Loading

காவ(த)லன் 22

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கதிர் தனது அறையின் கதவு தட்டும் ஓசையில் கண் விழித்தான். அருகில் துயில் கொள்ளும் மனைவியை எழுப்பாது மெல்ல எழுந்து வந்து கதவின் தாழ் நீக்கினான்.

அறைக்கு வெளியில் கைகளை பிசைந்து கொண்டு பதட்டத்துடன் அமரி நின்றிருந்தாள்.

“என்னடா இந்நேரத்தில்?”
தங்கையை அந்நேரத்தில் அங்கு அந்நிலையில் கண்டதும் கதிர் பதறினான்.

“அண்ணா அவங்க ஏதோ ஃபோன் வந்துச்சுன்னு போனாங்க, இன்னும் வரல” கலங்கிய குரலில் கூறினாள்.

“இதெல்லாம் அவன் வேலையில் சாதாரணம் அமரி, பணி முடிஞ்சா வந்திடுவான்… நீ போய் உறங்கு.” தங்கையை சமன் செய்யும் விதமாக பேசினான்.

“அண்ணா… நீ ஒருமுறை அவங்களுக்கு போன் போட்டு பாறேன்.”

அமரியின் கலக்கம் கதிருக்கு புரியத்தான் செய்தது.

பணியிலிருக்கும் போது அழைத்தால் அதனை வெற்றி ஏற்கமாட்டான் என்பது நன்கு தெரிந்தும் தங்கையின் ஆறுதலுக்காக கதிர் வெற்றிக்கு அழைத்திருந்தான்.

அப்போதுதான் வெற்றி மலை பாதையிலிருந்து அவர்கள் ஊருக்கு செல்லும் சரிவு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தான்.

அழைப்பின் ஒலி முடிவடையும் தருவாயில் ஏற்றவன், ஊருக்குள் வந்துவிட்டதாகவும்… கோவிலுக்கு வருமாறு பணித்த வெற்றி வேறெதுவும் கூறாது அழைப்பை வைத்திருந்தான்.

வெற்றியின் மனம் பல விடயங்களை உள்ளுக்குள் வைத்து குமுறுகிறது.

இவ்வழக்கை ஆராய துவங்கியத்திலிருந்து அவன் கண்ணில் படும் விடயங்கள் யாவும் ஏதோ அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

வழக்கை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். ஒரு சில வழக்குகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் அந்நேரங்களில் மேலோட்டமாக கதிரிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது வெற்றியின் வழக்கம். அப்படி கதிரிடம் ஒருமுறை சொல்லும் போது, ஏதோ ஒருவகையில் தவறவிட்ட ஒன்று அப்போது சிக்கும் அல்லது வழக்கை பற்றி வேறுவொரு கோணத்தில் தெளிவு பிறக்கும் என்பது வெற்றியின் எண்ணம்.

ஆதலால் கோவிலுக்கு சென்று அங்கு அவன் நினைப்பதை போன்று எதுவும் நடக்கவில்லை என்றால் கதிரிடமாவது இதைப்பற்றி சொல்லி ஊர் மக்களால் கோவிலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதை போன்று தோற்றத்தை உருவாக்குவோம் என்ற எண்ணத்தில் கதிரையும் அருவிக்கரைக்கு வரக் கூறினான்.

“அவன் ஊருக்குள்ளதான் இருக்கான் அமரி, ஆனால் என்னை கோவிலுக்கு வர சொல்லுறான்” என்று அமரியிடம் பதில் சொல்லிக்கொண்டே சட்டையை அணிந்த கதிர் புறப்படத் தயாராகினான்.

“ஊருக்குள்ள இருந்துட்டு உன்னைய ஏன் வர சொல்றாங்க, ஏதும் பிரச்சினையா” என அமரி கவலையுடன் வினவ,

“அவனுடைய தொழிலில் இதெல்லாம் சாதாரணம் அமரி, போலீஸ்காரன் பொஞ்சாதியா இருந்துட்டு இதுக்கே பயந்தா எப்படி” என்று கதிர் சொல்ல அமரியின் முகத்தில் மென் புன்னகை தோன்றி மறைந்தது.

“போலீஸ்காரன் பொஞ்சாதி” என கதிர் சொல்லியது அமரிக்கு தனி மகிழ்வை கொடுத்தது.

அவ்வார்த்தைகள் தந்த இதத்தோடு கதிரை செல்ல அனுமதித்தாள்.

தனது ஆட்களை மட்டும் சிலையை எடுத்துவர அனுப்பிய சிதம்பரம் ஊருக்கு வெளியிலேயே காத்திருக்க, அந்நேரம் வெற்றி செல்வதை கவனித்த சிதம்பரம்,
‘இந்நேரத்தில் எங்க போய் வாரான், ஸ்டேஷனில் நாம் போகும் போது இல்லையே’ என்று சிந்தித்த சிம்பரம்… “அதுக்குள்ள ஸ்டேஷனில் நடந்த விடயம் பய காதுக்கு வந்திருச்சு போல, அதான் பார்த்திட்டு வரான் போலிருக்கு” என்று தனக்குத்தானே விடையறிந்த சிதம்பரம் வெற்றி அருவிக்கரை பாதைக்கு திரும்புவதை அறிந்ததும் அவன் பின்னால் சென்றார்.

