Loading

 

காவ(த)லன் 3

சற்றுன் முகஞ்சிவந்தால் – மனது
சஞ்சல மாகுதடி!
நெற்றிச் சுருங்கக்கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி!
உன் கண்ணில் நீர்வழிந்தால் – என்
நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என்கண்ணிற் பாவையன்றோ? –
கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ  
                          – மகாகவி பாரதியார்.

வெற்றியின் மனதிற்கு மிகவும் விருப்பமான பாடல்… காவலர் குடியிருப்பு பகுதியிலிருக்கும் வீட்டின், தன்னறையில் தனித்திருக்கும் அவன், நள்ளிரவில் எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்.

எப்போது இப்பாடலை கேட்டாலும் அவனின் மனம் அவனது காதலியிடத்து தஞ்சம் புகுந்து விடும். ஆம் வெற்றி பூம்பொழிலை ஆத்மார்த்தமாக நேசிக்கின்றான். அவனது முதல் காதல் என்று குறிப்பிட்டது எழிலைத்தான். குடும்ப உறுப்பினர்கள் கூட பின்னுக்கு சென்றுவிடுவார்கள். அந்தளவுக்கு எழிலை நேசிக்கின்றான்.

எப்போதிலிருந்து எழிலை காதலிக்கின்றானென்று கேட்டால் அவனுக்கே விடை தெரியாது. கண்மூடித்தனமான காதல் அவனுடையது. ஆனால், தன்னை ஒருவன் இந்தளவுக்கு விரும்புகிறானென்று எழிலுக்கே தெரியாது.

யாரிந்த பூம்பொழில்?

மெல்ல தன்னவளின் நினைவுகளில் மூழ்கியவன் உறக்கத்தின் பிடியில் சிக்கினான்.
அதே நேரம் மற்றொரு இடம்…

அடர்ந்த அடவிக்குள் கம்பீரமாக நின்றிருக்கும் வீட்டில் தனித்திருக்கும் அவன் மெத்தையில் உருண்டு கொண்டிருந்தான். நான் உன்னிடம் வரமாட்டேனென்று தூக்கம் அவனிடம் அழிச்சாட்டியம் செய்தது. மனைவியின் நினைவுகள் அவனைத் துரத்தின.
அவன் கதிர்.

வெற்றியின் நெருங்கிய நண்பன்.

வாணியின் காதல் கணவன்.

அசாத்தியமான உயரமும் அதற்கேற்ற முறுக்கேறிய உடலும், சிவந்த நிறமும் பார்ப்போரை வசீகரிக்கும்.

வெற்றி அழுத்தமானவன் என்றால் கதிர் கலகலப்பானவன்.

வாணியே அவனின் உயிராவாள். தனது மனைவியின் மீது அலாதி பிரியமும்.. உயிர் உருகும் அன்பு வைத்திருப்பவன்.

மனைவியின் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்துள்ளான். வாணியின்  நினைவோ, எண்ணமோ இல்லாமல் அவன் ஒரு மணித்துளியையும் கடந்ததில்லை. இரவில் அவனின் மனமும் உடலும் மனைவியின் அருகாமைக்கு ஏங்கும் அப்போதெல்லாம் அவளின் நினைவுகளே அவனுக்கு ஆறுதல்.
இவ்வளவு காதல்… மனைவியிடத்தில் கொண்ட போதும், தனித்து வாழ்கிறான். அதற்கு காரணம் அவனின் பணி.

கானகமே அவனது  வீடு. அடவியில் வனப்பாதுகாவலராக (conservator of forest) பணிபுரிகின்றான்.
காட்டிற்கும், மக்கள் வசிக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட  பகுதியில் வனத்துறையினர் அலுவலகமும் அவர்கள் வசிப்பதற்கான வீடுகளும் அமைந்துள்ளன.

அடவியின் மையத்தில் விருந்தினர்கள் தங்குவதற்காக சிறு சிறு வீடு போன்ற அமைப்பில் கட்டிடங்கள் அமைந்துள்ளது. காடுகளைப் பற்றியும், அதிலுள்ள விலங்குகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக கட்டப்பட்டது. 

