Loading

காவ(த)லன் 16

சசி அலறிய அலறளில் மூத்த தலைமுறையை தவிர்த்து நல்லு, சேது, ஜானகி ஆகியோர் மாடிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் வந்தபோது கண்ட காட்சி இதுதான்,
உருவம் மேலே பாய்ந்த வேகத்தில் நிலைத் தடுமாறி வெற்றி கீழே விழ அவன் மீதே விழுந்திருந்தது அவ்வுருவம்.

தனது உடல் மீது மோதியதுமே அவ்வுருவம் யாரென்று கண்டுபிடித்து விட்டான் வெற்றி.

“அடேய், நீ எங்க இங்க” என்று வெற்றி கேட்டதுமே அவன் தன்னை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த கதிர் மெல்ல அவனை விட்டு விலக, வேகமாக எழுந்து நின்ற வெற்றி, கதிர் எழும்ப கை கொடுத்தான்.

வெற்றியின் கையினை விளையாட்டாய் அடித்து, பின்னர் பிடித்த கதிர்… எழுந்து நின்று அணிந்திருந்த கருப்பு நிற முக மூடியைக் கழுட்டினான்.

அவர்களையே பார்த்திருந்த சசி

“இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க?” என்று சக்தியிடம் வினவ,

“பெரியப்பாருகிட்ட உதை வாங்குறதுக்கு” என நக்கல் போல் பதிலளித்தான் சக்தி.

“இந்நேரத்தில எதுக்கு வந்த?”

“ஏன் மச்சான் நான் உன் வீட்டுக்கு வர கூடாதா?”

“நானே கூப்பிட்டாலும் எங்க அப்பாருக்கு பயந்து வரமாட்டேன் சொல்லுவியே, அதான் கேட்டேன்.”

இதனை சொல்லும்போது வெற்றியின் பார்வை ஒரு நொடி நல்லுவை தொட்டு மீண்டது.
இருவரும் மற்றவர்களை கருத்தில் கொள்ளவே இல்லை. அவர்கள் இருப்பதை வெற்றி அறிருந்திருந்தாலும், கதிர் அறியவில்லை. வெற்றி குடும்பத்தாரை பார்த்து நிற்க, கதிர் அவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் மச்சான்.”

“அதை நாளைக்கு நேரில் பார்க்கும்போது சொல்றது, இல்லனா போன் போட வேண்டியது தானே…  ராத்திரி வேலையில இந்த சர்க்கஸ் வேலை தேவை தானா?” என நண்பனின் மீது அக்கறைக் கொண்டவனாகக் கேட்டான்.

“இவுங்க அக்கறையை பார்த்தாக்கா, அப்படியே புல்லரிக்குது சக்தி” என சசி கிண்டலடிக்க,

கோவிலில் கதிரை பார்த்தே எரிச்சலில் இருந்த சக்தி, இப்போது அவன் தன்னுடைய வீட்டில் தனது அண்ணனிடமே உரிமையாக நின்று பேச ஆத்திரத்தில் இருந்தவன் சசியின் பேச்சுக்கு… “மாட விட்டு மேய விடுடா” என காய்ந்தான்.

“என்னண்ணா நடக்குது இங்க?”

சேது ஒன்றும் புரியாது வினவ,

“பாச பிணைப்புதான்” என சுள்ளென்று விழுந்த நல்லு, “ஏத்தா கீழ போ… இவன் கத்துன கத்துல என்னமோ ஏதோன்னு இங்க வந்து பார்த்தா இதுங்க ரெண்டும் கொஞ்சிட்டு இருக்கு” என்று சசியை முறைத்துக்கொண்டே ஜானகியிடம் சொன்னவர், “உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா” என்று சேதுவையும் உடன் அழைத்துச் சென்று விட்டார்.

“என்னடா பெரியப்பாரு அவனை நம்ம வீட்டு மாடியில பார்த்ததுக்கு அப்புறமும் அமைதியா போயிட்டாரு” என்ற சசி சக்தியின் முறைப்பில் கப்சிப் ஆகினான்.

‘எப்போ பாரு என்னை முறைக்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சுது’ என வழக்கம்போல் சசி புலம்ப… “நீ புலம்புனது எனக்கு கேட்டுச்சு” என்ற சக்தி அங்கு நடந்து கொண்டிருந்த அவர்களின் உரையாடலை கவனித்தான்.

“உனக்கு மூணுவாட்டி போன் போட்டு எடுக்கலன்னு தான் நேரிலே வந்தேன்” என்று கதிர் சொல்ல,

“அப்படி என்ன தலை போகிற விடயம்” என்று கதிரிடம் கேட்டுக்கொண்டே, கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக்கொண்டே மாடி சுற்று சுவரில் சாய்ந்த வெற்றியின் தோளினை இறுக பற்றிய கதிர் சந்தோஷத்தின் மிகுதியாக அவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தான்.

முதல் முறையான இச்செய்கையில் வெற்றி கதிரை ஆச்சரியமாக பார்த்தானென்றால், சக்திக்கு தன்னைவிட தன்னுடைய அண்ணனுக்கு அவன் நெருக்கமாக இருப்பதாக உரிமை உணர்வு தோன்றியது.

“இவங்க ரெண்டு பேரும் கூட்டாளின்னு தானே நினைச்சிட்டு இருந்தோம், பார்த்தாக்கா அப்படி தெரியலயே” என்று சசி விழி விரித்தான்.

கதிர் தன்னை விடப்போவதில்லை என்பதை உணர்ந்து வெற்றியே அவனை விலக்கி நிறுத்த அப்போதுதான் தன்னுடைய செய்கை புரிந்து கதிர் அசடு வழிய நின்றான்.