வெற்றியை தொடர்ந்து கோவிலுக்கு வந்த சிதம்பரம் கண்டது… சிலையை கடத்திய தன்னுடைய ஆட்களை வெற்றி துரத்தும் காட்சி.

சமயோசிதமாக வெற்றி அவர்களுக்கு எதிர்த்திசையில் ஓடிச்சென்று எதிரில் நிற்கவும், சிதம்பரமும் வெற்றியின் பின்னே சென்று நின்றார்.

தனக்கு பின்னால் ஒருவர் நிற்பதை உணர்ந்த வெற்றி திரும்ப முற்படுகையில், வெற்றியை நோக்கி சிதம்பரம் தனது துப்பாக்கியால் சுட, ஆவென்ற அலறல் அவ்விடத்தை நிறைக்க… வெற்றி தரையில் விழுந்தான்.

வெற்றியை நோக்கி சிதம்பரம் குறி வைக்கும் சமயம் அங்கு வந்து சேர்ந்த கதிர், இமைக்கும் நொடியில் காதில் ஒலித்த அலறல் ஒலியும், கண்ணில் வெற்றி கீழே விழும் காட்சியும் கதிரை நிலைகுலையச் செய்தது.

“வெற்றி” என்று கதிரின் தொண்டையிலிருந்து குரல் வெளிவந்த கணம் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தரையில் மண்டியிட்டு முகம் மூடி அழுதவனின் செவிகளில் மீண்டும் குண்டு வெளியேறும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தவனின் நீர் நிரம்பிய கண்களில் மங்கலாக… தனது உயரத்திற்கு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வெற்றி தெரிந்தான்.

“வெற்றி” கரகரத்த குரலில் கதிர் விளிக்க, அவனை பார்த்து ஒற்றை கண்ணடித்த வெற்றி…

அந்நிலையிலும் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து பிரித்து வாயில் போட்டவனாக

“போலாமா?” என சிதம்பரத்தை பார்த்து எள்ளலாகக் கேட்டான்.

வெற்றி தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பும் சமயம் அருகிலிருந்த கல் இடறி கீழே விழ, சிதம்பரம் சுட்ட குண்டு வெற்றியை தாண்டி அவனுக்கு நேரெதிரில் நின்றிருந்த தடியர்களில் ஒருவனின் மீது பாய்ந்திருந்தது.

விழுந்ததில் வெற்றியின் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் உடனடியாக எழ முடியாது அவன் சற்று தடுமாற, சிதம்பரம் சிலையை எடுத்துக்கொண்டு ஓடுமாறு மற்றொரு தடியனுக்கு கண்ஜாடை செய்ய அதனை புரிந்துகொண்ட வெற்றி  மின்னலென எழுந்து நின்று, ஓட முயற்சித்தவனை காலில் சுட்டிருந்தான்.

அச்சத்தத்தில் நிமிர்ந்த கதிர் தன்னுடைய நண்பனுக்கு ஒன்றும் ஆகவில்லையென நிம்மதி அடைந்தான். அந்நிலையிலும் வெற்றி சாக்லேட் சுவைப்பதைக் கண்ட கதிருக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

வெற்றி கதிரை பார்த்து அவனின் எண்ணம் புரிந்தவனாக சிரிக்க,

‘வெற்றியின் கவனம் தன்மீதில்லை அவனிடம் மாட்டினால் அவ்வளவுதான்’ என நினைத்த சிதம்பரம் சத்தமின்றி நழுவ முயற்சிக்க அவனின் காலிலேயே அருகில் கிடந்த கட்டையை தூக்கி வீசி தடுமாற செய்திருந்தான்.

இருவரையும் கோவிலினுள் தூணில் கட்டி போட்டவன், ராம்மிற்கு அழைத்து அங்கு வருமாறு சொல்லியதோடு… செய்தி ஊடங்கங்களுக்கும் தகவல் அளித்து வரச் செய்திருந்தான்.

சிலையை கோவிலினுள் வைக்காது தூணில் கட்டிப்போட்ட இருவருக்கும் முன் வைத்த வெற்றி,

“மச்சான் தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாயேன்” என்றவாறு கோவில் மண்டபத்தில் அமர்ந்தான். வெற்றியின் மச்சான் என்கிற விளிப்பு எப்போதும் போல் இப்போதும் அளித்த மகிழ்வில் ஓடிச்சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்த கதிர் வெற்றியின் அருகில் அமர்ந்தான்.

அப்போதுதான் வெற்றியின் காலினை கவனித்த கதிர்… “ஹேய் வெற்றி கால் புஸ்ஸுன்னு வீங்கியிருக்குடா, வா ஆஸ்பத்திரி போலாம்” என்று பதறினான்.

“இருடா மெதுவா போலாம்… மீடியாலாம் வந்துகிட்டு இருக்கு. இன்னைக்கு இந்த வழக்கை முடிச்சி வச்சிட்டுதான் மத்த வேலை” என்றான் வெற்றி.