அரசாங்கம் தனக்கென்று வழங்கிய வீட்டினை தவிர்த்து கதிர் இங்கு தான் தனிமையில் வசிக்கின்றான்.
இரவின் தனிமை அவனை வாட்ட, அதற்கு மேல் உறங்க முடியாதவன்… இந்நேரத்தில் மனைவியை அழைத்து தொல்லை செய்யக்கூடாதென்கிற எண்ணத்தில், எழுந்து அலுவலகம் சென்றான்.

இரவுப் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்கு அவனின் திடீர் வரவு பழக்கப்பட்டதே.

அலுவலகத்திலும் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறிது நேரத்திலேயே ஜீப்பினை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் கிளம்பிவிட்டான்.

சிறிது தூரத்தில் தெரிந்த போர்டினை வாசித்தவன்.. அந்தப் பக்கம் விரைந்து வண்டியினை செலுத்தினான்.

°களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்குகள் காப்பகம்° என பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது.

இப்போது அவன் செல்லும் பகுதி புலிகள் நிறைந்த பகுதி…
பணியில் சேர்ந்தது முதல் அவனுள்ளிருக்கும் தீராத ஆசை, ஒருமுறையாவது புலியிடம் அகப்பட்டு.. தன் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது.

அவனது ஆசையினை வெற்றியிடம் சொல்லிய போது வெற்றி பார்த்த பார்வையில் இன்று வரை அமைதியாக இருக்கின்றான். அவன் ஓட்டி வரும் வாகன சத்தத்திலே அவனிற்கு பயந்து, உயிர் வாழும் ஆசையில் புலிகள் மறைந்து கொள்கின்றனவோ என்னவோ!

வெற்றி நிதானமாக தீர்க்க சிந்தித்து செயல்படுபவன் என்றால் எப்போதும் கதிரிடத்தில் ஒரு வேகம் இருக்கும்.
களக்காடு.. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்தியாவின் 17வது புலிகள் காப்பாகமாகும்.

இங்கு புலிகள் மட்டுமில்லாது சிறுத்தை, மான், மிளா , யானை போன்ற உயிரினங்களும் வசிக்கின்றன.

கிழக்கு பகுதியில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மற்ற மூன்று திசைகளிலும் ஓங்கி உயர்ந்த மரங்களே தன்னுள் பல உயிரினங்களை காத்து உயிர் வாழ்கின்றன.

அடவிக்குள் புயல் போல் சென்று கொண்டிருப்பவனுக்கு தீடீரெனக் கேட்டது அந்த வித்தியாசமான ஒலி. வண்டியினை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்தான்.

அது கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட ஒற்றை யானையின் பிளிறல் சத்தம். யானையின் சத்தம் அவனுக்கு வெகு விரைவில் கேட்டது. மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல கதிர். ஆனால், இப்போது வெற்றிக்காக இருப்பது அவன் மட்டுமே… ஆதலால், யானையிடம் தன் உயிரை பணயம் வைக்காமல் உயிர் தப்ப முடிவு செய்தான்.

வண்டியை விட்டு கீழிறங்கியவன், ஓங்கி உயர்ந்து ராட்சத தோற்றத்துடன் காட்சியளித்த மரத்தின் மீது அசுர வேகத்தில் ஏறி உச்சியை அடைந்தான்.

யானைக்கு மோப்ப சக்தி அதிகம். மனித நடமாட்டத்தை வெகு தொலைவிலேயே கண்டுகொள்ளும்.

‘எப்படியும் வண்டியை வைத்து ஆள் இருக்கின்றனர் என்பதை கண்டு பிடித்து சிறிது ஆழ்ந்து சுவாசித்தாலும் தான் இம்மரத்தின் மீதிருப்பதை கண்டு கொள்ளும். அதன் பின்னர் மரத்தினை ஒரே மோதலில் வீழ்த்துவது யானைக்கு சாதாரணம்,’ சிந்தித்தவன் கன் பவுடரினை எடுத்து தன் உடல் முழுக்க தடவிக்கொண்டான்.

