காவ(த)லன் 15
உணர்வுகளை வெளிக்காட்டிடாத வெற்றி தன்னுடைய நண்பன் கதிரை ஆரத் தழுவினான். அந்த அணைப்பு கதிரின் காயம் கொண்ட மனதிற்கு போதுமானதாக இருந்தது.
தான் ஏதோ மறைத்துவிட்டதாக எண்ணி வெற்றி கேட்ட கேள்வி, பின்பு தன்னிடம் அவன் மன்னிப்பு கேட்க விழைந்தது என இரண்டு தருணங்களிலும் வருத்தம் அடைந்திருந்த கதிர் வெற்றியின் அணைப்பில் மொத்தக் கவலைகளையும் மறந்தான்.
எந்தவொரு தருணங்களிலும், சோகமாக இருந்தாலும்… மகிழ்வாக இருந்தாலும் கதிர் தான் அதிகம் வெற்றியின் தோள் சாய்ந்திருக்கின்றான்.
முதல்முறையாக கதிர் மனம் நோகும்படி பேசியது வெற்றிக்கு என்னவோ போலிருந்தது.
அவனிடம் மன்னிப்பு கேட்டால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தான்.
‘ஆனால், கதிரிடம் மன்னிப்பு கேட்டால் அவன் தன்னை அடித்தாலும் அடித்து விடுவான்’ என்ற எண்ணத்தில் கோவில் பின்புறம் அழைத்து வந்தவன் அணைத்திருந்தான்.
‘இது போதும் கதிரை சமாதானம் செய்ய’ என தனக்குள் நினைத்தவனாக வெற்றி கதிரிடம் விலக நினைக்க அவனால் முடியவில்லை. என்னவென்று ஆராய்ந்த பின்பு தான் வெற்றி உணர்ந்தான் அவன் கதிரின் பிடியில் இருந்தான்.
“நாம தானே கட்டிபிடிச்சோம், இந்த பய எப்போ என்னை பிடிச்சான்” வாய்விட்டு கேட்ட வெற்றி… “அடேய் போதும். யாராவது பார்த்தாக்கா இந்த சீன் வேற மாதிரி ஆகிடும்டா” என்று சொல்லிய வெற்றி யாராவது வருகிறார்களா என நோட்டமிட்டான்.
“மச்சான் இதுவரை நீயா இப்படி செஞ்சது இல்லையே, மொத முறை நீயா செஞ்சது நல்லாயிருக்குடா” என்றவாறு கதிர் மேலும் நண்பனை இறுக்க,
வாய்விட்டு சிரித்த வெற்றி, “ஏய் உண்மையிலேயே நான்னு நினைச்சுதேன் பிடிக்கிறியா இல்லை வாணி நினைச்சிட்டியா” என்று கேட்க கதிர் சட்டென்று விலகினான்.
அவனது விலகளில் வாணி மீது அவன் கொண்ட கோபத்தின் அளவு வெற்றிக்கு புரிந்தது.
“என்னடா வாணி மேல கோபமா இருக்கிறியோ?”
“வருத்த தான் அதிகமா இருக்கு” என்ற கதிர் “அமரி விடயத்தில் நீ நடந்துகிட்டதுக்கு தாத்தா நன்றி சொல்ல சொன்னாரு” என்றான்.
“எழில் உங்களுக்கு எவ்வளவு முக்கியமுன்னு எனக்குத் தெரியாது… ஆனால் எனக்கு என்னைவிட அவ(ள்) ரொம்ப முக்கியம்” எனக் கூறிய வெற்றி கதிர் தன்னை அர்த்த பார்வை பார்ப்பது தெரிந்தும்
“எனக்காகதான் எழிலுக்கு எல்லாம் நான் செய்றேன், அதனால உன் தாத்தா சொன்ன நன்றியை நீயே வச்சிக்கோ மச்சான்” என்றான்.
மச்சான் என்று வெற்றி சொல்லும் போது அவனின் முகத்தில் பரவிய மகிழ்ச்சியும், உதட்டில் தோன்றிய குறுநகையும் கதிருக்கு அனைத்தையும் உணர்த்தியது.
இவ்வளவு நாள் சந்தேகமாக இருந்த விடயம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியின் நடவடிக்கையில் புரிந்து இன்று முற்றிலும் உண்மை எதுவென தெரிந்தது.
“நிஜமாவாடா சொல்லுற?” கதிர் உற்சாகமாக வினவினான்.
“அன்னைக்கு நான் எழிலுன்னு சொன்னதை வச்சே கண்டுபிடிச்சிருப்பேன்னு நினைச்சேன்” என வெற்றி சொல்ல, உன் கணிப்பு சரிதான் என்பதைப்போல் கதிர் தலை ஆட்டினாலும்,
“நீயா சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு வெற்றி” என்றவன் “இவங்க பகைக்கு நடுவுல எப்படி கல்யாணம் நடக்கும், அமரியும் உன்னைய விரும்பனுமே” என்றான் ஆயாசமாக.
சத்தமில்லாமல் சிரித்த வெற்றி, “உன் கல்யாணத்துக்கு வாணி சம்மதம் முக்கியமுன்னு நான் வெளிப்படையா சொன்னதை இப்போ நீ எழில் சம்மதம் முக்கியமுன்னு மறைமுகமா சொல்லுறியோ” என்று கேட்டு கதிரை அசடு வழிய வைத்தான் வெற்றி.
