Loading

காவ(த)லன் 12

ஜானகி மற்றும் செண்பகத்திடமிருந்து தப்பித்து அறைக்குள் நுழைந்த சசி, ஜானகி கேட்ட கேள்வியினையே தன்னிடம் கேட்டுக் கொண்டான்.

“இந்த சக்தி பய ஏன் நாலு ஐஞ்சு நாளா பேயடிச்ச கணக்கா சுத்திட்டு திரியுறான்”, வாய்விட்டு புலம்பியவன் ‘அதெல்லாம் சின்ன பய உனக்கெங்கே புரிய போவுது… கடைசி வரை இப்படியே மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்திட்டு இருக்க வேண்டியது’ என்று சசி தனது மனசாட்சியிடம் பேசிக் கொண்டே போக அவனின் அறைகதவு வேகமாக யாரோ ஒருவரால் தட்டப்பட்டது.

“இந்த கெழவி விஷயத்தை கறக்காம போவாது போலிருக்கே… எனக்கே தெரியாத ஒன்னை சொல்லுன்னா எங்க இருந்து சொல்லுறது” என்றவனாய் மெத்தையிலிருந்து இறங்கி கதவின் அருகில் செல்ல கதவு உடைந்து விடுமளவிற்கு தட்டும் சத்தம் அதிகரித்தது.

‘ஆத்தி பேய் பிசாசோ’ என்று பயந்தவன் நெஞ்சில் கை வைத்து, “யாரு?” என்று மெல்ல கேட்க…

அந்த பக்கத்திலிருந்து “நாந்தான் மதி” என்ற குரலில், “ஆத்தி இது பேய் பிசாசுகள விட பயங்கிறமானதாச்சே” என்று அலறியவன் கதவை வேகமாகத் திறந்திருந்தான்.

“எங்கடா உன் கூட்டாளி?”
மதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“நீ எதுக்கு இப்போ இவ்வளவு கோபமா இருக்க?” சசி சாதாரணமாகக் கேட்க,

“எல்லாத்துக்கும் காரணம் அந்த சக்திதான், காதலிக்கிறியான்னு கேட்டா ஆமா இல்லைன்னு சொல்லாமா… உனக்காத் தோணலையான்னு கேட்டாக்கா என்ன அர்த்தம்.”

“இதை நீ அவங்கிட்டேதான் கேக்கணும்.”

“ஈஈஈ…” பல்லை கடித்தவளின் செய்கையை கண்டு சசி சத்தமாக சிரித்து விட்டான்.

பாவமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த மதி “அவன் சொல்லுறத பார்த்தாக்கா என்னை லவ் பண்ணுறான் போலிருக்கு, அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ ஒன்னும் சொல்லல?”

“என்னுடைய பதில், நீ நேரா அவன்கிட்ட கேக்குறது தான்.”

“அது தான் மச்சி, இந்த யோசிக்குற வேலையெல்லாம் எனக்கு செட்டாகாது அவனையே பார்த்து கேட்டுடலான்னு போன் பண்ணா எடுக்காம மண்டைய காய விடுறான்” எனக் கூறியவள் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து தரை அதிர குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் கண்கள் கலங்கியது.

“அவன் என்ன எதிர்பாக்குறான்னு சத்தியமா எனக்கு விளங்குல மச்சி” என்றாள்.

மதியின் அம்மா இறந்த போது கூட அவள் கண்கள் கலங்கவில்லை. அவளது அப்பாவை தேற்றுவதற்காக வீட்டின் பெரிய மனுஷி போல் தன்னைக் காட்டிக்கொண்டாள். அவளுக்கு சொந்தமென்று இருப்பது பெரியப்பா செல்லச்சாமியும், அப்பா தங்கராசும் தான். அவள் மட்டும் தான் அவர்கள் இருவருக்கும் உலகம். அவர்களின் வருத்தத்தை காண முடியாது என்பதற்காகவே எதற்கும் எளிதில் கண்கள் கலங்கிட மாட்டாள்.
அப்படிப்பட்டவள் சக்திக்காக கண் கலங்குகிறாள் என்றாள், ‘இதை யோசித்தாலே இவளுக்கு சக்தி மீதிருக்கும் காதல் புரிந்துவிடும்… ஆனால் அதையெல்லாம் செய்ய மாட்டாள், வந்து என் உயிரை நல்லா எடுப்பாள்” என்று மனதோடு புலம்பினான் சசி.

