காவதலன் 30
காணாமல் போன இருவரையும் கண்டதும் மொத்த குடும்பமும் மகிழ்வில் திளைத்தது.
விடயமறிந்த அனைவரும் வெற்றியை திட்ட முடியாது அமைதியாக இருக்க நல்லு தனது மொத்த கோபத்தையும் வார்த்தையால் வடித்தார்.
வெற்றியை திட்டி முடித்தவர்,
“இதுவே கடைசியா இருக்கட்டும், உன் தொழிலை வீட்டு ஆளுங்கக்கிட்ட வச்சிக்காதே” என்றார்.
அனைவரும் நல்லுவின் வார்த்தையை ஆமோதித்து ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல, அங்கே வெற்றி குற்றவாளியாக்கப்பட்டான்.
“என்னை காப்பாத்து எழிலு” என்று தன்னருகில் நெருங்கி நிற்கும் அமரியின் காதில் வெற்றி கிசுகிசுக்க, அவளோ கணவன் சிறு பிள்ளையாய் திட்டு வாங்குவதை ரசித்திருந்தாள்.
“என்னடி?”
“முழிச்சிட்டு நிக்கிற இந்த வெற்றியை ரொம்ப பிடிக்குது” என்று ஒற்றை கண்ணடித்தாள்.
தடுமாறிய வெற்றி நல்லுவின் கணைப்பில் நிமிர்ந்து நின்றான்.
“நல்ல நேரம் வந்திருச்சு… தேர் வடம் பிடிச்சிடலாமா?”
செல்லச்சாமி வந்து அழைக்க அனைவரும், பட்டு மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வானளவு உயர்ந்து நின்ற தேரினை நோக்கிச் சென்றனர்.
மக்கள் அனைவரும் ஒன்று திரண்டிருந்தனர்.
அனைவரிடத்திலும் பக்தி திளைத்திருந்தது.
பூசை செய்து அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உற்சவ சிலை தேரில் வைக்க, அனைவரும் தேரின் வடத்தினை பிடித்துக்கொண்டு தேர் இழுக்க தயாராக இருக்கையில் வெற்றியின் அலைபேசி அழைத்தது.
“இந்நேரத்திலுமா?” என்று நல்லு தன் மகனை முறைக்க,
“காவலரே மாமா மொறைக்கிறாங்க, என் பின்னாடி மறைஞ்சு நின்னு பேசுங்க” என்று அமரி கணவனை கலாய்த்தாள்.
“எல்லாம் என் நேரம்” என்று முணுமுணுத்த வெற்றி அழைப்பினை ஏற்று காதில் வைக்க, அதில் ராமினால் சொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தான்.
“என்ன விளக்கு போட்ட கணக்கா மூஞ்சு பளிச்சுன்னு இருக்கு” என்று கதிர் கேட்க,
“அந்த ரத்தினத்தை என்கவுண்டர் போட முடியலையேன்னு வருத்தப்பட்டேன்… ஆனால் இப்போ அவனே அவன் சாவைத் தேடிக்கிட்டான்” என்று மிகவும் மகிழ்ச்சியோடு வெற்றி கூறினான்.
ரத்தினத்தை ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் ராம் சென்று கொண்டிருக்க, வளைவில் வேகத்தைக்கூட்டிய ராம் இமைக்கும் நொடியில் வண்டியிலிருந்து மணற்பரப்பில் குதித்திருக்க, வண்டி மலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
அன்று ரத்தினத்தின் திட்டப்படி நடக்காத ஒன்றை, இன்று ராமின் மூலம் உண்மையாக நிகழ்த்திவிட்டான் வெற்றி.
தனது பாதுகாப்பையும், ரத்தினத்தின் மரணத்தையும் உறுதி படுத்தவே ராம் வெற்றியை அழைத்திருந்தான்.
‘இறந்தவனை எத்தனை முறை சட்டத்தின் முன் நிற்க வைப்பது… இறந்தவன் இறந்தவனாகவே இருக்கட்டும்’ என்பது வெற்றியின் எண்ணம். ரத்தினத்தின் இறப்பை உண்மையும் ஆக்கிவிட்டான்.
