காவ(த)லன் 18
அருவியின் ஆர்பரிப்பிற்கு நிகராக கூட்டத்தின் சலசலப்பு இருந்தது.
“எங்கு தேடியும் அமரி கிடைக்கலையே” என்று தங்கவேலு தலையில் கை வைத்து கோவில் மண்டப தரையில் அமர்ந்துவிட்டார்.
வீட்டின் மூத்த தலைமுறை ஒடுங்கி அமர்ந்ததும் மற்றவர்களும் ஓய்ந்து விட்டனர்.
எங்கு தேடியும் தங்கையை காணவில்லை என்றதும் கதிர் துவண்டு விட்டான். இப்பவோ அப்பாவோ என்று கண்ணீர் துளிகள் கீழே விழத் தயாராக இருந்தன.
“கடைசியில எங்கிட்டதான் ஏதோ சொல்லிட்டுப் போனாள், நாந்தான் சரியா கவனிக்கல… ஆத்தா என் பேத்திய நல்லபடியா வீடு வந்து சேர்த்திடு” என்று அடித்துக்கொண்டு அழுதார் பஞ்சு.
ஊரைச் சுற்றி தேடச் சென்ற ஆட்கள் பொழுது புலரும் வேளை வந்து சேர்ந்தனர்.
“அமரி எங்குதேடியும் கண்ணில் தென்படவில்லை” என்று அனைவரும் ஒரே பதிலை சொல்ல மொத்த குடும்பமும் நிலைகுலைந்து விட்டது.
வேதனையுடன் தலை கவிழ்ந்து, தனது கண்ணீரை யாருக்கும் காட்ட விரும்பாத கதிர் சிறு பாறையில் சென்று அமர்ந்தான்.
கதிரின் தோள் தோட்ட வாணி என்ன பேசுவது, எப்படி அவனுக்கு ஆறுதல் சொல்வதென்று தெரியாது நின்றாள். அவளுக்குமே அமரியை காணாது துக்கம் தொண்டை அடைத்தது.
மகள் காணவில்லை எனத் தெரிந்தது முதல் அழுகையில் கரையும் அன்னத்தை பார்க்கையில் ஊர் மக்கள் அனைவருக்கும் பாவமாக இருந்தது.
இதில் சற்று திடமாக இருந்த விநாயகம் கூட நேரம் விறைந்தோடி பொழுது புலர்ந்ததும் ஸ்தம்பித்து விட்டார்.
அவர்களின் நிலையைக் கண்டு நல்லுவும் தனது மகன்களான சக்தி மற்றும் சசியை மலைச்சரிவுகளில் சென்று பார்த்து வர சொல்லி அனுப்பியிருந்தார்.
அவர்களும் திரும்பி வந்து இல்லையென கை விரிக்க, விநாயகம் தொப்பென்று மயங்கி சரிந்தார். அவர் கீழே விழும் முன் நல்லு தாங்கி பிடித்தார்.
இக்காட்சியினை அங்கு கூடியிருந்த அனைவரும் வாய் மேல் விரல் வைத்து அதிசயித்து பார்த்தனர்.
“என்ன என் மூஞ்சியை பராக்கு பார்த்துட்டு நிக்குற, போயி தண்ணீ கொண்டா” என்று திகைத்து நின்ற சக்தியை விரட்டினார்.
அதற்குள் சேது தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, சிறு துளிகளை நல்லு விநாயகத்தின் முகத்தில் தெளிக்க மெல்ல கண் திறந்தவர்…
“என் பொண்ணு வந்துட்டாளா?” எனக் கேட்டு ஒரு தந்தையாக துடித்தார். அவரின் துடிப்பு நல்லுவுக்கும் புரியத்தான் செய்தது. இருப்பினும் கனத்த மனதினை சரி செய்து விநாயகத்திற்கு ஆறுதல் அளிக்க முயன்றார்.
“பொண்ணு எங்க போயிருக்க போறாள், இங்க எங்கயாவது இருட்டுல பாதை மாறி போயிருக்கும்… ராவெல்லாம் மழை வேற, எங்கயாச்சும் மழைக்கு ஒதுங்கியிருக்கும்… வீடு வந்துடுவா” என்ற நல்லுவின் பேச்சில் சற்று தெளிந்த விநாயகம்,
“வந்துடுவா(ள்) தானே” என்க, அவரின் வேதனை கண்டு பனித்த கண்களை மறைத்தபடி ஆமென்று தலையசைத்தார் நல்லு.
