காவ(த)லன் 28
“என்னடா நடக்குது இங்க?”
“லவ் தான்.”
கோவிலுக்கு வந்தது முதல், திருவிழா கூட்டத்தில் அங்குமிங்கும் தோழிகளோடு சுற்றித்திரியும் மதியின் மீதே சக்தியின் பார்வை நிலைத்திருக்க… மதியும் சக்திக்கு நிகராக தோழிகள் பேசுவதை கேட்டவாறு அவனைத் தான் ரசித்திருந்தாள்.
திடீரென முத்தம் ஒன்றை மதியை நோக்கி சக்தி பறக்க விட, வெட்கம் கொண்ட போதும் ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.
“போடி” என்று சக்தி முறுக்கிக் கொள்ள,
தன்னருகிலிருக்கும் தோழிகளின் கவனம் ஈர்க்காது, கை மறைவில் சக்தி செய்தது போலவே அவளும் அவனுக்கு முத்தம் அளித்தாள்.
வெகு நேரமாக இவர்களை நோட்டமிட்ட சசி சக்தியின் அருகில் வந்து கேட்க சக்தியும் சளைக்காது மேற்கண்டவாறு கூறியிருந்தான்.
“தேரிட்டீங்க மச்சான், காதலை சொல்லவே தயங்கி நின்ன ஆளு… இப்போ தைரியமா லவ் கிஸ் பறக்க விடுறீங்க” என்றவாறு சசியுடன் சேர்ந்து கதிரும் சக்தியை கேலி செய்தான்.
“அது அப்போ, இது இப்போ” என்று அசராது பதிலளித்த சக்தி…
“இவனுக்குத்தான் இதெல்லாம் புரியாது உங்களுக்குமா மாப்ள” என வெற்றியிடம் கேட்டான்.
“அவரு என்னை லவ் பண்ணதை விட வெற்றி அண்ணனைதானே லவ் பண்ணிக்கிட்டு திரிஞ்சாரு… அவருக்கிட்ட கேட்ட அவருக்கு மட்டும் என்னத்த தெரிய போவுது” என்றவளாய் அவர்களின் பேச்சில் வாணியும் இணைய,
“வாணிம்மா… அம் யுவர் ஹஸ்பண்ட், இப்படியெல்லாம் மச்சானுங்க முன்ன காலை வாரக் கூடாது” என்று கதிர் பேச…
“நீங்க சொன்னது உண்மையா இருக்கும் எனக்குத் தோணுது அண்ணி” என்று அமரி வாணியின் வார்த்தையை வழி மொழிய,
“தங்கச்சிம்மா யூ டூ…” என்று அப்பாவியாக கதிர் கேட்டான்.
“அதான் அன்னைக்கு ராவு மொட்டை மாடியிலே பார்த்தோமே… என்னா புடி” என்று சசியும் தன் பங்கிற்கு கூற,
“டேய் இன்னைக்கு நாந்தேன் உங்களுக்கு ஊறுகாயா… என்னால முடியலடா” என்ற கதிரின் முக பாவனையில் அங்கே ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
தங்களது மக்கள் ஒன்றாக சிரித்து பேசி மகிழ்வதைக் கண்டு பெரியவர்களின் உள்ளம் நிறைந்தது.
“வெற்றியும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.” ஜானகி சிறு மன வருத்தத்தோடு கூறினார்.
“அவனுக்குதான் குடும்பத்தோட ஒன்னா இருக்கிறதை விட, வேலை முக்கியமா போச்சே” என்று நல்லு சொல்ல,
“பல குடும்ப நல்லாயிருக்க விசேஷ நாளுல கூட வீட்டு ஆளுவக்கூட இல்லாம புள்ள கஷ்டப்படுது… அதை போயி இப்படி சொல்லுறீங்களே.” அங்கலாய்ப்பாய் கூறினார் சேது.
“உன் புள்ளைய நான் எதுவும் சொல்லலையே… அவன் இல்லாம்மா போயிட்டான்னுதான் சொல்லுறேன்” என்ற நல்லு, தன் மகனை சொந்த மகனாக கருதும் சேதுவின் பாசத்திற்கு முன் எப்பவும் போல் தன் உறவை விட்டுக்கொடுத்து அமைதியாக இருந்தார்.