“எனக்கும் எழிலோட சம்மதம் ரொம்ப முக்கியம்” என்றான். ஒரு காதலனாக காதலியிடம் எதிர்பார்ப்பது காதல் தான். அதைத்தான் வெற்றியும் அவனது எழிலிடத்தில் எதிர்பார்க்கின்றான்.
ஆனால், தனது காதலை தன்னுடைய எழிலிடத்தில் சொல்லாமலே இருவருக்கும் திருமணம் முடிந்து விடும் என்பதை வெற்றி அறியாததைப் போன்றே, தங்கையின் விருப்பமும் முக்கியமென்று நினைத்திருக்கும் கதிரும் அறிந்திருக்கவில்லை.
“சரி, இப்போ சொல்லு நான் என்ன உன்கிட்ட மறைச்சிட்டேன்னு நீ நினைக்கிற… அதை கேக்கத்தானே இங்க கூட்டிட்டு வந்த” என்ற கதிரிடம் விநாயகத்திற்கு அன்று தீர்த்த நீர் எடுக்கச் சென்ற போது என்னவானதென கேட்டு அறிந்து கொண்டான் வெற்றி.
“ரெண்டு குடும்பமும் சீக்கிரம் ஒன்னு சேர்ந்திடும் தோணுது வெற்றி” என்ற கதிரை அர்த்தமாக பார்த்த வெற்றி,
“எனக்கென்னவோ பெருசா ஏதோ நடக்கப்போற மாதிரி தோணுது” என்றான்.
“என்ன நடந்தாலும் சமாளிச்சிடுவ, உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்ற கதிர் தற்செயலாக திரும்ப அந்த பக்கமாக தங்கவேலுவும் ராசுவும் வந்து கொண்டிருந்தனர். அவர்களும் இவ்விருவரையும் கண்டு விட்டு அடியெடுத்து வைக்காது நின்றனர்.
“கூட்டு களவாணிங்க ஏதோ திட்டம் போடுதுங்க” என்று வாய்விட்டு தன் தந்தையிடம் விநாயகம் கூற, அவரோ ‘அந்த பய வேணுன்னே சில்மிஷம் செய்வான்’ என மனதில் நினைத்ததோடு,
“வாடா நாம அந்த பக்கம் போவோம்” என்றுக் கூறி வேறு பக்கமாக சென்றார்.
இதே பழைய தங்கவேலுவாக இருந்திருந்தால், “நீ ஏன் இவன்கிட்ட பேசிட்டு நிக்கிற” என கதிருக்கும்…
“எத்தனை முறை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்” என்று வெற்றியையும் திட்டியிருப்பார்.
இப்போது அவரது மனமும் கொஞ்சம் பக்குவ பட்டிருந்தது. வெற்றியின் செயல்கள் அவரது பகைமையை மறக்கச் செய்தது.
“வழக்காமா இந்நேரம் இங்கு ஒரு சொற்பொழிவு நடந்திருக்கணுமே மச்சான்” என கதிர் வெற்றியிடம் கூறிக்கொண்டிருக்க வெற்றியைத் தேடி சக்தி வந்தான்.
வெற்றியுடன் கதிரும் நிற்பதை கண்டவன் அருகில் செல்லாது தயங்கி நிற்க, “என்னடா?” என்று வெற்றி சற்று உரக்கக் கேட்க… அவனருகில் வந்த சக்தி, “அம்மா கூப்பிடுறாங்க” என சொல்லியவாறு கதிரை முறையோ முறையென்று முறைத்துச் சென்றான்.
என்னதான் வெற்றியின் ஆருயிர் தோழன் கதிர் எனத் தெரிந்திருந்தாலும் அன்று வாணியை இவன் திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொண்டதால் தங்களுக்கு எவ்வளவு அவமானம். அதெல்லாம் கதிரால் தானென்று சக்திக்கு குடும்ப பகையையும் தாண்டி கதிர் மீது கோபம் உள்ளது.
“மச்சான் நில்லு மச்சான்.” சக்தியின் முறைப்பு சிறு பிள்ளை கோவமாகத்தான் கதிருக்குத் தெரிந்தது. மேலும் அவனை சீண்டி பார்க்கும் பொருட்டு அருகிலிருக்கும் வெற்றியை அழைப்பதைப்போல் சக்தியை நோக்கி உரக்க அழைத்தான்.
கதிரின் செயல் சக்திக்கு புரியத்தான் செய்தது.
“என்ன மச்சான் எங்கிட்டலாம் பேச மாட்டிங்களா?”
‘இவன் அடங்க மாட்டான் போலயே’ என்று பற்களை கடித்த சக்தி வெற்றியின் அருகில் திரும்பி வந்து,
“இங்கப்பாரு வெற்றி உன் கூட்டாளிய ஒழுங்கா இருக்க சொல்லு… இந்த ஜாடை காட்டி பேசுற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்” என்று கோபமாகக் கூறியவன் கதிரின் முகம் கூட பாராது விறுவிறுவென்று அங்கிருந்து சென்றிருந்தான்.