“என்னாடா நடக்குது இங்க… பிரிந்து போன ஒரு மந்தை ஆடு ரெண்டும் நீண்ட நாளுக்கு பொறவு சந்திச்சிக்கிட்ட மாதிரி இருக்கு” என்று நேரம் காலம் தெரியாது பேசிய சசி வழக்கம் போல் சக்தியின் முறைப்பிற்கு ஆளாகினான்.
“இதை பார்த்தாக்கா இவங்க கூட்டு சேர்ந்துடுவானுவ போலிருக்கே” என்று புலம்பிய காத்தவராயன், தான் சொல்லப்போகும் செய்திக்காக தக்க சமயத்தை எதிர் நோக்கி காத்திருக்க, அச்சந்தர்ப்பத்தையும் நல்லுவே ஏற்படுத்திக் கொடுத்தார்.
“இப்படியே விட்டா வேலைக்கு ஆவாது” என்ற நல்லு சக்தியிடம்
“உன் அண்ணனுக்கு போன் போடு” என்றார்.
நடப்பது எதையும் உணரும் நிலையில் கதிர் இல்லை. அந்நேரத்திலும் நல்லு கூறியதும் வெற்றியின் நினைவு வந்தவனாக அவனுக்கு அழைப்பு விடுக்க, தொடர்பு எல்லைக்குள் வெளியில் உள்ளார் என்கிற பதிவு செய்யப்பட்ட குரலே பதிலாக கிடைத்தது.
“இதுதான் தனக்கு தோதான நேரம்” என எண்ணிய காத்தவராயன் ,
“அதெப்படி பொண்ண கூட்டிட்டு போனவ(ன்)கிட்டவே பொண்ண தேட சொல்லி சொல்லுறீங்க?” என்றான்.
“என்னடா சொல்லுற நீ?” என நல்லு கேட்டுக் கொண்டிருக்கும் போதே சக்தி காத்தவராயனை அடிக்க கை ஓங்க,
“யார் மேல என்ன பழியை போடுற, உன் வஞ்சத்தை இப்படி தீர்த்துக்கலான்னு பார்க்குறியா?” எனக் கேட்டு கதிர் காத்தவராயனை அடி வெளுத்துவிட்டான்.
கோபத்தில் வெடித்து சிதறிக் கொண்டிருந்த கதிரை கட்டுப்படுத்த முடியாது அனைவரும் திணறி நிற்க, நல்லுதான் அவனின் தோள் பிடித்து உலுக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார்.
கதிர் அமைதியாகியதும், சக்தி… தான் அணிந்திருந்த வேட்டியை வரிந்து கட்டி காத்தவராயனை நோக்கி அடி வைக்க,
சக்தியை தடுத்து பிடித்த சசி, “செத்த சும்மா இருடா, பெரியப்பாரு முறைக்கிறாங்க” என்று சொல்ல… சசியின் பிடியில் திமிறிக்கொண்டிருந்த சக்தி அமைதியாகினான்.
“யார பார்த்து என்னடா சொன்ன” என்று சக்தி பேச்சில் சீற,
“நீ சும்மா இரு சக்தி” என்று அவனை அடக்கிய செல்லச்சாமி காத்தவராயனிடம் “நீ சொல்லுறத கொஞ்சம் விளங்குறாப்புல சொல்லு” என்றார்.
“சொல்லுறங்கே, ஆனால் ஒரு வழக்கை பத்தி பிராது, விசாரணை அப்படினாக்கா பஞ்சாயத்து கல்லுல கூடுறதுதானே வழக்கம்” என்று நல்லுவை பார்த்துக் கொண்டே காத்தவராயன் சொல்லியதும் சசிக்கே அவன் மீது கோபம் வந்தது.
“எங்க மேல தப்பிருக்குன்னு தெரியுறதுக்கு முன்னுக்கவே அங்க வந்து நிக்க முடியாது” என்று எகிறினான்.
“சும்மா இருடா” என்ற நல்லு தனது தந்தையை பார்க்க,
“பொம்பள புள்ள விவகாரம்ப்பா, நம்ம புள்ள ஆம்பள… எந்த பழிச்சொல்லும் மறைஞ்சிடும், ஆனா பொண்ணுக்கு அப்படியில்லை. நாம பணிஞ்சு போறது தப்பில்லை” என்றார் வெங்கடாசலம்.
