காவ(த)லன் 17
“இப்படியே உட்கார்ந்திருந்தா இங்கு எதுவும் சரியாகாது.”
கொட்டும் அருவி நீர் சத்தத்தில் சாரலாய் ஒலித்தது வெற்றியின் குரல். சரேலென்று எழுந்து திரும்பியவள் நிச்சயம் வெற்றியை அங்கு எதிர்பார்க்கவில்லை.
வெற்றி காக்கி உடையிலேயே வந்திருந்ததால் பாதுகாப்பிற்கு வந்திருப்பானென்று நினைத்துக் கொண்டாள்.
“அழுது முடிச்சாச்சா?”
கேட்டவனின் குரலில் தெரிந்த வேதனையை அவனது எழில் உணர்ந்துகொள்ள வில்லை. ஆனால், வெற்றியை தேடி வந்த கதிர் உணர்ந்து கொண்டான்.
அருகில் தான் சென்றால் தனக்கு பின்னால் புதைந்து போவாள். அவள் இதிலிருந்து வெளிவர வெற்றியின் பேச்சை கேட்பதே சரியாக இருக்குமென நினைத்த கதிர் சற்று இடைவெளியிலேயே நின்று கொண்டான்.
வெற்றி கேட்டதற்கு அவளிடத்தில் எந்தவொரு பதிலுமில்லை. அதுமட்டுமில்லாது வெற்றியை கண்டதும் கலையின் இறப்பு, அதனைத் தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் கண் முன் காட்சியாய் விரிய அவளின் கண்களிலிருந்து நீர் மணிகள் கன்னம் தாண்டி உருண்டோடியது.
தன்னுடைய எழிலின் கண்ணீரைத் துடைக்க எழுந்த கையினை கடினப்பட்டு அடக்கியவன், ‘தன்னையும் மீறி மனம் நினைப்பதை செய்தாலும் செய்துவிடுவேன்’ என நினைத்ததால் கையினை பேண்ட் பாக்கெட்டில் விட்டு அவளுக்கு முதுகுக் காட்டி நின்று விட்டான்.
“அழுதால் மனதிலுள்ள பாரம் நீங்கும் என்பார்கள், ஆனா என்னை பொறுத்தவரை மனதில் உள்ள ரணம் அதிகமாகி அழுகை நம்மை பலவீனப்படுத்தும்.
நடந்ததையே நினைத்து அழுதுட்டிருக்காமல் அடுத்து என்ன என்பதை யோசி. நீ இப்படியே இருந்தால் நாலு பேர் உன்னை கூர்ந்து கவனிக்க வாய்ப்பிருக்கு.
பெண்கள் மனதால் ரொம்ப பலம் வாய்ந்தவர்கள்,” என சொல்லி நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி…
“நீ ரொம்ப தைரியமான பொண்ணு, எதற்கும் அவ்வளவு எளிதில் அழ மாட்டேன்னு உன் அண்ணன் சொன்னானே, அது பொய்யோ” என்றான்.
இவ்வளவு நேரம் அவன் பேசியதில் தெளிவு பெற்றவள் கடைசியாக அவன் சொல்லியதில் முகத்தை அழுந்தத் துடைத்து நிமிர்ந்து நின்றாள்.
அழுதிருந்ததால் சிவந்திருந்த முகம், கலைந்திருந்த முன்னெற்றி கேசம், நலுங்கிய மேலாடையென அத்தகைய தோற்றத்திலும் அவனுடைய எழில் பேரெழிலாகவே அவனுக்கு காட்சியளித்தாள்.
“இனி நான் அழ மாட்டேன்” என சொல்லியவள் “கலையின் சாவுக்கான காரணம் உண்மையிலேயே விலங்கு தானா?” எனக் கேட்டாள்.
“நிச்சயம் அமரியின் கேள்விக்கு தன் நண்பன் பதிலளிக்க மாட்டான்” என்றே கதிர் நினைத்தான்.
கதிரின் நினைப்பு பொய்யாகவில்லை.
வெற்றி தனது மென் புன்னகையையே பதிலாக அளித்தான்.
“உங்களுடைய சிரிப்பே நீங்க பதில் சொல்ல மாட்டீங்கன்னு சொல்லுதே” என்ற அமரி… “குற்றவாளிக்கு தண்டனையாவது கிடைக்குமா?” என்றாள்.
அதற்கும் வெற்றியிடம் புன்னகையே.
“எதற்கும் பதில் சொல்லப்போவதில்லை, நானெதற்கு என்னுடைய கேள்வியை வீணாக்கணும்… பதிலை நானே தெரிஞ்சிக்கிறேன்” என்றவள் அவனிடம் விடைபெற்றாள்.
ஒருமுறை தன்னை தன்னுடைய எழில் பார்த்திட மாட்டாளா என்று ஏங்கி தவித்தவன்… இன்று அவள் அவனுடன் நிமிட கணக்கில் பேசியதில் லயித்திருந்தவன் இறுதியாக அவள் சொல்லிச் சென்றதை கவனிக்கவில்லை.
கவனித்திருந்தாலும் காதலியின் குரலிலேயே உழன்று கொண்டிருந்தவன் அவள் சொல்லிய வார்த்தைகளின் உட்பொருளை ஆராய்ந்திருக்கமாட்டான்.
வெற்றியை கதிருக்கு பல வருடம் தெரியும். ஆனால் இன்று அவனது முகத்தில் குடிக்கொண்டிருக்கும் மகிழ்வினை இதுவரை அவன் வேறெப்போதும் கண்டதில்லை. இதுவே முதல் முறை.
“தனக்கு எல்லாமாகவும் இருக்கும் வெற்றிக்கு அவனது இப்புன்னகை நிலைத்திருக்க வேண்டும்” என வேண்டிக்கொண்ட கதிரும் தங்கையின் வார்த்தைகளை கவனிக்காமல் விட்டதை என்னவென்று சொல்லுவது.
சில அடி தூரம் சென்ற அமரி, தான் சென்று கொண்டிருந்த இடத்தில் நின்றபடியே திரும்பி… “நீங்க இதே ஊரா?” எனக் கேட்க,
“நான் யாருன்னே தெரியாமதான் பஞ்சாயத்துல என்னைய சைட் அடிச்சியா?” எனக் கேட்டு வெற்றி காதலாய் சிரித்தான்.
