Loading

காவ(த)லன் 13

ராம் கொடுத்துச் சென்ற அலைபேசி யாருடையதாக இருக்குமென்கிற சிந்தனையோடு திறந்து பார்த்த வெற்றி திரையில் அவனுடைய படத்தைக் கண்டு சிறு அதிர்வு ஏற்பட, அலைபேசியில் இருக்கும் சுயவிவர (Profile) பகுதியை திறந்து பார்க்க அது அவனுடைய எழிலின் அலைபேசியென்று தெரிந்துகொண்டான்.

வேட்டியின் பின் பகுதியை ஒரு காலால் தூக்கி இடது கையால் வேட்டியின் நுனி பகுதியை பிடிப்பதை போன்றிருக்கும் வெற்றியின் பின் உருவ புகைப்படம் அலைபேசியில் முன் திரை பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

புகைப்படத்தினை பார்த்ததும் ‘இது அன்று பஞ்சாயத்தின் போது எடுக்கப்பட்டது’ என்று நொடியில் புரிந்து கொண்டான். அலைபேசி அமரியுடையது என தெரிந்ததும் எதற்காக தன்னுடைய படத்தை எடுத்தாள் என்பதற்கான காரணம் அன்று வாணியுடன் அமரி பேசிய உரையாடலின் நினைவால் விளங்கிற்று.

ஆனால், எதற்காக திரை சுவரொட்டியில் வைத்திருக்கிறாள் என்பதற்கான காரணம் புரியாது குழம்பினான்.

‘ஒருவேளை தன்னுடைய எழிலுக்கும் தன் மீது காதல் வந்திருக்குமோ’… நினைக்கும் போதே நெஞ்சில் இதம் உணர்ந்தான். உண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு மனம் விரும்ப, “உன் படம் வைத்திருந்தால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா?” என மற்றொரு மனம் முரண்டியது.

காதலில் மூழ்கிக் கொண்டிருந்த வெற்றி சட்டென்று காவலனாக மீண்டெழுந்தான்.

‘கலை எதற்காக அமரியை பார்க்க வந்திருப்பாள்?’ என்று தனக்குத்தானே கேள்விக்கேட்டுக் கொண்ட வெற்றி… அழைப்பு மற்றும் குரல் பதிவு செய்யும் செயலியை திறந்து பார்க்க அதில் அழைப்புக்கான பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் அமரியின் குரல் பதிவுகள் நிறைய இருந்தன.

தனிமையிலேயே வளர்ந்ததாலோ என்னவோ அமரி எளிதில் எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டாள். தனக்குத்தானே தோழியை போல் ரொம்பவும் முடியாது மனதின் அழுத்தம் தாங்காமல்,  தன்னுடனே பகிர்ந்து கொள்வதாக நினைத்து அலைபேசியில் தான் பேசுவதை பதிவு செய்து வைப்பாள்.

அதிலிருக்கும் ஒன்றும் அழைப்புக்கான பதிவு இல்லையெனத் தெரிந்ததும் அதிலிருக்கும் பதிவுகளை கேட்கலாமா வேண்டாமா என்று சிந்தித்தவன் வேண்டாமென்கிற முடிவுக்கு வந்து திரையை மூடாது அலைபேசியினை மேசை மீது வைக்கும் போது தெரியாது விரல் பட்டு, அமரி இறுதியாக பதிவு செய்திருந்த குரல் ஒலிக்கத் துவங்கியது.

“என்னால் தான் அப்பா…”
ஒலித்ததும் அதனை நிறுத்தியவன் சில வினாடிகளுக்குப் பின்னர், ‘எழிலின் குரல் அழுகையில் ஒலித்ததோ’ என்கிற சந்தேகம் எழ மீண்டும் தானே ஒலிக்கச் செய்தான்.
அதில் அமரியால் சொல்லப்பட்ட விடயத்தை அறிந்த வெற்றியின் காதல் மனம் வெகுவாக காயம் பட்டது.

“என்னால் தான் அப்பா உயிருக்கு ஆபத்தா? பாட்டி சொன்னாங்க.” சிறு இடைவெளிக்கு பின்னர்,

“பாட்டி சொல்லுவதும் உண்மையா இருக்குமோ… இன்னைக்கு மட்டும் அண்ணியோட அப்பா உடன் இல்லாது போயிருந்தால், நினைக்கவே பயமா இருக்கு.” அழுகையில் அமரியின் குரல் உடைந்து ஒலித்தது.

அமரி எதைப்பற்றி பேசுகிறாளென்று வெற்றிக்கு புரியவில்லை. யோசித்தவனுக்கு, நல்லுவும் விநாயகமும் ஒன்றாக நீர் எடுக்க போன நிகழ்வு நினைவுக்கு வர… கூடவே இருவரும் பார்வையாலே பேசிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. நீர் எடுக்க போன இடத்தில் தான் எதுவோ நடந்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்து கொண்ட வெற்றி அமரியின் குரலில் கவனம் செலுத்தினான்.

“ஒருவேளை பாட்டி சொல்லுற போல நான் இங்க இருக்கிறது அப்பா உயிருக்கு ஆபத்தா போயிடுமா?” விடையறியா கேள்வியினை தன்னிடமே கேட்டுக்கொண்டாள்.

