Loading

காவ(த)லன் 19

“ஆத்தா, அதான் அந்த சட்டைக்காரனே உனக்கு சொந்தமாகிட்டானே! இன்னும் எதுக்கு அந்த சட்டையை கழட்டமா இறுக்கி பிடிச்சிட்டு உட்காந்திருக்க” என்று செண்பகம் பாட்டி சொல்ல,

அதுவரை நடப்பது எதுவும் புரியாது… கழுத்தில் வெற்றி கட்டிய தாலியை தலை கவிழ்ந்து பார்த்திருந்த அமரி

“நீ மாப்பிள்ளை கூட போம்மா” என்ற தாத்தா தங்கவேலுவின் வார்த்தைக்கு சிறு தலையாட்டாலுடன் வெற்றியுடன் இணைந்து, அவனது வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அடுத்து என்ன செய்வதென்று கூட அவளுக்குத் தெரியவில்லை. இந்த வீட்டில் எத்தனை பேர், அவர்களுடன் என்ன பேச வேண்டும், எப்படி அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற யோசனையோடு அந்த பெரிய வீட்டை கண்களால் சுற்றிக் கொண்டிருந்தவள் செண்பகம் பாட்டி சொல்லிய பிறகு தான், இன்னும் வெற்றியின் ஆடையை அணிந்திருக்கின்றோம் என்பதே அவளுக்கு நினைவிற்கு வந்தது.

அவள் அணிந்திருந்த வெற்றியின் ஆடையின் கழுத்து பகுதியை கையினால் பற்றி மெல்ல நுகர்ந்து பார்த்தவள், அது தந்த இதத்தில் (பாதுகாப்பு உணர்வில்) மெல்ல கண்களை மூடினாள். அடுத்த நொடி அவளின் மூடிய இமைகளுக்குள் வெற்றியின் முகம் தோன்ற மின்னலென விழி திறந்தவளின் இதயம் பட்டாம் பூச்சியாய் அடித்துக் கொண்டது.

வெற்றியே அவளை அணைத்திருப்பதை போல் உணர்ந்தவள் வேகமாக கழட்டியிருந்தாள்.

வெற்றியின் ஆடையை கழட்டிய பிறகு தான் அவளின் படபடப்பு அடங்கியது.

வெற்றியை பாரபட்சம் பார்க்காது சைட் அடித்தவள் தான்… ஆனால் அவனையே கணவனாக நினைக்கும் போது மனதில் சொல்ல முடியா உணர்வு தோன்றுவதை அவளால் பிரித்தறிய முடியவில்லை.

“எவ்வளவு நேரந்தான் மோட்டு வலையையே பார்த்திட்டு உட்காந்திருப்ப” என்ற ஜானகியின் குரலில் பதட்டத்துடன் எழுந்து நின்ற அமரியை பார்த்து,

“எதுக்கு இவ்வளவு பதட்டம், இது உன் வீடுத்தா” என வாஞ்சையுடன் கூறிய வெங்கடாசலம்… “உன் இஷ்டம் போல இருக்கலாம்” என்றார்.

அவருக்கு குறுநகை ஒன்றை பதிலாக கொடுத்தாளே தவிர வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

“இந்தாத்தா இந்த பழச்சாற குடி, அருவிக்கரையில நேரம் ஓடிடுச்சு… இனிதான் சமைக்கணும்” என அமரியிடம் ஒரு குவளையை நீட்டிய ஜானகி அடுக்கலைக்குள் நுழைய,

“விருந்து சாப்பாடு தயார் பண்ணு” என்று கூறிய செண்பகம், அமரியிடம்

“உனக்கு சமைக்கத் தெரியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு அவள் முழித்த முழியே அவருக்கான பதிலை சொல்லிவிட,
“காபி தண்ணியாவது போடத் தெரியுமா” என்க…

“ஆத்தா வந்த மொத நாளே ஏன் புள்ளைய பயமுறுத்துற” என்ற நல்லுவின் வார்த்தையில் அடுத்து அவர் எதுவும் பேசவில்லை.

“போம்மா போயி குளிச்சிட்டு வா, சாமி அறையில விளக்கேத்தனும்” என்று தாத்தா சொல்ல,

“மாத்து துணி எதுவுமில்லையே”  வார்த்தைக்கே வலித்து விடுமோ என்ற ரீதியில் அமரியின் குரல் வெளிவந்தது.

“பாத்துத்தா, வாய் வலிக்க போவுது” என்ற பாட்டி… “அதெல்லாம் உன் அண்ணன் கொண்டு வந்துட்டான், சுருக்க குளிச்சிட்டு வா” என்றவர் சசியை அழைத்து வெற்றியின் அறையை காட்ட சொன்னார்.

“அதுக்குள்ள ஒரே அறைக்குள்ள, அந்த புள்ளைக்கு நெருடலா இருக்காதா ஆத்தா” என்று சேது வினவ…

“இப்போதான் ஒன்னா இருக்கணும்… அவளுக்கு(அமரி) அவன்(வெற்றி) இருக்கான்னு தோணனும். நாம பரிவு காட்டி நம்ம கூட வச்சிக்கிட்டா அவ அவனோட பேசவே யோசிப்பா(ள்)… கட்டாயத்தால ஊர் வாய் மூட கட்டிக்கிட்டாலும் சரி, பெத்தவங்க பார்த்து வச்ச கல்யாணமானாலும் சரி தொடக்கத்துல வர புரிதல்… ஒருத்தர் ஒருத்தருக்கான நம்பிக்கை, வேறெப்ப வந்தாலும் சரியா அமையாதுடா” என்று தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பதிலளித்தார் செண்பகம்.

