Loading

காவ(த)லன் 25

“என்ன மச்சான் அமைதியா வர” எனக் கேட்ட கதிருக்கு,

“ஒன்றுமில்லை” என வெற்றி பதில் சொன்னாலும் அவன் கண்கள் எல்லா திசைகளிலும் மேய்ந்தது.

“காலேஜ் படிக்கும் போது ஒருமுறை மேலருவிக்கு போனது.. அதுக்கு அப்புறம் இப்போதான் இந்த பாதையில நடக்குறோம்… எவ்வளவோ நிறைய மரங்கள் அடர்ந்து வளர்ந்து மாற்றமா இருக்குல” என்று பேசிக்கொண்டே வந்த கதிரை திடீரென வெற்றி பிடித்து இழுக்க, அதன் வேகத்தில் அவன் தரையில் விழவும்… ஒரு பருத்த மரம் அந்தரத்தில் பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.

மெல்ல எழுந்த கதிர், “என்னடா நடக்குது இங்க” என்க… “அதான் எனக்கும் தெரியல கதிரு” என்ற வெற்றி முன்னோக்கி அடி வைத்தான்.

“என்னுடைய யூகம் சரின்னா அந்த மரம் யாரோ ஒருத்தரால எனக்கு குறி வச்சதா இருக்கும்.”
வெற்றியின் கூற்றை கதிரால் ஏற்க முடியவில்லை.

“அது என்னை நோக்கிதான் வந்துச்சு.”

“ஆனால் அவங்களோட டார்கெட் நாந்தான். இனி ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கணும்.” வெற்றி சொல்லிய தொனியில் கதிருக்கு சிறு அச்சம் ஏற்பட்டது.

“இந்த கல்லுங்கள்ள எங்கிருந்து பார்த்து அடி வைக்கிறது” என புலம்பிய கதிர் வெற்றிக்கு முன்னால் வேகமாக அடி எடுத்து வைக்க… கதிரை முன்னுக்க தள்ளிவிட்டு தன்னை பின்னால் வெற்றி சாய்த்த நொடி இருவருக்கும் இடையில் கூரிய அம்பு ஒன்று பாய்ந்து மரத்தில் தன் இலக்கை முடித்தது.

“வெற்றி உனக்கு ஒன்னுமாகலையே” அந்த பயத்திலும் நண்பனின் நலனில் அக்கறைக்கொண்டான் கதிர்.

அம்பு வந்த திசையை தன் பார்வையால் அலச வெற்றிக்கு ஒன்றும் கிட்டவில்லை. ஒரு பருத்த மரத்திற்கு பின்னால் ஷூ அணிந்த கால்கள் தெரிய, கதிரை தன்னோடு இணைத்தவாறு நடக்கத் தொடங்கினான்.

சுனை அருவியை இருவரும் நெருங்கிய வேளையில் இருமருங்கிலும் இருந்து ஒரே நேரத்தில் மரக் கிளைகள் சடசடவென்று முறிந்து விழுந்தன.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்று மற்றொன்று என விழுந்து கொண்டே இருக்க, கிளைகள் மேலே விழாமலிருக்க இருவரும் பாய்ந்து ஓடினர்.

மரத்திற்கு பின்னாலிருந்து ஒருவன் வெளியேற முயல்கையில் வெற்றி கண் ஜாடை செய்ததில் அவன் அங்கு ஒளிந்திருந்து தாக்கும் தடியர்களின் கண்களுக்கு அகப்படாது ஒவ்வொரு மரத்திற்கும் பின்னால் ஒளிந்தபடி தனது ஆட்களுடன் வெற்றியை பின் தொடர்ந்தான்.

கிளைகள் முறிந்து விழுவது நின்றதும்… இவ்வளவு நேரம் ஓடிய களைப்பால் கதிர் சிறு கல்லின் மீது அமர,

“ஆர் யூ ஓகே” என்றபடி கதிரை நோக்கி வெற்றி குனிய… அவனின் முதுகை உராய்ந்து படி கூரிய கத்தி ஒன்று பாய்ந்து சென்று தரையில் விழுந்தது.

கத்தியை பார்த்ததும் கதிர் வெற்றியை இழுத்திருந்தான்.

“எனக்கென்னவோ உனக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு பயமா இருக்குது மச்சான், திரும்பி போயிடலாம்” என்று கதிர் கொல்லிக் கொண்டிருக்க, தன்னை தாக்க வந்த கத்தியை வெற்றி கையிலெடுத்து பார்த்தான். கத்தியில் விஷம் தோய்க்கப் பட்டிருந்தது.