“சரிங்கய்யா” என்று தந்தையின் கூற்றை ஆமோதித்த நல்லு, செல்லச்சாமியிடம் “நாங்க பஞ்சாயத்துல நிக்கிறோம்” என்றவராக அருவிக்கரை பாறை நோக்கி சென்றார். அண்ணன் சொல் தட்டாத சேதுவும் உடன் செல்ல நடப்பது எதையும் நம்ப முடியாத ஜனங்களும் பஞ்சாயத்தில் ஒன்று கூடினர்.
“பெரியப்பா வேண்டாங்க, வெற்றி வந்திடட்டும்… நான் போன் செஞ்சு பாக்குறேங்க” என்று சக்தி எவ்வளவு கெஞ்சியும் நல்லு பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு, கூடியிருந்த ஊர் மக்களுக்கு முன் சென்று நின்றார்.
செல்லச்சாமிக்கும் இந்நிலை தர்ம சங்கடத்தை கொடுத்தது.
தங்கவேலுவும் இப்படியொரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது அதிர்ந்த தோற்றத்திலேயே தெரிந்தது.
விநாயகம் நல்லுவை குற்றவுணர்வுடன் பார்த்திருந்தார்.
என்ன தான் நல்லு குடும்பத்தின் மீது தவறு இருக்காது என விநாயகம் நம்பினாலும், காணாமல் போனது அவருடைய மகளாயிற்றே ஆதலால் அந்நிலையில் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.
அனைவரும் என்ன நடக்கப்போகிறதோ என்று பஞ்சாயத்தில் அமைதி காக்க,
“இப்படியே இருந்தா என்ன அர்த்தம்,” எனக் கேட்டு காத்தவராயன் கோணல் சிரிப்பு சிரிக்க அவனை அடித்து விடும் வேகம் எழுந்த போதும் பெரிய தந்தையின் சொல்லுக்காக அமைதியாக நின்றான் சக்தி.
“நடப்பது எதுவும் சரியில்லையே ஆத்தா” என கண்ணீர் வடித்த ஜானகியை தேற்ற முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள் மதி.
“தன் பேரன் மீது எந்தவொரு தவறும் இருக்காது” என திடமாக நம்பிய செண்பகம் பாட்டி நடப்பதை எதிர்கொள்ளும் துணிவோடு அமர்ந்திருந்தார்.
செல்லச்சாமி நல்லுவை அர்த்ததோடு பார்க்க பொருள் புரிந்த நல்லு,
“ஆரம்பிக்கலாங்க, நாங்க தயார்” என்று கர்ஜனையாகவே மொழிந்தார்.
செல்லச்சாமி கண் காட்ட ஒருவன் அனைவருக்கும் முன் வந்து பேசத் தொடங்கினான்.
“ராவுல இருந்து ஊரோட தலைக்கட்டு தங்கவேலு ஐயா பேத்தியை காணோங்க, பொண்ணை மத்தோரு தலைகட்டானா வெங்கடாசலம் ஐயா பேரந்தான் கூட்டிட்டு போனதா வழக்குங்க” என்று சொல்லியவன் தனக்கான இடத்தில் சென்று அமர்ந்ததும்,
“இப்போ நீ சொல்லு” என செல்லச்சாமி காத்தவராயனிடம் கூற வெற்றிக் களிப்புடன் முன்னால் வந்து நின்றவன், ‘நல்லுவின் தோட்டத்தினை அழிக்க முடியவில்லையே’ என்று குமுறிக்கொண்டிருந்த மனதை, நல்லு குடும்பத்தை அவமானப்படுத்தி குளிர வைக்க நினைத்தான்.
“நேத்து ராவு இங்க தீமிதி நடந்திட்டு இருக்கும்போதுங்க, என் காட்டை சுத்தி வந்துடலான்னு போனேன்னுங்க… காட்டுப்பன்னிங்க வந்துங்க பயிற சேதப்படுத்திடுமுங்க அதான் போனேனுங்க” என்று சொல்ல வந்ததை சொல்லாது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தான்.
தான் சொல்லப்போவதை கேட்டதும், அந்நேரத்தில் உனக்கென்ன அங்க வேலையென யாரும் கேட்டுவிடக் கூடாதில்லையா ஆதலால் முன்னெச்சரிக்கையாகாப் பேசினான்.