“நீ நேரடியா கேட்டும் அவன் மறைமுகமாக சொல்லுறான்னா அவன் ஏதோ எதிர்பாக்கிறான்னு நீ நினைக்கிறது சரிதான்… ஆனால் அவன் என்ன நினைக்கிறான்னு எப்புடி கண்டு பிடிக்கிறது” என யோசித்தான், பாவம் அவனுக்குத்தான் ஒன்றும் தோன்றவில்லை.

“வெற்றி மாமாகிட்ட கேளு மச்சி.” எதையோ சாதித்துவிட்ட உணர்வில் மதி துள்ளிக்கொண்டு குதிக்க சசி அவளை கொலைவெறியில் பார்த்தான்.

“வெற்றி அண்ணாக்கு மொத அவன் விஷயம் தெரியுமான்னே தெரியல” என சொல்லிக் கொண்டிருந்த சசி சொல்வதை தொடராது,

“இப்போ நீ அண்ணாவை என்னான்னு சொன்னே?” எனக் கேட்டான்.

“இதிலென்ன இருக்கு… வெற்றி மாமான்னுதான் சொன்னேன்” என்றாள்.

“ம்ம்ம் கண்டுபிடிச்சிட்டேன்” என உற்சாகமாகக் குதித்தவன், “உனக்கு நினைவிருக்கா மச்சி… ஒருமுறை சக்தி உன்னை இனி என்னை நீ மாமான்னுதான் கூப்பிடணும் சொல்லி சண்டை போட்டானே, ஏன்னு கேட்டதுக்கு, வெற்றியை அப்படித்தானே கூப்பிடுறவன்னு பதில் சொன்னானே” என்று எப்போதோ நடந்த நிகழ்வினை நினைவூட்டினான்.

“ஆமா, அது எதுக்கு இப்போ” என்கிற ரீதியில் மதி சசியை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

‘ஆத்தி சொன்னா அடிச்சிடுவாளோ.’

“உன் மைண்ட்வாய்ஸ்  எனக்கு கேட்டுச்சி, சொல்லலனாலும் அடிப்பேன்” என்றவளின் வார்த்தைகளில் மிரண்டது போல் நடித்த சசி தனது இரு கன்னங்களையும் கை வைத்து மறைத்தபடி,

“சக்தியை நீ மாமான்னு கூப்பிடனும் நினைக்கிறானோ?என்னவோ?” என்று வேகமாகக் கூறியவன் அங்கிருந்து இமைக்கும் நொடியில் ஓடியிருந்தான். அங்கேயே நின்றிருந்தால் மதி அடித்தாலும் அடித்திருப்பாள் என்பது சசியின் எண்ணம்.

சசி அங்கிருந்து சென்றுவிட்ட போதும் அவன் சொல்லிச் சென்றதை யோசித்த மதிக்கு “இந்த அல்ப விஷயத்துக்கா சக்தி இப்படி நடந்து கொள்கிறான்” என்று சிரிப்புத்தான் வந்தது.

சசியின் அறையை விட்டு வெளியில் வந்த மதி செண்பகத்திடம் வம்பு வளர்க்க நினைத்து அவரை தேட வீட்டிற்குள் நுழைந்தான் சக்தி.

‘போன் எடுக்காமலா ஆட்டம் காட்டுற, இருடி இப்போ இருக்கு ஒரு பெரும் சண்டை.’

சக்தியை பார்த்ததும் கோபமாக நடந்தவளின் மனம் ‘ஒரு நொடி நீ சசி சொன்னதை செய்து பார்க்கலாமே’ எனக்கூற…

கோபத்தினை ஒதுக்கி வைத்தவள், “ஆங்… செய்து பார்க்கலாமே, காசா பணமா” என்று தனக்குத்தானே பதிலளித்துக் கொண்டு சக்தியின் முன் நின்றாள்.

அவளை கவனித்த போதும் முகம் பாராது, “அம்மா மோர் கொண்டு வாங்க” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தவன் தனக்கு முன்னால் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியினை உயிர்பித்தான்.

“இவனுக்கு குசும்புதானே” என்று மெல்ல முணங்கியவள் மாமா என்று விளிக்க முயன்று தோற்றுப் போனாள். அழைக்க முற்பட்டாள் வெறும் காத்துதேன் வருது மொமண்ட் தான். மதி ஏதோ சொல்ல வருவதையும் அது முடியாது அவள் எச்சில் கூட்டி விழுங்குவதையும் கவனித்த சக்தி,

“ஏதாவது சொல்லணுன்னா சொல்லு, அதவிட்டுட்டு பக்கத்துல நின்னு கோமாளித்தனம் பண்ணிட்டு இருக்க” என்று கடிந்தான்.