“பார்க்க சகிக்கல, வந்த விடயத்தை சொல்லு…” என வெற்றி கேட்க, கால் பெருவிரலை தரையில் தேய்த்தவாறு நெலிந்தான் கதிர். கூடவே வெற்றியின் டி-ஷர்ட் பொத்தனையும் திருகினான்.

“ஏய்… ஏய்… என்னடா பண்ணுற?” என்று துள்ளி குதித்து வெற்றி விலகினான்.

“உண்மையிலேயே இவனுக்கு மர கழுண்டுடுச்சு” என்று சக்தி கலாய்க்க, சசி சிரித்தான்.

அவர்கள் சிரிப்பதை கவனித்த வெற்றி, ‘மானத்தை வாங்குறானே’ என தலையில் தட்டிக் கொண்டான்.

“நீ பண்ணுறதெல்லாம் பார்த்தாக்கா எனக்கு வேறெதுவோ தோணுது… மொத வந்த விடயத்தை சொல்லுடா” என கதிரை உலுக்கினான்.

“அது மச்சான்… நீ… இல்லை இல்லை, நா….ன், அதான்டா நீ…”

“நீயா? நானா?” என வெற்றி கேட்க, மீண்டும் நெலிந்த கதிரிடம்…

“நீ சொல்லலனாலும் பரவாயில்லை, ஆனால் வெட்க படுறன்னு வேறென்னவோ பண்ணுற பார்த்தியா அதை மட்டும் நிறுத்து” என்றவன்… “நீ வீட்டுக்கு போ, நாளைக்கு பேசிக்கலாம்” என்று துரத்தினான்.

“கோச்சிக்காத மச்சான். நான் சொல்லிடுறேன்” என்ற கதிர், முகத்தை கைகளால் மூடிக்கொண்டு… “என் மச்சா(ன்)ங்கிற பதவியிலிருந்து மாமங்கிற பதவிக்கு நீ ப்ரொமோட் ஆகிட்டடா” என சொல்லி முடிக்கும் முன் வெற்றி கதிரை தூக்கி சுற்றியிருந்தான்.

“நிஜமாவே இதுங்க ரெண்டும் லவ்வர்ஸ் தான் சக்தி” என சசி கூற,

“அவன் சொன்ன விடயத்தை நீ கவனிக்கலையாடா” என்ற சக்தி சசியின் தலையில் கொட்டி…

“வெற்றி மாமான்னா என்ன அர்த்தம், வாணி உண்டாயிருக்கா(ள்)” என்க பகையெல்லாம் மறந்து சசியும் ஓடிச்சென்று,

“ஹேய் நான் மாமா ஆகிட்டனா?” என்று அவன் துள்ளிக் கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி ஒலித்தது.

கதிருக்கு வெற்றியை போல் வாணிக்கு சசி.

“வாழ்த்துக்கள் டா”.
அழைப்பை ஏற்றவன் தன்னுடைய இருப்பைக்கூட தெரிவிக்காமல் வாழ்த்துக் கூறினான்.

“உனக்கெப்படித் தெரியும்?” என வாணி கேட்க,

“இப்படியொரு நல்ல விடயம் நடந்திருக்க நேரத்துல, பொண்டாட்டியை கொஞ்சமா ஒரு ஆளு இங்க வந்து நண்பனை கொஞ்சிக்கிட்டு இருக்கு” என்றான் சசி.

சசி சொல்லியதில் வெற்றி சத்தமாக சிரித்து வைக்க, கதிர் அசடு வழிந்தான்.

“அவங்க அங்க வந்திருக்காங்களா?”

“எவங்க?… உங்க வீட்டுக்காரங்களா?, அவங்க இங்கக்குள்ளதான் இருக்காங்க” என கிண்டல் செய்த சசி… “இந்த விடயம் அப்பாருக்கெல்லாம் தெரிஞ்சா சந்தோஷப்படுவங்க டா, ஆனால்…” சொல்ல வந்ததை சொல்லாது கண் கலங்கினான்.

சசியின் தோளில் ஆறுதலாக கை போட்ட வெற்றி அலைபேசியை வாங்கி, “கவனமா இரு” என்றதோடு அழைப்பத் துண்டித்து… “எல்லாம் சரியாகிடும்” என சசியிடம் கூறினான்.

“சரிடா நீ கிளம்பு, பார்த்து போ” என்ற வெற்றி நான் வேணுன்னா கூட வரவா?” எனக் கேட்க…

வேண்டாமென்ற கதிர் தன்னையே பார்த்திருந்த சக்தியிடமும் வருகிறேன் எனக் கூறிச் சென்றான்.

இத்தருணத்தில் சக்திக்கும் கதிரிடம் பேச ஆவல் எழுந்தது தான். அதற்கு காரணம் அவர்கள் பிரிவு ஆட்களை பார்த்தாலே சண்டைக்குத் தயாராகும் தன்னுடைய தந்தையர்கள் இன்று தங்களது வீட்டிலேயே கதிரை பார்த்த பிறகும் ஒன்றும் கூறாது அமைதியாக சென்றது. இருப்பினும் முதலில் தானெப்படி சென்று பேசுவதென தயங்கி நின்றான். சக்தியின் தயக்கம் புரிந்ததாலேயே முதல் அடியை கதிர் எடுத்து வைத்து போகும்போது சக்தியிடமும் தலையசைத்துச் சென்றான்.

