Loading

 

 

காவ(த)லன் 23

வீடு நோக்கி தனது வண்டியில் சீறிக்கொண்டிருந்த வெற்றி தனது பணியிலிருந்து வெளியேறியவனாக மனதில் தன்னுடைய எழிலை கொண்டு வந்திருந்தான்.

வழக்கில் மூழ்கி இருந்தவனுக்கு இப்போது தான் தன்னை பற்றியும் மூன்று நாட்களில் தன் வாழ்வில் நடந்ததைப் பற்றியும் தெளிவாக சிந்திக்கவே முடிந்தது.

“தன்னுடைய திருமணம் எப்போதாக இருந்தாலும் அது எழிலோடு தான்” என்று வெற்றிக்கு நன்கு தெரியும்.

ஆனால் காதலில் தொடங்கி திருமணத்தில் முடிய வேண்டுமென்கிற அவனது எண்ணத்திற்கு மாறாக அவனே எதிர்பாராது நடந்து விட்டதில் சிறு வருத்தம் இருந்த போதிலும் அவனை மகிழ்வடைய செய்தது அவனின் எழிலின் நடவடிக்கைகள்.

‘தன்னை மூன்று முறை பார்த்திருக்கின்றாள் அவ்வளவு தான்… தான் தான் வாணியின் அண்ணன் வெற்றி எனக்கூட அவளுக்கு தெரியாது. தெரிந்த போது அவள் சிறு அதிர்வுடன் தானே தன்னை ஏறிட்டு பார்த்தாள்… அந்நிலையிலும் பெற்றோரின் வேண்டுதலுக்காக தன்னை மணந்து கொண்டவளிடம் எப்படி காதலை சொல்லி புரியவைப்பது. அதுமட்டுமில்லாது திருமணத்தைப் பற்றி அவளுக்கென ஆசைகள் இருந்தால், என்ன செய்வது’ என தனக்குத்தானே நினைத்து வருந்தியவன்…

“பொஞ்சாதிகிட்ட காதலை சொல்ல கூடாதுன்னு ஏதாவது இருக்கா… ஒரு பொண்ணுகிட்ட நான் உன்னைய விரும்புறேன்னு சொல்லிடலாம்… ஆனால் கட்டுன பொண்டாட்டிகிட்ட அவ்வளவு சாதாரணமா சொல்லிட முடியாது… அதனால மூஞ்சிய இப்படி வச்சிக்காம, அமரியை உன் காதலை புரிஞ்சிக்க வை” என்று கதிர் சொல்லிய வார்த்தைகளில்,

“சொன்னாக்கா புரிஞ்சிக்குவாளா?” என்றே வெற்றிக்கு இருந்தது. ஆனால் வெற்றியின் வருத்தத்தையெல்லாம் ஒன்றுமில்லையென செய்திருந்தாள் அவனின் எழில்.

அவனவளின் கழுத்தில் தாலி கட்டியதை இப்போது நினைத்தாலும் வெற்றிக்கு மனம் லேசானது போல் உணர்ந்தான்.

அந்நொடி முதல் நேற்று இரவு ராம் அழைப்பதற்கு முன் வரை ஒவ்வொரு காட்சிகளாக வெற்றியின் கண் முன் விரிய,

“இப்படியா காதலை சொல்லுவாங்க” என அமரி புலம்பியதும் அதன் பின்னர் அவள் எதிர்பார்த்ததைப் போன்று தான் தன்னவளிடம் காதல் சொல்லிய தருணத்தை நினைத்து பார்த்த வெற்றிக்கு அப்போதுதான் அவள் வழியும் கண்ணீரோடு மறுப்பாக தலையசைத்ததே அவனுக்கு நினைவு வந்தது.

“ஒருவேளை தன்னை பிடிக்கவில்லையோ” என்று சிந்தித்த அடுத்த நொடியே “அவளுக்கும் உன் மீது காதலிருக்கிறது” என்று அவனின் ஆழ் மனம் அடித்து சொல்லியது.

“வேறென்னவா இருக்கும்” என வெற்றி மனதோடு குழம்பிய போதுதான், அவனுடைய நாட்குறிப்பேடு நினைவிற்கு வந்தது.

குறிப்பேட்டின் மீது வைக்கப்பட்டிருந்த ரோஜா சொல்லாமல் சொல்லியது,

“உனக்கான பதில் அதில் உள்ளது.”

அந்நொடியே அதனை அறிந்திட துடித்தான். இதயம் தாறுமாறாக துடித்தது. கண்கள் அதனை கண்டுவிட பரபரத்தது.

அமரி அவர்கள் வீட்டில் இருப்பதால் நேராக அங்கு செல்ல கிளம்பியவன் இப்போது தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தான்.

“என்ன ராசா டிவி பொட்டியில என்னென்னவோ சொல்லுறாங்க அவ்வளவும் நிசமாய்யா” என்று வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த செண்பகம் வெற்றியை வழி மறைக்க,

அவருக்கு நின்றுகூட பதிலளிக்காது தனது வேக நடையை எட்டி வைத்தவாறு “அதான் விடயம் அறிஞ்சிருக்கியே பாட்டி, அப்புறம் என்ன” என்றவாறு மாடிப்படிகளில் ஏற கால் வைத்தவனை வெங்கடாசலத்தின் குரல் தடுத்து நிறுத்தியது.

“புள்ளை அங்க அவங்க வீட்டுல இருக்கும்போது நீ இங்க எதுக்குடா வந்த?”

