காவ(த)லன் 20
“உயிர் மேல ரொம்ப ஆசையோ?”
வெற்றி அவ்வாறு கேட்டதும். அதுவரை பயம் மட்டுமே கொண்டிருந்தவர் மொத்தமாய் அதிர்ந்து போனார்.
‘பயலுக்கு ஏதோ தெரியும் போலயே’ மனதில் நினைத்தார்.
“ஏதோ இல்லை… எல்லாமே தெரியும்” என்று கூறிய வெற்றியின் வார்த்தைகளில் எல்லாமே என்பது மிகவும் அழுத்தத்துடன் ஒலித்தது.
தனக்கு எதிரில் இருக்கும் குற்றவாளியின் முகத்தை வைத்தே அவன் மனதில் நினைப்பதை சொல்ல முடியும் என்கிற தொனி வெற்றியிடமிருந்தது.
“வெற்றி…” சிறு தயக்கத்தோடு அவனது பெயரை உச்சரித்தார்.
“ஊர் மக்கள் ஒட்டுக்கா சந்தோஷமா இருக்கக்கூடாது. பெரிய வீடு ரெண்டும் முட்டிக்கிட்டே இருக்கணும் நினைக்கிற உன்னாலேயே ஊருக்குள்ள திரிஞ்ச வெளியாலுவள கண்டுக்க முடிஞ்சிதுன்னா… அவனுவ என் கண்ணுல இருந்து எப்படித் தப்பிப்பானுங்க” என்று கேட்ட வெற்றி இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.
சாக்லேட் ஒன்றினை எடுத்து சுவைக்க ஆரம்பித்த வெற்றி, “சரி நீங்க எதுக்கு வந்திங்க?” என்று வினவினான்.
“அந்த ஆளு அவன் விடயமெல்லாம் எனக்குத் தெரியுமுன்னு என்னை கொலை பண்ண முடிவு பண்ணிட்டான்.”
“அதான் எனக்குத் தெரியுமே.”
வெற்றியின் முகத்தை நேராக பார்க்க முடியாது தலை குனிந்து சொல்லியவர் அவனின் வார்த்தைகளில் விலுக்கென்று நிமிர்ந்தார்.
“என் தோட்டத்தை கொளுத்தி ஊர் மக்கள் கவனத்தை திசைதிருப்பி, அம்மன் சிலையை எடுப்பது தானே உங்க திட்டம்.” சொல்லிய வெற்றி சாக்லேட் கட்டியினை நன்கு சுவைத்து மென்றான்.
“நீ கூட்டு வச்ச அந்த பெரிய மனுசன் யாருன்னுகூட எனக்குத் தெரியும்” என்ற வெற்றியை பார்த்து ஏதோ சொல்ல வந்த காத்தவராயனிடம் “நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்பதை போல் கைக்காட்டி தடுத்தான்.
“வேலையை முடிச்சதும் உன்னை கொல்ல சொல்லி அவன் ஆளுங்ககிட்ட சொன்னதும் தெரியும்” என்ற வெற்றி எழுந்து நடக்க… என்ன செய்வதென்று தெரியாத காத்தவராயனும் வெற்றியின் பின்னே அவனின் நடைக்கு ஈடாக ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.
வெற்றி சென்றது தடியர்களை அடைத்து வைத்திருக்கும் ரகசிய அறைக்கு, வெற்றி நிமிர்ந்த நடையுடன் சென்று கொண்டிருக்க, அவனுக்கு பின்னால் சென்ற காத்தவராயன் அரை மயக்க நிலையில் இரண்டு தடியர்கள் மூர்த்தியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதையும், அறையின் ஓரத்தில் ஒருவன் ரத்தம் உறைய இறந்து கிடப்பதையும் கண்டு நடுநடுங்கிப் போனார்.
“இவனுக்கு அந்த சிதம்பரமே தேவலாம் போலயே” என்று மனதோடு சொன்னார்.
“அப்போ அவனோடவே போறீரா?” என்ற வெற்றியின் குரலில்,
“இல்லை இல்லை தம்பி” என்று பதறினார்.
“அப்போ இங்கவே இருங்க” என்று காத்தவராயனிடம் சொல்லிய வெற்றி, மூர்த்தியை பார்த்து
“இவரிடமும் எழுதி வாங்கிக்கோங்க, அதைவிட காணொளி பதிவு செய்துக்கோங்க… இவரு அவ்வளவு லேசுப்பட்ட ஆளில்லை” என்றவன் காத்தவராயன் பக்கம் திரும்பி,
“இப்போதைக்கு நீங்க இங்க இருப்பதுதான் பாதுகாப்பானது… மூணு வேளைக்கும் சாப்பாடு சரியா வந்து சேரும்” எனக்கூறிச் சென்றான்.
வெற்றியோடு வந்த ராம்,
“யார் சார் அவரு?” என்று கேட்க…
“இந்த வழக்கோட முக்கியமான சாட்சி” என்றான் வெற்றி.
“சாட்சியை எதுக்கு சார் செல்லுல வச்சிக்கிட்டு…” தனது சந்தேகத்தைக் கேட்டான் ராம்.
“அவர் உயிருக்கு ஆபத்திருக்கு ராம்” என்ற வெற்றி…
ராமின் ஆராய்ச்சி பார்வையில்
“அவராலதான் நான் ஆசைப்பட்டது எதிர்பாராத வகையில் என் கை சேர்ந்துச்சு, அத்துக்குதான் இந்த ஸ்பெஷல் கவனிப்பெல்லாம்” எனக்கூறி அவனது எழிலின் நினைவால் இதழில் உதித்த புன்னகையை ராமிற்கு தெரியாது மறைத்தான்.
“இந்த வழக்கு முடிஞ்சிருச்சு ராம். நீங்க வேறு பிரிவுக்கு மாத்தல் வாங்கிக்கலாம்.” அர்த்தத்துடன் கூறியவன் ராமின் மறுப்பினை ஏற்றுக்கொண்டது போல் சிறு தலையசைப்பில் நகர்ந்தான்.
மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற மூர்த்தி அவ்வறையிலிருந்து வெளியே வர, வெற்றி செல்வதையே பார்த்துக்கொண்டு அசையாது நின்றிருந்த ராமினை தொட்டு மீட்டார்.
“என்ன சார் பலமான யோசனை?”
“இவரை புரிஞ்சிக்கவே முடியலையே மூர்த்தி அண்ணா.”
