Loading

காவ(த)லன் 21

“இரும்பு காவலன் இருதய காதலன்” என்ற அமரியின் வார்த்தைகள் வெற்றியின் செவி தீண்டியதோ, அவன் முகத்தில் கீற்று போல் புன்னகை தோன்றி மறைந்தது.

“இந்த கெத்து காவலர் சிரிச்சா அழகாத்தான் இருக்காரு, ஆனால் சிரிக்கத்தான் ரொம்ப கஞ்சத்தனம் பண்றாரு” என்றவள்,

“உள்ளுக்குள்ள அவ்வளவு காதலை வச்சிக்கிட்டு பேசவே யோசிக்கிறாரு” என பெருமூச்சு விட்டாள்.

“இப்படியே நாள் பூராவும் பார்த்துக்கிட்டே கிடந்தா வாழ்க்கை விளங்கனாப்புலதான்” எனத் தனக்குத்தானே கூறியவள் தன்னை சுத்தம் செய்துகொள்ள குளியலறைக்குள் புகுந்தாள்.

குளித்து முடித்து வெளியில் வந்தவள், கதிர் கொண்டு வராத… தனக்குத் தேவைப்படும் தன்னுடைய மற்ற பொருட்களையும் புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்ல, எடுத்து வைத்து நிமிர்கையில் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. அதுவரை கூட வெற்றி உறக்கம் கலையவில்லை.

“வெற்றி… வெற்றி…” என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்த கதிரின் வாயினை ஓடிச்சென்று பொத்தியவள்,

“தூங்குறாங்க அண்ணா, மெதுவா” என்றாள்.

வெற்றியின் மீதான தங்கையின் அக்கறையில் அவளை மெச்சும் பார்வை பார்த்தவன், “ஒரே நாளில் என் மச்சான் உன் மனசை ஜெயிச்சாட்டானாக்கும்” என கேலி போல் வினவினான்.

“ஆமாம்… ஆமாம், என்னை உயிரா நேசிக்கிறவங்க மேல இந்தளவுக்கு கூட அக்கறை இல்லாட்டி எப்படி” என்றவள் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு,

“உங்க களவாணித்தனம் எனக்குத் தெரியும்” என்கிற ரீதியில் கதிரை மிதப்பாக பார்த்து நின்றாள்.

“உனக்கெப்படித் தெரியும்” எனக் கேட்க வந்த கதிர் ‘தானாக எதுவும் உளறக் கூடாது’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டே அமரியிடம் தப்பிப்பதற்கு வழித் தேடினான்.

“ராவுலே பேய் மாதிரி உலாத்துறவன், இந்நேரத்துக்கு உறங்க மாட்டானே… உடம்பேதும் சரியில்லையோ” என்று பேச்சை மாற்றியவனாக வெற்றியின் அருகில் சென்று அவன் நெற்றி கன்னம் என கை வைத்து பார்த்தவன் “ஒன்றுமில்லை” என தெரிந்ததும் “அவன் எழுந்ததும் சாப்பிடக் கூட்டியா” என்றவாறு அமரியிடமிருந்து நைசாக நழுவினான்.

கதிரின் தொடுகையிலேயே உறக்கம் கலைந்த வெற்றி அவனின் பேச்சு சத்தத்தில் முழுதும் உறக்கம் துறந்து எழுந்தான்.

“கதிர் வந்தானா?” என்ற வெற்றியின் குரலில் திரும்பி அவனை பார்த்தவள்,

“தூங்கி ரொம்ப நாளாகுதோ” எனக் கேட்டாள்.

மணியை பார்த்தவன், “சாரி… உடம்பு அசதியா இருந்துச்சு… அதான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல” என சொல்லிக்கொண்டே மெத்தையிலிருந்து இறங்கினான்.
குளியலறையை கை காட்டியவள்,

“மனதில் ரகசியமா ஏதாவது மறைச்சு வச்சிருந்தாதான் இவ்வளவு அசதியா இருக்கும்” எனக்கூறி வெற்றி ஏதாவது சொல்லுவானா என அவனை ஆழம் பார்த்தாள்.

ஆனால் வெற்றியிடத்தில் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை.

“ஒருநாள் ஒருவார்த்தை அவளிடம் பேச ஒருநொடி கிடைத்தாலும் போதும், தன்னுடைய காதலை சொல்லிவிட வேண்டும்” என தவியாய் தவித்தவன் இப்போது மணி கணக்கில், நாள் கணக்கில் அவனோடு ஒன்றாக அவள் வாழ வந்துவிட்ட பிறகும் காதலை சொல்ல முடியாது பேசும் வார்த்தைக்கு அவனிடத்தில் பஞ்சமாகிப் போனது.

“வீரமெல்லாம் குற்றவாளிகளிடம் மட்டுந்தான் போல.”

“ஏதாவது சொன்னியா?”

“இல்லையே” என்றவள் “சொன்னது கேட்டாலும் பதில் சொல்ல போறதில்லை” என சத்தமாகக் கூறினாள்.

“நீ என்ன கேட்ட, நானென்ன பதில் சொல்லல”, அவள் எதைப்பற்றி சுற்றி வளைத்து பேசுகிறாள் என்பது புரிந்தும் புரியாததைப்போல் வினவினான்.

“நீங்க போலீஸ் தானே, நடிகர் இல்லையே” என்றவள்

“ஒன்னுமில்லை” எனக் கூறினாள்.

‘நானா விருப்பப்பட்டுதான் என் காதலை சொல்லணும்,’ இன்னும் சில நிமிடங்களில் அவளிடம் காதலை சொல்லப்போகிறோம் என்பதை அறியாது மனதோடு கூறியவன் வெளியில் எவ்வித உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.

“சரி சீக்கிரம் வாங்க சாப்பிட போவோம், ரொம்ப பசிக்கிது” என்றவள் அவனுக்காக காத்திருக்க இருக்கையில் அமர்ந்தாள்.

“பசிக்குதுன்னா போய் சாப்பிடு, எதுக்கு இங்க உடக்காருர?”

“மொத நாளே புருஷனை விட்டுட்டு தனியா உட்கார்ந்து சாப்பிட்டா பஞ்சு என்னை பஞ்சு பஞ்சா பிரிச்சி காத்துல பறக்க விட்டுடும்” என்று கைகளை ஆட்டி அவள் சொல்லிய விதத்தில் சிரித்தவன் ஐந்து நிமிடங்களில் கிளம்பி வெளியில் வந்தான்.