“ஒருத்தன் சாவுறதுக்கு சந்தோஷப் படுற ஆள் நீதேன் மச்சான்” என்ற கதிரிடம்,
“குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்கும்போது வர நிறைவே தனிதான்” என பதிலளித்தான் வெற்றி.
அமரி மட்டும் “உன்னை நானறிவேன்” என்ற ரீதியில் கணவனை நோக்க,
“இதெல்லாம் காவல்துறை ரகசியம்” எனக்கூறி மனைவியை பார்த்து ஒற்றை கண்ணடித்து புன்னகைத்த வெற்றி, வடத்தின் மீது படிந்திருந்த தனது எழிலின் கை மீது தன்னுடைய கைகளை வைத்தவாறு வடத்தின் கயிற்றினை பிடித்தான்.
வெற்றியின் எழிலும் தனது கைகளை கணவனின் கைக்குள் அழகாய் பொறுத்திக் கொண்டாள்.
“சரி… சரி… பேசனது போதும், வடம் பிடிங்க” என்ற வெங்கடாச்சலத்தின் குரலோடு, தீபாராதனையோடு சேர்ந்து பூசாரி ஆட்டும் மணி சத்தமும் கேட்க… ஊர் மக்களோடு சேர்ந்து இரு குடும்ப உறுப்பினர்களும் தாங்கள் இணைந்ததோடு மட்டுமில்லாது தங்கள் ஊர் ஒற்றுமைக்கு தங்களது பிள்ளைகள் காரணம் என்கிற மன நிறைவோடும்… எப்போதும் தடைப்பட்டு நின்றுபோகும் திருவிழா இன்று சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்கிற அதீத மகிழ்வோடும் அனைவரும் ஒன்று கூடி அம்மனின் தேரினை இழுத்தனர்.
தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்த வெற்றி,
“அவர்களின் முகத்தில் தவழும் மகிழ்வினை என்றும் நிலைத்திடச் செய்” என அம்மனிடம் வேண்டியதோடு…
தானே எதிர்பாராது தன்னுடைய எழிலை தன்னிடம் சேர்த்ததற்கு அம்மனுக்கு நன்றியும் தெரிவித்தான்.
_____________________________
ஒரு வருடத்திற்கு பிறகு…
வெற்றியின் வீடு பரபரப்பாக இருந்தது.
அன்று அருவிக்கரை அம்மன் கோவிலில் வைத்து சசிக்கு திருமணம்.
தங்களின் சொந்தத்திலே பெண் எடுத்திருந்தனர். அதே ஊர்.
“எல்லாரும் கிளம்பியாச்சா?” என்று வந்த நல்லு, “பொண்ணு கிளம்பியாச்சு… மாப்பிள்ளை மொத போறது இல்லையா?” எனக் கேட்டார்.
“சக்தி சசியை தயார் பண்ணிட்டு இருக்கான் மாமா” என்ற ஜானகி, “நீங்க உங்க தம்பியை கூட்டிட்டு முன்னாடி போங்க. பெரிய மாமா கோவிலுக்கு போயிட்டாரே… அங்க மத்த வேலையெல்லாம் கவனிங்க” என்றார்.
“ம்ம்…” என்று உறுமியவர், “உன் மகன் வந்துட்டானா இல்லை தாலி கட்டுற நேரம் தான் வருவானா?” என வெற்றியைக் கேட்டார்.
“எப்பவும் வெற்றியை வம்பு இழுக்கிறதே உங்களுக்கு வேலை… நீங்க வாங்க நாம போவோம்” என்று சேது தன் அண்ணனை அழைத்துச் சென்றார்.
“வெற்றி ரா வேலைக்கு போனானே இன்னும் வரலையா?” செண்பகம் கேட்க,
“இப்போ தான் செத்த முன்ன வந்தான் அத்தை. கிளம்பி வரணுமா இல்லையா?” என்ற ஜானகி பழக் கிண்ணத்துடன் சசியின் அறைக்குச் சென்றார்.
சக்தி சசிக்கு நெற்றியில் கீற்றாய் சந்தனம் வைத்து நிமிர்ந்தான்.
அங்கு தான் மதி தன் ஏழு மாத மேடிட்ட வயிற்றை பிடித்தபடி, சசியை தயார் செய்யும் தன் கணவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.
