Loading

காவ(த)லன் 26

கண்கள் சொருக அமரியின் மீது சரிந்த வெற்றி… அந்நிலையிலும் நினைவு தப்பாது கண்களை இறுக மூடி மெல்ல இமை பிரித்து தனது எழிலுக்கு பார்வையாலேயே ஆறுதல் அளித்தான்.

அமரியின் கண்கள் அங்கு கொட்டும் அருவிக்கு நிகராக கண்ணீரை சுரந்தது. வெற்றியின் ஆறுதலான பார்வை அவனின் எழிலுக்கு போதுமானதாக இருந்தது.

தன்னை நொடியில் திடப்படுத்திக் கொண்டவள் கண்ணீரை தனக்குள்ளே புதைத்தாள்.

ஆளாளுக்கு வெற்றியை நினைத்து பதற, யாரிடம் என்ன சொல்வதென்று தெரியாது கதிர் திணறினான்.

வெற்றியின் மீது கண்மூடித்தனமான கட்டுக்கடங்கா கோபம் வந்த போதும், இப்போது அவனின் நலன் மட்டுமே முக்கியம் எனக் கருதியவன்… சக்தி மற்றும் சசியிடம் வெற்றியை தூக்கி வர சொல்லி, அவர்களுக்கு முன்பாக சென்று வண்டியை தயார் செய்தான்.

கதிரின் கைகளில் வண்டி காற்றாய் பறந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் வெற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைத் துவங்கியது.

வெற்றிக்கு எதனால் இப்படி ஆனதென்று ஆளாளுக்கு பல கேள்விகளைக் கேட்டு கதிரை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கு நடந்தவற்றை விவரித்த போதும், அவனை குடைவதை யாரும் நிறுத்தவில்லை. கதிருக்கு மூச்சு முட்டுவதை போலிருந்தது. கதிர் தான் வெற்றியை குத்தி விட்டதைப் போன்று அனைவரும் அவனைத் திட்டி ஒரு வழியாக்கினர்.

ஏற்கனவே தான் தனது நண்பனை காக்கத் தவறிவிட்டோம் என்கிற கதிரின் மனம் அவர்களின் பேச்சால் குற்றவுணர்வு கொண்டது.

ஒருவழியாக குடும்பத்தாரின் விசாரணையும் முடிவுக்கு வந்தது.
நல்லு கூட கலங்கிய முகத்துடன் அமர்ந்திருக்க, அமரி திடமாய் அமர்ந்திருந்தாள்.

அவளின் அழுத்தம் அவளுக்கு ஏதேனும் விளைவை ஏற்படுத்தி விடுமோ என சசிக்கு பயமாக இருக்க, அமரியின் அருகில் அமர்ந்து அவளின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அதில் சசியை நிமிர்ந்து பார்த்தவள் விரக்தியாய் புன்னகை சிந்த,

“அண்ணாக்கு ஒன்னுமாகாது அமரி” என சசி கூற,

“அவருக்கு ஒன்னுமாகதுன்னு எனக்கும் தெரியும்” என பட்டென்று மொழிந்தவள், அங்கு வேதனை படிந்த முகத்துடன்… கவலை அப்பட்டமாகத் தெரிய நின்றிருந்த ஆண்களையும், கண்ணீர் கோடாய் விழ சேலை தலைப்பில் அழுகையை அடக்கி அமர்ந்திருந்த பெண்களையும் ஒரு பார்வை பார்த்தாள்.

“இப்போ என்னாச்சுன்னு இப்படி முடங்கி உட்கார்ந்திருக்கீங்க… அவருக்கு ஒன்னுமாகாது, அழுவாம இருக்கிறதுன்னா… இங்க உட்கார்ந்திருங்க இல்லாட்டி கிளம்புங்க” என்று செண்பகம் மற்றும் ஜானகியை அழுத்தமாக பார்க்க, அவர்கள் அமைதியாக எழுந்து மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கும் கோவிலில் தஞ்சம் புகுந்தனர்.

“உங்களுக்கு மட்டும் தனியே சொல்லணுமா” என்று வாணியிடம் கேட்டவள், “நீங்க அழுதாக்கா உள்ளிருக்க பாப்பாக்கு அழுத்தமாகாதா” என்றவாறே அன்னத்திடம் அவளை கூட்டிக்கொண்டு இல்லம் செல்லக் கூறினாள்.

அங்கிருந்து செல்லாது தயங்கியபடி நின்ற வாணியின் அருகில் வந்த அமரி, “அவரு கண்ணு முழிச்சதும் வந்து பாருங்க, இப்போ போங்க… இந்த சூழல் உங்களுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானதில்லை” என்று எடுத்துக்கூற, விருப்பமேயில்லாது அன்னத்துடன் வாணி கிளம்பினாள்.

அமரியின் தைரியமான பேச்சு மற்றும் செயல்கள் மூத்த தலைமுறைக்கு தங்களது பயத்தை போக்க, அனைவரும் வெற்றிக்கு ஒன்றுமாகாது என்ற அதீத நம்பிக்கையுடன் ஆளுக்கொரு பக்கமாக இருக்கையில் அமர்ந்தனர்.