“விலங்குகள் கணக்கெடுப்பு பதிவேட்டை இப்போ இங்க உடனடியா கொண்டார முடியுமாடா” என வெற்றி கதிரிடம் வினவினான்.

“நாளைக்கு தரதாதானே சொல்லியிருந்தேன்… இன்னைக்கு முடிச்சிருப்பாங்க, நான் கொண்டார சொல்றேன்” என கதிர் தன்னுடைய அலுவலகத்தில் இரவு நேர பணியில் இருக்கும் நபருக்கு அழைத்தவாறு சற்று தள்ளிச் சென்றான்.

அடுத்து வெற்றி ஐஜி’க்கு அழைப்பு விடுத்து, மாலை முதல் நடந்தது வரை அனைத்தையும் சொல்லி… பதவியிலிருக்கும் ஒரு அமைச்சரை கைது செய்ய என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ அவற்றை விரைந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டதோடு அவரையும் அங்கு வருமாறு கூறினான்.

வெற்றி அடுத்தடுத்து செய்யும் செயல்கள் யாவும் சிதம்பரத்திற்கு அச்சத்தை கொடுத்தது. இவ்வளவு நாள் செய்த தவற்றிற்கெல்லாம் வெற்றியின் கையால் தண்டனை கிடைக்க போகிறதென கொதித்தார்.

“வேண்டாம் நான் யாருன்னு தெரிஞ்சே ஒவ்வொரு முறையும் என்கிட்ட மோதிட்டு இருக்க, என் பையனை கொன்ன அடுத்த நாளே உன்னை போட்டுத் தள்ளியிருக்கணும்… எங்காரியம் முடிஞ்சதும் உன்னை பார்த்துக்கலான்னு ஒரு மூணு மாசம் விட்டு வச்சது தப்பா போச்சு” என்று கத்தினார்.

காதில் சுண்டு விரல் விட்டு நன்கு தேய்த்து விட்டுக்கொண்ட வெற்றி,

“இவ்வளவு தான் உன் சத்தமா… நான் இன்னும் எதிர் பார்த்தனே” என நக்கலாகக் கூறினான்.

“ஏய் எங்கிட்ட வச்சிக்காத… இதெல்லாம் எனக்கொரு வழக்கே கிடையாது… நீ உள்ள வச்ச அடுத்த ரெண்டு மணி நேரத்துல நான் வெளிவந்து காட்டுறேன் பாக்குறீயா” என சவாலாகக் கூறினார்.

“அந்த ரெண்டு மணி நேரமாவது உன்னைய நான் உள்ள வைக்கிறேன்ல” என்ற வெற்றி “கட்சி உன் பின்னாடி இருக்குங்கிற தைரியத்துல தானே ஆடுற நீ… எங்கிட்ட இருக்க ஆதாரத்தை எல்லாம் வெளிய கொண்டு வந்தாக்கா உன் கட்சியே உன்னை அடிப்படைத் தொண்டரா கூட சேர்த்துக்காது” என வெற்றி சொல்ல,

“நீ சேர்த்த ஆதராமெல்லாம் எப்பவோ எரிச்சுட்டேன்” என்று மிதப்பாக வெற்றியை நோக்கி சிதம்பரம் ஒரு பார்வை பார்க்க,
இதழின் ஓரம் விடம புன்னகையை நெலிய விட்ட வெற்றி தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டான்.

“நீ அழிச்சிட்டதா நினைக்கிற ஆதாரமெல்லாம் என்கிட்ட பத்திரமா இருக்கு. அது போதாதுன்னு ரெண்டு பெரிய ஆதாரமும் இருக்கு” என்ற வெற்றி “அப்படியொரு பையனை பெத்ததுக்கு துளிகூட வருந்தாம, அவனுக்கு தண்டனை கொடுத்தேன்னு என்னையவேவா காலி பண்ணுரேன்னு சொல்லுற… உனக்கு நான் வைக்க்கிறேன் பெரிய ஆப்பு” என சிதம்பரத்திடம் தனது கம்பீரமான குரலில் சவாலிட்டான்.

சக்திக்கு அழைத்தவன் அவர்களது தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்திருக்கும் காத்தவராயனை செல்லியம்மன் கோவிலுக்கு அழைத்து வருமாறு கூறினான்.

ராம் தனது பணியாளர்களுடன் அங்கு வந்து சேர்ந்த அதே சமயம், கதிரின் அலுவலகத்தில் இருந்து விலங்குகள் பதிவேட்டை கொண்டு வந்து ஒருவர் கொடுத்தார்.

நேரம் அதிகாலையை நெருங்க செல்லியூர் பரபரப்பாகக் காணப்பட்டது.

வெற்றி அனைத்து செய்தி ஊடகங்களையும் அழைத்திருக்க, அவர்களின் வருகையால் ஏற்பட்ட தொடர் வாகன சத்தத்தினால் ஊர் மக்களும் அங்கு என்ன நடக்கிறதென தெரிந்து கொள்வதற்கு அங்கு கூடினர்.