அதனை பார்த்ததும் கதிரின் முகத்தில் அச்சம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“வெற்றி இப்போ நீ திரும்பி வரபோறீயா இல்லையாடா?” கதிர் சற்று குரலுயர்த்தி வினவினான்.

“போலாம்டா… நீர் எடுத்துக்கிட்டு, இதெல்லாம் யாரு பண்ணுறான்னு தெரிஞ்சிக்கிட்டு போவோம்” என்று வெற்றி முன்னேற, கதிர் அவனின் கை பிடித்து தடுத்திருந்தான்.

“எனக்கு பயமா இருக்கு வெற்றி.” இதனை சொல்லும்போதே கதிரின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“ஒத்த காட்டு யானைக்கு பயப்படாத நீயாடா, மறைஞ்சு நின்னு தாக்குற கோழைப்பயலுக்கு பயப்படுற” என்று சிரிப்புடன் கேட்ட வெற்றிக்கு,

“என்னோட தைரியத்தை விட, எனக்கு நீ முக்கியம் வெற்றி” எனக் கூறிய கதிர்… ‘இனி தான் என்ன செய்தாலும் அவனின் நிலையிலிருந்து பின் வாங்க போவதில்லை’ என்பதால் வெற்றியைத் தாண்டி கதிர் முன் சென்றான்.

‘தனக்கு வந்திருக்கும் ஆபத்து கதிரிடம் முடிந்துவிடுமோ’ என்று நினைத்த வெற்றி கதிரை கடந்து முன் செல்ல முயல… முதல் முறையாக வெற்றியை தன் பார்வையால் முறைத்தான் கதிர்.

‘பய ரொம்ப சூடாயிருக்கான் போலிருக்கே’ என எண்ணிய வெற்றி மேலும் அவனை கோவப்படுத்த வேண்டாமென்று கதிருக்கு பின்னால் பொறுமையாக சென்றான்.

பாதையில் கல் கிடந்தால் கூட, “போன கால் வலி திரும்ப வந்திடப் போவுது பார்த்து நட” என்று வெற்றியிடம் கதிர் அறிவுறுத்தினான்.

“இன்னும் எவ்ளோ தூரம் போகணும்” எனக் கேட்டவாறு கதிர் வெற்றியிடம் திரும்ப… மரத்திற்கு பின்னால் தாவி மறைந்த உருவத்தை கதிர் கண்டுவிட்டான்.

“யாரோ அங்க இருக்காங்க” என்று சொல்லி அம்மரத்தை நோக்கி கதிர் நகர,

“அவங்க என் டிபார்ட்மென்ட் ஆளுங்க” என்றான் வெற்றி.

“என்னடா சொல்லுற, இப்போவாவது இங்க என்ன நடக்குது சொல்லு வெற்றி” என்று கோபமாகக் கத்தினான் கதிர்.

“ரெண்டு நாளுக்கு முன்னுக்க, சிதம்பரத்தை ஜெயிலில் யாரோ சந்திச்சிருக்கான்… அவன் யாருன்னு தெரியல, அப்போ யாரையோ போட்டுத் தள்ளுறத பத்தி பேசியிருக்கானுங்க, அவனைத் தொடர்ந்து கண்காணிச்ச அப்போதான் எனக்கு குறி வைக்குறானுங்க தெரிஞ்சுது… அவனுக்கு பின்னால் இருக்க அந்த ஆளு யாருன்னு தெரியணும்” என்று பொறுமையாக வெற்றி சொல்ல,

“அதுக்கு உன் உயிரை பணயம் வைக்கிறீரோ” என்று காடே அதிர கத்திய கதிர், வெற்றியின் கையை பிடித்து திரும்பி நடக்க, வெற்றி அடியெடுத்து வைக்காது நின்றான்.

கதிரால் தன் பலம்கொண்டு இழுத்தும் வெற்றியை அசைக்க முடியாது போகவே,

“நீ இப்போ திரும்பி வரபோறீயா இல்லையாடா” என்று முடிவாகக் கேட்ட கதிரிடம், “எனக்கு என் கடமை முக்கியம்” என நெஞ்சை நிமிர்த்தி கூறினான் வெற்றி.

“அப்போ சரி… போடா போ…” என்ற கதிர் அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“சின்ன பய மாதிரி இதென்னம் அடம் கதிரு” என வெற்றிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்தவாறு நின்றனர்.