“அதுதேன் சார் அவரு, வழக்கு முடிஞ்சிருச்சு சொன்னாரா?”எனக்கேட்ட மூர்த்தியை ஆச்சரியமாக பார்த்த ராம் மேலும் கீழும் தலையாட்டினான்.
“அவரு இந்த வழக்கு குற்றவாளியை எப்போதே கண்டுபிடிச்சிருப்பாரு சார்… அவரின் பொறுமைக்கு காரணம் குற்றவாளிக்கு எதிரான சாட்சியை பிடிப்பதற்குதான்.
சட்டத்துக்கு குற்றவாளியைவிட சாட்சிதானே மிக முக்கியம்” என்ற மூர்த்தி தன்னுடைய மேலதிகாரி வெற்றியின் அனைத்து அசைவுக்கான காரணமும் எனக்குத் தெரியும் என்பதை நிரூபித்தார்.
“உங்களை மாதிரி நானும் அவரோட ஒவ்வொரு அசைவையும் புரிஞ்சிக்கணும் மூர்த்திண்ணா” என சொல்லிய ராம்மை சன்னமான சிரிப்புடன் கடந்து சென்றார்.
“சார் எழுத்து, குரல் மற்றும் காணொளி பதிவு” என அனைத்தையும் வெற்றியின் முன் சமர்பித்தார் மூர்த்தி.
“நன்றி மூர்த்திண்ணா” என்ற வெற்றி அவற்றை “குமரன் மற்றும் கலையோட கோப்புகள் அடங்கிய ராக்கில் வைத்து விடுங்கள், என்றவனாய் வீட்டிற்கு செல்ல கிளம்பியவன் மீண்டும் வந்து…
“வண்டி ஸ்டார்ட் ஆகல மூர்த்திண்ணா, என்னை வீட்டில விட முடியுமா?” எனத் தன்மையாகக் கேட்டான்.
“என் வேலையே அதுதான் தம்பி சார், வாங்க போவோம்” என்றார் மூர்த்தி.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் தம்பி சொல்லுறீங்கண்ணா” என்ற வெற்றியுடன் இணைந்து நடந்த மூர்த்தி, “நீங்களும் இந்த வழக்கு முடிஞ்சதும் தான் தம்பி சாதாரணமா பேசுறீங்க, உங்களுக்கு கீழ் வேலை செய்யுற நான் உங்க பதவிக்கு மரியாதை கொடுக்கணுமில்ல” என்றவர் வண்டியை இயக்கினார்.
“உங்க முகத்துல எப்பவும் இருக்க இறுக்கம் இப்போ இல்லையே தம்பி சார்” என்ற மூர்த்தி “இந்த வழக்கு முடிஞ்சதாலா இல்லை நீங்க ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் கட்டிகிட்டதாலா” என்றார்.
அவருக்கு சிரிப்பினையே பதிலாகக் கொடுத்தவன், “நான் சொல்லாமலே என்னைய புரிஞ்சிக்கிற உங்களுக்கு இதுக்கும் பதில் தெரிஞ்சிருக்கணுமே’ண்ணா” எனக் கூறினான் வெற்றி.
வெங்கடாசலத்தின் வீட்டிற்கு தங்கவேலுவின் மொத்தக் குடும்பமும் வருகை தந்தனர்.
உள்ளே எப்படி செல்வதென்று கதிரைத் தவிர அனைவரும் தயங்கி நின்றனர். அதிலும் வாணிக்கு மற்றவர்களை விட தயக்கம் நிறையவே இருந்தது.
அவர்களின் தயக்கம் புரிந்த வெங்கடாசலம் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாசலுக்கு வரச்செய்து தங்கவேலு குடும்பத்தை மரியாதையுடன் உற்சாகத்தோடு உள்ளே வரவேற்றனர்.
இரு குடும்பங்களின் பகை எப்போதோ அவர்களின் மனதிலிருந்து நீங்கியிருந்தது.
இன்முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்தவர்கள் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவை யாவும் தொழில் மற்றும் ஊர் மக்களின் நலன் நிமித்தமாகவே இருந்தது.
செண்பகமும், ஜானகியும்… பஞ்சு மற்றும் அன்னத்திடம் பேசிக்கொண்டிருக்க வாணி தவித்துப்போனாள்.
“தான் செய்த தவறை மன்னிக்க மாட்டார்களா?” அவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
அன்னத்தின் அருகில் அமர்ந்திருந்தவள் மெல்ல ஜானிகியின் அருகில் நகர்ந்து அவரின் கரம் பற்ற மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காது மகளின் பிடியை உதறியவர், “எல்லாருக்கும் குடிக்க கொண்டாறேன்” என நாசூக்காக அங்கிருந்து எழுந்தார்.
“புள்ள வாயும் வயிறுமா இருக்குத்தா, காப்பித்தண்ணி வேண்டாம் பழச்சாறு கொண்டா.” மருமகளிடம் மறைமுகமாக நேற்று விநாயகத்தின் வாயிலாக தான் அறிந்துகொண்ட தன்னுடைய பேத்தியின் பேறு நிலையை கூறினார் வெங்கடாசலம்.
அவரும் வந்ததிலிருந்து வாணி மற்றும் ஜானகியின் நிலையை கவனித்துக் கொண்டுதானே இருக்கின்றார். எதைக் கூறினால் தன்னுடைய பேத்தியின் மீதான கோபம் தனது மருமகளுக்கு போகும் என்பதை அறிந்து அதனைக் கூறினார்.
இனிமையான செய்தி செவி நுழைந்ததும், மகள் மீதான கோபம் துறந்து… வயதையும் மீறி வாணியின் அருகில் ஓடிவந்த ஜானகி கண்களில் துளிர்த்த கண்ணீருடன் உச்சி முகர்ந்து நெற்றியில் இதழ் பதித்தார். அதன் பிறகு அவருக்கு வாணியிடத்தில் பேச பல கதைகள் இருந்தன.
இரு குடும்பமும் இணைந்ததோடு, வாணியின் செய்தியும் அனைவருக்கும் அதிக மகிழ்வைக் கொடுத்தது. வாணியின் தவறு கூட அவள் கொடுத்த பேறு செய்தியால் பின்னுக்கு ஓடிவிட்டது.
“மாப்பிள்ளை எப்போ வருவாங்க?” விநாயகம் நல்லுவிடம் கேட்க,
“அவருக்குத் தெரிஞ்சாதானே பதில் சொல்றதுக்கு” என்று சசி கூற,
“அவன் எப்போ போறேன் வாறேன்னு சொல்லிட்டு போயிருக்கான்” என நல்லு சசியிடம் காய்ந்தார்.