அமரியை அழைத்துச் சென்ற சசி, “இதுதான் அண்ணா அறை” எனக் காட்டிவிட்டு வாயிலோடு சென்று விட்டான்.

உள்ளே போவதா! எனத் தயங்கி நின்றவள் பேச்சுக்குரல் கேட்டு சன்னல் வழியே அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தாள்.

வெற்றி காக்கி உடையில் தயாராகிக் கொண்டிருக்க கதிர் பேசிக் கொண்டிருந்தான்.

“நம்ம குடும்பம் ஒன்னு சேருன்னு நான் நினைக்கவே இல்ல மச்சான், அதுவும் வாணிக்கும் எனக்கும் கல்யாணம் ஆன பிறகு சுத்தமா வாய்ப்பில்லைன்னு நினைச்சேன்” என்று கதிர் பேசிக்கொண்டே இருக்க வெற்றியிடத்தில் எந்தவொரும் எதிர்வினையும் இல்லை.

கண்ணாடிக்கு முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தவன்… கொக்கியில் மாட்டியிருந்த வண்டி சாவியை கையிலெடுத்து திரும்பினான். அவனின் முகம் வெறுமையாக இருந்தது.

“என்னாச்சுடா,” என்ற கதிர் “உன் காதலை சொல்லுறதுக்கு முன்னுக்க எதிர் பாரா வகையில் கல்யாணமாகிடுச்சேன்னு வருத்தப்படுறியா?” எனக் கேட்டான்.

வெற்றியின் பதில் மௌனம் ஒன்றே.
கதிர் சொல்லுவது அமரிக்கு புரியவில்லை.

‘இவர் யாரையோ காதலிச்சிருப்பாரு போல’ என நினைத்தவள் அடுத்து கதிர் பேசியதில் வெற்றி காதலிக்கும் பெண் தான்தான் என்பதை அறிந்து அதிர்வடைந்தாள்.

“இப்போ என்னடா நீ உன் காதலை சொல்லி, அவளும் உன்னை விரும்பி உங்க கல்யாணம் நடக்கணும் ஆசைப்பட்ட… அது நடக்கல, அவ்வளோதானடா” என்ற கதிர் அமைதி காக்க,

“காதல் இருந்தாதான்டா அந்த வாழ்க்கை நல்லாயிருக்கும்” எனக் கூறி வெற்றி நகர அவனின் கை பிடித்து நிறுத்திய கதிர்…

“பொஞ்சாதிகிட்ட காதலை சொல்ல கூடாதுன்னு ஏதாவது இருக்கா… ஒரு பொண்ணுகிட்ட நான் உன்னைய விரும்புறேன்னு சொல்லிடலாம்… ஆனால் கட்டுன பொண்டாட்டிகிட்ட அவ்வளவு சாதாரணமா சொல்லிட முடியாது… அதனால மூஞ்சிய இப்படி வச்சிக்காம, அமரியை உன் காதலை புரிஞ்சிக்க வை” என்று பெரிய விளக்கவுரையே ஆற்றிய கதிர்

“என்னை போயி இவ்ளோ பேச வச்சிட்டியே மச்சான்” என வெற்றியை கட்டிக்கொண்டு அழுவதை போல் நடித்தான்.

“இவங்க விரும்புற பொண்ணு நானா!?” என அதிர்ந்த அமரி உடல் முழுக்க சில்லென்று உணர்ந்தாள்.

இதுவரை இல்லாத ஒன்று அவள் இதயத்தை தட்டுவதை போன்ற சத்தம் அவளின் செவிகளில் நுழைந்தது.

‘நீ அவங்கல விரும்புலையா அமரி’ அவளின் மனசாட்சி கேட்ட கேள்விக்கு இல்லையென பட்டென்று மொழிந்தவள் சில நொடிகளுக்கு பிறகு,

“அவங்க நடந்து வந்தது கெத்தா, அப்புறம் மீசை முருக்குனது பாக்க நல்லாயிருந்துச்சு… நேத்து ராத்திரி அவங்க கூட இருந்தப்போ பாதுகாப்பா, இதோ கையில அவங்க உடுப்ப வச்சிருக்கப்போ கூட… யாருமே தெரியாத இந்த வீட்டுல எனக்கு துணையா இருக்காப்போல இருக்கு. அதுக்காக இது காதல் அப்படி இப்படின்னுலாம் சொல்ல முடியாது” என்று சிலிப்பியவளைக் கண்டு…

“உன்னிடம் என்னால் மல்லுகட்ட முடியாது” என அவளின் மனசாட்சி ஓடி மறைந்தது.