நின்று திரும்பிய வெற்றி “முக்கியமான ஒன்னு இங்க இருக்கு தாத்தா, இதோ போயிடுறேன்.” பதில் சொல்லிய வெற்றி வேகமாக அடுத்த படியில் கால் வைக்க,

“மறுவீட்டுக்கு போயிட்டு நீ அங்க இல்லாம இங்க தனியா வந்திருக்கிறது தெரிஞ்சா அவங்க கவலைப்படுவாங்கய்யா… சீக்கிரம் போ, புள்ள அங்க உனக்காக வேண்டி காத்துகிடக்குமா இல்லையா” என்றவர் வெற்றி சரியென தலையாட்டியதும்,

“செய்தி பாத்தேன் வெற்றி… பெருமையா இருக்கு” எனக்கூறி தன்னுடைய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார்.

கம்பீரமாக புன்னகைத்தவன் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏற கணுக்காலில் வலி உணர அப்போதுதான் சுளுக்கு ஏற்பட்டது நினைக்கு வந்தது. இவ்வளவு நேரமும் ஓடிக்கொண்டே இருந்ததால், கீழே விழுந்ததில் ஏற்பட்ட அடியை முற்றிலும் மறந்தே போயிருந்தான். அடிபட்டது நினைவுக்கு வந்ததும் ஒவ்வொரு அடிக்கும் கால் வலிப்பதை உணர்ந்தான். இருப்பினும் தனது தேடலுக்கான பதிலை அறிந்திட வலியை பொருட்படுத்தாது தனது அறையை அடைந்திருந்தான்.

உள் நுழைந்ததும் வெற்றியின் கண்கள் அந்த சிறு மேசையில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் நாட்குறிப்பேட்டின் மீது படிந்தது.

அன்று வெற்றியின் கவனம் குறிப்பேட்டில் பதிவதற்காக அதன் மீது அமரி வைத்த ரோஜா இன்று காய்ந்திருந்தது.

அதனை கையில் எடுத்தவன் காய்ந்த இதழ்கள் உதிர்ந்திடாதவாறு மேசையின் மீது வைத்துவிட்டு, அடையாளக் குறியீடு இருக்கும் பக்கத்தை திறந்தான்.
அந்த பக்கத்தில் வெற்றி எழுதிய கவிதை வீற்றிருந்தது.

“எழில் மிகுந்த
என்னவளோ எழில்…

கண்ட நொடி முதல்
இதயம் எனை அறியாது
எகிறிக் குதிக்கின்றது.
துடிக்கும் தாளம் தப்புகிறது.
காணும் காட்சிகள் அவளாகின்றன.
கேட்கும் ஒலிகள் அவள் குரலாகின்றன.
கடக்கும் நொடிகள் யாவும் அவள் நினைவாகின்றன.
அழகான அனைத்தும் என் எழிலாகிப் போகின்றன.
மனதின் காதலாகிப் போனவள்
சுவாசமாய் உயிர் தீண்டுகிறாள்.
தீண்டிடா உணர்வுகளை அவளறியாது
தினம் தினம் கொய்கிறாள்.
மொத்தமாகக் களவாடிய
என் இதயக் காதலை
என்னவள் அறிவது என்றோ?
என் மௌனம் தான் திறப்பது என்றோ!

இரும்பான காவலனிடத்தில் இருதயக் காதலாகிப் போனாள் வெற்றியின் பூம்பொழில் அமரி.”

அவன் எழுதிய கவிதையை அவனே வாசிக்கும்போது அவனது இதழில் மந்தகாசமாய் குடியேறியது சிறு புன்னகை.

அவனால் எழுதப்பட்ட அவனவளின் பெயரை அவனே அறியாது அவனது விரல்கள் தீண்டிட, அப்போது தான் கவனித்தான் கவிதைக்கு கீழே அமரியால் இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தது.

“அட மக்கு காவலரே, காகிதத்தில் இப்படி உருகி உருகி காதலை எழுதியதற்கு பதிலா ஒரு முறை என்னிடம் சொல்லியிருந்தால், எதிர்பாராது திடீரென நடந்திருந்தாலும் நம் திருமணம் காதல் திருமணமாகி இருக்குமே!”

அவள் என்ன சொல்லியிருக்கின்றாள் என்று முதலில் புரியாவிட்டாலும், மீண்டும் ஒருமுறை படிக்கும்போது “தன் கேள்வியான காதலுக்கு அவள் மறைமுகமாக சம்மதம் வழங்கியிருக்கின்றாள்” என்பதை புரிந்து கொண்ட வெற்றி அந்நொடியே தன் எழிலை கண்டுவிட துடித்தான்.

“இதில் காதலை ஏற்றவள் நேற்று மறுப்பாய் தலையசைத்தது ஏன்” என்று சிந்தித்தவனுக்கு, ‘அவள் உன்னிடம் வேறொன்றை எதிர் பார்க்கின்றாள்’ என மனம் சொல்லியது.

“அது என்னவாக இருக்கும்” என்று யோசித்துக் கொண்டே, காய்ந்த மலரை குறிப்பேட்டின் உள் வைத்தவன் அதனை பத்திரப்படுத்திவிட்டு… “வந்ததே வந்தோம் குளிச்சிட்டு போவோம்” என தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேறு உடைக்கு மாறியவன் தனது எழிலைக் காண விரைந்தான்.

