காவ(த)லன் 27
அம்மன் வழிபாட்டு பாடல்கள் உடன் பம்பை, உடுக்கை ஒலியின் சத்தம் காற்றில் கலந்து ஊர் முழுக்க பக்தியை பரப்பியது.
பார்க்கும் எங்கும் வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு ரசனைக்குரிய இடமாக மாறியிருந்தது.
கூடும் கூட்டத்தினரின் தாகம் போக்க ஆங்காங்கே நீர் மோர் பந்தலிட்டு இருந்தனர். சிறுவர்கள் வண்ணத்து பூச்சியாய் சுற்றித்திரிய, காளையர்களை கொள்ளையடிக்கவே கன்னியர்கள் தங்களது சிரிப்பு சத்தத்துடன் வளைய வந்து கொண்டிருந்தனர்.
தள்ளு வண்டி கடைகள், நொறுக்கு தீனி கடைகள், பலூன் வண்டி, ராட்டினம், பஞ்சுமிட்டாய் என இன்னும் பலதரப்பட்ட கடைகள் கோவிலின் ஒரு பக்க இடத்தை நிரப்பியிருக்க… மற்றொரு பக்கம் நீண்ட துணி பந்தலிட்டு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒருபுறம் பெண்களுக்காக உரியடித்தலும், ஆண்களுக்காக வழுக்கு மரம் ஏறுதலும் துவங்கத் தயாராக இருந்தது.
தேர் வடம் பிடிக்கும் வரை மக்களின் பொழுதுபோக்கிற்காக இவ்வகை போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்மனுக்கு வேண்டிய துணி தங்கவேலு வீட்டிலிருந்தும், நகைகள் வெங்கடாசலம் வீட்டிலிருந்தும் வருவதாக இருந்தது.
எப்போதும் தனித்தனியாக நடைபெறும் திருவிழாவிற்கு, யார் பொறுப்பேற்கின்றாரோ அவர்களே அம்மனின் அலங்காரத்திற்கான பொருட்களின் முழு பொறுப்பையும் ஏற்பர். ஆனால், இம்முறை இணைந்து நிகழ்வதால் தங்களுக்குள் எவ்வித மன கசப்பும் வந்துவிடக் கூடாதென முறையாக பிரித்து செய்கின்றனர்.
“ஐயா இன்னும் அலங்காரத்துக்கு வேண்டியவை வந்து சேரலையே.” பூசாரி கவலையாக செல்லச்சாமியிடம் கூறினார்.
“வர வேண்டிய நேரத்துல வந்துடுமய்யா, மத்த ஏற்பாட்டை கவனி” என்ற செல்லச்சாமி தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்தார்.
அங்கு ஏற்கனவே நல்லு, சேது, விநாயகம், ராசு முன்னின்று தேரினை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
“வேலையெல்லாம் சுருக்க முடிஞ்சிரும் போலிருக்கே” என்றபடி அங்கு வந்த செல்லச்சாமி, தனது மகள் மதியிடம் அனைவருக்கும் பழச்சாறு கொண்டுவருமாறு கூறினார்.
“இன்னும் நகையெல்லாம் வரலன்னு பூசாரி புலம்பிட்டு இருக்காரு” என்று செல்லச்சாமி துணி மற்றும் நகையை பற்றி வினவ,
“கொண்டு வந்திடுவானுங்க” என கதிர், வெற்றியை மனதில் வைத்து நல்லு மற்றும் விநாயகம் ஒருசேரக் கூறினர்.
“இன்னும்மா உன் பொஞ்சாதி கிளம்பிட்டு இருக்கா, உன் அப்பன் போயி எவ்ளோ நேரமாவுது… நாமலே தாமதமா போலாமா” என பஞ்சு கதிரை பார்த்து வினவினார்.
“நான் என்ன அப்பத்தா பண்றது, அவதான் கட்டுற புடவையெல்லாம் ஏதாவது குறை சொல்லி மாத்திக்கிட்டே இருக்காளே” என்று வாணியை நினைத்து அலுத்துக் கொண்டான் கதிர்.
“அப்போ அடுக்கி வச்சிருக்க புடவையெல்லாம் சுத்தி பார்த்திட்டுதான் வருவான்னு சொல்லு” என்று சொல்லி பஞ்சு பாட்டி சிரிக்க,
“பந்தயத்துல தோத்தவங்களுக்குலாம் என்னை கேலி செய்ய உரிமையில்லை” என்று நொடித்தவாறு வாணி அவர்களிடம் வந்து சேர்ந்தாள்.
வாணி இடித்துக் காண்பித்ததை விட வேகமாக பஞ்சு மோவாயினை தோளில் இடித்து முகத்தை திருப்பினார்.
“என்ன பஞ்சு விட்ட சாவாலில் தோத்துட்டோமுன்னு வருத்தமா?”
“அடி போடி கூறு கெட்டவளே, வம்சம் தழைச்சதுக்கு யாராச்சும் வெசன படுவங்களா… இதுல நீ ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரிதான்… இந்த குடும்ப வாரிசை பெத்துக்க போற உன்கிட்ட எனக்கென்னத்துக்கு வீராப்பு” என்று பஞ்சு பாட்டி அன்று போட்ட சவாலெல்லாம் இல்லையென அந்தர்பல்ட்டி அடித்தார்.
“உங்க பாட்டிக்கு குப்புற விழுந்தாலும் மூஞ்சிலே மண்ணு ஒட்டலையாம்.” வாணி கதிரின் காதில் முணுமுணுத்தாள்.
“சரி சரி அரட்டை அடிச்சதெல்லாம் போதும், வெரசா கோவிலுக்கு போவனும்… வாங்க.” கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களைத் தட்டில் அடுக்கியவாறு அன்னம் மற்றவர்களை கிளம்ப ஆயத்தமாக்கினார்.
“வாங்க காவலரே…”
முழுதாக இரண்டு இரவு ஒரு பகல் முடித்து வீடு வந்த கணவனை அமரி வரவேற்றாள். மனைவியை கவனிக்கும் நிலையில் வெற்றி தற்போது இல்லை. சோர்வோடு மெத்தையில் அமர்ந்தான்.
“இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா, யாரோ ஒரு குற்றவாளி மருத்துவமனையில இறந்து… அது விடயமா அன்னைக்கு ராவு வரமா போனதுலேர்ந்து இப்படிதான் பண்றீங்க… வீட்டுக்கு ராவுல வரதே கிடையாது. உங்க எழிலு ஞாபகம் இருக்கா இல்லையா?” கோவிலுக்கு செல்லத் தயாராகிக் கொண்டே பேசியவள், இறுதியில் இடுப்பில் கை வைத்து நின்று கணவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்.