“முன்ன படிச்சதால கல்லூரி விடுதியிலேயே தங்கியாச்சு… இப்போ எங்க போயி தங்குறது தெரியலயே” அமரியின் குரல் அழுகையில் வெடித்திருந்தது.
வெற்றிக்கு கேட்க கேட்க மனம் கனத்தது. அமரியின் பாட்டியின் மீது ஏனென்றே தெரியாமல் கோபம் கொண்டான்.

“எதையும் யோசித்து அழுகையில் கரைவதை விட, பாட்டி சொல்லுற போல கல்யாணமே கட்டிக்கிடலாம்… அப்போ அடிக்கடி இங்க வந்து போவவாது இருக்கலாம்” என்று சொல்லியவனின் குரலில் வேதனை மிகுந்திருந்தது.

“நாளைக்கே பாட்டிகிட்ட கல்யாணம் கட்டிக்கிட சம்மதம் சொல்லிடலாம்.”
அத்தோடு அப்பதிவு முடிவடைந்திருந்தது.

தனது எழிலின் வாயாலேயே வேறொருவனை கட்டிக்கிட சம்மதம் சொல்லுவோம் என்று கேட்ட வெற்றியின் காதல் மனம் துடித்தது.

‘உன்னை என்னைத் தவிர யாராலும் நல்லா, நீ இழந்த சந்தோஷத்தை எல்லாம் கொடுத்து பாதுகாப்பா பார்த்துக்க முடியாதுடி’ என்று மானசீகமாக அவனவளிடம் பேசியவனுக்கு இரு குடும்பத்தை ஒன்று சேர்த்து அவளிடம் காதலை சொல்லி மணம் முடிப்பதை நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது.

‘அதற்குள் அமரி வீட்டினரிடம் சம்மதம் சொல்லி ஏதேனும் நடந்து விட்டால்’ என்று சிந்தனை எழுந்ததுமே,

“இப்போது அமரி இருக்கும் நிலையில் திருமணத்தை பற்றி விருப்பம் தெரிவிக்க மாட்டாள், மீறி எதாவதென்றால் என்னுடைய காதல் அறிந்த பின்னர் கதிர் அமரியை வேறொருவனுக்கு கட்டிக்கொடுக்க சம்மதிக்க மாட்டான்” என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

‘அப்படி அனைத்தையும் மீறி ஏதேனும் நடந்தால், நாம் நேரடியாக களத்தில் இறங்கி விடலாம்’ என்று யோசித்த அவனே கடினப்படாமல் அவனவள் அவனது கை சேர்ந்திடுவாள் என்பது வெற்றியும் அறிந்திடாத ஒன்று .

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சசியின் அலைபேசி இரவின் இனிமையை கெடுப்பதாக ஒலித்தது.

தூக்கத்தில் நாராசமாக ஒலித்த அலைபேசியை கையினால் துழாவிக் கொண்டே “அந்த மதி பிசாசாத்தான் இருக்கும், என்னை நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டாளே” என்று புலம்பியவனாக அலைபேசியை இயக்கி காதில் வைத்தான்.

“உனக்கு இந்த நேரத்துல பேசனுன்னு தோணுச்சுனா சக்திக்கு பண்ணு…” மதியென்று நினைத்து விழி கூட திறக்காது பேசிய சசி,

“டேய்” என எதிர்முனையில் ஒலித்த வெற்றியின் குரலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.

“அண்ணா…”

“என்னடா அதுக்குள்ள தூங்கிட்டியா?”

“வேற வேலை ஒண்ணுமில்லை அதான்…”

“சரி சரி… நீர் எடுக்க அருவிக்கு போன அன்னைக்கு அப்பா ஏதேனும் வந்து சொன்னாரா?”

வீட்டில் இருப்போரிடம் பகிர்ந்திருந்தால் எப்படியும் சசிக்கும் தெரிந்திருக்கும் என்பதாலேயே சசியிடம் கேட்டான். வெற்றிக்கு எழிலின் திருமண முடிவுக்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும். அவள் குரல் பதிவில் நல்லுவையும் குறிப்பிட்டிருந்ததால் விநாயகத்திற்கு என்ன நடந்ததென்று அவர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கு என்பதாலேயே இவ்வழியில் நிகழ்வினை அறிந்து கொள்ள முயற்சித்தான்.

“அன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு நல்லுப்பா தாமதமாதான் வீட்டுக்கு வந்தாருங்க… கூடால வந்த தாத்தாரு முகம் கூட ஏதோ யோசனையில இருந்த மாதிரி தாங்க ஞாபகம்…” என அன்று அதற்கு மேல் என்ன நடந்ததென்று யோசித்தவன்,

“நல்லுப்பா யார்கிட்டயும் எதுவும் சொல்லலையே அண்ணா” என்று முடித்தான்.

“சரிடா” என்று வைத்த வெற்றி, ‘தாத்தா முகம் யோசனையில இருந்துச்சுன்னா அங்க நடந்ததை அப்பாரு தாத்தாகிட்டேயும் சொல்லல போலிருக்கு’ என நினைத்தவன்

“அமரிக்கே தெரிந்த விடயம் என்பதால் கதிருக்கும் தெரிந்திருக்கும் அவனிடமே கேட்டுக் கொள்ளலாம்” என்று தீர்மானித்தான்.