“புருஷனை பார்த்தது போதும். கோவிலில் கல்யாணம் முடிஞ்சு பந்தி ஆரம்பிக்க எவ்ளோ நேரம் ஆகுதோ… இந்த பழத்தை எல்லாம் சீக்கிரம் சாப்பிடு” என்று கிண்ணத்தை அவளின் கையில் திணித்தார்.
“அண்ணா வந்துட்டாரா?” சசி கேட்க, “வந்துட்டான். கிளம்பி வருவான். நீ மொத கிளம்பு. பொண்ணு போயாச்சுன்னு பெரியப்பா கத்திட்டு போறார்” என்று நகர்ந்தார் ஜானகி.
“என்னவாம் எழிலு முகம் எழில் கூடி தெரியுது?”
குளித்து முடித்து தலை துவட்டியபடி கண்ணாடி முன் நின்று, அதன் வழி தன்னையே பார்த்திருக்கும் மனைவியிடம் கேட்டான் வெற்றி.
“முடிஞ்சா கண்டுபிடிங்க காவலரே! எல்லாம் கண்டு பிடிக்கிறிங்களே… இதையும் கண்டு பிடிங்க” என்ற எழில் வழக்கம் போல அவனுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் வந்து நின்று அவன் கேசம் கலைத்து விட்டாள்.
அமரியின் முதுகோடு கையிட்டு தன்னில் அழுத்திய வெற்றி, இங்கும் அங்கும் அசைந்தாடும் அவளின் கருவிழியியோடு தன் விழிகள் கலக்க விட்டு…
“இந்த கண்ணு ரெண்டும் என்கிட்ட எதையோ சொல்லத் தவிக்குதே!” என்றான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. சீக்கிரம் சட்டை போட்டு வாங்க” என்று விலகியவளின் கரம் பிடித்து இழுத்து நிறுத்திய வெற்றி…
“லவ் யூ டி” என்றான்.
“நானும்” என்ற எழில் அவனின் பாதத்தில் ஏறி நின்று அவனது முன் நெற்றி கேசம் ஒதுக்கி அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“என்னவோ இருக்கு. என் பொண்டாட்டிக்கு ஆசை அதிகமா தெரியுது” என்று வெற்றி அவளின் நெற்றி முட்ட… “இருக்கு தான். கண்டுபிடிங்க சொன்னேன்ல… நான் கீழப்போறேன். சீக்கிரம் வாங்க” என்று மெல்ல நடந்து சென்றாள்.
கட்டிலில் அமரி எடுத்து வைத்துச் சென்ற ஆடையை பார்த்தவன் இதழில் மென் முறுவல். அவளது புடவை நிறத்தில் இருந்தது.
“யாருடா அது?” என்று கேட்டுக்கொண்டே சசியின் அறைக்குள் நுழைந்த அமரி, “சசியா மாமா இது?” என்று சக்தியிடம் வினவ, “அடையாளம் தெரியலையா?” என்று அவளின் தலையில் கொட்டினான் சசி.
“இரு காவலர் கிட்ட சொல்றேன்” என்று அமரி மிரட்ட, சசி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டான்.
“இன்னைக்கு எனக்கு கல்யாணம். இன்னைக்காவது விட்டு வை. உனக்குன்னா அண்ணா கொஞ்சம் கூட யோசிக்காம கை நீட்டிடுறாங்க” என்றான்.
அவன் சொல்லிய பதிலில் மதி சத்தமிட்டு சிரித்திட,
“அச்சோ பார்த்து சிரி மதி… பாட்டி அங்க சுளுக்கும் இங்க சுளுக்கும்ன்னு எழுந்து வந்திடுவாங்க” என்று அமரி சொல்ல மேலும் அங்கு சிரிப்பு சத்தம் அதிகரித்தது.
“எனக்கு நடக்கும் எல்லாம் உனக்கும் நடக்கும். வெற்றி மாமா உன்னை நடக்கக்கூட விடப்போறதில்லை பாரு” என்று மதி கூறிட, அமரியின் முகம் வெட்கம் பூசியது. லாவகமாக மறைத்துக் கொண்டாள்.