“போதும்டா இதான் சாக்குன்னு எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிட்டியா, இந்த விடயத்துல உனக்கு முன்னுக்க கல்யாணம் ஆகியிருந்தாலும் நான் உனக்கு சீனியர்டா… என் பொண்டாட்டிகிட்ட காதலை சொல்லி என்னை விரும்ப வைக்கிறது நாங்க பார்த்துக்கிறோம்…” என்று கதிரிடம் கூறியவன்,

‘எழிலும் என்னை விரும்புறான்னுதான் நினைக்கிறேன்’ என மனதில் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

வெற்றி அமைதியாக ஏதோ சிந்தனையில் உழல்வதை உணர்ந்த கதிர் அவனது தோள் தொட்டு “என்னடா” என்க, ஒன்றுமில்லையென களவு புன்னகையுடன் தலையசைத்தான்.

“எனக்கொரு முக்கியமான வேலையிருக்கு, போவோமா?” என்ற வெற்றி கதிருடன் சேர்ந்து வெளிவர அவர்களின் அரவம் உணர்ந்தவள் அப்போதுதான் அங்கு வந்ததைப்போல், அவனின் அறை எதுவென தேடிக்கொண்டிருப்பதைப் போன்று அத்தளத்தை சுற்றி நோட்டமிட்டாள்.

‘இவ(ள்) எப்போ வந்தான்னு தெரியலையே, நாங்க பேசனத கேட்டிருந்தா நல்லாயிருக்கும்’ என மனதில் நினைத்த கதிர்…
அமரியிடம் “இதுதான் வெற்றி அறை… இனி உன்னோட அறையும்” என்றான்.

வெற்றியை நேருக்கு நேர் பார்க்க முடியாது கதிரின் மீதே தன்னுடைய பார்வையை நிலைத்திருந்தவள் மீண்டும் வெற்றி அறைக்குள் சென்றதும் உள்ளே செல்ல தடுமாறினாள்.

மூன்றாம் நபராக அவனிடம் வாயடித்தவள், கணவனாக அவனிடம் பேச தயக்கம் கொண்டாள்.

“இனி உன்னோட வாழ்க்கை வெற்றி தான்டா… அவன் ரொம்ப நல்லவன், நீ எதையும் யோசித்து பயப்படாத… எங்களை விடவே அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்று தங்கையின் தலையை தடவியவாறு கூறிய கதிர் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வதாகவும் மாலை அப்பா அம்மா வந்து மறு வீட்டுக்கு உங்களை அழைக்க வருவாங்க எனக் கூறியவன் அவளை வெற்றியின் அறைக்குள் தள்ளிவிட்டே அங்கிருந்து புறப்பட்டான்.

நல்லுவிடம் சொல்லிக்கொண்டு அவன் வெளியேறும் சமயம்,

“இனி எனக்கு பயந்து மரத்து மேல தவ்விலாம் வர வேண்டாம், வாசல் வழியாவே வரலாம்” என நல்லு சொல்ல மகிழ்வுடன் அங்கிருந்து சென்றான் கதிர்.

தனது அறைக்குள் முதல் முறையாக உள்ளே வரும் தன்னுடைய எழிலை காதல் பொங்க பார்த்த வெற்றி…
“தரையில ஏதும் போட்டுட்டியா?” எனக் கேட்டான்.

மிக அருகில் கேட்ட குரலில் உடல் தூக்கிப்போட நிமிர்ந்து பார்த்தவள் நா குழற “இ…ல்….ல்….அ…லை” என்றாள்.

“சரி, தரை பத்திரம்” என்றவன்,

“எனக்கு முக்கிய வேலையிருக்கு, உன் அண்ணன் கொண்டு வந்த உன்னோட பொருளெல்லாம் அங்கிருக்கு… உனக்கு எங்க எப்படி வச்சிக்கணுமோ வச்சிக்கோ” எனக்கூறி வேறெதுவும் இல்லையென்பதைப் போல் சென்றுவிட்டான்.

வெற்றி செல்வதையே பார்த்திருந்தவள் “இவங்க தான் என்னை காதலிக்கிறாங்களாக்கும்” என நினைத்தாள்.

ஏனெனில் ஒட்டாத் தன்மை வெற்றியின் பேச்சில் இருந்தது. நேற்றைய இரவில் கூட அவனிடமிருந்த ஏதோவொன்று இப்போது இல்லாததை போன்று உணர்ந்தாள்.

குளித்து முடித்து தயாராகிக் கொண்டிருந்தாலும் நொடிக்கு ஒரு தரம் ‘அவங்க என்னை விரும்புறாங்களா இல்லையா’ எனத் தன்னைத்தானே கேள்விக்கேட்டு குழம்பியிருக்கும் மனதையும் மூளையையும் மேலும் குழப்பிக் கொண்டாள்.

அலுவலகம் வந்த வெற்றி நேராகச் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான். எதையோ வென்றுவிட்ட உணர்வு. மேசை இழுவையிலிருந்து எப்போதும் வைத்திருக்கும் சாக்லேட்டில் ஒன்றை எடுத்து சுவைத்தவன் மூர்த்தியை அழைத்தான்.

வரும் போது கையோடு வாங்கி வந்திருந்த இனிப்பினை அவரிடம் கொடுத்தான். மூர்த்தி என்ன விடயம் என்பதைப்போல் பார்க்க,

“இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுண்ணே, அதுக்குதான் இனிப்பு அலுவலகத்தில் எல்லோருக்கும் கொடுத்திடுங்க” என்றவன் ராமிடம் சென்றான்.