அவனின் எழிலோ நேற்று சென்றவன் இன்னும் வீடு வரவில்லை என கவலையாக அவளது அறைக்கும் வாசலுக்கும் நடையாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அதோடு கலையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிந்தது முதல், உடலில் ஏற்படும் உதறலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. நடுக்கம் மறைய வெற்றியின் அருகாமையை எதிர்பார்த்தது அமரியின் மனம்.

அமரியையே பார்த்துக் கொண்டிருந்த வாணிக்கு, கோவிலில் கதிர் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வர… காரணம் எதுவும் சொல்லாது அமரியிடம் சென்று அவளது கைகளைப் பற்றி மன்னிப்பு வேண்டினாள்.

ஏனென்று தெரியாத போதும்…

“மன்னிப்பு கேட்குமளவிற்கு நமக்கிடையே இடைவெளி வந்துவிட்டதா அண்ணி” என்று கேட்ட அமரியின் கன்னம் தட்டிய வாணி எதுவும் கூறாது சென்று விட, மீண்டும் ஒருமுறை வாயிலுக்குச் சென்று திரும்பினாள் அமரி.

அந்நேரம் தனது வேலைகளை முடித்துக் கொண்டு கதிர் வீட்டிற்கு வர, ஆவலாக அவன் பின்னால் பார்த்தாள் அமரி. வெற்றியில்லை என்றதும் காற்றிறங்கிய பலூனாக அவள் முகம் சோர்ந்து போனது.

தன்னை கண்டதும் முதலில் பிரகாசமான முகம் உடனேயே வாடியதும் காரணம் புரிந்தவன்,

“இன்னைக்கு ஹீரோவே வெற்றிதான் அமரி, நிறைய வேலையிருக்கும் வந்திடுவான்” என்ற கதிரே சோர்ந்து தான் காணப்பட்டான்.

சிதம்பரத்தால் காட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த விலங்குகளை மீட்டு அவற்றிற்கு மருத்துவ பரிசோதனை, மீண்டும் காட்டிற்குள் அதனதன் பகுதிக்குள் விட்டுவிட்டு, விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட ஏனைய பொருட்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து என்று கதிருக்கும் இன்று நிற்க முடியாத வேலை.

அண்ணனின் சோர்வை உணர்ந்தவள் “கருப்பட்டி போட்டாறவா ண்ணா” என்க,

“எனக்கும் ஒண்ணு கிடைக்குமா?” என்று அவர்களுக்கு பின்னால் வெற்றியின் குரல் ஒலித்தது.

வெண்ணிற வேட்டி சட்டை அணிந்திருந்த வெற்றி, இடது கையால் வேட்டியின் ஒருபக்க நுனியை பிடித்தவாறு, வலது கை விரலால் இடது பக்க மீசையை முறுக்கி விட்டவாறு தோரணையாக நின்றிருந்தவன் அமரியை காதலாக பார்த்தவாறு அவளுக்கு நேரெதிரில் வந்து நின்றான்.

முதன் முதலில் வெற்றியை அமரி கண்ட தோற்றம்… அத்தோடு அவனின் கண்களில் கரை புரளும் காதல்… அமரியின் இதயத்தை சில்லென்று தாக்கியது.
இருவரும் அருகில் நிற்கும் கதிரை முற்றிலும் மறந்தவர்களாக தங்களது விழிகளில் சங்கமித்துக் கொண்டிருக்க,

வெற்றியின் தோளில் கைபோட்ட கதிர்,

“நான் இங்கதான் மச்சான் நிக்கிறேன்” என்க,

“நீ இன்னும் போகலையா மச்சான்” என்று அமரியிடமிருந்து சற்றும் பார்வையை மாற்றாது வெற்றி கேட்டிருந்தான்.

“நடத்துடா நடத்து…” என்ற கதிர்,

“இது முற்றம்” எனக்கூறி மனம் நிறைவுடன் அவர்களுக்கு தனிமை அளித்துச் சென்றான்.

கதிர் சென்றதும் தன்னுடைய பார்வையை சற்றும் மாற்றாத வெற்றி அமரியை மெல்ல நெருங்க,

அவனின் ஒவ்வொரு அடிக்கும் இமை சிமிட்டாது அவனை பார்த்தவாறே பின்னால் சென்றாள் அமரி.

வெற்றியின் காதல் பார்வை ஆழிப்பேரலையாய் அவளை வாரிச்சுருட்ட, தூணில் மோதி நின்றாள். அவளின் முகத்தில் தனது சூடான மூச்சுக் காற்று படும் நெருக்கத்தில் நின்றவன்… தனது மொத்த காதலையும் அவளது பெயரில் தேக்கி விளித்தான்.

“எழில்.”

கணவனின் நெருக்கத்தில் அவஸ்தையை உணர்ந்தவளின் இமைகள் நிலம் தாழ்ந்திருக்க, அவன் உயிர் உருக்கும் அழைப்பில், வெற்றியை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அகல விரிந்திருந்தது.

அவள் எதிர் பார்த்தது அவனின் எழில் என்ற அழைப்பைத்தான்.

“தனது காதலை அவள் ஏற்ற பிறகே, எழில் என மனம் திறந்து அழைக்க வேண்டும்” என்று நினைத்திருந்தவன் தன்னவளின் காதல் சம்மதத்திற்காக, அவளின் விருப்பப்படி முன்னரே விளித்தான்.