“ஏண்ணே இவன் வார்த்தைக்கு ஒரு ‘ங்க’ போடுறது பார்த்தாக்கா நிசமாலுமே பஞ்சாயத்துக்கு மரியாதை குடுக்குறாப்போல தெரியலையே” என ராசு செல்லச்சாமியின் காதில் கிசுகிசுக்க,
“நீ செத்த சும்மா கிடடா, ஊரோட ரெண்டு பெரிய குடும்பமும் நிலை குலைஞ்சு நிக்குது… இதுல அவன் மரியாதை கொடுத்தாயென்ன கொடுக்கலனா என்ன” என்று சீறிய செல்லச்சாமி காத்தவராயனின் பேச்சினை கவனித்தார்.
“அப்போ, தங்கவேலு பேத்தி வேக்கு வேக்குன்னு வெங்கடாசலம் ஏலக்காய்த் தோட்டம் பக்கம் போச்சுங்க… செத்த நேரத்துக்குலாம் அந்த ஐயா பேரனும் அந்தப்பக்கமாவே போனாருங்க” என்று நன்கு திரித்துக் கூறினான்.
“சரி அதை ஏன், ராவு முச்சூடும் அந்த புள்ளைய தேடும்போது சொல்லாம இப்போ சொல்றீரு” என்று சரியாகக் கேட்டார் செல்லச்சாமி.
“ஏற்கனவே ரெண்டு குடும்பத்தை வச்சி ஊரு ரெண்டு பட்டு கிடக்கு, இப்போதான் ஆத்தா பேரை சொல்லி ஒட்டுக்கா இணைஞ்சிருக்காவ… திரும்ப முட்டிக்கணுமா, எப்படியும் போனதுங்க விடியறதுக்குள்ள வந்துடுன்னு நினைச்சு சொல்லலைங்க” என்று நல்லவன் போல் பதிலளித்தான் காத்தவராயன்.
“அவ்ளோ நல்லவனா நீ?” என மனதில் கொதித்த கதிர் பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு கோபத்தை அடக்கி நின்றான்.
“அதான் நேத்து அருவி பாறையில ரெண்டும் ஒண்ணா நின்னு திட்டம் போட்டுச்சுங்களோ?”
காத்தவராயன் சொல்லி முடித்ததும் தங்கவேலு பிரிவு பக்கமிருந்து குரல் வந்தது.
“அதைத்தான் ஊரே பார்த்துச்சே” என்று மற்றொரு குரலும் கேட்க,
அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்பதை முழுதாக அறிந்திருந்த கதிரின் கோபம் கரையை கடக்கத் தவித்தது.
வெற்றியும் அமரியும் பாறை மீது நின்றிருந்ததால், கரையில் கோவிலிலிருந்து பார்க்க அவர்கள் நின்று பேசியது நன்கு தெரிந்தது. அவர்களை கவனித்த ஒரு சிலர் இப்போது பஞ்சாயத்தில் அதனை தெரிவிக்க வழக்கு முற்றியது.
கதிர் மரத்தின் பின்னால் நின்றிருந்ததால் அவனை யாரும் கவனிக்கவில்லை.
“பொண்ண கூட்டிட்டு போறதுக்குதான் திட்டம் போட்டாங்க போல” என்று ஒருவன் கேலி போல் சொல்ல,
“இன்னும் செத்த நேரத்துல எங்க பொண்ணு வீடு வந்தாகனும்” என்று மற்றொருவன் கூவினான்.
தனது தரப்பினரை அடக்க தங்கவேலுவும் விநாயகமும் எவ்வளவு முயன்றும் முடியாது போனது.
ஆளாளுக்கு நல்லது நினைக்கிறேன், பெண் மீது அக்கறை இருக்கிறது என்பதை போல் கட்டிக்கொள்ள சலம்பிக் கொண்டிருந்தனர்.
“அவங்க வீட்டுப் பொண்ண கதிர் தம்பி கூட்டியாந்துச்சுன்னு, திட்டம் போட்டு எங்க பொண்ண தூக்கிட்டிங்களே.”
அவர்களின் பேச்சு வெற்றி தான் குற்றவாளி என்பதை போல் இருக்க ஆத்திரமுற்ற சசி,
“பொண்ண தூக்கனுன்னு நினைச்சா பகல்ல வீட்டுக்கே வந்து பெத்தவங்க முன்னுக்கவே தூக்குற தெனவு எங்களுக்கு இருக்குடா” என்று கத்தியவனை நல்லு உக்கிரமாக பார்க்க,
“சும்மா முறைச்சிட்டு நிக்காதீங்க பெரியப்பா, அவன் சரியாத்தான் பேசுறான்” என்று சசிக்கு துணை வந்தான் சக்தி.