‘இது இவருக்கு எப்படித் தெரியும்’ எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள் தான் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லாது விட்டதை மறந்தவளாக…
வெற்றியின் முகம் காண வெட்கி, சிறு புன்னகையுடன் அங்கிருந்து ஓடினாள்.
செல்லும் அமரியையே பார்த்திருந்த வெற்றியின் மீது கைபோட்ட கதிர்,
“உங்க எழிலு போயி நாலு மாசமாச்சு” என சொல்ல, கதிரின் வயிற்றில் விளையாட்டாய் ஒரு குத்து குத்தினான் வெற்றி.
“ஏதோ சொல்லணும் சொன்னியே என்னது.” நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தான் வெற்றி.
“என்னடா கொஞ்ச நேரம் உன் வேலையை மறந்திட்டு, சாதாரண வெற்றியாய் பேசினியேன்னு நினைச்சேன்… இதோ ஃபார்முக்கு வந்துட்டியே” என்ற கதிர்,
“அந்த காட்டுப்பகுதியில இருக்க மக்களை சந்திச்சேன் வெற்றி” எனத் தொடங்கி அங்கு அவர்கள் மூலம் அறிந்த தகவல்களைக் கூறினான்.
மலையோரக் காட்டில் விலங்குகளின் நடமாட்டமில்லா பகுதியில் வாழும் மக்களின் தொழிலே விலங்குகள் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், தேன் எடுத்தல் தான். ஆனால் இப்போது அவர்கள் அத்தொழில்களை செய்வதில்லை.
அதற்கு காரணம் வனத்துறையினர் என்றால், மற்றொன்று காட்டிற்கு வேட்டையாடவோ மரம் வெட்டவோ செல்லும் நபர்கள் திரும்பி உயிருடன் வருவதில்லை. ஏழை என்பதால் அவர்களின் உயிரிழப்பு மற்றவர்களுக்கோ ஊடகத்திற்க்கோ பெரியதாக தெரியவில்லை. ஆதலால் அவர்களின் இறப்பு வெளியில் தெரியாமல் போனது.
காட்டிற்குள் செல்வோர் இறந்து விடுகிறார்கள் என்பதே, காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதற்காக அவர்களை நேரில் சந்திக்கச் சென்ற குமரன் இறந்த பிறகு தான் தெரிந்தது.
ஆனால் அவர் இறந்தபோது பயன்படுத்திய காமிரா காணாமல் போனதோடு… குமரன் இறந்து கிடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த ஒன்று இவ்வழக்கில் ஏதோ மர்மம் இருப்பதை வெற்றிக்கு உணர்த்த, இவ்வழக்கினை கையிலெடுத்தான்.
இன்று கதிர் சென்று அம்மக்களிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அவர்கள் காட்டிற்குள் சென்றே பல மாதங்கள் ஆகிறதென்றும் இப்போதெல்லாம் அவர்கள் வேட்டையாடுவதில்லை என்பதோடு குன்றின் சமதள பரப்பில் சிறு தானியங்கள் பயிர் செய்கின்றனர் என்பதும் தெரிய வந்தது.
அதோடு இரவில் பெரும் வாகனம் செல்லும் சத்தம் கேட்குமென்றும் கதிர் தெரிந்து கொண்டான்.
கதிரிடமிருந்து அனைத்தையும் தெரிந்துகொண்ட வெற்றி,
“உனக்கு நினைவிருக்கா, களக்காட்டில் இறந்து கிடந்த மிளா பற்றி நீ சொல்லியது… குமரன் உடலுக்கு அருகில் கிடந்த மிளா, இரண்டுக்குமான ஒற்றுமையே போதும். காட்டில் என்ன திருட்டு வேலை நடக்குதுன்னு நல்லா தெரியுது” என்றான்.
“நீ கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்… ஆனால் எனக்கொன்னும் விளங்கல” என்ற கதிர், காட்டில் காமிராக்கள் பொருத்தியிருப்பதையும்… விலங்குகள் எண்ணிக்கை எடுப்பு நடந்துக் கொண்டிருப்பதையும் கூறினான்.
“பழைய கணக்கு இல்லாதப்போ புதுசா எடுக்குறது தேவையில்லாதது கதிரு, நமக்கு பயன்படாது. பழைய கணக்கு இருந்தால், இப்போ எடுப்பதை ஒப்பிட்டு பார்த்து குறைந்திருக்கா, அதிகமாகியிருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். ஆனால் நீதான் பழைய கோப்புகள் எதுவும் ஒழுங்காயில்லைன்னு சொல்லுறியே… அப்புறம் இது எதுக்கு” என்றவன் சில நொடி யோசனைக்குப் பிறகு,
“இப்பொழுது எடுத்து முடித்து, ஒரு வாரம் சென்று திரும்ப எடுக்க சொல்லு” என அர்த்தத்துடன் கூறினான்.
சரியென்ற கதிரின் அலைபேசி ஒலித்தது.
அழைப்பினை ஏற்று பேசி வைத்தவன்,
“குமரன் மற்றும் கலையின் உடல் கிடந்த குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்கப்பட்ட காமிராக்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாம் வெற்றி” என்றதோடு..
“இந்த பழியையும் அந்த காட்டுவாசி மக்கள் மீதுதான் போடுறாங்க” எனக் கூறினான்.
“விடு… தப்பு செய்யுற எல்லாருக்கும் பழி சுமத்த யாராச்சும் வேணும். இவங்களுக்கு ஒன்னும் அறியாத அந்த மக்கள் இருக்காங்க” என சலிப்புடன் சொன்னான் வெற்றி.
“இன்னும் எவ்ளோ நாளைக்கு வெற்றி இந்த வழக்குல சுத்துறது” என்று கதிர் அலுப்பாகக் கேட்டான்.
கதிரை முறைத்த வெற்றி,
“கிட்டத்தட்ட இந்த வழக்கு என்னான்னு முடிச்சிட்டேன், குற்றவாளி யாருங்கிறதுல கொஞ்சம் சந்தேகம் இருக்கு… அதுவும் இன்னைக்கு தெரிஞ்சிடும் நினைக்கிறேன்” என்றான்.