“என்னடா ஆச்சா?” என்றபடி வேட்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்ற கை விரலால் மீசையை முறுக்கியபடி வெற்றி வர, என்றும்போல் இன்றும் அவனின் அத்தோற்றத்தில் மயக்கம் கொண்டு ரசித்து பார்த்தாள் அமரி.
“அண்ணா…” சசியின் குரல் நெகிழ்ந்து வர, தன் தம்பியை தோளோடு சேர்த்து அணைத்த வெற்றி, “அம்சமா இருக்குடா” என்றான்.
“ஆமா ஆமா… சந்தியா பார்த்ததும் மயங்கி விழப்போகிறாள்” என்று சக்தி கேலி செய்ய, சசி வெற்றியிடம் சிறுவனாக முறையிட்டு சிணுங்கினான்.
“விடுடா…” என்று சக்தியை அதட்டிய வெற்றி, மனைவியின் பார்வை உணர்ந்து கீழ் பற்களால் மேல் உதட்டை மீசையோடு கவ்வி விடுத்தான். தன்னவளின் ஒற்றை பார்வைக்கு உருகுபவன் பொங்கும் காதல் அலையை அடக்கினானோ!
“ம்க்கும்…” மதியின் கணைப்பில் நிகழ் மீண்ட அமரி, “என் புருஷன் நான் பாக்கிறேன். உனக்கு என்ன? நீ வேணும்னா சக்தி மாமாவை சைட் அடிச்சிக்கோ நான் ஒன்னும் உன்னை மாதிரி குறுக்க வரமாட்டேன்” என்றாள்.
அமரியின் பேச்சில் வெற்றி தன் உதட்டோர புன்னகையை மற்றவர்களுக்கு காட்டாது முகம் திரும்பினான்.
“சரி சரி கிளம்புங்க” என்று ஜானகி வந்திட… அனைவரும் கோவில் நோக்கிச் சென்றனர்.
வெற்றியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த அமரி “மெதுவா போங்க காவலரே” என்றாள்.
அவளை ஒரு நொடி திரும்பி பார்த்து வண்டியை இயக்கினான்.
அங்கு அனைத்தும் தயாராக இருந்தது. அம்மனின் சன்னதிக்கு முன்பு இருக்கும் மண்டபத்தில் மணமேடை அமைத்திருந்தனர். சக்தி மதிக்கும் அங்கு தான் திருமணம் நடந்தது.
சசியை மனையில் உட்கார வைத்திட,
கதிரின் குடும்பமும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
“மச்சான்” என்று கதிர் வேகமாக வெற்றியை அணைக்க வர, “என்னவோ வருசம் ஒரு தரம் பார்த்துக்கிற மாதிரி தான். கூட வந்த பொண்டாட்டி புள்ளையெல்லாம் மறந்தாச்சு” என்று கிண்டல் செய்தான் சக்தி.
“இன்னைக்கும் மானத்தை வாங்காதடா” என்று கதிரிடம் சொல்லிய வெற்றி, வாணியின் அருகில் சென்று, அவள் மடியிலிருந்து ஆறு மாத குழந்தையை தூக்கி முத்தம் வைத்தான்.
வாணிக்கு அவள் விட்ட சவாலின் படி, பஞ்சு பாட்டி தான் பிரசவம் பார்த்தார். மருத்துவமனைக்கு செல்வோம் என்று அவர் சொல்லியும் அடமாக அவர் பிரசவம் பார்க்க ஆண் மகவை பெற்றெடுத்தாள்.
“குழந்தை மேல ஆசை வந்திருச்சு போல…” அமரி பிறர் அறியாது கணவனின் காதில் கிசுகிசுத்தாள்.
“மேடம் ஓகே சொன்னா எனக்கும் ஓகே தான்” என்று வெற்றி கண்டிக்க, “இப்போவே கட்டிக்கணும் காவலரே. சீக்கிரம் தாலி கட்ட சொல்லுங்க” என்று அவனை அசர வைத்தாள்.
சந்தியா சசியின் பக்கத்தில் உட்கார வைக்கப்பட, சசியின் கண்கள் வெற்றியை நோக்கி, தன் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் மீதும் சில நொடிகள் படிந்தன.
