Loading

காவ(த)லன் 6 :

அருவிக்கரையில் மக்கள் சூழ்ந்திருந்தனர்.

மலை முகடுகள் சூழ்ந்த கிராமம். ஊரின் எல்லைப்பகுதியில் அரணாக அமைந்துள்ள மலையில் பல்லாயிரம் அடி உயரத்தில் கொட்டும் அருவி. பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் இதன் அழகினை கண்டு ரசிக்கலாம். அதன் கிளை அருவியாய் சுழித்து ஓடும் சுனை அருவியின் கரையில் அமைந்திருக்கிறது செல்லியம்மன் கோவில்.

அக்கிராம மக்கள் அனைவருக்கும் குல தெய்வம் அவள் தான். அந்த அம்மனிடம் உத்தரவு வாங்காது எந்தவொரு காரியத்தையும் செய்திடமாட்டார்கள்.

கோவிலை ஒட்டி அமைந்திருக்கும்  அருவி நீர் தெறித்து சிதறும் பெரும் பாறையில் தான் பஞ்சாயத்து நடைபெறும்.

அவ்வூர் மக்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். வீட்டிலுள்ள அனைவரும் பங்கு பெறலாம் அல்லது வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் வந்திருக்க வேண்டும்.

“எல்லாரும் வந்தாச்சா, ஆரம்பிக்கலாமா?”
கூட்டத்தில் பெரிய தலை ஒன்று அனைவரிடமும் கேட்டது.

நாட்டாமை இரு பிரிவினர்களின் பெரிய தலைகட்டானா வெங்கடாசலம் மற்றும் தங்கவேலுவை பார்க்க, அவர்கள் இருவரும் சம்மதம் வழங்கும் விதமாக கை காட்டினர்.

சேது நல்லுவிடம் “இன்னும் வெற்றி வரலயே” என்க… அருகிலிருந்த சசி “அண்ணா சரியான நேரத்திற்கு வந்திடுவார்” என்று சொல்ல, நல்லு பார்த்த பார்வையில் அவன் தனது வாயினை மூடிக்கொண்டான்.

“வீட்டை விட்டு கிளம்பும் போது நீ அவனை பார்த்த பார்வையின் பொருள் இதுதானா?” நல்லு தன் தம்பியிடம் வினவினார்.

“அது வந்துங்க… வெற்றியிருந்தா நம்ம பயலுவ அதிகம் சலம்ப மாட்டானுங்க அதான்” என்று சேது இழுக்க, நல்லு “ம்” என ஒற்றையாய் தலையாட்டினார்.

சசியின் அருகில் நின்றிருந்த சக்தி அங்கு நடப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையெனும் விதமாக நின்றிருந்தான். அவன் மனம் முழுக்க நேற்றிரவு மதியின் அப்பாவிடம் சொல்ல சொல்லி நல்லு கூறியிருந்ததே ஒலித்துக் கொண்டிருந்தது.

பஞ்சாயத்தில் திடீரென ஒருவர் முன்வந்து நின்று பேச ஆரம்பிக்க சக்தியின் கவனம் அவரிடம் பதிந்தது.

“ஏழு வருசத்துக்கு முன்னுக்க நடந்திருக்க வேண்டிய நம்ம ஆத்தா திருவிழா, அடிச்ச புயல் மழையால நடைபெறாமா போச்சு… அப்போ அந்த முறையை வெங்கடாசலம் ஐயா கூட்டம் செய்திருக்கணும். இப்போ இந்த முறை திருவிழாவை தங்கவேலு ஐயா கூட்டம் நடத்தனும். ஆனால், போன முறை நடத்த முடியாம போச்சுதால இம்முறை நாங்க நடத்திக்கிறோமுன்னு வெங்கடாசலம் ஐயா கூட்டம் பிராது கொடுத்திருக்காங்க, இது தாங்க வழக்கு… எல்லோருக்கும் புரிஞ்சுதாங்க.” மிக நீளமாக வழக்கினை விவரித்தவர் நாட்டாமையின் அருகில் அமர்ந்தார்.

“அவங்க பக்க வழக்கினை அவங்க விரிவா சொல்லிபுட்டாக, நீங்க என்ன சொல்றீக?” நாட்டாமை தங்கவேலு பக்கத்தினரை பார்த்து வினவினார்.

அவர்கள் அமைதியாக இருக்க, “உங்க தரப்பினர்கிட்ட கலந்தாலோசிச்சு வேணுமுன்னா பதில் சொல்லுங்க நாங்களுவ காத்திருக்கோம்” என்றார் நாட்டாமையின் தம்பி ராசு(தங்கராசு… மதியின் தந்தை).

“இதுல ஆலோசிக்க என்னயிருக்கு ராசு, எங்க முறையை நாங்க ஏன் விட்டு கொடுக்கணும்?” தங்கவேலு தன்மையாகவே வினவினார்.

“அதான் விளாவாரியா எல்லாம் சொல்லியாச்சே, அப்புறமும் ஏன்னு கேட்டாக்கா என்னத்த சொல்ல?” நல்லு சற்று வேகமாகவே உரைத்தார்.

“இவ்வளவு வேகமாக பேசுனா என்னப்பா பண்றது?” நாட்டாமை செல்லச்சாமி வினவ,

“எங்க உரிமையை நாங்க விட்டுக்கொடுக்க முடியாதுங்க” என்ற சத்தம் தங்கவேலு கூட்டத்தினரிடமிருந்து வந்தது.