“சரி மச்சான்,” என்ற கதிர்
“பெருசுங்க எல்லாம் நம்மை காணும் தேடுனாலும் தேடுங்க வா போவோம்” என வெற்றியையும் இழுத்துக் கொண்டு சென்றான்.
பொங்கல் வைத்து அம்மனுக்கு ஆராதனை முடிய, இரவு நடைபெறயிருக்கும் தீ மிதிக்காக குண்டம் அமைத்து விறகுகளைக் கொட்டி தீ மூட்டினர்.
வெற்றி அலுவலகம் செல்வதாகக் கூறி விடை பெற்றான்.
_______________________
“என்ன இன்னைக்கு சிலையை கடத்திடலமா?”
சிதம்பரம் காத்தவராயனிடம் உற்சாகமாகக் கேட்டார்.
“கடத்திடலாங்க, எனக்கு அந்த வெங்கடாசலம் குடும்பம் சந்தோஷமா இருக்கக் கூடாது அவ்ளோதான்” என்று குரூரமாகக் கூறினார் காத்தவராயன்.
“உனக்கு துணைக்கு ஆள் வேணுமா?”
“இதென்ன ஊரைக் கூட்டி செய்யுற வேலையா, நான் ஒருத்தனே போதும்… மொத்த தோட்டமும் பஸ்பம்தான்” என்ற காத்தவராயன் “நீங்க உங்க ஆளுங்கல சரியான நேரத்துக்கு கோவிலுக்கு அனுப்புங்க “என்றார்.
இரவில் குண்டத்தில் எரியும் தணல் அவ்விடம் முழுவதும் பிரகாசமாக தனது அனலை கக்கியது.
குண்டத்தில் இறங்குவோர் அனைவரும் அருவியில் நீராடி ஒருவர் பின் ஒருவராக கோவிலை வலம் வந்து குண்டத்தில் இறங்கினர்.
குண்டம் அம்மனுக்கு நேரெதிரில் அமைந்திருக்க, தீ மிதித்து வெளியேறியவர்கள் இடையிலிருந்த சூலத்தை தொட்டு கும்பிட்டு தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
வேண்டுதல் வைத்தவர்கள் மட்டுமில்லாது குண்டத்தில் இறங்க நினைப்பவர்களும் ஒவ்வொருவராக இறங்க நேரம் நீண்டு கொண்டே சென்றது. அதன் பின்னர் அம்மனுக்கு படையல் இடுவதால் அதற்கான ஏற்பாட்டினை பாதிப்பேர் கவனித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக குடும்பத்தில் அசாம்பாவிதமாக யாராவது ஒருவருக்கு ஏதாவது நடக்கிறதென குண்டத்தில் இறங்க காத்துக் கொண்டிருந்தார் அன்னம்.
மருமகளுக்கு துணையாக பஞ்சு பாட்டி உடனிருக்க, வாணி ரொம்ப நேரம் நிற்க வேண்டாமென கோவில் மண்டபத்தில் அவளை உட்கார வைப்பதற்காக கதிர் சென்றிருக்க… தனது முடிவினை செயல்படுத்த சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்த அமரி, வீட்டிற்கு செல்வதாகக் கூறி கோவிலிலிருந்து வெளியேறினாள்.
நிரம்பி வழியும் கூட்டம், மேளச் சத்தம், ஒலிபெருக்கியில் கசியும் இசை, பேரிரைச்சலாய் கொட்டும் அருவி சத்தம்… இதில் அமரி வீட்டிற்கு செல்கிறேனென சொன்னது பஞ்சுவின் காதில் சரியாகக் கேட்கவில்லை. அவரும் அவள் வாணியுடன் இருக்க செல்வதாக நினைத்துக் கொண்டார்.
கோவிலிற்கு உட்பட்ட எல்லை பகுதியைத் தாண்டியதும் அருவிக்கரை சிறு மலையை கடந்து காட்டுப்பகுதிக்குள் நுழைந்தாள் அமரி.
வெற்றி சொல்லியிருந்ததால் தங்களுடைய அனைத்து தோட்டத்திற்கும் சேது காவலுக்கு ஆள் நியமனம் செய்தார்.
“இன்னைக்கே ஆட்களை போட்டுடுங்க” என்று சொல்லியதால் “தீமீதி முடிந்ததும் செல்கிறோம்” என்று கூறியவர்களைக் கூட வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார் சேது. அவருக்கு மகனின் வார்த்தையின் மீது அத்தனை மதிப்பு.
ஏலக்காய்த் தோட்டம் மலைச்சரிவில் அடவிக்கு அருகில் இருப்பதால், விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் யாரும் அங்கு செல்லமாட்டோம் என்றுசொல்லிவிட…
“சரி எப்போதும்போல நள்ளிரவில் நாமே சென்று பார்த்துவிட்டு வருவோம்” என்று முடிவு செய்த சேது கோவிலில் படையலுக்கான வேளையில் ஈடுபட்டார்.
“காவலுக்கு ஆளுவ அனுப்பியாச்சா?” எனக் கேட்ட நல்லுவிற்கும் ஆமென்று பதிலளித்தார்.
கோவிலில் வேலை முடிந்த பாடில்லை.
“இந்த கூட்டம் எப்போ சாமி கும்பிட்டு போறது, நாம எப்போ கொளுத்துறது” என அந்த நேரத்தில் தோட்டப்பகுதியில் சமயத்திற்காக குளிர் காற்றில் உடல் நடுங்க காத்திருந்த காத்தவராயன் புலம்பினான்.
இரவு வெகு நேரம் சென்றே வீட்டிற்கு வந்த வெற்றி… இன்னும் யாரும் கோவிலிலிருந்து வரவில்லை என்பதை அறிந்து, ஏற்கனவே செல்ல தீர்மானித்ததை நடைமுறை படுத்த முயன்றான். சிறு டார்ச் விளக்கினையும், தீப்பெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டவன் தங்களது தோட்டமிருக்கும் பகுதிக்குள் சென்றான்.