பதிலேதும் கூறாது அமரியையே பார்த்த வெற்றி அவளை அருகில் வாவென பார்வையாலேயே அழைக்க, அமரியும் அவனருகில் சென்று நின்றாள்.
வெற்றி மெத்தையில் அமர்ந்திருக்க, அமரி நின்றவாக்கிலேயே அவளைக் இடையோடு கட்டிக்கொண்டான்.
“காவலருக்கு மனசு சரியில்லையோ!” கணவனின் அணைப்பை ஏற்றுக்கொண்ட அமரி வெற்றியின் சிகையை கோதியவாறு கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, உன்னைய இப்படி கட்டிக்கணும் தோணுச்சு” என்ற வெற்றி மேலும் தனது அணைப்பை இறுக்கினான்.
அந்நேரம் அமரியின் அலைபேசி சிணுங்கியது. அழைத்தது சசி.
வெற்றியிடமிருந்து விலகாது எட்டி அலைபேசியை எடுத்த அமரி சசியென்றதும்,
“எதுக்குடா கீழ இருந்துட்டு போன் போட்டிருக்க?” என்று சிறு கடுப்புடன் வினவினாள்.
“அண்ணா இப்போதான் மாடியேறி வந்ததை பார்த்தேன், பாட்டி வேற உன்னை கூட்டியாற சொல்லுச்சு… இப்போ நான் வந்தாக்கா கரடி சொல்லுவ அதான் போன் போட்டேன்.” நீண்ட விளக்கம் சசி கொடுத்ததில் அமரிக்கு சிரிப்பு வந்தது.
“இப்பவும் நீ கரடி தான்டா” என்றவள் அவன் அழைத்ததற்கான காரணமும் விளங்க ஐந்து நிமிடங்களில் வருவதாகக் கூறி அலைபேசியை அணைத்தாள்.
“என்னாச்சு வெற்றி, சொல்லலான்னா சொல்லுங்க…”
பணிச்சுமை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் தாக்கத்தினை அமரியுடன் இருக்கும்போது வெற்றி எப்போதும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் இன்று அவனின் நிலை அமரியை அவ்வாறு கேட்க வைத்தது.
அமரியை ஆழ்ந்து நோக்கியவன்,
“இவ்வளவு நாட்கள், கிட்டத்தட்ட ஒன்னரை வருடம் இறந்துவிட்டதா நான் நினைத்திருக்க… அவன் உயிரோடு இருக்கிறான்.”
“யாரு?”
வெற்றி பார்த்த பார்வையிலேயே மேற்கொண்டு எதையும் கேட்காதே என்பதை புரிந்து கொண்ட அமரி அவனின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து,
“எதுவாயிருந்தாலும் சரியாகிடும் வெற்றி” என்றாள்.
அப்போதுதான் அவள் தன்னை பெயர் சொல்லியழைப்பதை வெற்றி உணர்ந்தான்.
“அதென்ன எப்பவும் காவலரே சொல்லுவ இப்போ மட்டும் பேர் சொல்லி கூப்புடுற” எனக் கேட்டான்.
“உங்கள சீண்டும்போது காவலரே சொன்னாதான் நல்லாயிருக்கும், மத்த நேரத்துலலாம் வெற்றி தான்” என்றவள் அவனிடமிருந்து நழுவி கோவிலுக்கு செல்ல அவனுக்கு புத்தாடை எடுத்து வைத்தாள்.
“அப்போ புருஷனை மாமா, அத்தான், மச்சான் இப்படிலாம் கூப்பிடனும் தோனாதா?” எனக் கேட்டான் விஷமப் புன்னகையுடன்.
“காவலரை பொண்டாட்டி பெயர் சொல்லி கூப்பிடுறது கௌரவ குறைச்சலா இருக்கோ?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவளை சுண்டி இழுத்து தன்னுடைய அணைப்புக்குள் நிறுத்திய வெற்றி, “எழில் என்னவும் சொல்லலாம். அதுக்கெல்லாம் சேர்த்து” என்று காதில் கிசுகிசுக்க…
“அச்சோவ்” என்று அவனை தள்ளிவிட்டு விலகி நின்றாள்.
“நீங்க பேசவே மாட்டிங்கன்னு சசி சொன்னான். அவன் உங்களோட இந்தப்பேச்சைக் கேட்டால் வாயில் கை வச்சு உறைஞ்சிடுவான்… அவ்வா…” என்று அமரி சொல்ல, வெற்றி சத்தமிட்டு சிரித்தான்.
“போதும்… போதும்… சிரிச்சா சாய்க்க வேண்டியது” என்றவள், “குளிச்சிட்டு வாங்க, கோவிலுக்கு போவனும்” என்றாள்.
“என்னால வர முடியாது எழில், நான் உடனே ஸ்டேஷன் போவனும்” என்ற கணவனை முறைத்தாள்.
“இப்போகூட வந்திருக்க மாட்டேன், உன்னை பார்க்கணும் போல தோணுச்சு எழில் அதான் வந்தேன்” என வெற்றி தன்னிலை விளக்கம் கொடுக்க,
“உங்க கையை பிடிச்சுக்கிட்டு திருவிழாவை ஒரு ரவுண்டு வரணுமுன்னு ரா முச்சிடும் கனா கண்டேன் தெரியுமா” என்று லேசாக கண் கலங்கினாள் அமரி.
கணவனுடன் ஊர் சுற்ற வேண்டுமென்கிற ஏக்கம் அவளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“எழில்.”
தன் மனைவி தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்கிற வருத்தம் வெற்றியின் ஒற்றை அழைப்பில் வெளிப்பட்டது.
“ஏற்கனவே இந்த வழக்கு உங்கள பாடா படுத்துது… இதுல நானும் உங்கள வருத்தப்பட வைக்கிறேன்” என்ற அமரி வெற்றியின் அருகில் வந்து அவனின் கன்னம் தாங்கினாள்.
“இன்னையோட நம்ம வாழ்க்கை முடிய போறதில்லை, இந்த வழக்கை முடிச்சிட்டு நீங்க அமைதியாகுங்க… எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” எனக்கூறிய அமரி, வெற்றிக்காக எடுத்து வைத்த புத்தாடையை மீண்டும் வார்ட்ரோப்பில் வைத்துவிட்டு காக்கி உடையை எடுத்து வெளியில் வைத்தவளாக அறையைவிட்டு வெளியேற முற்பட்டாள்.
“எழில்” என்று அழைத்து செல்லும் அவளை நிறுத்திய வெற்றி, அமரியின் புரிதலில் மனம் நெகிழ்ந்து… “லவ் யூ” என காதலாக மொழிந்தான்.