“நீங்க இப்படி வரிஞ்சு கட்டி நின்னா சரியா போயிடுமா? இவனுங்க சலம்பறதெல்லாம் உன் அண்ணன் இங்க வர வரைக்கும் தான்… அதுவரை நாம பொறுமையாதான் இருக்கணும், இது பொண்ணு சம்பந்தப்பட்ட விடயம்டா” என நல்லு பொறுமையாக எடுத்துச்சொல்ல சசி மற்றும் சக்தி அமைதியாகியதோடு,
“இந்நேரத்தில் கூட இந்த மனுசனுக்கு என்னவொரு தெளிவு” என்று ஆச்சரியப்பட்ட தங்கவேலு,
‘பிள்ளைங்க வாரதுக்குள்ள நம்மலே ஏதும் நினைக்க வேண்டாமென்று’ சிந்தித்தார்.
நடப்பதை பார்த்திருந்த காத்தவராயனுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாக இருந்தது.
அவனை கவனித்த ராசு,
“இந்த காத்தவராயன் சொல்லுறது உண்மையா இருக்குமான்னு சந்தேகமா இருக்குதுங்களே, ரெண்டு பிரிவும் அடிச்சிகிடட்டும்னு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கிட்டானோ” என்று ராசு சொல்ல செல்லச்சாமியும் அதையே நினைத்திருந்தார்.
“எதுவாயிருந்தாலும் கூட்டத்தின் சலம்பல் அடங்கனாதான் நான் பேச முடியும்” என்று நாட்டாமை செல்லச்சாமியே தன் பொறுமை இழந்தார்.
இரு தரப்பினரின் பேச்சு வார்த்தையும் முற்றி கை கலப்பில் பயணிக்க ஆயத்தமாக,
“காணாம போனது எங்க வீட்டு பொண்ணு, குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அவங்க வீட்டு பையன் மேல… இதுல என்னத்துக்கு நீங்க அடிச்சிக்கிறிங்க.” கதிரின் ஒரே கேள்வி, ஒட்டு மொத்த கூட்டத்தையும் அமைதியாக்கியது.
“என்னடா காத்தவராய, கெளப்பி விட்டுட்டு அமைதியா குளிர் காயுற மாதிரி தெரியுது.” செல்லச்சாமி கேட்டார்.
“நான் சொன்னது நெசந்தாங்க, வேணுன்னா பாருங்க… ராத்திரி பேஞ்ச மழையில ஊருக்குள்ள வர சரிவு பாதையெல்லாம் மண்ணு மூடியிருக்கும், அந்தப்பக்கம் காட்டுக்குள்ளாரா போனவங்க இப்போ வரதுக்கு இருக்க ஒரே வழி இந்த கரை தாங்க… வந்தா இப்படிதான் வந்தாகனும்” என்று வஞ்சத்துடன் கூறினான்.
“ஏய் என்னடா மொத சொன்னப்ப அவங்க காட்டுக்குள்ளார போனதை சொல்லலையே” என்று நாட்டாமை வினவ, “மறந்துட்டேங்க” என்று சமளித்தான்.
“இன்னும் செத்த காத்திருப்போம், இல்லைன்னா காட்டுக்குள்ளாரா போயி தேடுங்க… வனத்துறை அதிகாரியே இங்கதானே நிக்கிறாங்க,” என்று எள்ளலாய் கூறிய காத்தவராயன் “அவங்க கூட்டாளிதானே, ஒருவேளை இவருக்கு தெரிஞ்சுதான் அனுப்பி வச்சாங்களோ” என அவன் சொல்லி முடிக்கும் முன்,
இவ்வளவு நேரம் கட்டுக்குள் இருந்த கதிரின் கோபம் வெளிவர காத்தவராயனை அடிக்க பாய்ந்தவன்…
“கதிர்” என ஒலித்த வெற்றியின் குரலில் கதிர் மட்டுமல்லாது மொத்த கூட்டமும் பின்னால் திரும்ப, வழக்கமான தோரணையோடு நடந்து வந்த வெற்றியின் பின்னால், கூட்டத்தை பார்த்து மருண்ட பார்வையுடன் அமரி வந்து கொண்டிருந்தாள்.