“பகையோடு வாழறதால யாருக்கும் எந்த லாபமும் இல்ல… ஒரு சின்ன சிரிப்பு போதும் ஒருத்தரோட மனச கவர்ரதுக்கு… எதனால பகைன்னு தெரியாதப்போ எதுக்கு இந்த வீம்பு” என்று சக்தியை பார்த்துக் கேட்ட வெற்றி,

“பெருசுங்கதான் ஏதோ அது இதுன்னு இந்த பகையை புடுச்சிக்கிட்டு தொங்குதுங்கன்னா… நீ இந்த தலைமுறைதானே உனக்கெதுக்கு இதெல்லாம், நம்ம பொறந்தவளோட கணவன்னு மட்டும் அவனை பாரு” எனச் சொல்லி கீழே சென்றான்.

“ஆமா, அண்ணா சொல்லுறதும் சரிதான்… நாலு தலைமுறை ஐஞ்சு தலைமுறை பகைன்னு சொல்லுவாங்க, கேட்டாக்கா வீட்டு விசேட பந்தியில உப்பு வைக்கல பாயசம் தரலன்னு ஒன்னுத்துக்கும் உதவாத காரணத்தை சொல்லுவாங்க, நம்ம தலைமுறையிலையாவது எதுவுமில்லாம ஒத்துமைய இருப்போம்” என்று சசியும் தனது பங்குக்கு சொல்ல,

“ஏய் வீட்டுல பெருசுங்க பேசாததால நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கியிருந்தா நான் என்னவோ வேலு கம்பு எடுத்துக்கிட்டு பகையை வளக்கற மாதிரி பேசுறீங்க” என்று சிரித்துக்கொண்டே கூறிய சக்தி

“வாணியை பார்க்கணும் போல இருக்குதுடா” என்றவனாய் உறங்கச் சென்றான்.

வீட்டில் சிறியவர்களுக்கு தெரிந்த மகிழ்வான செய்தி பெரியவர்களுக்கும் தெரிந்தால் பகை விலகுமோ அல்லது அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தால் பகை மேலும் அதிகரிக்குமோ… வெற்றியின் எண்ணம் நிறைவேறுமா… யாவும் விதியின் விளையாட்டில் அரங்கேற காத்திருக்கிறது.

கதிர் வீட்டிற்கு வந்த நேரம் வாணி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
இந்நேரத்தில் அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்தவன் அவளை அணைத்தவாறு படுத்துவிட்டான்.
மனைவியின் வயிற்றில் கை வைத்தவன், “குட்டி நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்க…

“ரெண்டு மாசத்துல நீங்க பேசுறது கேக்காது” என்று வாணியிடமிருந்து பதில் வந்தது.

கதிர் அணைத்ததுமே அவள் விழித்து விட்டாள்.

கதிர் பதிலேதும் பேசாது அமைதியாக விலகி படுக்க,

“இன்னும் கோபம் போகலையா… நாந்தான் நிறைய முறை மன்னிப்பு கேட்டுட்டேனே” என்றவள் மீண்டுமொரு முறை கரகரத்த குரலில் மன்னிப்பு கேட்டாள்.

மனைவி அழுகிறாளென்றதும் அவளை வேகமாக இழுத்து இறுக்கி அணைத்தவன், “அதை மறந்துடலாம், இனி அதைப்பற்றி பேச வேண்டாம்” என்க அவளும் சரியென்று தலையசைத்தாள்.

சில நொடி இருவரின் மௌனத்திலும் கழிந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்டி பொண்டாட்டி” என்றவன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க,

“பாட்டிக்கிட்ட விட்ட சாவாலில் ஜெயிச்சிட்டேனே” என்று வாணி கூவினாள்.

“புருஷன் கொடுத்த முத்தத்தை அனுபவிக்கமா இப்போ இது தேவையாடி” என்று கேட்டு கோபாம் போல் நடித்தவன்… “நீயா ஜெயிக்கல, உன்னை நான் ஜெயிக்க வச்சிருக்கேன்” என கெத்தாகக் கூறினான்.

“ம்க்கும்” என்று நொடித்தவள், “உங்க பிரண்ட கொஞ்சியாச்சாக்கும்” எனக் கேட்டாள்.

“ம்ம், எம் மச்சான் என்னைய தூக்கிலாம் சுத்துனானே… படிக்கும் போது பண்ணது… அடுத்து இப்போத்தேன்” என்று சொல்லியவனின் முகம் முழுக்க சந்தோஷம் பரவியிருந்தது.

“போதும் போதும்” என்றவள் திரும்பி படுத்துக்கொள்ள,

“உனக்கு பொறாமைடி” என்று கிண்டல் செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு சுணக்கம் மறந்து ஒருவரையொருவர் கேலி செய்தும்… சிறு சிறு கொஞ்சல்களுடனும், நீளா பேச்சுகளுடனும்…  புது வரவின் மகிழ்ச்சியோடும் இனிமையாக அவ்விரவினை கழித்தனர்.

அடுத்தநாள் அலுவலகம் வந்த கதிர், விலங்குகளின் எண்ணிக்கை அடங்கிய பதிவேட்டினை குடைந்து கொண்டிருந்தான்.

‘ஒரு விலங்கின் எண்ணிக்கைகூட உருப்படியா எடுத்து வைக்கல’ மனதில் சலித்துக் கொண்டான்.

“அன்று காட்டில் அந்தப்பெண் இறந்து கிடந்த அன்றே கேட்க வேண்டுமென்று நினைத்தேன், காட்டில் ஏன் குறிப்பிட்ட பகுதிகளில் கூட காமிரா பொருத்தவில்லை?” என்று தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளரிடம் வினவினான்.

“வேட்டைக்கு போற காட்டுவாசி பயலுவ, மாட்டிக்க கூடாதுன்னு ஒடைச்சி போட்டு போயிடுறானுவ சார் அதான் வைக்கல” என வேறொருவர் பதிலளித்தார்.