_________________________

“நீயும் சக்தியை விரும்புரியா ஆத்தா?”
செல்லச்சாமி அவ்வாறு வினவியதும் எதையெதையோ யோசித்த மதி, “எனக்கு தெரியலயே அப்பா” என்றாள்.

“நல்லா யோசிச்சு பாருடா, உனக்கே புரியும்” என்றவர் இருக்கையிலிருந்து எழ, அவரின் கை பிடித்த மதி…

“அப்போ உங்களுக்கு புரிஞ்சிடுச்சாப்பா” என்று கேட்டாள்.
அவர் ஆமென்று தலையசைக்க,

“புரிஞ்சதை கொஞ்சம் சொல்லுப்பா” என்று சிணுங்கினாள்.

“உன் கூட்டாளி சசி, சின்னப்பய அவனே இந்த விடயத்துல உனக்கா புரிஞ்சாதான் சரியா இருக்குமுன்னு… நேரடியா சொல்லாம உனக்கு புரிய வைக்க முயற்சிக்கிறா(ன்)… அப்படியிருக்கும் போது நான் சொல்லுறது சரி வராதே ஆத்தா” என அவர் விளக்கமளித்தார்.

“அப்போ பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்குனுங்கிற எண்ணம் உங்களுக்கில்லையோ?” விளையாட்டாக பேசுவதாக நினைத்து அவரின் மனதை புண்படுத்தினாள்.

சிறுப்பெண் புரியாது பேசுகிறாளென்று வயதில் மூத்தவருக்கு புரிந்தாலும் அந்நொடி அவருக்கு மனம் காயம் படத்தான் செய்தது.

“மதி, யாரை பார்த்து என்ன கேட்டுட்ட… என்னை விட அண்ணாரு உன் மேல தன் உசுரையே வச்சிருக்காரு.”

அப்போது தான் மதியின் இறுதி பேச்சினை கேட்டவராக வீட்டிற்குள் வந்த ராசு எங்கு மகள் தனது அண்ணனை மனம் நோக செய்துவிட்டாளோ என்று அவ்வாறு உரைத்தார்.

“தந்தை கேட்ட பிறகே மதிக்கும் தனது வார்த்தைகளில் இருக்கும் தவறு புரிய உடனடியாக செல்லச்சாமியிடம் மன்னிப்பு வேண்டினாள்.

தன் மகளை பாசத்தோடு நெஞ்சில் சாய்த்தவர் அவள் எதிர்பார்த்த விடையை மறைமுகமாகக் கூறினார்.

“உனக்கு கல்யாணம் சொன்னதும் ஏன் சக்தி முகம் நினைவுக்கு வந்துச்சு?, இதுக்கு பதில் தெரிஞ்சா சக்தி தம்பியோட எதிர்பார்ப்பு என்னான்னு உனக்கு புரியும்,” என்றவர் “நீ நல்லாயிருந்தாதான் இந்த அப்பனுக்கு சந்தோஷம் ஆத்தா” எனக் கூறிச் சென்றார்.

மகள் மன்னிப்பு வேண்டியிருந்தாலும் தனது அண்ணனிடம் ராசுவும் “சின்னப்பிள்ளை ஏதோ தெரியாம சொல்லிடுச்சீங்க… நீங்க மனசுல நிறுத்திக்காதிங்க” என்றார்.

“சின்னப்பிள்ளை பேச்சை யாராவது கடினமா எடுத்துக்குவாங்களா விடுடா” என்ற செல்லச்சாமி “திருவிழா முடியர வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம், நாளைக்கே பெரியவரை பார்த்து கல்யாணத்தை சுருக்க வைக்க பேசிடலாம்” என்று தெரிவிக்க ராசுவும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

__________________________

அறைக்குள் நுழைந்த கதிரிடம் கீழே நடந்த விடயம் ஒன்றும் தெரியாததைப்போல் வாணி பேசினாள்.

“என்னாச்சு, கீழே ஒரே சத்தமா இருந்துச்சு?”

“ஏன் உனக்கு எதுவும் காதுகள்ல விழுகளையோ!” என்று கேட்டுக்கொண்டே வாணியின் கையை பிடித்தவன்,
“அறைக்குள்ள வந்துட்டா என் பொண்டாட்டியா மட்டும் நடந்துக்கோடி, அதவிட்டுட்டு இந்த புலன் விசாரணை எல்லாம் வேண்டாம்” என்றவன் “எங்களுக்கு முன்னுக்க உங்களுக்கு செய்தி வந்திருக்குமே, உனக்குத் தெரியாதா?” என வினவினான்.

“அதெல்லாம் தெரியும், யாரோ ஒரு பொண்ணு உன் மச்சான் கூட வந்துதாமே… யாருன்னு தெரியுமா உனக்கு.” வேண்டுமென்றே அவன் சொல்லுகிறானா இல்லையாயென ஆழம் பார்த்தாள்.

பிடித்திருந்த கையை விடுவித்து தோளில் கைபோட்டு அணைத்தவாறு நின்றவன் மனைவியின் கன்னத்தில் விரலினால் கோலமிட்டவாறே,
“நீ நேரடியா கேட்டிருந்தாலும் பணி சம்பந்தப்பட்ட விடயம் எதுவா இருப்பினும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்” என்க வாணி அவனை தள்ளிவிட்டு விலகி நின்றாள்.

