காவ(த)லன் 5
பஞ்சாயத்திலிருந்து வீட்டிற்கு வந்த வெற்றி யாருக்கும் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்படவில்லை. அவனை பொறுத்தவரை அவன் செய்தது சரியே. கூடத்தின் நடுவில் வந்து நின்றவனை நல்லு பிடித்துக்கொண்டார்.
“நீ அந்த விநாயகம் மவனோட சுத்திக்கிட்டு திரியுரேன்னு தெரிஞ்ச அன்னைக்கே உன்னை கண்டிச்சிருக்கணும்… பண்ணாம விட்டது எங்க தப்புத்தான்.”
“எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே வெற்றி…” சேது.
“அவன்கிட்ட என்னடா நீ தன்மையா இறங்குற, அதான் பெரிய போலீசு பெரிய வேலை செஞ்சு நம்ம மானத்தை பறக்க விட்டுட்டாரே.”, நல்லு.
“உன் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் இங்க பேசனது இல்லைன்னு, எங்ககிட்ட சொல்லாமா பெரிய விடயமெல்லாம் செஞ்சிருக்கீங்க… அம்புட்டு பெரிய ஆளாகிட்டிங்களோ?” கேட்டது வெங்கடாசலம்.
“வெற்றி என்ன செஞ்சிட்டாருன்னு எல்லாரும் இப்படி பேசறீங்க.” கேட்ட சக்தி, அவன் மேற்கொண்டு ஏதோ கேட்க வருகையில் வேண்டாமென்று பார்வையாலேயே தடுத்திருந்தான் வெற்றி.
“ஏன் ராசா நம்ம கௌரத்த விட உன் கூட்டாளி உனக்கு முக்கியமா போயிட்டானா?” என்று செண்பகம் பாட்டி வீட்டின் ஒரே பெண் வாரிசு இப்படி செய்துவிட்டாளே என்கிற குமுறலோடு வினவினார்.
“இப்போ என்ன தப்பு நடந்துபோச்சின்னு ஆளாளுக்கு கேள்வி கேட்குறீங்க…” வெற்றி சினந்தான்.
“என் தங்கச்சி காலம் முழுக்க ஒருத்தனை மனசுல சுமந்துகிட்டு, கட்டனவனோடு வாழ முடியாம வருத்தப்பட்டு நிக்கக் கூடாதுன்னுதான் இதை பண்ணேன். வாணி வாழ்க்கைதான் எனக்கு முக்கியமா பட்டுச்சு. கதிரும் எனக்கு ரொம்பவே முக்கியந்தான்.” செண்பகம் பாட்டி கேட்டதற்கு முறையாக விளக்கமளித்தான் வெற்றி.
“நீ பண்ணது தப்புன்னு உனக்கு புரியவேயில்லல, நம்ம குடும்பத்துக்கு நீ பண்ணது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமாடா? இவ்வளவு நாள் உன்னை பாக்கும் போதெல்லாம் அவ்வளவு கர்வமா இருக்கும், இப்போ… தங்கச்சியையே ஒருத்தனோட அனுப்பி வச்சிட்டான்னு எவனாவது என் காதுபடவே சொல்லிடுவானேன்னு பயந்து வருதுடா…” நல்லு.
“அப்பா!”
“என்னடா, நான் சொல்லும்போதே கஷ்டமா இருக்குதோ? பஞ்சாயத்துல எவனோ ஒருத்தன் முன்னாடி நிக்கும்போது எங்களுக்கும் அப்படிதான் இருந்தது.”
சில நொடி மௌனத்திற்கு பிறகு கரகரத்த தன் தொண்டையை செருமி சரி செய்த நல்லு “எனக்கு உன்னை இப்போ பாக்கும் போது நீ எங்க முதுகுல குத்துன மாதிரி இருக்கு, தயவுசெஞ்சு நீ இங்க இருக்காதே! வீட்டை விட்டு கிளம்பு” என்ற நல்லு அடுத்த நொடி அங்கு நிற்கவில்லை.