அதற்கு பதில் பேசினால் விவாதமாக மாறுமென்று வெங்கடாசலம் தன் கூட்டத்தினரிடையே அமைதி காக்குமாறு ஜாடை காட்ட,

“அவங்க நடத்துற திருவிழா பிடிக்காமதாங்க ஆத்தாவே போன முறை புயலா வந்து கோபத்த காட்டிட்டா(ள்)” என்று தங்கவேலு தரப்பில் ஒருவன் சொல்லி வாய் மூடிடும் முன்,

“அதை இப்போ ஆத்தா உன் கனவுல வந்து சொன்னாளா?”

எடக்காக ஒரு குரல் ஒலிக்க, அனைவரும் யாரென்று சத்தம் வந்த திசை நோக்கி திரும்ப…

உட்கார்ந்திருந்த வாக்கிலே இரும்பு குதிரையை நிறுத்தி இறங்கி தனது வேட்டியை மடித்து கட்டி வலது கையில் அணிந்திருந்த காப்பினை ஒரு சுற்று சுற்றி, மீசையை முறுக்கியவாறு தோரணையாக நடந்து வந்தான் வெற்றி.

முழுதாய் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வெற்றியை கண்ட வெங்கடாசலம் ஆரத்தழுவ துடித்த தனது கைகளை தனது மூத்த மகனிற்கு பயந்து அடக்கிக் கொண்டார். சேது வெற்றியை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்து தனது மகனின் நலனைத் தெரிந்துகொண்டார்.

“புள்ள இளைச்சா மாதிரி தெரியுதே” சக்தியிடம் சேது குறைபட,

“எப்புடி வாலிப்பமா கட்டுமஸ்தா இருக்காங்க, உடம்பை இறுக்கி பிடித்திருக்கும் அந்த வெள்ளை சட்டை எவ்ளோ கச்சிதமாக இருக்கு அவங்களுக்கு… இந்தப்பா வாய் கூசாமா இளைச்சிட்டாறுன்னு சொல்லுறாங்க” என்று சசி சக்தியின் காதை கடித்தான்.

“நியாயமா இப்போ நீ பேசுன வசனத்தை வெற்றிக்கு ஒரு ஆளிருந்து சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”
சக்தி கூறிய அதே வேளை சாப்பாட்டை வாயில் திணித்துக் கொண்டிருந்த வெற்றியின் எழிலுக்கு புரையேறியது.

“இப்போ நீ என்னடா சொல்லவற, நான் அண்ணாவை சைட் அடிக்குறேங்கிறியா?”
அப்பாவியாக வினவிய சசி சக்தி பார்த்த பார்வையில் அமைதியாகினான். வாய் மீது விரல் மட்டும் தான் வைக்கவில்லை.

“வாப்பா வெற்றி, நல்லாயிருக்கியா?” நாட்டாமை வெற்றியை வரவேற்று நலம் விசாரித்தார்.

“குசலமெல்லாம் அப்புறம் விசாரிச்சுக்கோங்க, எல்லாரும் வேலைய வுட்டுட்டு வந்திருக்கோமில்லையா? வந்த வேலையை பார்த்தாக்க விடயம் சுருக்குன்னு முடியும்.”
கூட்டத்தில் ஒருவன் சலம்ப,

“நான் நல்லாயிருக்கேன் மாமா, நீங்க எப்பிடி இருக்கீங்க?” என வேண்டுமென்றே கேட்டு, மேற்கொண்டு சில நல விசாரிப்புகளை முடித்தே செல்லச்சாமியை வெற்றி விட்டான்.

“இப்போ நீ கேட்டதால தாண்டா அவன் வேணுன்னே கதை அளக்குறான்” என்று மற்றொரு நபர் கேள்வி கேட்டவனைத் திட்டினார்.

அவரின் பேச்சு நன்கு காதில் விழ வெற்றி தனக்குள் சிரித்துக் கொண்டவனாய் சக்தியின் அருகில் வந்து நின்று கொண்டான்.

மீண்டும் எதில் தொடங்குவதென்று அனைவரும் அமைதி காக்கா, “கடைசியா என்னதான் முடிவு செஞ்சிருக்கீங்க?” என்று கம்பீரமாக வினவினான் வெற்றி.

“நீ வந்து தோரணையா கேட்டாலும் எங்க முடிவுல மாத்தமில்ல.” விநாயகம் கண் காட்ட , அவங்க ஆளில் ஒருத்தன் உரக்கக் கூறினான்.

“ஏய் யாருக்கிட்ட குரல் உசத்தி பேசுற?”
வெற்றி பக்க ஆள் கை நீட்டி கேட்க,

“உங்க நொய்யாவைத்தான்டா” என எதிர் பக்கமிருந்து பதில் வந்தது.

மற்றொருவன் மீண்டும் எகிறி வர அவனை தன் பார்வையாலேயே அடக்கிய வெற்றி… “நானொரு யோசனை சொல்லட்டும்மா மாமா?” என்று செல்லச்சாமியிடம் கேட்டான்.

“ஊருக்கு பொதுவான விடயம், யாரு நல்லது சொன்னாலும் சமம்தான்” எனக்கூறி அவர் வெற்றிக்கு ஒப்புதல் வழங்கினார்.

“மொதல்ல திருவிழா நடத்திட ஆத்தா கிட்ட உத்தரவு வாங்கிட்டீங்களா?”
வெற்றியின் கேள்வியில் ஆளாளுக்கு தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.

சில நொடிகளுக்குப் பின்னர்,

“இல்லையே தம்பி” என்றார் ராசு.

“அப்போ அதை முதலில் செய்யுங்க.”