காவல் நிற்கும் யார் கண்ணிற்கும் அகப்படாது சென்றவன், ஏலக்காய்த் தோட்டத்தில் மட்டும் ஆலில்லாததை அறிந்து…
தோட்டத்தினை முழுதாக ஒரு சுற்று வந்து, சரிவில் நடந்து காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கியிருந்தான்.
ஏலக்காய் செடிகளுக்கு நடுவில் காத்தவராயன் ஒளிந்திருப்பதைக் கண்ட போதிலும் கவனியாததை போன்று சென்று விட்டான் வெற்றி.
வெற்றி காத்தவராயனை சும்மா விட்டுச் செல்ல காரணம், அங்கு காத்தவராயனுக்கேத் தெரியாமல் வேறொருவனும் பதுங்கியிருந்ததை வெற்றி கண்டு கொண்டான்.
நிச்சயம் இவனால் அவனுக்கு தண்டனை கிடைக்கக்கூடும் என்பதாலேயே வெற்றி அமைதியாகச் சென்றான்.
அதுமட்டுமில்லாது, “இப்போது அவனை விட்டால் தான் அவனுக்கு பின்னால் யார் இருக்கின்றார் என்பதை தெரிந்துகொள்ள முடியும்” என எண்ணியே காத்தவராயனை வெற்றி ஒன்றும் செய்யவில்லை.
வெற்றியை அந்நேரத்தில் அங்கு எதிர் பார்த்திடாத காத்தவராயன் முதலில் பயந்தாலும்,
“இதுதான் தோதான நேரம், காரியத்தை முடிச்சிடனும்” என்றுக் கூறி மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் கோவிலில் அனைத்தும் முடிந்து அம்மனுக்கு ராத்திரி நேர பூஜை நடந்து கொண்டிருந்தது.
தோட்டத்தினை எரித்ததும் காத்தவராயனை கொல்ல காத்திருந்தான் சிதம்பரத்தின் அடியாள். அவனின் கண்கள் காத்தவராயனைத் தாண்டி மற்ற எதையும் பார்க்கவில்லை. அவனை கோட்டை விட்டால் சிதம்பரம் தன்னை கொன்று விடுவார் என்கிற பயம்.
திடீரென இரவு நேர நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அலைபேசி ஒலிக்க காத்தவராயன் அதிர்ந்தார்.
அலைபேசியை அணைத்து வைக்காத தன் முட்டாள் தனத்தை நினைத்து தன் தலையிலேயே தட்டிக்கொண்ட தடியன் அழைப்பை ஏற்று பேசினான்.
தன்னுடைய அலைபேசி இல்லையென்றதுமே அதிர்விலிருந்து மீண்ட காத்தவராயன் ‘தன்னை தவிர்த்து வேறுயாரோ இங்கிருக்கின்றார்கள்’ என சிந்திக்கும் போது பேச்சுக்குரல் கேட்டது.
இரவு நேரம் என்பதாலும், தடியன் காத்தவராயன் பதுங்கியிருந்த சிறு பாறைக்கு பின்னாலே மறைந்திருந்ததாலும் அவன் மிக மெல்லிய குரலில் அலைபேசியில் பேசியது மிகத் தெளிவாகவே காத்தவராயனுக்கு கேட்டது.
“………….?”
“சமயத்துக்காக காத்திருக்கேங்க.”
“…………”
“கண்டிப்பாங்கய்யா, அவன் நெருப்பு வச்ச அடுத்த நொடி நான் அவன் கழுத்துல கத்தியை வச்சிருப்பேங்க.”
“………..”
“காத்தவராயனை காலி பண்ணிட்டு உங்கள கூப்பிடுறேங்க.”
காத்தவராயனை முடிச்சாச்சா என்பதை பற்றி சிதம்பரம் கேட்ட ஒவ்வொன்றிற்கும் பதிலளித்த தடியன் இணைப்பினை வைத்துவிட்டு பார்க்க, காத்தவராயன் அமர்ந்திருந்த இடம் வெறுமென இருந்தது.
தடியன் பேசியதை முழுவதுமாகக் கேட்டிருந்த காத்தவராயன்,
“அவனுங்களுக்கு உதவி செய்யுறது மூலமா நம்ம காரியமும் முடிஞ்சா மாதிரி இருக்கும்… நாமளும் செய்யுற தப்புல இருந்து தப்பிச்சா மாதிரி இருக்குன்னு நினைச்சா, இவுனுவ என் உசுருக்கே உலை வைக்குறானுவ” என்று உயிர் பயத்தில் புலம்பிய காத்தவராயன் அந்நொடியே சிறு சத்தமுமின்றி அங்கிருந்து நழுவி கோவில் கூட்டத்தில் மறைந்திருந்தான்.
தனியாக இருந்தால் தேடி வந்து கொன்று விடுவார்களோ என்கிற பயம்.
“கூட்டத்தோடு கூட்டமா உட்கார்ந்திருந்து ஒட்டுக்கா ஊருக்குள்ள போயிக்கலாம்” என்ற எண்ணம்.
பூஜை முடிந்து அம்மனுக்கு வைத்த படையலை பிரசாதமாக பெற்றுக்கொண்ட மக்கள் அனைவரும் மெல்ல கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கும் வேளையில் தான் அமரி தங்களுடன் இல்லாததையே அனைவரும் உணர்ந்து தேட, ஊர் மக்களும் தேடலில் அவர்களுக்கு உதவினர்.
எங்கு தேடியும் அமரி கிடைக்கவில்லை.
வீட்டிற்கு சென்று பார்த்து வந்த கதிரும் அவள் வீட்டிலில்லை என்று சொல்ல குடும்பத்தாருக்கு பயம் பிடித்துக் கொண்டது.
தோட்டத்தில் பதுங்கியிருந்த சமயம் காட்டிற்குள் அமரியும், அவளைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் வெற்றியும் செல்வதை பார்த்திருந்த காத்தவராயன்,
அச்சமயத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள அவசரமாக ஒரு திட்டம் வகுத்தான்.
__________________________
மை இருட்டு சூழ்ந்த வேளையிளும் கரடு முரடான பாதையில் தனது கம்பீர நடையை மாற்றாது வேக எட்டுக்களுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான் வெற்றி.