வெற்றி தன்னுடைய காதலை அடிக்கடி வெளிப்படுத்தும் ரகம் அல்ல. அத்தி பூத்தாற் போன்று அவனின் மனம் திறக்கும். அவன் வாய் திறந்து வரும் அந்நொடி மொத்த உலகும் தன் கையில் அடங்கியிருப்பதைப் போன்று அமரி உணர்வாள். இப்போதும் அதே பரவசம் மனம் முழுக்க பரவிய போதும் வெளிக்காட்டிக்கொள்ளாது, குறுநகை சிந்தியவள்,
“லவ் யூ டூ காவலரே” என்றவளாய் கீழே ஓடிவிட்டாள்.
புன்னகை முகமாக வந்த மருமகளின் கன்னம் வழித்த ஜானகி, “வெற்றி வரலையாம்மா?” என்க… அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது அமரி விழித்தாள்.
வெற்றி வரவில்லையென சொன்னால் வருந்துவார்களே என்கிற எண்ணம்.
“இப்போதான் உள்ள போனான் வர நேரமாகுமில்லையா, அதுக்குள்ள நீ எடுத்து வைக்க வேண்டியதை எடுத்து வைத்தா” என்ற செண்பகத்தின் வார்த்தையில் ஜானகிக்கு பதில் சொல்லாது அமரி தப்பினாள்.
“அடேய் சசி.”
“சொல்லுங்கம்மா” பலகாரத்தை சுவைத்தபடி வந்து நின்றான்.
“அம்மன் படையலுக்கு போறதுக்கு முன்னுக்க இப்படி உன் வயித்துல நிரப்புறியே” என்ற ஜானகி சசியின் முதுகிலேயே ஒரு அடி வைத்தார்.
அவரின் அடியையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாத சசி, மீண்டும் ஒரு பலகாரத்தை வாயில் அடைத்துக்கொண்டே ஓட அவனை துரத்தினார் ஜானகி.
“உங்க விளையாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கீங்க, பெரியப்பாரு இன்னும் நகை வந்து சேருலன்னு போன் போட்டு கத்துறாரு” என்றவனாக சக்தி வந்தான்.
இருப்பினும் சசியை ஒரு அடி அடித்த பின்னரே ஜானகி அவனை விட்டார்.
செண்பகம் பாட்டி உள் சென்று அம்மனின் நகையை எடுத்து வந்து பட்டுத்துணியில் சுற்றி தட்டில் எடுத்து வைத்தார்.
அமரியிடம் ஆரம் ஒன்றை கொடுத்து போடச் சொன்னவர், “இது பரம்பரை பரம்பரையா நம்ம வீட்டோட மூத்த மருமவ போடுறது” என்றார்.
“நல்லாயிருக்கு பாட்டி” என்ற அமரி ஆரத்தை அணிந்து கொண்டாள்.
கோவிலுக்கு செல்ல அனைத்தும் தயாராக இருக்க,
“வெற்றி வந்துட்டாக்கா கிளம்பிடலாம், நீ போயி அவனை இழுத்தாத்தா” என்று செண்பகம் சொல்ல அமரி தயங்கி நின்றாள்.
“என்னத்தா, சீக்கிரம் போவனுமில்லையா?” என்க,
“நான் இப்போ வரல” என்றவாறு வெற்றியே அங்கு வந்தான். வெற்றி அணிந்திருந்த காக்கி உடையே அவன் கோவிலுக்கு வரப்போவதில்லை என்பதை எடுத்துக்காட்டியது. எப்போதும் அவனது முடிவே இறுதியானது என்பதை அறிந்தவர்கள் வெற்றியை கோவிலுக்கு வருமாறு வற்புறுத்தவில்லை.
“வேலை முக்கியந்தான் வெற்றி, அதைவிட குடும்பத்தோட ஒட்டுக்கா இருக்க நேரம் ரொம்ப ரொம்ப முக்கியம்” என்ற ஜானகி மற்ற தன் மக்களையும் பாட்டியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
இறுதியாக சென்ற சக்தியை பிடித்து நிறுத்திய வெற்றி,
“பாதுகாப்புக்கு போலீஸ் போட்டிருக்கு, இருந்தாலும் எல்லாரையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோ… கதிருகிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்” என்ற வெற்றி அமரியிடம் பார்வையாலே ஆயிரம் பத்திரம் சொல்லி அவர்களுக்கு முன் தன் பணி செய்ய சென்றுவிட்டான்.
வெற்றியின் கவனம் சாலையில் இருப்பினும் அவனின் மனம் ரைட்டு இறந்த நிகழ்விலேயே சுற்றியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரைட்டு இறந்துவிட்டதாக தகவல் வந்ததும் அடுத்த சில நிமிடங்களில் வெற்றி மருத்துவமனையில் இருந்தான்.
“மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார்” என்று மருத்துவர் சொல்ல அதனை நம்ப மறுத்த வெற்றி அவ்வறையை தன் பார்வையால் முற்றிலும் அலசினான். அப்போதுதான் சுவற்றின் மேலிருந்த கண்ணாடி தடுப்பு உடைந்திருப்பது தெரிந்தது.
“இது ஏற்கனவே உடைந்திருந்ததா?” என்று அதனை ஆராய்ந்துக்கொண்டே வெற்றி கேட்க, இல்லையென செவிலி கூறினார்.
மருத்துவமனை கண்காணிப்பு காமிரா பதிவுகள் அனைத்தும் ஆராய்ந்த பின்பும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.
“தீடிரென்று மூச்சு திணறல். அதான் இறந்துவிட்டார், இதுல யோசிக்க என்ன சார் இருக்கு.”
ராம் சாதாரணமாக சொல்ல,
“அட்டாப்சிக்கு ரெடி பண்ணுங்க” என மருத்துவரிடம் சொல்லிவிட்டு…
“நிச்சயம் இது கொலைதான் ராம்” என்ற வெற்றி உடற்கூறு பரிசோதனை முடியும்வரை காத்திருக்கத் தொடங்கினான்.
ரைட்டுவின் சிகிச்சைக்காக அவனுடன் இருந்த செவிலி வெற்றியிடம் ஏதோ சொல்ல வருவதுமாகவும், பின்பு பின் வாங்குவதுமாக இருக்க… அதனை கவனித்த வெற்றி,
“அட்டாப்சி ரிப்போர்ட் எப்போ வரும் கேட்டுட்டு வாங்க ராம்” என்று ராமை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.
ராம் சென்றதும் செவிலியின் அருகில் வந்த வெற்றி, “என்னிடம் எதாவது சொல்லணுமா எனக் கேட்டான்.
கொஞ்சம் தயங்கினாலும் அவர் வெற்றி கேட்டதற்கு பதிலளித்தார்.