வீட்டின் மருமகனாக எவ்வித குறையுமின்றி அனைவரும் நன்கு கவனித்துக் கொண்டனர். கதிர் கூட வெற்றியின் நண்பனாக இல்லாது தங்கையின் அண்ணனாக நடந்து கொண்டான். அவர்களின் அதீத கவனிப்பு வெற்றிக்கு கூச்சத்தை கொடுத்தது.

வெற்றியையும் அமரியையும் ஒன்றாக அமர வைத்து விருந்தளித்தனர். தன்னுடைய இலையில் வைக்கப்பட்ட பதார்த்தங்களை கண்டு விழி பிதுங்கினான் வெற்றி.

“கொஞ்சமா வையுங்க.”

வெற்றி சொல்வதை கேட்காது அன்னம் இலையை நிரப்பிக் கொண்டிருந்தார்.

“நல்லா நறுக்குன்னு அள்ளித் திண்ணாதான் உடம்பு திடகாத்தரமா இருக்கும். இல்லாட்டி இப்படி ஒடிசலாத்தான் இருக்கும்” என்று வெற்றியின் வாலிப்பமான உடம்பை பார்த்து பஞ்சு பாட்டி சொல்ல வெற்றிக்கு புரை ஏறியது.

“அய்யோ அப்பத்தா இப்போதான் இவங்க கட்டுக்கோப்பா கம்பீரமா இருக்காங்க, நீ சொல்லுற மாதிரி சாப்பிட்டாக்கா குண்டு பூசணிக்காய் மாதிரி வீங்கி போவாங்க” என்று அமரி கூற “என்னவோ” என மூஞ்சியை திருப்பிக் கொண்டார் பஞ்சு.

வெற்றி உணவினை உண்ண முடியாது திணறுவதை கண்ட அமரி,

“ராவுல இவ்வளவு அதிகமா சாப்பிட கூடாதும்மா” என தன் அன்னையிடம் சொல்லிக்கொண்டே வெற்றியின் இலையில் அவன் சாப்பிட முடியாது, வேண்டாமென்று ஒதுக்கி வைத்த பதார்த்தங்களை எவ்வித சுணக்கமுமின்றி தனது இலையில் எடுத்து வைத்து சாப்பிடத் துவங்கினாள்.

அவளின் உரிமையான செயலில் வெற்றி காதலாய் அவனின் எழிலையே பார்த்திருக்க, அவனின் நிலையறிந்த பெரியவர்கள் அவர்களுக்கு தனிமையளித்து அங்கிருந்து நகர்ந்தனர்.

“அவளுடைய வாழ்க்கையை அவள் பார்த்துப்பாள்” என்று அமரியின் மீது அனைவருக்கும் நம்பிக்கை எழுந்தது. மகளுடைய வாழ்க்கை என்னவாகுமோ என்று கவலையில் இருந்தவர்களுக்கு அவளின் செயல் நிம்மதியை கொடுத்தது.

தன்னுடைய நண்பனின் உணர்வினை புரிந்துகொண்ட கதிருக்கு, தங்கையின் செயல் மகிழ்வினை அளித்தது. அனைவரும் அங்கிருந்து சென்றிருக்க, அவர்களையே பார்த்திருந்த வாணியை அவ்விடமிருந்து தள்ளிக் கொண்டு சென்றான் கதிர்.

“அண்ணாக்கு சாப்பாடு போடனுங்க, அத்தையும் அங்க இல்லை” என்ற வாணியிடம் “அதெல்லாம் உன் அண்ணனுக்கு அமரி போடுவாள்” என்று பதிலளித்திருந்தான்.

“ஏன் என்னையே பார்த்திட்டு இருக்கீங்க, சாப்பிடுங்க” என்ற அமரிக்கும் வெற்றியின் காதல் மனம் நெகிழ்ந்திருப்பது புரியத்தான் செய்தது.

வெற்றியை உணர்வின் பிடியிலிருந்து மாற்றும் பொருட்டு,

“உங்க சாப்பாட்டை நான் எடுத்துகிட்டன்னு மொறைக்கிறிங்களா” எனக் கேட்டவள்… “வேணுன்னா என்னோட இனிப்பை நீங்க சாப்பிடுங்க” எனக்கூறி தன்னுடைய இலையிலிருந்த இனிப்பை வெற்றியின் இலையில் வைத்தாள்.
இனிப்பினை சுவைத்தவன்,

“உன்கிட்டயிருந்து கிடைத்த இந்த இனிப்பு மாதிரியே உன் காதலும் எனக்கு கிடைக்குமா?” என்று பட்டென்று கேட்டவன்…
அவள் அருந்திய நீரினை விழுங்காது ஆச்சரியத்தில் இமைகள் படபடக்க சிலையென சமைந்ததை கருத்தில் கொள்ளாது,

“நான் உன்னை விரும்புறேன். எழிலை வெற்றிக்கு ரொம்பவே பிடிக்கும்” என எவ்வித பூசல் வார்த்தைகளின்றி தன்னுடைய காதலை எளிமையாக சொல்லியிருந்தான்.

வெற்றியிடமிருந்து அவள் கேட்க நினைத்த வார்த்தைகள் தான், ஆனால் இப்படி உடனே சொல்லுவான்… அதுவும் இப்படி உணவு உட்கொள்ளும் போது சொல்லுவானென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘எழிலை வெற்றிக்கு ரொம்பவே பிடிக்கும்.’

மீண்டும் மீண்டும் காதில் எதிரொலித்தது. அவன் குரலில் அவள் செவி தீண்டியதும் உள்ளுக்குள் தோன்றும் சில்லென்ற உணர்வினை அடக்கத் தெரியாது தவித்தாள். அவள் உடல் முழுக்க புது ரத்தம் சூடாய் பாய்ந்தது. முகம் முழுக்க நாணத்தால் ரத்த நிறம் கொண்டாள். அவளின் நிலை உணர்ந்த வெற்றி சாப்பாட்டில் கவனமானான்.

சில நொடிகளில் வெற்றியின் அலைபேசி ஒலித்த சத்தத்தில் சுயம் பெற்ற அமரி, வெற்றி யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு… சற்று நேரத்திற்கு முன்பு நடந்தது கனவோ என்று எண்ணினாள்.

“இப்போ இவங்க என்கிட்ட காதலை சொன்னாங்களா இல்லையா… அவங்க காதலை சொல்லணுன்னு எதிர்பார்த்துகிட்டே இருந்ததால இப்படி தோணுச்சோ…” குழம்பியவள்

“உண்மையிலேயே கனவா இருக்குமோ” என்று வாய்விட்டுக் கேட்க,

“கனவெல்லாம் இல்லை நிஜந்தான்” என்ற பதில் வெற்றியிடமிருந்து வந்தது.