சக்தி இந்நேரத்தில் எங்கு செல்கிறானென்று அவனை கவனித்த நல்லு… சக்தி தங்களுக்கே தெரியாமல் தங்களது தோட்டத்து வீட்டில் காத்தவராயனை அடைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ந்தார்.
“என்னடா இதெல்லாம்” என்று வினவியவரிடம்,

“எனக்கும் ஒன்னும் தெரியாது பெரியப்பா, வெற்றி அடைத்து வைக்க சொன்னார்” என பதிலளித்தவனிடம்…

“சரி இப்போ எங்க கூட்டிப்போற” என்க, வெற்றி கோவிலுக்கு அழைத்து வருமாறு சொல்லியதாகக் கூறியவன் கோவில் நோக்கி காத்தவராயனை அழைத்துக்கொண்டு புறப்பட… நல்லு தன் வீட்டு ஆண்களுடன் அங்கு சென்றார்.

கதிர் சென்றும் வெகு நேரமாகிருக்க… இன்னும் இருவரில் ஒருவர் கூட வீடு திரும்பாதாதல் பயம் கொண்ட அமரி தனது தந்தையிடம் தெரிவிக்க விநாயகம் தங்கவேலுவை கூட்டிக்கொண்டு தாங்கள் பார்த்து வருவதாகக் கூறிச் சென்றார்.

மொத்தத்தில் ஊரின் பெரிய தலக்கட்டுகள் மட்டுமில்லாது, விடயம் மெல்ல பரவி ஊர் மக்களும் அங்கு கூடியிருக்க…

ஊடகவியலாளர்கள் முதல் கொண்டு அனைவரும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த சிதம்பரத்தை கண்டு “இவரா இப்படி” என அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் ஒருங்கே பெற்றனர்.

விடயம் என்னவென்று பத்திரிகை நிருபர்கள் பலவிதங்களில் கேள்விகளாய் தொடுக்க… அதற்கெல்லாம் சற்றும் அசராத வெற்றி ஒருவரின் வருகைக்காக சற்று பொறுமை காக்க கூறினான்.

இறுதியாக ஐஜி’யும் வந்து சேர்ந்தார்.

அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கண்டவர்… “ஏன் வெற்றி எதுக்கு பத்திரிகைகாரங்களையெல்லாம் வர வச்சிருக்கீங்க, அதுமட்டுமில்லாது எதுக்கு இவ்வளவு கூட்டம்?” என்று வினவ…

“குற்றவாளி பெரிய ஆளாச்சே சட்டத்தில் இருக்கும் சின்ன சின்ன ஓட்டையெல்லாம் வச்சு தப்பிச்சிடக் கூடாது பாருங்க அதுக்குதான் பத்திரிக்கையை கூப்பிட்டேன்” என்றவன்,

“இது கிராமங்க, சின்ன விடயமென்றாலும் கூட்டம் கூடிப்புடுங்க” என அவரின் இரு கேள்விகளுக்கும் பதில் அளித்தான்.

“இருந்தாலும் இவ்வளவு விளம்பரம் தேவையில்லை” என்றார் ஐஜி.

“5 ரூபாய் சோப்புக்கே வண்ண மயமா விளம்பரம் இருக்கும் போது… எவ்ளோ பெரிய வழக்கை முடித்து வைக்கப்போறேன் எனக்கு விளம்பரம் இருக்கக் கூடாதா” என்று கேலி போல் வினவியவன் “பழைய ஐஜி மாதிரி நீங்களும் அரசியல்வாதிகளின் அடிமையா இருந்தால் இவ்வழக்கிற்காக நான் மற்றும் எனது குழு கஷ்டப்பட்ட அனைத்தும் வீணாகிடுமே” என்று ஐஜி’யை ஆராயும் விதமாகக் கூறினான்.

“குற்றவாளி யாரா இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என சொல்லி நானும் நேர்மையான அதிகாரி தானென்று வெற்றிக்கு தன் வார்த்தைகளால் விடையளித்தவர் “நீங்க கேட்டது” என்று அரெஸ்ட் வாரண்ட்டை வெற்றியின் கையில் கொடுத்தார்.

ஐஜியிடமிருந்து பத்திரிக்கை நண்பர்களின் முன் வந்து நின்ற வெற்றி,

“ஒரு புதிரான வழக்கோட முதன்மையான முக்கிய குற்றவாளி அமைச்சர் சிதம்பரம்… எப்படியும் அவரை கைது செய்தால் ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு நீங்களே உங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து பல்வேறு கதைகளை உலவவிடுவதற்கு பதிலாக… அவர் செய்த குற்றங்கள்… அதற்கான ஆதாரங்கள், எதற்காக இந்த கைது என அனைத்தையும் உங்கள் முன்பு கூறியே அவரை கைது செய்ய நினைக்கின்றேன்” எனக் கூறியவன் வழக்கினை விவரிக்கத் தொடங்கினான்.

“மிளா… மான் இனத்தைச் சேர்ந்தது.
மிளா (@) கடமான்.
தெற்காசியாவில் காணப்படும் மான்களில் மிகப்பெரியது.
பருவமடைந்த மிளாவின் எடை 225 முதல் 320 கிலோ வரையும், உயரம் 100 முதல் 160 செ.மீ வரையிலும் இருக்கும். வயது வந்த ஆண் மிளாவுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் கடமானிற்குக் கொம்புகள் கிடையாது. ஆணின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும்.

