காவ(த)லன் 4
இருள் பிரியத துவங்கியிருந்தது.
“வெள்ளனவே எந்திருச்சு வாசல்ல கோலம் போடச்சொன்னா இந்த கழுதை இன்னும் இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டு கெடக்கு நாளைக்கு இவ வாழப்போற எடத்துல எனக்குதான் திட்டு விழும்.”
அன்னம் தன்னுடைய மகளைத் திட்டியவாறே கீழே இறங்கி வர, தனது நாத்தனாருக்கு பதிலாக வாசலில் கோலமிட்ட வாணி கோலமாவு அடங்கிய கிண்ணத்துடன் உள்ளே வந்தாள்.
“இன்னைக்கும் நீயே போட்டுட்டியாத்தா, இன்னைக்கு இந்த அமரியை பொண்ணு பார்க்க வறாங்களே, சீக்கிரம் எழட்டுமுன்னு நாளைக்கு நீதான் கோலம் போடணுமுன்னு ரவைக்கே(இரவு) சொல்லியிருந்தேன், பார்த்தா அந்த கழுதை இன்னும் உறங்குது” அன்னம் வாணியிடம் புலம்பியபடியே வீட்டில் உள்ள அனைவருக்கும் தேநீர் வார்த்தார்.
“இந்தாத்தா இதை குடி, நான் உன் மாமனுக்கும் என் மாமனுக்கும் கொடுத்துட்டு வறேன்” என்ற அன்னம் வாணியின் கையில் தேநீர் குவளையை கொடுத்துவிட்டு கூடத்தை நோக்கி நகர்ந்தார்.
கூடத்தில் இவ்வீட்டின் மூத்த தலைமுறையான தங்கவேலுவும் அவரின் மகன் விநாயகம் அமர்ந்து அன்றைய ஊர் பேச்சில் நிகழப்போகும் திருவிழாவைப் பற்றி தாங்கள் எடுத்து வைக்க நினைக்கும் கருத்துக்களை ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
“என்னத்தா அன்னம், மாப்பிள்ளை வீட்டிலிருந்து எந்த பொழுதுக்கு வராங்க” என்றபடி தங்கவேலுவின் மனைவி பஞ்சவர்ணம் அங்கு வந்தார்.
“காலையிலேயே வராங்கன்னு சொன்னாங்க அத்தே, மாமாருதான் இன்னைக்கு காலையிலேயே பஞ்சாயத்து இருக்கு… வெள்ளனவே முடிஞ்சா தகவல் சொல்லுறோம், இல்லைனா நாளைக்கு வாங்கன்னு போன் போட்டு இப்போதாங்க சொன்னாரு.” என்றும் மாமியாரின் சொல்லுக்கு பணிந்து நடக்கும் அன்னம், அவர் கேட்ட கேள்விக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பாட்டியின் சத்தம் கேட்டதும் எப்போதும் அவர் காலையில் நீராகாரத் தண்ணீரைத் தான் பருகுவார் என்பதை இங்கு வந்த ஒன்பது மாதங்களில் தெரிந்துக்கொண்ட வாணி ஒரு சொம்பு நிறைய சாதம் ஊறிய தண்ணீரை அவர் முன் நீட்டினாள்.
“ம்க்கும்” என்ற ஒலியுடன் வாணியிடமிருந்து வாங்கியவர், “என்னத்தா உம் மருமவ(கள்) என்னை காக்கா புடிக்க பாக்கிறாளாக்கும். அது மட்டும் நடக்காதுன்னு சொல்லி வை” என தன் மருமகளிடம் கூறினார்.
பதிலுக்கு வாணியும் தன் கழுத்தை தோள்பட்டையில் வேகமாக நொடித்துக் காட்டியவள் “இந்த வீராப்புலாம் எத்தனை நாளைக்குன்னு நானுந்தேன் பாக்குறேன். உங்க பேரன் மட்டும் மாத்தலாகி வரட்டும் அடுத்த மாசமே உண்டாகி அடுத்த பத்தாவது மாசம் உங்க கையாலே எனக்கு பிரசவம் பார்க்க வைக்கல… நான் பஞ்சவர்ணத்துக்கு பேத்தியில்லை ” என்று சவால் விட்டாள்.
அதில் பஞ்சவர்ண பாட்டி தான் வாயடைத்துப் போனார்.