முடிந்தளவு நிலவு
வெளிச்சத்திலேயே சென்றுவிட நினைத்தான்.
“தனது காலடி ஓசை கூட குற்றவாளிகளை எச்சரிக்கை செய்யும்” எனக் கருதி பூட்ஸ் சத்தம் எழுப்பிடதா வகையில் அவனின் நடை இருந்தது.
வெற்றி எங்கு செல்ல வேண்டுமென்று தீர்மானித்தெல்லாம் வரவில்லை.
காட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது கிடைத்த தடயங்களை வைத்து ஏற்கனவே அவன் அறிந்தது தான். ஆனால் குற்றவாளி யார் என்பது தெரிய வேண்டும்.
குறிப்பிட்ட நபர் ஒருவரின் மீது சந்தேகம் கொண்ட போதிலும், அவர் தான் இதற்கெல்லாம் காரணம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் வேண்டியே காட்டிற்குள் செல்கின்றான்.
கலையின் உடல் கிடந்த இடத்திற்கு வந்தவன் தனது செவியையும் பார்வையையும் கூர்மையாக்கினான்.
ஒருமுறை அவ்விடத்தை சுற்றிலும் பார்வையால் அலசியவன் மெல்ல முன்னேறினான்.
அன்று யானை மாட்டிய இடம் பற்றி,
“சில அடிகள் குழித்தோண்டி உடனடியாக மூடியிருக்க வேண்டும்” என கதிர் கூறியதை நினைவுக்கு கொண்டு வந்த வெற்றி அவ்விடம் எதுவாக இருக்குமென்று ஆராய்ந்து கொண்டே தனது நடையை தொடர்ந்தான்.
கதிர் சொல்லிய அடையாளங்களை வைத்து, ஓரிடத்தை இதுவாகத்தான் இருக்குமென கணித்தவன்… சில நிமிடங்கள் அங்கேயே நின்று விட்டான்.
“ஏதேனும் தடயம் கிடைக்குமா” என்று ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு வித்தியாசமான சத்தம் கேட்டது.
என்னவாக இருக்குமென்று சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய வெற்றியின் மீது காட்டு செந்நாய் ஒன்று பாய்ந்தது.
நொடியில் சுதாரித்து விலகிய வெற்றி தரையில் ஒரு கால் மற்றும் கை ஊன்றி நாய்க்கு நேரெதிர் தைரியமாக நின்றான்.
விலங்குகளை பொறுத்தவரை தனக்கு முன்பிருக்கும் இரை பயப்படுகிறது என அறிந்தால் மட்டுமே முன்னோக்கி அடியெடுத்து வைக்கும். இல்லையெனில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருக்கும்.
அந்த இருளிலும் இரையை கண்டுவிட்ட மகிழ்வில் காட்டு செந்நாயின் கண்கள் பளபளத்தது.
வெற்றி கண்கள் மட்டுமே தெரியும் வகையில் தனது முகத்தினை முகமூடி கொண்டு மறைத்திருந்தான்.
வெற்றியின் கண்களும் நாயின் கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, தன் முன்னங்கால் ஒன்றினை முன்னோக்கி வைத்து வெற்றியின் தைரியத்தை ஆழம் பார்த்தது அந்நாய்.
வெற்றி எந்தவொரு எதிர்வினையும் காட்டாது தனது நிலையில் திடமாக இருக்க, தன்னுடைய செந்நிற கூர் பற்களைக் காட்டி குரைத்தது.
இரவின் நிசப்தத்தில் திகில் மூட்டும் விதமாக ஒலித்த நாயின் சத்தத்தில் பயம் கொள்ளாது தன்னை திடப்படுத்திய வெற்றி தனக்கும் நாய்க்கும் இடையில் கிடந்த தடிமனான குச்சி ஒன்றினை காலினால் எத்தி கையில் பிடித்தான்.
அவனின் செய்கையில் ஒரு அடி பின்னோக்கி வைத்த நாய் வெற்றியின் செய்கைகளை கவனிக்கத் தொடங்கியது.
பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தவன் குச்சியில் சுற்ற ஆரம்பித்தான். வீட்டிலிருந்து முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வந்திருந்த தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சி ஒன்றை அதன் பட்டையில் உரச, பட்டென்று வந்த சிறு நெருப்பு பொறியில் பயம் கொண்ட காட்டுநாய், வெற்றியே எதிர் பார்க்காத வகையில் அதன் கூர் பற்களை வெளிக்காட்டி வெற்றியின் மேல் சீறிப்பாய்ந்தது.
நாயின் மீது ஒரு கண் வைத்திருந்த வெற்றி நொடியில் மல்லாக்க தரையில் விழுந்தவன் தன் மீது பாய்ந்த நாயின் வயிற்றில் உதைக்க, வலியால் வெளிவந்த அலறளுடன் அருகிலிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தது.
அந்நேரம் வெற்றிக்கு போதுமானதாக இருக்க, குச்சியில் சுற்றப்பட்ட கைக்குட்டையில் நெருப்பினை பற்ற வைத்து தீப்பந்தத்தை தயார் செய்திருந்தான்.
அடிபட்ட செந்நாய் மீண்டும் சீறி எழுந்து நின்று வெற்றியை பார்த்து தனது பற்களைக் காட்ட… அதன் முகத்திற்கு நேராக பந்தத்தைக் உயர்த்திக் காட்ட,
வலியாலும், பயத்தாலும் வெற்றியிடமிருந்து தப்பிக்க இமைப்பொழுதில் ஓடிச்சென்று புதருக்குள் மறைந்தது.
எரியும் பந்தம் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்தாலும், யாருக்காவது தன்னை அடையாளப்படுத்தக் கூடும் என்பதால் அணைக்க முற்பட்டவன் சற்று தொலைவில் ஓடிவரும் ஓசை கேட்கவும்…
“மீண்டும் ஏதேனும் மிருகமாக இருக்கக் கூடும்” என்று அணைப்பதை நிறுத்தியவன் ஓசை கேட்கும் சத்தம் தன் பார்வையை பதித்து, வருவது எதுவாக இருப்பினும் எதிர்த்திடும் திடத்துடன் நின்றான்.