“அண்ணா வார நேரந்தான், இன்னும் செத்த நேரத்தில வந்திடுவாங்க” என்ற பதிலோடு தோட்டத்திற்கு சென்றிருந்த சக்தி வீட்டிற்குள் வந்தான்.
நேராக தங்கையின் அருகில் சென்று அமர்ந்தவன், அவளை தோளோடு சேர்த்து இறுக்கி அணைத்தான்.
“கோபமெல்லாம் என் மேலதான் போல” என்ற கதிரை பார்த்து சக்தி சிரிக்க, கதிருக்கு அதிசயமாக இருந்தது.
“கோபம் போயிடுச்சு போலவே” என்ற கதிரிடம், “பகையோடு சுத்திட்டு திரிஞ்ச இவங்களே ஒண்ணு கூடிட்டாங்க… இதுல என்ன பகைன்னு தெரியாத நாம ஏன் மொறைச்சிட்டு நிக்கணும்” என்ற சக்தி கதிருடன் நட்பு கரம் நீட்டினான்.
“இது அந்தர்பல்ட்டிடா” என்ற சசி
“மொறைக்காதே நானே வாயை மூடிக்கிறேன்” எனக்கூறி சக்தியை மேலும் சீண்டினான்.
“வெற்றியும் இருந்தால் நல்லாயிருக்கும்” என்று கதிர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பஞ்சு பாட்டி “அமரி காணலையே” என்றார்.
“புள்ளை அது சாமனையெல்லாம் அறையில அடுக்கி வச்சிட்டு வாறேன்னு நீங்க வாறதுக்கு கொஞ்சம் முன்னதான் அறைக்கு போச்சுது” என்று செண்பகம் பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே நல்லு சசியை அமரியை அழைத்துவர அனுப்பினார்.
“உள்ளே வரலாமா?” அறைக்கு வெளியில் சசியின் குரல் கேட்க, அதுவரை தான் பார்த்துக் கொண்டிருந்த காமிராவை அறையிலிருக்கும் சிறு மேசை மீது வைத்த அமரி, “உள்ள வா சசி” என்றாள்.
“எப்படி நாந்தான்னு கண்டுபிடிச்ச?” அரிய பெரும் கேள்வியை வினவினான் சசி.
“இதுக்கு தனியா படிச்சிட்டா வரணும், தகர டப்பாவை உருட்டி விட்ட மாதிரி இருக்க உன் குரலுதான் நீன்னு சொல்லுச்சு” என்றவளை வலிக்காது தலையில் கொட்டியவன்…
“உன் குடும்பம் வந்திருக்கு” என்க,
அவனை குனிய வைத்து நன்கு மொத்தினாள்.
அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றி வந்திருந்தவர்களிடம் வரவேற்கும் விதமாக தலையசைத்தவன் உடை மாற்றி வருவதாகச் சொல்லி தனது அறைக்கு விரைந்தான்.
“ஏய் வலிக்குது, இப்போ எதுக்கு இப்படி மொத்துற” பாவம் போல் மூஞ்சியை வைத்துக் கேட்டான் சசி.
“இப்போ, என்ன சொன்ன?” என்று வினவினாள்.
“உன் தாத்தா, அப்பத்தா, அப்பா, அம்மா எல்லாம் வந்திருக்காங்க” என்றவன் அவளின் மொறைப்பை கண்டு எங்கு மீண்டும் குனிய வைத்து மொத்துவாளோ என்கிற எண்ணத்தில் அறைக்கு வெளியில் ஓடியவனை,
“உன் குடும்பம் இல்லை, நம்ம குடும்பம்” என்றபடி துரத்திச் சென்றவள் எதிரே வந்த வெற்றியின் மீது மோதி “அய்யோ” என்ற அலறளுடன் கீழே விழ, அவளைத் தன் வலிய கரங்களால் தாங்கியிருந்தான் வெற்றி.
அமரியின் சத்தம் கேட்டு திரும்பி வந்த சசி… அவர்களின் நிலைக்கண்டு புன்னகைத்துக் கொண்டான்.
பயத்தில் வெற்றியின் மார்பு பகுதியை இறுக்கி பிடித்திருந்த அமரி தான் விழவில்லை என்பதை உணர்ந்து கண்களை திறக்க, தன்னை தாங்கியிருந்த வெற்றியை இமைக்கவும் மறந்து பார்த்திருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பு வெற்றியின் அறையில் அவன் பொக்கிடமாக சேமித்த ரகசியங்களை கண்டு கொண்டதால் அவன் அவள் மீது கொண்ட நேசத்தின் ஆழத்தை உணர்ந்திருந்தவள் வெற்றியை பார்த்து ஒற்றைக் கண்ணடிக்க, சசியின் கணைப்பு சத்தம் இருவரையும் விலகச் செய்தது.
“கரடி” அமரி முணுமுணுத்தாள்.
“நீ முனகிறது எனக்கு கேட்டுச்சு.” சசி பொய் கோபத்துடன் கூறினான்.
“உனக்கு கேக்கணுந்தான் சொன்னது” என்றவள், “சரி வா போலாம்” என சசியின் கைபிடித்து இழுத்தாள்.
“ஓடாம படியில பார்த்து இறங்கு” என்ற வெற்றி அமரி தன்னை பார்க்கின்றாளா என்பதை கூட கவனியாது அறைக்குள் நுழைந்துவிட்டான்.
அவனின் அக்கறை அமரிக்கு இதமாகவே இருந்தது.
“அக்கறையெல்லாம் பொஞ்சாதி மேலதான் போல” என்று சசி உதடு பிதுக்க,
“உனக்கு ஏன் பொறாமை” எனக் கேட்டு அவனின் முதுகில் ஒரு அடி போட்டாள் அமரி.
அவர்களின் பேச்சினை காதில் வாங்கிய வெற்றி, “வீட்டில் எல்லாரோடும் செட்டாகிட்டா(ள்) போலவே” என்று நினைக்க, ‘உன்னோட செட்டாகலன்னு உனக்கு வருத்தமோ’ என அவனின் மனம் கேள்வி கேட்டது.
“நீ கேட்பது உண்மையாக் கூட இருக்கலாம்” என்று பதில் வழங்கியவன்,
மெத்தையில் அமர்ந்து மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றினான். அவள் கண்ணடித்ததை நினைத்து பார்த்தவன் முகம் மீண்டும் மீண்டும் புன்னகையை தத்தெடுத்தது.