“வெற்றி சொன்ன மாதிரி முதலில் ஆத்தாகிட்ட உத்தரவு வாங்குவோம், நாளைக்கு காலங்காத்தாலே வெள்ளன எல்லாரும் கோவிலுக்கு வந்துடுங்க…” என நாட்டாமை பேசிக்கொண்டிருக்க,

‘நாளைக்கு திரும்பவும் மொதல்ல இருந்தில்ல ஆரம்பிப்பானுங்க, இப்பவே கண்ண கட்டுதே’ என்ற சசியின் மைண்ட் வாய்ஸை சரியாக கேட்ச் செய்த வெற்றி சக்தியை பார்க்க, அவனோ சசியை “மூடிட்டு நில்லுடா” என அதட்டினான்.

“யாரு நடத்துறதுன்னு முடிவாகட்டும். அப்புறம் உத்தரவு வாங்கிக்கலாம்.” தங்கவேலு சத்தமாகக் கூறினார்.

‘இதைத்தான் நான் எதிர் பார்த்தேன், வாடி வா இப்போ நீயே வழிக்கு வந்தியா… நீங்க இதை சொல்லணுன்னு தானே நான் அதை சொன்னேன்’ என மனதோடு சொல்லிக்கொண்ட வெற்றி…

“அவங்கள மாதிரி நாங்க விதண்டாவாதம் செய்ய மாட்டோம், அவங்க வழிக்கே நாங்க வறோம்” என்ற வெற்றி தங்கவேலுவை பார்த்து விஷமப் புன்னகையுடன் கண்ணடித்தான்.

‘பார்க்க அய்யனார் கணக்கா இருந்துகிட்டு செய்யுற செயலை பாரு’ மனதில் புலம்பிய பெரியவர் முகத்தை வெடுக்கென்று வேறுபுறம் திருப்பினார்.

அதில் வெற்றி சத்தமின்றி சிரிக்க, அவனை கூட்டத்தில் ஒரு ஜோடி கண்கள் இமைக்கவும் மறந்து ரசித்தன.

மனதில் தைக்கும் குறுகுறுப்பை நொடிப்பொழுதில் உணர்ந்தவன் தன் தலையை கோதியவாறு கூட்டத்தை சுற்றி தனது பார்வையை சுழலவிட்டான். அவன் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.

“சரி ரெண்டு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் நிலையில் உறுதியா இருக்கிறதால, அந்த ஆத்தாகிட்டவே காகிதம் எழுதிப்போட்டு கேட்டுடலாம்” என்று நாட்டாமை கூற,

“அதெல்லாம் முடியாது, நாங்க ஒத்துகிடமாட்டோம்” என்று விநாயகத்தின் அருகில் நின்றிருந்த அவரது பக்க ஆள் வேகமாகக் கூறினான்.

“ஏன் எங்களுக்கு புயலா வந்த ஆத்தா உங்களுக்கு சுனாமியா வந்திடுமோன்னு பயமோ?” என்று வெற்றி நக்கலாகக் கேட்டான்.

“என்னது அருவியில சுனாமியா?” என்று சசி அதிர்ந்தேவிட்டேன்.

“ஷாக்க குறைடா, வெற்றி அவங்கள கலாய்க்கிறார்டா” என சக்தி கூறிய பின்னரே சசி மூச்சு விட்டான்.

“இவனுக்கு லொள்ள பார்த்தியா விநாயகம், போலீசு மாதிரியா இருக்கான் ரவுடி மாதிரி தெரியுறான்” என்று தன் மகனிடம் முகம் சுலித்தார் தங்கவேலு.

அந்நேரம் அவர் பக்க இளந்தாரி ஒருவனின் அலைபேசி “ஹேய் நானும் ரவுடி தான்” என்று ஒலிக்க தங்கவேலுவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலாகியது.

இம்முறை வெற்றி சத்தமாகவே சிரித்தான். அதில் கடுப்பாகிய பெரியவர் தன் பக்க ஆளை முறையோ முறையென்று முறைத்தார்.

“ஏய் எப்பா உங்க தகறாரெல்லாம் பின்னாடி வச்சிக்கோங்க, இப்போ யாராவது துண்டு காகிதத்தில் ரெண்டு தலைக்கட்டு பேரையும் எழுதி கொடுங்க” என்ற ராசு அனைவரையும் நடப்புக்குத் திருப்பினார்.

“இந்த கணினி யுகத்திலும் நீங்களெல்லாம் இப்படித்தான் முடிவு எடுப்பீங்கன்னு தெரியும், அதான் ஏற்கனவே எழுதியாந்துட்டேன்” எனக்கூறியபடி வெற்றி தனது சட்டை பையிலிருந்து சுருட்டப்பட்ட மூன்று காகிதத் துண்டுகளை நீட்டினான்.

“ரெண்டு துண்டுலையும் அவங்க பேரையே எழுதியாந்திருக்க போறாங்க, அதனை வாங்கி பிரிச்சுப் பாருங்க” என்ற எதிரணி குரலிற்கு சற்றும் அசராது வெற்றி நின்றிருக்க,

“என்ன வெற்றி மூணு காகிதம்?” என்றவாறு அதனை வாங்கி பிரித்துப் பார்த்த செல்லச்சாமி வெற்றியை அதிர்வுடன் பார்த்தார்.