வெற்றியை கண்டதும் எழுந்து நின்ற ராமை அமர சொல்லியவன்,

“என்ன சொல்றானுங்க?” என்றான்.

“வாயேத் திறக்க மாட்டேங்கிறானுவ சார்.”

நேற்றிரவு காட்டில் கட்டிப்போட்ட தடியர்களை காலை அமரியை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு முன்னர் ராமிற்கு அழைத்து அவனிடம் ஒப்படைத்திருந்தான்.

“நான் வருவதற்குள் ஏதாவது சொல்றானுங்களா பாருங்க” எனக் கூறியிருந்தான். இப்போது அதைத்தான் ராமிடம் கேட்டிருந்தான்.

“சார் எல்லோருக்கும் கொடுத்துட்டேன்” என வெற்றியிடம் மீதமிருந்த இனிப்புகளை நீட்டிய மூர்த்தி, ராமிற்கு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்ந்து “வெற்றி சார்க்கு இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா சார் இனிப்பு எடுத்துக்கோங்க” எனக் கூற அதிர்வோடு வெற்றியை பார்த்த ராம்,

“சார் எதுவுமே மத்தவங்களுக்கு புரியற மாதிரி பண்ணமாட்டீங்களா” எனக் கேட்டான்.

“அத்தடியர்களை நான் பார்க்கணுமே ராம், எங்கு அங்குதானே வச்சிருக்கீங்க” என்ற வெற்றி தடியர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றான்.

“என்ன மூர்த்தியண்ணே நான் ஒன்னு கேட்டா அவரொன்னு கேட்டுட்டு போறாரு.”

“அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம் சார்” என்ற மூர்த்தி வெற்றியின் பின் சென்றார்.

காவல் நிலையத்திற்கு பின் பக்கம் பூமிக்கு அடியில் மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ரகசிய அறைக்குள் வெற்றியும் அவனைத் தொடர்ந்து மூர்த்தியும் சென்றனர்.

சிறை கம்பிகளுக்கு பின்னால் நாற்காலியில் கட்டி போடப்பட்டிருந்த மூன்று பேரையும் ஆழ்ந்து பார்த்த வெற்றி, “அவர்களின் கட்டுக்களை அவிழ்த்து விடுங்கண்ணே” என மூர்த்தியிடம் கூறினான்.

மூன்றும் வெற்றி அடித்த ஒரு அடிக்கே அவனை பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

தங்களுக்கு முன்னால் நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த வெற்றியை பார்க்கும் போது மூவருக்கும் பயம் தொண்டைக் குழியில் ஏறியிறங்கியது.
கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட போதும் அவர்களால் ஓர் அடி கூட நகர முடியவில்லை. உடல் முழுக்க வலி தெறித்தது.

தன்னுடைய நிலையை சிறிதும் மாற்றாத வெற்றி மூவரையும் ஒரே பார்வையாக நோக்கி, “உங்களை இதெல்லாம் பண்ண சொன்னது யார்?” எனக் கேட்டான்.

மூன்று பேரும் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டனரே தவிர வாய் திறக்கவே இல்லை.

சிறிது நேரம் அவகாசம் கொடுத்த வெற்றி, எழுந்து நின்று தனக்கு முன்பாக இருந்த மேசையில்… துப்பாக்கியினை எடுத்து வைத்தான்.

துப்பாக்கியைக் கண்டதும் ஒருவன் ஏதோ சொல்ல முயல மற்றொருவன் காட்டிய வேண்டாமென்கிற கண்ணசைவில் அவன் மௌனமாகினான்.

அவர்களின் நிழல் அசைவினைக்கூட கூர்ந்து கவனித்திருந்த வெற்றி இமைக்கும் நொடியில் துப்பாக்கியினை எடுத்து கண் ஜாடை செய்தவனை பட்டென்று நெற்றி பொட்டிலேயே சுட்டிருந்தான்.

__________________________

தான் நினைத்தது நடக்கவில்லையே என்று சிதம்பரம் ஆத்திரத்தில் தன்னுடைய சகாக்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.

காத்தவராயன் கண்ணில் பட்டால் அவனை கொன்று புதைக்கும் வெறி. அவனால் தான் அவருடைய திட்டம் பாழாய் போனதோடு மட்டுமல்லாது சிலை வேண்டுமெனக் கேட்ட வெள்ளைக்காரனிடத்தில் திட்டு வேறு வாங்கிக் கொண்டார்.

“அந்த காத்தவராயன் தோட்டத்தை கொளுத்துறான் இல்லை வீட்டை கொளுத்துறான்… அவன் என்ன வேணா பண்ணட்டும். ஆனால் நீங்க அந்த ப***’யை கொன்னு அவன் தலையை கொண்டு வாங்கடா”
என்றவர் விடுவிடுவென்று காட்டை நோக்கி பயணித்தார்.

அவர் செல்லும் பாதை வனத்துறையினருக்கே கண்ணில் அகப்படாத வகையில் காட்டு மரங்கள் அடர்ந்து, அங்கு செல்லவே அஞ்சும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

வெற்றி இரவில் யார்க்கும் தெரியாது வந்து சென்ற இடத்திற்கு சிதம்பரம் தனித்து எதற்கும் பயப்படாது துணிந்த மனத்திடத்துடன் சென்றார்.