அந்நேரம் சக்தி கேட்ட மோரினை கொண்டு வந்த ஜானகி, “இப்படிதான் கட்டிக்கும் முன்ன பையனும் பொண்ணும் பார்த்துட்டு திரிவாங்களா” என்று விளையாட்டாய் கேட்டார்.

“ஆமா இதுக்கு முன்ன உங்க மவனை நான் பாத்ததே இல்லையாக்கும்” என்று மோவாயில் தோளிடித்து  வெட்டிக் காட்டியவள் “நான் வரேன்” என்று சென்று விட்டாள்.

செல்லும் வழியெல்லாம் மதி ‘அவனை ஏன் சாதாரணமா அப்படி அழைக்க முடியல’ என்று குழம்பினாள். வெற்றியை அழைப்பது போன்று சக்தியையும் சாதாரணமாக அழைத்து விடலாமென்ற அவளின் எண்ணம் பொய்த்தது.

“சசியை கூட சில நேரங்களில் மச்சி, மாம்ஸ் அப்படின்னு சொல்லும்போது இவனை ஏன் மாமான்னு சாதாரணமா சொல்ல முடியலை” எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவளை செல்லச்சாமி அழைத்தார்.

“என்னத்தா அப்பனை கூட பாக்காது தனியா உன் பாட்டுக்கு பேசிக்கிட்டு போற” என்றார்.
மனைவி மக்களற்ற செல்லச்சாமிக்கு மதி தான் அனைத்தும். மதியும் ராசுவிடம் சொல்ல முடியாதவற்றை கூட செல்லச்சாமியிடம் சொல்லி விடுவாள். அவரும் அவள் உண்மையை சொல்லுகிறாளா இல்லை ஏதேனும் மறைக்கின்றாளா என்பதை மகளின் முகத்தை வைத்தே கண்டு பிடித்துவிடுவார். ஆதலால் அவரிடம் மதியால் எதையும் மறைக்க இயலாது.

மதி அமைதியாக நிற்க, “சொல்லுத்தா ரெண்டு மூணு நாளா உன் முகம் எதையோ யோசிக்கிற கணக்கா தெரியுதே” என்றார். நீ சொல்லவில்லை என்றாலும் என்னால் உன் மனமறிய முடியுமென்று உணர்த்தினார்.

‘தன்னுடைய பெரியப்பாவிடம் மறைக்க எதுவுமில்லை’ என்று நினைத்தவள் “சக்தி உன்னைய விரும்புறானோ” என்று சசி கேட்டது முதல் சற்று நேரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வு வரை அனைத்தையும் சொல்லி விட்டாள்.

பொறுமையாக மகள் சொல்லுவதை கேட்டவர் சற்றும் தாமதிக்காது “நீயும் சக்தி தம்பிய விரும்புறியா மதி” என்றுக் கேட்டிருந்தார்.

_______________________

பத்திரிக்கை அலுவலகம் சென்ற ராம் அங்கு தனக்குத் தேவையான தகவல்களை சேகரித்ததும் வெற்றி காவல் நிலையத்தில் இருக்கின்றானா எனத் தெரிந்துகொள்ள மூர்த்திக்கு அழைத்திருந்தான். அப்போது அவர் சொல்லிய தகவலில் தான் காட்டுப்பகுதிக்கு வந்திருந்தான்.

வெற்றியின் உத்தரவுப்படி ஆம்புலன்சுடன் சென்றவன் உடற்கூறு ஆய்வு முடியும் வரை மருத்துவமனையிலேயே காத்திருந்தான்.

அப்போது தான் அவனது நினைவுக்கு வந்தது, குமரனின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்னும் வழங்காததும் அதனை வெற்றி வாங்கிவருமாறு சொல்லியதும்… மருத்துவரிடம் சென்று கேட்க அவர் சற்று தயங்கினாலும்,

“இப்போ என்கிட்ட தரலன்னா பரவாயில்லை, நாளை துணை ஆணையரே வந்து வாங்கிக் கொள்வார்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட… கலையின் உடற்கூறு ஆய்வறிக்கையுடன் குமரனதும் சேர்த்து கொடுத்திருந்தார்.