அருகில் கேட்ட சத்தம் மிக அருகில் நன்கு தெளிவாகக் கேட்கவும் எதற்கும் துணிந்தவனாக தயாராக மரத்தின் மீது கம்பீரமாக நின்றிருந்தான்.

வண்டியை நெருங்கிய யானை அதனை கூர்ந்து பார்க்க.. வண்டிக்கு அருகிலிருக்கும் மரத்திற்கு கீழ் நின்றது. சுற்றியும் தனது பானை உடம்பினை திருப்பி ஆள் இருக்கின்றனரா என்று நோட்டமிட்டது. மனித வாசத்தை நுகர்ந்ததோ என்னவோ, தலையை நிமிர்த்தி, துதிக்கையினை மேல்நோக்கி உயர்த்தி அதிக சத்தத்துடன் பிளிறியது.

வெகு அருகில் கேட்ட முரட்டு யானையின் பிளிறல் கதிருக்கு சற்று நடுக்கத்தை உடலில் ஏற்படுத்தியது.

இங்கு அலுவலகத்தில் காடுகளைச் சுற்றி விலங்குகளை கண்காணிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராவின் உதவியால்.. கணினியின் வழியே அங்கு நடப்பதைக் கண்ட வனவர் (forester) பயத்தில் அலறியே விட்டார். அவரின் அலறலில் ஓடிவந்த மற்ற பணியாளர்களுக்கும் மானிட்டரில் கண்ட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியது.

கதிர் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர்களை நண்பர்களாக வழி நடத்துபவன். பாரபட்சமின்றி நட்புடன்  சிரித்து பேசும் குணத்திற்கே அவன் கீழ் வேலை செய்ய மற்ற பணியாளர்கள் விரும்புவர். அவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அனைவருக்கும் மனதிற்குள் சிறு பயம் சூழ்ந்தது. அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதென்ற எண்ணத்துடன் அங்கு என்ன நடந்ததென்று கவனிக்கலானர்.

மனித வாசனையை நுகர்ந்த யானை தன் இருப்பை தெரிவிக்க, இனியும் இங்கு அமர்ந்துகொண்டு நேரத்தை வீணடிக்க முடியாதென்று எண்ணிய கதிர் கீழேயிறங்கி யானையுடன் சண்டையிடத் தீர்மானித்தான்.

அந்நொடி மரத்தினை சுற்றி வந்த யானை ஒரு நிமிடம் நின்றது. இரண்டடி பின்னால் நகர்ந்து வேகமாக முன் வந்து தன் தலையால் மரத்தினை முட்டியது. யானை மோதியதில் பழமை வாய்ந்த வைரம் பாய்ந்து முறுக்கேறிய அம்மரமே ஆட்டம் கண்டது.

இனி.. ஒரு முட்டு முட்டினாலும் மரத்தின் மீது நின்றிருக்கும் கதிர் கீழே விழுந்து விடுவான். செய்ய ஒன்றுமில்லை என்று நினைத்தவன் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து வான் நோக்கி இரண்டு முறை சுட்டான்.

நள்ளிரவில் அடர்ந்த வனத்தில்… துப்பாக்கி ஒலி இடியென காதை துளைத்தது. வெடி சத்தம் போல் எதிரொலித்த சத்தத்தில் யானை பயந்து பின் வாங்கியது. மீண்டும் மரத்தினை சுற்றி வந்தது, தான் வந்த திசைக்கு எதிர் திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

சென்ற யானை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சிறிது நேரம் மரக்கிளையிலேயே அமர்ந்தான். 
கானக இருட்டும், உயிரினங்களின் ஓலமும் பழகிய அவனுக்கு அங்கிருப்பது ஒன்றும் அச்சத்தை அளிக்கவில்லை. சில நிமிடங்கள் கடந்து கீழிறங்கி வந்தவன் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

செல்லும் வழியிலேயே வெற்றியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“யூ இடியட், ஆர் யூ மேட்.. உனக்கு எத்தனை தடவை சொல்றது? தனியாக ராத்திரி நேரத்துல காட்டுக்குள் செல்லாதேன்னு, புரிஞ்சிக்க மாட்டியாடா?” வெற்றி வார்த்தைகளால் பொறிந்தான்.