அன்னம் மெல்ல வாய் பொத்தி சிரிக்க, தங்கவேலுவும், விநாயகமும் “இது உனக்குத் தேவையா?” என்கிற ரீதியில் அவரை பார்த்தனர்.
“இததான் நானும் எதிர்பாக்குறேன், எத்தனை நாளைக்குதான் உன்கிட்டவே வம்பு வளத்துக்கிட்டு இருக்கிறது” என்று பதிலடி கொடுத்து அனைவரின் வாயையும் மூடச்செய்தார்.
“இந்தாடி மொத என் பேரன் கதிரு கூட போன்லேயே குடும்ப நடத்தாம சுருக்கா வேலையை மாத்தலாக்கிட்டு வர சொல்லு… அப்புறம் என்கிட்ட சவால் விடலாம்” என்று வாணியை மீண்டும் பாட்டி வம்பிழுக்க,
“இதுகிட்ட வாய் கொடுத்தா மீள முடியாது” என வாய்க்குள்ளே முணுமுணுத்த வாணி “என் போனு சத்தம் போடுத மாதிரியிருக்கு பாட்டி” என அங்கிருந்து நகர்ந்தாள்.
“புள்ள வெவரமாத்தான் இருக்கு” தங்கவேலு தன் மகன் காதில் கிசுகிசுக்க…
“என் வெவரமெல்லாம் இந்த காலத்து பொண்டுகளுக்கு வராது அப்பு” என பதிலளித்து அந்த வயதிலும் தனக்கு காது நன்றாக கேட்பதை உறுதிப்படுத்தினார் பஞ்சு.
____________________________________
“ஐயா பஞ்சாயத்துக்கு சொல்லி அனுப்புனாங்க. போயிட்டு வந்திடலாங்களா?” நல்லு தன் தந்தையை வினவினார்.
அந்நேரம் அங்கு வந்த சேதுராமன், “இம்முறையாவது பஞ்சாயத்துல ரெண்டு தரப்பு ஆளுகளும் அடிச்சிகிடாம பார்த்துக்கனுங்க ஐயா” என்றார்.
“அதெப்படி அமைதியா வரது, இந்த திருவிழாவால தானே பரம்பரை பரம்பரையா பிரச்சனையே! அவனுங்க கை நீட்டுனா நாமளும் கை நீட்டியாகனும்” என்று தனது முறுக்கு மீசையை நீவிவிட்டபடி கூறிய வெங்கடாசலம் “போவோம்டா” என்றவாறு முன்னே நடக்க நல்லுவும் சேதுவும் அவரை பின் தொடர்ந்தனர்.
சேது வீட்டு வாயிலை கடக்கும் போது சசியை ஒரு பார்வை பார்க்க, அவனோ அவரின் கேள்வியை உணர்ந்து கண்களை மூடி திறந்து பதிலளித்தான்.
வெங்கடாசலமும் தங்கவேலுவும் தான் ஊரின் பெரிய தலகட்டுக்கள். ஒரு சாதிக்குள்ளே இருவேறு உட்பிரிவினர். எத்தனை தலைமுறைக்கு முன்னர் இவர்களுக்குள் பகைமை ஏற்பட்டதோ ஒருவருக்கும் தெரியாது. ஏன் வெங்கடாசலம், தங்கவேலுவிற்கே தெரியாது. அவரது தந்தையர் முட்டிக்கொண்டதை பார்த்து வளர்ந்ததால் இவர்களும் இவர்களுக்கடுத்த தலைமுறையும் எதிர்த்து நிற்கின்றனர்.
ஆனால் இன்றைய தலைமுறையான வெற்றியும் கதிரும் குடும்ப பரம்பரை பகையை மறந்து தங்களை நட்புக்குள் பிணைத்துக்கொண்டனர்.
இரு குடும்பத்தினரும் தங்களது உட்பிரிவினரை ஒன்று சேர்த்து தாம்தானென்று ஊரை அப்பப்போ இரண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரே சாதியாக இருப்பினும் இவர்களுக்குள் பகைமை ஏற்படக் காரணம் செல்லியம்மன் கோவில் திருவிழா தான்.
ஊரே ஒன்றுகூடி இழுக்க வேண்டிய தேரினை நான் தான் பெரியவன் என்ற வார்த்தை முட்டிக்கொள்ள வைத்தது.