‘தைரியமா கண்ணடிக்கிற அளவுக்கு வந்திருக்கா(ள்)ன்னா, கேடி வேலை என்னவோ பார்த்திருக்கிறாள்.’ சரியாக கணித்தான் அந்த காவ(த)லன்.
‘எப்பவும் போலீசாவே இருக்கியே வெற்றி.’ மனம் கொட்டியது அவனை.
உடை மாற்ற எழுந்தவன் அறையின் மாற்றத்தை அப்போதுதான் கவனித்தான்.
அவன் பயன்படுத்தும் பொருட்களுக்கு அருகில் அவனது எழிலின் பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
வார்ட்ரோப்பில் அவனது உடைகளுக்கு அருகில் அவளது உடைகள் நேர்த்தியாக தொங்கிக் கொண்டும், அடிக்கியும் வைக்கப்பட்டிருந்தன. அவன் மீது அவனின் எழில் ஒட்டி உரசுவதைப்போல் அவனுள் ஒரு மாயம்.
அவனது நாட்குறிப்பேடும், காமிராவும் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. அதன் மாற்றத்திலேயே வெற்றிக்கு அமரியின் செயலுக்கான காரணம் விளங்கிற்று.
மேசையில் வீற்றிருந்த நாட்குறிப்பேட்டின் மீது ஒற்றை ரோஜாவும், குறிப்பேட்டின் ஏதோவொரு பக்கத்தில் புத்தகக் குறியீடு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது.
அது வெற்றிக்கு ஏதோவொரு செய்தியை தாங்கி நின்றது.
வெற்றியின் கால்கள் அவனறியாது மேசை நோக்கி நகர்ந்தது.
வெற்றி நாட்குறிப்பேட்டை எடுக்க கை நீட்டும் போது,
“வெற்றி பெரியப்பாரு உங்களை சீக்கிரம் வர சொன்னாரு” என்ற சக்தியின் குரல் அவனது முதுகுக்கு பின்னால் ஒலிக்க வெற்றியின் செயல் தடைபட்டது.
சக்தி செல்லாது அங்கேயே நிற்கவும்,
“என்னடா” என்றான் வெற்றி.
“பெரியப்பாரு கையோடு கூட்டியாற சொன்னாங்க” என்ற சக்தியிடம் வெற்றி ஏதோ சொல்ல வர, அமரி அறை வாயிலில் வந்து நின்றாள்.
அவளை கண்டதும் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் வெற்றி.
“வழிய விடுங்க கொழுந்தனாரே” என்ற அமரியின் சத்தத்தில் பதறி திரும்பிய சக்தி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
சிறு பை(bag) ஒன்றை எடுத்தவள் இரண்டு நாட்களுக்குத் தேவையான வெற்றியின் உடைகளை மற்றும் அவன் உபயோகப்படுத்தும் சீப்பு முதல்கொண்டு அதில் எடுத்து வைத்தாள்.
பார்த்திருந்த சக்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இதுங்களுக்குள்ள ஏற்கனவே என்னமோ இருந்திருக்கும் போலயே’ என நினைத்தான்.
“மனசுக்கு புடிச்ச ஒருத்தர புரிஞ்சிக்க தெரிஞ்சிக்க ஒரு நிமிடமே என்னை பொறுத்தவரை அதிகந்தான் கொழுந்தனாரே” என்ற அமரியின் பதிலுக்கு பின்னரே மனதில் சொல்வதாக நினைத்து வாய்விட்டு சொல்லியது சக்திக்கு புரிந்தது.
அப்போது அவன் முகத்தை பார்க்க அமரிக்கு சிரிப்பு பீறிட்டது. வந்த சிரிப்பை வாய்க்குள்ளே புதைத்தவள் மேசையை பார்க்க, அதிலிருந்த குறிப்பேட்டை இன்னும் வெற்றி பார்க்கவில்லை என்றதும் முகம் சுருங்கினாள்.
குளியலறையில் இருந்து வெளிவந்த வெற்றி அமரியின் பார்வை படிந்திருந்த இடத்தையும், அவளின் முகச் சுருக்கத்தையும் கவனித்து, “நீ இன்னும் போகலையாடா” என சக்தியை கேட்க…
“நீயும் வா” என்று, வெற்றிக்கு அவ்வீட்டில் மேலிருந்து கீழ் செல்ல வழி தெரியாததைப்போல் கை பிடித்து அழைத்துச் சென்றான்.
“நந்தி… நந்தி…” என்ற அவளின் வார்த்தைகள் இருவருக்குமே தெளிவாகக் கேட்டது. அதில் வெற்றியின் முகம் புன்னகை பூச, சக்தியின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததைப்போல் ஆகியது.
“வந்ததிலிருந்தே அவ(ள்)கிட்ட நான் மொத்தமா டேமேஜ் ஆகிட்டே இருக்கேன் வெற்றி” என்ற சக்தியை பார்த்து,
“விடுடா உன் அண்ணிதானே” என்று மனைவிக்கு துணை நின்றான் வெற்றி.
“ஒரே நாளில் இதுலாம் ஓவர் வெற்றி” என்றான் சக்தி.
“வாய்யா… இன்னைக்கே நாள் நல்லாயிருக்குன்னு மறு வீட்டுக்கு உன்னையும் அமரியையும் கூட்டிட்டு போலான்னு சொல்லுறாங்க” என்று செண்பகம் பாட்டி வெற்றியிடம் சொல்ல,
“ஆமாம் மாப்பிள்ளை, இன்னைக்கே வந்தால் நல்லாயிருக்கும் பொறவு திருவிழா அது இதுன்னு தாமதமாகிப்போகும்” என்று தங்கவேலு வெற்றியின் சம்மதத்தை எதிர்பார்த்து பேசினார்.
மறுக்கும் விதமாக வேலையை காரணம் காட்டி வெற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கையில் பையுடன் வந்து நின்ற அமரியை கண்டதும்… மேலும் மறுத்து பேசாது தங்கவேலு வீட்டிற்கு செல்ல சம்மதம் வழங்கினான்.
நல்லுவிற்கு மட்டுமல்லாது அவனது குடும்பத்தார் அனைவருக்குமே அவனின் உடனடி சம்மதம் ஆச்சரியமாகவே இருந்தது.
அந்த நொடி “எங்கு மகனின் விருப்பத்தையும் மீறி அவனுக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்துவிட்டோமோ” என்கிற நல்லுவின் மனக்கவலை அகன்றது.