நல்லு மனதார கூறவில்லை என்றாலும், ‘இப்போது இச்சூழலில் தன்னை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு கோபம் அதிகரிக்கத்தான் செய்யும். இவர்களும் அனைத்தும் புரிந்து பகை நீங்கி வாழும் காலம் வரும் அதுவரை பொறுமையாகத்தான் இவர்களை கையாள வேண்டும்’ என நினைத்த வெற்றி மௌனமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
நல்லு கிளம்பு என சொல்லியதைக் கூட ‘தான் செய்ததை தவறாக பார்ப்பதால் அது அவர் கொடுத்த தண்டனை’ என்று ஏற்றுக்கொண்டவனால், வீட்டை விட்டு வெளியேறும் போது யாரும் வந்து செல்லாதே என்று ஒரு வார்த்தை கூட சொல்லாததே வெற்றிக்கு அதிகம் வலித்தது. ஆனாலும் அந்நிலையிலும் கதிருடன் வாணியை சேர்த்து வைத்தது சரியென்று தான் நினைத்தான்.
சக்தியும், வாசுவும் தான் பெரியவர்கள் பேச்சை மீறி வெற்றியை தடுக்க முடியாது தவித்து நின்றனர்.
‘விடிந்தால் வாணிக்கு வேறொருவருடன் திருமணம் என்கிற நிலையில் அவள் விரும்பிய கதிருடன் சேர்த்து வைக்க எனக்கு வேறு வழித்தெரியவில்லை’ என்று மனதோடு கூறிக்கொண்ட வெற்றி காவலர் குடியிருப்பில் தனித்திருக்க பழகிக்கொண்டான்.
ஏற்கனவே திருவிழாவை வைத்து காலம் காலமாக பகைமை பாராட்டும் இரு பிரிவினரும்… வாணி கதிர் திருமணத்திற்கு பின்னர் உப்பு சப்பில்லா விடயத்திற்கு கூட நன்கு மோதிக்கொள்ள துவங்கினர்.
இந்நிலையில் மீண்டும் திருவிழா நடத்துவதைப்பற்றி முடிவெடுக்க பஞ்சாயத்தில் அனைவரும் கூடியுள்ளனர்.
நல்ல உறக்கத்திலிருந்த கதிரின் அலைபேசி தனது இருப்பை உணர்த்த, அதன் சிணுங்கல் ஒலியிலேயே அழைத்தது யாரென தெரிய… இமைகளை முற்றும் பிரிக்காது அலைபேசியை ஏற்று காதில் வைத்தான்.
“சொல்லுங்க மேடம்… புருஷன் ஞாபகம் இப்போதான் வந்தது போலிருக்கே.”
“உனக்கு இப்போ கூட பொண்டாட்டி ஞாபகம் வரலயே, நானே கூப்பிட்டாதான் பேசுவ.”
“அப்படிலாம் இல்லடி… மாமா ரொம்ப பிசி தெரியுமா?”
“ஆமா ஆமாம்… ராவுல யானைக்கூட டூயட் ஆடி ரொம்பதான் பிஸி.”
“அது உனக்கெப்படித் தெரியும்?”
“அப்போ ராத்திரியில காட்டுல உலாத்துறியா நீ? ஏதோ நீ ஆசைப்பட்டு கிடைச்ச வேலையாச்சேன்னு விட்டுவச்சா ரொம்ப பண்ற நீ, என் குடும்பத்தை எதித்துட்டு உன்னை மட்டுமே நம்பி இங்க உட்கார்ந்திருக்கேன். உனக்கு ஒண்ணுன்னா நான் என்ன மாமா செய்வேன்?”
வாணி தைரியமான பெண் தான். அவளின் வேலை அவளுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியமெல்லாம் கதிரிடத்தில் மட்டும் காணாமல் போய்விடும்.
வாணியின் திடீர் அழுகையில், “ஹேய் அழுவாதடி. எனக்கு ஒண்ணுமில்லை… ராத்திரி உன் அண்ணன் விட்ட டோஸே பத்து நாளுக்கு போதும், நீயும் ஆரம்பிக்காதே.” மனைவியின் மீது உயிரே வைத்திருப்பவனால் அவளின் கலக்கத்தை தாங்க முடியவில்லை.
வெற்றி திட்டியிருக்கின்றான் என்றதுமே வாணி அமைதியாகி விட்டாள். கதிர் மீது வெற்றி வைத்திருக்கும் அக்கறைக்கு முன்னால் கதிரின் மனைவியாகிய தன்னாலே போட்டி போட முடியாதென்று அவளுக்குத் தெரியும்.
“சரி அண்ணாகிட்ட டோஸ் வாங்கியிருக்கேன்னு சொல்லுறனால சும்மா விடுறேன்” என்றவள் அவனை அழைத்ததற்கான காரணத்தைக் கூறினாள்.