கதிரை மறைத்தவாறு வெற்றி முன் வந்து நிற்க, தனக்கு பின்னாலிருந்து வெற்றியை தாக்க வந்த ஒருவனை கதிர் அடித்து கீழே தள்ளியிருந்தான்.

தங்களது ஆட்களில் ஒருவன் அடிபட்டு கீழே கிடப்பதைக் கண்ட மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெற்றியை நோக்கி பாய… நொடியில் கதிரை அவர்களின் வட்டத்திலிருந்து வெளியில் தள்ளினான் கதிர்.

“வெற்றி” என்று அழைத்தவாறு கதிர் எழுந்து நிற்க… அவ்விடமே புழுதி களமாக காட்சியளித்தது.
தன்னைச் சுற்றி தாக்க வந்தவர்களை வேட்டியை மடித்துக் கட்டி,  சூறாவலியாய் சுழன்றடித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

வெற்றியின் ஒவ்வொரு அடியும் இடியாய் அவர்களின் மீது விழ, “அய்யோ அம்மா” என்கிற அலறலுடன் கை கால்கள் ஒடிந்து, முகம் வீங்கி வாயில் ரத்தம் வழிய அனைவரும் தரையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தினர்.

“இனி அவர்களால் எழ முடியாது” என நினைத்த வெற்றி கண்ணசைக்க, மரத்திற்கு பின்னாலிருந்து ராம் மற்றும் மூர்த்தி உட்பட ஐந்து காவலர்கள் வெளிவந்தனர்.

மர்ம நபர்கள் வெற்றியை சூழ்ந்ததும் அவர்களை தாக்க முற்பட்ட ராமினை,

“இவனுங்கயெல்லாம் அவருக்கு சாதாரணம் சார்” என்று மூர்த்தி தடுத்து கூறுவதற்குள் வெற்றி அவர்களை அடித்து வீழ்த்தியிருந்தான்.

விழுந்து கிடந்த ஆட்களை ஒவ்வொருவராக ராம் மற்றும் மற்ற காவலர்கள் தூக்கி நிறுத்த தனது காலிற்கு கீழ் கிடந்த ஒருவனை கொத்தாக பற்றி “யாருடா உங்கள அனுப்பிச்சது, அன்னைக்கு ஜெயிலுக்கு வந்தது நீதானடா” என்று வெற்றி அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று அவனின் தொண்டையில் பாய்ந்தது.

அக்கணமே அவன் உயிர் துறந்தான்.

நடக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்த சிலையென நின்றிருந்த கதிர், “வெற்றி” என்று கத்த… தனக்கு பின்னாலிருந்து தன்னை தாக்க வந்தவனின் கையினை வளைத்து பிடித்து தனக்கு முன்னால் தூக்கி வீழ்த்தினான் வெற்றி.

கிட்டத்தட்ட வந்திருந்த அடியாட்கள் அனைவரும் வெற்றியின் அடியில் எழ முடியாது தரையில் துவண்டிருக்க,

எஞ்சியிருந்தவர்களை சிதம்பரத்தின் வலது கை என அழைக்கப்பட்டவன் அனுப்பி வைத்தான்.

இதனை அறியாத வெற்றி, ராம் மற்றும் உடன் வந்த காவலர்களிடம்,

“இங்களை அள்ளிட்டு போங்க, வழக்கு பதிய வேண்டாம்” என்றான்.

அவ்வளவு தானென்று கதிர் குனிந்து சற்று ஆசுவாசம் கொள்ள, “வா கதிரு மேல போவோம்” என அழைத்த வெற்றியை கதிர் கொலைவெறியோடு பார்த்தான்.

“இதுக்கு மேலும் அங்கு போக வேண்டுமா” எனக் கேட்ட கதிர், தன்னை வெற்றி பார்த்த பார்வையில் மேற்கொண்டு எதுவும் பேசாது வெற்றியை தாண்டி முன் சென்றான்.

தன் மீது கோபம் இருந்த போதும் தனக்கு மதிப்பளித்து செல்லும் கதிரையே பார்த்திருந்த வெற்றி சிறு இடைவெளியில் நண்பனை பின் தொடர்ந்தான்.

காவல்நிலையம் வந்து சேர்ந்த ராம் தடியர்களுக்கு போலீஸ் அடியென்றால் என்னவென்று காண்பித்தான். எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டேங்கிறானுவ என்கிற கோபம் அவனிடத்தில் இருந்தது.