“நமக்குத் தெரியாம இவங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்குடா.” வழக்கம்போல் சசி சக்தியின் காதை கடித்தான்.
“இதையேதான் மேல நானும் நினைத்தேன்” என்று சக்தியும் கூறினான்.
“நீங்க நினைத்தது ஒருவகையில் உண்மையாகக் கூட இருக்கலாம்” எனக்கூறி இருவருக்கும் அதிர்வை கொடுத்தாள் அமரி.
“நீ சொல்லுறது விளங்கலயே” என சசி சொல்ல,
“நல்ல நேரம் போறதுக்குள்ள புருஷன் கூட மொத முறையா அப்பன் வீட்டுக்கு சந்தோஷமா போயிட்டுவாத்தா” என்று வாழ்த்தினார் செண்பகம் பாட்டி.
அவரைத் தொடர்ந்து பெரியவர்கள் அனைவரும் தங்கவேலு குடும்பத்துடன் வெற்றி அமரியை வழியனுப்பி வைக்க ஆயத்தமாக,
“அப்புறம் சொல்லுறேன்” என சசியிடம் கூறிய அமரி வெற்றியின் அருகில் சென்று நின்றாள்.
“எனக்கு உடுப்பு எடுத்துட்டு வந்துடுறேன்” என்று நகரப்போன வெற்றியின் கையினை தன் கையோடு இறுக பற்றிய அமரி,
“அதெல்லாம் எடுத்துக்கிட்டேன்” என்றாள்.
அதில் அமரியை மெச்சும் பார்வை பார்த்த வெற்றி,
“கட்டிகிட்டவ(ன்)ங்கிறதால இதெல்லாம் செய்யணுன்னு கடமையை சரியா செய்றீங்களாக்கும்” என்க,
அவனை வெட்டும் பார்வை பார்த்தவள், “எல்லாத்தையும் கடமைங்கிற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காதீங்க காவலரே” என்று அவனுக்கு கொட்டு வைத்தாள்.
தங்கவேலு குடும்பம் வெற்றி மற்றும் அமரியை அழைத்துக்கொண்டு புறப்படும் நேரம்,
“புள்ள வாயும் வயிருமா இருக்கா(ள்), மாப்பிள்ளையையும் விட்டுட்டு போனால்… ரெண்டு நாளுக்கு பொறவு அனுப்பி வைக்குதோம்.” இந்நிலையில் மகளை கூடவே வைத்துக்கொள்ளும் ஆசையில் ஜானகி கேட்டார்.
வாணியும் தன் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஏக்கத்தோடு பஞ்சு பாட்டி மற்றும் கதிரை நோக்கினாள்.
அவளின் நிலை உணர்ந்த பஞ்சு,
“பகையை காரணம் காட்டி நீயுந்தான் மாமியார் வீட்டுல தங்கனதில்லையே, இப்போ இருந்துட்டு வாடா” என்று சம்மதம் வழங்க… உடனடியாக அதனை மறுத்தான் கதிர்.
கதிருக்கும் மனைவியின் ஏக்கம் புரியத்தான் செய்தது. ஆனால் அவனுக்கு வாணியை விட வெற்றி முக்கியமாயிற்றே.
“இப்போதான் மொத தடவையா என் மச்சான் அங்க வந்து எங்க வீட்டுல தங்கப் போறான்… அப்போ, கூட நானில்லாமல் எப்படி” என்ற கதிர், “நீ வேணுன்னா இங்க இருந்துட்டு வா” என வாணியிடம் கூறினான்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து தங்கிக்கலாம்… இப்போ உங்க மச்சான் கூடவே இருங்க” என்று தோள் வெட்டிய வாணி கதிரிடம் வெளிப்படையாகவே தனது கோபத்தைக் காட்டினாள்.
“அடேய் சக்தி இவன்(கதிர்) வாணியை விரும்புறானா இல்லை வெற்றியையா” என்ற சசியிடம் சக்தி பதில் பேசும் முன்,
“நான் வேணுனாக்கா என் வீட்டுக்காரர்கிட்ட கேட்டு சொல்லட்டும்மா?” என்ற அமரியை பார்த்து இரு கரம் கூப்பிய சசி வேண்டாமென்று பாவமாக தலையாட்டினான்.
அவர்களுக்குள் நடப்பதை கவனியாது போல் கவனித்துக் கொண்டிருந்த வெற்றிக்கு வந்த சிரிப்பை அனைவருக்கும் முன் அடக்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.
“வாணி மாப்பிள்ளைக்கிட்ட இப்படிதான் நடந்துக்குவாங்களா?” தந்தையாய் சேது மகளை கடிந்தார்.
“உங்க மாப்பிள்ளைக்கு கட்டின மனைவி என்னைய விட அவளோட அண்ணந்தான் முக்கியம்” என பதில் சொல்லிய வாணியிடத்தில் கணவன் மற்றும் சகோதரனுக்கு இடையேயான நட்பில் கர்வம் இருந்ததே தவிர பொறாமை இல்லை.
“அதுதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமே” என்ற நல்லு “நல்ல நேரத்துல கூட்டிட்டு கிளம்புங்க” என துரிதப்படுத்தினார்.
“இந்தா இருக்கு நாலு தெரு தள்ளி, எதுக்கு அவசரம், பார்த்து சூதானமா போயிட்டு வாங்க” என்ற செண்பகம் இளம் ஜோடி நால்வருக்கும் திருநீறு பூசி வழியனுப்பினார்.
கதிரின் வண்டியில் வாணி ஏறிக்கொள்ள, பெரியவர்கள் மாட்டு வண்டியில் சென்று அமர்ந்தனர்.
“உங்க வண்டி எங்க?” என்ற அமரியின் கேள்விக்கு, “அது ஸ்டேஷனிலே இருக்கு” என பதில் வழங்கிய வெற்றி “வா நாமும் மாட்டு வண்டியிலேயே போலாம்” என்க,
“காவலருக்கு பொண்டாட்டியை பைக்ல ஜோடிப்போட்டு மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக ஆசையில்லையோ” என்று இழுத்த அமரி வெற்றியை “நானறிவேன் உன்னை” எனும் விதமாக பார்க்க…
“கேடி எனக்குத் தெரியாம என் அறையை குடைஞ்சு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பார்க்கிற பார்வையை பாரு” என மனதில் செல்லமாக வைதவன் வீட்டிற்குள் சென்று சசியின் இருசக்கர வாகனத்தின் சாவியை கொண்டு வந்தான்.