காலையில் அவள் எழுந்தது முதல் பாட்டியிடம் நடைபெற்ற உரையாடல் வரை கூறியவள், “பஞ்சாயத்துக்கு அண்ணா வருமா?” எனக் கேட்டாள்.
“நீயே அவனுக்கு போன் போட்டு கேட்க வேண்டியதுதானே?”
“ம்க்கும்… என்னவோ தங்கச்சி ஆசைப்பட்டேன்னு கட்டி கொடுத்ததோடு ஆச்சு, அதுக்கு அப்புறம் எங்கிட்ட பேசறதே இல்லை.” வாணியின் குரலில் ஆதங்கம் இருந்தது.
இதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது கதிர் அமைதி காத்தான்.
சில நொடி விசும்பலுக்கு பிறகு…
திருமணமாகிய ஒன்பது மாதங்களில் ஒரு நாளுக்கு ஒருமுறையாவது கேட்கும் அதே கேள்வியை கணவனிடத்தில் கேட்டாள் வாணி.
“அண்ணாக்கும் நம்ம கல்யாணத்துல விருப்பம் இல்லையா மாமா? நான் ஆசைப்பட்டேன்னு சேர்த்து வச்சுதா? அதேன் என்கிட்ட பேச மாட்டேங்குதா?”
கதிருக்கு தன் முன்னால் இருக்கும் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“அடியேய், எத்தனை தரம்டி சொல்றது… நம்ம குடும்ப ஆளுவயெல்லாம் ஒதுக்கி வச்சிருக்கும்போது நான் மட்டும் எப்பிடி பேசறதுன்னு பேசாம இருக்கான். உடனே அவந்தானே கல்யாணம் பண்ணி வச்சான்னு ஆரம்பிக்காதே, உன் அண்ணனை மொத புரிஞ்சிக்கோடி.” ஆயாசமாகக் கூறினான் கதிர்.
“உன்கிட்ட மட்டும் பேசுறாங்க?”
“உன்னோட ஒரே இம்சடி, புருஷன் பக்கத்துல இல்லையே அவனோட பேசும்போதாவது கிளிக்கிளுப்பா நாலு வார்த்தை பேசுவோமுன்னு பேசுறியா ச்சை…” என்று அலுத்துக்கொண்ட கதிர்
“வெற்றிகிட்ட நீ காதலிச்சதை சொல்லலன்னுதான் கோவம், அதான் பேசாமல் இருக்கான் போதுமா?” என்றான்.
“அவன் காதலிக்கிறத மட்டும் நம்மகிட்ட சொல்லிட்டா செய்யுறான். நானும் அவன்கிட்ட இனி பேசமாட்டேன்.”
வெற்றி யாரையோ காதலிக்கின்றானென்று வாணிக்கு தெரியும். ஆனால் கதிருக்கு அவன் விரும்பும் பெண் யாரென்றும் தெரியும். இருப்பினும் வெற்றியே இன்னும் தன்னிடம் உறுதியாக சொல்லாத போது தனது கணிப்பு தவறாக வாய்ப்பிருக்கு என்பதால் அப்பெண் யாரென்று மனைவியிடத்தில் கூட சொல்லாமல் இருக்கின்றான்.
“நீ பேசு பேசாம போ… அவன் காதலிப்பது உண்மையான்னு சரியா இன்னும் தெரியாம நீபாட்டுக்கு உளறக்கிட்டு இருக்காதே… ஆள விடுத்தாயே வேலைக்கு போவணும்” என்ற கதிர், வாணி மேலும் ஏதேனும் கேட்பதற்குள் அழைப்பத் துண்டித்திருந்தான்.
அடுத்த நொடி குளியலறைக்குள் புகுந்தவன் மிடுக்காய் கிளம்பி அலுவலகம் புறப்பட்டான். செல்லும் வழியில் நேற்றிரவு சந்தேகத்துடன் இறங்கி நோட்டமிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி நின்று நிதானமாக கவனிக்கத் தொடங்கினான்.
காவலர் குடியிருப்பு பகுதியில், வெற்றியின் வீட்டின் முன்பு மூர்த்தி நின்றிருந்தார். வெற்றியின் வாகன ஓட்டியும் மூர்த்தி தான். சீருடை இன்றி வெளியில் வந்த வெற்றியை கேள்வியாய் நோக்கினார் மூர்த்தி.