“சார் எனக்கு இன்று இரவு பணி… நான் வர சற்று தாமதமாகியதால் எனக்கு முன்னிருந்த செவிலி அவருடைய நேரம் முடிவடைந்ததும் சென்றுவிட்டார். நான் அறைக்குள் செல்லும்போது அவர் மூச்சுவிட ரொம்பவே சிரம பட்டுக் கொண்டிருந்தார்.”
ரைட்டு மூச்சுவிட முடியாது விழிகள் சொருக திணறிக் கொண்டிருக்க, பதட்டத்தில் செவிலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆக்சிஜன் செலுத்திய பின்னரும் அவரின் மூச்சு சீராகவில்லை. இனியும் தாமதிக்கக் கூடாதென்று செவிலி மருத்துவரை அழைத்து வர நகர, செவிலியின் கைபிடித்த ரைட்டு எதனையோ சொல்ல முயற்சித்தார். அவரால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. தொண்டை அடைத்தது. வாயிலிருந்து சத்தம் வராது போகவே எழுதி காட்ட நினைத்தவர் பேனா மற்றும் காகிதம் வேண்டுமென சைகையால் வினவ செவிலிக்கு அவர் என்ன கேட்கிறாரென்று புரியாமல் போனது. அந்நேரம் சுவாசம் தடைப்படுவதால் உடல் வெட்டி இழுக்க துடித்தவர் தன் கையில் பச்சை குத்தியிருந்த பெயரையும், அவ்வறையில் மாட்டப்பட்டிருந்த இரு குழந்தைகள் உள்ள புகைப்படத்தையும் மாற்றி மாற்றி காண்பித்தவர் இறந்தே போனார்.
செவிலி மருத்துவரை அழைத்து வந்து பரிசோதிக்க, அப்போதைக்கு அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாகவே உறுதி செய்யப்பட்டது.
நடந்த நிகழ்வினை செவிலி சொன்னதும், ரைட்டின் கையில் பச்சை எழுதியிருந்த சிதம்பரத்தின் பெயரையும், அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இரு குழந்தைகளின் முகத்தையுமே வெற்றி மனதில் நிறுத்தி அலசிக் கொண்டிருந்தான்.
அப்போது உள் வந்த ராம், “என்ன சார் இந்த பிரதர்ஸ் போட்டோவையே பார்த்திட்டு இருக்கீங்க” என்று வினவ ரைட்டு என்ன சொல்ல நினைத்தார் என்பதை வெற்றி சரியாக யூகித்தான்.
‘சிதம்பரம் + பிரதர்ஸ்… சிதம்பரத்தோட பிரதர் ரத்தினம்’ என சிந்தித்த வெற்றி, “ரத்தினம் இறந்துவிட்டாரே” என வாய்விட்டு தனக்குத்தானே கேட்க…
‘அவரின் இறந்த உடலை நீ பார்த்தாயா?’ என வெற்றியின் மனம் எதிர் கேள்வி கேட்டது.
“அப்போ ரத்தினம் உயிரோடு இருக்கானா… எங்கு இருக்கான்” என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெற்றியிடம் மருத்துவர் வந்தார். அவரின் கையில் ரைட்டின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இருந்தது.
“உங்களுடைய யூகம் சரிதான் வெற்றி, யாரோ அவரின் உடலுக்குள் கார்பன் டை ஆக்ஸைடு ஊசியின் மூலம் உட்செலுத்தியிருக்காங்க, அதனால் அடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டிருக்கு, கார்பன் டை ஆக்ஸைட் உள்ள இருந்ததால ஆக்சிஜனை உடல் ஏத்துக்கல” என்ற மருத்துவர் சென்றுவிட்டார்.
உடனடியாக நாச்சியை அலைபேசி மூலம் அழைத்த வெற்றி, “சிதம்பரம் சிறைக்கு சென்ற பின் யாரிடம் தகவல் கொடுத்தீங்க?” என்று வினவினான்.
“சிதம்பரத்தின் வலது கையாள்” என அவர் தெரிவிக்க,
“நீங்க சொன்னதும் அவன் ஏதாவது சொன்னானா?”
“இல்லையே சார்” என்று யோசித்தவர், “நான் மேலிடத்தில் சொல்லிக்கிறேன்னு சொன்னாருங்க” என்றார்.
‘அப்போ அந்த மேலிடம் ரத்தினமா… அவனெப்படி உயிரோடு.’ அன்று சிந்திக்கத் தொடங்கிய வெற்றிக்கு ஒரு வாரம் கடந்த நிலையிலும் ரத்தினம் விடயத்தில் எதையும் கண்டறிய முடியாது குழப்பத்துடனே இருந்து வருகிறான்.
அதே குழப்பத்தோடு காவல் நிலையம் வந்து சேர்ந்த வெற்றி ஒரு வருடத்திற்கு முன்பு மூடப்பட்ட ரத்தினத்தின் வழக்கு அடங்கிய கோப்பினை கையிலெடுத்தான்.
சரியாக ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு முன்பு,
வெற்றி பணியில் சேர்ந்து பல வழக்குகளை திறம்பட கையாண்டு முடித்து வைத்திருந்தாலும், அவனை பொறுத்தவரை எந்த வழக்கும் சவாலாக அமையவில்லை. அந்த வருத்தம் வெற்றிக்கும் இருந்தது.
எல்லாம் சப்பென்று இருப்பதாக வெற்றி நினைத்துக் கொண்டிருக்கும் சமயம் அவனே எதிர்பாராத வகையில் ஒரு வழக்கு அமைந்தது.
அப்போது ராம் இடத்தில் வேறொரு ஆய்வாளர் பணி புரிந்தார். அவரின் பெயர் ஜீவா. அவன் அப்போதுதான் பணியில் சேர்ந்த புதிது.
“இங்க பாருங்கம்மா ராத்திரியில் பெண்கள் யாரும் காவல் நிலையத்தில் இருக்கக்கூடாது.
“நீங்க முதலில் கிளம்புங்க,
“எனக்கு மேலதிகாரி வந்தாக்கா என் தலைதான் உருளும்.
“இடத்தை காலி பண்ணுங்க.”
ஜீவா அந்த இரவு நேரத்தில் நடுத்தர வயது பெண் ஒருவரிடம் கத்திக் கொண்டிருந்தான்.
அவரோ “என் பொண்ணை காணோங்க” என்று கதறி துடித்துக் கொண்டிருந்தார்.
“இப்படித்தான் பொண்ணை காணோம் பொடலங்காய காணோமுன்னு வந்து புகார் கொடுப்பீங்க, அடுத்து மறுநா(ள்) சப்ப காரணம் சொல்லி கொடுத்த புகாரை வந்து திருப்பி வாங்கிக்க வேண்டியது.