நம் நாட்டில் இதன் முக்கியத்துவம் அறிந்தோர் குறைவு. நம்மை பொறுத்தவரை மிளாவின் கொம்புகள் ஆயுதங்கள் மற்றும் சிற்பங்கள் செய்வதற்கே பயன்படுத்தப்படுகின்றன. (நான் கூகுளில் ஆராய்ந்த வரை எனக்குத் தெரிந்தது.)

ஆனால் மிளாவின் கொம்புகள் வெளிநாடுகளில் மதிப்பு மிக்கவை, அங்கு இவை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதய நோய்க்கான மருந்தில் பெரும் பங்கு வகிக்கிறது.”

வெற்றி பத்திரிகை மற்றும் செய்தி தொடர்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கதிருக்கு அருகில் நின்றிருந்த சசி…

“பராஸ்ட் ஆபிசர் நீங்க தானே, இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்க…

“எந்த நேரத்தில் என்ன கேட்கிற, அங்க கவனி” என பல்லை கடித்தான் கதிர்.

“இவனுக்கு தெரியாது போல” என்று சசி கூற, கதிர் பார்த்த பார்வையில் ஒன்றும் நடவாததை போல் வெற்றியின் பக்கம் திரும்பிய சசி,

“அதெப்படி என்னோட மைண்ட் வாய்ஸ் மட்டும் எல்லோருக்கும் கேட்குது” என தனக்குள் பேச அவனின் தலையிலேயே ஒரு கொட்டு வைத்தான் சக்தி.

“இப்போ இந்த மானுக்கும் அமைச்சருக்கும் என்ன சார் சம்மந்தம்?”

“நீங்க குமரன், கலை வழக்கை தானே விசாரணை செய்தீர்கள்?”

“இது சிலை கடத்தல் வழக்கா சார்?”

பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு தோன்றும் கேள்விகளை முன் வைத்தனர். அவர்களில் வாணியும் இடம் பெற்றிருந்தாள்.

மனைவியை கண்டு கொண்ட கதிர் பிறர் கவனம் ஈர்க்காது அவளை அக்கூட்டத்தில் இருந்து பிரித்து கூட்டி வந்தான்.

“நீ எப்படி இங்கே?” உறங்கிக் கொண்டிருந்த வாணி எப்படி இங்கே எனத் தெரிந்து கொள்ள வினவினான்.

“ஹலோ சார்… நான் இந்த துறையில் தான் வேலை பார்க்கிறேன். ஆசிரியர் வர தாமதமாகுமுன்னு என்னை மொத போக சொன்னார்” என பதிலளித்தவள் அவ்வளவு தான் என்பதை போன்று திரும்பி நடக்க,

“இனி உனக்கு இந்த வேலை வேண்டாம்” என்றான்.
நின்று அவனை நோக்கியவள் “ஏன்” எனக் கேட்க…

“உன் வேலைக்காக ஒருமுறை நம் குடும்ப மானத்தை நீ அடகு வைக்க நினைத்ததே போதும்” என காட்டமாக மொழிந்தான்.

சட்டென்று வாணியின் கண்களிலிருந்து நீர் கொட்டியது. மனைவியின் கண்ணீர் தனது தவறை எடுத்துரைக்க,

“இன்னமும், உன்னோட அந்த செயலை நான் மன்னித்து விட்டாலும், ரணமா என் மனதில் பதிந்திருக்கு” எனத் தன்மையாகக் கூறியவன்,

“அதுவுமில்லாம, வயிற்றில் பிள்ளை…”

அவன் சொல்லி முடிக்கும் முன் கை நீட்டி தடுத்தவள், “நீங்க மொத சொன்ன காரணமே சரியாதான் இருந்தது” என்று வருத்தமாகக் கூறி தங்களது பதிரிக்கையிலிருந்து வந்திருந்த ஒருவரிடம் உடைமைகளை கொடுத்துவிட்டு சக்தி சசியுடன் சென்று நின்று கொண்டாள்.

கதிருக்கு “மனைவியை வருத்திவிட்டோமே” என்று தோன்றிய போதிலும் வாணியை பிறகு சரி செய்து கொள்ளலாமென நினைத்து வெற்றியை கவனித்தான்.

“இந்த வழக்கு முதலில் போதைப்பொருள் கடத்தல் வழக்காக ஜோடிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அது போதைப்பொருள் வழக்கே கிடையாது. என்று சாரோட மகன் திலீப் என்கவுண்டர் செய்யப்பட்டாரோ அன்றோடு போதைப்பொருள் விற்பனை நம் நகரில் முடிவுக்கு வந்துவிட்டது” என வெற்றி அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.

குமரன் இறந்து கிடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெற்றி பார்த்த போது அவனுக்கு கிட்டிய தடயம் மிளா.

குமரனின் மரணத்தின் போது வெற்றி தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தான். அவன் பணியில் இல்லாததால் அந்த வழக்கு காட்டுப்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணி செய்த ஆய்வாளர் குமார் விசாரணை செய்தார். அவர் இறுதியில் குமரனின் மரணம் விலங்கினால் ஏற்பட்டிருக்கிறது என்று அவ்வழக்கை முடித்து கோப்பினை சமர்ப்பித்து விட்டார்.