“சரி திரும்ப வையுங்க, இனி யாரு உடைக்கறான்னு நான் பாக்குறேன்” என்றவன் “அனைத்து விலங்குகள் எண்ணிக்கையும் இன்னும் இரு தினங்களில் என் கைக்கு வந்தாகனும்” என கட்டளை போல் கூறினான்.

“அவங்க வைக்கக்கூடாது சொல்றாங்க… இவரு வையுங்க சொல்றாரு, யார் சொல்லுறதை கேக்குறது” என ஒருவர் மற்றொருவரிடம் முனக,

“யாரு வைக்கக்கூடாது சொன்னாங்க?” என்றுக் கேட்டான் கதிர்.

“அதெல்லாம் மேலிடத்து விவகாரம் சார், எங்களைய ஆள விடுங்க” என இருவரும் ஒரு சேரக் கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

அதன் பின்னர் கதிரே தன்னுடைய மேற்பார்வையில் அனைத்து இடங்களிலும் அன்றே காமிராவினை பொறுத்தினான். வேலை முடிந்து வரும் வழியில் காட்டின் உட்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்தவன் சில தகவல்களை சேகரித்ததோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்வதாக வாக்களித்தான்.

தன்னுடைய இருக்கையில் கால் மேல் காலிட்டு உட்கார்ந்திருந்த வெற்றி வழக்குகள் எதையும் ஆராயாது சாக்லேட்டினை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
அவன் சாக்லேட் சாப்பிட்டாலே ஏதேனும் ஒன்றிருக்கும் என்று அறிந்து வைத்த அனைவரும் அதனை கண்டுகொள்ளாது தத்தம் வேலைகளை செய்து கொண்டிருக்க ராம் மட்டும் வெற்றியிடம் சென்று,

“எப்படி சார் உங்களால் மட்டும் இந்நேரத்திலும் இவ்வளவு பொறுமையா இருக்க முடியுது?” எனக் கேட்டான்.

“இந்நேரத்திலும் சாக்லேட் சாப்பிடுறீங்களேன்னு தானே கேட்க வந்தீங்க ராம்” என்ற வெற்றிக்கு ராமின் அமைதியே அதுதான் என சொல்லிவிட,

“அதுக்காக நான் சாக்லேட் சாப்பிடக் கூடாதா ராம்” என்று அப்பாவியாகக் கேட்டான்.

“நான் அப்படி சொல்ல வரல சார், நீங்க ரொம்ப ஸ்லோவா கேஸ் டீல் பண்ற மாதிரி இருக்கு” எனத் தயங்கிக் கூறினான்.

“ஸ்லோ அண்ட் ஸ்டெடி… வின் தி ரேஸ், கேள்வி பட்டதில்லையா ராம்” என்ற வெற்றி “நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு தீர்ப்பு வழங்க ஆறு மாதம் ஏன் ஒரு வருடம் கூட ஆகும்… அந்த கால தாமதம் எதுக்குன்னு நினைக்கிறீங்க?” எனக் கேட்டான்.

‘இதற்கும் தான் கேட்டதற்கும் என்ன சம்மந்தம்’ என பார்த்த ராம் “குற்றவாளி தப்பிப்பதற்குத் தான்” என்றான் நக்கலாக,

“அது அப்படியில்லை ராம், நிரபராதி யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு்… வழக்கினை நன்கு ஆராயும்போது ஒரு முறை இல்லாவிட்டாலும் மறுமுறை வேறு பாதையில் யோசிக்கத் தோன்றும்… அவ்வாறு பலமுறை பல்வேறு பாதையில் வழக்கு பயணித்தால் பார்க்கும் நமக்கே குற்றவாளி யாருன்னு சுலபமா தெரிந்திடும், அதற்குத்தான் அந்த கால தாமதம்” என விளக்கம் கொடுத்தான்.

ராமின் மனநிலை புரிந்தும் புரியாமலும் இருந்தது.

“நீ இதை புரிந்துகொள்ள உனக்கு நிறைய அனுபவம் வேண்டும்” என்ற வெற்றி மீண்டும் சாக்லேட் சாப்பிடத் தொடங்கினான்.

ராமிற்கு அய்யோ என்றிருந்தது. ‘குற்றப்பிரிவு வேண்டுமென்று கேட்டு இவரிடம் வந்து மாட்டிக்கொண்டேனே’ என மனதோடு புலம்பினான்.

“இதுதான் உங்களுக்கு முதல் வழக்கா?” எனக் கேட்ட வெற்றியிடம் ஆமென்று தலையாட்டினான் ராம்.

“சார் இந்த வழக்கு எப்போ முடியும்?”

“ஏன் கேக்குறீங்க?”

“வேறெதுவும் நல்ல வழக்குக்கு போலான்னு தான் சார்.”

“ராமின் பதிலில் அட்டகாசமாக சிரித்த வெற்றி வழக்குகள் என்றாலே தவறு தானே, இதுல நல்லது எங்கிருக்கு” என கேட்டவன் “99 சதவிகிதம் இந்த வழக்கு முடிஞ்சிருச்சு, உங்களுக்கு வேணுன்னா நீங்க வேறு வழக்கில் இணைந்து கொள்ளலாம்” என்றான்.

“மீதி ஒரு விகிதம் சார்?”

ராமை நோக்கி மென் புன்னகை சிந்திய வெற்றி “குற்றவாளி யாருன்னு கண்டுபிடிக்கணும்” என்க,

“சத்தியமா என்னால முடியல சார்” என்று வாய்விட்டேக் கூறினான் ராம்.

“சாக்லேட் சாப்பிடுங்க ராம்… ரிலாக்ஸ் ஆகிடுவிங்க” என அவன் முன் வெற்றி சாக்லேட்டினை நீட்ட, அவன் வாங்காததும்.. “எங்கு என் சாக்லேட்டினை நீங்க வாக்கிப்பீங்களோன்னு பயந்துட்டேன்” என்று சிறு பிள்ளை போல் பேசினான் வெற்றி.