“இதனால எங்களுக்கு மேலிடத்தில் எம்புட்டு அழுத்தம் தெரியுமா? உங்க பொண்ணு சாயங்காலந்தானே காணாம போயிருக்கு, எப்புடியும் காலையில வந்திடும்… அப்படியும் வரலன்னாக்கா நாளைக்கு வந்து புகார் கொடு. இப்போ நீ இடத்தை காலி பண்ணும்மா.”
ஜீவா அப்பெண்மணியை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான். அதற்கும் காரணம் இருந்தது.
சில மாதங்களாகவே மலைப்பகுதிக்கு அருகிலிருக்கும் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்கள் காணாமல் போவதும், அவர்களின் உறவினர்கள் புகார் கொடுப்பதும், அதனைத் தொடர்ந்து ஏதேனும் விசாரணை நடப்பதும்,
மறுநாளே “எம்பொண்ணு தோழி வீட்டுக்கு போயிருந்தாள்,
“காட்டுப்பாதையில தடமாறி போயிட்டாள்,
“கல்லூரியிலேயே உட்காந்து படிச்சிப்போட்டு தாமதமாதான் வந்து சேர்ந்தாள்.
“காலையில அவ(ள்) அம்மா திட்டிட்டா(ள்)ன்னு கோவிச்சிக்கிட்டு உறவுக்காரங்க வீட்டுக்கு போயிட்டா(ள்)” என்ற ஒன்றுக்கும் உதவாத பலதரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு புகாரை திரும்ப பெறுவது சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்தக் கல்லூரி மலை மற்றும் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காகக் கட்டப்பட்டது.
அவர்களால் ரொம்ப தூரம் சென்று மற்றும் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க முடியாது என்பதால் சிதம்பரத்தால் கட்டப்பட்டு இரண்டு வருடங்களாகிறது. சிதம்பரத்தின் பெயரில் இருந்தாலும் அதன் முழு கட்டுப்பாடும் ரத்தினம் வசம்.
அரசியல்வாதி தலையீடு என்பதால் அதிரடியாக எதுவும் செய்ய முடியாது வெற்றி திணறினான்.
இதனால் வெற்றிக்கும் மேலிடத்திலிருந்து “என்ன அங்க நடக்குது… உங்க பகுதியில பொய் வழக்கு வாடிக்கையாகிடுச்சு, எதுக்காக இப்படியெல்லாம் நடக்குதுன்னு இன்னும்மா உன்னால கண்டுபிடிக்க முடியல” என்று அழுத்தம் வேறு கொடுத்தனர்.
ஆரம்பமே சரியாக அமையாத பட்சத்தில் வெற்றி எங்கென முடிவைத் தேடி பயணிப்பான்.
முதல் புள்ளியைத் தேடித்தேடி அலைந்தது தான் மிட்சம்.
‘பேசாமல் இதைவிட்டு விட்டு வேறு வழக்கு ஏதேனும் பார்ப்போம்’ என வெற்றி நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும் ஒருவர் தன் பெண்ணை காணவில்லையென புகார் அளிக்க வந்திருப்பது ஆய்வாளர் ஜீவாவுக்கு கடுப்பை கிளப்பியது.
அந்தக் கடுப்பில்,
“இந்தம்மாவை வெற்றி சார் வருவதற்குள் அனுப்பி வைக்கும் வழியைப் பாருங்கள்” என்று மகளிர் காவலரிடம் சொல்லிய ஜீவா காவல் நிலையம் விட்டு வெளியில் வந்து மரத்திண்டில் அமர்ந்தான்.
அமர்ந்தவன் அருகில் கிடந்த தடிமனான குச்சி ஒன்றின் மீது தனது கோபத்தைக் காட்டினான். குச்சியை முறித்து தூக்கி எறிந்தான்.
அந்நேரம் வெற்றி சரியாக காவல் நிலையம் நுழைந்து வளாகத்தினுள் தனது வண்டியை நிறுத்த, சக்கரத்தின் கீழ் விழுந்தது ஜீவா எறிந்த குச்சி.
“என்ன ஜீவா யாரு மேல கோவம்” எனக்கேட்ட வெற்றி அவனருகில் வந்து “நமக்கு கோவத்தை விட நிதானம் ரொம்ப முக்கியம்” எனக்கூறி உள் செல்ல, புகார் அளிக்க வந்த பெண்மணியை மகளிர் காவலர் வெளியே தள்ளிக்கொண்டு வந்தார்.
“யாரு இவங்க, ஏன் இப்படி தள்ளிட்டு வரீங்க?”
வெற்றி கேட்க என்ன பதில் செல்வதென்று தெரியாத பெண் காவலர் ஜீவாவை பார்த்தார்.
“என்ன விடயம், உங்களுக்குத் தெரியும் போலிருக்கே?”
வெற்றி ஜீவாவை கேள்வியாய் கேட்டான்.
“எல்லாம் வழக்கமா நடக்குறதுதான் சார். அவங்க பொண்ணை காணோமாம்.”
“ஓ.”
ஜீவா சாதாரணமாக சொல்ல வெற்றியும் அதனைக் கேட்டு எவ்வித உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.
“ஐயா நீங்களாவது புகார் எடுத்துக்கோங்கய்யா.” அந்தம்மா வெற்றியின் காலிலேயே விழுந்து விட்டார்.
பதறி விலகியவன் பெண் காவலரை தூக்கச் சொல்ல, அவரோ வெற்றியின் காலினை பிடித்துக்கொண்டு எழாது தர்க்கம் செய்தார்.
கடைசியில் ஒரு முடிவெடுத்த வெற்றி,
“இவங்க சொல்லறதை எழுதி கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க” என ஜீவாவுக்கு உத்தரவிட்டான்.
அப்பெண் வெற்றியை கையெடுத்து கும்பிட,
‘இதில் தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என வெற்றி மனதில் நினைத்தாலும்… காணாமல் போன பெண்கள் அனைவரும் மறுநாள் வீடு திரும்பி விடுவதால், இவரின் பெண்ணும் வந்து விடுவாள் என்கிற நம்பிக்கையில்,
“உங்க பொண்ணு விடிஞ்சதும் வந்திடுவாங்க, கவலைப்படாம போயிட்டு வாங்க” என்று ஆறுதலாகக் கூறி அனுப்பி வைத்தான்.