“சொல்ல வேண்டியவங்க பெயர் சொன்னால் தான் வேலையாகும் போல” என்றுக் கூறிய ராம் காவல் நிலையம் சென்றான்.

ராமின் வருகையை எதிர்பார்த்து வெற்றி அமர்ந்திருந்த போது தான் “அச்சூழ்நிலையில் தன்னையும் மறந்து எழிலை தெரிந்தது போல் நடந்துகொண்டது மட்டுமில்லாமல் எழிலென விளித்து கதிருக்கு தனது காதலை கோடிட்டு காட்டி விட்டோமோ” என்றதும் சிந்தையில் உதித்தது.

கதிருக்கு தெரிவதில் வெற்றிக்கு ஒன்றுமில்லை. சொல்லப்போனால் தான் காதலிக்கிறோம் என்பது கதிருக்குத் தெரியுமென்று வெற்றிக்கும் தெரியும். ஆனால் எந்தப்பெண்ணை காதலிக்கிறோம் என்பதை இதுவரை கதிரிடத்தில் கூட வெளிக்காட்டியதில்லை. ஆனால் இன்று தன்னையும் அறியாது வெளிப்படுத்தியது, கதிர் என்ன நினைப்பானோ என்று யோசித்தான்.

‘எதுவாக இருந்தாலும் சமாளிப்போம்’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

ராம் இருவரின் உடல் பரிசோதனை அறிக்கையை வெற்றியிடத்தில் சமர்ப்பிக்க, “சார் இறந்துபோன கலையின் உறவினர் வந்திருக்கிறார்” என்று பெண் காவலர் ஒருவர் தெரிவித்தார்.

“அவரை வர சொல்லுங்க” என்ற வெற்றி ராமிடம் “அவரிடம் எழுதி வாங்கிக்கோங்க” என்றான்.

உள்ளே வந்தவர் வெற்றிக்கு வணக்கம் வைக்க, அதனை ஏற்றவன் “நீங்க இவரோட போங்க” என ராமை கைக்காட்ட அவரோ “உங்களிடம் தான் பேச வேண்டும்” என்றார்.

“சரி உட்காருங்க” என்ற வெற்றி அவர் அமர்ந்ததும் “கலைக்கு நீங்க அப்பாவா?” என வினவினான்.

அவர் இல்லையென்று மறுப்பாக தலையசைத்தார். அவரின் கண்களிலிருந்து நீர் இறங்கியது.
அவரை வெற்றி தன்னுடைய காவலன் பார்வையில் அலசத் தொடங்கினான்… மழிக்கப்படாத தாடி, நெற்றியில் சுருக்கம், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர், நாள் தவறாது உழைத்தவர் என்பது அவரின் காப்பு காய்த்த உள்ளங்கை சொல்லியது.

அவர் அழுது முடிக்கும் வரை அமைதி காத்தான் வெற்றி.

ராம் தான் அவரின் அழுகையை இடைவெட்டி “நீங்க இறந்துபோன பெண்ணுக்கு என்ன வேணும்?” என்றுக் கேட்டான்.

சட்டென்று அழுகையை நிறுத்தியவர் “என் பேரு வீரய்யாங்க, நான் கலையோட மாமா.”

“மாமான்னா எந்த வகையில்?”
கேள்வி கேட்ட ராமை பார்த்தவர், “என் பொஞ்சாதிக்கு அண்ணன் மவ(ள்)ங்க கலை.”

“கலையோட ஆயி அப்பன் பெரும் மழை பேஞ்சு ஏற்பட்ட மண் சரிவுல சிக்கி அவ(ள்) சின்ன புள்ளையா இருந்தப்பவே செத்துட்டாங்கங்க… என்ன தான் அண்ண மவளா இருந்தாலும் எவ்வளவு செலவு நாம பாக்கிறதுன்னு என் பொஞ்சாதிக்கு கலை மேல வெறுப்புங்க, இப்போ கூட எங்க எழவு செலவும் கோர்ட்டு கேசுன்னு மத்த செலவும் எங்க தலையில விழுந்துடுமோன்னு…” அவர் மேலே சொல்லாது இழுக்க,

“புரிந்தது. நீங்க செல்லலாம்” என்றான் வெற்றி. அவனது குரல் கடுமையை பூசியிருந்தது.

அவர் சென்றதும், “அப்போ அனாதை பிணம், எழுதிவிடவா சார்” எனக் கேட்டான் ராம்.