இவரிடம் தன்னால் முடியாதென ராம் ஒன்றும் பேசாது அங்கிருந்து செல்ல…

“வேகத்தை விட விவேகம் ரொம்ப முக்கியம் ராம்” என்றான் வெற்றி.

தனது நடையை தொடராது திரும்பி நின்ற ராம், “அதுக்காக இவ்வளவு பொறுமை கூடாது சார்” என்க,

“சரி இந்த வழக்கு சம்மந்தமா நான் பார்த்த அனைத்து விசாரணைகளையும் நீங்களும் ஆராய்ந்திருக்கிங்க, உங்க கண்ணில் என்னவெல்லாம் சிக்கியது” என கேட்டான் வெற்றி.

“போதைப்பொருள் வழக்கை திசை திருப்பவதற்கு தான் காட்டில் இந்த கொலைகள் எல்லாம் நடக்குது ஆனால் அதில்லைன்னு சொல்லிட்டீங்க” என பதிலளித்த ராமிற்கு, வெற்றி தான் கண்டறிந்தவற்றை புரியும் வகையில் விளக்கிக் கூறினான்.

வெற்றி சொல்லி முடித்ததும் ராம் சொல்லிய வார்த்தைகள்,
“யூ ஆர் கிரேட் சார்.”

______________________

இன்று கோவில் பார்ப்பதற்கே கண்கள் குளிர மிகவும் வண்ணமயமாக காட்சியளித்தது.
ஒலிபெருக்கி இசைக்காமலே உயரத்திலிருந்து ஆர்ப்பரிப்புடன் கொட்டும் அருவி நீர் மத்தளம் கொட்ட, பல வண்ண காட்டு மலர்கள் கொண்டு கோவில் அலங்கரித்திருக்க, கோவிலில் வெளிப்புற பரப்புகள் முழுக்க வண்ண காகிதங்களால் தோரணங்களால் நிரம்பி பார்ப்பதற்கே அவ்விடம் மன நிம்மதி கொடுக்கும் வகையில் இருந்தது.

ஒரு பக்கம் அம்மனுக்கு அபிடேகம் நடந்துக் கொண்டிருக்க… மறு பக்கம் பெண்கள் அனைவரும் பொங்கல் வைக்கத் தயாராக இருந்தனர்.

கோவில் பூசாரி அம்மனுக்கு அபிடேகம் முடித்து வந்ததும், கல் அடுப்பில் கற்பூரம் வைத்து தீ மூட்டி நீர் நிரம்பிய பொங்கல் பானையை வைத்ததும்… பெண்கள் அனைவரும் அதேபோல் செய்தனர்.

வீட்டிற்கு வர போகின்ற மருமகள் என்பதால், ஜானகி மதிக்கு முன்னுரிமை அளித்து விலகிக் கொள்ள… அவளே பொங்கல் பானையை பற்ற வைத்தாள்.

அதனை பார்த்திருந்த செல்லச்சாமி மற்றும் ராசுவிற்கு தாயில்லா தங்கள் மகளுக்கு ஜானகி ஒரு தாயாக இருந்து அவளை பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை வலுத்தது.

பட்டு சேலை உடுத்தி அழுகுற இருந்த மதியின் மதி முகத்தை விடுத்து சக்தியின் கண்கள் நகரவில்லை. சக்தியின் காதல் தெரிந்த பின்னர் இயல்பு போல் அவனை பார்க்க முடியாத மதியோ குனிந்த தலை நிமராது பானைக்குள்ளேயே தன்னை புதைத்துக் கொண்டாள்.

“ஏய் கோட்டி பயலே அங்க நகர்ந்து போயி வேறெதாவது வேலையை பாரு” என்று செண்பகம் சக்தியை விரட்ட அவன் அசைந்தானில்லை.

தலையில் தட்டிக்கொண்டவர், “இன்னும் நிச்சயம் கூட ஆகல… அதுக்குள்ள என்ன இந்த அலும்பு பண்ணுற, நீ பாக்குறதுல அவ(ள்) உன் கண்ணுக்குள்ள மூழ்கிடுவா போலிருக்கு” என்று சத்தமாக வைய… மதி கலகலத்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பினை கண்டு ஏக்க பெரு மூச்சினை சக்தி வெளியேற்றினான்.

“ஹேய் இந்தா புள்ள, அவனே ஏதோவொரு மூடுல தெரியுறான்… நீ வேற சிரிச்சு உசுப்பேத்திட்டு இருக்க” என்று சசி மதியிடம் கூற,

கையிலிருந்த விறகுக் கட்டையாலே செண்பகம் பாட்டி சசியின் முதுகில் ஒரு அடி போட்டார்.

“ஏய் கெழவி… முழுங்கிடுறது மாதிரி பாக்குறது அவன், என்னைய ஏன் அடிக்கிற” என்று வலித்த முதுகினை தேய்த்துக்கொண்டே சசி அலறினான்.

“நாளைக்கு உனக்கு அண்ணியா வரபோறவ(ள்), இப்படித்தான் மரியாதை இல்லாமபேசுவியா” என பாட்டி கேட்க…

“அதானே, இங்க பாருங்க தம்பி…
ஒழுங்கா இனி அண்ணின்னு கூப்பிடு.”

“என்னது தம்பியா,” மதி தம்பி என்றதுலேயே அதிர்ச்சியாகியவன் அடுத்து மதி கூறியதில் விளக்கெண்ணெய் குடித்ததைப்போல் முகத்தை அஷ்டகோணலாக மாற்றினான்.