அப்பெண்மணி சென்ற பிறகு தனது கையறு நிலையை எண்ணி வெற்றி வருந்தினான். இதற்கு முன்னால் இதே போல் ஆறு பெண்கள் காணாமல் போய் திரும்பி வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஏதாவது சொன்னால் கூட போதுமென நினைத்து வெற்றி சென்றால், சுவற்றில் அடித்த பந்தின் நிலை தான். யாரும் வாய் திறப்பதில்லை. அப்படியும் வந்தால் அவர்களின் பெற்றோர் அடக்கிவிடுவர்.
‘எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது’ என நினைத்த வெற்றி… ‘பேசாமல் சந்தேகம் எழக்கூடிய சில பகுதிகளுக்கு சென்று பார்த்து வருவோமா’ என சிந்தித்தான்.
‘இப்படியே அமர்ந்திருப்பதற்கு அதையாவது செய்தால் தானொரு காவலன் என்பதற்கு கலங்கமில்லாமலாவது இருக்கும்.’
தனக்குள்ளேக் கூறிய வெற்றி மணியை பார்க்க அது நள்ளிரவை கடந்து பல மணிகளாகியிருந்தது.
கிட்டத்தட்ட முன்காலைப் பொழுது தொடங்கும் வேளை.
ஜீவாவை பார்க்க அவனோ மேசை மீதே தலை கவிழ்ந்தவாறு அரை உறக்கத்தில் இருந்தான். மூர்த்தியை பார்க்க அவரோ அந்நேரத்திலும் கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
“நீங்க எப்போ வந்தீங்க மூர்த்திண்ணா?”
“நான் ஜீவா சார் யாரோ ஒரு அம்மா கிட்ட புகார் வாங்கும்போதே வந்திட்டேன் தம்பி” என்றவர் “டீ வாங்கிட்டு வரவா தம்பி” எனக் கேட்டார்.
“இல்லைண்ணா, கொஞ்சம் வரீங்களா அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வருவோம்” என்றான்.
மூர்த்தியும் சரியென்றதோடு வேகமாக சென்று வண்டியை இயக்கினார். வெற்றி அமர்ந்ததும் மூர்த்தி நகர் பகுதியை நோக்கி வண்டியை செலுத்த,
“அந்த கல்லூரி இருக்க மலைப்பகுதி நோக்கி வண்டியை விடுங்கண்ணே” என்றான் வெற்றி.
வண்டி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த போதும் மனதிலிருந்த அழுத்தம் வெற்றியை சுற்றுப்புறத்தை அலச விடவில்லை.
மெல்ல இருக்கையில் சாய்ந்து கண்மூடியவாறு அமர்ந்திருந்தான்.
“என்ன தம்பி அந்த பொண்ணுங்க காணாமல் போற வழக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்குதா” என வெற்றியை பார்த்துக் கொண்டே கேட்ட மூர்த்தி சாலையில் பார்வையை திருப்பவும் ஓர் இளம்பெண் வந்து வண்டியின் முன் விழவும் சரியாக இருக்க சட்டென்று பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தார்.
வண்டி குலுங்கிய குலுக்களில் என்னவென்று வெற்றி கண் திறக்க மூர்த்தி வண்டியிலிருந்து இறங்கியே இருந்தார்.
“சார் ஒரு பொண்ணு சார்.” மூர்த்தி அதிர்வுடன் கூடிய பதட்டத்துடன் சொல்ல வெற்றியும் கீழிறங்கி சென்றான்.
மயக்க நிலையில் அப்பெண் விழுந்து கிடக்க, வெற்றி அப்பெண்ணின் கன்னம் தட்டி விழிக்கச்செய்ய முயற்சித்தான். மெல்லிய முனகல் மட்டுமே அப்பெண்ணிடமிருந்து வர கண் திறக்கவில்லை.
அடுத்த அரை மணிநேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். வெற்றிக்கு சிறு சந்தேகம் எழ புகார் கொடுத்த பெண்மணியை அழைத்து விசாரிக்க, அந்த இளம்பெண் அவருடைய மகளென தெரிய வந்தது.
இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அப்பெண் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டிருப்பதாக் கூற அவளின் தாய் தலையில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார்.
“கல்லூரி மாணவிக்கு எப்படி சார் போதை மருந்து?” ஜீவா சந்தேகமாகக் கேட்டான்.
“அது அந்தப் பொண்ணு கண் விழித்து சொன்னாதான் தெரியும்” என்ற வெற்றி பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து விட்டான்.
பல நிமிடங்கள் கடந்தும் அப்பெண் கண் திறக்காமல் இருக்க, ஜீவா மருத்துவரிடம் சென்று விசாரித்தான்.
“இரவு முழுக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போதை மருந்து எடுத்துகிட்டே இருந்திருக்காங்க சார்… அதனோட வீரியம் குறைய வேண்டாமா! மாலை கூட ஆகிவிடும்” என்றார் மருத்துவர்.
“நீங்கள் இங்கேயிருந்து கவனித்துக் கொள்ளுங்கள் ஜீவா, கண் விழித்ததும் தகவல் கொடுங்க” என்ற வெற்றி காவல்நிலையம் சென்றான்.
பெண் கிடைத்து விட்டாள். அந்த நிம்மதி ஒன்றே போதுமென நினைத்த அப்பெண்மணி தனது அழுகையை அடக்கினார்.
“சார் கொஞ்சம் பார்த்துக்கோங்க சார், என் ரெண்டாவது மவள பக்கத்து வூட்டுல விட்டுட்டு வந்தேன். நான் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேனுங்க” என்று ஜீவாவிடம் சொல்லிய பெண்மணி அவன் சம்மதம் வழங்கியதும் மகளின் அறை கதவை பார்த்தவாறே அங்கிருந்து சென்றார்.
மாலை அப்பெண் கண் விழிப்பதாக மருத்துவர் சொல்லிய நேரத்திற்கு வெற்றி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
“இன்னும் சுயநினைவு வரவலையா ஜீவா?”
“இல்லை சார்.”
வெற்றி கேட்ட கேள்விக்கு ஜீவா பதிலளிக்க, “நீங்க ரெண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டிங்களா” என மூர்த்தி மற்றும் ஜீவாவிடம் வெற்றி கேட்டான்.
இருவரும் ஒருசேர “இருக்கட்டும் சார்” என்று சொல்ல… அந்நேரம் அப்பெண்ணின் தாயார் அங்கு வந்தார்.
அவரை பார்த்தாலே ஏதோ சரியில்லாததை வெற்றி உணர்ந்தான். காலையில் அழுகையில் கரைந்தவர் இப்போது எதையோ மறைக்க முயற்சிப்பது போலிருந்தது. எதிலிருந்தோ தன்னை கட்டுப்படுத்த அவர் போராடுவது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அப்போது செவிலி அப்பெண் கண் விழித்து விட்டதாக வந்து சொல்ல, அறையின் உள்ளே செல்ல முயன்ற வெற்றி, ஜீவா மற்றும் மூர்த்தியை அப்பெண்மணியின் “நில்லுங்கள்” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.