நல்லுவின் தாத்தாவும் விநாயகத்தின் தாத்தாவும் தான் இதற்கொரு தீர்வு கண்டுபிடித்தனர். ஒரு முறை நாங்க தேர் திருவிழாவை நடத்தி வைத்தால் அடுத்தமுறை நீங்கள் நடத்தி வையுங்கள் என்பது தான் அந்த தீர்வு. அப்போது கூட இரு கூட்டமும் ஒன்றாக நின்று நடத்துவோமென்று ஒருவர் கூட பேசவில்லை. இன்றுவரை அப்படியே தான் தொடர்கிறது.
சரி அப்படியாவது திருவிழா ஒழுங்காக நடைபெறுகிறதா என்றால் அதுவும் கிடையாது.
வெங்கடாசலத்தின் முறை வந்தால், தங்கவேலுவின் ஆட்கள் வேண்டுமென்றே திருவிழாவில் பிரச்சனைகளை கிளப்பிவிடுவர். தங்கவேலு முறையென்றால் சொல்லவும் வேண்டுமோ… வெங்கடாசலத்தின் ஆட்கள் செய்யும் ரகளையில் திருவிழா பூமி ரத்த பூமி ஆகிவிடும். இன்றுவரை இந்த பிரச்சனை அப்படியேத்தான் உள்ளது.
ஒருமுறை திருவிழாவில் இரு தரப்பினரும் அடித்துக்கொண்டு தேர் இழுப்பது பாதியிலேயே நின்று தேர் கோவிலுக்குள் செல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஊரின் நடுவிலேயே நின்றிருந்து மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் மீண்டும் கோவிலுக்கு சென்ற நிகழ்வை பார்த்த வெற்றி தன் தலைமுறையிலாவது இந்த பகை ஒழிய வேண்டுமென நினைத்து தானாகவே சென்று கதிருடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டான். அவர்களது நட்பில் இதுநாள் வரை சிறு சுணக்கம் கூட வந்ததில்லை. அந்தளவிற்கு இருவரும் தங்களது நட்பினை மதித்தனர்.
இப்படி ஒரே ஊர் ஒரே சாதியினர் உட்பிரிவினை வைத்து காலம் காலமாக சண்டையிட்டுக்கொள்ள, இரு எதிரி வீட்டு பிள்ளைகள் காதலில் விழுந்தனர்.
கதிர் தன் தங்கை வாணியை விரும்புகிறான் என்று வெற்றிக்கு தெரியும். ஆனால் கதிர் சொல்லாததால் அவனும் தெரிந்ததைப்போல் காட்டிக்கொள்ளவில்லை.
வெற்றிக்கு வாணியும் காதலிக்கிறாள் என்பது தெரியாது. கதிர் மட்டுமே ஒருதலையாக காதலிக்கின்றானென்றே நினைத்திருக்க, வீட்டில் வாணிக்கு திருமண ஏற்பாடுகள் முடிந்து விடிந்தால் திருமணம் என்கிற நிலையில் கதிர் தன் காதலை வெற்றியிடம் தெரிவித்தான்.
‘வாணிக்கும் கதிரின் மீது காதல் இருந்திருந்தால் தன் தங்கை இவ்வளவு தூரம் இத்திருமணத்தை கொண்டு வந்திருக்க மாட்டாள்’ என்று எண்ணி “வாணி உன்னை விரும்பாத போது என்னால் என்ன செய்ய முடியும்டா, ஒரு அண்ணனா அவள் பக்கம் தானே என்னால் நிற்க முடியும்” என்று வெற்றி கூற,
“இவார்த்தையை மறந்து விடாதே” என்ற கதிர் “வாணியும் என்னை நேசிக்கிறாள்” எனக்கூறி வெற்றிக்கு அதிர்ச்சி அளித்தான்.
விடிந்தால் திருமணம் என்கிற நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றி விழித்திருக்க…
“வாணி இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்றான் கதிர்.
“ஆமாண்டா, இருக்கும் நேரத்தையெல்லாம் விட்டுட்டு இப்ப வந்து சொல்லு… அவ இல்லைன்னா நானில்லைன்னு வசனமா பேசுற அப்படியே வர கோபத்துக்கு அடிச்சேன்னு வை செவுளு கிழிஞ்சிடும்.” வெற்றி கோபத்தில் வெடித்தான்.