“நீ என் மனைவியா இருந்தாலும், உண்மையை தவிர்த்து ஒன்றுமில்லாததை திரித்து கூறும் செய்தி ஊடகத்தில் தானே பணிபுரிகிறாய்” என்று அழுத்தமாகக் கூறியவன், “இந்த நேரத்திலாவது பத்திரிகைக்காரியாக நடந்துக்காம மாமனுக்கு வேண்டிய தேவையை நிறைவேத்துடி என் ஆசை பொண்டாட்டி” என இறுக்கி அணைத்திருந்தான்.

கணவனின் வேண்டலில் தனக்கும் விருப்பம் என்பதை அவன் கன்னம் கடித்து அவள் சம்மதம் வழங்க இருவரும் அனைத்தையும் மறந்து தங்களது தனியுலகிற்கு சென்றனர்.

“ஏன்டா இப்படி புலன் விசாரணை நடக்குற அளவுக்காடா நடந்துப்பீங்க?”
தனது சகாக்களிடம் கத்திக் கொண்டிருந்தான் அமைச்சரின் வலது கையாக செயல்படும் ஆள்.

“நீ இவனுங்ககிட்ட கத்துறதால ஒன்னும் ஆகப்போறதில்லை மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிப்போம்.” அமைச்சர் சிடுசிடுத்தார்.

“ஐஜி’யை மிரட்டி குமரன் வழக்கை மீண்டும் அந்த வெற்றி பய கையிலெடுத்திட்டான்… அத்தோட இந்த பொண்ணோட வழக்கையும் அவந்தான் நடத்தப்போறான் போலிருக்கு, அதுமட்டுமில்ல, காட்டுப்பகுதிக்கு புதுசா வந்திருக்க கதிரும் போலீசு வெற்றியும் கூட்டாளிவ மட்டுமில்லாம ஒரே ஊருங்களாம்.” வலது கை சொல்லிக்கொண்டே போக அமைச்சருக்கு மாட்டிக்கொள்வோமோ என்று சிறு பயமும் தோன்றியது.

“போதும் நிறுத்துடா, அவன் நம்மள நெருங்குறதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சிருக்கணும்” என்ற அமைச்சர் “தேவையில்லாம அந்த பொண்ணை ஏன்டா கொன்னீங்க?” எனக் கேட்டார்.

“நாம காட்டுக்குள்ள என்ன பண்ணுறோங்கிறத பாத்துடிச்சுங்க, அதான் கொல்ல வேண்டியதாப் போச்சு” என்று ஒருவன் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை ஏற்றவராக சில அடி தூரம் நகர்ந்து சென்று… இரண்டு நிமிடங்களில் பேசிவிட்டு மீண்டும் தனது சகாக்களிடம் வந்தமர்ந்தார்.

சிறு யோசனைக்கு பிறகு,
“அந்த செல்லியூர் செல்லியம்மன் சிலை ரொம்ப பழமை வாய்ந்ததோ?” என வினவினார் அமைச்சர்.

“ஆமாங்கய்யா. எண்ணூறு வருட பழமை வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்க” என்று ஒருவன் பதிலளிக்க,

“காட்டு சரக்கோட சேர்த்து அந்த சிலையும் வேணுமாம். அந்த வெள்ளைக்காரனுக்கு, கோடி கணக்குல பணம் தரேன்னு சொல்லுறான்… பார்த்து வேலையை முடிச்சிடு” என்று அமைச்சர் சர்வ சாதாரணமாகக் கூறினார்.

அதில் அடியாட்கள் அதிர்ந்து நின்றனர்.

“என்னாச்சு… எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?”

“ஐயா அந்த ஊரு அந்த வெற்றி பய ஊருங்க, அவன் ஊருக்குள்ளவே கை வச்சா நம்மள சும்மா விடுவானா,” என்று ஒரு தடியன் பதிலளிக்க,

“அதுவுமில்லாம அந்த அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவன்னு சுத்து வட்டாரத்துல பேசிக்கிறாங்க… அந்த சிலையை எடுக்க போயி எங்க புள்ள குட்டிகளுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுதுன்னா யாருங்க பதில் சொல்லுறது” மற்றொருவன் பேசினான்.

“உங்களால முடியாதுன்னா நான் வெளியூரு ஆளுவள வச்சு பாத்துக்கிறேன்… உங்க பயத்துக்காக கோடி கணக்கான ரூவாய இழக்கணுமா” என்று சத்தமாக பேசியவர்,

“அந்த ஊருக்குள்ளாரவே பேராசை பிடிச்ச ஒருத்தன் இருப்பான் அவனை கூட்டியா. மத்ததை நான் பாத்துக்கிறேன்” எனக் கூறி அப்போதைக்கு அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் பணத்தின் மீதான மோகம் மட்டும் யாருக்கும் குறைவதில்லை. நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவும் கருவி மட்டுமே பணம் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளும் போது ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு மறைந்து விடும்.

________________________

சூரியன் உதிக்கத் துவங்கிய காலைப்பொழுது…
பறை அடிக்கும் ஓசை அனைவரின் காதுகளையும் நிறைத்ததும். சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்து ஒருவர் என்ன சேதி என அறிந்துக்கொள்ள அவரவர் வாசலுக்கு வந்து நின்றனர்.

“ஏய் ஜானகி பறையடிக்கிறாங்க, என்ன சேதின்னு தெரிஞ்சிக்கிட்டு வாடி.”