“சாரிண்ணா, உங்களை காலையில் வரவேண்டாம் சொல்லணும் நினைச்சேன் மறந்துட்டேன்… சொந்த விடயமா ஊருக்கு போறண்ணா, நீங்க ஸ்டேஷன் போங்க” என்றவன் தனது இரும்பு குதிரையை உதைத்து கிளப்பினான். அது காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவனது கைகளில் பறந்தது.
என்ன தான் விரலினை அழுத்தி வண்டியை இயங்கச் செய்தாலும், காலினால் அதனின் கிக்கரை உதைக்கும் போது வரும் கெத்து… அதுவும் வெற்றிக்கு தனியானதொரு தோரணையை கொடுத்தது.
___________________________________
“ம்மா…”
கொல்லை புறத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த பசு கத்தியது. அல்ல, யாரோ அவ்வீட்டின் உறுப்பினர்களில் ஒருவரை அழைத்தது.
அவ்வளவு நேரம் தனது அன்னை காட்டு கத்தலாக கத்தியும் மெத்தையை விட்டு இறங்காதவள், மாட்டின் அழைப்பிற்கு வாரிச்சுருட்டிக் கொண்டு தொழுவத்தை நோக்கி ஓடினாள் அமரி.
எதிரில் வந்த தனது பாட்டியோ , தான் மோதிச்சென்ற அண்ணியோ அவளின் கருத்தில் பதியவில்லை. அவளின் கவனம் முழுக்க மாட்டின் மீதே இருந்தது.
அதுவரை கத்திக்கொண்டிருந்த மாடும் அமரியை கண்டதும் தனது முன் கால்களை தரையில் தேய்த்து, நீண்ட வாலினால் வயிற்றுப் பகுதியில் அடித்து, அமரியின் முன் தன் தலையை ஆட்டி தன்னுடைய அன்பை வெளிக்காட்டியது.
“மன்னிச்சிக்கோ செவப்பி, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்… கோவிச்சிக்காதே உனக்கு இன்னைக்கு பருத்திக்கொட்டை ஒரு கை சேர அதிகமா போடுறேன்.”
தனது எசமானியின் சமாதானத்தை அந்த நான்குகால் ஜீவன் ஏற்றுக்கொண்டதோ, தன் கழுத்தில் தொங்கும் மணிகள் கிண்கிணிக்க “ம்மா” என்றழைத்து அவளின் உடன்படிக்கைக்கு சம்மதம் வழங்கியது.
“எப்போ பாரு தூங்க வேண்டியது. இல்லன்னா அந்த வாயில்லா ஜீவன்கிட்ட மல்லுக்க நிக்க வேண்டியது.”
தனது முதுகுக்கு பின்னால் ஒலித்த அன்னையின் குரலில் திரும்பி பார்த்தவள், முன்னால் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட பின்னலை பின்னால் தூக்கி போட்டு… பாவாடையை இடுப்பில் ஏற்றி சொருகி பழுது நீர் தொட்டியில் பிண்ணாக்கு மற்றும் மாட்டிடம் சொல்லியது போலவே நிறைய பருத்தி கொட்டைகளையும் போட்டு கலக்க ஆரம்பித்தாள். கலக்கும் போது கைகளில் தட்டுப்பட்ட கட்டிகளை எடுத்து தனக்கு பின்னால் வீசினாள்.
“ஏண்டி உன்ன இன்னைக்கு வெள்ளனவே எந்திரிக்க சொன்னல.”
அமரியிடம் எந்த பதிலும் இல்லை. அவள் கவனம் முழுக்க செவப்பி மற்றும் பழுதுநீரை கலக்குவதிலுமே இருந்தது.
“ஏய் இந்தாடி மேல விழுகுது… புண்ணாக்கு கட்டியை தூக்கி போடாம அதுலே கரைச்சி விடுடி.”
….
“நான் சொல்லுறது உன் காதுகள்ல விழுகுதா இல்லையாடி?”
….
அவள் வீசிய அனைத்தும் அன்னத்தின் மேல் அபிஷேகமென விழுந்தது.
தொட்டி முழுக்க இருந்த நீரினை செவப்பி அருந்திய பின்னரே அமரி நிமிர்ந்தாள். சாவகாசமாக திரும்பியவள் அவரிருந்த கோலம் கண்டு அதிர்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “கூப்பிட்டியாம்மா?” என்று அப்பாவியாக வினவ அன்னம் காளியானார்.