“என் வேலையே அது தானே வெற்றி.”

“ஆமாம், பெரிய வேலை… மிஸ்டர்.வேதம் எனக்கு கால்(call) செய்து நீ வேகமா காட்டுக்குள் போறேன்னு சொன்னது முதல் உனக்கு போன் போட்டுட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல யானைகிட்ட மாட்டிக்கிட்டன்னு அவர் சொன்னதும் பயந்தே போயிட்டேன் டா எருமை.”

கதிர் தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவன் நலமுடன் இருக்கின்றான் என அறிந்தாலும் வெற்றிக்கு ‘யானையிடம் தன்னுடைய கதிர் சிக்கியிருந்தால்?’ என்ற நினைவே பயத்தை ஏற்படுத்தியது.

எதற்கும் அஞ்சாதவன் தன் மீது கொண்ட அக்கறையாலும் அன்பினாலும் பயம் கொள்வது கதிருக்கு என்னவோ போல் இருந்தது.

ஆதலால், அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு,

“நீ பெரிய போலீஸா இருக்கலாம் மாப்ள, அதுக்காக என் இடத்திலேயே எனக்கெதிரா உளவாளி வைப்பதெல்லாம் த்ரீ மச் டா” எனக்கூறி சிரித்தான்.

“எனக்கு சிரிப்பு வரல, ஒழுங்கா வீட்டுக்கு போய் போர்வையை இழுத்து போர்த்திக்கிட்டு படு”, கடுப்புடன் கூறிய வெற்றி இணைப்பத் துண்டித்தான்.

வெற்றியின் கோபத்தில் மறைந்திருக்கும் பாசத்தை அறிந்திருக்கும் கதிர் தனது வேகத்தை குறைத்தவனாக வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும் போது அந்த வித்தியாசத்தினை உணர்ந்தான்.
சாதாரணமாகக் கேட்டால் காற்றில் சலசலக்கும் புதர்களின் ஓசை. கூர்ந்து கவனிக்கும் போது தான் தெரிந்தது புதர்களுக்கு நடுவே ஆட்கள் நடமாடும் சத்தம் என்று, மெல்ல வண்டியை நிறுத்திய கதிர் சத்தம் வரும் புதர்கள் நோக்கி நடந்தான்.

கதிரின் பாதம் மிதிபடும் ஓசை சருகுகளில் கேட்டதும் அச்சத்தம் நின்று போனது. என்னவென்று தெரியாது குழம்பியவன் திரும்பி வந்துவிட்டான்.
அலுவலகம் செல்லாது வீடு வந்து சேர்ந்தவன் வெற்றி சொல்லியதை போலவே போர்த்தி படுத்து விட்டான்.

______________________________________

உறங்கிக் கொண்டிருந்த சக்தி யாரோ தன்னை உற்று நோக்குவதை போல் உணர்ந்ததால் மெல்ல கண் விழிக்க அவனுக்கு மிக அருகில் மதி படுத்திருந்தாள்.

உறக்கத்தின் பிடியில் இருந்தவன் மதியின் முகம் அதுவும் இந்நேரத்தில் தனது அறையில் அவளைக் கண்டதும் தூக்கம் முற்றிலும் பறந்தோட துள்ளி குதித்து எழுந்தான்.

“ஹேய் என்னடி இந்நேரத்தில்?, எப்படி உள்ளுக்க வந்த?” அதிர்ச்சி விலகாமல் கேட்டிருந்தான்.