“சார் போதும்… வெற்றி சார் வந்ததும் விசாரணை வச்சிக்கிலாம்” என மூர்த்தி ராமிடம் சொல்ல… தடியர்களில் ஒருவன் சத்தமாக இடியென சிரித்தான்.

“இப்போ எதுக்கு நீ சிரிக்கிற” என்ற முறைப்பில் ராம் அவனை உதைக்க காலினை தூக்கிக்கொண்டு செல்ல…

“நீ எங்களை அடிக்குறதால, அங்க உங்க நொய்யா உசுரு போகமா இருக்கப்போறது இல்லை… இந்நேரம் மீதியிருக்க எங்க ஆளுவ அவனை கொன்னு இருப்பானுவ” என்று அவன் சொல்லியதும், அவனை தனது பலம் கொண்டு உதைத்த ராம்… உடனடியாக வெற்றியின் அலைபேசிக்கு அழைத்தான்.

“சார் அந்த மலைப்பகுதியில் சிக்னல் கிடைக்காது” என மூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப்பக்கம் அழைப்பு செல்வதற்கான மணி ஒலித்தது.

அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட… “சார் உங்களுக்கு ஒன்றுமில்லையே” எனக் கேட்டு ராம் பதற, “ஹலோ” என்று அமரியின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது.

“நீங்க” எனக் கேட்ட ராமிடம்

“வெற்றியின் மனைவி” என்றவள்
“அவருக்கு என்னாச்சு” என தானிருக்கும் சூழல் கருதி, மற்றவர்கள் யாவரையும் கலவர படுத்தக்கூடாது என்பதற்கு மெல்ல தன்னுடைய உறவுகளிடமிருந்து நழுவி சற்று தூரம் வந்து கேட்டாள்.

வெற்றியின் மனைவி என்றதும் நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என ஒரு கணம் சிந்தித்த ராம், “இப்போது தான் சொல்லாவிட்டாலும் அரைகுறையாக கொண்ட பதட்டம் அதிகமாகும்” என எண்ணி மேலோட்டமாகக் கூறினான்.

“சார் மேல் கொலை முயற்சி நடக்கப் போவதாக தகவல் வந்திருக்கு மேம்.” இதனை ராம் சொல்ல, அதற்கு அமரி அளித்த பதிலில் ராம் தான் வாயடைத்துப் போனான்.

“இவ்வளவு தானா, கொலை செய்ய முயற்சி பண்ணுறது அவரைத்தானே… உங்களில்லையே எதுக்கு இவ்வளவு பயம்… உங்க வேலையை நீங்க பாருங்க அவரு வேலையை அவரே பார்த்துப்பாரு” என்ற அமரி கணவனின் மீதுள்ள நம்பிக்கையால் தனது பயம் நீங்கினாள். அது அவளின் பேச்சிலும் வெளிப்பட்டது.

“யாரு?”

திரும்பி வந்து அமர்ந்த அமரியிடம் சசி வினவினான்.

“அவங்களுக்கு வந்த போன், மலைப்பாதையில் சிக்னல் கிடைக்காது இது வேற என்னத்துக்குன்னு எங்கிட்ட கொடுத்துட்டு போயிருந்தாங்க” என்று அமரி பதில் சொன்னாலும் அவளின் குரலில் சிறு நடுக்கம் உணர்ந்தான் சசி.

என்னதான் கணவன் மீது நம்பிக்கை இருந்தாலும் மனைவியாக உள்ளுக்குள் தோன்றிய பயம் அவளையும் அறியாது குரலில் வெளிப்பட்டது. ராமிடம் தைரியமாக பேசியவள் கணவனின் நலம் கருதி அம்மனிடம் வேண்டிக்கொண்டாள்.

“எதுக்குடா இப்படி உம்முன்னு வர?”

“ஏன் உனக்குத் தெரியாத?”

நீண்ட நேரமாக வெற்றியின் மீதிருக்கும் கோபத்தை எப்படி காட்டுவதென்று தெரியாது முகத்தை உர்ரென்று வைத்து எதுவும் பேசாது தனக்கு முன் செல்லும் கதிரை வெற்றி சீண்டினான். வெற்றி கேட்டதற்கு பதிலளித்துக் கொண்டே கதிர் திரும்பினான்.