ஆனால் இம்முறை அவன் மீது விழுந்தது அவனவள். யாரோ மூவர் துரத்தியபடி ஓடி வந்தவள், தனக்கு முன் நிழலுறுவில் தெரிந்த வெற்றியைக் கண்டு சுதாரிப்பதற்குள் அவன் மீதே மோதி விழுந்திருந்தாள்.
“யாரது” எனக் கேட்க வந்தவன் தன் முகத்திற்கு வெகு அருகே தெரிந்த தனது எழிலின் முகத்தை பந்தத்தின் உதவியுடன் பார்த்தவனின் மனதில் இதம் பரவத் தொடங்கிய நொடி,
“இங்க பாருங்கடா இவ(ள்) தனியா வரல,” என்று சத்தம் கேட்டு தானிருக்கும் இடம் உணர்ந்து பட்டென்று தன்னிலிருந்து அமரியை பிரித்தெடுத்தவன் சிங்கமென நிமிர்ந்து நின்றான்.
‘இந்த பக்கம் மூன்று பேர், அந்தப்பக்கம் முகம் தெரியாத ஒருவன்… எப்புடி தப்பிக்க போறேன்னு தெரியலையே’ பயத்தில் மனதோடு புலம்பிய அமரிக்கு கை கால்கள் உதறின.
அவள் வெகுவாக பயந்திருக்கிறாளென
அவளின் உடல் மொழியிலேயே வெற்றி தெரிந்துகொண்டான்.
இருப்பினும் தனக்கு எதிரில் நிற்கும் தடியர்களிடம் தன்னை அடையாளப்படுத்தக் கூடாதென தனது முகமூடியை கழட்டவில்லை.
கையில் தீப்பந்ததுடன் வேட்டைக்கு வந்த அய்யனார் தோற்றத்தில் நிமிர்ந்து நின்ற வெற்றியை கண்டு தடியர்கள் அஞ்சினாலும், அதனை வெளிக்காட்டாது திமிராகவே நின்றனர்.
“இங்க பருங்கடா முகமூடி போட்ட ஹீரோ” என ஒருவன் சொல்ல,
“அப்போ இவர் இவுங்க ஆளில்லை போலிருக்கே” என்று வெற்றியின் பின்னால் சென்று நின்றாள் அமரி.
“இங்கப்பாரு நீ யாருன்னு தெரியல, முகமூடி போட்டிருக்கிறதால ஏதோ திருடன்னு நினைக்கிறேன்… அதனால அந்த புள்ளைய காப்பாத்துறன்னு ஹீரோயிசம் காட்டாம விலகி போயிடு” என சொல்லிக்கொண்டே ஒருவன் வெற்றியை நெருங்க, அவன் வெற்றி விட்ட ஒரு உதையிலேயே வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் சுருண்டு விழுந்தான்.
தங்களில் ஒருவனை வெற்றி அடித்து விட்டான் என்றதும் ஒருவன் கையில் கத்தியோடு வெற்றி மீது பாய, அவன் கத்தி வைத்திருந்த கையினை லாவகமாக வளைத்து பிடித்த வெற்றி… அத்தடியனை தன் கால் மீது குனிய வைத்து கை முட்டியால் முதுகிலேயே குத்த வாயில் ரத்தம் ஒழுக சரிந்தான்.
தன்னுடன் வந்த இருவரும் வெற்றியின் ஒரு அடிக்கே உயிர் போக கீழே கிடப்பதைக் கண்ட மூன்றாமவன் அங்கிருந்து ஓட முயற்சிக்க, அருகில் கிடந்த குச்சியை வீசி அவனை கீழே விழச் செய்த வெற்றி மூவரையும் அங்கேயே ஒரு மரத்தில் தப்பிக்க முடியாதவாறு காட்டு கொடிகள் கொண்டு இறுக்கமாகக் கட்டினான்.
வெற்றி அவர்களை அடித்ததில் மிரண்டு போயிருந்த அமரியின் அருகில் வந்த வெற்றி,
“இந்நேரத்தில் இங்க எதுக்கு வந்த?” என அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டான்.
வெற்றியின் கோபத்திற்கான காரணம் அமரி தனித்து அந்நேரத்தில் அங்கு வந்தது.
“தான் மட்டும் வராது இருந்திருந்தால் தன்னுடைய எழிலின் நிலை என்னவாகியிருக்கும்” என்று யோசிக்கும் போதே அவன் மனம் பதைப்பதைப்பிற்கு உள்ளானது.
அவனின் கர்ஜனையான சத்தத்தில் சுயம் பெற்றவள்,
“காப்பாத்துனத்துக்கு ரொம்ப நன்றி” என்றவள் திரும்பி நடக்க, அவளின் கைபிடித்து தடுத்து நிறுத்தினான்.
“ஹேய் இங்க பாரு இந்த கை பிடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்கிடாத, சும்மா ஒரு மூணு பேரை அடிச்சிப்போட்டா நீ பெரிய ஹீரோவா” என்று கேட்டவள் அவனின் கையிலிருந்து தன்னுடைய கையினை உருவ போராடினாள்.
“இங்க பாரு எங்கிட்ட வம்பு வச்சிக்காதே எனக்கு பெரிய போலீஸ்லாம் நல்லாத் தெரியும்” என வெற்றியை மனதில் வைத்துக் கூறினாள்.
அவள் தன்னைத்தான் சொல்லுகிறாள் என்பது புரிந்தவன், தோன்றிய சிரிப்பினை இதழ்கடையில் ஒளித்துக்கொண்டு…
“எங்கே அந்த பெரிய போலீசு பேரு சொல்லுங்க பாப்போம்… அவ்வளவு பெரிய போலீசு யாருன்னு நானும் பாக்குறேன்” என அவளை சீண்டினான்.
‘அய்யய்யோ… ரெண்டு தரம் நேருல பேசியிருக்கோம் ஒரு தரம் கூட பேரை கேக்கலையே! அன்னைக்கு பஞ்சாயத்துல செல்லசாமி பெரியப்பா சொல்லிக் கேட்டதும் நினைவில் இல்லையே’ என மனதில் நொந்தவள், வெளியில் ஈ’யென்று பல்லைக் காட்டி அசடு வழிந்தாள்.