“ரெண்டு நாளா உன்கிட்ட பேச முயற்சி செய்யுறேன்.. உன்னை பிடிக்கவே முடியல, போன் பண்ணாலும் எடுக்கிறது இல்லை… அதுதான் நேருலயே வந்துட்டேன்” என்ற மதி “உன் ரெண்டாவது கேள்விக்கான பதில் என்னால் சொல்ல முடியாது” என்றாள்.

“நீ சொல்லலைன்னாலும் எனக்குத் தெரியும், அந்த சசி குரங்கு தானே வாசல் கதவினை திறந்து விட்டது… அதுமட்டுமில்லாமல நாம என்ன பேசுகிறோம்ன்னு வெளியே நின்னு ஒட்டு வேறு கேட்கிறான்” என்றபடி சக்தி தனது அறையின் கதவை திறக்க அவன் சொல்லியது போலவே சசி நின்றிருந்தான்.

சசியும் சக்தியும் ஒரே வயதினர்.
ஒருமுறை நல்லுவும், சேதுவும் தொழில் விடயமாக வெளியூர் சென்று இரவில் திரும்பி வருகையில் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த ஏழு வயது மிக்க சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழவும், காரிலிருந்து அதனை பார்த்த சேது உடனடியாக வண்டியை நிறுத்தினார்.
இருவரும் அச்சிறுவனை சமநிலை அடையச் செய்து விசாரிக்க, அவன் சாப்பிட்டே நான்கு நாட்களாகிறது எனத் தெரிந்தது, அவனை பார்க்கையில் தங்கள் மகன் சக்தியாகத் தோன்ற நல்லு தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அன்று முதல் அவ்வீட்டில் சசியும் ஒரு உறுப்பினர். இன்றுவரை அவனை யாரும் பிரித்து பார்த்ததில்லை.

ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவனை… “இந்த வேலையெல்லாம் நீ செய்யக்கூடாது, நீயும் எங்களுக்கு ஒரு வாரிசு” என்ற வீட்டு பெரியவர் அவனையும் சக்தியுடன் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். இன்று சக்திக்கு தொழிலில் அவனுக்கு உதவியாக இருக்கின்றான். அவ்வீட்டில் சசிக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.

சக்தியை பார்த்ததும் சசி அசடு வழிய… “உனக்கெதுக்குடா இந்த பொழப்பு” எனும் விதமாக சக்தி சசியை முறைத்தான்.

“ஒண்ணுமில்லைலே, தங்கச்சியை தனியா உன் அறைக்கு அனுப்பி வச்சிட்டு ஒரு அண்ணனா நானு எப்படி போறது… அதுதான் காவலுக்கு வெளியே நின்னேன்” என சசி கூறினான்.

“அப்படி தங்கச்சி மேல் அக்கறை இருந்திருந்தா ஒரு பையனோட அறைக்கு அவளை அனுப்பி வச்சிருக்கவேக் கூடாது” என்ற சக்தி மேலும் ஏதோ கூற வருகையில் இடைப்புகுந்தாள் மதி.

“அய்யோ, உங்க பேச்சு வார்த்தையை அப்புறம் வச்சிக்கோங்க” என சத்தமில்லாமல் கத்தியவள் சக்தியை நெருங்கி நின்று “வா ஓடிபோலாம்” என்றாள்.

“என்ன?”

சசியும், சக்தியும் ஒன்றாக அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘கதவை திறந்து விட்டதுக்கு ஒட்டு மொத்த குடும்பத்துக்கிட்டையும் என்னை கோர்த்து விட்டுடுவா போலயே’ சசி மனதோடு புலம்பினான்.

ஆனால் சக்திக்கு சசியளவிற்கு பயமில்லை.

“நீ கிளம்பு” என மதியை பார்த்துக் கூறியவன் அவள் அசையாது நிற்கவும் தானே கைபிடித்து இழுத்துச் சென்றான்.

அவர்கள் மேலிருந்து கீழே கூடத்திற்கு வரவும், வீட்டில் விளக்குகள் ஒளிர்ந்தன. பார்த்தால் மொத்த உறுப்பினர்களும் அங்கு கூடியிருந்தனர்.