“இன்னும் இவன் வளரவே இல்ல வெற்றி” என்று கதிர் கூற… அவனின் கையில் அமரியின் அலைபேசியை கொடுத்த வெற்றி,
“நான் காட்டுக்குள்ள போகணும் கதிரு, ஆனால் யாருக்கும் தெரியக்கூடாது” என்றான்.
“சரிடா ஏற்பாடு பண்ணுறேன்” என கதிர் சொல்லியதும்,
“காட்டுல இருக்குற விளங்குகளையெல்லாம் கணக்கெடுத்து வச்சிருப்பிங்கல” என்ற வெற்றி “அதை நான் பார்க்க முடியுமா?” எனக் கேட்டான்.
“இங்க எவனும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டானுவ போல வெற்றி, ஒரு பதிவேடும் ஒழுங்கா இல்லை… உனக்கு வேணுன்னா நான் கணக்கெடுத்து தாரேன்” என்றான் கதிர்.
மேலும் சில விடயங்கள் பேசிவிட்டு இருவரும் தத்தம் வீடு சென்றனர்.
“வாப்பா வெற்றி நல்லாயிருக்கியாய்யா,” என்று வினவிய செண்பகம் பாட்டியின் கன்னத்தை பிடித்து ஆட்டிய வெற்றி அவரின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து விலகினான்.
“யாருடா அது என் பொஞ்சாதிக்கு முத்தம் தரது” மீசையை நீவிவிட்டபடி அங்கு வந்த வெங்கடாசலம் கேட்க,
“உங்க பொஞ்சாதி இல்லிங்கோ, எங்க பாட்டியாக்கும்” என்று கூறியவன் அவரின் மீசையை பிடித்து இழுத்து பார்த்தான்.
“ஏய் சேட்டை, இந்த அட்டகாசம் இல்லாம கொஞ்ச நாள் வீடு வீடா இருந்தது உனக்கு பொருக்கலையோ… அதுக்குள்ள ஏன் வந்த” என்று தாத்தா அலுத்துக்கொண்ட போதிலும் அவரின் முகம் வெற்றியின் செயலினை ரசித்ததோடு அவன் இங்கு திரும்பி வந்ததை நினைத்து மகிழ்ந்தார்.
“ஏய்யா வந்து மொத சாப்பிடுய்யா” என ஜானகி அழைக்க, உணவு மேசையில் அமர்ந்தவன் தட்டில் உணவினை எடுத்து வைத்த பின்னரும் உண்ணாது அன்னையின் முகம் காண, மகனின் பார்வை புரிந்த ஜானகி தானே ஊட்டி விடத் தொடங்கினார்.
வெற்றிக்கு அருகிலமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த சசி உணவு தலைக்கேறுவதை போல் இரும்ப, சக்தியோ ஜானகியை முறைத்து…
“எங்களுக்கு ஒரு நாளாவது இப்படி ஊட்டி விட்டிருக்கிங்களா” என்று வினவினான்.
“உங்களுக்கு என்னடா, எருமை மாட்டு கணக்கா இருக்கீங்க… உங்களுக்கு ஊட்டி விடனுமாக்கும்” என்று நொடித்துக் காண்பித்தவர் வெற்றிக்கு உணவு ஊட்டுவதிலேயே கண்ணாக இருந்தார்.
“ஆமா இவரு மட்டும் இப்போதான் பால்வாடி போறாரு” என்ற சசி உணவினை வேக வேகமாக வாய்க்குள் வைத்து தள்ளினான்.
“உங்களுக்கு ஏண்டா வயிறு எரியுது” என்று கேட்ட வெற்றி சக்திக்கும் சசிக்கும் ஒரு கவளை உணவினை ஊட்டி… “போதுமாடா, இதுக்குத்தானே இவ்வளவு அலப்பறை” என்றவன் உணவு போதுமென எழுந்துக் கொண்டான்.
அங்கு நடந்த நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்த நல்லு, “எப்பவும் என் வீடு இதே மகிழ்ச்சியோடு இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டார்.
“இந்த வீடுங்கிறது வாணியும் சேர்த்துதான்” என்றவாறு அவரின் அருகில் அமர்ந்தான் வெற்றி.
நல்லு முறைப்பதையெல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லை.
“உங்க மனசுல நினைச்சத சொல்லிட்டேன்னு கோவமாக்கும்” என்று சீண்டியவன், “நீங்களும் பாசக்கார ஆளுதான்” என சொல்லி நகர்கையில்…
“கோவிலில் ஏதோ பொண்ணு சொன்னியே, நிசமா அது?” என வினவினார்.
“ம்” என்ற தோள் குலுக்களோடு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
அங்கேயே இருந்தால் அந்த பெண் யாரென்ற கேள்வி வரும், தந்தை கேட்டு பதில் சொல்லாமல் இருக்க முடியாது. யாரென்று சொன்னால் நிச்சயம் வீட்டில் ஒரு சலசலப்பு ஏற்படும், நம் வாயும் சும்மா இருக்காது. இவை அனைத்தும் இப்போது வேண்டாம் என்பதாலேயே வெற்றி ஓடிவிட்டான்.
”பய பம்முறத பார்த்தாக்கா ஏதோ உள்குத்து இருக்கும் போலயே” என சேதுவிடம் நல்லு சொல்ல,
“வெற்றி மேல உங்களுக்கு எப்பவும் சந்தேகந்தான்” என்றார் சேது.