அவளின் செயலில் உள்ளுக்குள் சிரித்தவன், “அந்த பெயர் தெரியாத போலீசு என்னைய மாதிரி இருப்பானான்னு கொஞ்சம் பார்த்து சொல்லு” எனக் கேட்டுக்கொண்டே தன் முகமூடியை கழட்டினான்.
வெற்றியை நிச்சயம் அவள் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அவனை கண்டதும் அதுவரை என்ன நடக்குமோ என்று அலைப்புற்றுக் கொண்டிருந்த அவளின் மனம் நிம்மதி கொண்டது. தானாகவே ஒரு பாதுகாப்பு உணர்வை உணர்ந்தாள்.
இவ்வளவு நேரம் பயத்தில் வெடவெடத்த அவள் கைகள் அவளையும் அறியாது வெற்றியின் கைகளை இறுக பற்றிக் கொண்டது.
அவளின் செய்கைக்கான காரணம் அவள் சொல்லாமலே புரிந்து கொண்ட வெற்றிக்கு சற்று கர்வமாகக் கூட இருந்தது. தான் காதலிக்கும் பெண் தன்னை ஏற்கும் முன்பே தன்னிடத்தில் பாதுகாப்பை உணர்கிறாள் என்றாள் அவனுக்கு வேறென்ன வேண்டும். அப்போதே அவன் காதலில் முற்றிலும் வென்றுவிட்டதைப்போல் உணர்ந்தான்.
திடீரென கார்மேகம் சூழ குளிர் காற்று மேலும் ஈரக்காற்றாய் வீசத் தொடங்கியது.
வெறும் தாவணி அணிந்திருந்தவளின் உடலை காற்று ஊசியாய் குத்தும் உணர்வு பெற்று வெற்றியின் கையை விட்டவள் சற்று விலகி நிற்க வெற்றியும் தன்னிலை மீண்டான்.
“சரி இப்போ சொல்லு இங்க இந்நேரத்துல எதுக்கு வந்த?”
“அது வந்து… கலை” அமரியின் நாக்கு தந்தியடித்தது.
“உங்க பிரண்ட் எப்படி இறந்தாங்கன்னு நீங்களே தெரிஞ்சிக்க புறப்பட்டு வந்துட்டீங்க அப்படித்தானே” எனக் கேட்ட வெற்றி வெளிப்படையாகவே கோபத்தை முகத்தில் காட்டியிருந்தான்.
“அப்போ நாங்கலாம் எதுக்கு இருக்கோம்?”
“சரி, வந்தீங்களே என்னத்த பார்த்தீங்க… அவனுங்க எதுக்கு உங்கள துரத்துனாக” என்று நக்கல் போல் வினவினான்.
அவனது கேலியை கூட உணராது, அவன் என்ன பார்த்தீங்க என்று கேட்டதும்… அவள் கண்ட காட்சிகள் கண் முன்னே விரிய, அனைத்தையும் அதிர்ச்சியுடன் வெற்றியிடம் கூறினாள்.
‘இது தனக்குத் தெரிந்தது தான்’ என்று மனதில் நினைத்தவன்,
“சரி உன்னை இவனுங்க தவிர வேறு யாராச்சும் பார்த்தாங்களா” எனக் கேட்க,
“இல்லை, என்னை இவனுங்க பார்த்ததும் அவங்க ஆளுங்க கிட்ட கூட சொல்லாம தொரத்த ஆரம்பிச்சிட்டானுங்க” என்றாள்.
“அதெப்படி உறுதியா சொல்லுற?”
‘சரியான போலீசா இருப்பாங்க போல, இந்த கேள்வி கேக்குறாங்க’ என்று மனதில் அரற்றியவள்,
வெளியில் “இவங்க மூணு பேரு மட்டும் எல்லாமவனுக்கும் சற்று தொலைவுல நின்னு வேலை பார்த்திட்டு இருந்தானுங்க” என்க,
அமரியையும் அழைத்துக்கொண்டு அவள் சொல்லிய குறிப்பிட்ட இடத்திற்கு சென்றான்.
அவ்விடத்தை கண்டதும் வெற்றியே ஆச்சரியத்தில் விழி விரித்தான். அது புலிகளின் எல்லையாக வகுக்கப்பட்ட ‘L’ வடிவ தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருந்தது.
‘புலிகள் நடமாடும் பகுதி என்பதால் வனத்துறையினர் ரவுண்ட்ஸ் வரும் வேளையில் தடுப்புகளை சுற்றி வருவோரே தவிர தடுப்புகளைத் தாண்டி உள் செல்ல மாட்டார்கள் போல். அது இவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது’ என நொடியில் அவ்விடத்தை பார்த்ததும் அவர்களுக்கு தோதான விளக்கத்தை அவன் மனம் கணக்கிட்டது.
புலிகள் தங்களுக்கென எல்லைகள் வகுத்து வாழும். தன்னுடைய எல்லையைத் தாண்டி வேறெங்கும் செல்லாது.
காட்டின் நடுவில் குறிப்பிட்ட எல்லைப்பகுதிகள் புலிகள் வாழுமிடமாகக் கருதி வட்ட வடிவில் L வடிவ தடுப்புகள் அமைக்கப்பட்ட பல ஏக்கர் பரப்பின், அடர்ந்த அடவிக்குள் மரங்கள் வெட்டி சிறு செடிகள் கூட இல்லாது சீரமைத்து தளம் போட்டு செவ்வக வடிவில் சுற்றுச் சுவர் மட்டும் மூன்றடிக்கு எழுப்பப்பட்டிருந்தது.
இரண்டு லாரிகள் வேறு அங்கு நிறுத்தப் பட்டிருக்க, பத்து தடியர்கள் தங்களது வேளைகளில் கவனமாக இருந்தனர்.
அவ்விடத்தையும் அங்கு நடப்பவையையும் நைட் விஷன் காமிரா மூலம் ஒன்றையும் விடாது படம் பிடித்தவன் தான் வந்த சுவடே இல்லாமல் அமரியை அழைத்துக் கொண்டு திரும்பினான்.