வெற்றி யாருக்கும் புலப்படாதவாறு கண்மூடி திறக்க, “எல்லாம் ரெண்டு தரப்பு பேரு தாண்டா இருக்கு, அப்புறம் மூணாவதா ரெண்டு பேரும் சேர்ந்து செய்யணுமுன்னு பெரியவர்கள் இருவர் பெயரையும் ஒட்டுக்கா எழுதி வெற்றித் தம்பி ஒரு காகிதம் சேர்த்திருக்கு” என நாட்டாமை சொல்ல… இரு தரப்பினரும் அதெல்லாம் முடியாதென்று வாக்குவாதத்தில் இறங்கினர். ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச வெற்றி அனைவருக்கும் நடுவில் வந்து நின்று,

“கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என சிங்கமென கர்ஜித்தான். அவனின் ஆளுமையான குரலுக்கு மொத்த கூட்டமும் பணிந்தது.

“பதினாலு வருசத்துக்கு முன்னுக்க நீங்க செய்ய வேண்டிய முறைதான். ஆனால் தேரை கோவிலுக்குள்ளே கொண்டு வராமல் ரெண்டு தரப்பும் அடிச்சிக்கிட்டு ஊர் நடுவிலே நிக்க வச்சிட்டீங்க, அதையும் ஆத்தா தான் கோவிலுக்கு போக விருப்பமில்லாம நிறுதிப்புட்டான்னு சொல்லலாமில்லையா?” என தங்கவேலு தரப்பினரை பார்த்துக் கேட்டவன் மேலும் தொடர்ந்தான்.

“அடுத்த ஏழு வருசத்துக்கு அப்புறம் எங்க முறை… அதையும் ஆத்தாவே புயலாய் அடிச்சு நடத்த விடாமல் பண்ணிட்டான்னே வச்சிப்போம்” என்றவன் நடு நாயகமாக அமர்ந்திருந்த பெரிய தலைகள் அனைவரையும் அழுத்தமாக பார்த்துக்கொண்டே, “ரெண்டு தடவையும் திருவிழா நடத்த விடாமல் செய்யுறா(ள்)ன்னா என்ன அர்த்தம் அவளே ரெண்டு பக்கமும் ஒண்ணு சேர்ந்து ஒரே மக்களா திருவிழா நடத்தணுமுன்னு ஆசைப்படறா(ள்)ன்னு தானே அர்த்தம் அதான் அப்படியும் ஒரு காகிதத்தில் எழுதினேன்” என நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“என்னடா இது, ஆத்தா பேரை சொல்லி அவனுங்களை ஓரங்கட்டலான்னு நாம சொன்னது நமக்கே வினையா போச்சே!” என தங்கவேலு தரப்பினர் வெற்றியின் கூற்றிற்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்ள, தனது பக்கத்தில் முடியாதென்று துள்ளிய ஒரு சிலரை பார்வையாலேயே அடக்கி ஒப்புக்கொள்ள வைத்தான் வெற்றி.

“இப்போ ஒப்புகிட்டு பின்னால பிரச்சினை பண்ணக்கூடாது, அப்புறம் தெய்வ குத்தமாகிப்போவும். எல்லாரும் மனமார சம்மதிக்கனும்… தெய்வ காரியம்” என்ற நாட்டாமை கோவிலை நோக்கி நகர… முக்கிய நபர்கள் மட்டும் அவருடன் கோவிலுக்குள் நுழைந்தனர்.

அம்மனின் பாதத்தில் காகிதத் துண்டுகளை வைத்தெடுத்த பூசாரி தானே ஒரு துண்டினைப் பிரித்துப் பார்க்க அதில் தங்கவேலு – வெங்கடாசலம் இருவரின் பெயரும் ஒன்றாக எழுதியிருந்தது.

“அப்புறம் என்னங்கய்யா, அதான் ஆத்தா சேர்ந்துதான் திருவிழா நடத்தனுன்னு சொல்லிபுட்டாளே! எல்லாரும் கூட்டத்த களைங்க” என உற்சாகமாக செல்லச்சாமி குரல் கொடுத்தார்.

“என்னதான் ஒட்டுக்கா சேர்ந்து செய்யணும் அப்படின்னு உத்தரவு வந்தாலும் தம்பி, திருவிழாவுல அந்தப்பக்க ஆளுங்க வேணுன்னே தகராறு கெளப்புவானுங்க… போலீசுங்குற முறையில நீங்கதான் பாதுகாப்பு தரணும்” என்று வெற்றியிடம் சீண்டுவதைப்போல் முறையிட்டார் தங்கவேலு.

அதற்கு வெற்றி தன் புன்னகையையே பதிலாக அளித்தான்.

கூட்டம் மெல்ல கலைந்தது. வெற்றியின் அருகில் வந்த செல்லச்சாமி “என்னய்யா இப்படி மூணு காகிதத்திலும் ரெண்டு பேரு பேரையும் ஒட்டுக்கா இருக்க மாதிரியே எழுதிப்புட்ட?” என்று மெல்ல வினவியவர் பூசாரியிடமிருந்து திரும்ப பெற்றுக்கொண்ட மூன்று காகிதத் துண்டுகளையும் வெற்றியிடமே கொடுத்தார்.

“யாராவது பார்த்தாக்கா வம்பாகிப்போவும் வெற்றி, அதான் உங்கிட்டவே கொடுக்குறேன்” என்றவர் சென்றுவிட சேது தன் மகனை நெருங்கினார்.

அவரைத் தொடர்ந்து வந்த சக்தியும், சசியும் தந்தையைப்போல் மௌனமாக நிற்காமல் வெற்றியை ஆரத்தழுவி விடுவித்தார்கள். சேது அவர்களைப்போல் தன்னால் செய்ய முடியவில்லையே என்று வருந்தி தனது சகோதரரை ஏக்கத்துடன் பார்த்தார்.