மதி சக்தியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருக்க தானாக வாய்ப்பு கிடைத்தது.

“இங்க இருந்து இந்த கண்றாவியெல்லாம் என்னால பார்க்க முடியாது, நீ வா… நாம போயி எலுமிச்சை மாலை கோர்ப்போம்” என்று தன்னுடைய மருமகளை பாட்டி அழைத்துச் செல்ல,

“உனக்கு தனியா சொல்லுனுமா, பழத்தை யாரு தூக்கிட்டு வருவா… கூட வாடா” என ஜானகி சசியையும் கையோடு இழுத்துச் சென்றார்.

செல்லச்சாமியும் ராசுவும் எப்போதோ கோவில் வேலைகளை கவனிக்கச் சென்றிருந்தனர்.

சக்தியும் அவ்விடம் விட்டு அகல,
“ஒரு நிமிடம்” என அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

“மன்னிச்சிக்கோங்க”, சேலை தலைப்பினை திருகியவாறு ஒருவித தயக்கத்துடனே கேட்டாள். ஏனோ அன்று செல்லச்சாமி சொல்லி சென்றதில் புரிந்த ஒன்று அவனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லித் தூண்டியது. அதுவும் அவனுக்கு ரசிக்கவே தூண்டியது.
அவனிடமிருந்து எவ்வித பதிலுமின்றி போக தலை நிமிர்ந்து பார்த்தவள் சக்தியின் வசீகர பார்வையில் ஒரு நொடி தன்னை இழந்தவள்… அடுத்த கணம் தானிருக்கும் இடம் உணர்ந்து,

“அய்யோ கோவிலில் வைத்து பாக்குற பார்வையை பாரு” என்று சத்தமாகவே புலம்பினாள்.

அடுப்பில் விறகினைத் தள்ளிக்கொண்டே, “மொறைச்சி பாக்குற கண்ணு ரெண்டையும் நோண்டனும்” என்று முணுமுணுக்க…

“மதி இஸ் பேக்” என்றவன்,

“இவ்வளவு நேரம் வெட்கப்பட்டுகிட்டு இருந்தியா… அதான் என்னோட மதியான்னு சந்தேகம் வந்துடுச்சி, ஆனால் இப்போ கன்பார்ம் ஆகிருச்சு நீ மதியே தான்” என்று கூறி சிரித்தான்.

சக்தி “என் மதி” என்று சொல்லியது அவளின் இதயத்தை சில்லென்று உணர வைத்தது.

‘இதைத்தான் அவனும் தன்னிடம் எதிர் பார்க்கின்றானோ’ என ஆராய்ந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று தெளிவாக புரிந்தது.

“காதலென்று சொல்லியிருந்தால் தன்னை மணக்க உடனே சம்மதம் சொல்லியிருப்பானோ” என்று உணர்ந்தவள், எதையும் நேரடியாக பேசியே பழக்கம் கொண்டவள், தான் உணர்ந்ததையும் பட்டென்று அவனிடம் சொல்லியிருந்தாள்.

“உங்களோட பாதுகாப்பா இருப்பன்னு சொன்னதே, எம் மனசுக்குள்ள எனக்கேத் தெரியாம நீங்க இருந்ததாலதான்… ஆனால் இப்போ எனக்குத் தெளிவா தெரிஞ்சுபோச்சுங்க, நானும் உங்கள விரும்புறேன்.”

இத்தனை நாளாக எதைக் கேட்க காத்திருந்தானோ அதனைக் கேட்டதும் எங்கோ காற்றில் மிதந்து செல்வதை போல் உணர்ந்தான்.

“எனக்குத் தெரியும், இதை நீ சொல்லி நான் கேட்கணும் எதிர்பார்த்தேன்” என்றவன்,

“எனக்கும் உன்னை கட்டிக்கிட சம்மதம்” என அவளுக்கு வேண்டிய பதிலை சொல்லியிருந்தான்.

“இதுக்காகத்தான் இவ்வளவு நாளா என்னைய விரும்பியும் நீங்க சம்மதம் சொல்லலையா?” என மதி கேட்க மென் புன்னகையுடன் ஆமென்று கூறியவன், அவள் தன்னை நேருக்கு நேர் பார்த்திருந்ததால்… இவ்வளவு நேரம் தான் பார்த்திருக்கும்போது தெரியாத சுற்றுப்புறம் இப்போது புரிய,

“ஒழுங்கா பொங்கல் வை, சாப்பிடற மாதிரி இருக்குமா?” என கேலி போல் பேசி காதல் தந்த இதத்துடன் அங்கிருந்து அகன்றான்.

மதிக்கு எதையோ வென்ற உணர்வு.
சசியை தேடிக்கொண்டே வந்த சக்தி, அவன் எலுமிச்சை பழத்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்க அவனுக்கு அருகிலிருக்கும் செண்பகம் மற்றும் ஜானகிக்கு அறிந்திடாது ஜாடை செய்து சில அடி தூரம் அழைத்து வந்தான்.

“அந்த பக்கம் தான் அவங்களாம் பொங்கல் வைக்கிறாங்க, நாம போயி ஒரு எட்டு வாணியை பார்த்திட்டு வரலாமா?”
சக்தி ஏக்கமாகக் கேட்டான்.

பார்த்தக்கொள்வதில்லையே தவிர வாணியும் சசியும் அப்பப்போ அலைபேசியிலாவது பேசிக் கொள்வார்கள். ஆனால், சக்தி வாணியின் குரல் கேட்டே பல மாதங்கள் ஆகிறது. ஆதலால் தங்கையின் மகிழ்வானத் தருணத்தில் பங்கு கொள்ள நினைத்து அவ்வாறு கேட்டான்.