அவரின் வண்டி சத்தம் கேட்டதும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஏழு பேரும் தங்களுக்குள் எதையோ முணுமுணுத்தனர்.

வண்டியிலிருந்து இறங்கியவர் தனக்குரிய இருக்கையில் அமர்ந்ததும்,

“என்னடா எண்ணிக்கை குறைவா இருக்கும் போல?” என்றார்.

உங்களில் சிலர் இல்லை என்பதை பூடகமாக கேட்டிருந்தார்.

“ஐயா… ராத்திரி…” ஒருவன் அவருக்கு பயந்து சொல்லத் தயங்கினான்.

“இவன் தந்தியடிக்கிறத பார்த்தா விடயம் பெருசு போலவே” என்றவர் மற்றொருவனை சுட்டி “நீ ஒழுங்கா சொல்லு” என்றார்.

“ஐயா… நம்ம கூட்டத்துல மூனு பேரை ராவுல இருந்து காணோங்க.”
அவன் சொல்லி முடித்ததும் விருட்டென்று இருக்கையிலிருந்து எழுந்த சிதம்பரம் சற்று பதறினார். ஆனால் அவருடைய ஆட்களைப் பற்றி அவருக்குத் தெரியாதா! அடுத்த நொடி சகஜமானார்.

“இங்கதான் எங்கயாவது முட்ட குடிச்சிட்டு விழுந்து கிடப்பானுங்க, தெளிஞ்சதும் வந்துடுவானுங்க… வேலையை பாருங்க, அவங்க கொடுத்த கெடு(கால அவகாசம்) முடியுது” என்றவர் அங்கு நடப்பதை ஒரு பார்வை பார்த்துச் சென்றார்.

காத்தவராயன் தன்னுடைய பண்ணை வீட்டில் சிதம்பரத்துக்கு பயந்து பதுங்கி இருக்கின்றான்.

வீட்டில் வெளிக்காற்று கூட உட்புகாதவாறு சந்து பொந்தெல்லாம் அடைத்து வைத்திருக்கிறான்.

“ஊரு பயலுவ என்னைய மதிக்கலனாலும், ராசா கணக்கா ஊருக்குள்ள சுத்தி வந்த என்னைய இப்படி பதுங்க வச்சிட்டானே!” புலம்பிய காத்தவராயனின் கண்களில் உயிர் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

”இப்படியே எத்தனை நாளுக்கு ஒளிஞ்சு இருக்கிறது… அவன்(சிதம்பரம்) விடயம் எனக்குத் தெரிஞ்சு போச்சுதுன்னு நிச்சயம் என்னை சும்மா விடமாட்டான்… இப்போ அவன் திட்டமும் என்னால பாழாப்போச்சுது” என அரற்றிய காத்தவராயன் தன்னுடைய உயிரை சிதம்பரத்திடமிருந்து எப்படி காத்துக் கொள்வதென்று யோசித்தான்.

அடுத்த நொடி அவனது நினைவுக்கு வந்தது வெற்றியின் முகம்.

“என்னதான் தப்பு செய்தாலும் அதனை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் நிச்சயம் வெற்றி உதவி செய்வான். பகையென்று விட்டுவிடும் ஆளில்லை.”

பலவாறு சிந்தித்தவர் “எப்படியும் வெற்றியிடம் சென்று நடந்த அனைத்தையும் சொல்லி பாதுகாப்பு கேட்போம்,” எனத் தீர்மானித்து அப்போதே வெற்றியை காணவும் புறப்பட்டார்.

________________________

“குளிச்சிட்டியாத்தா, அதோ அங்க அந்தப்பக்கம் சாமி அறையிருக்குது வா” என்று அமரியை அழைத்துச் சென்ற ஜானகி தன்னுடைய மருமகளை விளக்கேற்ற சொல்ல செண்பகம் பாட்டியின் குரல் அவர்களை இடைவெட்டியது.

“வெற்றிய கூட்டியாந்து, ஒண்ணா விளக்கேத்த சொல்லுடி.” தன்னுடைய மருமகளை செண்பகம் பாட்டி செய்வதை முறையாகச் செய்யச் சொன்னார்.

“அவங்க வேலைக்கு போயிட்டாங்க பாட்டி.” அமரி தனது மென்குரலில் பதிலளித்தாள்.

“யார கேட்டு போனான் அவன், இன்னைக்குதானே கல்யாணம் ஆச்சுது… கட்டிக்கிட்டு வந்தவக்கூட கொஞ்ச நேரமாவது இருக்கணுன்னு தெரியாதா அவனுக்கு.”

“அண்ணாக்கு இன்னைக்குதான் முதல் கல்யாணம் ஆகியிருக்கு பாட்டி.”

பாட்டி வெற்றியை கடிந்ததற்கு சசி கவுண்டர்(counter) கொடுக்க, அவனைத் தொடர்ந்து சக்தியும்,

“இன்னொரு கல்யாணம் பண்ணா இதெல்லாம் நீங்க சொல்லாமலேத் தெரியும்” என்றான்.