அப்போதுதான் வெற்றி அதனை உணர்ந்தான். சிறு தொலைவில் இவர்களுக்கு நேரெதிரில் இருக்கும் காட்டு புதரில் யாரோ ஒளிந்திருப்பது. இலையோடு இலையாக மறைந்திருக்க அது உண்மையில் ஆட்கள் தானாயென்று வெற்றி கூர்ந்து கவனிக்கும் வேளையில், அவனின் பார்வை சென்ற திசையில் நொடியில் பாய்ந்த கதிர் தன்னுடைய மொத்த கோபத்தினையும் அவ்விருவர் மீது காண்பித்தான்.

“போதும்டா, என் மேல கோபமுன்னா அதை எங்கிட்டவே காட்டு” என்ற வெற்றி கதிரை பிடித்து அவன் அடிப்பதை தடுத்து நிறுத்தினான்.

“சொல்லுங்கடா நீங்க மட்டுந்தான் இருக்கீங்களா?” அப்போதும் தனது கோபத்தை, கீழே கிடந்த இருவரையும் உதைத்து வெளிப்படுத்தினான்.

மேலும் உங்களது ஆட்கள் இருக்காங்களா என்று கதிர் கேட்டதும் தரையில் கிடக்கும் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்துக் கொள்ள, அதனை கண்டு விட்ட வெற்றி தங்களைச் சுற்றியுள்ள பகுதியை பார்வையால் அலசினான்.

“இவனுங்க சொல்ல மாட்தானுங்க வெற்றி” என கதிர் மீண்டும் அவர்களை அடிக்க குனிந்த வேளையில் எங்கிருந்தோ வந்த கூரிய கத்தி ஒன்று வெற்றியின் கை புஜாத்தை பதம் பார்த்தது.

“வெற்றி” என்ற கதிரின் கத்தல் காட்டையே அதிர வைத்தது.

நொடியில் கத்தியை பிடிங்கிய வெற்றி, ரத்தம் வெளியேறுவதையும் பொருட்படுத்தாது கத்தி வந்த திசையை நோக்கி ஓடினான்.

பெரிய பாறை மறைவிலிருந்து ஒருவன் வெளியேறி ஓடத் துவங்க… தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனின் கால் முட்டிக்கு கீழ் குறி பார்த்து சுட்டான்.

குண்டு பாய்ந்த வேகத்தில் மடங்கி கீழே அமர்ந்தவன், தரையில் தேய்த்தவாறு முன்னேறிச் செல்ல.. அவனின் சட்டையை கொத்தாக பற்றித் தூக்கி, முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்த மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

“நீ அந்த சிதம்பரத்தோட அல்லக்கைதானடா, அவனை போட்டப்பவே உன்னையும் சிறையில் போட்டிருக்கணும்… புள்ளைக்குட்டிக் காரன்னு விட்டது தப்பா போச்சு” என்று வெற்றி மொழிய,

அவனோ, “எனக்கும் மேல ஒருத்தன் இருக்கான் போலீசு, சும்மா உன் கெத்தை என்கிட்ட காட்டாதீரு” எனக்கூறி சத்தமாக சிரித்தான்.

சிரித்தவனின் நெஞ்சிலேயே தன் கால் வைத்து அவனை வெற்றி உதைக்க, “சிதம்பரம் ஐயாவே அவரு சொல்லுறதைத்தான் கேப்பாரு… சும்மா என்னை புடிச்சிட்டன்னு மீசையை முறுக்கி விட்டுக்காதே” என்றான்.

அந்நேரம் ராம் மற்றும் மூர்த்தி மீண்டும் அங்கு வந்து சேர்ந்தனர்.வெற்றி அர்த்தமாக பார்க்க, ராமிற்கு அவனின் பார்வைக்கான பொருள் புரியாது விழிக்க… மூர்த்தி பதில் கூறினார்.

“இங்கிருந்து கூட்டிபோனவனுங்கல விசாரிச்சதுல… இன்னும் உங்களை தாக்க ஆளுங்க இருக்காங்க சொன்னாங்க, அதான் வந்தோம்.”

“இவனுங்க மூனு பேரையும் கூட்டிட்டு போங்க” என்ற வெற்றி,

சிதம்பரத்தின் வலது கை ஆளை காண்பித்து “இவனை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை கொடுங்க” என்றான்.

அதில் நீங்கள் இங்கிருந்து போகலாம் என்கிற மறை பொருள் இருந்தது.

“சார் நாங்க உங்களுக்குத் துணையாக இருக்கிறோம்” என்ற ராம்… வெற்றியின் உக்கிர முறைப்பில் அவனை ஏறெடுத்தும் பாராது மூவரையும் இழுத்துக்கொண்டு கிளம்பினான்.