“காட்டுக்குள்ள இப்படியொரு தப்பு நடக்குதே, நீங்க போலீஸ் தானே பார்த்ததும் உள்ள புகுந்து கைது பண்ணாமல் திரும்பி வரீங்க,
இதை… இவனுவ செய்யுற தப்பை கலை பார்த்துட்டான்னுதானே அவளை கொலை செய்துட்டானுங்க, அவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?” என்று படபடவென பேசிய அமரியை ஆழ்ந்து நோக்கியவன்,
“இவங்க எல்லாம் வெறும் அம்புதான், எய்துறவன் யாருங்கிறதை தெரிஞ்சிக்கதான் இங்க வந்தேன்… தெரிஞ்சிகிட்டேன், இப்போதைக்கு இது போதும்” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே மேகம் மழையாய் பொழியத் துவங்கியது.
“அச்சச்சோ மழை வருதே, மழை வந்தா சரிவெல்லாம் வழுக்குமே எப்படி திரும்பி போறது” என்று அமரி பயம் கொள்ள,
வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போது சற்று ஓய்வெடுப்பதற்காக பருத்து அடர்ந்த மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த சிறு அளவிலான மர வீட்டிற்குள் அமரியை மழையில் நனைய விடாதவாறு இழுத்து வந்திருந்தான்.
“அதை இப்போ யோசி, எந்த தைரியத்தில் நீ காட்டுக்குள்ள வந்த?” என வெற்றி வினவ,
“எல்லாம் நீங்க இருக்கீங்கங்கிற தைரியத்துலதான்” என்று விளையாட்டாய் அவள் பதில் சொல்லியிருந்தாலும் வெற்றிக்கு அது பிடித்திருந்தது.
“என்ன இப்படி குளுருது, மழை வேற நல்லா வளுக்குதே” என்றவள்,
“என்ன இந்த வீடு இம்புத்தூண்டு இருக்கு. இதுல நான் உட்கார்ந்தாக்கா உங்களால நிக்கதான் முடியும் போல” என சொல்லிய அமரி தாவணியை இழுத்து போர்த்தியவளாய் மர சுவற்றோடு ஒட்டி உரசி அமர்ந்தாள்.
அவளின் உடல் குளிரில் நடுங்குவதை அறிந்த வெற்றி தான் அணிந்திருந்த ஜெர்க்கினை கழட்டி அவளிடம் கொடுக்க வாங்க சற்று தயங்கினாலும் உடலைத் தீண்டும் குளிர் பயமளிக்க யோசிக்காது வாங்கி அணிந்து கொண்டாள்.
சில நிமிடங்கள் அமைதியில் கழிய நினைவு வந்தவனாக,
“நீ யார்கிட்டவாவது சொல்லிட்டு வந்தீயா?” என்று அமரியை பார்த்து வினவினான்.
உதடு நடுங்க “இல்லையே” என்றவள் உடலை குறுக்கி அவ்விடத்தில் படுக்க,
“போச்சு உன்னை காணோமுன்னு எல்லாரும் தேடிட்டு இருப்பாங்க” என்ற வெற்றி அலைபேசியை எடுத்து கதிருக்கு அழைக்க முயற்சி செய்ய சிக்னல் இல்லாது அழைப்பு செல்ல மறுத்தது.
வெற்றி சொல்லிய பிறகுதான் அவள் செய்த மடத்தனம் புரிய, “போச்சு பஞ்சு என்னைய நல்லா வைய போகுது. பஞ்சு பஞ்சாய் பறக்க விட்டுடும்” என்று அழுகுரலில் கூறியவள் “வாங்க போலாம்” என வெற்றியின் கையை பிடித்து இழுத்திருந்தாள்.
“ஆமா எல்லாம் இப்போ யோசி, மழை எப்படி பெய்யுது பாரு… இதுல காத்து வேற பலமா வீசுது, கொஞ்சம் எல்லாம் குறையட்டும் போவோம்” என்று அமரியை தடுத்தவன்
“தங்கையை காணாது தன்னுடைய நண்பன் எந்த நிலையில் இருக்கிறானோ” என கதிரை நினைத்து கவலைக் கொண்டான்.
வெற்றி தடுத்ததும் மீண்டும் அமர்ந்தவள், “பஞ்சுகிட்ட திட்டு வாங்குறது உனக்கென்ன புதுசா அமரி” என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவளாக அப்படியே உறங்கியும் விட்டாள்.
தன்னுடைய எழிலையே பார்த்திருந்த வெற்றி அவளின் மடத் தனத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டான்.
“அங்கு கதிர், அவன் குடும்பம் இந்நேரம் என்ன பதட்டம் கொண்டார்களோ, எல்லாரையும் தேட வச்சிட்டு இங்க தூங்கிட்டு இருக்கிறத பாரு” என்று செல்லமாக தன்னவளை வெற்றி திட்டிக்கொண்டிருக்க,
அவனின் மனமோ… “உன் எழிலு மடத்தனமா செஞ்ச காரியத்தால் தான் இப்போ உன்னோடு இருக்கிறாள்” என அமரிக்கு துணை நின்றது.
“அதென்னவோ உண்மை தான்” என நினைத்த வெற்றி மற்றவர்களை மறந்து கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் தன்னுடைய எழிலை காதலாக ரசிக்கத் தொடங்கினான். வேறெப்போது இவ்வளவு நெருக்கத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறதோ என அந்நொடியை வெற்றி இழக்க விரும்பவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் அமரியும், மனதில் நிறைந்திருப்பவளின் அருகாமை தந்த இதத்தில் வெற்றியும் இருக்க… அமரியை வெற்றிதான் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான் என்கிற வெற்றி மீதான குற்றச்சாட்டிற்க்காக மொத்த ஊரும் அருவிக்கரை பஞ்சாயத்தில் கூடியிருக்க, வெற்றி குடும்பத்தார்… அனைவர் முன்னிலையில் தலை கவிழ்ந்து நின்றிருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
வீட்ல இருக்கவங்க யாருகிட்டயும் சொல்லாமல் வந்து பெரிய ஏழரைகூட்டி பஞ்சாயத்ல எல்லாரையும் நிக்க வெச்சிட்டு இங்கே இவ அமைதியா தூங்கிட்டு இருக்கா 😔😔
🤣🤣🤣🤣🤣