“இவனுங்க ரெண்டு பேரும் இப்படிதான் ஏதாவது கிறுக்குத் தனமா பேசுவானுவ, நீ விளக்கேத்துத்தா” என அமரியிடம் கூறியவர் சசி மற்றும் சக்தியை பார்த்து கோணி காண்பித்தார்.

சாமி அறையில் விளக்கேற்றி முடித்து அமரி நிமிர,

“மனசுல வாழ்க்கை நல்லாயிருக்கனும் வேண்டிக்கத்தா” என ஜானகி சொல்ல மெல்ல தலையசைத்து இருகரம் கூப்பி கண்களை மூடிய அமரியின் மனம் முழுக்க வெற்றியே நிறைந்திருந்தான்.

‘இது எதிர்பாராம நடந்த கல்யாணம், என்னைய அவங்ளுக்கு பிடிக்காம இருந்தா… மீதியிருக்கும் வாழ்க்கை என்னவாகுமோங்கிற பயம் அவங்க தாலி கட்டும்போதே எனக்கு இருந்துச்சு… அவங்க மனசுல என் மேல காதலிருக்குன்னு தெரிஞ்ச அப்புறம் அந்த பயம் சுத்தமா போச்சுது… ஆனால் இப்போ எனக்கிருக்க ஒரே குழப்பம், என் மனசுல அவங்க இருக்காங்களா? அப்படி அவங்கள எனக்கும் பிடிக்கிங்கிறப்போ நான் எப்படி என்னோட விருப்பத்தை வெளிப்படுத்தறது, எனக்கு ஒண்ணுமே புரியல… ஆனால் அவங்க கூடயிருந்தா நான் சந்தோஷமா இருப்பேன்னு தோணுது, அவங்கக்கிட்ட நான் நல்லாயிருக்கணுன்னா இங்க இருக்கவங்க கூடவும் நான் நல்லமுறையில பேசி சிரிக்க ஆரம்பிக்கனும்… எல்லாருக்கும் என்னை பிடிக்கணும் அதுக்கு நீங்க தான் துணை இருக்கணும்.”
வேண்டி முடித்தவள் கண்கள் திறக்க,

“வேண்டுதல் பலமோ” என்று சசி வினவ…

“உங்க அண்ணன் மாதிரி ஒரு அய்யனாரை கட்டிக்கிட்டா இப்படிதான்… முதல் நாளே என்னை விட வேலைதான் முக்கியம்ன்னு போயிட்டாங்கன்னு சாமிக்கிட்ட கோல் சொல்லிக்கிட்டு இருந்தேன் கொழுந்தனாரே” என படபடவென பொறிந்து தள்ளிய அமரியை பார்த்து சக்தி மூச்சு வாங்க…

“இவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்டா, என்னா வாய் பேசுது” என்றான் சசி.
இவர்களின் பேச்சினை கவனித்த செண்பகம்,

“பொம்பள புள்ளைன்னா இப்படிதான் கலகலன்னு பேசணும்… இப்போ வீடே நிறைஞ்ச கணக்கா இருக்குல்ல, இவ்வளவு நேரம் ஊமையாட்டம் தலையாட்டிட்டு இருந்தியே அது நல்லாவா இருந்துச்சு” என்றவர் தனது சேலைத் தலைப்பை இடுப்பில் சொருகியபடி தனக்கு அருகில் நின்றிருந்த சசியை ஒரு இடி இடித்துச் சென்றார்.

“இந்தக் கிழவிக்கு குசும்புதானே” என்ற சசி,

“அண்ணா பேசவே மாட்டாங்க, நீங்க என்னான்னா இந்த பொல பொலக்குறீங்க” என்றான்.

“இனி என்னை மாதிரியே பேச வச்சிடுறேன் கொழுந்தனாரே” என்ற அமரியை பார்த்து…

“வெற்றியோட அமைதிக்கு இந்த பட்டாசுதான் சரி” என மனதில் நினைத்தான் சக்தி.

அந்நேரம் சக்தியின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது மதி.

“சொல்லுடி, மாமன பார்க்காம இருக்க முடியலையா? அதுக்குள்ள போன் போட்டுட்ட.” எடுத்ததும் அவள் அழைத்ததற்கான விவரமறிய பேசினான்.

“உங்கிட்ட பேச போன் போடல, வெற்றி மாமாவை கட்டிகிட்டாங்களே அவங்களுக்கு புது இடம் புது ஆளுவ.. பேச புடிக்க சங்கோஜப்படும், நீயும் அமரி வயசுப் பொண்ணுதானே கொஞ்சம் பேச்சுத்துணைக்கு அவ கூடால வந்து உட்காருன்னு நல்லு மாமா என்னை அங்க வர சொல்லியிருக்காரு” என்று விளக்கத்தோடு கூறினாள்.

“சரி அதை எனக்கெதுக்கு போன் போட்டு சொல்லுற?” தன்னிடம் பேச உரிமையாய் அவள் அழைக்கவில்லையே என்று சிறு கோபம் அவனுள் முளைத்தது.

“அதில்லை அந்த புள்ளைக்கிட்ட நானே பேசனது கிடையாது. அப்புறம் எப்படி?”