உன்னை நானறிவேன் எனும் கூற்று அதில் பொதிந்திருந்தது.

‘எப்படி கண்டு கொண்டான், அதுவும் ஒருவரின் பெயரை இவ்வளவு காதலாக அழைக்க முடியுமா?’ என மனதிடம் கேள்விக் கேட்க,
மீண்டும் ஒருமுறை “எழில்” என்றழைத்தவன் “இப்போ எனக்கு(என் காதலுக்கு) சரி சொல்லுவியா” எனக் கேட்க,

அவளின் தலை தானாக சரியென ஆடியது. அதில் அவன் மேலும் அவளை உரசிவிடும் அளவிற்கு நெருங்கி கன்னத்து பக்கம் தனது இதழினை கொண்டு செல்ல… கண்களை இறுக மூடி நின்றாள்.

அவளின் முகத்தில் எதற்கான எதிர்பார்ப்போ அப்பட்டமாக தெரிந்தது. நாணம் பூசிய தன்னவளின் முகத்தை ரசித்தவன், அவளின் கன்னம் தாண்டி காதருகே குனிந்து…

“இன்னும் கருப்பட்டி வரல” என்க,

அதில் பட்டென்று உணர்வுகள் அறந்து விழ விழி திறந்தவள் அவனை முறைத்து பார்க்க,

“நீ என்கிட்ட ஏதாவது எதிர்பார்த்தியா?” என்று ஒன்றும் அறியாதவன் போல் சிரியாது வினவினான்.

“அவ்வளவு சுருக்கா எதிர்பார்த்தது கிடைச்சிட்டாக்கா சுவாரஸ்யம் இருக்காது… காத்திருந்து கிடைப்பதற்குதான் சுகம் அதிகம்” என்று வெற்றிக் கூற,

‘உன் வாய் வழியா காதலை வெளிப்படுத்தினால் தான் அனைத்தும்’ எனும் பொருள் படிந்த பார்வையை வெற்றியின் கண்கள் தன்னவளிடம் வீசியது.

அவனின் பார்வைக்கான அர்த்தம் உணர்ந்தவளோ ஏதோ சொல்ல வாய் திறக்கையில்… பஞ்சு பாட்டியின் செருமல் ஒலி கேட்க,

அவனின் மார்பில் கை வைத்து தள்ளி “அப்போ இப்படியே காத்திருங்க காவலரே, காத்திருப்பதுதான் உங்களுக்கு பழக்கமாச்சே” என அவன் இத்தனை வருடங்களாக காதலை சொல்லாது அமைதி காத்ததை குத்திக்காட்டி பேசிவிட்டு இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

சன்னமான சிரிப்புடன் பின்னந்தலையை கோதியவனாய் வெற்றி திரும்ப,

“எப்பய்யா வந்த… வா சாப்பிடலாம்” என அழைத்தார்.

“இந்நேரத்தில் சாப்பிடும் பழக்கமில்லை பாட்டி” என்றவன் அமரியின் அறைக்கு சென்றான்.

_______________________

“இந்நேரத்தில் நாம இங்க ஏன் கூடியிருக்கோமுன்னா” என்று அருவிக்கரையில் கூடியிருந்த முக்கிய தலக்கட்டுகளிடம் தன் பேச்சினைத் தொடர்ந்தார் செல்லச்சாமி.

“கற்ப கூடத்துலேர்ந்து அம்மன் சிலை வெளிய வந்துட்டதால, அதனை உள்ளே பிரதிஷ்டிக்க நல்ல நேரம் பாக்கணும்” என்றார்.

அப்போது செல்லச்சாமியின் பேச்சை இடைவெட்டி பேசினார் கோவிலின் பூசாரி.

“அம்மன் அவ இடத்துல இருந்து வெளியே வந்ததால் உக்கிரமா இருப்பாங்க… அதனால ஆறு வேளை பூசை செய்த பிறகு தான் உள்ளார எடுத்து வைக்க முடியுங்க” என்றார்.

“அப்படியே செஞ்சுடலாமே” என்று நல்லு சொல்ல,

“திருவிழா வேலைகளெல்லாம் வரிசை கட்டி நிக்குது… அதனால செய்ய வேண்டியதை வெரசா முடியுங்க” என்றார் தங்கவேலு.

“அபிடேகத்துக்கு அம்மனுக்கு பிடிச்ச தீர்த்த அருவி நீரும் இருந்தால் நல்லாயிருக்குமுங்க” என பூசாரி சொல்ல,

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால் விநாயகம் சிறு அச்சத்தோடு நல்லுவை ஏறிட்டார்.

“எதுவா இருந்தாலும் உடன் நானிருக்கின்றேன்” எனும் விதமாக ஆதரவாய் நல்லு கண் மூடி திறக்க, வெங்கடாசலம் தன் கருத்தை முன் வைத்தார்.

“இந்த முறை எங்க சார்பா வெற்றியும் அவுக சார்பா கதிரும் நீர் எடுக்க போவட்டும்… இனிமேல் எல்லாம் அவங்கதானே” என்க அவரின் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இவர்களின் பேச்சினை மறைந்திருந்து கேட்ட உருவம் ஒன்று, ‘வெற்றியை கொலை செய்ய இதுதேன் சரியான சந்தர்ப்பம்’ என்று மனதில் நினைத்தது.

வெற்றியை பழிவாங்க சரியான தருணத்தை எதிர் பார்த்து காத்திருப்பது யாராக இருக்கும்?