கதிரின் முகம் தெளிவடையாது இருப்பதை கவனித்த அமரி, “என்ன நீயும் வீட்டுக்கு போகனுமா” என்று கேட்க, இல்லையென பதரியவாறு தலையசைத்த கதிர்… அமைதியாக சக்தியின் அருகில் சென்று அமர்ந்தான்.

அனைவரையும் தன்னுடைய வார்த்தைகளால் திடப்படுத்தியவள் வெற்றிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் அறைக்கு நேரெதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். மூடப்பட்டுள்ள அறையின் கதவு திறக்கும் தருணத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

“அண்ணாக்கு இப்படியானது உனக்கு வருத்தமாயில்லையா அமரி?” கேட்டபிறகே இவ்வாறு கேட்டிருக்கக் கூடாதென்று வருந்தினான் சசி.

அடக்கப்பட்ட கண்ணீரின் விளைவால் அமரியின் கண்கள் நன்கு சிவந்து போயிருந்தன.

“அங்க படுத்திருக்கிறது என் உசுரு… அதெப்படி வருத்தமில்லாமப் போகும். முடியாத நிலையிலும் என்னை யோசித்து எனக்காக ஒரு பார்வை பார்த்தாங்க பாரு… அதுக்கு அப்புறமும் கண்ணுல தண்ணீ விட்டுகிட்டு உட்கார்ந்திருந்தா நானெல்லாம் என்ன போலீஸ்காரன் பொஞ்சாதி” என அமரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு திறந்து கொண்டு மருத்தவர் வெளி வந்தார்.

அனைவரும் மருத்துவரை சூழ முற்பட… தன் பார்வையாலேயே அடக்கி தான் மட்டும் மருத்துவர் முன் சென்று நின்றாள் அமரி.

“வெற்றிக்கு ஏத்த ஆளுதான்” என நல்லுவே தன் மருமகளை மெச்சிக் கொண்டார்.

“அண்ணாவுடைய பொஞ்சாதின்னு பார்வையாலேயே நிறுப்பிக்கிறா(ள்)” என சசி சக்தியின் காது கடிக்க… அவன் தலையிலேயே இரண்டு கொட்டு கொட்டினான் சக்தி.

“சார் அவருக்கு…”

“நீங்க?”

“அவருடைய மனைவி.”

“வீட்டில் வேறு யாரும் வரலையாம்மா?” மருத்துவர் அவ்வாறு கேட்டதும் முன் வந்த கதிரை தனது கை நீட்டித் தடுத்திருந்தாள் அமரி.

“வந்திருக்காங்க டாக்டர்… ஆனால் உள்ளுக்க இருக்கிறது எம் புருஷன், எதுவாயிருந்தாலும் எங்கிட்டக்கவே சொல்லுங்க” என்றாள். அவளின் வார்த்தைகளில் இருந்தது கட்டளையா என்னவென்று மருத்துவரால் பிரித்தறிய முடியாது போனது.

“கத்தி குத்து நல்ல ஆழமா இருக்கு… அதுமட்டுமில்லாமல் கத்தியில் விஷம் தடவி குத்திருக்காங்க, இன்னும் கொஞ்சம் தமதமாகியிருந்தால் கையே எடுக்கக் கூடிய நிலைக்குக்கூட போயிருக்கும்.”

“அய்யய்யோ…” பதறியபடி அமரியினை இடித்துக்கொண்டு வந்து நின்ற கதிர், “நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சீக்கிரம் வர மறுத்துட்டான் டாக்டர்” எனக்கூறி தலையிலடித்துக்கொள்ள,

“அதான் அவருக்கு ஒன்னுமாகலையே, பொறவு என்னத்துக்கு கத்திக்கிட்டு இருக்க” என்று அமரி தன் வார்த்தையால் கதிரை தள்ளி நிற்க வைத்தாள்.

அமரியின் ஆளுமையை கண்டு வெங்கடாசலம் வாய் பிளந்து நிற்க,

“நீங்க மேல சொல்லுங்க டாக்டர்” என்று சேது கூறினார்.

“ஆனால், விஷம் உடல் முழுக்க பரவியிருக்கு… ரத்தத்தில் கலந்திருக்கவும் வாய்ப்பிருக்கு” என்று அவர் தயங்கி நிற்க,

“எதுவாயிருந்தாலும் சொல்லுங்க” என்று அமரி அவரை ஊக்கினார்.

“மருந்து கொடுத்திருக்கேன்… இதை அவர் உடம்பு ஏத்துக்க ஆரம்பிச்சு கண் திறந்துட்டாருன்னா எவ்வித பிரச்சினையுமில்லை” என்ற மருத்துவர் அங்கிருந்து நகர்ந்தார்.

“கண் திறக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்பதை அவர் சொல்லாது விட்டாலும் அங்கிருந்த அனைவருக்கும் அது நன்றாகவே புரிந்தது.

இருக்கையில் தொப்பென்று அமர்ந்த அமரியின் கண்ணிலிருந்து கோடென நீர் இறங்க அதனை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.

“அம்மாடி அவனுக்கு ஒன்னுமாகாது, நீ வருத்தப்படாத ஆத்தா” என்ற வெங்கடாசலம் தன் வார்த்தைகளால் ஆறுதல் படுத்த முயன்றார்.