அவனின் ஏக்கம் புரிந்த சசி,
“போலாம் இதுக்கெதுக்கு இப்படி தயங்குற” என்று கேட்ட சசி மதிக்கு அழைக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை.

“இங்கதான் எல்லாரும் இருப்பாங்க, நேரிலே போய் பார்த்துக்கலாம்” என சக்தியை அழைத்துச் சென்றான்.

“இவ(ள்) வயசு புள்ளைங்கலாம் சீவி சிங்காரிச்சு எம்புட்டு லட்சணமா பொங்க வச்சிட்டு இருக்காளுவ, நீ மட்டும் ஏட்டி இங்க வந்தும் எதையோ பறிகொடுத்தவ மாதிரி உட்காந்திருக்க”, பஞ்சு பாட்டி காட்டு கத்தலாகக் கத்தியும் அமரியிடத்தில் எவ்வித அசைவும் இல்லை.

“இப்படியே இருந்தா வெளங்கிடும்” என்று நொடித்துக்கொண்டே அடுப்பில் விறகினை சொருகினார்.

“இவ்வளவு வேகம் என்னத்துக்கு அத்தை, அவ சரியாகிடுவா(ள்).” மகளுக்கு ஆதரவாக பேசிய அன்னம், மீண்டும் அவர் ஏதாவது பேசி அமரியின் மனதை நோகச் செய்வாரென்று நினைத்து,

“செத்த குடிக்க தண்ணீ கொண்டாத்தா, நா வறண்டு போச்சு” என அங்கிருந்து அமரியை அப்புறப்படுத்தினார்.

ஒருவழியாக பஞ்சு பாட்டியை கண்டுபிடித்து வாணியும் அவர்களுடன் தானிருப்பாரென்று சக்தியும் சசியும் தயங்கி தயங்கி அவர்கள் முன் சென்று நின்றனர்.
அந்நேரம் விநாயகம் அன்னத்திடம் ஏதோ கேட்க அங்கு வந்திருந்தவர், சக்தியை கண்டு…

“வாப்பா, ஐயா ஏதும் சொல்லி விட்டாங்களா?” எனக் கேட்க,

“இவரா நம்மகிட்ட பேசனது… எனக்கு மயக்கம் வரும் போலிருக்குடா” என சசி ஆச்சர்யமாகக் கூற,

“நம்மள பார்த்ததும் அறுவா தூக்கிட்டு வருவாரு நினைச்சேன்” என்றான் சக்தி.

தன்னுடைய ஒரே மகனின் உயிரைக் காப்பாற்றிய நல்லு குடும்பத்தின் மக்கள் என்றதும் பஞ்சு பாட்டிக்கூட பகை துறந்து இருவரையும் வாஞ்சையுடன் பார்த்தார்.

“ஏம்ப்பா அங்கயே நின்னுட்டு, என்ன விடயம்” என்றார்.

“அது வந்துங்க பாட்டி… தங்கச்சியை பாக்கணும்” என்று சசி சிறு தயக்கத்துடனே கேட்டான்.

“அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம், அவ ஆஸ்பத்திரிக்கு போயிருக்கா” என பாட்டி சொல்லியது தான்,

“அச்சச்சோ வாணிக்கு என்னாச்சு?” என்று பதறினான் சக்தி.

சசி தான் அவனின் கை பிடித்து பதற்றத்தை குறைத்து எதற்காக மருத்துவமனை சென்றிருக்கக்கூடும் என்று சொல்ல சக்தி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

வாணி இல்லையென்றதும் அங்கிருந்து நகர்ந்தவர்களை,

“பொங்கல் சாப்பிட்டு போலாம் தம்பிங்களா” என விநாயகம் கூற…

“அங்க பாட்டி, அம்மா தேடுவாங்க… நாங்க போறோம்” என்று சொல்லிக்கொண்டே சசியை இழுத்துச் சென்றான் சக்தி.

“இப்போதான் இதுங்க மொக்கு பாப்பாங்க வீட்டுல தேடுவாங்க” என்று கேலி செய்த பஞ்சு தன் வேலையை கவனித்தார்.

அருவிக்கரைக்கு எப்போ வந்தாலும்  அமரும் பாறையில் இன்றும் தஞ்சம் கொண்டாள் அமரி. மனம் முழுக்க ஏதோ அழுத்தம், அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றாள்.

‘தன்னுடைய தோழியின் இறப்பிற்கு நியாயம் செய்யவில்லையோ’ என அவளின் மனம் நொடிக்கு நொடி குற்றம் சுமத்துகிறது.

“நீ எப்புடிடி இறந்து போன”, வானோக்கி கேட்டவள் கதற துடித்த மனதினை அடக்கி மெல்ல அழுகையில் கரைந்தாள். இருக்கும் சூழல் அவளை மனம் விட்டு அழ விடவில்லை. தோள் சாய யாராவது வேண்டுமென வெதும்பினாள்.

சரியாக அந்நேரம் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் காக்கி உடையில் தோரணையாக கோவில் வளாகத்தினுள் நுழைந்த வெற்றியின் கண்கள் அந்த கூட்டத்தில் அவனது எழிலைத்தான் தேடியது.

தானாக அருவிக்கரை பாறையில் நிலைத்தது. தரை தளத்திற்கு மேலாக பாறையிருப்பதால் கோவிலில் எங்கிருந்து பார்த்தாலும் அமரி அமர்ந்திருப்பது தெரியும்.
தன்னுடைய எழிலை கண்டதும் அவளை நோக்கி வெற்றி நகர,
“வெற்றி” என்கிற செல்லச்சாமியின் அழைப்பு அவனை தடை செய்தது.

சலித்தவனாய் பெரிய தலைகள் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்.