பஞ்சு பாட்டியின் செருமலில் வெற்றியை தள்ளி விட்டு அடுக்கலைக்குள் ஓடி மறைந்தவள், வெற்றி மாடியேறி செல்லும் வரை தலையை மட்டும் நீட்டி அவனை பார்த்திருந்தாள்.

வெற்றியின் உருவம் மறைந்ததும், அவனின் அருகாமையால் விளைந்த நாணத்தால், அங்கிருந்த மேடையில் சாய்ந்து நின்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டவள்… கீரை கட்டினை கையிலெடுத்து நடனமாடினாள்.

இரவு உணவினை தயார் செய்து கொண்டிருந்த அன்னம்,

“ஏய் என்னடி ஆச்சுது உனக்கு” என்று வினவ… அவரையும் பிடித்து ஒரு சுற்று சுற்றி ஆடினாள். இதில் வாயில் பாடல் வேறு,

“வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்” என பாடிக்கொண்டே பாப் சிங்கரெல்லாம் பாதி குனிந்து ஒலிவாங்கியை கையில் பிடிப்பதைப் போன்று அன்னத்தின் உடலை சாய்த்து பிடித்தவள்… அவரின் கன்னத்தில் முத்தம் வைக்க,

மகளை தன்னிலிருந்து பிரித்து தள்ளியவர், “என்னடி ஆச்சுது உனக்கு” என்று அவளை பிடிச்சு உலுக்க…

அன்னத்தின் சத்தம் கேட்டு வந்த பஞ்சு என்னவென்று விசாரிக்க,

“உங்க பேத்திக்கு என்னவோ ஆச்சுது அத்தே, திடீரென அவளா சிரிக்கிறா, பாட்டு பாடி ஆட்டம் போடுறா… அதுமட்டுமில்ல அத்தே” என்றவர் சுற்றி யாரும் இருக்கின்றனரா என நோட்டமிட்டு, தன் கன்னத்தை துடைத்தவாறே “எனக்கு முத்தமெல்லாம் குடுக்குறா அத்தே” என்றுக் கூறினார்.

மருமகள் சொல்லியதைக் கேட்ட பஞ்சு தன் பேத்தியின் மகிழ்ச்சிக்கான காரணத்தை நொடியில் கண்டு கொண்டவராக அமரியின் அருகில் சென்று அவளின் கன்னம் வழித்து, “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனுத்தா” என்றவர்,

“இதெல்லாம் கடந்து தானே அன்னம் நீ வந்திருப்ப, உனக்கு உன் மவளுக்கான செய்கைக்கு காரணம் புரியலையாக்கும்… இதெல்லாம் கண்டுக்காதடி” எனக்கூறிச் சென்றார்.

பஞ்சு பாட்டி அவ்வாறு சொல்லியதும் தன் அன்னையை ஏறிட்டு பார்க்க வெட்கம் கொண்ட அமரி முகத்தினை தன் கை கொண்டு மூடியவளாக திரும்பி நின்றாள்.

அதன் பிறகே மகளும் மருமகனும் எதிர்பாராத திருமணமாக இருந்தாலும் அதனை வாழ ஆரம்பித்து விட்டார்கள் என மகிழ்வு கொண்டார்.

கதிர் அறைக்குள் சென்ற போது வாணி தனது முழு உடலையும் குறுக்கி மெத்தையில் படுத்திருந்தாள்.

கதிர் பேசியது அவளுக்கு மிகுந்த கவலையை அளித்தது. காதலால் இணைந்த தங்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதாக வருந்தினாள்.

கதிருக்கும் மனைவியை திட்டியது வேதனையை அளித்தது. ஆனால் அவளை சமாதானம் செய்ய அவனுக்கு நேரம் அமையவில்லை.

இப்போது அவளை இப்படி பார்க்கும்போது, “அப்படி பேசியிருக்கக் கூடாதோ” என நினைத்தான்.

வாணி கண் மூடியிருக்க, அவளின் தோள் தொட்டு எழுப்பிய கதிர்… தான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பினை வேண்ட,

“நான் அமரியை யோசிக்காமல், என்னுடைய வேலையில் மட்டும் கவனமாக இருந்து அப்படி செய்தது தப்புதான்… நாந்தான் மன்னிப்பு கேட்கணும்” என கலங்கும் குரலோடு கதிரின் முகத்தை பாராது வாணி பேச அவனின் காதல் மனம் மனைவியின் பார்வைக்காக ஏங்கியது.

“மன்னிச்சிடுடி பொண்டாட்டி” என்று அவன் இறங்கி வர…

“நீ மன்னிப்பு கேட்கணுங்கிறதுக்காக நான் வருத்தமாயில்லை, நமக்குள்ள இடைவெளி வந்திட்டா போல இருக்கு” என சிறு விசும்பலோடு வாணி கதிரின் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவனும் அந்த இடைவெளியை உணர்ந்தான் போல்… தன் மேல் சாய்ந்த மனைவியை காதலாக தன்னோடு சேர்த்து அணைத்தான்.

சட்டையைத் தாண்டி இதயம் நனைத்த வாணியின் கண்ணீர் ஈரம் உணர்ந்தவன், அவளின் முகம் நிமிர்த்தி… “இனி எந்தவொரு சூழலிலும் நீ செய்ததை சொல்லிக் காட்ட மாட்டேன், குழந்தை பிறக்கட்டும் அதன் பிறகு நீ வேலைக்கு செல்லலாம்” என்று கூற,

“ம்” என்று கணவனின் கூற்றிற்கு சம்மதித்த வாணி, “நானும் இதுபோல் யோசியாது எதுவும் செய்ய மாட்டேன்” என உறுதியளித்தாள்.