“என் முன்னாடி இப்படி படம் காட்டாதடா, உன் மவன கட்டிபிடிக்கணுன்னா பிடிச்சிக்கோ, அதை வுட்டுட்டு என்னவோ எனக்கு பயந்த மாதிரி ஏன்டா நடிக்கிற” என்று சேதுவை வைய்த நல்லு வெற்றியிடம் திரும்பி

“செல்லச்சாமி அதிர்ந்ததும் தெரியும் நீ அந்த காகிதத்தில் எழுதியிருந்ததும் தெரியும்… ஒண்ணு சேர்க்க பாக்குறீங்களோ? அது மட்டும் நடக்காது” என அழுத்தமாகக் கூறியவர் யாரோ அழைத்தாரென்று நகர்ந்துவிட,

சேது தன் பார்வையாலே மகனின் நலம் விசாரித்து சென்றுவிட்டார்.

என்னதான் தனக்கு முக்கியமானதாக இருந்தாலும் இந்த வயதிலும் சேது தனது அண்ணனின் பேச்சை மீறியதுமில்லை, அவருக்கு பிடிக்காததை செய்ததுமில்லை. அதனாலே அவர் சொல்லியும் வெற்றியிடம் பேசாது சென்றார்.

வெங்கடாசலத்திற்கு வெற்றியின் மீது அதீத அன்பு இருந்தும் அவன் செய்த செயல் அவரை தள்ளியிருக்க வைத்தது. ஆதலால் தனது பேரனை கண்களில் நிரப்பிச் சென்றார்.

“ஆனாலும் இந்த தாத்தாவுக்கு இவ்ளோ வீம்பு இருக்கக் கூடாதுடா சக்தி, காலையில தானே அண்ணனை பார்க்கணும் போலிருக்குன்னு வசனம் பேசுச்சு… இப்போ பாரேன் கிட்டக்கக்கூட வராம போகுது” என்று சசி பொறும…

“நானா தான் தள்ளியிருக்கேன், என்னாலையும் உங்களை விட்டு இருக்க முடியல சீக்கிரம் இங்க வந்திடுவேன்” என்ற வெற்றி இருவரையும் பார்த்து வருகிறேன் என தலையசைத்து வண்டியின் கிக்கரை உதைக்க மீண்டும் மனதிற்குள் குறுகுறுப்பை உணர்ந்தான். சுற்றி பார்க்க யாருமில்லை என்றதும் சென்று விட்டான்.

வெற்றி சிறிது தூரம் சென்றிருப்பான் அவனின் வண்டி சட்டென்று நின்றது. என்னவென்று ஆராய கீழிறங்கியவனின் செவிகளில் இரு பெண்களின் பேச்சுக்கள் விழுந்தன. ஒன்று அவனின் தங்கை வாணியின் குரலாக இருக்க நின்று கவனிக்கத் தொடங்கினான்.

“என்ன அண்ணி உங்க குடும்பத்து ஆளுங்களையெல்லாம் பார்த்தாச்சா?”

“அண்ணி…”

“பார்த்திருந்தாலும் அவங்ககிட்ட பேச முடியலயே.” வாணியின் முகத்தில் வருத்தம் மேலோங்கியிருந்தது.

“விடுங்க அண்ணி… எல்லாம் சரியாகிடும், இப்போ ஒண்ணா தானே திருவிழா வேலையெல்லாம் பார்க்க போறாங்க, அப்படி இப்படி எல்லாரும் ஒண்ணு சேர வாய்ப்பிருக்கு” என்ற அமரியின் கூற்று பளித்தால் நன்றாக இருக்குமென்று வாணியின் மனம் அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தது.

“இந்த தடவைதான் அடிதடி இல்லாமல் ஒரு முடிவெடுத்திருக்காங்க போலிருக்கு.”

“ஆமாம் அதென்னவோ நிசந்தான் அமரி.”

“வூட்டுக்கு போனால் அன்னம் என்ன திட்டப்போகுதோ, சாப்பிட்டுகிட்டு இருந்தவ நீங்க கூப்பிடிங்கன்னு சொல்லாமல் கொள்ளாமல் பஞ்சாயத்துக்கு வந்துட்டேன். இதுல மறைஞ்சி நின்னு பார்த்துட்டு போறோம்… பஞ்சாயத்தை வேடிக்கை பாக்க போனோம்னு சொன்னாக்கூட என்ன பெத்த ஆத்தா நம்பாது.”

இந்த இடத்தில் தான் அவர்களின் பேச்சினை வெற்றி கேட்கத் துவங்கினான்.

வெற்றி மண் சாலையில் நின்றிருக்க, சரிவானத் தேயிலைத் தோட்டத்தில் கீழிருந்து மேலேறியவாறு அமரியும் வாணியும் வந்து கொண்டிருந்தனர்.

“இன்னும் கொஞ்ச நேரம் பஞ்சாயத்துல பேச்சு வார்த்தையை நீட்டியிருக்கலாம்” என வாணி சொல்ல யாரோ நினைவில் அமரியும் “ஆமாம்” என்றாள்.

அமரி சொன்ன ஆமாமே ஒரு தினுசாக இருந்தது.

“ஏன் அண்ணி, பஞ்சாயத்து சுருக்க முடிஞ்சதுல அவ்ளோ வருத்தம்?”

“இன்னும் கொஞ்ச நேரம் அண்ணனனுங்க, அப்பாரு, தாத்தாரலாம் பார்த்திருக்கலாம்.” வாணி கவலையாகக் கூற…

“இதான் காரணமுன்னா விட்டுத் தள்ளுங்க, இந்தாங்க பிடிங்க” என தனது அலைபேசியை அமரி வாணியின் கையில் திணிக்க அதில் சக்தி, சசி, வெங்கடாசலம், நல்லு, சேது ஆகியோர் பஞ்சாயத்திலிருந்த புகைப்படங்கள் இருந்தன.