வெற்றி நடந்து வந்த நடையில் தெரிந்த திமிரே அவன் எந்தவொரு தவறும் செய்திருக்கவில்லை என்பதை அவனது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி அங்கு கூடியிருந்தோருக்கும் சொல்லாமல் சொல்லியது.
நண்பனின் அருகில் வந்து நின்ற வெற்றி, காத்தவராயனை பார்த்துக்கொண்டே…
“ஆத்திரப்பட்டு இவனை அடிச்சாக்கா, இவன் சொன்னது உண்மையாகிடாதா” என்றான்.
வெற்றியை அங்கு எதிர்பார்த்திடாத காத்தவராயன் உள்ளுக்குள் எழுந்த பயத்தினை எச்சில் கூட்டு தொண்டை குழியில் விழுங்கினான்.
மகனின் கூற்றில் நல்லு தன் மீசையை நீவி விட்டுக்கொண்டார்.
“அதெல்லாம் இருக்கட்டும் அப்பு, நீ தப்பு செய்யலன்னே வச்சிப்போம்… பொண்ணு உன் கூடதானே வந்திருக்கு.”
“அதுமட்டுமில்லாம பொண்ணு போட்டு இருக்குற உடுப்பு உங்களது போலில்ல இருக்கு” என்று தங்கவேலு தரப்பினர் தங்கள் கருத்தை முன் வைக்க,
“நான் தப்பு செஞ்சதா காட்ட, உங்க பொண்ண நீங்களே அசிங்க படுத்தாதீங்க” என்ற வெற்றி விநாயகத்திடம் சென்று,
“உங்க பொண்ண காப்பாத்த முடிஞ்ச என்னால, அவங்க(அமரி) மேல பழி விழறதுக்கு முன்னுக்க கூட்டியாற முடியல.. அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொல்லி கூட்டத்தினருக்கு நடுநாயகமாக வந்து நின்றான்.
“செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்கவும் ஒரு மனம் வேண்டும்” என்று வெற்றியை உயர்வாக எண்ணிய தங்கவேலு, இதற்கு முன்னர் கலையின் விடயத்தில் அமரிக்கு உதவியதை நினைத்து…
“நிச்சயம் வெற்றியின் மீது தவறு இருக்காது” என்று உறுதியாக நம்பினார்.
காத்தவராயன் பேசியதைக் கேட்டுக்கொண்டே வந்த அமரி அப்போதுதான் தனது தவற்றை முற்றிலும் உணர்ந்தாள்.
கூட்டத்தாரின் முன்னிலையில் அவச்சொல்லுடன் நிற்பதற்கு உடல் கூசியவள் கூனிக்குறுகி நிற்க அவளின் நிலை உணர்ந்த வெற்றி வாணியை ஒரு பார்வை பார்க்க, அமரிக்கு துணையாக அவளின் கரம் பற்றி சபையோர் முன்னிலையில் வாணி உடன் நின்றாள்.
இந்த ஒரு செயலிலே வெற்றியின் நல்ல நடத்தையை புரிந்துகொண்ட விநாயகம் செல்லச்சாமியை பார்த்து, “என் புள்ளைய நான் கூட்டிட்டு கிளம்புறேங்க” என்க,
“அதெப்படி முடியும், இன்னும் வழக்கு முழுமையா முடியலையே” என்று காத்தவராயன் கூற அவனை உருத்து விழித்த நாட்டாமை வெற்றியை பார்த்து “உன் தரப்பு நியாயத்தை சொல்லப்பு” என்றார்.
“நான் என் வேலை சம்பந்தப்பட்ட வழக்கு விடயமா காட்டுக்குள்ள போனேங்க, ராத்திரியில் பாதை மாறி வந்துட்டாங்க போல… என் கண்ணுல பட்டாங்க, திரும்பி கூட்டியாறதுக்குள்ள மழை வலுத்திடுச்சிங்க… பாதையெல்லாம் மண் சரிவு, மரம் சரிவு… அதான் வர நேரமாகிடுச்சு.”
கலையை கொன்றவர்களைத் தேடி தான் அமரி காட்டிற்குள் வந்தாள் என்பதை தவிர்த்து உண்மையை அப்படியே கூறினான் வெற்றி.