“ஏற்கனவே ரெண்டு குடும்பத்துக்கும் காலம் காலமா, தலைமுறை தலைமுறையா பகை… நாமாவது பகையில்லாம வாழனும் நினைச்சா அதுக்கும் ஆப்படிக்கிற… நல்லா நடுவுல பார்த்துதான்டா நீ ஆப்பு அடிச்சிருக்க” என்ற வெற்றி “நீ ஊர் எல்லையில இருக்க அய்யனார் கோவிலுக்கு போ நான் வரேன்” எனக்கூறி கதிரை அனுப்பி வைத்தான்.
கதிர் சென்று கோவிலில் காத்திருக்க ஒரு மணிநேரம் கழித்து தன் தங்கை வாணியுடன் வெற்றி வந்து சேர்ந்தான்.
வாணி கண்களில் கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது.
தங்கை அழுவதை கண்டு வெற்றி முறைக்க… “இது தப்பில்லையா அண்ணா?” எனக் கேட்டிருந்தாள் வாணி.
“உன் ஆசையை புதைச்சிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்து நீட்ட சம்மதிச்சு அங்கவே உட்கார்ந்திருந்த பார்த்தியா அதுதான் தப்பு” என்ற வெற்றி,
கதிரிடம் திரும்பி ” நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் உனக்கும் வாணிக்கும் பதிவு திருமணம் செய்ய எல்லாம் தயார் செய்துட்டேன். மூர்த்தி அண்ணாகிட்ட சொல்லியிருக்கேன் அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை அழைத்துச் செல்ல வந்துடுவார். மத்ததையெல்லாம் அவர் பார்த்துப்பார்” என்று வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மூர்த்தி அங்கு வந்து சேர அவருடன் தங்கையையும் நண்பனையும் அனுப்பி வைத்தவன் சத்தமில்லாமல் மண்டபத்திற்கு வந்து உறங்கிக் கொண்டிருப்பதைப்போல் நடிக்கத் துவங்கினான்.
அதிகாலையில் மணமகளைத் தயார் செய்ய கண் விழித்த ஜானகி “அய்யோ” என்று பதறியடித்து “பெண்ணை காணவில்லை” என்கிற கேவலுடன் மண்டபத்தை இரண்டாக்கிக் கொண்டிருக்க… அப்போது தான் சத்தம் கேட்டு வருவதைப்போல் வெளிவந்தான் வெற்றி.
ஒன்றும் தெரியாததைப்போன்று ஜானகிக்கு வெற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, வீட்டின் மற்ற ஆண்கள் வாணியை தேடி அலைந்தனர்.
வாணி யாருடனோ சென்றிருப்பாள் என்பதை அவர்கள் யாரும் நினைக்கக்கூட இல்லை. தன்னை அசிங்கப்படுத்துவதற்காக தங்கவேலு குடும்பம் தான் தன் மகளை கடத்தியிருக்க வேண்டுமென்று அவ்வீட்டினரிடம் சண்டைக்கு செல்ல இரு ஆட்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
ஊர் பஞ்சாயத்து ஒன்று கூடியது.
இரு தரப்பினரும் வாணியை மையமாக வைத்து இதுநாள் வரை தீராத அனைத்து பிரச்சனைகளையும் பட்டியலிட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்க, நடப்பதை வெற்றி அமைதியாக பார்த்திருந்தான்.
அவனின் அமைதியை கவனித்த நல்லுவிற்கு ஏதோ புரிய நாட்டாமையிடம் பஞ்சாயத்தினை அமைதி படுத்தக் கூறினார்.
நாட்டாமையும் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த தன்னால் முடிந்தளவிற்கு முயற்சித்து முடியாமல் போக அமைதியாக அமர்ந்துவிட்டார்.
“இப்போ இங்க என் பொண்ணு வரலனா… உங்க ஆளுங்க எவனும் வீடு போயி சேர மாட்டீங்க” சேது, மகள் காணவில்லை என்கிற தவிப்பில் ஏகத்துக்கும் எகிறினார்.
“நீ கை வச்சா சும்மா பார்த்துகிட்டு இருக்க நாங்க ஒன்னும் சொம்பை பசங்க இல்லடா” தங்கவேலு தரப்பு கூட்டத்தில் ஒருவன் சத்தமிட, வெற்றி பார்த்த பார்வையில் அவன் கப்சிப் என்றானான்.