“
என்னாச்சும்மா?” ஜீவா கோபத்தை அடக்கியவனாகக் கேட்டான்.
“இப்போ நீங்க எதுக்கு சார் என் பொண்ணை போய் பார்க்கணும்?” அழுத்தமாக வார்த்தைகள் வெளிவந்தன.
“விசாரிக்க வேண்டாமாம்மா?” ஜீவா தான் கேட்டான்.
“விசாரிச்சு என்ன செய்யப் போறீங்க, என்னோட புகாரையே ஏத்துக்க முடியாது போம்மான்னு விரட்டடுனிங்களே.” நக்கலாகக் கேட்டார்.
“அதான் புகார் எடுத்தாச்சே.” இம்முறை வெற்றி வேகமாகக் கேட்டிருந்தான். இதன் மூலமாவது இம்முறை எப்படியும் இந்த வழக்கை கண்டு பிடித்திட வேண்டுமென்கிற வேகம் அவனிடத்தில்.
“அந்த புகாரை திரும்ப வாங்கி ஒரு மணி நேரமாச்சு… அதனால போலீசுக்கு விசாரிக்க உரிமையில்லை” என்று அவர் கூற, ஜீவாவுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
“இதுக்குதான் சார் இந்தம்மாகிட்ட புகார் வாங்க வேண்டாமென்றேன்.
இவங்க புகார் கொடுக்கலன்னா என்ன சார், அதேன் அந்தப்பொண்ணு போதை மருந்து சாப்பிட்டிருக்கே… அதை வச்சு விசாரிப்போம், இல்லாட்டி அவங்க பொண்ணுதான் ஜெயிலுக்கு போவனும்.” ஜீவா கண்மண் தெரியாது கத்தினான்.
“என்ன சார் ஆளாளுக்கு மிரட்டுறீங்களா?” என அழுதுகொண்டே சேலை தலைப்பினால் அப்பெண் வாய் பொத்த,
மேற்கொண்டு ஏதோ பேச வந்த ஜீவாவை பார்வையாலே அடக்கிய வெற்றி, மூர்த்தி மற்றும் ஜீவாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
“என்ன சார் இம்முறையும் இப்படி ஆச்சுதே.” ஜீவா கவலையாகக் கூற,
“இந்த கடத்தலுக்கும் போதை மருந்துக்கும் யாரோ பெரும் புள்ளிதான் காரணாமா இருக்கணும்.
அதுமட்டுமில்லாம, அந்தம்மா வீட்டுக்கு போன நேரத்துல என்னவோ நடந்திருக்கு. அந்தம்மா சொன்னதை கவனிச்சீங்களா… ஆளாளுக்கு மிரட்டுறீங்களா? அப்போ யாரோ மிரட்டி பயமுறுத்திருக்காக, காணாம போன எல்லா பொண்ணுங்களும் அந்த ஒரே கல்லூரி மாணவிகள் தான். அக்கல்லூரிக்கு உரிமையாளர் சிதம்பரம். ஆளுங்கட்சி அமைச்சர். எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு எதுவும் பண்ண முடியாது” எனக் கூறிக்கொண்டே வந்த வெற்றி தனது மனதிற்குள்ளே ஒரு திட்டமும் வகுத்திருந்தான்.
திட்டத்தின்படி அடுத்த நாளே தனது தங்கை வாணியை அக்கல்லூரிக்கு பேராசிரியையாக அனுப்பி வைத்தான். வாணி பத்திரிக்கையில் சேருவதற்காக தற்காப்பு களைகளெல்லாம் பயின்றிருந்ததால், ஏதும் ஆபத்தென்றாலும் அவளால் அவளை காத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாது வேறொரு பெண்ணை அனுப்பி வைத்து மேலும் சிக்கலாவதற்கு தன் தங்கையை அனுப்புவதே சரியென நினைத்து… தெரிந்தவர் மூலம் யாருக்கும் சந்தேக எழும்பிடாத வகையில் வாணியை பேராசிரியராக உள்ளே அனுப்பினான்.
என்னதான் இருந்தாலும் ஒரு அண்ணனாக வாணியை எல்லா நொடியும் கவனித்துக் கொண்டே இருந்தான்.
இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் மூன்று பெண்கள் காணாமல் போய் திரும்ப வந்திருந்தனர்.
பத்திரிகை துறை என்பதால் அலசி ஆராயும் திறன்கொண்ட வாணி அங்கு நடப்பதை இரண்டு வாரங்களிலேயே ஓரளவிற்கு யூகித்திருந்தாள். அதனை வெற்றியிடம் சொல்லியதோடு அங்கு செல்வதையும் நிறுத்தியிருந்தாள்.
வாணி சொல்லியதைக் கேட்ட வெற்றிக்கு அதிர்வாக இருந்தது.
ரத்தினம் கல்லூரி என்கிற பெயரில் யாருக்கும் தெரியாது போதைப்பொருள் கடத்தல் செய்கின்றான். அங்கு பணி செய்யும் முதன்மையாளருக்கே இவ்விடம் தெரியாது.
தன்னிடம் போதைப்பொருள் வாங்கும் வெளிநாட்டவருக்கு, போதைப்பொருளோடு சேர்த்து ஒரு பெண்ணையும் உடன் அனுப்பி அதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றான்.
கடத்தும் பெண்களுக்கு அவர்களுக்குத் தெரிந்தே கட்டாயப்படுத்தி போதைமருந்து உட்செலுத்தி வெளிநாட்டு கடத்தல்காரர்களின் இச்சைக்கு ஆட்படுத்தினான்.
அக்கயவர்களின் களியாட்டம் இரவு முழுவதும் நீடிக்கும்.
போதைப்பொருள் விற்பனையை விட இளம்பெண்களின் கற்பிற்கு அந்த வெறிநாய் கூட்டம் பணத்தை வாரி இறைத்தனர். இதனால் அடிக்கடி இதனை ரத்தினம் வாடிக்கையாக்கிக் கொண்டான்.
அதுமட்டுமில்லாது போதைமருந்து வீரியத்தால் தன்னை மறந்த நிலையில் அப்பெண்களுக்கு நடக்கும் கொடூரத்தை காணொளியாக பதிவு வேறு செய்து வைத்தான்.
தேவை முடிந்து பெண்களை மறுநாள் வீட்டிற்கு அனுப்பும் போது, அக்காணொளியை போட்டுக் காண்பித்து…
“வெளியில் யாரிடமாவது இதனை சொன்னால் போகப்போவது உன் குடும்ப மானந்தான்” என்று மிரட்டி, அவர்களின் பயத்தில் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டான்.