“அவரு தேர் வடம் பிடிக்கும்போது இங்க இருப்பாரு மாமா” என்ற அமரிக்கு புன்னகை மட்டுமே பதிலாக அளித்தார்.
**************************
“சார் ஜீவா குடும்பம் அங்கதான் இருக்காங்க, ஆனால் அவன் மட்டும் சென்னையில் வேலை செய்றதா தகவல் கிடைச்சிருக்கு.”
மூர்த்தி சொல்லவும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட வெற்றி,
“அவனுடைய அலைபேசி எண் கிடைக்குமா பாருங்கண்ணே… பழைய எண் உபயோகத்தில் இல்லைன்னு வருது” என்க, மூர்த்தி வெற்றியின் முன் சிறு காகிதத் துண்டினை வைக்க அதில் ஜீவாவின் எண் இருந்தது.
“அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி ஜீவா பெற்றோரிடம் வாங்குனேன் சார்.”
தனது எண்ணம் அறிந்து செயல்படும் மூர்த்திக்கு பார்வையாலேயே நன்றி தெரிவித்த வெற்றி ஜீவாவின் எண்ணிற்கு அழைத்ததும்.
அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் வெற்றி “ஹலோ” என்க, அந்த ஒற்றை வார்த்தை ஜீவாவுக்கு போதுமானதாக இருந்தது.
“வெற்றி சார்.” ஜீவாவின் குரலில் அவ்வளவு மகிழ்வு.
“பரவாயில்லையே நான் உங்க நினைவில் இருக்கேன் போலயே” என்ற வெற்றி நேரடியாக விடயத்திற்கு வந்தான்.
“ரத்தினம் இறந்தது உண்மையா?”
ஜீவாவிடம் எந்தவொரு பதிலும் இல்லை. சில நிமிடங்கள் மௌனமே ஆட்சி செய்தது.
“நான் கேள்வி கேட்டால் அடுத்த நொடி எனக்கு பதில் கிடைச்சிருக்கணும்.” அதிகாரமாய் ஒலித்தது வெற்றியின் குரல்.
“உயிரோடுதேன் இருக்கான் சார்.” ஜீவாவின் குரலில் அடக்கப்பட்ட சினம் சீறியது.
ரத்தினத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது நடந்த நிகழ்வை ஜீவா சொல்லலானான்.
வெற்றி சொல்லியது போல் சரியான நேரத்தில் ரத்தினத்தை நீதிமன்றத்தில் சேர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜீவா வண்டியை வேகமாக செலுத்தினான்.
எந்தவகையிலும் ரத்தினம் தப்பிக்கக் கூடாதென்று வெற்றிக்கு இருந்த அதே உறுதி ஜீவாவுக்கும் இருந்தது.
‘எத்தனை பெண்களின் வாழ்வு இவனால் அழிந்துள்ளது’ என்று தனக்கு அருகிலிருக்கும் ரத்தினத்தை பார்வையாலேயே எரித்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் முன் அதிரடியாக உயர்ரக மகிழுந்து ஒன்று வந்து நின்றது.
“கண்ணென்ன பொடனியிலயா இருக்கு…”
பட்டென்று சுதாரித்து தனது வண்டியை நிறுத்திய ஜீவா திட்ட வாய் திறக்கையில், அவ்வண்டியிலிருந்து சிதம்பரம் இறங்கினார்.
சிதம்பரத்துடன் அவரது அடியாட்கள் யாருமில்லை. தனித்து வந்திருந்தார். ஆனால் அவரது உடல் மொழியில் திமிரும் பார்வையில் அலட்சியமும் இருந்தது.
ஜீவாவின் வண்டிக்கு அருகில் வந்த சிதம்பரம் வண்டியின் எஞ்சின் பகுதியில் கை வைத்து ஒய்யாரமாக நின்றவர் ஜீவாவை ஏளன பார்வை பார்த்தார்.
ஜீவாவுக்கு சிதம்பரத்தின் செய்கைகள் எரிச்சலை ஏற்படுத்த வண்டியை இயக்க முயன்றவனை தடுத்திருந்தார் சிதம்பரம்.
“கொஞ்சம் கீழ இறங்குங்க சார், இன்னும் ஸீன் முடியல.”