மீண்டும் பணியில் அமர்ந்த வெற்றி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தான் பணி நீக்கத்திலிருந்த சமயம் நடைபெற்ற குற்றங்கள் அனைத்தையும் தனது பார்வைக்கு கொண்டு வர செய்து படித்து பார்க்கும் சமயத்தில் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றியது குமரன் மற்றும் புதிதாக முளைத்த போதைப்பொருள் வழக்கு.

நகரத்தின் முக்கிய இடங்களில் கள்ளத்தனமாக பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு போதைப்பொருள் விற்பனையாவதாகக் கூறியிருந்தது.

வெற்றிக்கு நன்கு தெரியும், நகரில் போதைப்பொருள் ஊடுருவுவதே சிதம்பரத்தின் மகன் திலீபனால் தானென்று… அவனை பல முறை பல வழக்குகளில் கைது செய்தும், அவனின் தந்தை அரசியல்வாதியால் தண்டனை பெறாது ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டிருந்தவனை உடன் பயிலும் மாணவியின் மீது திராவகம் ஊற்றிய வழக்கில், விட்டு வைக்கக்கூடாதென என்கவுண்டர் செய்திருந்தான் வெற்றி.

அப்பொழுது அவனுடனேயே போதைப்பொருள் வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது.

மீண்டும் அதனை உறுதி செய்து கொள்வதற்காக, திலீபனின் நண்பர்களில் ஒருவனை அழைத்து விசாரித்ததில்… “போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாரும் எங்களுக்குத் தெரியாது, திலீபன் மூலமாகத்தான் எங்களுக்கே கிடைக்கும்” என்று சொல்லிவிட…

மேலும் தானே களத்திலிறங்கி அதனை உறுதியும் செய்து கொண்டான் வெற்றி.

‘பின்னர் இந்த பொய் வழக்கு எதற்கு’ என வெற்றி குழப்பத்தில் இருக்கும் தருவாயில் தான் பழைய ஐஜி தானாக முன்வந்து மாட்டிக் கொள்ள… யாரோ பெரிய ஆளு செய்யும் தவற்றிற்கு, அவர் உதவி புரிகிறாரென்றும்… குமரனின் வழக்கிலிருந்து தங்களை திசை திருப்புவதற்கே இந்த பொய் வழக்கென புரிந்து கொண்ட வெற்றி தன் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்தான்.

குமார் அளித்த குமரனின் கோப்பில் இரண்டு புகைப்படங்கள் இருந்தன.

ஒன்றில் குமரனின் இறந்த உடலருகே மிளாவின் கொம்பில் சிறிய பகுதியொன்று இருக்க… குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அக்கொம்பு இல்லை.

விசாரித்த போது, குமரனின் உடலை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது சிலர் நண்பர்களென சொல்லிக்கொண்டு அவன் மீது விழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் எனவும், மற்றொன்று அதன் பின்னர் எடுக்கப்பட்டதென்றும் தகவல் கிடைக்க… மிளாவின் கொம்பினை கைப்பற்றவே அத்தகைய நாடகம் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டான் வெற்றி.

அன்றைய நாளில் களக்காட்டில் மிளா ஒன்று இறந்து கிடப்பதாக கதிர் வெற்றியிடம் சொல்லியபோது,

“மிளாவின் உடலில் கொம்புகள் யாரோ ஒருவரால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று சொல்ல… வெற்றிக்கு ஏதோ பொறி தட்ட… அதனை இன்னும் ஆழ்ந்து பார்க்குமாறு கதிரிடம் கூறியவன் இரண்டு நாட்கள் அமைதி காத்தான்.

ஆனால் மீண்டும் கதிர் வெற்றிக்கு அழைத்த போது தனது பணி மாற்றத்தை சொல்ல… நூறு சதவிகிதம் வெற்றிக்கு காட்டில் தான் ஏதோ நடப்பது என்பது ஊர்ஜிதமாகியது.

அது மட்டுமில்லாது மாநிலத்தில் உள்ள அனைத்து காடுகளிலும் யாரோ ஏதோ செய்கிறார்கள் என்பது வெற்றிக்கு தெளிவாகியது.

“கதிர் எங்கு தன்னுடைய வேலைக்கு தடையாக வந்து விடுவானோ” என்று நினைத்த சிதம்பரம் அவனை பணி மாற்றம் செய்ய முயற்சிக்க, வெற்றி தனக்கு தெரிந்த பெரும் புள்ளியின் உதவியால் கதிருக்கே தெரியாது சொந்த ஊருக்கே மாற்றல் கிடைக்கும்படி செய்து இங்கு வரவழைத்தான்.

வெற்றி விளக்கமாக சொல்லிக் கொண்டே போக,

“அதெல்லாம் இருக்கட்டும் சார் குமரன் மற்றும் கலை எப்படி இறந்தாங்க?” இடைப்புகுந்தார் ஒரு நிருபர்.

கேள்வி கேட்டவரை தனது பார்வையால் அடக்கிய வெற்றி மேற்கொண்டு சொல்லத் துவங்கினான்.