அமரி ஆவென வாய் பிளந்து அவனை பார்த்திருக்க, அவளின் தாடை தொட்டு வாயினை மூடச் செய்தவன் “சாப்பிடு” எனக்கூறி எழுந்து சென்றான்.

“வாயை மூடிட்டு எப்படி சாப்பிடறதாம்” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“என்ன நடந்தாலும் சோறு நமக்கு நெம்ப முக்கியம் அமரி” எனத் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

வீட்டின் பின்பக்கம் கை கழுவிய வெற்றி தோட்டத்தை பார்த்ததும் அங்கு சென்றான். அவனின் சிந்தனை முழுவதும் அமரியிடம் அவனது காதலை சொன்னதிலேயே உழன்றது. அவன் அவளின் உடனடி பதிலை எதிர்பார்த்து தனது காதலை சொல்லவில்லை. இவ்வளவு நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த காதலை அவனது எழிலிடம் சொல்லி விட்டான். மனம் லேசானது போல் உணர்ந்தான். இந்த நொடி வெற்றிக்கு காதலை எழிலிடம் சொல்லிவிட்ட இதம் போதுமானதாக இருந்தது. அந்த கணத்தை உணர்ந்து அனுபவித்தான்.

“என்ன மச்சான், ரொம்ப சந்தோஷமா இருக்க போல…”
முதுகுக்கு பின்னால் கேட்ட கதிரின் சத்தத்தில் வெற்றி திரும்ப,

“ஒரு வழியா உன் எழிலிடம் காதலை சொல்லிட்ட போல” என்றான் கதிர்.

“ஒட்டு கேட்டியா?”

“ச்ச..ச்சே…” என தலையசைத்த கதிர்,

“என் நண்பன், என் மச்சான்… அவனுடைய செயலை நான் கவனிப்பது எப்படி ஒட்டு கேட்பதாகும்” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“நீ நல்லா பேச கத்துகிட்ட கதிரு” என்ற வெற்றி பணி நிமித்தமாக பேச்சை மாற்றினான்.

“எப்போ பாரு கடமைதான் முக்கியமா” என அலுத்துக்கொண்ட கதிர், “நீ காதலிக்கிற விடயம் அமரிக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு மச்சான்” என்றான்.

“தெரியும்” என்று சாதாரணமாகக் கூறிய வெற்றி, “அவளின் இத்தகைய நெருக்கம், இணக்கமெல்லாம் நான் அவளை நேசிக்கிறேன் என்பதற்காக இருக்கக்கூடாது, அவ என்மீது கொண்ட காதலால் இருக்கணும்” என சொல்ல,

“என்ன சொல்ல வர, எப்பவும் நீ புரியர மாதிரி பேச மாட்டியாடா” என்ற கதிர் “அமரியும் உன்னை விரும்புறான்னுதான் நினைக்கிறேன்” எனக் கூறினான்.

“நீ நினைப்பது இருக்கட்டும், அவ(ள்) என்னை விரும்புறாளா இல்லையா நானே தெரிஞ்சிக்கிறேன்… இப்போ நீ சொல்லு, விலங்குகள் கணக்கு என்னாச்சு” எனக் கேட்டான்.

“நீ சொல்லுறதுக்கு முன்னவே அந்த வேலையை தொடங்கிட்டேன், நீ சின்ன இடைவெளியில் கேட்ட கணக்கெடுப்பு நடக்குது… நாளைக்கு எல்லாம் உன் கையில இருக்கும்” என்றான்.

“மாப்பிள்ளை” என்ற அழைப்புடன் விநாயகம் அங்கு வந்தார்.

“சொல்லுங்க” என்ற வெற்றியிடம்,

“அமரி சின்ன பொண்ணு, ஆனால் பெரியத்தனமா நடந்துக்கும்… அவ ஏதாவது தப்பு செஞ்சாலும் மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை, திடுதிப்புன்னு யாருமே எதிர்பார்க்காம நடந்த கல்யாணம் ஏதேனும் முன்ன பின்ன இருந்தாக்கா கொஞ்சம் அனுசரிச்சு போங்க” என்றுக் கூறினார்.

மகளின் வாய் துடுக்கு மற்றும் சேட்டைகளை வெற்றி தவறாக நினைத்திடக் கூடாதென்கிற கவலை, ஒரு தந்தையாக அவருக்கு இருந்தது.

“இதெல்லாம் நீங்க சொல்லவே வேணாம்ப்பா, அதெல்லாம் உங்க மாப்பிள்ளை அமரியை நல்லாவே பார்த்துப்பான்.” விநாயகத்திடம் பதில் பேசினாலும் கதிர் கிண்டலாக வெற்றியை பார்த்திருந்தான்.

கதிரின் தோளோடு கை போட்டு அணைத்த வெற்றி, “அதெல்லாம் மச்சான் சொல்லுற மாதிரியே நல்லா பார்த்துப்பேங்க , நீங்க கவலைப்படமா இருங்க” என்ற வெற்றி…

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” எனக்கூறி விநாயகம் சென்றதும் கதிரின் வயிற்றிலேயே நான்கு குத்து குத்தினான்.

“கிடைக்கிற சந்தர்ப்பத்தை எல்லாம் என்னை ஓட்ட நல்லா பயன்படுத்திக்கிற நீ” என்று சொல்லி மேலும் இரண்டு குத்து குத்தினான்.

“மச்சான் வேணாம் சொன்னா கேளு, வலிக்குது… விடுடா” என்ற கதிர் வெற்றியிடமிருந்து விலகி வீட்டிற்குள் ஓட அவனை துரத்தியபடி பின்னால் ஓடிய வெற்றி இரண்டே அடியில் கதிரை பிடித்திருந்தான்.

வெற்றி பிடித்த வேகத்தில் அவனை இறுக பற்றிய கதிர் தப்பிப்பதற்காக வெற்றியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க,

“ஏய்… ஏய்… விடுடா” என அலறுவது வெற்றியின் முறையாயிற்று.

அவர்களின் லூட்டியை பார்த்திருந்த வீட்டினர் அனைவரும் விளையாட்டு என நினைத்து சிரிக்க, அவர்களை பற்றி நன்கு தெரிந்த வாணி தலையில் தட்டிக் கொண்டாள்.