நீண்ட நேரம் நீடித்த அவர்களின் அணைப்பை கதிரே முடிவுக்கு கொண்டு வந்தான்.

“அங்கன வெற்றி தனியா இருக்கான்னு நினைக்கிறேன் வாணி, அமரியும் அடுக்கலையில இருக்கா(ள்)… நான் செத்த பார்த்திட்டு வரேன்” என்று நகர்ந்த கணவனை இடுப்பில் கை வைத்து முறைத்த வாணி,

“பேசாம அண்ணனையே கட்டிக்கிட்டு இருக்கலாம்ல” என சிரியாது கணவனை கேலி செய்தாள்.

“ம்ம்ம்” பெருமூச்சு செறிந்த கதிர்,

“பண்ணியிருக்கலாந்தான், என்ன பண்ணறது நான் உன்னை காதலிச்சு தொலைச்சிட்டேனே” என்று கவலையாகக் கூறி வாணியிடம் நான்கு குத்துகளை பரிசாக பெற்றான் கதிர்.

“இப்பவும் ஒண்ணுமில்லை அமரிகிட்டவும், அண்ணன்கிட்டவும் நான் பேசுறேன்” என்ற மனைவியை செல்லமாக கன்னத்தில் அடித்த கதிர், “உனக்கு பொறாமைடி” எனக் கூறி வெற்றியிடம் சென்றான்.

செல்லும்போது மறக்காது தன்னறையிலிருந்த வலி நீக்கும் களிம்பை எடுத்துக் கொண்டான்.

வெற்றி அமரியின் அறையை சுற்றி வர, ஆல்பம் ஒன்று தட்டுப்பட்டது. அதனை திறக்க அமரியின் சிறு வயது புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதிலிருப்பது அனைத்தும் அமரியின் புகைப்படங்கள் என்று அறிந்தவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்க,

“வெற்றி” என அழைத்தவாறு கதிர் வந்தான்.

“வாடா” என்ற வெற்றி மீண்டும் அல்பத்திற்குள் பார்வையை பதிக்க, வெற்றியின் காலருகில் தரையில் அமர்ந்த கதிர் வெற்றியின் கணுக்கால் சற்று வீங்கியிருக்க, நன்கு சூடு பரக்க களிம்பினைத் தேய்க்க ஆரம்பித்தான்.

“ஹேய் என்னடா பண்ணுற” எனக் கேட்டவாறு வெற்றி பட்டென தன் காலினை இழுத்துக்கொள்ள,
மீண்டும் வெற்றியின் காலை பற்றிய கதிர், “நீ வீட்டுக்குள்ள வரும்போதே கவனிச்சேன், உன் நடை கொஞ்சம் தடுமாறியது… அதான் களிம்பு கொண்டு வந்தேன்” என்றவன் மீண்டும் தேய்க்க ஆரம்பித்தான்.

‘தனக்கொன்றென்றால் கதிரால் தாங்கிக்கொள்ள முடியாது’ என நன்கு அறிந்த வெற்றி எதுவும் சொல்லாது தனது காலினை காண்பித்தான். அவனுக்குமே அந்த வலி எப்போது சரியாகுமென்று இருந்தது.

எதுவும் சொல்லாது வெற்றி காண்பிக்கும் போதே அவனுக்கு அதிகம் வலிக்கிறது என்பதை யூகித்த கதிர், “வலிக்குதுன்னாக்கா சொல்ல மாட்டியாடா” என்று கடிந்து கொண்டான்.

அதற்கு பதிலளிக்காது வெற்றி சிரிக்க, “எதுக்கு சிரிக்கிற, மத்தவங்களுக்கு ஒண்ணுன்னாக்கா ஓடி ஓடி செய்வ… உனக்கு எதாவதுன்னா செஞ்சிக்க மாட்டியாடா” என கொஞ்சமும் தனது கோபத்தை குறைத்துக் கொள்ளாது கதிர் வினவினான்.

“என் பொஞ்சாதி செய்ய வேண்டியதெல்லாம் நீ செஞ்சிட்டு இருக்கியே… அதான் சிரிச்சேன்” என வெற்றி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அமரி,

“எதுவும் சொன்னாதான் தெரியும்” என்க,

“கணவனுக்கு ஒண்ணுன்னாக்கா சொல்லாமலே மனைவி தெரிஞ்சிக்கணும்” என்று வெற்றி அமரியை ஆழமாக பார்த்துக்கொண்டே கூறினான்.

“இனிமே தெரிஞ்சிக்கிறோம்” என்ற அமரி வெடுக்கென கதிரின் கையிலிருந்த களிம்பை பறித்து, வெற்றியின் காலை தன் மடியில் வைத்து தேய்க்க ஆரம்பித்தாள்.

தன்னுடைய எழிலின் தீண்டலில் இரும்பு காவலனும் மெல்ல கரைந்தான். மனைவியின் செயலை ரசிக்கத் தொடங்கினான்.

‘இனி இங்கு தான் அதிகப்படி’ என நினைத்த கதிர் சத்தமில்லாமல் வெளியேறினான்.