ஜீவா கீழிறங்காது, ‘என்ன விடயம் என்பதை சீக்கிரம் சொல்’ போன்றோரு வெட்டும் பார்வையை சிதம்பரத்திடம் வீசினான்.
“நீ அந்த வெற்றி பய அல்லக்கைதானே, அதான் அவன மாதிரியே சூடா இருக்க” என்ற சிதம்பரம், “வேற ஒண்ணுமில்லை… நீ பாட்டுக்கு என் பொறந்தவன நீதிமன்றத்துல ஒப்படைச்சிட்டனா என் அரசியல் வாழ்க்கை, கட்சியில என் மதிப்பு மரியாதையெல்லாம் என்னாவுறது” எனக் கேட்டார்.
“அதுக்கு நானோ வெற்றி சாரோ ஒன்னும் பண்ண முடியாது, எல்லாம் நீங்க பண்ண தப்புக்கான தண்டனை” எனக் கூறிய ஜீவாவை தீயாய் முறைத்தார் சிதம்பரம்.
“என்னடா, இவன் கிட்ட போயி வளவளன்னு அளந்துகிட்டு கிடக்க… சட்டுப்புட்டுன்னு சொல்ல வந்ததை சொல்லி, என்னைய கூட்டிப்போடா.” கைதியாக காவல்துறை வாகனத்தில் அமர்ந்திருப்பது அவமானமாக இருக்க சிதம்பரத்திடம் காய்ந்தார் ரத்தினம்.
“மொத வழியை விடு.” நீதிமன்றம் செல்ல நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து ஜீவா ரத்தினத்திக்கு மேல் சத்தமாகக் கத்தினான்.
“அமைச்சருங்கிற மரியாதை இல்லாம என்னடா எங்கிட்டவே சத்தம் போடுற?” சிதம்பரம் ஜீவாவை அதட்டினார்.
“உன் மரியாதையெல்லாம் குற்றவாளிக்கு சப்ப கட்டு கட்டிக்கிட்டு வந்து நின்னப்பவே காணாமல் போச்சு” என கேலியாக பதில் சொன்ன ஜீவாவின் முன்… தனது அலைபேசியில் காணொளி ஒன்றை ஓடவிட்டார் சிதம்பரம்.
காணொளியில் ஜீவாவின் தங்கை மர நாற்காலியில் கட்டிப்போட்டிருக்க, அவளை சூழ்ந்து ஆறு தடியர்கள் விகாரமானத் தோற்றத்துடன் நின்றிருக்க, ஒருவன் போதை ஊசியை அவளுக்குள் செலுத்த அருகில் கொண்டு சென்றிருந்தான். காணும் காட்சி உடல் பதறி மூளையை மரத்துப்போகச் செய்ய பயத்தில் அசைவின்றி நின்றான் ஜீவா.
“என்ன சத்தத்தை காணோம், அதுல இருக்கிறது உன் கூட பொறந்தவதான். அதுல சந்தேகமே வேண்டாம். இப்போ நான் சொல்லுறதை செஞ்சாக்க அவ(ள்) ஒரு கலங்கமும் இல்லாமல் வீடு வந்து சேருவா(ள்)” என்றார் சிதம்பரம்.
“என்ன மிரட்டி பார்க்குறீங்களா?”
“ம்ச்… அப்படியும் வச்சிக்கோ, எனக்கு என் அரசியல் பேரு கெட்டுப்போகக் கூடாது.”
“நான் முடியாது சொன்னாக்கா?”
ஜீவாவின் தங்கையை அடைத்து வைத்திருக்கும் தடியர்களுக்கு காணொளி அழைப்பு விடுத்த சிதம்பரம், “அவளுக்கு ஊசியை போட்டு மத்த பொண்ணுங்களுக்கு பண்ணதையே பண்ணிடுங்கடா, அதை இவன் பார்த்து ரசிக்கட்டும்” என்றவர் ஜீவாவின் முகத்துக்கு முன் அலைபேசியை காட்டினார்.
ஒருவன் ஊசியை அவளின் தோலில் வைத்து அதிலுள்ள போதை மருந்தினை மெல்ல உட்செலுத்திட, மற்றொருவன் அவளின் கழுத்தில் சுற்றியிருந்த துப்பட்டாவை உருவினான்.
“பொண்ண நல்லா தக்*ளி கணக்கா வள(ர்)த்துருக்கடா.”