“ஏன் அண்ணி நீங்க அடிச்சிக்கிறத பார்த்தாக்கா அண்ணா உங்களுக்கு இப்படியொரு முத்தத்தை கொடுத்ததே இல்லை போலிருக்கே.” வாணியின் மீது சாய்ந்து நின்று அமரி கேட்ட தோரணையில் அவளின் தலையில் கொட்டிய வாணி,

“அவங்க கொடுக்காமதான் புள்ள பெத்துக்க போறனாக்கும்” என்று மோவாயில் இடித்துக் காட்டினாள்.

“இன்னும் சின்ன பிள்ளைகளாவே இருக்குதுங்க” என்று அன்னம் பஞ்சுவிடம் கூற, தங்கவேலு தாத்தாவின் கணைப்பு சத்தத்தில் அவர்கள் இருவரும் தங்கள் வேலையை கவனித்தனர்.

இவை அனைத்தும் சில நொடிகளில் அரங்கேறியிருக்க, தங்கவேலுவின் சத்தத்திற்கு பின்பே அங்கு அனைவரும் இருப்பதை உணர்ந்த வெற்றி கதிரை பிரித்து தள்ளி, தன் கன்னத்தை துடைத்தவாறே…

“மானத்தை வாங்குறியேடா” எனக் கூறினான்.

அவர்களின் அருகில் வந்த தங்கவேலு மெல்ல ரகசியக் குரலில், “இங்கக்குள்ள நீங்க பண்ணுற சேட்டையை எவனாச்சும் பார்த்தாக்கா, போலீசு, பாரஸ்ட் ஆபீஸர்ன்னு ஒரு பய ஒத்துக்கிட மாட்டானுவ” என சொல்ல வெற்றிக்கு அசடு வழிவதை தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ஏய்யா கதிரு சாப்பிட்டாச்சா?”

“ஆச்சுங்க.”

“ம்ம்… உனக்கு தூக்கம் வரலணாக்கா தோட்டத்து கணக்கு பாப்போம் வா” என உடன் அழைத்துச் சென்றார்.
எல்லோரும் அவரவர் அறைக்குள் சென்று முடங்கினர்.

மாலையே நன்கு தூங்கி விட்டதால் என்ன செய்வதென்று தெரியாது நின்றிருந்த வெற்றியின் உயரத்திற்கு எக்கி அவன் தோள் மீது ஒரு கையும் தனது இடுப்பிலொரு கையும் வைத்து அவனருகில் வந்து நின்றாள் அமரி.

அவளை என்ன எனும் விதமாக வெற்றி பார்க்க,

“உண்மையாவே நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தானா” எனக் கேட்க, ஏற்கனவே கதிரால் பெரியவர் முன்னிலையில் அசடு வழிய நின்ற நிலையை நினைத்து கடுப்பிலிருந்தவன் இப்போது அமரியும் அவனை கேலி செய்வதை போன்று கேட்கவும், அவளை வெட்டவா என்கிற ரீதியில் முறைத்தான்.

‘எம்மோ சிங்கத்தை சொறிஞ்சி விட்டுட்டோமா’ என்று மனதில் நினைத்தவள் அமைதியாக பூனை போல் நழுவிச் சென்றிருந்தாள்.

“நீ தூங்க போகலையா ராசா” என்று கேட்டுக்கொண்டே அடுக்கலையிலிருந்து வெளிவந்தார் பஞ்சு.

“எனக்கொரு போன் வரவேண்டியது இருக்கு பாட்டி, பேசிட்டு போறேன்” என பதில் சொல்லிய வெற்றி தோட்டத்து பக்கம் சென்றான்.

வெற்றி சாப்பிடும் போது வந்த அழைப்பில் ராம் சொல்லியதை கேட்டு சற்றும் அசராத வெற்றி உடனடியாக  திட்டம் ஒன்றை அவனிடம் கூறி செயல்படுத்த சொல்லியிருந்தான்.

தோட்டத்தில் வெற்றி உலவிக்கொண்டிருக்க, “நீங்க சொன்னதை முடிச்சாச்சு” என ராமிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

“ஃபைன்… முடிஞ்சதும் எந்நேரமாக இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க” என்று பதில் தகவல் அனுப்பியவன் நேரம் நள்ளிரவை நெருங்குவதை உணர்ந்து அறைக்குச் சென்றான்.

அமரி உறங்கியிருப்பாள் என்ற எண்ணத்தோடு வெற்றி அறை வாயிலில் கால் வைக்க, பேச்சு சத்தம் கேட்டு உள்ளே செல்லாது என்ன பண்ணுகிறாளென நோட்டம் விட்டான்.

அவளோ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். தனக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டும் இருந்தாள்.

“அமரி நீ நினைச்சது என்ன, இப்போ நடந்திறக்கிறது என்ன?” ஆளுயரக் கண்ணாடி முன்பு தன்னையேக் கேட்டுக்கொண்டவள் மீண்டும் அறையை அளந்தாள்.

“அவங்க காதல சொல்லணும் நினைச்ச… சொல்லிட்டாங்க, வேறென்ன?” என்று சொல்லியவாறு கைகளை பிசைந்தவள் மீண்டும் கண்ணாடியின் முன்பு வந்து நின்று,
“அவ்வளவுதானா… நான் உன்னை விரும்புறேன், இப்படியா சாதாரணமா சொல்லுவாங்க” என்றவள்…

‘வேறெப்படி சொல்லுவாங்க’ எனக் கேட்ட மனத்திடம்,

“அவங்க இருக்க உயரத்துக்கும் கம்பீரத்துக்கும் சும்மா மீசையை முறுக்கிவிட்டபடி நடந்து வந்து, என் முன்னுக்க நெருங்க நின்னு… அப்படியே இடையோடு கை கொடுத்து என்னைய இறுக்கமா புடிச்சு, என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து ஐ லவ் யூ சொல்லியிருந்தா… சும்மா மாஸ்(ஆ) நச்சுன்னு இருந்திருக்கும்” என சொல்லிக்கொண்டே திரும்ப,
அவள் சொல்லியதை போலவே வெற்றி மீசையை முறுக்கியவாறு அவளை நோக்கி நடந்து வந்தான்.

அவனின் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் சென்ற அமரி ஆளுயரக் கண்ணாடியில் மோதி நிற்க, அவளை நெருங்கி உரசும் அளவிற்கு நின்று “அடுத்து என்ன சொன்ன?” என்று யோசிப்பதை போல் பாவனை செய்து அவளின் இடையில் கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்தான்.

அதில் தெறித்து விடுவதை போன்று விழி மலர்ந்து அவன் முகத்தை அவள் ஏறிட்டு பார்க்க, அவளின் விழி ஆழத்தில் மூழ்க நினைத்தவன் தன் பார்வையை அவளின் பார்வையோடு கலக்க விட்டு “ஐ லவ் யூ” என சொல்ல அமரியின் இதயம் வெளியே குதித்து விடுவதை போன்று வேகமாக துடித்தது.