‘அய்யய்யோ ரொம்ப வெறுப்பேத்திட்டமோ?’ மனதிற்குள் நினைத்தவள் “எப்போம்மா வந்த? ஏன் இப்படி நிக்குற, உனக்கு மட்டும் தனியா மழை பேஞ்சுதாம்மா?” என ஒன்றும் நடவாததைப்போல் உதட்டினை இழுத்து வைத்து கேட்க…
அருகில் கிடந்த தொழுவத்தினை சுத்தம் செய்யும் தொடப்பத்தினை அன்னம் கையிலெடுக்க… செவப்பி அன்னத்தினை முட்டுவதற்கு வாகாக முன்னோக்கி அடியெடுத்து வைத்தது.
“அவளை ஏதேவாது சொன்னா நீ வந்திருவியே” என்ற அன்னம் செவப்பியிடமிருந்து அமரியிடம் திரும்ப அவள் அங்கில்லை. அன்னம் தொடப்பத்தினை கையிலெடுத்ததுமே தனது அறைக்கு ஓட்டமெடுத்திருந்தாள்.
“எப்படியும் கொட்டிக்க கீழே வந்துதானே ஆவணும், அப்போ கவனிச்சிக்கிறேன்… டவுனில் பெரிய படிப்பெல்லாம் படிச்சும் இந்த சேட்டத்தனத்தை மாத்திக்கிட மாட்டேங்கிறாளே” என்று புலம்பியவராய் அன்னம் குளியலறை நோக்கி சென்றார்.
அங்கு நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தத பாட்டி “அன்னையையே படாதபாடு படுத்தி வைப்பவள் தன்னை கட்டிக்க போறவனை என்ன பாடு செய்யப்போறாளோ?” என்று அமரியின் வருங்கால கணவனை நினைத்து கவலைக் கொண்டார்.
ஊட்டியை கடந்து தார் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வெற்றி ஒரு திருப்பத்தில் இரண்டு கிளை சாலைகளாக பிரிந்த மண் சாலை ஒன்றில் தனது பயணத்தை தொடர்ந்தான். இப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
அந்நேரம் அவனின் அலைபேசி ஒலிக்க அழைத்தது சசி.
“அண்ணா வந்துட்டீங்களா?”
“நீ எங்க இருக்க, ஊர் கூடிருச்சா?”
சசி கேட்டதற்கு பதிலளிக்காது எதிர் கேள்வி கேட்டான்.
“இப்போதான் வர ஆரம்பிச்சிருக்காங்க, இன்னும் நேரம் ஆகும் போலிருக்கு.”
“நான் ஆரம்பிக்கிறதுக்குள்ள அங்க இருப்பேன், சக்தி உன்னோட தானே இருக்கான். அப்பாருகள விட்டு நகரக் கூடாது” என்ற வெற்றி இணைப்பத் துண்டித்து வண்டியை முடுக்கினான்.
ஊரினை நெருங்க சிறு தொலைவு இருக்கையில்… அவனின் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அத்துடிப்பின் வேகம் சொல்லாமல் சொல்லியது அவனவள் இங்கு தான் எங்கோ இருக்கிறாளென்று.
வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியவன் அப்பகுதியை தனது கூர் பார்வையால் அலசினான். அவ்விடம் யாரும் இருப்பதற்கான தடயமின்றி அமைதியாக காட்சியளித்தது. மலைப்பகுதியில் மோதி விளையாடும் காற்றின் சப்தம் மட்டுமே பரவி கிடந்தது.
தனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்தினை உள்ளுக்குள் புதைத்தவனாய், சற்று நேரத்திற்கு முன்னால் தன்னவளை பார்க்க போகின்றோம் என்ற நினைவில் முகத்தில் தோன்றிய இளக்கம், கண்களில் விரவிய பரவசம் அனைத்தையும் துடைத்தெடுத்து தன்னை விறைப்பாக மாற்றி பஞ்சாயத்து கூடும் செல்லியம்மன் கோவில் அமைந்திருக்கும் அருவி கரைக்குச் சென்றான்.
_____________________________________
காய்ந்த சருகுகளில் மிக கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான் கதிர். மரங்கள் சலசலக்கும் ஓசையின்றி நிர்மலமாய் காட்சியளித்த அவ்விடத்தில் ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்பது மட்டும் கதிருக்கு புரிந்தது.