தனது அறைக்குள் வந்த வெற்றி வழக்கின் ஆரம்பம் முதல் அதன் தற்போதைய நிலை வரை அனைத்தையும் கண் மூடி அமர்ந்து நிதானமாக ஓட்டிப் பார்த்தான்.
அவனுக்கே புரியாத சில விடயங்கள் இப்போது புரிந்ததை போலிருந்தது. ஏதோ பொறி தட்ட, இந்த வழக்கு முடிந்து விட்டதாகவே கருதினான்.
_______________________
வீட்டின் முற்றத்தில் பெரியவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். உடன் கதிர் அமர்ந்திருந்தான். பஞ்சு பாட்டி பேச்சை ஆரம்பித்தார்.
“ஒரு முக்கியமான முடிவெடுக்கணும்.”
என்ன விடயமென்று யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் பஞ்சுவையே பார்த்திருந்தனர்.
“ஏத்தா அன்னம், சாப்பிட்ட பண்டத்தையெல்லாம் ஆற ஒழிச்சிக்கலாம் இங்க வந்து செத்த உட்காரு” என்றவர் கதிரிடம் வாணியை அழைவருமாறு கூறினார்.
இன்னும் கதிர் வாணியிடத்தில் தனது மௌன விரதத்தை கடைபிடிக்கின்றான். அவளும் பல வித்தியாசமான முறைகளில் பல தடவை மன்னிப்பு கேட்டுவிட்டாள், ஆனால் கதிரால் தான் அவனது வருத்தத்திலிருந்து வெளிவர இயலவில்லை.
“இங்கிருந்தே கூப்பிடுங்க, அவளுக்கு கேட்கும்” என கதிர் சொல்ல…
“உன் பொஞ்சாதிக்கிட்ட என்ன சண்டை உனக்கு, விரும்பித்தானே கட்டிக்கிட்ட… இப்போ என்னவோ ஒதுக்கி வச்சிருக்க, அந்த புள்ளைய கண்டா முகத்தை ஏழு முழத்துக்கு நீட்டிக்குற… என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க, எங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னா, எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கோம்” என்று பொறிந்து தள்ளினார் தங்கவேலு.
“உங்களுக்குள்ள ஏதோ சரியில்லன்னு எல்லாருக்கும் தெரியும் கதிரு, புருஷன் பொஞ்சாதி சண்டைக்குள்ள தலையிடக் கூடாதுன்னு அமைதியா இருக்கோம்” என்று விநாயகம் தன் பங்கிற்கு மகனிடம் பேசினார்.
“பொம்பள புள்ளடா, மொரண்டு பிடிக்கத்தேன் செய்யும்… நீதான் விட்டு பிடிக்கணும், பொஞ்சாதிகிட்ட இறங்கி போறதுல தப்பில்லைப்பா… நீ கொஞ்சம் தன்மையா நடந்துகிட்டா, அவ(ள்) தானா உன் வழிக்கு வந்திடுவா” என்று கணவன் மனைவி உறவிற்கு இடையேயான வாழ்க்கை சூட்சமத்தினை இரு வரியில் முடித்து விட்டார் பஞ்சு பாட்டி.
‘அடப்பாவிகளா ஒரு நாலு நாளு அவகிட்ட பேசாமல் இருந்ததுக்கு இவ்வளவு அறிவுரையா, உடம்பு தாங்காது’ என கதிரின் மனம் புலம்ப ஜானகியும் தானிருப்பதை தன் வார்த்தைகளால் நினைவூட்டினார்.
“அவங்க வூட்டுல அவ்வளவு பேரு இருந்தும், நீதான் முக்கியம்ன்னு உன்னை மட்டுமே நம்பி வந்த புள்ள ராசா.”
“அய்யோ அம்மா நீங்க நினைக்கிற மாதிரி பெரிய விடயமெல்லாம் ஒண்ணுமில்லை” என்று சத்தமாகக் கூறியவன், ‘இந்த கெழவி சொன்ன உடனே செஞ்சிருக்கணும்’ என்ற மனதின் புலம்பலோடு வாணியை அழைத்துவர சென்றான்.
கட்டிலில் சோர்வாக படுத்திருந்தாள் வாணி. அவளின் முகத்தில் அப்பட்டமாக களைப்பு தெரிந்தது. அன்றைய நிகழ்விற்கு பிறகு வாணி அலுவலகம் செல்ல வில்லை. இனி முனைப்புடன் தன்னால் தனது பணியில் ஈடுபட முடியுமா என்கிற சந்தேகம் அவளுக்குள்ளே இருப்பதாலேயே அலுவலகம் செல்லவில்லை. என்னயிருந்தாலும், அமரியின் நலன் யோசிக்காது தான் செய்தது பெரிய தவறென்று உணர்ந்ததாலேயே இத்தகைய மாற்றம்.
வாணி கண் மூடியிருந்ததால் எப்படி அழைப்பது என கதிர் தயங்கி நிற்க, அரவம் உணர்ந்து அவளே கண் திறந்தாள்.
“பாட்டி கூப்பிடுது” என்றவன் அவள் வருகிறாளா இல்லையா என்றுகூட பார்க்காது சென்றுவிட்டான்.