வெற்றி அத்தோடு நின்றுவிடாது அவளின் ஒரு கன்னத்தை தனது கையினால் அழுந்த பற்றி மற்றொரு கன்னத்தில் மென்மையாய் தனது இதழ் ஒற்றினான். உடல் முழுக்க சில்லென்று இதம் பரவ,

பனிச்சிற்பமாக உறைந்து நின்றாள்.

மெல்ல அமரியை விட்டு ஓரடி நகர்ந்து நின்ற வெற்றி, அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவாறு… “இப்போ எனக்கு(என் காதலுக்கு) சரி சொல்லுவியா?” என கரகரப்பான குரலில் கேட்டிருந்தான்.

கண்களில் துளி நீர் எட்டிப்பார்க்க, முடியாது எனும் விதமாக அமரி தலையசைக்க வெற்றியின் அலைபேசி கரடியாய் கத்தியது.

அழைத்தது ராமென்றதும் தாமதிக்காது அழைப்பை ஏற்றவன் பத்து நிமிடங்களில் அங்கிருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தவன்,
அமரியின் கன்னத்தில் வழிந்த விழி நீரை துடைத்து, “நான் அவசரமா போகணும், வீட்டுல சொல்லிடு” என்று சொல்லிக்கொண்டே வெளியேறினான்.

_______________________

“மூர்த்திண்ணே வாங்களேன் அப்படியே போயிட்டு ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்.”

“ஸ்டேஷனில் யாரும் இல்லையே சார்.”

ராம் கேட்டதற்கு மூர்த்தி மறுத்தார்.

“உங்க வெற்றி சாரோட மட்டும்தான் டீ குடிப்பிங்களா, இன்னைக்கு ஒரு நாள் என்னோட குடிக்கலாம் வாங்க” என்ற ராம் அவரின் மறுப்பை பொருட்படுத்தாது கூட்டிச் சென்றான்.

“வெரசா ரெண்டு டீ போடுங்க” என்று கடைக்காரரை துரிதப்படுத்திய மூர்த்தியின் எண்ணமெல்லாம் காவல் நிலையத்தின் மீதே இருந்தது.

கடைக்காரருக்கு தேநீரை ஆற்றுவதற்கு கூட இடம் கொடுக்காத மூர்த்தி அவரின் கைகளிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கி வந்து ராமிடம் ஒன்றை கொடுத்து மற்றொன்றை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகத்தில் ஆவி பறக்கும் தேநீரின் சூட்டினைக் கூட பொருட்படுத்தாது வாயில் சரித்துக்கொண்டார்.

“ஆச்சுங்க… போலாம்” என்ற மூர்த்தியை நிறுத்திய ராம்,

“நான் இன்னும் முடிக்கலையே, எதுக்கு இவ்வளவு அவசரம்” எனக் கேட்டிருந்தான்.

‘இன்னைக்கு இந்த சாருக்கு என்னாச்சு’ என நினைத்த மூர்த்தி…

“ஸ்டேஷனில் இன்னைக்கு டுயூட்டி இருக்க எல்லாரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டீங்க, இருந்தது நாம ரெண்டு பேருந்தான்… இப்போ நாமளும் அங்க இல்லை, வெற்றி சார் வந்தாக்கா வசவு யார் வாங்குறது” என்று மூர்த்தி படபடவென்று பேச,

ராம் தேநீரை மிடறு மிடறாக மெல்ல அருந்தினான்.

“நீங்க நிதானமா குடிச்சிட்டு பைய வாங்க நான் முன்னுக்க போறேன்” என்ற மூர்த்தியிடம்,

“இருட்டுன்னா எனக்கு பயம் மூர்த்திண்ணா,” என்று பொய் கூறினான்.

ராமினை நம்பாத பார்வை பார்த்த போதும் அவனுடனேயே நின்று அவனை அழைத்துச் சென்றார்.

மூர்த்தி நடையை எட்டி வைக்க, ராம் அடிமேல் அடி வைத்து நடந்தான்.
இருவரும் காவல் நிலையம் வந்த போது, பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. வெற்றியின் அறை ரணகளமாகியிருந்தது.

“அச்சச்சோ என்ன சார் இப்படி கிடக்கு” பதறிய மூர்த்தி வெற்றியின் அறையில், முக்கிய கோப்புகள் வைக்கப்படும் கப்போர்டினை ஓடிச்சென்று பார்க்க, அங்கு அனைத்து கோப்புகளும் விசிறியடிக்கப்பட்டு காற்றில் பறந்து கொண்டிருந்தன.

கீழே கிடந்த காகிதங்களையெல்லாம் வேகமாக ஒவ்வொன்றாக எடுத்து பார்த்த மூர்த்தி,

“அய்யோ சார், குமரன் வழக்கு ஆதாரம் எதுவுமே இல்லை சார்” என்று அதிர்ந்து கூறினார்.

மூர்த்தியிடம் இருக்கும் பதட்டம் ராமிடம் துளியும் இல்லை.

“சார் இங்க பாருங்க சார், கண்காணிப்பு காமிராவும் உடைஞ்சிருக்கு” என சொல்ல,

“சூப்பர்ண்ணா” என்ற ராம் வெற்றிக்கு அழைத்தான்.

“சார் எல்லாம் பக்காவா முடிஞ்சிருச்சு” என்றதும் அடுத்த இருபது நிமிடங்களில் வெற்றி காவல் நிலையத்தில் இருந்தான்.

வெற்றி வந்ததும் காவல் நிலையத்தை முழுதாக ஒரு சுற்று வந்த வெற்றி, “நான் சொல்லியதை செஞ்சீங்களா ராம்” எனக் கேட்க,

அறையின் மையத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி சுவற்றின் உயரத்தில் மாட்டப்பட்டிருந்த சுவர் கடிகாரத்தினை கழட்டிக் கொண்டு வந்த ராம் அதனை வெற்றியிடம் கொடுத்தான்.

“சார் இங்கு என்ன நடக்குது” என்று குழப்பத்துடன் கேட்டார் மூர்த்தி.

கடிகாரத்தின் மேற்பரப்பினை கழட்டிய வெற்றி, எண் 12 இருக்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பொத்தான் வகை காமிராவினை எடுத்து பத்திரப்படுத்தியபடி இருக்க,

மூர்த்தி கேட்ட கேள்விக்கு ராம் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

நேரம் இரவு எட்டை கடந்திருக்கும். அப்போதுதான் வெற்றியும் அமரியும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.