“என்ன நடக்குது இங்க?” தாத்தாவின் கோபமான குரல் வீட்டை ஆதிர வைத்தது.

‘போச்சு, செத்தோம்.’ மைண்ட் வாய்சோடு சசி அங்கிருந்து நகர பார்க்க சக்தி சசியின் கால் மீது தன் கால் வைத்து அவன் நகர முடியாதபடி அழுத்தியிருந்தான்.

சசி அப்பாவியாக சக்தியின் முகத்தினை ஏறிட்டு பார்க்க, அவனோ தனக்கு ஒன்றும் தெரியாது என்கிற ரீதியில் நின்றிருந்தான்.

‘ஆத்தி, அத்தனை பேரும் கொலைவெறியோடு நிக்குறாங்களே.’ பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கினான் சசி.

“என்ன பண்றது பிரதர், நீ பண்ணிருக்க வேலை அப்படி” என்றவாறு சசியின் தோள் மீது சக்தியின் கரம் படிந்தது.

சசி ‘என்னை விட்டுடேன்’ என்பதை போல் பார்க்க, அவனோ அவனின் முகத்தை தாத்தாவை நோக்கி திருப்பினாள்.

அனைவரும் என்ன கேட்பதென்று தயங்கி நிற்க, தாத்தாவின் கரம் பற்றிய சக்தி… “உண்மையில் எனக்கு இவ(ள்) இந்நேரத்தில் இங்கு வருவான்னு தெரியாது தாத்தா, எப்பவும் நீங்க தலை குனியும்படியான செயலை என்னால் செய்ய முடியாது” என்றான்.

‘இந்த பெருசுங்க கொடுக்கும் பில்டப்பில் ஒன்றும் இல்லாத விஷயம் விஸ்வரூபம் எடுத்திடும் போலிருக்கே, என்னை மட்டும் காப்பாத்து ஆண்டவா,’ மனதில் புலம்பலோடு அவசரமாக வேண்டுதலையும் வைத்தான் சசி.

“உன்னுடைய வேண்டுதல் உடனடியாக நிராகரிக்கப் படுகிறது மகனே.” சசியின் காதில் கிசுகிசுத்தார் ஜானகி.

“என்னுடைய மைண்ட் வாய்ஸ் கூட கேட்குதா?” சசி ஆச்சரியமாக அன்னையிடம் கேட்டான்.

“எனக்கே கேட்குது, வாயை மூடிட்டு நடப்பதை கவனி” என்று கடுகடுத்தான் சக்தி.

‘என்னடா இது, ஆளாளுக்கு மிரட்டரானுங்க…’ என எண்ணிய சசி, சக்தி சொல்லியதை செய்தான்.

சக்திக்கு தெரிந்து மதி இங்கு வந்திருக்க மாட்டாளென்று தாத்தாவிற்கும் தெரியும் அதையே தன்னிடம் மன்னிப்பு வேண்டிய சக்தியிடமும் அவர் கூறினார்.

“உன்னை எனக்குத் தெரியும்லே, நீ உன் அண்ணன் அளவுக்கு தைரியசாலி கிடையாதுன்னு” மிக மிக அழுத்தமாகக் கூறினார்.

‘இங்க சக்தி பிரச்சனை தானே போயிக்கிட்டு இருக்கு, இந்த பெருசு என்னத்துக்கு வெற்றி அண்ணாவை இழுக்குது.’
சசியின் மைண்ட் வாய்ஸை இந்த முறையும் சரியாக கேட்ச் செய்த ஜானகி அவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைக்க, அனைவர் முன்னிலையிலும் வலியில் கத்த முடியாது சசி வாய் பொத்தி நின்றான்.

“இப்படியே இருந்துபுட்டா உனக்கு நல்லது” என்று ஜானகி சிரித்துக்கொண்டே பிறர் கவனம் தங்கள் மேல் விழாதவாறு கூறினார்.

சசியும் மெல்ல சரியென்பதைப் போன்று தன் தலையை உருட்டினான்.