ஓரிடத்தில் கதிர் காலை வைத்ததும் அவனின் பாதத்தை பதம் பார்த்தது, கூர்மையான பற்கள் கொண்ட இரும்பு கவை. சருகுகள் படிந்து இருந்ததாலும் முரட்டு பூட்ஸ் அணிந்திருந்ததாலும் கதிரின் கால் இரும்பின் பற்தடத்தோடு தப்பியது.
“இங்க யார் இதை புதைத்து வைத்திருப்பார்கள்?” வாய்விட்டு தனக்குத்தானே கேள்வி கேட்டவன் மேலும் முன்னேறினான்.
அப்பகுதி வேட்டையாட தடைசெய்யப்பட்ட பகுதி. பொதுவாக வனவிலங்கு சரணாலயங்கள் அமையப்பெற்ற காட்டுப்பகுதிகளில் காட்டுவாழ் மக்களுக்கு தேன் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. அவர்கள் வாழும் சமமான பகுதிகளில் அவரவர் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப தானியங்கள் மற்றும் கிழங்குகளை பயிர் செய்து கொள்ளலாம்.
கதிரின் காலினை பதம் பார்த்த இரும்பு கவை பொதுவாக வேட்டையாடுவோர் விலங்குகளை பிடிப்பதற்காக மண்ணில் சிறு அளவு ஆழத்தில் புதைத்து வைப்பர். ஆதலாலே அக்கேள்வி கதிரிடத்தில் தோன்றியது.
கதிரின் புத்தி முன்னோக்கி செல்லென்று ஆணை பிறப்பிக்க, அவனின் நடையின் வேகம் அதிகரித்தது. நடையோடு பார்வையின் அலசலும் தீவிரமடைந்தது.
சிறிது தூரம் சென்ற பிறகு சருகுகளற்று கரடுமுரடான பாதை வர, அதில் மனிதனின் காலடி தடம் தென்பட்டது. மரம் ஒன்றில் ரத்தம் தோய்ந்த அம்பு சொருகியிருந்தது. அம்பின் முனை மரத்தில் பதிந்திருந்த ஆழத்தினை வைத்தே யாரோ ஒருவரால் அதிக விசையுடன் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை யூகித்தான்.
ஏதாவது தவறாக இருக்குமோ என்று காட்டினை அலசிக்கொண்டே வந்தவன் புலிகளிருக்கும் பகுதிக்கு வந்திருந்தான். புலிகள் தங்களுக்கென எல்லை வகுத்து வாழும். தங்களது எல்லையைத் தாண்டி செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு பகுதியில் அடையாளத்திற்காக புலிகள் வாழும் பகுதியினை ‘L’ வடிவ வேலிகள் கொண்டு தடுப்பு அமைத்திருப்பர்.
‘இதற்கு மேல் செல்வது தனக்கு பயமில்லை என்றாலும் வெற்றிக்கு தெரிந்தால் அவ்வளவு தான்’ என்று நினைத்தவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
அவனது சந்தேக மனம் ஏதோ சொல்ல முயற்சி செய்ய அடியெடுத்து வைத்தவன் நின்றுவிட்டான். திடீரென கதிர் நின்றிருந்த இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் பெரிய புதர் ஒன்று அசைந்தது. பார்க்கும்போது காற்றில் அசைவது போலல்லாமல் அங்கு வேறு யாரோ இருப்பதைப்போன்று தெரிய அருகிலிருக்கும் மரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரசரவென ஏறியிருந்தான்.
உச்சியில் பருத்திருந்த கிளையின் மீது சத்தமின்று வாகாக நின்றவன் அசையும் புதரின் உட்புறம் பார்க்க காட்டெருது ஒன்று ஏதோவொரு விலங்கினைத் தின்று கொண்டிருந்தது.
எந்த உயிரினத்தை அடித்து தின்றுகிறது என்று கதிருக்கு தெரியவில்லை. இருப்பினும் அதனை விரட்ட முயற்சித்தான்.
துப்பாக்கியினை எடுத்து வான் நோக்கி சுட குண்டு வெடித்த சத்தத்தில் மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள் படபடவென்று றெக்கை அடித்து பறக்க நொடிப்பொழுதில் புயலடித்து அடங்கிய ஓசை காடெங்கும் விரவ காட்டெருது தனது உணவினை தவிர்த்ததாய் அங்கிருந்து ஓடிச்சென்றது.