“ரத்தினத்தின் இச்செயல் சிதம்பரத்திற்கு தெரியுமா?”
வாணி சொல்லி முடிக்கவும் வெற்றி வேகமாகக் கேட்க,
“பணமென்றால் அவன் மட்டும் விதிவிலக்கா” என வாணி சொல்லியதே போதுமானதாக இருந்தது.
“அப்புறம் என்னண்ணா, அவனை அரெஸ்ட் செய்ய வேண்டியதுதேனே?”
“நமக்கு தெரிந்த விடயத்திற்கு சாட்சியில்லையே… பாதிக்கப்பட்ட பெண் யாராவது முன் வந்தால் நல்லாயிருக்கும்” என்ற வெற்றி மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது மருகினான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் வெற்றியின் வீட்டு பின் வாசல் கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டு அனைவரும் விழித்தனர்.
யாரென்று கதவு திறந்து பார்க்க,
ஒரு பெண் தன் கண்கள் மட்டும் தெரியும்படி போர்வையால் தன்னை முழுதும் மூடியவாறு உடல் நடுங்க நின்றிருந்தாள்.
கதவினைத் திறந்த சசியை இடித்துக்கொண்டு உள் வந்த அப்பெண் வெற்றியின் அருகில் சென்று, முகம் மூடியிருந்த துணியினை விலக்கினாள்.
வெற்றியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண். அவளை அடையாளம் கண்டுகொண்ட வெற்றி, தன் குடும்பத்தாரை ஒரு பார்வை பார்க்க அனைவரும் தத்தம் அறைக்குள் சென்று முடங்கினர்.
வாணி சொல்லிய அனைத்தையும் அப்பெண்ணும் ஒன்றுவிடாது வெற்றியிடம் கூறினாள். தனக்கு ஏற்கனவே தெரிந்ததைப் போன்று வெற்றி காட்டிக்கொள்ளாமல் மீண்டுமொரு முறை அனைத்தையும் கேட்டான்.
இறுதியில் அப்பெண் எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சி சொல்லுவதாகக் கூற, ஒன்றுக்கு பலமுறை கேட்டு அவள் பின்வாங்கிட மாட்டாள் என்பதை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே வெற்றி ரத்தினத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வாரண்ட் வாங்கினான்.
கைது செய்ய சென்றபோது,
“ஆதாரம் ஏதுமின்றி எப்படி கைது செய்வீர்கள்” என்று ரத்தினம் தெனவட்டாகக் கேட்க,
“அந்தக் கவலை உனக்குத் தேவையில்லை” எனக்கூறிய வெற்றி ரத்தினத்தை ஜீவாவிடம் ஒப்படைத்து நீதிமன்றம் அழைத்து செல்ல பணித்தான்.
அன்று மூர்த்தி விடுப்பு எடுத்திருந்ததால் வண்டி ஓட்டுவதும் ஜீவா என்றானது.
வெற்றியும் வண்டியில் அமர போகையில், சிதம்பரத்தின் காரியதரிசியிடமிருந்து வெற்றிக்கு அழைப்பு வந்தது.
“அமைச்சர் பாலம் ஒன்றைத் திறந்து வைக்க செல்வதால் பாதுகாப்பிற்கு நீங்கள் வந்தே ஆக வேண்டும்” என்க,
வெற்றியின் உயர் அதிகாரியும் அதையே கட்டளையாகக் கூற வெறுவழியின்றி வெற்றி ரத்தினம் உடன் ஜீவாவை மட்டும் அனுப்பி வைத்தான்.
“நீங்க கூட்டி போங்க ஜீவா, நான் ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன்” என்ற வெற்றி சிதம்பரத்திற்கு பாதுகாப்பாக செல்ல, அவனுக்கு எதிர் திசையில் ரத்தினத்தை அழைத்துக்கொண்டு ஜீவா சென்றான்.
அடுத்த அரை மணிநேரத்தில் ஜீவா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வர மருத்துவமனை விரைந்தான் வெற்றி.
சென்று கொண்டிருக்கும்போது திடீரென லாரி ஒன்று எதிரில் வந்து மோதியதால், மலைச்சரிவில் வண்டி கவிழ்ந்து விட்டதாகவும்… சுதாரித்த நான் கதவை திறந்து வெளியில் குதித்து விட்டதாகவும், எப்படியும் ரத்தினம் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் ஜீவா கூற ‘கஷ்டப்பட்ட அனைத்தும் வீணாகிவிட்டதே’ என வெற்றியால் வருந்த மட்டுமே முடிந்தது.
இருப்பினும் ஆட்களை அனுப்பி சரிவில் தேடச் சொல்ல… ஒருநாள் முழுக்க தேடியும் ரத்தினத்தின் உடல் கிடைக்காமல் போக,
“ரொம்ப ஆழத்தில் விழுந்திருந்தால் உடல் கிடைப்பது கடினம், அதுவுமில்லாமல் இவ்வளவு ஆழத்தில் விழுந்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை” என்று தேடுதலில் ஈடுபட்டோர் சொல்ல வெற்றியும் ரத்தினம் இறந்து விட்டதாகவே நம்பினான்.
“சாவின் விளிம்பு வரை சென்று மீண்டதால், தன்னை நினைத்து உயிருக்கு ஏதும் ஆகிவிடுமோயென தனது பெற்றோர் அஞ்சுகின்றனர்” எனக்கூறி அன்றோடு ஜீவாவும் வேலையை விட்டுச் சென்று விட்டான்.
அப்போதிருந்த நிலையில் ஜீவா வேலையை விட்டு செல்ல சொல்லிய காரணம் சரியாகப்பட்டதால் வெற்றி மேற்கொண்டு எதையும் ஆராயவில்லை. அவன் எங்கு செல்கின்றான் என்பதை மட்டும் தனது துறையின் செல்வாக்கில் தெரிந்து வைத்துக் கொண்டான்.
அனைத்தையும் நினைத்து பார்த்த வெற்றிக்கு,
அன்று புரியாத ஒன்று இன்று புரிவதைப் போலிருந்தது.
‘தன் கேள்விக்கு ஜீவா ஒருவனாலேயே பதில் சொல்ல முடியும்’ என நினைத்த வெற்றி மூர்த்தியை அழைத்து,
“ஜீவா இப்போதும் அங்குதான் இருக்கானா?” என்று விசாரித்துக் கூறுமாறு கூறியவன், ஜீவாவின் பழைய எண்ணிற்கு முயற்சித்து பார்க்கலாமென நினைத்து அழைப்பு விடுத்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
35
+1
2
+1
1