அடுத்த நொடி, “நீ என்ன சொன்னாலும் நான் செய்யுறேன்” என வேகமாக வண்டியிலிருந்து இறங்கிய ஜீவா தரையிலமர்ந்து முகத்தை மூடியவாறு சிதம்பரத்திடம் கெஞ்சினான்.
“அப்படிவா வழிக்கு” என்ற சிதம்பரம் “என்னதான் நான் என் அண்ணனை காப்பாத்தினாலும் அந்த வெற்றி பய சும்மா இருக்க மாட்டான், எப்போபாரு கொடைஞ்சிகிட்டே இருப்பான். இதுவொன்னும் சுண்டைக்கா விடயமில்ல, நாங்க பண்ணது அப்படி… முழுசா இதுலேர்ந்து வெளிய வரனுமுன்னா, இருக்குற ஒன்ன இல்லாமல் ஆக்கணும்” என்று தனது திட்டத்தைக் கூற, முதலில் மறுத்தாலும் தன் தங்கையை கருத்தில் கொண்டு தன்னை முழுதாய் நம்பியுள்ள வெற்றிக்கு துரோகம் இழைத்தான் ஜீவா.
சிதம்பரத்தின் திட்டப்படி, வண்டியை மலையடிவாரத்தில் கீழே தள்ளியவன்… தானே தனது உடலில் சில காயங்களை ஏற்படுத்திக்கொண்டு, மனதிலெழுந்த குற்றவுணர்வுடன் ரத்தினத்தை சிதம்பரத்திடம் ஒப்படைத்தான்.
“என் தங்கை?”
“இந்நேரம் அவ(ள்) உன் வீட்டு வாசல்ல இருப்பாளே. இப்போ நாங்க சொல்றத செஞ்சிபுட்டு, பின்னாடி ஏதாவது வில்லத்தனம் பண்ண… உன் தங்கச்சி மானம் ஊர் முழுக்க கொடி கட்டி பறக்கும்” என்று ஜீவாவை எச்சரித்த சிதம்பரம் யாருக்கும் தெரியாது ரத்தினத்தை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.
இச்செயலால் ரத்தினம் அன்றே இறந்துவிட்டதாக அனைவரும் நம்பினர்.
தான் செய்த செயல் தனது பணிக்கு இழைத்த துரோகமாகக் கருதிய ஜீவா, வெற்றியிடம் கூட சொல்லாது தன்னுடைய பணியை ராஜினாமா செய்தவன், தன் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு அன்றே அங்கிருந்து சென்றுவிட்டான்.
அனைத்தையும் கூறி முடித்த ஜீவா வெற்றியிடம் மன்னிப்பு வேண்ட,
“இப்போதாவது நடந்த உண்மையை சொல்லியதற்கு நன்றி” எனக்கூறிய வெற்றி “ரத்தினம் இருக்குமிடம் தெரியுமா?” எனக்கேட்க தெரியாதென ஜீவா சொல்லியதும் நேரத்தை கடத்த விரும்பாத வெற்றி இணைப்பைத் துண்டித்துவிட்டு அடுத்து என்னவென்று யோசிக்க ஆரம்பித்தான்.
யோசித்த சில வினாடிகளில் வழி ஒன்று புலப்பட, ராமினை அழைத்தான்.
‘குறுக்க ஆள் உதவுமா? சிறையிலிருக்க சிதம்பரத்துக்கும் வெளியில இருக்க ரத்தினத்திக்கு தகவல் பரிமாற்றம் நடைபெற வாய்ப்பில்லை’ என மனதோடு கணக்கிட்டுப் பார்த்த வெற்றி,
“அந்த ஜெயிலர்க்கு வரும் அழைப்புகளை கன்ட்ரோல் ரூமுக்கு அழைத்து பதிவு செய்ய சொல்லுங்க, அப்புறம் கடந்த மூன்று தினங்களா வந்த அழைப்புகளை அறிய முடியுமான்னு கேட்டு எனக்கு உடனடியாக தகவல் கொடுங்க” என்று ராமிடம் சொல்லிய வெற்றி,
அலைபேசி உரையாடலில் ஜீவா சொல்லிய அனைத்தையும் பதிவு செய்திருந்ததை ஒரு ஆதாரமாக ரத்தினத்தின் வழக்கில் சேர்த்தான்.