செண்பகம் பாட்டி தனது மருமகளை விடயம் அறிந்து வரக் கூறினார்.

“நான் அடுக்கலைக்குள்ள வேலையா இருக்கேனுங்க” என்ற ஜானகியின் குரலில் காலை நேர தேநீர் அருந்திக் கொண்டிருந்த சசி எழுந்துச் சென்றான்.

“ஏய் கெழவி என்னோட டீ’யை எடுத்து குடிச்சிடாதே” என்றுக் கூறியவன், “நிம்மதியா டீ’யை கூட ரசிச்சு குடிக்க விட மாட்டேகிறாங்க” என புலம்பியவனாக வெளியே செல்ல, தோட்டத்திற்கு சென்றிருந்த சக்தி எதிரே வந்தான்.

“அதெல்லாம் தண்டோரா போட்டு முடிச்சாச்சு” என்க திரும்பி உள்ளே வந்த சசி தான் பாதியில் நிறுத்திய பணியைத் தொடர்ந்தான்.

கிராமங்களில் பஞ்சாயத்து கூடுவதையோ அல்லது அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் செயல்களை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு ஒரு நபர் பறை சத்தம் எழுப்பி வீதி வீதியாக சென்று தகவல் அளிப்பர். அது தண்டோரா இடுதல் ஆகும்.

“இன்னைக்கு திருவிழாவுக்கு கொடி நடவு… வீடு வாசல் சுத்தமா வையுங்க, காலை பத்து மணிக்கு கோவிலுக்கு வரவங்க வரலாம், இதான் அப்பத்தா சொன்னாங்க” என்றுக் கூறிக்கொண்டே சக்தி தனது அறை பக்கம் செல்ல,

“ஏய் நில்லுடா” ஜானகி தான் அழைத்திருந்தார்.

அன்னையின் குரல் கேட்டதும் அடுத்த அடி எடுத்து வைக்காது நின்றிருந்தான்.

“உனக்கு என்னடா வருத்தம்?”
திரும்பியவன் ஒன்றுமில்லை எனும் விதமாக பார்த்தான்.

“அப்புடி பாத்தாக்கா என்ன அர்த்தம், உன் ஆத்தா கேக்குறாளா இல்லையா பதில சொல்லு.” செண்பகம் பாட்டி தன்னுடைய பேரனுக்கு ஏதேனும் மனக்குறை இருக்குமோ என வாஞ்சையுடன் கேட்டார்.

‘மதியிடம் தான் எதிர்பார்க்கும் விடயம் நடக்கவில்லையென அதிலேயே உழன்று, வீட்டில் உள்ளவர்கள் தன்னை கூர்ந்து கவனிக்குமளவிற்கு நடந்து கொண்டோமே… எப்படி சமாளிப்பது.’ மனதோடு உரையாடினான்.

“என்ன சொல்லலான்னு யோசிக்காதடா…”

ஜானகியின் கேள்விக்கு இல்லையென அவன் தலை ஆடினாலும், உண்மையில் அவர் கேட்டதைத்தான் அவன் செய்து கொண்டிருந்தான். அவசரத்திற்கு என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாது சசியை ஏறிட, அவனோ உலகில் உள்ள மொத்த தேநீருக்கு அரசு இன்றே தடை விதிப்பதைப் போல் குவளைக்குள் புகுந்து ரசித்து ருசித்து மிடறு மிடறாக விழுங்கிக் கொண்டிருந்தான்.

சக்தி பார்ப்பதை உணர்ந்தும் சசி தன் காரியமே கண்ணாக இருந்தான்.

‘அவனை பாத்துடாத சசி, பயபுள்ள கோத்து விட்டுடும்’, தனக்குத்தானே அறிவுரையும் இட்டுக்கொண்டான்.

“அவனை ஏன் பாக்குற, கேட்டதுக்கு விடை சொல்லு.”

‘விடமாட்டாங்க போலிருக்கே… ஆத்தா காப்பாத்து’ என்று மனதில் அம்மனுக்கு அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தான்.

அவனின் வேண்டுதலுக்கு அம்மன் செவி சாய்த்தாளோ என்னவோ சக்தியை காப்பாற்ற அந்நேரம் செல்லச்சாமியும், ராசுவும் வந்து சேர்ந்தனர்.

___________________

அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த வாணியின் அலைபேசி அடித்துக் கொண்டேயிருந்தது. திரையில் ஒளிரும் எண்ணை பார்த்துக்கொண்டே நின்றாளே தவிர அழைப்பினை ஏற்கவில்லை.

“என்னாச்சு இவளுக்கு, வாணி போன் அடிக்குது பாரு” எனக் கூறிக்கொண்டே குளியலறைக்குள்ளிருந்து வெளிவந்த கதிர் அவள் கையினிலே அலைபேசி இருப்பதைக் கண்டு,
“என்னடி பராக்கு பார்த்திட்டு இருக்க, யாரு போன்ல… அட்டென் பண்ணுடி” என்று அலைபேசியினை பார்க்க வெற்றியின் எண் ஒளிர்ந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சகோதரனிடமிருந்து வரும் அழைப்பு என்பதால் வாணியின் கண்கள் பனித்திருந்தன. கதிரின் மனம் யோசனைக்கு தாவியிருந்தது.
நீண்ட நேரம் ஒலித்து அடங்கிய அலைபேசி மீண்டும் ஒலிக்க சற்று பதட்டத்துடனே அழைப்பினை ஏற்று காதில் வைத்தாள்.