காட்டு விலங்குகள் எல்லாம் இரவு நேரங்களில் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்பட்டு இறந்து போகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி கட்டுரை ஒன்றை எழுத முயற்சித்த குமரன் சில தகவல்களை சேகரிக்க காட்டிற்குள் சென்ற போது அங்கு நடப்பவற்றை பார்த்து அதிர்ந்து தனது காமிராவில் சேகரிக்க முயற்சி செய்த போது தடியர்களிடம் மாட்டிக்கொள்ள அவர்களுக்கு தலைவனான சிதம்பரம் சொன்னதின் மூலம், குமரனை கொன்று விலங்கடித்து கொன்றதைபோலிருக்க உடலில் ஆங்காங்கே காயங்களை ஏற்படுத்தி சாலையில் போட்டு விட்டனர்.

இதேதான் கலைக்கும் நடந்தது.

“கலையின் அலைபேசியில் அவள் எடுத்திருந்த புகைப்படங்கள்” என சிலவற்றை மீடியா முன்பு காட்டினான் வெற்றி.

குமரனின் காமிரா இரண்டு நாட்களுக்கு முன்னர் வெற்றி காட்டிற்கு சென்றபோது குற்றவாளிகள் காட்டிற்குள் தங்களது தீய செயலினை செய்ய கட்டி வைத்திருக்கும் குடோன் போன்ற இடத்தில் கிடைத்தது. அதனையும் அவர்கள் முன்பு வைத்தான்.

“சிதம்பரம் காட்டில் செய்யும் செயல்கள் இவைதான்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனெடுத்த புகைப்படங்களையும் காட்சிப்படுத்தினான்.

அதில் சிதம்பரத்திடம் வேலை செய்யும் அனைத்து தடியர்களின் முகமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.

அனைத்து வகை விலங்குகளும் அங்கு கடத்தப்பட்டு, அதிலும் மிளா அதிக வகையில் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஒரு சில விலங்குகளை கொன்று அவற்றிடமிருந்து மனித உபயோகத்திற்கு கிடைக்கும் பாகங்களை மட்டும் எடுத்து பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மிளாவின் கொம்பு முறிந்து விட்டால் மீண்டும் வளரக் கூடியது. இல்லையெனில் ஆண்டுக்கு ஒருமுறை அதுவே விழுந்து மீண்டும் முளைக்கும். ஆதலால் சில மான்கள் கொல்லப்படாது அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதன் கொம்பு மருத்துவ குணம் வாய்ந்தது.

அதுமட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து காட்டுபகுதிகளிலிருந்தும் விலங்குகள் மற்றும் அதன் பாகங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு மொத்தமாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

“இவை அனைத்தும் பெரும் மதிப்பு வாய்ந்தவை ஆதலால் வெளிநாடுகளில் விற்று பணம் சம்பாதிப்பதற்காக நம் நாட்டின் உயிரியல் வளத்தை அழித்து வந்திருக்கின்றார் சிதம்பரம்.”

“இவரின் மூலம் காட்டில் இதற்கு முன்பு மற்றும் இப்போதிருக்கும் விலங்குகளின் புள்ளிவிவரம்” என்று வெற்றி கதிரை பார்க்க, கதிர் பெரிய நோட்டு ஒன்றை ஐஜி’யிடம் ஒப்படைத்தான்.

“இதற்கெல்லாம் காரணம் சிதம்பரம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு?”

“என்னடா இன்னும் இந்த கேள்வியை கேட்கலையேன்னு எதிர்ப்பார்த்தேன்” என்ற வெற்றி… சிதம்பரத்தின் அடியாட்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததையும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் அப்போதே அனைவரின் முன்னிலையில் ஐஜி’யிடம் சமர்பித்தான்.

“நீங்களே மிரட்டி கூட அமைச்சரின் பெயரை சொல்ல வச்சிருக்கலாமே” என்று ஒரு நிருபர் தனது சந்தேகத்தை முன் வைத்தார்.

சத்தமாக சிரித்த வெற்றி, “நீங்க இப்படி கேட்கவில்லையென்றால் தான் நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன்” எனக்கூறி சிதம்பரம் காவல் நிலையம் வந்தது தடியர்களை கொன்றது என அனைத்தும் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சியை பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தான்.

“ஒருவழியாகக் காட்டில் என்ன நடந்தது… குமரன் மற்றும் கலை எவ்வாறு இறந்தார்களென இவ்வழக்கு இறுதி கட்டத்தை அடைந்தது. இருப்பினும் இதற்கு சிதம்பரம் காரணமாக இருப்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை” என பத்திரிக்கையாளர்கள்  தங்களுக்குள் முணுமுணுக்க,

“இவர் மீது இன்னொரு வழக்கும் இருக்கிறது” என்ற வெற்றி, காத்தவராயன் சிதம்பரத்தை தேடிச் சென்றது… அதன் மூலம் சிதம்பரம் சிலை கடத்தலுக்கு உதவி கேட்டது… காத்தவராயனை கொலை செய்ய முயற்சி செய்தது” என அனைத்தையும் சக்தியால் அழைத்து வரப்பட்ட காத்தவராயனையே அவர்கள் முன்பு சொல்ல வைத்திருந்தான்.