“இந்த உடுப்பை மாத்திக்கிட்டு வந்திருக்கலாம் கண்ணு” என வெற்றியிடம் கேட்ட சேது நல்லு முறைப்பது தெரிந்தும் வெற்றியின் அருகிலேயே நின்றார்.

“சகோதர பாசத்தை பிள்ளை பாசம் ஜெயிச்சிடுச்சோ” என சிறு பொறாமையுடன் நல்லு கேட்டிருந்தாலும் அதில் துளியும் அவருக்கு வருத்தமில்லை.

“திரும்ப அலுவலகம் போகணுங்க” என பதிலளித்த வெற்றி,

செல்லச்சாமியிடம்…

“பாதுகாப்பு வேணுங்களா?” எனக் கேட்டான்.

“ஏன் தம்பி, இப்போ ரெண்டு கூட்டமும் ஒட்டுக்கா செய்யுறதால பிரச்சினை வராது நினைக்கிறேன்” என்றார்.

“வெளியாலுங்க யார் மூலமாவது வரலாமில்லையா மாமா” என்ற வெற்றியை பார்த்து,

“உங்க துறைக்கு ஏதாவது தகவல் வந்துச்சாக்கும்” என நல்லு கேட்டார்.

“முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தவறில்லையே” என்றவன் “தீ மிதிக்கிறதை கொஞ்சம் சுருக்க முடிச்சிருங்க” எனக்கூறிச் சென்றான்.

சேதுவை கண்களால் தன் பின்னால் வர சொல்லியவன் வேக எட்டுக்களுடன் முன்னேறினான்.

“அதான் உன் மவன் கூப்பிடுறானே, எதுக்கு என் மூஞ்சியை பார்த்திட்டு உட்கார்ந்திருக்க” என நல்லு கடிந்ததும் ஓட்டமும் நடையுமாக வெற்றியிடம் சென்றார் சேது.

“என்னய்யா?”

தனக்கு பின்னால் சேது வந்து நின்றதும் திரும்பியவன்,

“நம்ம தோட்டதுக்கெல்லாம் ராவுல காவலுக்கு யார் போறாங்கப்பா?” என்று வினவினான்.

“மூனு மாசமா குளிர் நிறைய இருக்குன்னு சசியை ஜானகி அனுப்ப முடியாது சொல்லிட்டாப்பா.”

“அப்போ யாரும் போறதில்லையா?”

“நீ இங்க இருந்த வரைக்கும் நீயே போய்க்கிட்டு இருந்த, அப்புறம் யாரும் போறதில்லை. ராவுல விலங்கு நடமாட்டம் இருக்குன்னு எவனும் கூலிக்கும் வர மாட்டேன்கிறான்… நடு ராத்திரியில நானோ அண்ணனோ ஒருக்கா போயி ஒரு வட்டமடிச்சிட்டு வந்துடுவோம்.”

“இன்னையில இருந்து எல்லா தோட்டத்துக்கும் காவலுக்கு நாலு நாலு ஆளுவ போடுங்க… கூலி எம்புட்டு வேணாலும் கொடுத்திடலாம்” என்றவன் சேது எதற்கு எனக் கேட்டும் பதில் சொல்லவில்லை.

“அப்படியே அப்பனாட்டம்” என்று முனகியவர் வெற்றி சொல்லியதை நல்லுவிடம் சொல்ல,

“பணம் எம்புட்டு வேணாலும் கொடுக்கலாம்டா, உசுரு போனா வருமா” என்ற நல்லு… “அதான் துரை சொல்லிட்டாங்களே, செஞ்சிடு” என்றார்.

ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாவிட்டாலும் வெற்றியின் வார்த்தைகளில் அவர்களுக்கு மதிப்பு இருந்தது.

மருத்துவமனை சென்றிருந்த வாணியும் கதிரும் வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டதும், மண்டபத்தில் பெரிய தலைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தங்கவேலு தன்னுடைய வயதையும் மீறி மருத்துவர் என்ன சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக ஓடினார். அவரின் துள்ளல் ஓட்டத்தை அனைவரும் அதிசயித்து பார்க்க,

“குலம் தழைச்சிருக்கு, இன்னைக்கு ஆஸ்பத்திரி போனாங்க… அதான் விடயம் அறிஞ்சிக்கலான்னு ஐயா சந்தோஷமா போறாங்க” என நல்லு மீது ஒரு கண் வைத்தவாறே அனைவரிடமும் கூறிய விநாயகமும் எழுந்து சென்றார்.

சற்று தொலைவில் கணவனின் கரம் பற்றி செல்லும் மகளை வாஞ்சையுடன் நோக்கிய நல்லு மற்றவர்கள் தன்னை கவனிப்பதை உணர்ந்து முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டார்.

“இவ்வளவு நாள் குழந்தைன்னு நினைச்சிட்டு இருந்தோம் இப்போ அதுக்கே ஒரு குழந்தை பொறக்க போவுதுங்க” என்று நல்லுவிடம் மென் குரலில் கூறிய சேதுவின் கண்கள் ஆனந்தத்தில் துளிர்த்திருந்தது.

“அறுபத்தியெட்டு நாள் ஆகுது பாட்டி, குழந்தை ஆரோக்கியமா இருக்குதுங்க… கொஞ்சம் ஓய்வு மட்டும் எடுக்க சொன்னாங்க” என தனது குடும்பத்தாரிடம் வாணி சொல்லிக் கொண்டிருக்க, கதிர் அங்கிருந்து நழுவி வெற்றியிடம் சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
42
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. இந்த வெற்றி கதிர் அலும்பு தாங்கலப்பா 😂😂😂

      எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்காங்க பாவம் அமரி மட்டும் தனியா அழுதுட்டு இருக்கா 😔😔