“அண்ணா.”

“திஸ் இஸ் டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ்… யூ நீட் டூ இன்வெஸ்டிகேட் யோவர்செல்ப் அஸ் அ மேட்டர் ஆப் கேஸ். யூ சுட் ஹேவ் அரைவ்ட் அட் தி போலீஸ் ஸ்டேஷன் வித் இன் ஹால்ப் அன் ஆர்” என்று தனது பணி சம்மந்தமாக பேசியவன் அவளை ஒரு வார்த்தை கூட பேசாது இணைப்பினை அணைத்திருந்தான்.
(This is deputy commissioner of police. You need to investigate yourself as a matter of case. You should have arrived at the police station within half an hour.)

என்னவென்று தெரியாது வாணி கதிரை நோக்க,
“நீ என்ன தப்பு பண்ண?” என கதிர் பட்டென்று கேட்டிருந்தான்.

அப்போதுதான் வாணிக்கு இரவு தான் செய்தது நினைவுக்கு வந்தது.
கதிர் உறங்கிய பிறகு, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றானா என்பதை உறுதி செய்துகொண்ட வாணி பத்திரிகை ஆசிரியர் பேரறிவாளனுக்கு அழைத்திருந்தாள்.

மறுநாள் காலை பத்திரிகையில் வர வேண்டிய செய்திகளை சரி பார்த்துக்கொண்டிருந்தவர் உடனடியாக அவளது அழைப்பினை ஏற்றிருந்தார்.

“சார் தலைப்பு செய்தி தயார் செய்துட்டிங்களா?”
அவளின் மொட்டையான கேள்வியில் ஒன்றும் புரியாது,

“இப்போ எதுக்கு அழைத்தீர்கள், அதற்கான காரணத்தை சொல்லுங்க” என்று வினவினார்.

“சார் காட்டுக்குள்ள என்ன நடக்குது, அங்கு சென்ற குமரன் மற்றும் கலை எப்படி இறந்தார்கள்… இதற்கான உண்மையான காரணம் தான் நம்மால் கண்டு பிடித்து எழுத முடியவில்லை. ஆனால் இந்த வழக்கு விடயத்தை வேறு விதமாக திசை மாற்றி நம் பத்திரிக்கையினை முன்னிலை படுத்த எனக்கொன்று சிக்கியிருக்கிறது” என்றவள் அமரி கலையின் மீது விழுந்து அழுததை அவளின் பெயர் மற்றும் யாரென்று குறிப்பிடாது சொல்லிய வாணி…

“அப்பெண் எப்படி எதற்காக அங்கு வந்தாள், அவள் யாராக இருக்கும். ஒருவேளை அவளுக்கும் இறந்த கொலைகளுக்கும் சம்மந்தம் இருக்குமா, காவல்துறை அதிகாரி வெற்றி அப்பெண்ணை யாரும் கவனிக்கும் முன் அங்கிருந்து அப்புறப்படுத்தியது ஏன், அவருக்கும் அப்பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்று நாளை பத்திரிகையில் போட்டோமென்றால் ஒரு வாரத்திற்கு நாம் தான் முன்னிலையில்” என எதையோ சாதித்துவிட்ட உணர்வில் மிதப்பாகக் கூறினாள்.

“நாம இப்படியொரு செய்தி போடுறோம் என்றால் நமக்கு கொஞ்சமாவது உண்மை தெரிந்திருக்க வேண்டுமே, அப்பெண் யாரென்று தெரியாது எப்படி போடுவது… இருப்பினும் உங்களது யோசனை மிக்க நன்று” என்ற ஆசிரியர் சற்று தயங்கினார்.
ஆசிரியரிடம் இத்தகைய பாராட்டினை பெற்று நற்பெயர் வாங்கிட வேண்டுமென்கிற எதிர்பார்ப்பில் தானே அமரியை மட்டுமில்லாது தன்னுடைய அண்ணனையும் இதில் இழுத்து விட்டோம் என்பது புரியாமல் இப்படி செய்கிறாள்.

அவர் கொஞ்சம் மெச்சுதலாக பேசியதும், முழுமையாக அவரிடத்தில் மதிப்பு பெற வேண்டுமென… “அப்பெண் யாரென்று எனக்குத் தெரியும் சார், முதலில் கேள்வியை உருவாக்கி நாமே விடை கண்டுபிடித்ததை போல் செய்தியை வெளியிடுவோம்” என்று எதையும் யோசிக்காது கூறினாள்.

“அப்போ சரி பத்து நிமிடத்தில் நீங்களே கன்டென்ட் தயார்செய்து மெயில் பண்ணிடுங்க” என்றவர் “குட் ஜாப் வாணி” என்றதோடு காலை தான் கடினமாக பேசியதற்கு மன்னிப்பும் வேண்டினார்.