இன்று இக்குடும்பத்தில் அவனும் ஓர் அங்கம் என்றால் அதற்கு அனைவரும் அவன் மீது கொண்டம் அன்பு மட்டுமே காரணமால்லவா!
“போடா போய் அவன் பக்கத்துல நில்லு. பார்த்தே அழ வச்சிடுவான் போல” என்று தன் கையிலிருந்த குழந்தையை ஜானிகியிடம் கொடுத்த வெற்றி, பனித்த விழிகளை மூடி திறந்து சரி செய்தான்.
“என்ன மச்சான்?” கதிர் வெற்றியின் தோளில் கைபோட… “சசி நம்ம வீட்டுக்கு வரும் போது என்னைவிட ரொம்பவே சின்னபையன். என்னை பார்த்து தான் எல்லாம் செய்வான். என் முதல் குழந்தைடா அவன்… இப்படி பாக்கும் போது எதோ பண்ணுது” என்று கண்ணீரோடு சிரித்தான் வெற்றி.
இன்று தான் வெற்றியின் வெளிப்படையான உணர்வை அவனது குடும்பம் காண்கிறது. அதுவும் சசிக்காக. அனைவரும் நெகிழ்ந்த நொடி அது.
அமரிக்கு வெற்றியின் இந்த முகம் தெரியும் என்பதால் புன்னகையோடு பார்த்து நின்றாள்.
வெற்றி தன் எழிலை நோக்க, அவள் ஆதுரமாக கண் மூடி திறந்தாள். வெற்றி நொடியில் சீராகினான்.
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாலி கட்ட சொல்லுங்க மாப்பிள்ளை. நீங்க கலங்கி நிக்கவும் சசி எழுந்து வர தவிக்கிறான்” என்று விநாயகம் சொல்ல, “காக்கிச் சேட்டை திமிரா வெறப்பா நின்னா தான் பாக்க நல்லாயிருக்கு” என்றார் நல்லு.
“நாழி ஆகுது.” ஐயரின் இந்த குரலில் நொடியில் எல்லாம் சீரானது.
கெட்டிமேளம் முழங்க, தன் குடும்பத்தின் மனம் நிறைந்த வாழ்த்தோடும், ஆசியோடும் தன்னவளின் கழுத்தில் அவளது விழி பார்த்து தாலி கட்டினான் சசி.
பெரியவர்கள் அனைவரிடமும் சசி, சந்தியா காலில் விழுந்து ஆசி வாங்கி இறுதியில் வெற்றியின் முன் வந்து நின்ற சசியை இறுக்கி அணைத்து வெற்றி நிற்க,
“அண்ணா நானு” என்று சக்தி வர, “என்னை விட்டுட்டிங்க” என்று நடுவில் புகுந்தான் கதிர்.
அமரியும் மதியும் சந்தியாவின் இருபக்கம் வந்து நின்றனர்.
எப்போதும் இவர்களின் இச்செயலில் அதட்டும் நல்லு கூட வாஞ்சையாக பார்த்திருந்தார்.
அடுத்து இரு குடும்பமும் ஒரு குடும்பமாக அம்மனின் முன் கண் மூடி நின்றனர்.
கண் மூடி அம்மனை வணங்கியபடி தன் பக்கத்தில் நின்றிருக்கும் அமரியின் காதில்… “தேங்க்ஸ் டி பொண்டாட்டி” என்று சொல்லிய வெற்றி, அவள் எதற்கு எனும் விதமாக பார்க்க… கண் சிமிட்டி அனைவரையும் ஒருசேர பார்த்தான்.
“அமரி உண்டாயிருக்கா… காலையில் தான் தெரிஞ்சுது. அம்மன் முன்ன வச்சு சொல்லலாம் நினைச்சோம்” என்றான்.
அனைவரின் முகத்திலும் மகிழ்வு இரட்டிப்பானது.
அன்னம் தொடங்கி ஒவ்வொருவராய் அமரியை கன்னம் வழித்து தங்களின் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
நல்லு முதல் முறையாக தன் மகனை வெளிப்படையாக அணைத்திருந்தார்.
“ரொம்ப சந்தோஷம் வெற்றி.”
“அப்பா…”, மகனின் தோளில் தட்டிக் கொடுத்தார் நல்லு.