வெற்றி சாப்பிடும் நேரம் ராம் அழைத்ததற்கான காரணம்,
ரொம்ப நேரமாகவே நாச்சி பதட்டமாகவே இருந்தார்.

“இந்த வழக்கில் பெரும் புள்ளி ஒன்னு சிக்கியிருக்கு ராம், நம் காவல் நிலையத்திலேயே உதவுவதற்கு கருப்பு ஆடு இருக்கலாம். யாராவது சந்தேகிக்கும் விதமாக நடந்து கொண்டால், அவர்களை தொடர்ந்து கவனியுங்கள்” என்று வெற்றி சொல்லியதின் அடிப்படையில் ராம் நாச்சியின் மீது கண் வைத்தான்.

திடீரென வெளியில் சென்றவர் மரத்திற்கு பின்னால் நின்று யாருக்கோ அழைப்பதை கவனித்த ராம் நாச்சிக்கே தெரியாது அவர் பேசுவதை மறைந்து நின்று கேட்டான்.

“வெற்றி இங்க இல்லைங்க, ரா வேலைக்கு வரமாட்டாருன்னு சொல்லிட்டு போனாருங்க… நீங்க வந்தாக்கா சரியா இருக்கும்” என்றவர் அழைப்பை வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவரைப்போல் காவல் நிலையம் உள்ளே சென்று விட்டார்.

அதனை சொல்வதற்கே ராம் வெற்றியை அழைத்திருந்தான். ராம் சொல்லியதை கேட்ட வெற்றி எவ்வித அதிர்வுமின்றி நடக்கவிருப்பதை முன்கூட்டியே யூகித்து அப்போதே திட்டம் வகுத்தவனாக,  தனக்கு அருகிலமர்ந்து உணவு உண்ணும் அமரிக்கு கூட கேட்டுவிடாது ராமிடம் சொல்லி செயல்படுத்தக் கூறினான்.

வெற்றி சொல்லியபடி, உடனடியாக பெண் காவலர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறிய ராம்… இரவு நேர ரோந்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த மற்ற ஆண் காவலர்கள் இருவரையும், “ரோந்துக்கு நானும் மூர்த்தியும் போறோம் நீங்க வீட்டுக்கு போங்க” எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டான்.

எல்லோரும் சென்றுவிட நாச்சி, மூர்த்தி, ராம் ஆகிய மூவரும் மட்டுமே காவல் நிலையத்தில் இருந்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் அங்கு நடக்கவிருப்பதை அறிந்த  நாச்சி, “இங்கு தானிருந்தால் தனக்கு பிரச்சினை ஆகிவிடுமே” என பயந்து உடல்நிலை சரியில்லை எனக் கூறி அவரும் சென்று விட்டார்.

இதனை எதிர்பார்த்த ராம் அர்த்தமாக சிரித்துக் கொண்டான்.

“வருபவர்களின் முதல் குறி கண்காணிப்பு காமிராவின் மீதுதான் இருக்குமென்பதால் அதிலிருந்து எந்தவொரு தகவலும் நமக்கு கிடைக்காது” என்ற வெற்றியே கடிகாரத்தில் பொத்தான் காமிராவை பொருத்த சொல்லியிருந்தான்.

வெற்றியே அவசரத்திற்கு உதவுமென்று தன்னிடம் வைத்திருந்தான்.

தன்னுடைய மேசை இழுவில் ஒன்று இருப்பதாக வெற்றி சொல்லவும் அதன்படியே காமிராவை கடிகாரத்தில் பொறுத்தியிருந்தான் ராம்.

“தாங்கள் இருவரும் இங்கு இருக்கும் வரை குற்றவாளி வரப்போவதில்லை” என சிந்தித்த

ராம் மூர்த்தியை அழைத்துக்கொண்டு தேநீர் அருந்த செல்ல குற்றவாளி (சிதம்பரம்) தனது அடியாட்களுடன் காவல் நிலையத்தில் புகுந்திருந்தான்.

தன்னை மாட்ட வைக்கப்போகும் ஆதாரங்களை தேடியவன் கிடைத்ததும் எடுத்துச் சென்றுவிட்டான்.

“இதுதான் மூர்த்தி அண்ணா நடந்துச்சு” என்று ராம் சொல்லி முடிக்க, “அப்போ குற்றவாளி பெரிய ஆளுன்னா அவனே எப்படி வந்திருப்பான், ஆளுங்களைத்தான் அனுப்பி வச்சிருப்பான்” என்று மூர்த்தி தன் சந்தேகத்தைக் கூறினார்.

“உங்க சந்தேகம் சரிதான், ஆனால் தன்னைக் காட்டிக் கொடுத்த, தான் வளர்த்த ஆளை தன் கையாலே கொல்ல வேண்டுமென்றுதான் எல்லா ரவுடியும் நினைப்பான். அதனால என்னுடைய யூகம் சரின்னா அவனே வந்திருக்கணும்” என்று விளக்கிக் கூறினான் வெற்றி.

“அய்யோ சார் அப்போ அந்த அறையிலிருந்த நம்ம சாட்சிங்க” என்று மூர்த்தி பதற,

“இந்நேரம் செத்திருப்பாங்க” என எவ்வித பதட்டமும் இல்லாமல் சொல்லிய வெற்றி இனிப்பு கட்டியை சுவைக்க ஆரம்பித்தான்.

“இந்நேரத்தில் கூட உங்களால் தான் சார் சாக்லேட் சாப்பிட முடியும்” என்ற மூர்த்தியை ராம் இழுத்துக் கொண்டு ரகசிய அறைக்குச் சென்றான்.

சாட்சியாக பிடித்து வைத்த தடியர்களின் நினைவே ராமிற்கு இல்லை. அவர்களை அவன்(சிதம்பரம்) கொன்று விடுவானென்று ராம் எதிர் பார்க்கவில்லை என்பது, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் வெற்றி சொல்லியதும் பதட்டம் கொண்டதில் நன்கு தெரிந்தது.

மூர்த்தியும் ராமும் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு தடியர்களும் இறந்து கிடந்தனர். இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

“என்ன ராம் செத்துட்டானுங்களா?” என்று கேட்டபடி அங்கு வந்த வெற்றி சுவற்றில் தன்னால் ஒட்டப்பட்ட ரப்பர் பல்லியை எடுத்தான்.

“சார் இது…” ராம் சந்தேகமாகக் கேட்டான்.