கட்டிலிலிருந்து மெல்ல எழுந்து தரையில் காலூன்ற, வாணிக்கு உலகமே சுழன்றது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. மெல்ல தன்னை சமன் செய்து கொண்டு அடிமேல் அடி வைத்து முற்றத்திற்கு வந்தாள்.
“ஏன் சாப்பிட வரல” அன்னம் மருமகளிடம் வினவினார்.
“சாப்பிடவே பிடிக்கல அத்தை” என்ற வாணி நிற்க முடியாது தள்ளாடினாள்.
“பாரு சாப்பிடாம மொகம் சோந்து கிடக்கு, இப்படி வந்து உட்காரு” என பஞ்சு கூறிக் கொண்டிருக்கும் போதே வாணி மயங்கி சரிந்தாள்.
தரையில் விழும் முன் கதிர் தன் மனைவியை கைகளில் தாங்கியிருந்தான்.
_________________________________
அமைச்சர் சிதம்பரம் தான் செய்யும் குறுக்குத் தொழில்கள் தன்னுடைய மனைவிக்கு தெரியக் கூடாதென நினைப்பவர். இன்று வரை தெரியாமல் காத்து கொண்டு வருகிறார். அவர் செய்யும் திருட்டு செயல்கள் அனைத்திற்கும் திட்டமிடுதல் முதல் தனது அடியாட்களை சந்திப்பதென அவர் கூடுவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அவரின் பண்ணை வீட்டில் தான்.
இன்றும் எதையோ எதிர்பார்த்து அவ்வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்து பத்து நிமிடங்களுக்கு பிறகு அவரது அடியாட்கள் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தனர்.
“அந்த காத்தவராயன் சத்தமே காணலையே, ஆளு ஓடிட்டானோ?” சிதம்பரம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார் காத்தவராயன்.
“என்னைப் பற்றிதான் பேச்சு போல” என்க,
“நீ சொல்லிப்போன வேலை இன்னும் நடந்தபாடு இல்லையே” என்று சிதம்பரம் தன் தாடை நீவினார்.
“சுலுவா முடிஞ்சிடுந்தான் பார்த்தேன், ஆனால் இந்த வெற்றி பய காப்புக் கட்டுற அன்னைக்கு அவங்க வூட்டுக்கு வந்துட்டானே” என்று காத்தவராயன் கூற,
“அவனுக்கு பயந்துலாம் முன்ன வச்ச கால பின்னுக்க இழுக்க முடியாது, உன்னால முடியுமா முடியாதா சொல்லு” என்று கறாராகக் கேட்டார் சிதம்பரம்.
“நாளைக்கு ஊரணி பொங்கல் வீட்டு பொண்டுக எல்லாம் கோவிலில் கூடியிருக்கும். அடுத்த நாளு ராத்திரி ஏழு மணி வாக்குல தீ மிதித் திருவிழா இதுல எல்லாரும் கலந்துப்பாங்க, பகல்ல நம்ம திட்டத்தை செயல் படுத்துனாக்கா ஊர் கூடி நடக்க விடாம தடுத்துடும். இதே ராத்திரி வேலைன்னாக்கா எல்லாம் விழா முடிஞ்சு வந்த அசதியில நல்ல உறக்கத்துல இருப்பாங்க… அப்புறம் என்ன மொத்த காடும் பஸ்பம்தான். உங்களுக்கும் சிலை கடத்த கோவிலில் ஆளிருக்கக் கூடாது. தீ மிதிக்கிற அன்னைக்கு பக்தர்களோட கால் சூட்டை ஆத்தா வாங்கிப்பான்னு ஐதீகம், அந்த சூடு தணிக்க ராவுல அருவிக்கு ஆத்தா போவாங்கிறது ஊர் பயலுவ நம்பிக்கை. அதனால அன்னைக்கு ஒரு பய கோவில்ல இருக்க மாட்டான், அதுதான் உங்களுக்கும் சரியான நேரம்” என ஊரின் நிலவரத்தைக் கூறினார்.
“ம்ம், அப்போ இந்த நாலஞ்சு நாளா ஒன்னுத்தையும் செய்யல சொல்லு” எனக் கேட்ட சிதம்பரம், “அந்த வெளிநாட்டுக்காரன் வேற இப்பவே நொய்யு நொய்யுன்னு போன் போட்டுட்டு இருக்கான். சுருக்க வேலை முடிஞ்சா நல்லாயிருக்கும்” என்றார்.
“அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சுப்போடும்”, நான் தோட்டத்தை கொளுத்துற அதே சமயம் நீங்க சிலையை எடுத்திருக்கணும்” என்ற காத்தவராயன் சிதம்பரத்திடமிருந்து விடை பெற்றான்.
“இவன் மேல ஒரு கண்ணு வச்சிக்கோங்கடா, தோட்டத்தை கொளுத்தி ஊர் மக்களை திசை திருப்பன மறு நொடி இவன் கதையை முடிச்சிருங்க” என்ற சிதம்பரம் துண்டை உதறி தோளில் போட்டபடி தன் சகாக்களை நோக்கி வில்லத்தனமான பார்வையை வீசிச் சென்றார்.
__________________________
வாணி மயங்கி சரிந்ததும் மொத்தக் குடும்பமும் அதிர்ந்தது.
தன் மடியில் நினைவின்றி கிடக்கும் வாணியை தட்டி எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான் கதிர்.