“உன்னை பார்த்துக்க உனக்குத் தெரியுந்தான். ஆனால், துணைக்கு ஆளுங்க இருந்தாக்கா பலந்தானே” என்ற கதிரையும் தன் பார்வையால் அடக்கிய வெற்றி தீர்த்த அருவியை நோக்கி நகர்ந்தான்.

“வெற்றி கையில ரத்தம் வருது, முதலில் மருத்துவ மனைக்கு போவணும்… வா திரும்பி போகலாம்.”

கதிரின் பேச்சை வெற்றி காதில் வாங்கியதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை.

“சொல்றதை நீ கேட்கமாட்டியே” என அலுத்துக்கொண்ட கதிர், வெற்றியை தடுத்து நிறுத்தி, கத்தி குத்தினால் புஜத்தில் வரும் ரத்தத்தை நிறுத்த தனது வேட்டியின் ஒருமுனையை கிழித்து நன்கு பலம் கொண்டவரை இறுக்கமாக கட்டினான்.

“நிறைய படம் பார்த்துக் கெட்டுப்போயிட்டடா நீ” என அவன் வேட்டியை கிழித்து கட்டு போட்டதை வெற்றி கேலி செய்ய,

“ரத்தம் நிக்கிற மாதிரி தெரியல வெற்றி, நீ இங்கவே உட்கார்ந்திரு… இன்னும் ஐந்து நிமிட தூரந்தானே நான் போயி நீர் கொண்டாரேன்” என்று அக்கறையாகக் கூறிய நண்பனின் பேச்சைக் கேட்காது கதிருடன் சேர்ந்து வெற்றியும் நடந்தான்.

கதிருக்கு அருகிலிருக்கும் மரத்தில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

கதிர் வேக எட்டுக்களுடன் செல்ல,

வெற்றி அவனின் கோபத்தையெல்லாம் கருத்தில் கொள்ளவேயில்லை.

தீர்த்த அருவியை நெருங்கியதும், கதிர் நீர் சொட்டுமிடத்தில் குடத்தை வைத்துவிட்டு அது நிறைய காத்திருக்க, தனது ரத்தம் தோய்ந்த சட்டையை கழட்டிய வெற்றி கறை போக தேய்த்து அலசி உடுத்திக் கொண்டான்.

கைக்கு அசைவு கொடுத்ததால் ரத்த கசிவு ஏற்படத் தொடங்கியது. அதனை கதிருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

போகும்போது இருந்த சிரமம் வரும்போது இல்லை. ஆனால் வெற்றிக்கு தலை கிறுகிறுப்பதைப் போன்று இருந்தது. ரத்தம் வெளியேறியதால் மயக்கத்தை உண்டாக்கியதோ, தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.

கோவிலில் இருவரும் நுழைய, அமரியின் கண்கள் கணவனை உடல் முழுக்க ஆராய்ந்தது. முகத்தில் சோர்வு தென்பட, “இவ்வளவு தூரம் சென்று வந்த களைப்பாக இருக்கும்” என்று கருதினாள்.

பூசரியிடம் நீரை அளித்து விட்டு இருவரும் அனைவரோடு சேர்ந்து நிற்க, வெற்றி நிற்க முடியாது தடுமாறினான்.

அனைவரும் அம்மனுக்கு நடைபெறும் அபிடேகத்திலேயே கவனமாக இருக்க, அமரி வெற்றியின் பக்கம் நெருங்கி வந்தாள்.

தன்னுடைய எழில் அருகில் உரசியவாறு நிற்பதெல்லாம் வெற்றி உணரும் நிலையிலில்லை.

கதிருக்குத்தான் வெற்றியின் செயல் ஆயாசமாக இருந்தது.

அனைத்து பூஜைகளும் முடிந்து, சிலையை கருவறைக்குள் வைத்ததும், கதிரை அழைத்த வெற்றி, “இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியும் தெரியல கதிரு” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கையில் துணியைத்தாண்டி விரல்களில் ரத்தம் வழிய தனக்கு அருகில் நின்றிருந்த அமரியின் மீது கண்கள் சொருக சரிந்தான்.

கணவனை தாங்கிய அமரி வழியும் ரத்த துளிகளைக் கண்டு கதற, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெற்றியை சூழ்ந்தனர்.

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
37
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. புடிச்சு ஜெயில்ல போட்டு இந்த அமைச்சர் அடங்கலயா அமைச்சருக்கு மேல ஒருத்தன் வேற இருக்கானா??