எவ்வித தயக்கமுமின்றி வெற்றியை உரசியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தவள், உரிமையாய் அவனது தோளின் மீது கை வைத்து “போலாம்” என்றாள்.
வீட்டு வாயிலை கடந்து அடுத்த தெரு ஆரம்பிக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினான்.
அமரியின் கையை தனது தோளிலிருந்து எடுத்தவன், “தள்ளி உட்காரு, ஊருக்குள்ள எனக்கும் என் பதவிக்கும் தனி மரியாதை இருக்கு” என வெற்றி சொல்ல…
அவனை சீண்டும் விதமாக மேலும் நெருங்கி அமர்ந்தவள் கணவனின் இடையோடு கை வைத்து அணைத்தவாறு “போலாம் காவலரே, கட்டுனவங்க கூட இப்படி யாரும் போகக்கூடாதுன்னு யாராவது கேட்டாக்கா… அந்த நொடியே நான் தள்ளி உட்கார்ந்துக்கிறேங்க” எனக் கூறி வம்பு செய்தாள்.
அவள் செய்யும் அடாவடி சேட்டையை ரசித்தாலும், வெளியில் முறப்பையேக் காட்டினான்.
“நீங்க மனசுக்குள்ள சந்தோஷப்படுறது எனக்கு நல்லாவே தெரியுது” என்று சொல்லிய அமரி வெற்றியின் முதுகுக்கு பின்னால் சத்தமின்றி சிரிக்க, அவனின் அகத்தோடு சேர்ந்து முகமும் மகிழ்வினை பிரதிபலித்தது.
எத்தனை வருட ஏக்கம். அவனின் எழிலோடு இணைந்து வாழ்வது.
இன்று நிஜத்தில் நடக்கும்போது நடப்பவை யாவும் வெற்றிக்கு கனவு போல் இருந்தது.
வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது,
“காரில் இருக்குமே மியூசிக் பிளேயர் அந்த மாதிரி பைக்கில் இல்லையா காவலரே” என்று கேட்டவள்…
“போவோமா ஊர்கோலம்… இது பழைய பாட்டாச்சே” எனக் கூறியவள் “கதைப்போமா…” என பாடத் தொடங்க, சட்டென்று வண்டியை நிறுத்தியவன் அமரியை ஏன் எனும் விதமாக திரும்பி பார்த்தான்.
“வீட்டிலிருந்து பத்தடி வரல அதுக்குள்ள ரெண்டு இடத்துல வண்டியை நிறுத்தியாச்சு, டவுனுல மாதிரி நெருங்க வீடுகள் இல்லை… இல்லாட்டி எல்லோரும் நம்மைதான் வேடிக்கை பார்த்திருப்பாங்க” என்றவள் “உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா தெரியாதா, இல்லாட்டி இறங்குங்க நான் ஓட்டுறேன்” எனக்கூறி வண்டியிலிருந்து கீழே குதித்திருந்தாள்.
வெற்றியும் இறங்கி வண்டியை அவள் கைகளில் கொடுக்க, அமர செல்கையில் தான் கவனித்தாள் சேலை அணிந்திருப்பதை, ‘இதுல எப்படி வண்டி ஓட்டுவது… இப்போ ஓட்டுல சொன்னாக்கா அவமானமா போயிடுமே’ என அமரி யோசிக்க அவளின் முகத்தைக் கண்டு வெற்றி சத்தமாக சிரித்தான்.
அமரி முறைப்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவன், “சீக்கிரம் எடு, அவங்கலாம் இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பாங்க” என்று அவளின் நிலை அறியாதவன் போல் சாதாரணமாகக் கூறினான்.
வெற்றியை உள்ளுக்குள் தாளித்து எடுத்தவள், “என் ரேஞ்சுக்கு இந்த வண்டியெல்லாம் ஓட்டக்கூடாது, ஸ்போர்ட்ஸ் பைக் இல்லாட்டி உங்களுடைய ராயல் என்பீல்டு அந்த மாதிரி ஓட்டினாதான் கெத்தா இருக்கும்” என்றவள் வெற்றியின் முகம் கூட பாராது வண்டியை அவனிடமே கொடுத்தவள் பின்புறம் அமர்ந்துகொண்டாள்.
அதன் பிறகு வீடு போய் சேரும் வரை தன் வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டாள்.
வெற்றி தான் அவள் ஏதேனும் பேசமாட்டாளா என தவித்துப் போனான்.
_________________________
“வாடா நாச்சி, ஏதும் செய்தியா… இப்போ எந்த பிரிவுக்குள்ள வேலை பாக்கிற?”
சிதம்பரம் தன்னை பார்க்க வந்த காவலர் நாச்சிமுத்துவிடம் அவர் வருகைக்கான காரணத்தைக் கேட்டார்.
நாச்சி சிதம்பரத்தை சுற்றி நிற்கும் அடியாட்களை காரணமாக ஒரு பார்வை பார்த்தார். அதன் பொருளுணர்ந்த சிதம்பரமும் தன்னுடைய அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
“இப்போ சொல்லு விடயம் ரொம்ப பெருசோ…?”
“ஐயா நேத்து நீங்க போன் பண்ண அப்புறம் தாங்க இது நடந்துச்சு” என்ற நாச்சி, ராம் வெற்றி சொல்லியதாக மூன்று தடியர்களை இழுத்து வந்ததையும் அவர்கள் தனியாக அடைத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் கூறினார்.
காத்தவராயன் யாரென்று தெரியாததாலும், அவர் வந்ததற்கான காரணத்தை அறியாததாலும் அவரை பற்றி ஏதும் சொல்லவில்லை.
வெளியிலிருந்த தடியர்களில் ஒருவனை அழைத்த சிதம்பரம், அவனிடம் காணாமல் போனதாக அவர்களால் தேடப்படும் மூன்று தடியர்களின் புகைப்படத்தை நாச்சியிடம் காட்டி வெற்றி பிடித்து வைத்திருப்பது அவர்கள் தானா என்பதை உறுதி செய்து கொண்ட சிதம்பரம் அடுத்து தனது திட்டத்தை தீட்டினார்.
“உன்னோட தகவலுக்கு ரொம்ப நன்றி” என்ற சிதம்பரம் கத்தை பணத்தை நாச்சியிடம் தூக்கிப்போட்டார்.
பணத்தினை பவ்யமாக வாங்கிக்கொண்ட நாச்சி, “அவனுங்களுட்ட இருந்து வாக்குமூலம் வாங்கிட்டாருன்னு நினைக்கிறேனுங்க, அந்த மூர்த்தி பேப்பரும் பேனாவுமா அவனுங்க அடைத்து வைக்கப்பட்ட அறைக்கு போனான்” என்றுக் கூறி வெளியேறினார்.