“உங்க வீட்டுப் பொண்ணு காணாமல் போயிருந்தால் இப்படிதான் கத்திக்கிட்டு கிடப்பிங்களா.”
“அதேன் எங்க பொண்ணுங்களாம் உங்க பக்க பொண்ணுங்க மாதிரி வீட்டை விட்டு ஓடிப்போகலையே.” அவன் கூறி முடிப்பதற்குள் வெற்றி உதைத்த உதையில் பத்தடி தள்ளிச் சென்று விழுந்தான்.
வெற்றி அடித்ததில் பாதி கூட்டம் அமைதியாகிவிட, சில அரைவேக்காடுகள் மட்டும் சலம்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் தங்கள் பக்க ஆட்களை சக்தியும் சசியும் முடிந்தளவிற்கு அடக்க முயற்சித்துக் கொண்டிருக்க, யாரும் யாருடைய பேச்சினையும் கேட்பதாக தெரியவில்லை.
கொஞ்ச நேரம் பேசி கத்திவிட்டு அமைதியாகிவிடுவர் என்று வெற்றி நினைக்க நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது.
நல்லு வெற்றியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க… ‘தன் தந்தை தன்னை மோப்பம் பிடித்துவிட்டார்’ என்று புரிந்துகொண்ட வெற்றி இரு தரப்பினருக்கும் நடுநாயகமாக வந்து நின்று… தோரணையாக தனது மீசையினை முறுக்கி விட்டான்.
வெற்றியின் இச்செயலுக்கு பின்னாலிருக்கும் ஆபத்தை பல முறை நேரில் கண்டிருப்பதால் ஒட்டு மொத்த கூட்டமும் அமைதியாகியது.
“இதை முன்னமே செய்திருக்கலாம்” என்று நாட்டாமை செல்லச்சாமி வெற்றியினை பார்க்க அவன் தன் முகத்தில் தோன்றிய விஷமப் புன்னகையை இதழ் கடையில் ஒளித்தான்.
“இப்படி தோரணையா நின்னுகிட்டு பவுசு காட்டுனா ஓடிப்போன பொண்ணு முன்ன வந்து நிக்குமோ?”
குரல் வந்த திசையில் சட்டென பார்வையை திருப்பிய வெற்றி…
“ஓடிப்போன பொண்ணு வந்து நிக்காது, நான் அனுப்பி வச்ச என் தங்கச்சி வந்து நிக்கும்.”
வெற்றி சொல்லி முடிக்கவும் மூர்த்தியுடன் கதிர் மற்றும் வாணி மணக்கோலத்தில் வந்திறங்கினர்.
வெற்றி சொல்லியதிலேயே நல்லுவும் சேதுவும் அதிர்ந்து நிற்க, தங்கள் மகள் எதிரி வீட்டுப் பையனை மணம் முடித்திருக்கின்றாள் என்ற காட்சி அவர்களை உறையச் செய்தது.
சக்தியும் சசியும் வெற்றி செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று இதில் தலையிடாது அமைதியாகினர்.
கோபத்தில் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்த தன் தாத்தா மற்றும் விநாயகத்திடம் சென்ற கதிர் “எனக்கு வேறு வழி தெரியலங்க” என்க, “என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே” என்று ஆதங்கத்தோடு கூறிய விநாயகம் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தார்.
“இந்த கல்யாணத்தை எங்களால ஏத்துகிட முடியாது.” நல்லுவின் பக்கமிருந்து ஒரு பெருசு கூறியது.
“இது பொண்ணு சம்பந்தப்பட்ட விடயம்டா, கொஞ்சம் மதியா பேசுங்க.”
“அண்ணன்காரனே தங்கச்சியை ஓடிப்போக வச்சிட்டு, நம்மள மோத விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திருக்கான்.”
“ஏய் யாரை பார்த்து என்ன சொல்ற?” சக்தி எகிறினான்.
“உண்மைய தானே சொல்லுறோம். அதைதான் அவனே ஒத்துக்கிட்டானே.”
ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசிக்கொண்டே செல்ல…
“இவங்க கல்யாணம் செல்லாதுன்னு தீர்ப்பு சொல்லுங்க” என்று கதிர் பக்க ஆளுகள் நாட்டாமையை மிரட்டிக் கொண்டிருந்தனர்.