சில நிமிடங்கள் சென்ற பிறகு, “கலையின் உடலை அவளோட அண்ணன் வாங்கிச் சென்றதா எழுதுங்க ராம். எங்க கையெழுத்து போடணுமோ அங்க நான் கையெழுத்து போடுறேன்” எனக் கூறினான்.

“சார்…”

“சொன்னதை செய்யுங்க ராம்.”

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சென்று கலையின் உடலை பெற்றவன் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு கதிருக்கு அழைத்தான்.

“இன்னும் பத்து நிமிஷத்தில் நம்ம ஊர் இடுகாட்டுக்கு எழிலை கூட்டிட்டு வா” என்றுக் கூறினான். நான் சொன்னதை நீ செய்தே ஆக வேண்டுமென்கிற தொனியில் அவனது குரல் ஒலித்தது.

எப்படியும் தான் எழிலென்று முதல் முறை விளித்த பொழுதே பய கண்டுபிடிச்சிருப்பான் இதுக்கு மேல தெரியாதைப் போன்று அமரியென்றோ அல்லது உன் தங்கையென்றோ சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதையாகிவிடக் கூடாது என்று இம்முறை தெரிந்தே எழில் என்றான்.

வெற்றி சொல்லியதைப் போன்று அமரியை கதிர் அழைத்து வந்திருந்தான்.

அமரி பார்ப்பதற்கே ஓய்ந்து போய் சுயமின்றி கலைந்த ஓவியமாக நின்றிருந்தாள். வெற்றிக்கு தன்னவளை அந்நிலையில் காண மனம் வலித்தது.

“வீட்டுக்கு இன்னும் போகலையா?”

“இல்லைடா, இப்படியே எப்படி… வீட்டுல என்ன சொல்லுறது ஒண்ணும் விளங்கல… அதான் நம்ம ஊரு செல்லியம்மன் கோவிலுக்கு நேரே கூட்டி போயிருந்தேன்.”
வெற்றி கேட்ட கேள்விக்கு அமைதியாக பதிலளித்தான் கதிர்.

“வீட்டுல உண்மையையே சொல்லு” என்ற வெற்றி மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை கவனிக்கலானான்.

திக்பிரம்மை பிடித்தார் போன்று அங்கிருந்த சிறு மணல் மேட்டின் மீது அமரி அங்கு நடக்கும் நிகழ்வு எதுவும் தெரியாது அமர்ந்திருந்தாள்.

அந்நேரத்தில் அங்கு வெற்றி, கதிர், அமரி, வெட்டியான் இவர்களைத் தவிர யாருமில்லை.

வெற்றி கண் காட்ட கதிர் அமரியை கலையை புதைக்கவிருக்கும் குழிக்கு அருகில் அழைத்து வந்தான். குழியில் கிடத்தப்பட்டிருந்த கலையின் உடலை பார்த்ததும் மீண்டும் வெடித்து அழுத தன்னவளின் அழுகையை காண மனம் தாங்காதவன்,

“செத்த உன் அழுகையை நிறுத்துரியா… சும்மா நொய் நொய்யுன்னு கண்ணுல தண்ணிய விட்டுக்கிட்டு” என்று ஒரு அதட்டல் போட தன் விசும்பலை அடக்கினாள் அமரி.

அனைத்தும் முடிந்தது. “இங்கு நடந்தது யாருக்கும் தெரியக் கூடாது” என்ற வெற்றியின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டார் வெட்டியான்.

“வழக்கோடு நிற்காம… உறவினர்கள் மறுத்த இந்த வேலை உனக்கு எதுக்குடா?” என்று கதிர் வெற்றியிடம் கேட்டான்.

அழுது சிவந்த கண்களுடன் முகம் வீங்கி கலையின் உடல் புதைத்த இடத்தினை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு செல்லும் அமரியின் மீது தன் அழுத்தமான பார்வையினை பதித்த வெற்றி…
“என்னோட எழிலுக்காக” என்றதோடு தனது பதிலை முடித்துக் கொண்டான் வெற்றி.

__________________________

“வாணி உங்களால் இந்த வழக்கினை ஆராய்ந்து கட்டுரை எழுத முடியுமா முடியாதா?”
இதுவரை சக ஊழியரிடம் அதிர்ந்தே பேசிடாத ஆசிரியர் பேரறிவாளன் முதல் முறையாக சினந்து பேசினார். அதிலும் மற்றவர் முன்னிலையில் அவர் கடினமாக பேசியது வாணிக்கு அவமானமாக இருந்தது.