“சார் நீங்க நினைச்சது சரிதான்… ஜெயிலர் தான் அவர்களுக்கு இடையில் மீடியேட்டர் வேலை பார்த்திட்டு இருக்கான்.”
ராம் சொல்லியதும்
‘எதிர்பார்த்ததுதான்’ என நினைத்த வெற்றி ராமை அர்த்தமாக பார்க்க,
“இனி வரும் அழைப்பை பதிவு செய்வதாக சொல்லியிருக்காங்க சார். அப்புறம், இதுக்கு முன்னடி வந்த அழைப்புகளை எடுப்பதற்கு கொஞ்சம் டைம் கேட்டிருக்காங்க” என்று வெற்றி எதிர்பார்த்த தகவல் அளித்தான் ராம்.
“இங்கிருந்து காலம் கடத்த வேண்டாம் ராம்” என்ற வெற்றி கன்ட்ரோல் அறை நோக்கி விரைந்தான்.
__________________________
“என்னம்மா வெற்றிக்கு போன் போட்டியா, எப்போ வாறேன் சொன்னான்?”
செண்பகம் அமரியிடம் கேட்க, அவள் பதில் சொல்லாது கைகளை பிசைந்தபடி நின்றாள். அவளுக்கு பதில் தெரிந்தால் தானே சொல்லுவதற்கு, பலமுறை அமரியும் வெற்றிக்கு அழைப்பு விடுத்து சோர்ந்து விட்டாள். வெற்றி அழைப்பினை ஏற்பதாய் இல்லை.
அமரி பாவமாக கதிரை நோக்க, அவனும் உதடு பிதுக்கினான்.
இருவரின் பார்வை பரிமாற்றங்களை கவனித்த நல்லு,
“சுத்தம் உனக்கே வெற்றி வருவானா இல்லையா தெரியாதா, அப்போ அவன் வந்த மாதிரிதான்” என கதிரிடம் கூறியவர்…
“நாமளாவது நடக்க வேண்டியதை கவனிப்போம் வாங்க” என்று மற்ற ஆண்களை அழைத்துக் கொண்டு மேற்படி நடக்கவேண்டியவற்றை கவனிக்கச் சென்றார்.
“திரும்ப ஒருமுறை அண்ணாக்கு முயற்சித்து பாரேன் அமரி.”
அமரியிடம் சொல்லிய சசி திரும்ப, அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகிலிருந்த மரத்துக்கு பின்னால் சக்தியும் மதியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.
“என்ன நடந்தாலும் அவன் காரியத்துல சரியா இருக்கான்.”
“யாரு?”
சசி சொல்லியது புரியாமல் கேள்வியாக இழுத்த அமரியின் தலையை திருப்பி சக்தி அமர்ந்திருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினான்.
“அதுல உனக்கென்ன வயித்தெரிச்சல்?”
“நான் பாவமில்லையா, அதான் இரண்டொரு மாசத்துல கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்காங்க தானே… அப்புறம் எதுக்கு லவ் விட்டுட்டு சின்னப்பய என்னைய வெறுப்பேத்துறான்.” சிறு பிள்ளையென புகார் வாசித்தான் சசி.
“உன் கொடுப்பினை அவ்வளவுதான், நீ மொத சைட் அடிக்க கத்திக்கோ” என்ற அமரி, “பாரு திருவிழா கூட்டத்துல கலர் கலரா பொண்ணுங்க சுத்துறாங்க… ஏதாவது ஒன்னுக்கு பிட்டு போடு” என்றாள்.
சசி ஏதோ சொல்ல வர, “எனக்கு வேற வேலையிருக்கு உன் பிரம்மச்சரிய புலம்பல் கேட்க என்னால முடியாது” என்று அவனை பேச விடாது அமரி தடுக்க, காலினை தரையில் உதைத்தவாறு சக்தியின் காதல் நேரத்தை கலைக்க அவனை நோக்கி சசி செல்ல அமரி மீண்டும் வெற்றியின் அலைபேசிக்கு முயற்சித்தாள்.
இம்முறை அமரிக்கு அலைவரிசை கிடைக்காது தொல்லை செய்ய, அலைபேசியில் அலைவரிசை எங்கு கிடைக்குதென்று அதிலேயே கவனம் வைத்தவளாக கோவிலின் பின்புறம் வந்திருந்தாள்.