மகளின் நிலையை கண்டு விநாயகம் ஊமையாய் அழ, சக்தி மற்றும் சசி என்ன செய்வதென்று புரியாது தவித்தனர்.
கதிர் தலையில் கை வைத்தவனாய் தரையிலேயே அமர்ந்து விட்டான்.

“நான் உடனிருந்தும் உன்னை காக்க முடியா பாவியாகிட்டேனே” என்று வாய்விட்டே புலம்பினான் கதிர்.

அமரி கண் காட்ட கதிரின் அருகில் மண்டியிட்ட சசி, எவ்வளவோ முயன்றும் அவனால் கதிரை ஆறுதல் படுத்த முடியவில்லை.

சிகிச்சை அறையிலிருந்து வெளிவந்த செவிலியர், “இரவு இவ்வளவு பேரெல்லாம் தங்கக்கூடாது” என்று சொல்ல… வெற்றியை பார்ப்பதற்கு அனுமதி வேண்டினார் தங்கவேலு.

வெற்றியை பார்த்தாலாவது தனது பேத்தியின் வேதனை குறையுமென்று நினைத்தார் பெரியவர்.

சிறிது யோசித்த செவிலி, “ஒவ்வொருத்தரா போங்க… அதிக நேரம் எடுத்துக்காதீங்க” என்றார்.

முதல் ஆளாக உள்ளே செல்ல கதிர் எழுந்து நிற்க, அவனை தடுத்து… “நீ போத்தா” என்றார் நல்லு.

முடியாது எனும் விதமாக இட வலமாக அமரி தலையசைக்க, எவ்வளவோ வற்புறுத்தியும் “உள்ளே செல்ல முடியாது, அவரை இந்நிலையில் என்னால் பார்க்க முடியாது” என்று திடமாக மறுத்துவிட்டாள்.

____________________________

“என்னடா அந்த பய நிலைமை ரொம்ப மோசமா கிடக்குதாம்.” அதீத சந்தோஷத்தில் திளைத்தார் அவர்.

“இதை உடனே சிதம்பரத்துகிட்ட சொல்லனும்டா” என்று அவர் கூற,

“நம்ம ஆளுவ போலீசுகிட்ட மாட்டிகிட்டானுங்க” என்ற அல்லக்கை ஒருத்தன், “நம்ம ரைட்டு கூட அந்த பயலாலே சுடப்பட்டு ஆஸ்பத்திரியில இருக்காருங்க” என்றான்.

“ம்ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான், கையிலா சிக்கிட்டா அவங்கிட்டேயிருந்து ரொம்ப சுலுவா உண்மையை தெரிஞ்சுப்பான் அந்தப்பய… ஆனால் அவந்தான் பொழைக்கப் போறதில்லையே” எனக்கூறி அவர் இடி இடியென சிரித்தார்.

சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து எதையோ மனதோடு ஆராய்ந்தார்.

“சரிடா அந்த ரைட்டு பயல போட்டுத் தள்ளிடலாம்.” கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் கூறினார்.

“ஐயா” என்று பதறிய அல்லக்கை,

“அவரு சிதம்பரம் ஐயாக்கு விசுவாசமான ஆளுங்க” எனக் கூற,

“எனக்கில்லையே” என்றவர், “நம்ம ஆளுவ போலீஸ் கையில இருக்கவர நமக்கு ஆபத்துதான்… சிதம்பரத்துக்கு அடுத்து என்னை தெரிஞ்ச ஆளுவ ரெண்டே பேருதான், ஒருத்தனை அந்த வெற்றி முன்னாடியே சுட சொல்லி கொன்னாச்சு… மத்த பயலுவலயெல்லாம் கையாண்டது அந்த ரைட்டுதான், அவனுவளுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை… என்னை தெரிஞ்ச ஒரே ஆளு அந்த ரைட்டையும் போட்டுத் தள்ளிட்டாக்கா, எல்லாம் சுபம்.” அந்த பங்களாவே அதிரும் வகையில் கொக்கரித்தார்.

“அந்த ஜெயிலருக்கு ஃபோனை போடுடா. அப்படியே கொண்டு போய் சிதம்பரத்துகிட்ட கொடுக்க சொல்லு.”

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட ஜெயிலர், சிதம்பரத்திடம் அன்றைய பதிவேட்டில் கையெழுத்து வாங்க செல்வதைப் போன்று சென்று அலைபேசியை கொடுத்தார்.

“அந்த வெற்றி கதை முடிஞ்சுதுடா.” அவர் ஆர்ப்பாட்டமாய் மொழிய சிதம்பரிடத்தில் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

“உனக்கு சந்தோஷமா இல்லையா?”

“அவனுடைய சாவு அவனுக்கு வலியை கொடுக்காதே” என சிதம்பரம் அமைதியாக சொல்ல,

“என்னடா பேசுறநீ?” எனக் கேட்டார் அவர்.