களிம்பினை தேய்த்து முடித்த அமரி, “இப்போ எப்பிடி இருக்கு” எனக் கேட்டுக்கொண்டே நிமிர… தன் கையில் முகத்தை தங்கியவாறு தன்னையே பார்த்திருக்கும் கணவனின் விழி வீச்சில் அவளின் விழிகள் உறைந்து நின்றன.

மௌனமாய் கண்கள் நான்கும் காதல் செய்ய, “ஐ லவ் யூ” எனக் கூறினான்.

முகத்தில் புன்னகை அரும்ப, அவன் சொல்லியது பிடித்திருந்தும்,

“எத்தனை முறை தான் சொல்லுவீங்க” என்றாள் அமரி.

“என்னுடைய காத்திருப்புக்கு வாழ்நாள் முழுக்க சொல்லலாம்” என்ற வெற்றி “நான் யாருன்னு தெரியாமலே உனக்கு எப்படி என்னை பிடித்தது?” என வினவினான்.

அவனிடம் விளையாட நினைத்த அமரி, அவனருகிலிருந்து எழுந்தவளாய் “கல்யாணம் ஆகிபோச்சே, நம்ம புருஷனாச்சேன்னுதான் உங்களை பிடிச்சுது… அதுக்கு முன்னுக்க பிடிக்குமுன்னு நான் சொல்லலையே” என சீண்டினாள்.

அவளின் இதழோர நெளிவை வைத்தே எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட வெற்றி எப்படியும் அவள் மனதிலிருப்பதை வெளி கொண்டு வர வேண்டுமென நினைத்து அடுத்து பேசினான்.

“அதான் கல்யாணத்துக்கு முன்னுக்கவே என் படத்தை ஃபோன்ல வச்சிருந்தியோ” என ஒரு மாதிரி இழுத்தான்.

‘இதெப்படி இவருக்குத் தெரியும்?’

“எப்படி எனக்குத் தெரியுமுன்னு யோசிக்கிறியா” என்று கேட்ட வெற்றியிடம்,

“பிடித்த ஹீரோ படத்தை வைப்போமில்லையா அந்த மாதிரிதான்” எனக் கூறினாள்.

உள்ளுக்குள் அவளின் பதிலில் சிரித்த போதிலும், இருக்கையிலிருந்து எழுந்து அவளின் கரம் பற்றி தன்னருகில் இழுத்த வெற்றி… தன்னுடைய எழிலின் கன்னத்தில் தன் விரலால் வருடியபடி “அப்போ பிடித்த ஹீரோ படத்தை வைக்க வேண்டியதுதானே” என்று புருவத் தூக்கலுடன் வினவ,

வெற்றி தொட்டதால் ஏற்பட்டிருந்த சிலிர்ப்பினை கிறக்குத்துடன் ஏற்றவள், “அவங்கெல்லாம் நீங்களாகிட முடியாதே” என நாணத்துடன் மொழிந்து வெற்றியை தன் கைகளை கோர்த்து அணைத்திருந்தாள்.

வெற்றிக்கு வானத்தையே தன் கைகளில் வசப்படுத்திட்ட உணர்வு.

நிறைவேறுமா என்று பல வருடக் காதலை உள்ளுக்குள் பொத்தி வைத்து மருகிக் கொண்டிருந்தவனுக்கு கண் முன்னே தன் காதல் ஈடேறியது அளப்பரிய மகிழ்வினை நெஞ்சம் முழுக்க அள்ளித் தெளித்தது.

“இப்படியே தன்னுடைய எழிலின் அணைப்பினிலேயே காலம் முடிந்துவிடக் கூடாதா” என்று வெற்றி நினைத்த நொடி,

கதவு தட்டும் ஓசையில் இருவரும் விலகி நிற்க… “யாருடா அது இந்நேரத்தில்” என்று வெற்றிக்கு கடுப்பாக வந்தது.

கதிர் செல்லும்போது கதவினை சாற்றியிருந்தான்.

கணவனின் வார்த்தைகளில் கலகலத்து சிரித்த அமரி,

“காத்திருப்பதில் தான் அலாதி சுகம் காவலரே” என்று அவன் சொல்லியதை திருப்பி சொல்லிவிட்டு, தாழிடப்படாது மூடியிருந்த கதவினை திறக்கச் சென்றாள்.

கதிர் தான் வந்திருந்தான்.

கதவினைத் திறந்த அமரியை தாண்டி வெற்றியை பார்த்தவனுக்கு, நண்பனின் முகத்திலிருந்த கடுப்பு நன்றாகவே தெரிந்தது.

‘தப்பான நேரத்துல வந்துட்டோம் போலிருக்கே, இந்த மொறை மொறைக்கிறான்’ என மனதில் நினைத்த கதிர் பார்வையாலே நண்பனிடம் மன்னிப்பை வேண்டினான்.

வெற்றி எதையும் பிரதிபலிக்காது அமைதியாக நிற்க, ‘பய செம கடுப்புல இருப்பான் போலிருக்கே’ என்று தனக்குத்தானே நினைத்த கதிர்…

“தாத்தா வர சொன்னாங்க வெற்றி” எனக்கூறி வேகமாக அங்கிருந்து சென்றான்.

இருவரையும் கவனித்த அமரி நமட்டு சிரிப்பு சிரிக்க,

“இந்த நாள் இன்னும் முடியல” என அவளின் காதில் கிசுகிசுத்துச் சென்றான்.