இதுவரை தங்களுக்கும் அங்கு நடப்பவற்றிற்க்கும் சம்மந்தமில்லை எனும் விதமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள்,

“எங்க ஊரு தெய்வத்தையே நாடு கடத்த திட்டம் போட்டீரா” எனக் கேட்டவாறு சிதம்பரத்தை அடிக்க ஆளாளுக்கு முன்னோக்கி செல்ல அனைவரையும் தன் பார்வையால் அடக்கிய வெற்றி ஐஜி’யின் அனுமதியோடு சிதம்பரம் மற்றும் அவனது ஆட்களை ராமிடம் ஒப்படைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டான் வெற்றி.

“உங்களது முன்னிலையில் அனைத்தையும் ஒப்புவித்ததற்கு காரணம்… எப்படியும் சிதம்பரம் தப்பி விடக் கூடாது என்பதற்காகத்தான்” என்ற வெற்றி

பத்திரிக்கையாளர்களை பார்த்து

“என் அழைப்பை ஏற்று வந்ததற்கு நன்றி” எனத் தெரிவித்து அனைவரையும் வழியனுப்பி வைத்தான்.

வெற்றி ஏற்கனவே இவ்வழக்கினை நீதிமன்றத்தில் பதிந்து வைத்ததால் சிதம்பரம் கைது செய்யப்படும் அன்றே நீதிமன்ற விசாரணைக்கு வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தான்.

எந்த வகையிலும் சிதம்பரம் தப்பித்து விடாமல் இருக்க வெற்றி எல்லா வழியிலும் தடையை உருவாக்கியிருந்தான்.
அதன் வழியில் சிதம்பரத்திற்கு அன்றே தண்டனையும் கிடைத்தது.

அரசாங்க பாதுகாப்பிற்கு சொந்தமான விலங்குகளை கடத்தி விற்றது மற்றும் கொன்றதற்கு ஏழு ஆண்டுகளும், குமரன் மற்றும் கலையை கொலை செய்ததற்கு ஏழு ஆண்டுகளும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்,  சிலை கடத்தல் வழக்கிற்கு மேலும் இரண்டாண்டு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.

சிதம்பரம் ஆளுங்கட்சி என்பதால், எதிர்க்கட்சி கொடுத்த அழுத்தத்தில் அவர் கட்சியின் அடிப்படை தொண்டர் என்பதிலிருந்தே முற்றிலும் நீக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் வனத்துறை அதிகாரியான கதிரின் மூலம் சிதம்பரத்தால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயிருடன் இருக்கும் விலங்குகள் யாவும் மீண்டும் காட்டில் சுதந்திரமாக விடப்பட்டன.

சிதம்பரத்தின் அடியாட்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

“வெல் டன் மிஸ்டர்.வெற்றி… குட் ஜாப்” என்று ஐஜி பாராட்ட, அவ்வளவு நாள் இருந்த இறுக்கம் விலகியோட உஃப் என்று காற்றினை இழுத்து வெளியேற்றினான்.

ராம் வெற்றியிடம் “நீங்க வேற லெவல் சார்” என சொல்ல வெற்றி தனது புன்னகையையே பதிலாகக் கொடுத்தான்.

நீதிமன்றத்தில் அனைத்து வகையான செயல்களும் முடிந்த பின்னர் காவல் நிலையம் வந்த வெற்றி தனது இருக்கையில் ஆசுவாசமாக அமர்ந்தான்.

“காவல் நிலையத்தில் வைத்து ஒருவனை சுட்டதற்கு உங்களுக்கு விசாரணை கமிஷன் வைப்பார்களா சார்” என்று ராம் வினவினான்.

வெடி சிரிப்பு சிரித்த வெற்றி, “எந்த இடத்திலாவது அதனை நான் குறிப்பிட்டு ஏதேனும் சொன்னேனா” என்ற வெற்றி “அன்னைக்கு காட்டிலிருந்து நீங்க ரெண்டு பேரைத்தானே ராம் கூட்டி வந்திருந்தீங்க” என்க ராமும் தனக்கு புரிந்தது என்பதைப்போல் வெற்றியின் கேள்விக்கு ஆமென்று தலையாட்டினான்.

வெற்றிக்கு தேநீர் கொண்டு வந்த மூர்த்தி, “அடுத்து என்ன தம்பி இன்னொரு வழக்கைத் தேடி ஓட வேண்டியதுதான்… போலீஸ்காரன் பொழப்பு அதுதான், ஒரு வழக்கு முடிஞ்சா இன்னொரு வழக்கு” என்று சொல்ல…

அவரை பார்த்த வெற்றி… “கொஞ்ச நாளைக்கு வழக்கு அது இதுன்னு அலையாம லவ் பண்ணலான்னு இருக்கேன் மூரித்தியண்ணா” என்றுக் கூறிய வெற்றியை ராமும் மூர்த்தியும் ஆச்சரியமாக பார்க்க, வெற்றி தனது எழிலை பார்க்க அப்போதே புறப்பட்டு விட்டான்.

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
38
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வெற்றிக் காவலன் வேலையை முடித்துவிட்டு இப்ப காதலன் வேலையை கிளம்பிட்டான் செம்ம 👌👌