மதி சொல்லாமல் இழுத்ததை புரிந்துகொண்ட சக்தி,

“எப்படியும் இன்னும் பத்து நாலுள நீயும் இங்கதான் இருந்தாகனும். அவங்க வீட்டோட பெரிய மருமகள், நீ சின்ன மருமகள் இப்போவே பேசி பழகிட்டா வீட்டோட ஆம்பளைங்க எங்களுக்கு நல்லதுதானே” என்றான்.

சக்தி கூறியதற்கு, “அப்போ நாங்க அடிச்சிப்போம் சொல்றியாடா நீ” என்று பற்களை கடித்தவள்…

“இன்னும் அஞ்சு நிமிடத்துல அங்க வாறேன் இரு” என்று இணைப்பை வைத்தாள்.

“என்னடா போன்ல யாரு உன் முழியே சரியில்லையே” என்ற சசியிடம்,

“இன்னும் கொஞ்ச நேரத்தில என் ஆளு வரப்போறாளே” எனக் கூறிய சக்தி ஒருவித வெட்கப் புன்னகையுடன் தனது அறைக்குச் சென்றான்.

“இவனுக்கு என்னாச்சு… ஏன் இப்படி வெட்கப்பட்டுப் போறான்” என்று சக்தியின் செயல் புரியாத சசி தன்னைத்தானேக் கேட்டுக்கொள்ள,

“அதுக்கு நீங்க காதல் கடலில் தொபுக்கட்டிருன்னு குதிக்கணும் கொழுந்தனாரே” என அமரி அவனின் காதருகில் சொல்லியிருந்தாள்.

“ஹோ” என்று காற்றில் வாயினால் ஒரு வட்டம் போட்டவன்,

“ஆமாம் அவன் ஆளுன்னு சொன்னதை வச்சு காதலிக்கறான்னு கண்டுபிடிச்சிங்க சரி, எனக்கு ஆளில்லை நான் யாரையும் காதலிக்கலன்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்று தனது முக்கியமான கேள்வியை சசி கேட்க,

“உங்களை பார்த்தாலே தெரியுது காதலுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு” என்றாள் அமரி.

“அப்படியா!” என்றவன் “எனக்கு ஏன் இதெல்லாம் ஒத்து வரமாட்டேங்குது” என்க,

“அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணுங்கோ” என்று கலாய்த்து சிரித்தாள் அமரி.

அவள் சிரிப்பதையே இமைக்காது பார்த்தவன்,

“நீங்க நல்லா பேசுறீங்க… உங்ககிட்ட பேசும்போது வாணி ஞாபகம் வருது” என்று உண்மையிலேயே அமரியிடத்தில் ஒருவித சகோதரத்துவம் உணர்ந்து கூறியவன்,

“வாணி, மதிக்கு அப்புறம் என்கிட்ட இப்படி உரிமையா கலகலப்பா பேசுற பொண்ணு நீங்கதான்” என்று சொல்ல… அந்நேரம் சரியாக வீட்டிற்குள் நுழைந்த மதி,

“அவன் சொல்லுற மதி நான் தான்” என்று அமரியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, பதிலுக்கு அமரியும் நட்பின் அடையாளமாக புன்னகைத்து பேசினாள்.

“நீ பாக்க வந்த ஆளு உள்ள இருக்கு, எங்களை தொந்தரவு பண்ணாத” என்று மதியை அங்கிருந்து அப்புறப்படுத்தியவன் அமரியிடம்,

“வெற்றி அண்ணாவை உங்களுக்கு பிடிக்கலானாலும் பிடிக்க வச்சிக்கோங்க… அண்ணாதான் இந்த வீட்டோட மொத்த சந்தோஷம்” என்றவன் “இந்த கல்யாணம் எப்படி நடந்தது தெரியும். அதான் சொல்லுறேன்… உங்களுக்கு அண்ணாவை பிடிக்கும் தானே?” என்று வினவ,

அமரி இல்லையென்பதைப் போன்று தலையை இட வலமாக ஆட்டினாள்.
சசியின் முகம் நொடியில் வருத்தத்திற்கு செல்ல, கலகலத்து சிரித்த அமரி…

“பாருடா அண்ணா மேல எவ்ளோ பாசம்,” என்று சொல்லி… “நான் உங்களை விட சின்ன பொண்ணுதான் இந்த ங்கலாம் விட்டு பேசுங்க, எனக்கு உங்க அண்ணனை பிடிக்குமா பிடிக்காத சொல்லுறேன்” என்றாள்.

“அதெப்படி சின்ன பொண்ணா இருந்தாலும், அண்ணா மனைவி அண்ணி… அவங்கல மரியாதை இல்லாம எப்புடி” என்று சசி தயங்கினான்.

“வாணி அண்ணியை இப்படிதான் மரியாதையா கூப்பிடுவிங்களோ?” என்று முறைத்த அமரி “என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள்.

“என்னவோ தெரியல உன் உரிமையான பேச்சு நீ சொல்லுறத கேட்கணும் தோணுது” என்ற சசியை அமரிக்கு ரொம்ப பிடித்துப் போனது.

அரை மணி நேர பேச்சில் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு உருவாகியிருந்தது.