“அந்த காத்தவராயன் கண்ணுல சிக்குனானாடா?”
“ஊர் முழுக்க தேடியாச்சுங்க, ஆள் எங்க பதுங்கனான்னு தெரியலயே.”
சிதம்பரத்தின் கேள்விக்கு ஒருவன் பதிலளிக்க, அவனது கன்னத்தில் அறைந்தவர்… “இதை சொல்லுறதுக்குதான் கறி சோத்தோட சேத்து சாராயமும் ஊத்தி உங்களை வளக்குறனா, வந்துட்டு போன போலீஸ்காரன் சொல்லுறதை பாக்கும்போது அந்த பய வெற்றி என்னைய நெருங்கிட்டான் போலத் தெரியுது… இதுல அந்த காத்தவராயனும் சிக்குனாக்கா அம்புட்டுதான், மொத்தமும் காலி” என்று சினந்தார்.
“மொத அவன் கதையை முடிக்க பாருங்கடா, அந்த வெற்றி புடிச்சி வச்சிருக்க நம்ம ஆளுவள நான் பார்த்துகிறேன்” எனக்கூறி மனதிற்குள் பல கணக்குகள் போட்டார் சிதம்பரம்.
______________________
“இதுதான் உன் அறையா?” எனக் கேட்டுக்கொண்டே அமரிக்கு பின்னால் அவளின் அறைக்குள் நுழைந்த வெற்றி அவ்வறையின் ஒவ்வொரு இடுக்கையும் தன் மனதில் ஓவியமாய் பதிந்தான்.
தன்னவள் வாசம் செய்த இடம் என்ற நினைவோடு அவ்வறையில் சுற்றித் திரியும் காற்றை ஆழ்ந்து உள்ளிழுத்தான்.
ஒரு கணம் இமை மூடி அங்கு தோன்றும் இதத்தை அனுபவித்தான்.
“காவலர் ரசிக்கிறத பார்த்தா நம்ம மேல மொத்த உயிரையும் வச்சிருப்பாரு போலவே” என்று அவன் முகம் பார்த்து முணங்கிய அமரி, வெற்றி கண் திறந்ததும் சட்டென்று வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
அமரி திரும்பிய வேகத்தில் அவளின் நீண்ட பின்னல் வெற்றியின் மார்பில் மோதி செல்ல, அவனது இதயம் தாளம் தப்பி துடித்தது. அவளின் கற்றை குழல் மோதிய இதயப்பகுதியை மெல்ல நீவி விட்டான்.
‘பெரிய பெரிய ரவுடிலாம் பார்த்தாலே பயந்து நடுங்குற போலீஸ் வெற்றி நீ, ஒரு சின்ன பொண்ணோட அசைவுக்கெல்லாம் உருகிட்டு நிக்கிற,’ நேரங்காலமின்றி அவனின் மனசாட்சி கேலி செய்ய அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் வெற்றி இல்லவே இல்லை.
“உட்காருங்க, ஏதாவது வேணுன்னா கேளுங்க… உங்கள மாதிரி மொத நாளே வேலையிருக்குன்னு அக்கறையில்லாம அப்படியே விட்டுட்டு போயிடமாட்டேன்” எனகூறிக் கொண்டே திரும்பியவள் மூச்சுவிடவும் மறந்து சிலையென நின்றாள்.
அவளை உரசி விடும் நெருக்கத்தில் வெற்றி நின்றிருந்தான். படபடக்கும் அவளின் இமைகளில் முத்தமிடத் தூண்டும் மனதினை அடக்கியவன்,
‘காதலை சொல்லிய பிறகே எல்லாம்’ என்ற எண்ணம் மனதில் உதிக்க, பின்னந்தலையை அழுந்த கோதியவனாய் அவளிடமிருந்து விலகி மெத்தையில் சென்று அமர்ந்தான்.
வெற்றி நகர்ந்த பிறகே தடைப்பட்ட சுவாசம் அமரிக்கு சீரானது.
அந்நிலையிலும் அவன் பின்னந்தலையை கோதும் அழகினை அவள் ரசிக்கத் தவறவில்லை. வெற்றி தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவள் சன்னலோரம் சென்று அவனுக்கு முதுகுக் காட்டி நின்றுவிட்டாள்.
வெற்றியின் வீட்டில் கூட வெற்றியோடு அமரி சில நிமிடங்கள் கூட ஒன்றாக தனியாக இருக்க வாய்ப்பு அமையவில்லை. முதல் முறை அவள் சென்றபோது வெற்றி அலுவலகம் சென்று விட்டான். இரண்டாவது முறை உடன் சக்தி இருந்தான். ஆதலால் அப்போதெல்லாம் ஆட்கொள்ளாத சிறு நடுக்கம் இப்போது வெற்றியுடன் ஒரே அறையில் தனித்திருக்கையில் அமரிக்கு ஏற்பட்டது.
‘வெற்றி தன்னை நேசிக்கின்றான்’ என்பது தெரிந்த பிறகு, அதுவும் வெற்றியின் அறையில் அவள் கண்ட அனைத்தும்… அவளுள் வெறும் ஈர்ப்பாக இருந்த, அவன் மீதான அவளின் எண்ணத்தை… காலதாமதமின்றி காதலாக உருவகம் பெற வைத்தது. அதனால் விளைந்ததே அவளின் உரிமையான பேச்சு மற்றும் செயல்கள் அனைத்தும்.
அதுமட்டுமில்லாது அவனுக்கான காதலையும் எப்போதோ அவனிடத்தில் அவள் சொல்லிவிட்டாள்.
அவளின் எழுத்து வடிவ வார்த்தைகளை வெற்றி அறிந்திடும் நேரம் அவன் வசமே.
வரும் வழியிலெல்லாம் சேட்டை செய்து கொண்டு வந்தவள் இப்போது அமைதியாக சேலை தலைப்பின் நுனியை திருகியவாறு தலை கவிழ்ந்து சன்னலோரம் நின்றிருக்கும் காட்சி வெற்றிக்கு கவிதையாய் தோன்ற தனது எழிலை ரசித்தவனாய் மெத்தையில் படுத்து விட்டான்.
பார்க்கும் காட்சி முழுக்க அவனது எழிலே இதய பெட்டகத்தில் குடிபுக, வேலையின் அலைச்சலில் களைத்து போயிருந்த வெற்றி உறங்கியும் போனான்.