“இந்த வீட்டோட குலசாமிடா நீ” என்ற வெங்கடாச்சலம், “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் வெற்றி” என்றார்.
திருமணத்திற்கு வந்திருந்த உறவுகள் எல்லாம் எப்போதோ சென்றிருக்க, எஞ்சியிருந்த குடும்பத்தினர் மட்டுமே அங்கிருந்தனர்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்க வேண்டும். அவர்கள் வழக்கம் அது.
வெற்றி, அமரி திருமணத்தின் போது பொங்கல் வைக்கவில்லை என்று, சக்தி மதி திருமணத்தின் அன்று அவர்களுடன் இணைந்து வைத்திருந்தனர்.
சந்தியா பொங்கல் வைத்திட, சசி உதவி செய்து கொண்டிருந்தான்.
அனைவரும் மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“எப்படி நான் சொல்லாம கண்டு பிடிச்சீங்க?”
மதி, வாணியுடன் பேசிக் கொண்டிருந்த அமரி வெற்றியின் அருகில் வந்தமர்ந்து வினவினாள்.
“எழிலுக்குள்ள வெற்றி இருக்கும் போது எப்படி தெரியாம போகும்” என்ற வெற்றி, “ஒருநாள் கூட நீ நம்ம மாடிப்படியில் சத்தமில்லாம மெதுவா இறங்கி நான் பார்த்தது இல்லை. இன்னைக்கு நம்ம ரூமிலே அவ்ளோ கவனமா பார்த்து பார்த்து நடந்த, நான் கட்டிக்கும் போதெல்லாம் இன்னும் இறுக்கமான்னு சொல்லுற ஆளு, என் பிடி இறுகவும் விலகி நின்ன, அப்புறம்” என்று அவளின் காதில் அவர்களுக்கு மட்டுமேயான ஒன்றை அவன் சொல்ல… “ச்சோ… கோவில்” என்று அவன் மார்பிலே முகம் மறைத்தாள்.
“எழில்” என்ற வெற்றியின் ஒற்றை கரம் அவளின் தோள் சுற்றி படிந்தது. காதலாய் கணவனின் தோள் சாய்ந்தாள் அமரி.
சசி, சந்தியா பொங்கல் வைத்து முடிக்க, மீண்டும் ஒருமுறை அனைவரும் அம்மன் முன் கண் மூடி நின்றனர்.
மூத்தவர் வெங்கடாச்சலம் செண்பகம், தங்கவேலு பஞ்சு, நல்லு, சேது ஜானகி, விநாயகம் அன்னம் ஒரு பக்கம் நிற்க… வெற்றி அமரி, கதிர் வாணி, சக்தி மதி, சசி சந்தியா மற்றைய பக்கம் நின்றனர்.
மூத்த தலைமுறை தொடங்கி இளம் தலைமுறை வரை அனைவரும் ஒரே காட்சியில் நின்ற தருணம் அழகிய கவிதையாய். நெஞ்சுக்கு நிறைவாய்.
சுபம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
80
+1
5
+1
5
குடும்பம், பாசம்,காதல், நட்பு,ரொமான்ஸ், சஸ்பென்ஸ்,போலீஸ் அதிரடி இந்த கலக்கி இருக்கீங்க 👌
வெற்றியின் போலீஸ் அதிரடி காட்சிகளும் ஒவ்வொரு பிரச்சனைக்கு தீர்வு காணும் முன் அவன் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது வேற லெவல் 👌👌
வெற்றி அமரி காதல் காட்சிகளும் புரிதலும் செம ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது ❤️❤️
வெற்றி அவரி காதலிக்கும் மேல வெற்றி கதிர் நட்பு இன்னும் ஒரு படி அதிகமா இருந்தது 😍😍
ஆரம்பம் முதல் இறுதி வரை கதை எங்கேயும் தொழில்லாமல் ரொம்ப விறுவிறுப்பா நகர்ந்தது சூப்பர் 👌👌
கிராமத்து திருவிழாவில் ஆரம்பிக்கிற கதை கிராமத்து அம்மனின் முன்னிலையில் முடிவது அருமை 👌👌
ரொம்ப அருமையான தெளிவான எழுத்து நடை கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் 👌👌👌
Nice story.
Very nice Story tharsimma.🧚