புகுந்த வீட்டில் அமரிக்கு நெருக்கமான முதல் உறவு சசி என்றானது. அதன் பின்னரும் அறைக்குச் சென்று தனித்திருக்க முடியாது என்பதால் சசியுடன் அமர்ந்து பல கதைகள் பேசிக்கொண்டிருந்த அமரி அவனிடத்தில் இயல்பாய் தன் வாழ்க்கையில் தான் முக்கியமாகக் கருதும் அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள்.

எல்லோரும் இருந்தும் அவளும் தன்னைப்போலவே அன்பு வேண்டி தவித்திருக்கின்றாள் என்பதை அறிந்ததும் அமரியிடத்தில் சசிக்கு சகோதரபாசம் உயர்ந்தது.

அவனுக்கு அமரியிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. இடையில் சக்தியிடம் பேசிவிட்டு வந்த மதியும், சக்தி தோட்டத்திற்கு சென்றுவிட்டான் என்று அவர்கள் இருவருடன் அமர்ந்து பேச,
வேலை முடித்து வந்த செண்பகம் ஜானகியும் கூட இவர்கள் பேச்சில் கலந்துகொள்ள… பேச்சு குடும்ப நிகழ்வுகளுக்குத் தாவி… அவர்களுக்கும் அமரியை பிடித்துப்போனது.

“பகை வீட்டு ஆளாச்சே, எங்களோட எப்படி பொருந்தி போவியோன்னு இருந்துச்சு கண்ணு… ஆனால் நீ இப்படி ஒரே நாளுல்ல எங்களோட சேர்ந்தது சந்தோஷம்த்தா” என்ற ஜானகி அமரியின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.

“இதே மாதிரி வெற்றிகிட்டவும் கலகலத்து பேசுத்தா… அவன் உன்கிட்டவாது பேசுறானா பாப்போம்” என்றார் பாட்டி.

வெற்றி என்றதும் அமரிக்கு அவளையும் அறியாது இதழில் புன்னகை குடிகொள்ள, மனம் முதல் நாள் பஞ்சாயத்தில் வெற்றியை பார்த்த தோரணையான உருவத்தை நினைவு கூர்ந்தது.

‘அப்படி கெத்தா இருந்தாலே அளவாதான் பேசுவாங்க போல’ என மனதில் நினைத்தவள்… “இப்படி அமைதியா இருக்குறதாலதான் காதலை கூட சொல்லாம இருக்காங்களோ” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“அண்ணாவும் வாய் பேசி சேட்டை செய்யுற ஒரு ஆளு இருக்காங்க. சில நேரத்தில் ரெண்டு பேரும் பார்க்கும் போது லைட்டா பொறாமையா கூட இருக்கும். இருந்தாலும், அண்ணா மனசுல எங்களுக்கு இருக்கும் இடமும் தெரியும்” என்ற சசி, “அது உங்க உன் அண்ணா தான்” என்றான்.

வெற்றி, கதிர் இருவருக்குமான நட்பை சில தருணங்களில் கண்டிருக்கிறாள் தானே, ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.

_________________________

“அய்யோ சார் என்னைய விட்டுடுங்க சார்… நான் உண்மைய சொல்லிடுறேன்.”

வெற்றி இமைக்கும் நேரத்தில் ஒருவனை சுட்டிருக்க, ஏற்கனவே வெற்றியின் அடியை பார்த்தே பயத்தில் சுருண்டிருந்த ஒரு தடியன் கண்ணுக்கு முன்னால் தன்னுடன் சுற்றித்திரிந்தவன் ரத்தம் தெறிக்க தரையில் விழுந்து இறந்ததில் சர்வமும் நடுங்கி பயத்தில் கத்தினான்.

உயிர் மேல் இருந்த ஆசையால் அவன் கத்திய கத்தலிலேயே மீதமிருந்த மற்றொருவனும் உண்மையை சொல்லுவதாகக் கூறினான்.

அந்நேரம் வெற்றியைத் தேடி வந்த ராம்,

“காத்தவராயன் என்பவர் உங்களை சந்திக்க வந்திருக்கின்றார்” என்று சொல்ல,

“காத்தவராயன்” என சில நொடி யோசித்தான்.

பின்னர் மூர்த்தியிடம்,

“ரெண்டு பேரும் சொல்லுறதை எழுதி கையெழுத்து வாங்குவது மட்டுமில்லாது, குரல் மற்றும் காணொளி பதிவு செய்யுங்கள்” எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான்.

காக்கி உடையில் நடந்து வரும் வெற்றியை பார்க்கையிலேயே காத்தவராயனுக்கு நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“சொல்லுங்க?” என்று காத்தவராயனிடம் வெற்றி வினவ எதுவும் பேச முடியாது நின்றிருந்தவரிடம்,

“உயிர் மேல ரொம்ப ஆசை போல” என்ற வெற்றி,

“அடுத்தவங்க சந்தோஷத்தை கெடுத்து உயிரெடுக்க நினைப்பவர்களுக்கு, முதலில் தான் உயிர் மீது ஆசை இருக்கக் கூடாது” என அழுத்தமாகக் கூறினான்.

வெற்றியின் வார்த்தையில் பயத்தோடு சேர்ந்து அதிர்ந்தும் போனார் காத்தவராயன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்