அவர் மன்னிப்பு வேண்டியதுமே தான் செய்தது சரி தான் என்கிற அவளின் எண்ணம் வலுப்பெற்றது.
அடுத்து அவள் சொல்லியவற்றை தொகுத்து செய்தியை உருவாக்கி ஆசிரியருக்கு அனுப்பி வைக்க, இன்றைய காலை செய்தித்தாளில் சூடான செய்தியாக “அந்த மர்ம பெண் யார்? அவளுக்கும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? துணை ஆய்வாளர் வெற்றி அப்பெண் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்கின்றாரா?” போன்ற கேள்விகள் வெளி வந்திருந்தன.
இவற்றை நினைத்து பார்த்த வாணி கதிர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது அமைதியாக நிற்க,

“நானே உன்னை காவல் நிலையம் அழைத்துச் செல்கிறேன்” என்றுக் கூறி தயாராகத் தொடங்கினான்.

‘நீ என்ன தவறு செய்திருந்தாலும் கணவனாக என் கடமையை செய்வேன்’ என்கிற உட்பொருள் அவனது செயலில் இருந்தது.
வாணி கிளம்ப எடுத்துக்கொண்ட நேரத்தில் கதிர் வெற்றியை அழைக்க அவன் அழைப்பினை ஏற்கவில்லை.

பொதுவாக மற்றவர்களை தவிர்த்து கோபத்தினை வெளிப்படுத்தும் ஆள் வெற்றி கிடையாது என்பது கதிருக்கு நன்கு தெரியும். ‘ஆனால், இன்று வாணியின் செயலால் தன்னை தவிர்க்கின்றானோ’ என எண்ணும் போதே உன் எண்ணம் தவறு என்பதைப்போல் வெற்றி கதிரை அழைத்தான்.

“சொல்லுடா என்ன விடயம்?”
கதிர் அழைப்பினை ஏற்று தனது இருப்பினை தெரிவிக்கும் முன்பு வெற்றி பேசியிருந்தான்.

“நீதான் மாப்பிள்ளை சொல்லணும்” என்றுக் கேட்ட கதிருக்கு,

“நீ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுறியோ!” என்ற வெற்றியின் மனதில் எல்லாவற்றையும் தன்னிடம் தான் கேட்பதற்கு முன்னரே சொல்லிவிடும் தன் நண்பன் விநாயகத்திற்கு என்ன நடந்ததென்று இன்னும் சொல்லாமலிருப்பது, முதல் முறையாக குடும்ப விடயத்தை சொல்லாமல் தன்னை பிரித்து பார்க்கின்றானோ என வருந்தினான்.

ஆனால், வெற்றியின் மனதுக்கு நன்கு தெரியும் கதிரால் தன்னிடம் எதையும் மறைக்க முடியாதென்று இருப்பினும் வாய் வரை வந்துவிட்ட கேள்வியை கேட்காது இருப்பது ஏதேனும் பிரச்சனைக்கு வழி வகுத்துவிடும் என்பதாலேயே அதனைக் கேட்டிருந்தான்.

“என்ன மச்சான் சொல்லுற, எனக்கு விளங்கலயே, நான் என்ன உன்கிட்ட சொல்லுல?” கதிர் வெற்றியின் அக்கேள்வியால் பதற்றம் கொண்டான்.

“ஒண்ணுமில்லை” என்ற வெற்றியின் குரலினை வைத்தே அவன் அவ்வாறு கேட்டதற்கு வருத்தப்படுகிறான் என்பதை புரிந்து கொண்ட கதிர்,

“உன்கிட்ட மறைச்ச ஒரே விடயம் என்னோட காதல் மட்டுந்தான், அதைத்தவிர வேறெதையும் மறைச்சதில்லை… இப்போகூட நான் மறைச்சதா நீ நினைக்கிறது நிச்சயம் நான் மறந்து போனதாதான் இருக்கும்” என்றான். அழுத்தமாக உரைத்திருந்தான்.

“எனக்கு புரியுது… யாருமேலயோ இருக்க கோவத்த உன் மேல காட்டிட்டேன், மன்…”

“வேண்டாம் மச்சான்… மன்னிப்பு கேட்டு என்னை தள்ளி வச்சிடாத, எதையும் உரிமையா என்கிட்ட கேட்கும் என் மச்சான் எங்கன்னு தெரியல” என்ற கதிர் இன்று வெற்றி தன்னிடம் பேசும் முறை எதுவும் சரியில்லையென உணர்ந்து வருத்தத்துடன் அலைபேசியை அணைத்தான்.

வெற்றிக்கு அவனின் எழிலின் மீதுள்ள காதலை விடவே கதிரின் நட்பின் மீதுள்ள பற்று அதிகம், அப்படியிருக்கையில் ‘தேவையில்லாமல் கதிரை வருத்திவிட்டோமே’ என கதிருக்காக அவனது மனம் கனத்தது.

“நிச்சயம் கதிர் வருத்தப்பட்டிருப்பான்” என்று அவனுக்காக வருந்தினான். “நேரில் பார்க்கும்போது பார்த்துக் கொள்ளலாம்” என தனது வேலையில் மூழ்கினான்.

ராம் வெற்றியை அறை வாயிலிலிருந்து எட்டிப் பார்ப்பதும், வெற்றி பார்த்தால் திரும்பி செல்வதுமாய் இருந்தான். அவன் ஏதோ கேட்க முற்படுகின்றான் என்பது புரிந்த போதிலும் வெற்றி என்னவென்று கேட்கவில்லை.
ராமின் நடவடிக்கைகளை கவனித்த மூர்த்தி,

“நாம் கேட்கும் கேள்விக்கே சில நேரம் அவர் விருப்பப்படாமல் பதில் கிடைக்காது… இதுல கேட்காம அவர் மூஞ்சியவே பார்த்துகிட்டு இருந்தாக்கா உங்க மூளைதான் சூடாகும், நீங்க வெற்றி சார்கிட்ட என்ன கேக்கணுமோ கேளுங்க சார்” என்றார்.