ஏறிய வேகத்தில் கீழிறங்கிய கதிர் புதரிடம் சென்று பார்க்க மான் இனத்தில் ஒன்றான மிளா இறந்து கிடந்தது. பார்க்கையில் அதன் உயிர் காட்டெருதால் அடித்து கொல்லப்பட்டதைப்போல் அல்லாமல் யாரோ வேட்டையாடியதை போலிருந்தது.
மிளாவின் கழுத்து பகுதியில் மயக்கம் மருந்து செலுத்தியதற்கு அடையாளமாக ஊசியிட்ட சிறு துளை காணப்பட்டது. அதன் பின்னர் அதன் வயிற்றுப்பகுதியில் குண்டடிப்பட்டிருந்தது. இது யாருடைய செயலாக இருக்குமென்று அவனால் கணிக்க முடியவில்லை.
சில நிமிடங்கள் மிளாவையே பார்வையிட்டவனின் கண்களில் அந்த வித்தியாசம் தென்பட்டது.
தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கு அழைத்து இறந்த விலங்கினை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் மிளாவின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்ததாகவும் அதன் இறப்பிற்கு காரணமான விடயங்களையும் குறிப்பிட்டு கையெழுத்து இட்டவன் காட்டுப்பகுதியில் மக்கள் வசிக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
___________________________________
“ஐயா அந்த காவல்காரன் நம்மள கண்டுபிடிச்சுடுவானோ?”
தனது அடியாள் கேட்ட கேள்வியின் பயம் அவனுக்கும் உண்டு. அதனை வெளியில் காட்டிக்கொண்டால் அவனின் கெத்து என்னாவது.
குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன்,
“விடுடா பார்த்துக்கலாம்… இந்த காட்டிலிருந்து வெளிய கொண்டு போற வரைக்கும் தான் நாம கவனமா இருக்கணும் அதுக்கு அப்புறம் அந்த அமைச்சர் பொறுப்பு” என்றவன்
“எல்லாரும் தப்பிச்சிட்டிங்களா?” எனக் கேட்டான்.
“அட போங்க ஐயா, எங்க அவன்கிட்ட இரவே மாட்டிப்போன்னு நினைத்தேன்… இருட்டில் எதுக்குன்னு போயிட்டான் போல, காலையில வந்து நிக்குறான் அவனை திசை திருப்புவதற்குள் உயிர் போய் வந்திடுச்சு.” அந்த அடியாள் மூச்சு வாங்கினான்.
“அவன் எதையோ கண்டுகிட்டான் ஐயா, அவன் இங்கிருந்தா நம்ம வேலை ஆகாதுங்க.” மற்றொரு அடியாள் பிரியாணியை வாயில் திணித்துக் கொண்டேக் கூறினான்.
“நீ முதல்ல ஒழுங்கா தின்னு, அதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் அமைச்சருக்கு வலது கையாக செயல்படுபவன்.
உடனடியாக அமைச்சருக்கு அழைத்தவன் நடந்தவற்றை அனைத்தையும் அவரிடம் தெரிவித்தான்.
“ஆள் எப்படி?”
அமைச்சர் கேட்டதற்கு, “ரொம்ப நேர்மையான பய… அவனது நேர்மையால மேலதிகாரியிடமே ஏதோ தகராறு போல” என்று பதிலளித்தான்.
அவன் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சரின் வலது கை ராஜன்.
“களக்காடு தலைமை வனபாதுகாவலர் நம்ம ஆளுதான். நான் பேசிக்கிறேன்… இன்னும் ஒரு மாசத்துல கேட்டளவு தயாராகி இங்க வந்து சேர்ந்துடணும்டா…”
“அதெல்லாம் பக்காவா தயாராகிடும் ஐயா, ஆனா அந்த ஆபீசர் தான்” அவன் தன் தலையை சொறிந்தான்.
“அவனை நான் பார்த்துக்கிறேன், ஒரு தரம் பேசி பாக்குறேன்” என்ற அமைச்சர் தனக்கு தலைவலியாக வந்து நிற்கும் கதிரை என்ன செய்யலாமென்று யோசிக்கத் துவங்கினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
55
+1
2
+1
2
அமரிதான் வெற்றியோட காதலியா??
அமைச்சரு செய்யறது திருட்டு வேலை இதுல கதிர என்ன பண்ணலாம்னு யோசிக்கிறியா நீ கதிர் வெற்றி கிட்ட இருந்து பத்திரமா இருந்துக்கோ