“இதான் உண்மைன்னு தெரிஞ்சிடுச்சேப்பா… அப்புறம் என்ன எல்லாரும் திருவிழா வேலையை கவனியுங்க” என்று மக்களிடம் கூறிய நாட்டாமை,
விநாயகத்திடம் “புள்ளைய கூட்டிட்டு போப்பா” என்க,
“அதெப்படிங்க போறது,”
“ஒரு ராத்திரி முழுக்க ஒட்டுக்கா இருந்திருக்காக.”
“இளம் வயசு வேற,”
ஆளாளுக்கு ஒவ்வொன்று கூற…
“இவங்களுக்குள்ள ஒண்ணுமேவா நடந்திருக்காது. அந்த சண்டியரு உடுப்பு இந்த புள்ள போட்டிருக்கும்போதே தெரியலையா” என்று காத்தவராயனுக்கு துணை நிற்கும் ஒரு ஆள் கேட்க,
அவனது வாயிலேயே வெற்றி ஒரு குத்து குத்த ரத்தம் குபுக்கென வெளியேறியது.
அதில் எல்லோரும் அமைதியாக,
அவ்வளவு நேரம் ஏதும் பேசாது மௌனம் காத்த நல்லு, தங்கவேலு மற்றும் விநாயகத்திடம் சென்று,
“உங்க மகள என் பையன் வெற்றிக்கு கட்டிக் கொடுக்குறீங்களா” எனக் கேட்க…
தலை குனிந்து அழுது கொண்டிருந்த அமரி சரேலென்று நிமிர்ந்து வெற்றியை பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நல்லுவின் இச்செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை. கதிர் கூட எதிர்பார்த்திடாத இப்பேச்சில் மகிழ்ந்தாலும் வெற்றி என்ன செய்வானோ என்று படபடப்புடன் இருந்தான்.
வெற்றியை பற்றி நன்கு அறிந்ததோடு, அமரியின் மீது எந்தவொரு தவறும் யாரும் சொல்லிவிடக் கூடாதென அவன் பார்த்து பக்குவமாக பேசிய விதம் ஒன்றே நல்லு அவ்வாறு கேட்டதும் தங்கவேலுவை சரியென சம்மதம் கூறச் செய்தது.
விநாயகத்திற்கும் மறுப்பு தெரிவிக்க தோன்றவில்லை.
பெரியவர்கள் ஒன்று கூடியதை உணர்ந்த வெற்றி, அமரியின் நிலையை மனதில் வைத்து… காதல் மனம் வலித்த போதும் “இது ஒத்து வராதுங்க” எனக் கூறினான்.
நிச்சயம் வெற்றி வேண்டாமென்று சொல்லாமாட்டானென நினைத்த கதிர் அதிர்ச்சியாய் நோக்க,
“ஊர் வாய மூடணுன்னா உங்க ரெண்டு பேர் கல்யாணம் நடந்தாகனும் வெற்றி” என்றார் வெங்கடாசலம்.
“அதெப்படிங்க… சரி என்னை விடுங்க, பொண்ணுக்கு விருப்பம் இருக்கான்னு தெரியாம” என்று முதல்முறையாக வார்த்தையை முடிக்க முடியாது தடுமாறி நின்றான் வெற்றி.
“எங்க பொண்ணோட விருப்பம் கேட்டு செய்யுற நிலையில் நாங்க இல்லை தம்பி” என்ற அன்னம் தனது அழுகையை சேலை தலைப்பில் மறைத்தார்.
கதிர் கூட, “மறுத்து பேசாத மச்சான்” என யாரும் அறியா வண்ணம் வெற்றிக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தான்.
பஞ்சு பாட்டி முதல் அமரியின் வீட்டார் அனைவரும் வெற்றியின் மறுப்பில் கலங்கி நின்றனர்.
வெற்றி மறுக்கும் போது அவனை கட்டாயப்படுத்தி எதுவும் செய்திடாத நல்லுவும் ‘அவசரப்பட்டு விட்டேனே’ என மனதில் வருந்தி நிற்க வெற்றியின் அருகில் வந்தார் செண்பகம்.
பேரனின் கரத்தினை பற்றி, “உன் கூடால சேர்த்து வச்சி ஊர் வாய் மொத்தமும் பேசிடுச்சு ராசா, அவ(ள்) வேற யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டாலும் இந்த அவச்சொல் மாறாது… நாளைக்கு அவ குடும்ப வாழ்க்கைக்கு இந்த பேச்சு தடையா நின்னூடும், நம்ம குடும்பத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சிதுங்குற பாவம் நமக்கு வேண்டாய்யா” என்று வாஞ்சையுடன் எடுத்துக் கூறினார்.