தாத்தா தன்னை தவறாக நினைக்கவில்லை என்பதில் சக்தி நிம்மதி அடைந்தான்.

மதி சேதுவை கெஞ்சலாக பார்க்க, “இதில் நான் செய்வதற்கு ஒண்ணுமில்லை” என சேது கைவிரித்தார்.

அவர்களின் பார்வை பரிமாற்றங்களை உணர்ந்து கொண்ட நல்லு,
“சசி மதியை அவளின் வீட்டில் விட்டுட்டு வா… திருவிழாவுக்கு பொறவு மதியை பெண் கேட்டு வருவதா சொல்லு, அப்படியே இப்போ ஏற்பாடு பண்ணிட்டிருக்க பெண் பார்க்கும் படலத்தை நிறுத்தச்சொல்லு” என்றவர் தன் தந்தையின் முகத்தை ஏறிட்டார்.

அவர் “தனக்கு இதில் சம்மதம் ” என்று கண் மூடித்திறக்க சக்தியை தவிர மொத்த குடும்பமும் மகிழ்ந்தது.

மதி சேதுவின் நண்பர் தங்கராசுவின் ஒரே மகள். அதே ஊரைச் சேர்ந்தவர். மதி வருடக்கணக்கில் எல்லாம் சக்தியை விரும்பவில்லை. வீட்டில் அவளின் திருமண பேச்சினை எடுத்தபோது அவளது மனதில் தோன்றியது சக்தியின் முகம். அதனை தைரியமாக சக்தியிடம் சொல்லியும் விட்டாள்.

“ஏற்கனவே வீட்டில் நடந்த பிரச்சனை போதாதுன்னு இது வேறா” என்று நினைத்த சக்தி “உனக்கு தைரியமிருந்தால் பெரியவர்களிடம் சொல்” என்று அதிலிருந்து நழுவிவிட்டான்.

ஆனால், அவள் சொல்லிய விதம் அவனுக்கு பிடித்தது.
இரண்டு மாதங்கள் சென்றதே தவிர, சக்தி அவளுக்கு பிடி கொடுக்கவில்லை.

‘இவனிடம் வேலைக்காகது’ என நினைத்த மதி சேதுவிடம் சென்று “மாமா எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பாக்குறாங்க, உங்க பையன் சக்தியை கட்டிக்கிட்டா என் வாழ்க்கை நல்லா இருக்குமுன்னு தோணுதுங்க… ரெண்டு வீட்டுலேயும் நீங்க தானுங்க பேசணும்” என்றவள் அவரின் சம்மதத்தைக்கூட கேட்காமல் ஓடிவிட்டாள்.

சேதுவிற்கும் மதியை தன் மகனுக்கு எடுக்க விருப்பம் தான்… ஆனால் குடும்பம் இப்போ இருக்கும் நிலையில் அது முடியாதென்று அமைதி காக்க… விடிந்தால் மதிக்கு பூ வைக்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றார்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

விடிந்தால் வந்து விடுவார்கள்… கிராமங்களில் பூ வைத்து விட்டாலே திருமணம் முடிந்ததை போல் எண்ணுவர். அதன் பிறகு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே, சக்தியின் முடிவு என்னவென்று தெரிந்துகொள்ள இந்த அர்த்த ராத்திரியில் அவன் அறைக்குள் தைரியமாக நுழைந்து விட்டாள்.

“இன்னும் என்னடா இங்கவே நின்னுட்டு பராக்கு பார்த்திட்டு இருக்க, போய் வீட்டுல விட்டுப்போட்டு வெரசா வந்து சேரு… அப்படியே என் பெரிய மவன் சொன்னதையும் தங்கராசுகிட்ட சொல்லிபுடு.”

நல்லு கூறிச்சென்றது உண்மை தானா என புரியாமல் அப்படியே நின்றிருந்த சசி, செண்பகம் பாட்டி குரலில் அடித்து பிடித்து மதியை கூட்டிட்டுக்கொண்டு வெளியேறினான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
49
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்