அவர்களையெல்லாம் பார்த்ததும் வாணியின் கண்கள் பனித்தன.

“இப்படி அழுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்” என்ற அமரி அவளை மாற்றும் பொருட்டு,

“நீங்க அண்ணனை சைட் அடிச்சிருக்கீங்களா?” எனக் கேட்க, வாணி அமரியை முறைத்தாள்.

“ஆமான்னா ஆமாம் சொல்லுங்க இல்லாட்டி இல்லன்னு சொல்லுங்க… அதை விட்டுட்டு என்னதிது ஒரு சின்னபிள்ளைய மொறச்சி பாக்குறது?”

“நீ சின்ன பிள்ளையா? இல்லாத ஊர் வாய் மொத்தம் உன்கிட்டதான் இருக்கு… ஆனால்,” சில நொடி இடைவெளி விட்ட வாணி தனது பேச்சினைத் தொடர்ந்தாள்.

“காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் இப்போ அவுங்க என்னோட இல்லை, என் குடும்பம் பக்கத்துல இருந்தும் அவங்கள பாக்கக்கூட எனக்கு உரிமையில்ல, இந்த வருத்தமெல்லாம் நீ என்கிட்ட இப்படி வாயடிக்கும் போது காணாமல் போவுது” என்றாள்.

ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்தும் தனது தங்கை மகிழ்வாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட வெற்றி தன்னுடைய நண்பனிடம் பேச வேண்டுமென்று அந்நொடி முடிவெடுத்தான்.

திரும்பவும் சோகமா என நினைத்த அமரி, “ஏன் அண்ணி நான் ஒண்ணு கேட்கவா?” என்க,

“உன் குரலே சரியில்லையே, ஏதோ வில்லங்கமா கேட்கப்போற கேளு” என்றாள் வாணி.

வாணி கேளு என்றதும், சுற்றி யாராவது இருக்கின்றனரா என அமரி நோட்டமிட வெற்றி சற்றென்று மரத்திற்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வெற்றியை நெருங்கியிருந்தனர்.

“இவள் சுத்தி அலசுரத பார்த்தாக்கா ஏதோ வில்லங்கம்மா கேட்கப்போறா(ள்) போலிருக்கே” என எண்ணிய வெற்றி தன் காதினை கூர்மையாக்கினான்.

அமரியின் செயல் வாணிக்கும் அவள் அப்படி என்ன கேட்கப் போகிறாளென்று சற்று ஆர்வமாக இருந்தது.

வாணி அமரியையே இமைக்காமல் பார்க்க, தேயிலைத் தோட்டத்து நடுவில் யாராவது இருக்கின்றார்களா என்று ஆராய்ந்த அமரி யாருமில்லை என்றதும், “உங்களுக்கும் அண்ணாக்கும் எல்லாம் முடிஞ்சிருச்சா?” எனக் கேட்க, வாணி முழித்த முழிப்பில் ‘தான் கேட்டது சுத்தமாக தனது அண்ணிக்கு புரியவில்லை’ என உணர்ந்தவள்…

“இப்படியிருந்தா எங்கிருந்து பஞ்சுகிட்ட விட்ட சவால்ல நீங்க ஜெயிக்கிறது” என்று வாய்விட்டு கேட்டதோடு “நீங்க அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க அண்ணி” எனக் கூறினாள்.

முதலில் வெற்றிக்குமே அவள் கேட்டது புரியவில்லை. புரிந்த பின்னர் அவர்கள் பேசுவதை கேட்பது தவறோ என எண்ண வைத்தாலும், அவனின் மனம் அவனை அங்கிருந்து செல்ல விடவில்லை. அதற்கு காரணமும் இருந்தது.

“எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்.”

“சுத்தம்” அமரி தலையில் கை வைத்து கீழே அமர்ந்தே விட்டாள்.

“ஹேய் அமரி எனக்கு கொஞ்சம் புரியற கணக்கா சொல்லு” வாணி கெஞ்சினாள். அமரி தனது அண்ணியின் காதில் கிசுகிசுக்க வாணி அமரியின் மடியிலே தன்னை புதைத்துக் கொண்டாள்.

இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் அங்கேயிருந்த கல்லின் மீது எப்போதோ அமர்ந்திருந்தனர்.

சில்லென்று வீசும் காற்று மனதிற்கு இதம் தர அங்கிருந்து எழுந்து செல்ல இருவருக்குமே மனம் வரவில்லை.

“இப்புடி வெட்கப்பட்டா எப்புடி?” என அமரி வாணியை தனது அண்ணியாக நினையாது தோழியைப்போல் கலாய்க்க, “உனக்கு கல்யாணம் ஆகும்போது அவுங்க முன்னாடி வெட்கப்படுறியா? இல்ல பெண் சிங்கம் கணக்கா நிமிர்ந்து நிக்கிறியா பாக்குறேன்” என்றாள் வாணி.

“எவுங்க” என்ற அமரி “ஓ என்னைய கட்டிக்கிறவங்களா?” என இழுத்தவள் “நானெல்லாம் முதல் ராத்திரி அறைக்குள்ள நுழைஞ்சதுமே அவுங்க கைய புடிச்சு ஆட்டம் ஆடுவேணாக்கும்” என்க,

அமரி சொல்லிய விதத்தில் வெற்றிக்கு புன்னகை தானாக வந்தது. நேரத்தை பார்த்தவன் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்க்காது அங்கிருந்து திரும்பி நடக்க, மீண்டும் வாணியின் பேச்சு அவனை தடை செய்தது.