“என்னம்மா சிக்னல் கிடைக்கலையா?”
முதுகுக்கு பின்னால் ஒலித்த யாரோ ஒருவரின் குரலில் ஆமென்று பதில் சொல்லிய அமரி அலைபேசியிலேயே கவனம் பதித்திருந்தாள்.
“அங்க இருக்க பாறைக்கு பக்கத்துல நல்லா சிக்னல் கிடைக்கும், அங்க போயி முயற்சி பண்ணும்மா” என்றவர் அமரி திரும்பி யாரென்று பார்ப்பதற்குள் சென்றுவிட்டார்.
ஒருமுறை அவர் யாரென்று பார்த்திருந்தால், தெரியாத அந்நபர் யாரென்று யோசித்திருந்தால், நடக்கும் விபரீதம் நடக்காமல் போயிருக்குமோ!
அவர் சொல்லிய பாறைக்கு அருகில் அமரி செல்ல, சக்தியிடமும் மூக்கு உடைந்து வந்த சசி அமரியைத் தேடி இறுதியில் அவளை கண்டு பின் சென்றான்.
______________________________
“என்ன சார் இப்போ கூடவா இந்த சாக்லெட்.”
நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த வெற்றி வழக்கம்போல் இனிப்புக் கட்டியை சுவைத்துக் கொண்டிருந்தான்.
இந்நேரத்தில் கூட இவர் இப்படி இருக்கிறாரென்று ராமின் வார்த்தைகள் சலிப்புடன் வந்தது.
“சார் அவங்க உரையாடல் வைத்து ஒன்னுமே கண்டுபிடிக்க முடியலயே… ஆனால் ரத்தினம் உயிருடன் தான் இருக்கின்றான் என்பதற்கு அலைபேசி உரையாடல் பதிவு போதும். இன்னும் என்ன சார் யோசனை?”
“அவன் எங்கு பதுங்கிருக்கான்னு தெரியணுமே?” வெற்றியின் குரலில் இருந்தது என்ன மாதிரியான உணர்வென ராமால் பிரித்தறிய முடியவில்லை.
“ஆனால் இந்நிலையில் கூட எப்படி சார், அவங்க உங்க மனைவி சார்.” ராமிற்கு அருகிலிருக்கும் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. வெற்றி என்ன நினைக்கின்றான் எதற்காக இப்படி செய்கின்றான் ஒன்றும் புரியவில்லை.
“நீங்க தானே ராம் சொன்னீங்க, ரத்தினம் இன்னொரு தப்பு பண்ணாக்கா அவனை நெருங்க ஏதாவது வழி கிடைக்கும் அப்படின்னு” என்று வெற்றி ஏதோ உள்ளர்த்தம் வைத்துக் கூற,
“அதுக்காக இப்போ நீங்க செய்யுறது, அதுவும் உங்க மனைவியையே…”
ராம் மேலே கூறாத வகையில் வெற்றியின் அலைபேசி அலறியது. அழைத்தது கதிர்.
“மச்சான் அமரியையும், சசியையும் காணோம்டா… திருவிழா மொத்த கூட்டத்தையும் அலசியாச்சு” என்று பதட்டமாகக் கூறினான் கதிர்.
கதிரிடம் காணப்பட்ட பதட்டம் வெற்றியிடம் சிறிது கூட இல்லை.
“அய்யோ… என் பேத்தி எங்க போனா(ள்) தெரியலயே, எங்குலம் தழைக்க வந்தவளை கண்ணுல காட்டுத்தா.” செண்பகம் பாட்டி அமரியை காணாது புலம்புவது அழைப்பில் இந்த பக்கம் வெற்றிக்கு நன்கு கேட்டது.
“என்ன வெற்றி அமைதியா இருக்க, நான் அங்க வரட்டுமா?” வெற்றியிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாமல் போக வெற்றியை நினைத்து பயந்தான் கதிர்.
“தேர் வடம் பிடிக்கும்போது நான் எழில், சசியோடு அங்க இருப்பேன்” என்ற வெற்றி இணைப்பைத் துண்டித்துவிட்டு,
“நம்ம வேலை ஆரம்பமாச்சு ராம்” எனக்கூறி மர்மமாக புன்னகைத்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
51
+1
4
+1