“இதையெல்லாம் தாண்டி எனக்கு இந்த பொண்ண புடிச்சிருக்குப்பா… நானே ரெண்டு மூணு தரம் கோவிலில் இந்த புள்ளைய பார்த்து உனக்கு கட்டி வச்சா நல்லாயிருக்குன்னு நினைச்சிருக்கேன், சரின்னு சொல்லு” என்று ஜானகியும் தன் பங்குக்கு பேசினார்.
“உங்க கல்யாணத்தால இந்த பகை தீர்ந்து ஊர் ஒற்றுமையா இருக்கும் வெற்றி” என்று சேதுவும் எடுத்து சொல்ல
“யாரும் எதும் பேச வேண்டாம் அவன் விருப்பம் என்னவோ அதன்படி எல்லாம் நடக்கட்டும்” என்ற நல்லு அங்கிருந்து நகர அடியெடுத்து வைத்தார்.
காதலால் தன்னுடைய திருமணம் நடக்க வேண்டுமென விரும்பிய வெற்றி, தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்காக நடக்கிறதே என்கிற சிறு ஆறுதலுடன் நல்லுவை தடுத்து தன் சம்மதத்தை தெரிவித்தான்.
“அப்புறம் என்ன… இனி கல்யாணம் இருவீட்டார் விருப்பம். அவங்க எப்போ வேணா வச்சிக்கட்டும்” என்று செல்லச்சாமி தெரிவிக்க,
“இப்பவே இப்படி யோசிக்குற பய எங்க பிரிவினரை பழிவாங்க இப்போ சம்மதன்னு சொல்லிட்டு பின்னால முடியாதுன்னு சொல்லிட்டா என்னா செய்யுறது?” என்று ஒருவன் சத்தம் போட,
“இந்த கூட்டத்திலிருந்து மறைஞ்சி நின்னு கூவுறவன மொத அடிக்கணும்டா” என்று சக்தி சசியிடம் காய்ந்தான்.
‘நடப்பது தான் எண்ணியது போலல்லாமல் வேறு விதமாக செல்கிறது’ என உணர்ந்ததும்,
“பஞ்சாயத்து முடிந்து வெற்றியின் கண்களில் சிக்கினால் அவ்வளவு தான்” என்று பயந்து கூட்டத்தில் கலந்து காத்தவராயன் வெளியேறியிருந்தான்.
மகனின் சம்மதம் ஒன்றே போதுமென நினைத்த நல்லு, இனியும் ஊர் வாய்க்கு தங்கள் பிள்ளைகள் அவலாகக் கூடாதென நினைத்து கோவிலுக்குள் சென்ற வேகத்தோடு அம்மனின் கழுத்திலிருந்த தாலியை கொண்டு வந்து வெற்றியின் கையில் கொடுத்து எல்லோர் முன்னிலையிலும் கட்டச் சொன்னார்.
வெற்றியும் தன்னுடைய எழிலே தனக்கு மனைவியாக வருகிறாளென்கிற மகிழ்வில், எவ்வித தயக்கமும் இல்லாமல் அமரியின் கழுத்தின் அருகில் தாலியைக் கொண்டு சென்றான்.
அதுவரை நடப்பது எதுவும் புரியாது நின்றிருந்த அமரி, சுற்றம் உணர்ந்து தனக்கு அருகில் நிற்கும் வெற்றியின் முகத்
தை விழி விரித்து நேருக்கு நேர் சந்தித்தாள்.
‘இந்த பார்வை ஒன்றே போதும்’ என நினைத்த வெற்றி,
இரு குடும்பத்தாரின் பகை முடிவுக்கு வர… அருவியின் மத்தள இசையோடு, மரங்கள் கொட்டிய காட்டு மலர்களின் ஆசிர்வாதத்தோடு அம்மனின் பார்வையில், தன்னுடைய எழிலின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
வெற்றி ஆசைப்படி இல்லாட்டினாலும் அவன் மனசுல நினைச்ச எழிலயே கல்யாணம் பண்ணிட்டான் ரெண்டு குடும்பம் ஒன்னு சேர்ந்துடுச்சு சூப்பர் 👌👌