“நான் உயிரோடு இருந்துதானே வலியை அனுபவிக்கிறேன், அவனும் அந்த வலியை அனுபவிக்கனும்… இப்போ நீ கொடுத்ததெல்லாம் அந்த வெற்றிக்கு ஒரு வலியே இல்லை,” என்று சிறு இடைவெளி விட்ட சிதம்பரம்…

“நம்ம மரணத்தை விட அதிகமான வலியை கொடுக்கக்கூடியது, நமக்கு பிடிச்சவங்க நம்மளோட இல்லாம போறது” என்றார்.

“புரிந்தது” என்றவர், “நான் அடுத்ததா செய்யப்போறது நிச்சயம் உன்னை மகிழ்விக்கும்” எனக்கூறி இணைப்பைத் துண்டிக்க முயல,

“அண்ணா” என்ற சிதம்பரத்தின் அழைப்பு அவரை தடுத்தது.

ஆம் அவர் சிதம்பரத்தின் உடன் பிறப்பு ரத்தினம்.

“நீ செத்தது செத்ததாவே இருக்கட்டும், இன்னும் உயிரோடுதான் இருக்கன்னு அந்த வெற்றிக்கு எப்பவும் தெரிஞ்சிடக் கூடாது” என்றார் சிதம்பரம்.

“செத்தவன் எத்தனை முறைடா சாவான்?”

ஒவ்வொருவராக சென்று வெற்றியை பார்த்து வந்தனர். எப்போதும் கம்பீரமாக வலம் வரும் வெற்றி இப்படி படுக்கையில் கிடப்பதை காண்பதற்கே அவர்களுக்கு என்னவோ போலிருந்தது.

அமரிக்காக அனைவரும் கண்ணீர் சிந்தாது தங்களை திடமாகக் காட்டிக் கொண்டனர்.

“நீ ஒரு எட்டு உள்ள போய் பார்த்துட்டு வந்துடுத்தா.”

வெங்கடாசலம் தொடர்ந்து எல்லோரும் பல விதமாக சொல்லி பார்த்தும் அமரி கேட்பதாக இல்லை.

“பார்த்தாச்சுல்ல… கிளம்புங்க.”

“நீங்கயெல்லாம் வீட்டுக்கு போங்க, நான் இங்கிருக்கின்றேன்” என்று சொல்லாமல் சொன்னாள்.

“எங்களில் யாராவது உடனிருக்கோம்” என தங்கவேலு கூற அமரி சசியை பார்த்தாள்.

“அமரிக்கு துணையாக நானிருக்கின்றேன்” என்ற சசி கதிரின் கெஞ்சல் பார்வை புரிந்தவனாக, “கதிரு மச்சான் இருக்கட்டும்” என்றான்.

“எதுக்கு அவங்க அழுது என்னையவும் அழ வைக்கவா” என்ற அமரி முகத்தை திருப்பிக் கொள்ள,

“பார்த்து சூதானமா இரு கண்ணு, காலையில விடிஞ்சதும் வருதோம்” என்றார் செண்பகம்.

அனைவரும் மனமின்றி கிளம்பியிருந்தனர்.
மெல்ல தங்கையை நெருங்கிய கதிர், “இப்படி உள்ளுக்குள்ளே வச்சி அழுத்திக்காத அமரி” என்க, அவனை இடையோடு கட்டிக்கொண்டவள் அப்போதும் கண்ணீர் சிந்தாது

“கொஞ்ச நேரம் இப்படியே நில்லுண்ணே மூச்சு முட்டுறதை போலிருக்கு” என்றாள்.

“ஒரு தரம் பார்த்துட்டு வா அமரி…”

“என்னால அவங்கள இந்த நிலைமையில பார்க்க முடியாதுண்ணே, எனக்காக கண்ணு முழிப்பாரு… அவரே என்னை கூப்பிடுவாறு” என்ற அமரியின் நம்பிக்கையான வார்த்தையில் கதிரே வியந்து தான் போனான்.

அந்நேரம் அறைக்குள்ளிருந்து வேகமாக வெளிவந்த செவிலி மருத்துவரின் அறை நோக்கி மிகுந்த பதட்டத்துடன் ஓடினார்.

வெற்றி அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வேகமாக ஓடிய செவிலியுடன் அதே வேகத்தோடு மருத்துவர் வந்தார். உள்சென்று பரிசோதனை செய்தவர், வெளியில் மிகுந்த பதட்டத்தோடு நின்றிருந்த அமரி மற்றும் கதிரை மாற்றி மாற்றி பார்த்தார்.

“டாக்டர் எதுவாயிருந்தாலும் சொல்லுங்க.” கதிரின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“நீங்க பயப்படுமளவிற்கு ஒன்றுமாகிவில்லை, நல்லது தான் நடந்திருக்கு” என்ற மருத்துவர்…

“அவருக்கு நினைவு திரும்பிடுச்சு, இனி ஒன்றுமாகாது… ஆனால் இப்போ கொஞ்சம் மயக்கத்தில் இருக்கிறார், மருந்து போட்டிருக்கேன்… இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விடுவார்” என்றார்.

இப்போதுதான் உள்ளுக்குள் மறைத்து வைத்திருந்த அமரியின் பயமும், வெளிப்படையாகக் நடுங்கிக் கொண்டிருந்த கதிரின் பதட்டமும் எங்கோ சென்று மறைந்தது.