“வாணி… வாணி…” இரு கன்னத்தையும் மாற்றி மாற்றி தட்டினான். அன்னம் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதனை அவளின் முகத்தில் மெல்ல தெளித்தான்.
குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும், கண்கள் சுருக்கி மெல்ல விழித்த வாணி தன் முகம் அருகே கணவனின் முகம் தெரிய பதறி எழுந்தாள்.
“ஹேய்… மெதுவா” என்று பதறிய கதிர், “என்னாச்சு” என வினவினான்.
“காலையிலிருந்து சாப்பிடாம இருந்தாக்கா இப்படிதான் மயக்கம் வரும்” என்று கூறிய அன்னம்
“ஏதாவது பழச்சாறு கொண்டு வாறேன்” என அடுக்கலை பக்கம் சென்றார்.
“வாத்தா இப்படி வந்து செத்த உட்காரு” என்ற பஞ்சு வாணியை இருக்கையில் அமர வைத்தார்.
சில நிமிடங்கள் கடந்த நிலையில்,
“நீ எதுக்கு எல்லாரையும் ஒன்னு கூட்டுன”, பஞ்சு பாட்டியிடம் தங்கவேலு தாத்தா வினவினார்.
“எத்தனை நாளைக்குதான் அமரி இப்படி எல்லாத்தையும் பறிகொடுத்தவ மாதிரி திரிவா, அவ(ள்) இப்படி இருக்கிறது நல்லாவா இருக்கு” என்றார். தான் சொல்ல வந்ததை சொல்லாது வீட்டினரின் எண்ணம் அமரியின் நிலையில் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பேச்சினை இவ்வாறு ஆரம்பித்தார்.
“அவ கூடவே சுத்திக்கிட்டு திரிஞ்ச புள்ள, இப்போ உசுரோடு இல்லைன்னு நினைக்கிறப்போ அதுக்கும் கஷ்டமா இருக்குமா இல்லையா” என தாத்தா சொல்ல,
“அதுக்காக எவ்வளவு நாளைக்கு இப்படியே அவ மோட்டு வளைய பார்த்துட்டு இருக்கட்டுன்னு நாம சும்மா இருக்கிறது”, தனது மோவாயில் கை வைத்து பேசினார்.
“பாட்டி இப்போ நீ என்னத்த சொல்ல வர, கொஞ்சம் விளங்குறாப்ல சொல்லு…” என கதிர் சிடுசிடுத்தான்.
“அமரிக்கும் கொஞ்சம் மாறுதல் வேணுமில்லையா? அதான் கல்யாண ஏற்பாடு பண்ணலாம் சொல்லுறேன்.” தனது முடிவினை போட்டு உடைத்தார்.
அந்நிலையில் அனைவருக்கும் அதுவே சரியென்று பட்டது. இன்னும் கொஞ்ச நாள் மகள் தன்னுடன் இருக்க வேண்டுமென்று சொல்லிய விநாயகம் கூட இப்போது அமரியிருக்கும் நிலையிலிருந்து மாறுபட திருமணம் ஒன்றே சரியாக இருக்குமென்று நினைத்தார்.
“இப்போ என்ன அவசரம்.” இதுநாள் வரை எப்படியோ! ஆனால், தன்னுடைய வெற்றிக்கு அமரியை பிடித்திருக்கு எனத் தெரிந்த பிறகு அவளை வேறு யாருடனோ இணைத்து வைத்து பேசக்கூட கதிருக்கு மனம் ஒப்பவில்லை.
“இப்போ என்னவா, அவளுக்கு இருபத்தி மூணு வயசாகுதுடா… எனக்கு அந்த வயசுல உங்க அப்பன் பொறந்து நாலு வயசாகியிருந்துச்சு.”
“அது உங்க காலம்.”
இந்த இடத்தில் அன்னம் பழச்சாறு கொண்டு வந்து வாணியின் கையில் கொடுத்தார்.
“எந்த காலமாயிருந்தாலும் வயசுப் பொண்ணை வீட்டுல வச்சிருக்கிறது அடிமடியில நெருப்பை கட்டிக்கிட்டு சுத்துற மாதிரிதான்…” என தங்கவேலு தாத்தாவும் தன் மனைவியின் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்தார்.
“நமக்குள்ள பேசிக்கிறத விட அமரிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமே” என்று வாணி சொல்ல,
“முதலில் அதை நீ குடி” என்று அவள் இன்னும் குடிக்காது கையில் வைத்திருந்த பழச்சாறு அடங்கிய குவளையைக் காட்டினான்.
சில நாட்களுக்குப் பிறகான கணவனின் அக்கறை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் முகதைக்கூட பாராது சுற்றிக் கொண்டிருந்தவன், இப்போ நேருக்கு நேர் பார்த்து பேசுகிறான்… அந்நொடி மிகவும் மகிழ்வாய் உணர்ந்தவள் ஒரே மூச்சாய் பழச்சாற்றை குடித்து முடித்து குவளையை கீழே வைத்தவள்… அந்நொடியே வயிற்றை பிரட்டி, கொமட்டிக்கொண்டு வர கழுவுமிடம் நோக்கி ஓடினாள்.