‘இவர் சொல்லுவதும் சரிதான், மண்டை காயுது கேட்டு விடலாம்’ என முடிவெடுத்தவனாக வெற்றியின் அனுமதி பெற்று உள் நுழைந்த ராம்… வெற்றி பார்த்த ஆராய்ச்சி பார்வையில் கேட்க வந்ததை மறந்து தடுமாறினான்.

பதட்டத்தில் வெற்றியின் மேசையின் மீதிருந்த தம்ளர் நீரினை எடுத்துக் குடித்த ராம் அமைதியாக இருக்க,
“இதுக்கு தான் வந்திங்களா?” என வினவினான்.

வெற்றியின் கேள்வி புரியாது “சார்” என்று ராம் வார்த்தையினை முடிக்காது இழுக்க,

“நீங்க என்னை ரொம்ப நேரம் சைட் அடிச்சிட்டு இருந்ததை பார்த்ததும் ஏதோ கேட்கப்போறீங்க நினைச்சேன்… இந்த தண்ணிய கேட்கவா இவ்வளவு யோசிச்சீங்க” என்று விளக்கினான்.

வெற்றியின் நக்கல் ராமிற்கு புரிந்ததோ இல்லையோ அங்கிருந்த மூர்த்திக்கு நன்றாக புரிய, அவர் சிரித்து விட்டார்.

ராமின் முகத்தை வைத்தே தான் பேசியது அவனுக்கு புரியவில்லை என்று உணர்ந்த வெற்றி, “நான் பேசுறதை புரிஞ்சிக்க மூர்த்தி அண்ணனால மட்டுந்தான் முடியும்” என்றவன் “சரி, நீங்க என்ன கேக்கணும்” எனக் கேட்டான்.

“நீங்க ஏன் சார் அந்த போதைப்பொருள் விற்பனை வழக்கு முடிந்து விட்டதா கோப்பினை ஒப்படைத்து விட்டீர்கள்?”

“இந்த கேள்வி எதற்கு?” எனும் விதமாக பார்த்த வெற்றி, “இதை எப்பவோ கேட்பீங்கன்னு நினைத்தேன்” என்றான்.

“அது வந்து சார்… காட்டுக்குள்ள போதைப்பொருள் தான் பதுக்குறாங்க நினைக்கிறேன், அதுதான் நம்மை திசை திருப்ப முயற்சி செய்கிறாங்க.”

“அப்படியா எதை வைத்து சொல்றீங்க?”

“ஐஜி’யே நேரடியா வந்து அந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டாமென சொல்லும் போதே தெரியுதே சார், நீங்க அதை கொடுத்திருக்கக் கூடாது சார்… இந்த காட்டுப்பகுதி வழக்குக்கூட நாம் போதைப்பொருள் வழக்கில் தலையிடக் கூடாதென்பதற்கான முயற்சி தான் சார்” என்று ராம் ஆதங்கமாக தனது கருத்தை தெரிவித்தான்.

“போதைப்பொருள் வழக்கு தான் நம்மை திசை திருப்ப குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட பொய் வழக்கு… காட்டுப்பகுதியில் நடக்கும் மர்மம் தான் உண்மையான வழக்கு” என்ற வெற்றி “கொஞ்சம் பொறுமையா யோசிங்க ராம்” என்றான்.

‘எவ்வளவு யோசித்தும் புரியலையே.’
மீண்டும் ராம் கேட்கத் தயங்கும் கேள்வியை புரிந்துகொண்ட வெற்றி,

“ஐஜி’யே வேண்டாமுன்னு சொன்னாக்கா, அப்போ அதுல தான் ஏதோ இருக்குன்னு நாம் அந்த வழக்கு பக்கம் போயிடுவோமுன்னு குற்றவாளி தப்பு கணக்கு போட்டுட்டான்.”

வெற்றி சொல்லி முடித்ததும் “எனக்கு புரிஞ்சிடுச்சு சார், நீங்க ரொம்ப புத்திசாலி சார்” என்றான்.

“இவ்வளவு புத்திசாலியா இருக்கிறதாலதான் அவரு அந்த இடத்துல இருக்காரு.” ராம்க்கு மட்டும் கேட்கும் குரலில் மூர்த்தி முணுமுணுத்தார்.

“நீங்க சொல்லுவது உண்மை தான் மூர்த்தி அண்ணா” என்று ராம் அவரின் கூற்றை ஆமோதித்தான்.

அந்நேரம் பெண் காவலர் உமா பத்திரிகையாளர் வாணி வந்திருப்பதாக தகவல் அளித்தார்.

“அவங்களை உள்ளே அனுப்பி வையுங்கள்” என்ற வெற்றி தனது அறையிலிருந்த ராம் மற்றும் மூர்த்தியை வெளியே அனுப்பினான்.

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
46
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வாணி தான் நல்ல பேரு வாங்கணும் என்ற ஆர்வக்கோளாறுல எதையும் யோசிக்காம செஞ்சுகிட்டு இருக்கா