அவர்களிடமிருந்து மருத்துவர் நகர அடியெடுத்து வைக்கையில், மீண்டும் உள்ளிருந்து மருத்துவரை அழைத்தபடி வெளிவந்த செவிலி… “டாக்டர் அவர் மயக்கத்திலும் எழிலுங்கிற பெயரை விடாது சொல்லிக்கொண்டே இருக்கின்றார்” என்றார்.

“நீங்கதான் எழில்’ஆ?”
மருத்துவர் கேட்டதும் ஆனந்தத்தில் துளிர்த்த ஒற்றை துளி நீர் கன்னத்தில் உருண்டோட பேச வாய் வராது ஆமென்பதை போல் மௌனமாக தலையசைத்தாள்.

‘அவரே என்னை கூப்பிடுவாறு.’

எழில் சொல்லிய வார்த்தைகள் கதிரின் மனதில் எதிரொலித்தது.

வெற்றியின் மீதான அமரியின் நம்பிக்கை, அமரிக்காக முடியாத நிலையிலும் யோசிக்கும் வெற்றியின் எண்ணம், இரண்டும் இவர்களுக்கிடையே இருக்கும் ஆழமான காதலை எடுத்துக்காட்ட தங்கைக்காக என்பதைவிட வெற்றிக்காக மிகவும் கதிர் மகிழ்ந்தான்.

“நீங்க அவரோட உள்ளே இருங்க, ஆனால் தொந்தரவு செய்யாதீங்க” எனக் கூறியவாறு மருத்துவர் சென்றுவிட, வெற்றி இருக்கும் அறைக்குள் அமரி நுழைந்தாள்.

கதிர் தன்னை மொத்தமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு நேரத்தை பார்க்க, அதுவோ நள்ளிரவை நெருங்கியிருந்தது. நண்பனின் உயிருக்கு இனி எவ்வித ஆபத்துமில்லை என்பதை அறிந்த பிறகே பசியை உணர்ந்தான். மருத்துவமனை கேன்டின் நோக்கி சென்றான்.

படுக்கையிலும் கம்பீரமாக காட்சியளிக்கும் வெற்றியை பார்க்கையில் அமரிக்கு கர்வமாகவே இருந்தது.

‘இவன் என் கணவன்.’ மனதோடு சொல்லிக் கொண்டவள், வெற்றியின் அருகில் சென்று அவன் நெற்றியில் தடம் பதித்து நிமிர்கையில் அவளின் செவியில் நுழைகிறது வெற்றியின் எழில் என்கிற முனகல்.

எப்போதும் போல் இப்போதும் அவனின் காதலில் சுகமாய் மூழ்கியவள் வெற்றிக்கு அருகிலேயே இருக்கை ஒன்றை போட்டு, வெற்றி படுத்திருக்கும் படுக்கையின் ஓரத்தில் தலை கவிழ்ந்தவாறு அமர்ந்து விட்டாள்.

அவளின் பார்வை வெற்றியின் முகம் தாண்டி எங்கும் நகர வில்லை.
உடனிருந்த செவிலிப்பெண்ணும் உறங்கிவிட, அமரி மட்டும் வெற்றியின் முழிப்பிற்காகக் காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் கதவினை தட்டிவிட்டு உள் வந்த கதிர், தேநீர் கோப்பை ஒன்றினை அமரியிடம் அளிக்க எதுவும் கூறாது பெற்றுக்கொண்டவள் ஒரு மிடறு விழுங்க , வெகு நேரமாக தாகம் மறந்து இருப்பதைக் கூட அப்போதுதான் உணர்ந்தாள்.

வெற்றி கண் விழித்ததும் தன்னை அழைக்குமாறு வலியுறுத்திவிட்டு மீண்டும் வெளியில் வந்து அமர்ந்துவிட்டான் கதிர்.

மருத்துவர் சொல்லியது போலவே இரண்டு மணி நேரம் முடிவடையும் தருணத்தில் வெற்றி மெல்ல கண் விழித்தான்.

அவனையே பார்த்திருந்த அமரி, உறங்கிக் கொண்டிருந்த செவிலியை அழைக்க… வெற்றி எழுந்ததும் கொடுக்க வேண்டிய மருந்துகளை அவர் கொடுத்துவிட்டு தன் உறக்கத்தை தொடர சென்று விட்டார்.

“நீ வீட்டுக்கு போகலையா எழில்?” வெற்றியின் அக்கேள்வியில் அமரிக்கு கோபம் வர, அடிபடதா அவனின் மற்றொரு கையிலேயே நன்றாக குத்தினாள்.

“எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமாட” என்றவள், சற்று சாய்வாக எழுந்து அமர்ந்த கணவனின் நெஞ்சில் சாய்ந்தாள். அந்நேரம் அவளுக்கு கணவனின் அரவணைப்பு தேவைபட்டது. அதனை புரிந்துகொண்ட வெற்றியும் அவளின் முதுகு வருடி ஆறுதல் அளித்தான்.