என்னவானதோ என்று பதறி கதிர் பின்னாலே சென்று பார்க்க, வயிற்றிலிருக்கும் குடல் அனைத்தும் வெளியே வந்துவிடும் அளவிற்கு வாய்க்கு எடுத்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் தலையை அழுந்த பிடித்தவன், அவள் முற்றிலும் எடுத்து நிமிர்ந்த பின்னர்… வாய் மற்றும் முகம் கழுவ தண்ணீர் மோண்டு கொடுத்ததோடு, அவளின் ஈர முகத்தை தானே துடைத்துவிட்டு மெல்ல அழைத்து வந்து அமர வைத்தான்.
“என்ன பண்ணுது, மேலுக்கு முடியலையோ”, அன்னம் பதட்டத்துடன் கேட்டார்.
வாணியின் சோர்வு, மயக்கம், வாந்தி என அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்த பஞ்சு,
“குளிச்சு எவ்ளோ நாளுத்தா ஆவுது” என்று வினவ,
“காலையில கூட குளிச்சனே பாட்டி” என்ற வாணியை முறைத்துக் கொண்டே, அவளின் நாடி பிடித்து பார்த்தவர் முகமெல்லாம் மலர அகத்தோடு சேர்ந்து மகிழ்ந்தார்.
அவரின் கேள்வியும் மகிழ்ச்சியும் அன்னத்திற்கு விடயத்தை உணர்த்தியது.
“ரொம்ப சந்தோஷம்” என்று அன்னம் தன் மருமகளை அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார்.
அப்போதுதான் வாணிக்குமே பாட்டி கேட்ட கேள்விக்கான அர்த்தம் விளங்கிற்று, “ரெண்டரை மாதமிருக்கும்” என்று பாட்டியின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்.
வீட்டின் ஆண்கள் மூவரும் புரியாது என்னவென்று வினவ,
“வாடா திருடா, போன முறை வீட்டுக்கு வந்துட்டு போனப்பவே பெரிய வேலையெல்லாம் பார்த்திருக்க போலவே” பாட்டி கதிரின் காதை பிடித்து திருகினார்.
“அப்போ வந்து இவன் ரெண்டு நாளுதான் தங்கினான் அத்தை,” என்று தனது மாமியாரிடம் கூறிய அன்னம்… “உன்னாலதான் வாணிக்கு இந்தநிலை” என கதிரிடம் சொல்ல, மற்ற இரண்டு மூத்தவர்களுக்கும் விடயம் விளங்கிற்று. நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தனர்.
அவர்கள் இருவரும் வாணியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து செல்ல,
கதிர் தன் பொறுமையை இழந்தான்.
“அப்படி என்னதான் ஆச்சு, அவ உடம்புக்கு?”
“போடா கூறுகெட்டவனே, இதைக்கூட புரிஞ்சிக்க முடியாதாடா உன்னால” என்று கதிரின் கன்னத்தில் இடித்த பஞ்சு… “நீ அப்பாரு ஆக போற” என்க,
கதிர் மகிழ்ச்சி ததும்ப கண்களில் பனித்த ஒற்றை துளி கண்ணீருடன் வாணியின் முகம் பார்த்து உண்மையா எனும் விதமாக பார்வையாலேயே வினவ, வாணியும் ஆமென்று தலையசைத்து விட்டு அறைக்குள் ஓடிவிட்டாள்.
கதிருக்கு சொல்ல முடியா மகிழ்ச்சி கரை புரண்டது. அந்நொடியே வெற்றியை காண துடித்தான். தன்னுடைய வாழ்வில் என்ன நடந்தாலும், முதலில் வெற்றியிடம் சொல்லியே பழகியதால் இதனையும் தன்னுடைய நண்பனிடம் சொல்லிவிட பறந்தான்.
அலைபேசியை எடுத்துக்கொண்டு தனது வீட்டினரின் பார்வை படாது, பின் வாசலுக்கு சென்ற கதிர் மூன்று முறைக்கு மேல் வெற்றிக்கு முயற்சித்தான். அந்த பக்கம் அழைப்பு சென்றதே தவிர எடுக்கப்படவில்லை.
வெற்றியிடம் பகிராமல் வாணியிடம் சென்று பேச அவனால் இயலவில்லை. எவ்விடத்திலும் வெற்றியை அவனால் இரண்டாம் பட்சமாக எண்ண முடியாது.
“பொண்டாட்டி பின்னாடி போவாமா, இவன் எங்க பின்னுக்க போறான்?” என்று அன்னத்திடம் பஞ்சு கேட்க…
“வாணி வூட்டுக்கு விடயத்தை சொல்ல போறான் நினைக்கிறேன் அத்தை” என பதிலளித்தார் அன்னம்.
“எதுக்கும் நாளைக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டி போயிட்டு வரணும்” என்ற பஞ்சு, “நல்ல பொம்பள டாக்டர் கொஞ்சம் விசாரி” என விநாயகத்துக்கு கட்டளை போட்டார்.
“சரி நீ எதுக்கு எல்லாத்தையும் ஒன்னுக்கூட்டுன” எனக் கேட்ட தன் கணவரை பார்த்து… “தெற்க இருக்க உங்க ஒன்னுவிட்ட அக்கா போன் போட்டாங்க, அவங்க பேரனுக்கு வரன் தேடுறாங்கலாம்… அவங்க நம்ம அமரியை கேக்குறாங்க, இப்போ அவயிருக்குறதுக்கு கல்யாணம் பண்ணி வச்சாக்கா… புது இடம் புது சூழல் எல்லாம் அவளை மாத்திடும்” எனக் கூற பெரியவர்களுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“கதிருக்கு தெரிஞ்சாக்கா குதிப்பான், பையன் வீட்டிலிருந்து மொத வரட்டும்… அப்புறம் அவன்கிட்ட சொல்லிக்கலாம்” என்ற தங்கவேலு உறங்கச் சென்றார்.