“நீ செஞ்சாலும் செய்வடித்தா, நீ பேசுற பேச்சுக்கு உனக்கு ஏற்கனவே ஆள் இருக்கணும் போலிருக்கே, யாரது?” என வினவினாள்.

வாணியின் கேள்விக்கு அமரி என்ன பதில் சொல்லப்போகிறாள் எனத் தெரிந்து கொள்ள வெற்றியின் மனம் படப்படத்தது.

“எனக்கு அப்படியெல்லாம் யாரும் கிடையாது அண்ணி, ஏனோ அந்த காதல் மேலெல்லாம் விருப்பம் வரல…”
அமரி அவ்வாறு சொல்லியதும் வெற்றிக்கு ஏனென்றே தெரியாத ஏமாற்றம் உள்ளுக்குள் பரவியது.

“ஆனால், நிறைய சைட் அடிச்சிருக்கேன். இன்னைக்கு பஞ்சாயத்துல கூட ஒருத்தரை நல்லா சைட் அடிச்சேனே… திரும்ப திரும்ப பார்க்கணும் தோணுச்சு, பய அழகா கெத்தா இருக்காங்கன்னு போட்டோ எடுக்கும்போது தான் அவங்க நகர்ந்துட்டாங்க. அவங்களுக்கு பக்கத்துல நின்ன உங்க வீட்டு ஆளுங்களாம் ஃபோட்டால விழுந்துட்டாங்க” என தயக்கம் சிறிதுமின்று அவள் சொன்னதில் வாணி ஆச்சரியமாக வாயில் கை வைக்க, அமரி சொன்ன நபர் யாரென்றே தெரியாத போதும் வெற்றிக்கு அவன் மீது கோபம் உண்டானது.

“உன்னை ஃபோட்டோ எடுக்குற அளவுக்கு இம்ப்ரெஸ் செய்த பய யாருன்னு தெரிஞ்சிக்கணுமே, யாரு?” வாணி யாராக இருக்கும் என்கிற ஆர்வத்தில் கேட்டாள்.

“அதான் அண்ணி, மீசையை அய்யனார் கணக்கா முறுக்கிவிட்டு… தோரணையா நடந்து வந்தாங்கலே…”

“யாரடி சொல்லுற நீ?”

“செல்லச்சாமி பெறிப்பாரு கூட நலம் விசாரிச்சாங்களே, அவுங்க பேரு கூட…”
அமரி அவனின் பெயரை கண்ணை மூடி யோசிக்க சரியாக அந்நேரம் வாணியின் அலைபேசி ஒலித்து அவளின் கவனத்தை அமரியின் பேச்சிலிருந்து கலைத்தது.

“ஆங்… வெற்றி” என கண் திறக்க வாணி அவளின் அருகில் இல்லை.

அமரி தனது படிப்பினை முடித்த இந்த ஆறு மாத காலம் தான் ஊரிலேயே இருக்கின்றாள். அமரி உடனிருந்தால் விநாயகத்திற்கு அவளின் இருபதாவது வயதில் உயிர் கண்டம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் சொல்ல, தங்கவேலு தாத்தா சொல்வதையும் கேட்காது பஞ்சவர்ணம் பாட்டி அமரியை பள்ளி வயதிலேயே விடுதியில் சேர்த்து விட்டார்.

இருபது வயது கடந்தும், கல்லூரி படிப்பினை முடித்த பிறகே தனது கிராமத்தில் தன்னுடைய உறவுகளுடன் ஒன்றாக இருக்கின்றாள். உறவுகளற்று தனிமையில் வளர்ந்ததாலேயே தன்னை தனிமை உணர்விலிருந்து மீட்க அதிகம் பேச கற்றுக்கொண்டாள்.

அமரி இங்கு வந்தே ஆறு மாதம் தான் ஆகிறதென்பதாலும், வெற்றி வருவதற்கு முன்பே பஞ்சாயத்தில் வாணி அங்கிருந்த தன்னுடைய உறவுகளை சொல்லியிருந்ததாலும் வெற்றி யாரென்று அமரிக்கு தெரியாமல் போனது.

இப்போதும்  அமரி வெற்றியை குறிப்பிட்டு சொல்லும்போது வாணியால் கவனிக்க முடியாது சூழ்நிலை தடை செய்தது.

இதுநாள்வரை வாணி அண்ணன் என்று குறிப்பிடும் போதெல்லாம் அமரிக்குத் தோன்றும் முகம் சக்தி மற்றும் சசி தான். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது வாணியின் அண்ணன் என்கிற அளவு மட்டுமே அமரிக்குத் தெரியும். அந்த அண்ணன் சக்தியென அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அமரி வெற்றி என்றதும்… அந்நொடியை மிகவும் ரசித்தான் வெற்றி. தான் காதலிக்கும் பெண்ணிற்கும் தன்னை திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றுகிறது என்பதில் அவன் முழுதாய் மகிழ்ந்தான். ஆம் வெற்றி காதலிப்பது அமரியைத் தான், அவளின் முழுப்பெயர் ‘பூம்பொழில் அமரி.’
‘எழில்’ என அவனின் மனம் அவனறியாது அழைக்க, அமரி யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து சுற்றி பார்த்தாள்.

தன் மனதில் வாசம் செய்பவளின் வாயால் தன்னுடைய பெயரை கேட்கும்போது வெற்றிக்கு மகிழ்வாக இருந்தது. தன்னவளுக்கும் தன்னை ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கிறது என்பதில் வெற்றிக்கு மகிழ்ச்சி.