“நான் மயக்கத்தில் இருக்கும்போது முத்தம் கொடுத்தியே, இப்போ கொடேன்” என்ற வெற்றியிடமிருந்து விலகி இடுப்பில் கைவைத்தவாறு நின்று “உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று அமரி வினவ,

“எந்நிலையிலும் என்னால் உன்னை உணர முடியும் எழிலு” என பட்டென்று மொழிந்திருந்தான் வெற்றி.

கணவனின் கன்னத்தில் அவன் கேட்ட முத்தத்தை கொடுத்தவள், “நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க, கையை ரொம்ப அசைக்கக்கூடாது சொல்லிருக்காங்க” எனக்கூறி வெற்றி கண்விழித்து விட்டதை குடும்பத்தாரிடம் தெரிவிக்க அலைபேசியை கையிலெடுத்தவாறு சற்று தள்ளிச் சென்றாள்.

“எழில்.”

மனைவியை அழைத்தவன், “எல்லாரையும் விட கதிரு ரொம்ப பயந்திருப்பான்… அவனை வரச்சொல்லிட்டு நீ வீட்டுக்கு பேசு” என்றான்.

“நண்பன் மேல அக்கறை இருக்கவங்க, அவங்க சொன்னதையும் கேட்டிருக்கனும்” என்று, கதிர் எவ்வளவோ வற்புறுத்தியும் வெற்றி திரும்பி வர மறுத்ததை நினைவு கூர்ந்தாள்.

உள்ளே வந்த கதிர் நண்பனை தழுவ கையை உயர்த்த,

“அச்சச்சோ மச்சான் கை வலிக்குதுடா” என்று கட்டு போட்டிருக்கும் கையை பிடித்துக்கொண்டு போலியாய் வெற்றி அலற ஒரு நொடி ஒன்றும் புரியாது கதிர் நின்றான்.

அவனின் உறை நிலையை கண்ட வெற்றி சத்தமாக வாய்விட்டு சிரிக்க, “நடிக்கிறியாடா” எனக் கேட்டுக்கொண்டே வெற்றியை ஒரு பக்கமாக அணைத்து விடுத்தான் கதிர்.

“இதெல்லாம் பண்ணது யாரா இருக்கும்?” கதிர் கேட்க வெற்றி மௌனமாக இருந்தான்.
கதிர் தன்னையே பதில் வேண்டி பார்த்திருக்க, “எனக்கொரு யூகம் இருக்கு… பார்ப்போம்” என்றான் வெற்றி.

“சரி சரி பேசிட்டு இருந்தது போதும் கொஞ்ச நேரமாவது ஓய்வெடுங்க.” அமரியின் குரல் கேட்டதும் அவர்களுக்கு தனிமையளித்து கதிர் வெளியேறினான்.

“உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டனா எழில்?” மணம் முடித்து கண்ணின் இமை போல் காக்க நினைத்த தானே மூன்று நாட்களில் கதிலங்க வைத்துவிட்டோமோ என்கிற வருத்தம் வெற்றியிடம் இருந்தது.

“உனக்காக அழுறது கூட சுகந்தான் காவலரே.” வெற்றியின் எண்ணவோட்டம் அறிந்தவள், அவனை மாற்றும் பொருட்டு பேச…

தனது இரு கைகளையும் அகல விரித்து வாவென்று வெற்றி அழைக்க… கணப்பொழுதில் கணவனின் நெஞ்சம் சாய்ந்தாள்.

தாயாய் குடும்பத்தாரை திடப்படுத்தியவள், சேயாய் கணவனிடத்தில் அடங்கினாள்.

அவர்களிடத்தில் காதல் கூட எந்தவொரு அதிகப்படியான வெளிப்பாடின்றி மௌனமான உணர்வாகிப்போனது.

மறுநாள் காலையே வெற்றியை பரிசோதித்த மருத்துவர், வெற்றி பிடித்த பிடிவாதத்தில் “கைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடாது” என்கிற நிபந்தனையோடு வீட்டிற்கு செல்ல அனுமதித்தார்.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவதால், யாரும் மருத்துவமனை வர வேண்டாம்” என்று கதிர் முன்கூட்டியே அழைத்து அனைவருக்கும் சொல்லியிருந்தமையால், எல்லோரும் வீட்டு வாயிலில் வெற்றிக்காகக் காத்திருந்தனர்.

வெற்றி வீடு வந்து சேரும் போது இரு பிரிவினரில் முக்கால்வாசி மக்கள் அவன் வீட்டு முன்பு கூடியிருந்தனர்.

வாசலிலேயே வெற்றியின் நலமறிந்தவர்கள் கிளம்பிவிட, நாட்டாமை குடும்பமும் வெற்றியின் இரு குடும்பமும் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஆள் மாற்றி ஒருவர் வெற்றியின் நலம் விசாரிக்க, அவர்களின் அன்பு புரிந்த போதும்… அவனின் நலனே கேள்வியாக அமைய சற்று எரிச்சல் மூண்டது. இருப்பினும் குடும்பத்தாரிடம் முகம் காட்டாது தன்மையாகவே பதிலளித்தான்.