சற்று நேரத்தில் வீடே அமைதியாகியது. தன் பின்னாலே கணவன் வருவான். பழையது மறந்து தன்னிடம் அன்பாக உரையாடுவானென எதிர் பார்த்து வாணியும் உறங்கிவிட்டாள். கதிர் அறைக்குள் வரவில்லை.
வழக்கில் ஏதோவொன்று சிக்க, அதனை வைத்தே முடித்து விடலாமென நினைத்து எல்லாவற்றையும் ஒதுக்கி உறங்க எண்ணி கண் மூடிய வெற்றிக்கு தூக்கம் வராது அழிச்சாட்டியம் செய்தது.
அவனின் கண்களில் அவனது எழிலே நிறைந்திருந்தாள்.
கோவிலில் அவனை பார்த்ததும் பட்டென்று திரும்பிய அவளின் திருட்டுத்தனம் நிறைந்த முகம் ஏதோ அவனை செய்தது.
கட்டிலில் உருண்டு புரண்டு என்னென்னவோ செய்தும் உறக்கம் வராததால் மொட்டை மாடிக்கு சென்றான். அங்கு இவனுக்கு முன்பே சக்தியும் சசியும் இருந்தனர்.
ஒரு கால் நீட்டி மற்றொரு கால் குத்திட்டு அதன் முட்டியில் கை ஒன்றை நீட்டி மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்து, வானத்து நிலவினை ரசித்தவனாக சக்தி மதியை நினைத்து காதல் வசனங்கள் பேசிக்கொண்டிருக்க, சசியோ அவன் உளருவதையெல்லாம் கேட்பவனை போல் சக்தி நீட்டியிருந்த காலில் தலை வைத்து படுத்திருந்தவன் எப்போதோ உறங்கியிருந்தான்.
வெற்றி வந்ததெல்லாம் கவனிக்கும் நிலையில் சக்தி இல்லை.
நடக்கப்போகும் நிச்சய விழாவை எதிர்நோக்கி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவனின் கனவு வார்த்தைகளிலும் பிரதிபலித்தது.
சக்தியின் பிதற்றலை கேட்ட வெற்றி,
“காதல் வந்தால் யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோம் போல” எனத் தன்னிடமே சொல்லிக்கொண்ட வெற்றியிடம்,
‘நீயெல்லாம் இதற்கு விதிவிலக்கு… நீயும் தான் காதலிக்கிறாய், எப்போவாவது உன் எழிலை நினைத்து ஏதாவது கவிதையாவது சொல்லியிருக்கியா’ என அவனின் மனசாட்சி கேலி செய்தது.
“சரி சரி அடக்கி வாசி, இந்த வெற்றி கொஞ்சம் வித்தியாசமானவன்” என்றுக்கூறி மனதினை அடக்கியவன் சக்தியை தொல்லை செய்யாது மாடியின் ஓர் மூலையில் சென்று மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு வானில் தெரிந்த அழகு மதியில் தன்னுடைய எழிலை காண முயற்சித்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் யாரோ வெற்றி என அழைப்பை கேட்டவன் சுற்றும் பார்வையை சுழற்ற அவனின் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.
மீண்டும் மீண்டும் குரல் ஒலிக்கவே செவியை கூர்மையாக்கினான். குரல் கிசுகிசுப்பாக இருக்க யாருடையதென்று கண்டறிய முடியவில்லை. சத்தம் மொட்டை மாடியைத் தொட்டுக் கொண்டிருந்த அடர்ந்த மரத்திலிருந்து வந்தது.
இருட்டில் மரக்கிளைகளுக்கு நடுவில் யார் இருப்பதென்று கண்களுக்கு புலப்படவில்லை.
வெற்றி மரத்தினையே உற்று நோக்கினான்.
பருத்த கிளை வேகமாக ஆட அதிலிருந்து “வெற்றி” என்ற அதீத கூவலுடன் உருவமொன்று தொப்பென வெற்றி மீதே பாய்ந்தது.
சத்தம் கேட்டு உணர்வு பெற்ற சக்தி தன்னுடைய மடியில் உறங்கிக்கொண்டிருந்த சசியை கருத்தில் கொள்ளாது வேகமாக எழ, இரண்டடி உருண்டோடி… தூக்கம் கலைந்த சசி வெற்றியின் மீது விழுந்து கிடந்த உருவத்தைக் கண்டு,
“அய்யோ… அம்மா பேய்… பேய்… பேய்” என்று அலறினான்.
அவனின் அலறலில் மொத்தக் குடும்பமும் மொட்டைமாடியில் கூடியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
1
+1
வெற்றி போன் எடுக்கலன்னு கதிர் வீட்டுக்கு தேடிக்கிட்டு வந்துட்டானா??
இந்த பஞ்சு பாட்டி என்ன அமரிக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கு
இருக்கும் sis