“இம்புட்டு நேரம் பொண்ணோட வாழ்க்கைன்னு பேசிய வாயெல்லாம் இப்போ பையன் வீட்டு பவுசு காட்டுறீங்களோ?”
தன் வீட்டு விடயம் ஊரறிய அனைவரது வாயிலும் அரைபடுவது பிடிக்காத நல்லு தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு பஞ்சாயத்தை விட்டு வெளியேறினார்.
“என்னப்பா இப்படி பிராது கொடுத்தவகளே ஒண்ணும் சொல்லாது கிளம்புனா இங்க பெரிய ஆளுகன்னு நாங்க எதுக்கு உட்கார்ந்து இருக்கோம்” என்று ஒரு பெருசு கேள்வி கேட்டது.
மெல்ல நின்று திரும்பிய சேதுராமன் “எனக்கு பொண்ணே பொறக்களங்க, பொறந்திருந்தா தானே… கல்யாண ஏற்பாடு பண்ணியிருப்பேன், காணமா போச்சுதுன்னு பஞ்சாயத்துல முறையிட்டு இருப்பேன்” என்றவர் தன் மகளை திரும்பியும் பாராது சென்றுவிட்டார்.
வாணி விக்கித்து நிற்க… கதிர் ஆதரவாக தன் மனைவியின் கரம் கோர்த்தான்.
“பொண்ணுக்கு துணையா இங்க நீ மட்டுந்தான் இருக்க, நீயே ஒரு போலீசு… உனக்கே என்ன முடிவெடுக்கணும் தெரியும். இப்போ நாங்க என்ன செய்யட்டும்?” பெரிய தலையில் ஒன்று வெற்றியை கேட்டது.
“என் தங்கையும், கதிரும் மேஜர் சட்டப்படி அவங்க விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள அவங்களுக்கு உரிமை உண்டு. இதுல என் முடிவுன்னு தனியா எதுவும் கிடையாது. என் தங்கை ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைக்கனுமுன்னு தான் அவளை நான் கதிரோட அனுப்பி வச்சேன். இப்போ முடிவெடுக்க வேண்டியது கதிர் குடும்பந்தான்.” தன் கருத்து அவ்வளவு தான் என்பதைப்போல் வெற்றி தங்கவேலுவையும், விநாயகத்தையும் பார்த்தான்.
“எங்க பையன் பேருலையும் தப்பு இருக்குது… கல்யாணத்துக்கு முன்னுக்க கேட்டிருந்தா கண்டிப்பா ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டோம், ஆனால் இப்போ ஏத்துக்கிட்டு தானே ஆகணும். எனக்கும் ஒரு பொண்ணு இருக்காளே… இன்னைக்கு இந்தப் பொண்ணு விடயத்துல நானெடுக்குற முடிவு நாளைக்கு எம்மவ வாழ்க்கையை பாதிச்சிடக் கூடாதே” என்ற விநாயகம் தன் தந்தையை “நான் பேசியது சரிதாங்களே?” எனக் கேட்க,
தங்கவேலு கதிரிடம் “அந்த புள்ளைய வீட்டுக்கு இட்டா” என்றதோடு அங்கு அவ்வளவு நேரம் நடந்து கொண்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கூட்டம் மெல்ல கலைந்தது.
வெற்றி அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த தன் மூச்சினை வெளியேற்றித் தன்னை ஆசுவாசப்படுத்தினான். கதிருக்கும் முட்டிக்கொண்டிருந்த மூச்சுக்காற்று சீரானது.
என்ன தான் கதிரின் குடும்பம் வாணியை ஏற்றுக்கொண்டாலும் முதலில் அவளை தள்ளித்தான் வைத்திருந்தினர். நாட்கள் நகர நடந்தவற்றை மறந்து தன் மகனின் மனைவி என்கிற கண்ணோட்டத்தில் வாணியை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் பஞ்சவர்ணம் பாட்டிக்கு அவளிடத்தில் சிறு சுணக்கும் இருக்கிறது. அது எப்போதாவது விளையாட்டாக எட்டிப்பார்க்கும்.
பஞ்சாயத்திலிருந்து வீட்டிற்கு வந்த வெற்றி யாருக்கும் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்படவில்லை. அவனை பொறுத்தவரை அவன் செய்தது சரியே. கூடத்தின் நடுவில் வந்து நின்றவனை நல்லு பிடித்துக்கொண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
59
+1
3
+1
1