இப்போது தன் மனதின் அழைப்புக்கூட அவளுக்கு கேட்கிறது என்பதில் வெற்றியின் காதல் மனம் நிறைந்தது.

“அமரி, அத்தைதான் கூப்பிட்டாங்க… திட்டுறாங்க, கெளம்பு போவோம்.” வாணி சொல்லியதும் இருவரும் வேகமாக அங்கிருந்து சென்றனர்.

வாணி வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்திருந்தால் வெற்றி அந்நொடியே சென்றிருப்பான். அவள் தன்னவளுடன் இருக்கின்றாள், சிறிது நேரம் தன்னவளின் குரலை கேட்கலாம் என நினைத்தே இதுவரை செய்திடாத மற்றவரின் பேச்சினை மறைந்திருந்து கேட்கும் செயலினை செய்தான்.

இருவரும் பல கதைகள் பேசினாலும் வெற்றி அமரியை தவிர்த்து தன் பார்வையை தன்னுடைய தங்கையின் புறம் கூட திருப்பவில்லை.

இப்போதும் செல்லும் அமரியையே வெற்றியின் கண்கள் பார்த்திருந்தது. எத்தனை வருட காதல், அவனால் கணிக்க முடியாது.

ஒருமுறை அருவிக்கரையில் பார்த்திருக்கிறான். அன்றே அமரியை நேசிக்கத் தொடங்கினானா என்பது அவனுக்கேத் தெரியாது. அவள் கதிரின் தங்கையென தெரிந்த பிறகு விலக நினைத்தாலும் முடியாது போக, இன்றுவரை தன்னுடைய காதலை தன்னவளுக்காக பிறர் அறியாது மனதுடன் வளர்த்துக் கொண்டிருக்கின்றான்.

எந்தவொரு இடத்திலும் வெற்றி தன் மனதிலும் காதல் இருக்கிறதென யாருக்கும் வெளிப்படுத்தியதில்லை. வெற்றியே அறிந்திடாது கதிர் அறிந்து கொண்டான்.

___________________________________

கதிர் ஜீப்பில் காட்டுப்பகுதியில் மக்கள் வசிக்கும் இடம் நோக்கி விரைந்தான். அவனால் மிளா இறந்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. யாரோ வேட்டையாடி தான் அதனை கொன்றிருக்க வேண்டுமென்று உறுதியாக நம்பினான்.

காட்டின் உட்புறம் சென்றதும் பாதை முடிவடைய கதிர் ஒற்றையடி பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றான். கரடுமுரடான பரப்புகள் மாறி சமதளமான பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசைகள் காணப்பட்டன.

கதிரை கண்டதும் நடுத்தர வயதுடைய ஒருவர் அவனருகில் ஓடி வந்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க அதனை பணிவுடன் ஏற்ற கதிர்,
“திரும்பவும் நீங்க எல்லாரும் வேட்டைக்கு போக ஆரம்பிச்சிட்டீங்களா?” என வினவினான். அவனின் குரலில் கடுமை தெறித்தது.

“அய்யோ, இல்லங்கய்யா… நீங்க எங்களுக்கு வருமானத்துக்கு வழி செஞ்ச பிறகு உயிரை கொன்னு அந்த பாவத்துல வாழ திரும்ப ஆசைப்படுவோங்களா?” என்று பதரியவாறு பதிலளித்தவர் தனது ஆட்களையும் அழைத்துக்கேட்க அவர்களில் யாரும் அதனை செய்யவில்லை என்பது உறுதியானது.

‘அப்புறம் யாரு மிளாவை கொன்றது, காட்டுக்குள்ள வேறேதேனும் தப்பு நடக்குதா?’ என்கிற சிந்தனையோடே அவர்களிடமிருந்து விடைபெற்று அலுவலகம் வந்து சேர்ந்தான்.

நீண்ட யோசனைக்குப் பிறகு காட்டைச் சுற்றி பொருத்தப்பட்டிருக்கும் காமிரா ஞாபகம் வர அதன் காணொளியை பரிசோதிக்க, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதமாக காமிரா வேலை செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டவன் நிச்சயம் ஏதோ தவறு இருக்கிறது என்பதில் உறுதியாகினான்.

அந்நேரம் அமைச்சரிடமிருந்து கதிருக்கு அழைப்பு வந்ததாக அவனுக்கு கீழ் பணி செய்யும் சிவம் தொலைபேசியை அவனிடம் நீட்டினார்.

“வேண்டாம் தம்பி நீங்க போற பாதை சரியில்லை, விட்டுடுங்க.”
மொட்டையாக எடுத்ததும் பேசியது, அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது புரிய கதிருக்கு சில நொடிகள் பிடித்தது.

புரிந்ததும் சத்தமாக சிரித்த கதிர்,

“இதுவரை எனக்கு சந்தேகந்தான் இருந்தது, இப்போ உறுதியாகிருச்சு… நீங்களே வந்து மாட்டிக்கிட்டீங்களே” என்றவன் “நீங்க தான் காட்டுக்குள்ள நடக்குற தப்புக்கு காரணமுன்னு தெரிஞ்சிடுச்சு, அதை நிரூபிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை… சீக்கிரமே நேரில் சந்திப்போம்” எனக் கூறியவன் அமைச்சர் கத்துவதையும் பொருட்படுத்தாது அழைப்பைத் துண்டித்திருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
55
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Really semma….. அதும் வெற்றி மாஸ் சிஸ்டர்…… வெற்றிக்கு bgm மட்டும் தா மிஸ்ஸிங்🔥🔥🔥🔥
      ன ஆல்ரெடி கெஸ் பண்ணது தா அமெரி தா எழில் ❤️❤️❤️❤️