வரவேற்பறையில் அனைவரும் கூடியிருக்க வெற்றியைத் தொடர்ந்து அமரியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

“நாளை நீயும், கதிருந்தான் நீரெடுக்க தீர்த்த அருவிக்கு போகனும்ப்பா” என்று தங்கவேலு தெரிவிக்க,

“அப்பா போன் பண்ணாருங்க.”
தனக்கு ஏற்கனவே விடயம் தெரியும் என்பதை வெற்றி கூறினான்.

“நீங்க அங்க(வெற்றி வீடு) இருந்து கோவிலுக்கு வரதுதான் முறை, சாப்பிட்டுட்டு வெரசா கிளம்புங்கப்பா” என்றவர் அன்னத்திடம் உணவினை எடுத்து வைக்க கூறினார்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.

மசைக்க காரணமாக வாணி ஒரு வாய் வைத்ததும் குமட்டிக்கொண்டு பின்கட்டிற்கு செல்ல, மனைவியின் பின்னே பதறியவனாக கதிரும் சென்றான்.

“என்னடா அவளுக்கு மேல இவன் இந்த ஓட்டம் ஓடுறான்… நாங்கலாம் புள்ளை பெத்துக்கலையா என்ன” என்று பஞ்சு தன்போக்கில் பேச,

“அவன் பொஞ்சாதியை உள்ளங்கையில தாங்கனும் நினைக்கிறான், உனக்கு என்னடி வந்துச்சு” என்று தங்கவேலு தன் மனைவிக்கு கொட்டு வைக்க, விநாயகமும் அன்னமும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

தனக்கு அருகிலமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வெற்றியை யாரும் அறியா வண்ணம் கை முட்டியை வைத்து இடையில் குத்திய அமரி,

“நீங்க எப்படி காவலரே உள்ளங்கையில வச்சு தாங்குவீங்களா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுத்தாள்.

“வாழ்ந்து காட்டுறதலதான் உனக்கான பதிலிருக்கு” என்றான் வெற்றி.

“இந்த மழுப்பலான பதிலெல்லாம் வேண்டாம் காவலரே.” ஒரு வாய் உணவினை உட்கொண்டவளாக மீண்டும் அமரி கேட்க,

“அதுக்கு நீயும் வாணி மாதிரி உண்டானாதான் எப்புடி பார்த்துகிறேன்னு தெரியும்” என்றான் வெற்றி.

அதிகம் பேசிடாத வெற்றி அமரியிடம் மட்டும் பதிலுக்கு பதில் பேசினான். அவனுக்கும் அவளுடன் சரிக்கு சரி பேசுவது மிகவும் பிடித்தது.

“ம்க்கும், காத்திருக்கிறதுலதான் சுகமிருக்குன்னு சொல்லிட்டு இருந்தா எங்க உண்டாவுறது” என்று அமரி வெற்றியை தாக்க,

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நல்லா சாப்பிடு… இரவு செம வேலை இருக்கு” என்றான். அவன் சொல்லியதன் அர்த்தம் புரிந்த அமரிக்கு அதன் பிறகு உணவு இறங்குவனா என்று அடம் பிடித்தது.

______________________________

“நாளைக்கு எத்தனை மணிக்கு போறானுங்க?”

தனது சகாக்களிடம் வெற்றியின் மீதிருக்கும் ஆத்திரத்தில் கத்தி கேட்டான் அவன்.

“காலையில வெள்ளனவே புறப்படுவானுவ போலிருக்கு” என்று அடியாள் ஒருவன் பதில் சொல்ல,

“அவன் தப்பிச்சிடவே கூடாது, நாளைக்கு அந்த போலீஸ் பய பொணந்தான் திரும்பி வரனும்” என்று கொக்கரித்தான்.

“அவன் அருவிக்கு போற பாதையை நாலு பக்கமிருந்தும் சுத்தி வளைச்சிடுங்க, அந்த பயல காப்பாத்துறேன்னு அவன் யாரு கதிரு… அவன் வந்தாக்கா அவனையும் போட்டுத் தள்ளுங்க” என்ற அவனின் பேச்சில் வெற்றியின் மீதான வன்மம் தெறித்தது.

“அந்த போலீஸ் பய செத்தாதான் என் வெறி அடங்கும்.
அவன் தப்பிக்க எப்படி யோசித்தாலும் அவனை சிந்திக்க விடாமல் மரண அடி அடிக்கணும், அந்த பய தப்பிச்சிடவேக் கூடாது.
இப்படி இந்த வயசுல என்னைய அனாதையாக்கிட்டானே, எனக்குன்னு இருந்த ஒருத்தனையும் இருந்தும் இல்லாம செஞ்ச அவன் துடித்துடிச்சு சாவனும்டா” என்ற அவன் நாளை வெற்றியை எப்படியெல்லாம் எங்கிருந்து தாக்க வேண்டுமென தனது அடியாட்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தான்.

நாளை ஒருவன் தனது உயிருக்கு நேரம் நிர்ணயித்திருக்கிறான் என்பதை அறியாத வெற்றி மனைவியுடன் சந்தோஷமாக தனது வீடு நோக்கி பயணித்தான்.

வெற்றியின் வாழ்க்கை பயணம் நாளையோடு முடிந்துவிடுமா?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
31
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வெற்றி அமரி வாய் ஜாலம் செம்ம 😍😍
      இவன் யாரு புது வில்லன்??