“நாம் கேட்டும் பதில் சொல்லாத குற்றவாளிகள் அவனுங்களுக்குள்ளே ஏதாவது பேச வாய்ப்பிருக்கு, அதுக்காக சந்தேகம் வராதபடி நான் வைத்த காமிரா” என்ற வெற்றி… அப்போதே அதனை தன்னுடைய அலைபேசியில் இணைத்து அவர்கள் இறப்பின் நிகழ்வை பார்த்தான்.

முக்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்ட சிதம்பரம், நாச்சி சொல்லியதன்படி ரகசிய அறைக்கு தன்னுடைய ஆட்களுடன் சென்றார்.

இரண்டு தடியர்களையும் கண்ட சிதம்பரத்திற்கு அவர்கள் மீது கொன்றுவிடும் வெறி வந்தது.

“ஐயா எங்களை காப்பாத்துங்கய்யா, அந்த வெற்றி மிரட்டி எங்ககிட்ட வாக்குமூலம் வாங்கிட்டாங்க” என்று இருவரும் ஒரு சேரக் கூறினர்.

“எவ்வளோ மிரட்டியிருந்தாலும் எனக்கு விசுவாசமா இருந்திருக்கணும்டா” என்ற சிம்பரம்,

“நான் போடுற சோத்தை திண்ணுட்டு எனக்கெதிரா சாட்சி சொல்லுறீங்களோ” எனக் கேட்டுக்கொண்டே, அவரின் அடியாட்களிடம் கண்ஜாடை செய்தார். அவரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவர்கள், இருவரையும் பின்னால் சென்று பிடித்துக்கொள்ள சிதம்பரம் தன் கையில் சுற்றப்பட்டிருந்த நரம்பு போன்ற சிறு கம்பி சுருளை உருவினார்.

“எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க ஐயா” இருவரும் பயத்தில் அலறினர்.

“எனக்கு துரோகம் செஞ்சா இதுதான்டா கதி” என்றவர் இருவரின் கழுத்திலும் கம்பியை சுற்றி தனது வெறி அடங்கும் வரை இறுக்கினார். விழி பிதுங்கி, தொண்டை அடைக்க இருவரின் உயிர் பிரிவதை நிறைவுடன் கண்டு சிரித்தார்.

இறப்பதற்கு முன் ஒருவன்

“காத்…காத்த…” என்று ஏதோ சொல்ல வந்ததை ஆழ்ந்து யோசித்தவருக்கு காத்தவராயனை இவனுங்க பார்த்திருக்கானுங்க என்கிற வரை புரிந்தது.

“அந்த காத்தவராயனும் வெற்றி பய பிடியில் தான் இருக்கான்” என்ற சிதம்பரம் தன்னுடைய அடியாட்களை கூட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

காணொளியில் சிதம்பரம் சொல்லிய பிறகே, ராம் மற்றும் மூர்த்திக்கு காத்தவராயனின் நினைவு வந்தது.

“சார் காத்தவராயன் தப்பிச்சிட்டாரா?” என்று ராம் வினவ, வெற்றியை நன்கு புரிந்து வைத்துள்ள மூர்த்தி…

“காத்தவராயன், சாரோட பாதுகாப்பில் இருக்கனும்” என வெற்றியை பார்த்துக் கொண்டே கூறினார்.

“அப்போ காத்தவராயனை காப்பாற்றியது போலவே இந்த தடியர்களையும் காப்பாற்றி இருக்கலாமே சார்” என்று ராம் வினவினான்.

மர்மமாக சிரித்த வெற்றி,
“நம்மகிட்ட இருக்கிறதெல்லாம் ஒரு ஆதாரமே இல்லை ராம். இப்போ அவனே(சிதம்பரம்) வந்து சிக்கியிருக்கான். குமரன், கலை ரெண்டு பேரையும் சிதம்பரம் கொலை செய்யலானாலும்… அவன் செய்யுற தப்புக்கு காரணமாதான் அடியாளுங்க செஞ்சிருக்கானுங்க, இதுல இருந்து ரொம்ப சுலபமா இன்னொரு ஆள கை காட்டி அவன் வெளிய வந்திடுவான்.” என்று சொல்லிக்கொண்டு வந்த வெற்றி சிறு இடைவெளி விட,

“உங்க திட்டம் எனக்கு புரிஞ்சிடுச்சு சார்” என்ற ராம்… “இப்போ சிதம்பரம் நேரடியா கொலை செய்த ஆதாரமே நம்மிடமிருக்கு, இது போதுமே சட்டத்துக்கு… நீங்க ஏன் எதுக்கு காவலர் பிடியிலிருந்த குற்றவாளிகளை கொலை செய்தீர்களென குடைய ஆரம்பித்தால் அவர் செய்த எல்லா தவறிலும் மாட்டிக் கொள்வார்… என்னுடைய யூகம் சரிதானே சார்” என்று கேட்டான்.

“என்னுடைய வேவ்லென்த்துக்கு இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நினைக்கல ராம்” என்ற வெற்றி உங்கள் கணிப்பு சரிதான் என்பதை தன்னுடைய சன்னமான சிரிப்பால் உணர்த்தியிருந்தான்.

“என்ன இருந்தாலும் ரெண்டு உயிர் சார்” என்ற மூர்த்தி வார்த்தைகளற்று தடுமாற,

“அவனுங்க ஒன்னும் தியாகியில்லையே, கலையோட இறப்பு எப்படியிருந்தது பார்த்தீங்களே” என்று சினந்த வெற்றி… “அவுனுங்களுக்கு ஒன்னுன்னா வருத்தப்படக் கூட ஆள் கிடையாது… நாம வருத்தப்பட நாட்டில் ஆயிரம் நல்லவங்க இருக்காங்க” என கடுமையாக மொழிந்த வெற்றி நடக்க ஆரம்பிக்க,

“காவல் நிலையத்தில் இருந்த குற்றவாளிகள் இறந்து போனால் உங்க மீது விசாரணை கமிஷன் வருமே… அதுவுமில்லாமல் அவர்கள் மீது FIR பதியலையே” என்று மெல்லக் கூறிய மூர்த்தியிடம் “அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனும் விதமாக பார்வையை வீசிய வெற்றி,

“என்ன ராம் நீங்க ஏதாவது கேட்கணுமா?” ஏதோ கேட்க வந்த ராம் வெற்றியின் கோபத்தில் தயங்கி நிற்க, அதனை புரிந்து கொண்டு வெற்றியே கேட்டிருந்தான்.

“சார் அந்த ஆதாரமெல்லாம்?” பாதி வார்த்தையை வாய்க்குள்ளே விழுங்கினான்.