‘தன்னிலிருந்து இவர்களின் கவனத்தை திசை திருப்பினால் தான், நாம நிம்மதியா இருக்க முடியும்’ என்று நினைத்த வெற்றி…

“இன்னைக்கு தானே சக்திக்கும் மதிக்கும் நிச்சயம் பண்ணுறதா இருந்தது?” என செல்லச்சாமி மற்றும் நல்லுவை பார்த்து வெற்றி வினவ,

“நீ இப்படி இருக்கும்போது எப்படிய்யா” என சேது தயங்கினார்.

“எனக்கு ஒன்னுமில்லை” என்று வெற்றி சொல்லிய தொனியிலேயே, இன்று தீர்மானித்த நிச்சயம் நடக்க வேண்டுமென்கிற கட்டளை இருந்தது.

அதனை புரிந்தவர்கள் சரியெனக் கூறி மாலை நிச்சயம் என்று முடிவு செய்தனர்.

“நாங்க ஏற்பாட்டை கவனிச்சிக்கிறோம், நீ ஓய்வெடுய்யா” என செண்பகம் பாட்டி சொல்ல வெற்றி அமைதியாய் தனது அறைக்குச் சென்றான்.

உணவு தட்டோடு அறைக்குள் நுழைந்த அமரி வெற்றிக்கு ஊட்டி விட்டவாறே தானும் அவனோடு சேர்ந்து உண்டு முடித்தாள்.

வெற்றியிடம் மாத்திரைகள் அளித்து விழுங்கச் செய்தவள் வெற்றியை உறங்கச் சொல்ல, அவனோ மறுத்துவிட்டு தனது அலைபேசியோடு பால்கனிக்கு சென்று விட்டான்.

வெற்றியின் பணியில் குறுக்கீடு செய்வது பிடிக்காது என்பது அறிந்து அமரியும் அமைதியாக கீழேச் சென்றாள்.

மதி வீட்டில் நிச்சயம் என்பதால் சசி, அமரி, அங்கே அவர்களுக்கு உதவி செய்ய சென்று விட்டனர். அனைத்து வேலைகளும் துரித கதியில் நடந்தேற இரு வீட்டு சார்பாக உறவினர்கள் அழைப்பை நல்லு மற்றும் சேதுவே பார்த்துக் கொண்டனர்.

மாலை நிச்சயம் அனைவரின் மகிழ்வோடு நடந்து முடிந்தது. நிச்சயம் எதிர் பார்த்ததை போல் விமர்சையாக செய்ய முடியாது போனதால், திருமணத்தையாவது சுற்றம் அனைவர சூழ நல் முறையில் செய்ய வேண்டுமென திருவிழா முடிந்து அடுத்த முகூர்த்தத்தில் நாள் குறித்தனர்.

இரவு உணவு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, காக்கி உடையணிந்து காவல் நிலையம் செல்லத் தயாராக வெற்றி வந்தான்.

மற்றவர்கள் அனைவரும் இந்நிலையில் இந்நேரத்தில் செல்ல வேண்டாமென்று எவ்வளவோ மறுத்தும் அதனை வெற்றி கேட்கவில்லை.

அமரியும் தன் பங்கிற்கு கூற, “நீயாவது என்னை புரிந்துகொள்ளேன்” என்கிற பார்வையை அவளிடம் வெற்றி வீச… அமரி மௌனமானாள்.

“நாங்க சொல்லுறதெல்லாம் நீ கேட்கமாட்டியே” என்ற நல்லுவும் எழுந்து சென்றுவிட வெற்றி அலுவலகம் வந்து சேர்ந்தான்.

அன்றைய இரவு பணியில் நாச்சியும், பெண் காவலர்கள் இருவரும் ஈடுபட்டிருந்தனர். ராமிற்கு அலைபேசியில் அழைத்து காவல் நிலையம் வரச் செய்தவன் மூர்த்தியுடன் பெண் காவலர்களை அனுப்பி ரோந்து பணியை முடித்துவரக் கூறினான்.

வெற்றி தன்னுடைய அறைக்கு செல்லாது காவல் நிலைய வளாகத்திலேயே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு தோரணையாக அமர்ந்தான்.

ராம் வந்து சேரும் வரை வெற்றி எதுவும் செய்யாது, தனது பார்வையை நாச்சியின் மீது பதித்தவாறே இருந்தான்.

வெற்றியின் பார்வை நாச்சிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்த போதும், ஏதோ கோப்பினை ஆராய்வதைப்போன்று சமாளித்துக் கொண்டிருந்தார்.

ராம் வந்ததும், வெற்றியை பார்த்து விறைப்பாக சல்யூட் வைத்தவன்… வெற்றியின் காயம் பற்றி விசாரிக்க,
“கத்தி குத்தியது என்னவோ சின்ன அளவுதான் ராம், அதுல பாரு விஷம் தடவியிருப்பானுங்க போலிருக்கு… அது என்னைய கொஞ்சம் அசைச்சு பார்த்திருச்சு.” ராமிடம் சொல்லிக் கொண்டிருந்த போதும் வெற்றி நாச்சியின் மீது நிலைத்த பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.

“ராம் என்னோட மேசை இழுவையில் சாக்லேட் இருக்கும், கொஞ்சம் எடுத்து தறீங்களா?”
வெற்றி அவ்வாறு கேட்டதும் வேகமாக எடுத்து வந்து கொடுக்க, அதனை மெல்ல கடித்து ருசித்தான் வெற்றி.