நீண்ட நேரம் நின்றிருந்தவள் காலில் வலியெடுக்க அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
உறங்கிக் கொண்டிருக்கும் வெற்றியினிடத்தில் அவளது பார்வை நிலைத்தது. அவனின் முன் உச்சி கேசத்தை கலைத்து விட அவளின் விரல்கள் ஏக்கம் கொள்ள, அவளின் இதழ்கள் வெட்கத்தில் அழகாய் விரிந்தன.
“என் மேல உனக்கென்ன அவ்ளோ காதல்?!”
தூக்கத்தில் இருப்பவனிடம் வாய்விட்டு கேட்டவளின் மனம் வெற்றியின் அறைக்கு பயணமாகியிருந்தது.
“உன்னோட உடைமையெல்லாம் உனக்கு தோதுபடுற மாதிரி அறையில பிரிச்சி வசிக்கத்தா, வெற்றி எதும் சொல்ல மாட்டான்.”
செண்பகம் பாட்டி அவ்வாறு சொல்லியதும், அறைக்குள் சென்ற வேகத்தில் தன்னுடைய உடைகள் மற்றும் பிற பொருட்களை அடுக்கி முடித்தவள் நிமிர்கையில் வெற்றியின் காமிரா அவளின் கண்ணில் பட்டது.
“அன்னைக்கு ராத்திரி இந்த காமிராதானே வச்சிருந்தாங்க, ராவுல அப்படி என்னத்த படம் பிடிச்சாங்க பாப்போம்” என்று தனக்குத்தானே பேசியவள் அதனை எடுத்து பார்க்கையில், காமிராவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களும் அவளே. ஆச்சரியத்தில் அவளின் விழிகள் அகல விரிந்தன.
அதிலிருக்கும் நிறைய படங்கள் எங்கு எப்போதென்று அவளுக்கே நினைவில் இல்லை. கிட்டத்தட்ட எட்டு வருட புகைப்படங்கள் அவனால் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் அமரியின் சிறு வயது முதல் இப்போது அவளிருக்கும் தோற்றம் வரையிலான படங்கள் சேமிக்கப்பட்டு தனி கோப்பாக பதிவு செய்திருந்தான்.
“காவல்காரனா இருந்துட்டு ஒரு பொண்ண திருட்டுத்தனமா போட்டோ எடுக்க எவ்ளோ தெனவு இருக்கணும்” என்று அவளின் வாய் அவனை வறுத்தெடுத்தாலும், அவளுக்கு மனம் குளிரத்தான் செய்தது.
காமிராவை இருந்த இடத்திலேயே வைக்கும் போதுதான், அதற்கு அடியிலிருந்த நாட்குறிப்பேடு தென்பட்டது. ஆர்வக்கோளாரில் அதனை எடுத்து விட்டாலும் பிரித்து பார்க்க தயக்கம் ஏற்பட, அதன் அட்டையில் ஒட்டியிருந்த ரத்த நிற இதய வடிவமும்… இதயத்தின் நடுவில் எழுதியிருந்த எழில் என்கிற பெயரும் அவளை ஏதோ செய்ய அதனை பிரித்து படிக்கத் தொடங்கினாள்.
முதல் பக்கத்திலேயே, எழில் என்கிற பெயருக்கு சொந்தக்காரி தான்தான் என்பதை அறிந்து கொண்டாள்.
அருவிக்கரை பாறையில் சிரித்த முகமாய் அவளை முதன்முதலில் அவன் பார்த்தது முதல், தோட்டத்தில் அவள் மாடுகளோடு பேசியது… அவளை கிண்டல் செய்த பையனுக்கு அடிபட வேண்டுமென்று அவள் அம்மனிடம் வைத்த வேண்டுதல், திருவிழாவில் அவள் பஞ்சு மிட்டாய் சுவைத்தது… ஒருமுறை விடுதிக்கு செல்ல மாட்டேனென்று பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்தது… அவளின் கல்லூரி வாயிலில் தோழியிடம் சண்டை போட்டதென்று… அவன் அமரியை பார்த்தது முதல் அவளை ரசித்த இடங்கள் அனைத்தையும் காட்சிகளாய் எழுத்துக்களால் நிரப்பியிருந்தான்.
கதிரை வீட்டில் விடுவதற்கு வெற்றி சென்றிருந்த போது, அமரி மனம் வருந்தி பேசியதை எழுதியிருந்தவன்,
“என் எழிலை மணம் முடித்த பிறகு என் கைக்குள்ளே வச்சி மொத்த சந்தோஷத்தையும் அவளுக்கு அள்ளிக் கொடுக்கணும்” என்றதோடு எப்படியெல்லாம் அவளை பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அதில் எழுதியிருந்தான்.
“உனை ஆட்கொள்ளும் மொத்த தனிமையும் நானாகிட விருப்பமடி!”
என்ற இறுதி வரிகளோடு முடிவடைந்திருந்தது.
அதன் பின்னர் வழக்கில் அவன் தீவிரமாக இருந்ததால் அன்றைய நிகழ்விற்கு பிறகு எதுவும் அவனால் எழுதப்படவில்லை. ஆனால் அமரிக்கு அவனின் நேசம் புரிந்திட இதுவே போதுமானதாக இருந்தது.
அதனை படித்ததும் அவளின் கண்கள் குளம் கட்டியது. வெற்றியின் காதல் புரிந்த கணம், முதன் முதலில் அவனை பஞ்சாயத்தில் வைத்து ரசித்தது முதல் நேற்று மழையில், காட்டின் இருளில் அவனிடம் உணர்ந்த பாதுகாப்பு வரை மனதில் அலசியவளின் எண்ணம்… அவன் மீதான காதலாக மலர்ந்தது.
வெற்றி புரண்டு படுக்கும் அசைவில் நிஜம் உணர்ந்தவள் காற்றில் இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை தன் கணவனுக்கு வைத்தாள்.
உறங்கும் வெற்றியிடம் “வெளியிலதான் வெறப்பா இருக்க, ஆனால் உள்ளுக்குள்ள நீயொரு காதல் மன்னன் தான் காவலரே” என்றவள் சற்று யோசித்து “இரும்பு காவலன் இருதய காதலன்” எனக் கூறினாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
61
+1
2
+1
2
அமரி வெற்றியோட காதல தெரிஞ்சுகிட்டா.
வெற்றி எப்போ அமரியோட காதல தெரிஞ்சுக்க போகிறான்