“நான் அவ்வளவு முட்டாளில்லை ராம்” என்ற வெற்றி… “சிதம்பரம் எடுத்துச் சென்ற அனைத்து ஆதாரங்களும் காபி(copy) செய்யப்பட்டவை. ஒரிஜினல் என்கிட்ட இருக்கு” என சொல்லிய வெற்றி காவல் நிலையம் விட்டு வெளியேறினான்.

“என்ன அண்ணே இப்படி இருக்காரு இவரு… இப்போ அவர் வேலைக்கே ஆபத்து வரலாமே” என்று ராம் வருத்தப்பட,

“இதெல்லாம் அவருக்கு ஒண்ணுமேயில்லை சார்” எனக்கூறிய மூர்த்தி சிதறி கிடந்த மற்ற வழக்கு கோப்புகளை எடுக்கத் தொடங்கினார்.

வண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வெற்றியின் சிந்தனை பல கணக்குகளை ஆராய்ந்தபடி இருந்தது.

காத்தவராயன் சிதம்பரத்தின் ஆட்களை ஊருக்குள் பார்த்து, அவன் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்ற எண்ணி… சிதம்பரத்தை முதல் நாள் பார்க்க சென்ற அன்று காத்தவராயனுக்கே தெரியாது அவனை பின் தொடர்ந்திருந்தான் வெற்றி.

வெற்றி அப்போது ஊருக்குள் இல்லையென்றாலும் சசியின் மூலம் அங்கு நடப்பவற்றை அறிந்து கொண்டிருந்தான்.

“ஊருக்குள் திருவிழா தொடங்கியதுமே புதிய ஆள் நடமாட்டம் நிறைய தென்படுது வெற்றிண்ணா” என்று சசி தற்செயலாகக் கூற, வெற்றியால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

உடனடியாக ஊருக்குள் கண் வைத்த வெற்றியின் பார்வையில் சிதம்பரத்தின் ஆட்களும், அவர்கள் அம்மனின் சிலை பற்றி விசாரிப்பதும்… அவர்களை காத்தவராயன் கண்காணிப்பது வரை சிக்கிக் கொண்டன.

அன்று காத்தவராயன் சிதம்பரம் இருவரும் சேர்ந்து போட்ட திட்டங்கள் வரை அவர்களுக்கேத் தெரியாது தெரிந்து கொண்டான் வெற்றி.

அன்றைய அவர்களின் திட்டத்தை முதல் முறை செயல்படுத்த முனைந்த போது மீண்டும் வீட்டிற்கு(ஊருக்குள்) வந்து முறியடித்த வெற்றி, மீண்டும் தீமிதி அன்று காத்தவராயனின் உயிர் பயத்தை காரணமாக வைத்து நடைபெறாமல் தடுத்திருந்தாலும், அதனால் விளைந்த அவனின் திருமணம் அவனே எதிர்பாராது.

இப்போது இவற்றை நினைக்கையில், அடுத்து சிதம்பரத்தின் செயல் என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தான் வெற்றி.

‘சிதம்பரத்திடம் இருக்கும் நேரம் வெகு குறைவு… தனக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டதால் விரைந்து அவனது வேலைகளை முடிக்க நினைப்பான்… அப்படியென்றால் அவனை குற்றவாளியாக காண்பிக்கும் ஆதாரங்களை அழித்ததோடு… அவனின் அடுத்த செயல் சிலையை கடத்துவதாகத்தான் இருக்கும்’ என மனதோடு ஒவ்வொன்றையும் கணக்கிட்ட வெற்றி அருவிக்கரையிலிருக்கும் கோவிலை நோக்கி விரைந்தான்.

“என்னடா சிலையை எடுத்துட்டீங்களா?” ஊர் எல்லையிலேயே மறைவாக நின்றுகொண்ட சிதம்பரம் சிலையை எடுக்க தனது வலது கையையும் மற்றொருவனையும் அனுப்பி இருந்தார்.

“கோவில் கிட்ட வந்துட்டோங்க, உள்ளுக்க போக வழி பாக்குறோம்” என பதிலளித்த தன்னுடைய ஆட்களிடம்,

“விரைந்து முடிங்கடா” என்றவர் இணைப்பை அணைத்துவிட்டு காத்திருக்கத் தொடங்கினார்.

‘தன்னுடைய மனகணக்கு எப்போதும் தவறே ஆகாது. அதேபோல் இப்போது என் மனம் சொல்லுவதும் தவறாகாது, இது உண்மையெனில் அவர்கள் இப்போது சிலை கடத்த முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டுமென்று’ மனதோடு உழன்று கொண்டே வந்த வெற்றி ஊர் எல்லையில் சாலைக்கு கீழே மண் சரிவில் கார் ஒன்று நிற்பதை கவனிக்கத் தவறினான்.

சரியாக வெற்றி கோவில் அருகில் வரும்போது, சிலையை எடுக்கச் சென்ற இருவரும் சிலையோடு கோவிலின் சுற்றுச்சுவர் தாண்டி வெளியே குதித்தனர்.

யாரோ குதிக்கும் சத்தம் கேட்டு, ஓசை வந்த திசையில் வெற்றி வேக எட்டுக்களுடன் செல்ல… இருவரும் சிலையை தூக்க முடியாது தூக்கிக் கொண்டு ஓடினர்.

பழங்கால வைரம் பதிந்த பொன் சிலை என்பதால் சற்று கனமாகவே இருந்தது.

அவர்கள் ஓடுவதை கண்ட வெற்றி அவர்களுக்கு எதிர் திசையில் ஓடிச்சென்று வழி மறித்து நிற்க, வெற்றியின் முன்பு பயத்தில் வியர்வை வழிய நின்ற தடியர்கள் தங்களது அடியை மெல்ல பின்னோக்கி வைக்க… அவர்களின் பாதத்திற்கு அருகே தரையில் இருமுறை சுட்டான்.

“தரையை சுட்டவன் தங்களையும் எங்கே சுட்டு விடுவானோ” என அஞ்சியவர்கள் சிலையென நிற்க, அவர்களின் பார்வை வெற்றியை தாண்டி அவனுக்கு பின்னால் சென்றது.

இருவரின் பார்வையை வைத்து தனக்கு பின்னால் யாரோ நிற்பதை அறிந்து கொண்ட வெற்றி, பட்டென்று திரும்ப அவனை நோக்கி துப்பாக்கி சுடும் சத்தம் அவ்விடத்தையே அதிர வைக்க… ஆவென்ற அலறல் அருவியின் சத்தத்தை மீறி எதிரொலிக்க வெற்றி தரையில் விழுந்திருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
31
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அந்த சிதம்பரம் வெற்றியை சுட்டுட்டானா??