அவனின் ஒவ்வொரு விழுங்கலுக்கும் நாச்சியின் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. குளிரிலும் வியர்த்து வழிந்தது.

ராம் “வெற்றியே தன்னை அழைத்ததற்கான காரணத்தைக் கூறுவான்” என்று அமைதி காத்தான்.

“என்ன நாச்சி” வெற்றி அவ்வாறு சொல்லியது தான், தனது இருக்கையிலிருந்து எழுந்து ஓடிவந்த நாச்சி வெற்றியின் காலைக் கட்டிக்கொண்டு மன்னிப்பு வேண்டினார்.

“சார் என்னை மன்னிச்சிடுங்க சார்.”
வெற்றி எதுவும் சொல்லவில்லை. ராம் நடப்பது புரியாது வழக்கம்போல் குழம்பினான்.

“நான் சொல்லியிருக்கக் கூடாதுதான் சார், ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செஞ்சிட்டேங்க” என்ற மன்றாடலோடு கூறியவரை வெற்றி தீர்க்கமாக பார்த்தானேத் தவிர எதுவும் பேச முற்படவில்லை.

“இவருக்கு ஒரு மூனு மாசத்துக்கு தற்காலிக பணி நீக்கம் கொடுங்க ராம்” என்ற வெற்றி, அடுத்த ஐந்து நிமிடத்தில் ராம் நீட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டு அதனை நாச்சியிடம் அளித்தான்.
நாச்சி தலை குனிந்தபடி வெளியேற,

“அந்த அமைச்சரோட சேர்த்து உங்களையும் உள்ள போட்டிருக்கணும்… உங்க குடும்பத்தை வச்சி உங்களை எதுவும் பண்ணாமல் விட்டது தவறோ என எண்ண வைத்து விடாதீர்கள்” என்ற வெற்றி தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

அமைச்சருக்கு உதவியாக தான் செய்த காரியங்கள் அனைத்தும் வெற்றிக்கு தெரியும் என்பதை உணர்ந்த அந்நொடி நாச்சி தான் இத்துறையில் பதிவு வகிப்பதை நினைத்து குறுகிப் போனார்.
ராம் காரணமறிய வெற்றியின் முன் நிற்க,

“நேற்றையச் சம்பவம் நடைபெற காரணமே இவர்தான்” என்ற வெற்றி

“அன்று கோவிலில், தீர்த்த அருவிக்கு செல்ல முடிவெடுத்தபோது… உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நாச்சி விடயமறிந்து அதனை யாருக்கோ(ரத்தினம்) சொல்லியிருக்கார் ராம்… அந்த ஆள் யாருன்னு தெரியல” என்றான் வெற்றி.

“இதை அவரிடமே கேட்டிருக்கலாம் சார்.”

“அவரு பதில் சொல்லுவாறுங்கிற நம்பிக்கை எனக்கில்லை” என்ற வெற்றி தனக்குள்ளிருக்கும் யூகம் சரியா என்பதை ஆராயத் துவங்கினான்.

அன்று இரவு அமரியின் வீட்டிலிருந்து வெற்றி தன்னுடைய வீடு சென்று கொண்டிருந்த போது யாரோ மின்கம்பத்திற்கு பின்னால் தன்னை கண்டதும் மறைவாக சென்று ஒளிந்ததை வெற்றி கவனித்தான். மின் விளக்கு வெளிச்சத்தில், வண்டியின் கண்ணாடி வழியாக அது யாரென்று பார்த்தவாறு வெற்றி செல்ல… மறைவிலிருந்து வெளிவந்த நாச்சியின் முகம் வெற்றிக்கு நன்கு தெரிந்தது. அடுத்த நாளே சிதம்பரத்தை சந்திக்க ஒருவன் செல்வதையும் அவர்களின் திட்டத்தையும் அறிந்த வெற்றி இதற்கு மூலக்காரணம் நாச்சி என்பதை கண்டுபிடித்திருந்தான்.

‘சிதம்பரத்தின் மூலந்தான் இது நடந்திருக்கிறது’ என்ற நிலையில் தனது சிந்தனையை நிறுத்திய வெற்றி… சிதம்பரத்திற்கு நெருக்கமான ஆட்கள் யாரென்று யோசித்தான்.

‘திலீபனை அடுத்து சிதம்பரத்திற்கு உறவென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரு நபர் அவனின் அண்ணன் ரத்தினம், ஆனால் அவர் இப்போது உயிரோடில்லை’ என்று சிந்தித்த அடுத்த நொடியே… ‘ஒருவேளை உயிரோடு இருந்தால்?’ என்கிற கேள்வியும் வெற்றியின் மனதில் உதித்தது.

நிலையாக முடிவு செய்ய முடியாது வெற்றி தடுமாற, அவனை நோக்கி மிகுந்த பதட்டத்துடன் ராம் வந்தான்.
“சார், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிதம்பரத்தின் ரைட்டு இறந்து விட்டாராம்” என்று ராம் சொல்லியதும் இருவரும் மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர் கூற அதனை வெற்றியின் மனம் நம்ப மறுத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
33
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்