்டியிருந்தார்.

“நம்ம குடும்ப மானத்தை வாங்கியவன் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போயிட்டானோ, இன்னைக்கு அந்த பயலுவ கூட போயி நாம ஒண்ணா நிக்கப்போறோம்… அதுக்கு அவந்தான் காரணம், சாமர்த்தியமா ஆத்தா பேரை சொல்லி அவன் நினைச்சத சாதிச்சிட்டான்… அவன் வரான்னா நான் அங்க வரல.” கோபமாக பேசியவர் மீண்டும் சேதுவை கேள்வி தாங்கிய பார்வையுடன் பார்க்க,
சேது பாவமாக சசியை நோக்கினார்.

“என்னடா இது? அப்பாரு பெரியவர்கிட்ட என்ன கோத்து விடுது, இன்னைக்கு எனக்கு அவருக்கிட்ட அடி வாங்கி கொடுத்திடுவாரோ?” என்று சக்தியின் காதினை கடித்த சசி…

“அண்ணா வராங்களா இல்லையான்னு சக்திக்குதான் தெரியும் பெரியப்பா” எனக்கூறி அவன் தப்பித்தான்.

“என்னடா ஆளாளுக்கு ஆள் மாத்தி ஆள் கை காட்டுறீங்க?” என்று நல்லு கத்த,

“வெற்றி வர மாட்டாரு பெரியப்பா.” வழக்கம்போல் அமைதியாக பதிலளித்த சக்தி “மணி ஆச்சுங்க, நாம கெளம்பலாங்க” என்றபடி முன் நடந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
46
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வாணி ஏன் யாருக்கும் தெரியாம காட்டுக்கு போக பார்க்குறா??

      கதிர்க்கு பதில் வெற்றி அங்க ஆபிஸரா வரப்போறானா?

      நல்லுக்கு ஏன் வெட்டி வீராப்பு??