“நம் பத்திரிக்கை நிருபரின் மரணம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது. நமக்கு முன்பு வேறு பத்திரிக்கையில் இந்த வழக்கினைப் பற்றி செய்தி வந்தால் அது நமக்கு அசிங்கம் இல்லையா” என்று மனதில் தோன்றியவற்றை பேசிக்கொண்டே அவர் செல்ல வாணியின் கண்கள் நிரம்பிவிட்டன.

வாணியின் கண்ணீர் நிறைந்த விழிகளை பார்த்தவர்,
“போங்க போய் வேலையை சீக்கிரம் முடியுங்கள். இன்னொரு முறை நான் கேட்குமளவிற்கு வைத்து விடாதீர்கள்” என்றதோடு “அழுது திட்டக்கூட முடியாது செய்துவிடுகிறீர்” என புலம்பியவாறு தன்னுடைய அறைக்குச் சென்றார்.

வாணி நினைத்தால் கதிரிடமோ அல்லது வெற்றியிடமோ நேரடியாக அங்கு நடப்பதைக் கேட்டு அறியலாம். ஆனால், அவர்கள் இருவருமே தங்களது வேலை சம்பந்தப்பட்ட பேச்சுக்களை யாருடனும் பகிர மாட்டார்கள் என்பதை விட மற்றவருக்கு தெரியக்கூடாது என்றே நினைப்பர். அதனை நன்கு தெரிந்ததாலே வாணி அவர்களிடம் உதவி கேட்கவில்லை.

தன்னுடைய இருக்கைக்கு வந்தவள் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

“மேம்… இன்று காட்டில் கலையின் உடலினை கண்டெடுத்த போது மற்றும் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பிறகு எடுத்த புகைப்படங்கள்” என்று புகைப்படக் கலைஞர் வேணு வாணியிடம் கொடுத்தார்.

“இந்த வழக்குக் கூட திரு.வெற்றி அவர்கள் தான் விசாரணை செய்கிறார்” என்ற வேணுவிடம்,
“அங்கு வேறெதாவது வித்தியாசமாக நடந்ததா?” என வாணி வினவினாள்.

“ஒரு பொண்ணு இறந்த பெண்ணின் உடல் மீது விழுந்து பயங்கரமா அழுதாள். அவள் யாருன்னுலாம் தெரியல. ஆனால், அவளை உடனே அங்கிருந்து வெற்றி சார் அனுப்பி வைத்துவிட்டார். அவள் செல்லும் வரை எங்களை போட்டோ எடுக்க அனுமதிக்கவேயில்லை” என்று தனக்குத் தெரிந்த சில தகவல்களை வாணியிடம் தெரிவித்த வேணு தனது இருக்கைக்கு சென்று விட்டான்.

‘யாராக இருக்கும்?’ யோசித்த வாணி, “எப்படியாவது காட்டுக்குள் செல்ல வேண்டும்” என்று முடிவெடுத்தாள்.

‘நீ எப்போதும் முடிவு மட்டுந்தான் எடுப்ப’ என மனசாட்சி அவளை பார்த்து கேலி செய்தது.

மாலை வாணி வீட்டிற்குள் நுழையும் போது தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார் பஞ்சவர்ணம். பாக்கு இடித்துக் கொண்டே உள்ளே அடியெடுத்து வைக்கும் வாணியை ஓரக்கண்ணால் பார்த்தவர்,
“என்ன ஓணான் ஒதுங்கி போவுது, இந்நேரத்துக்கு என்னைய பார்த்து வம்பு இழுத்திருக்கணுமே” என்று யோசித்தவர் உள்ளே செல்ல இருக்கையில் கால் குறுக்கி தலையை பின்னுக்கு சாய்த்து அமர்ந்திருந்தாள். அவளின் முகத்தில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இந்தா அன்னம் எப்பவும் நசநசத்துக்கிட்டுருக்க உன் மருமவ இப்போ என்னத்துக்கு கப்பல் கவுந்த கணக்கா மூஞ்சியை எட்டு முழத்துக்கு தூக்கி வைச்சிட்டு உட்காந்திருக்கா?”
அன்னத்திடம் பேசுவதைப்போல் மறைமுகமாக வாணியிடம் கேட்டார்.
தன்னுடைய வருத்தத்தை யாருடன் பகிர்ந்து கொள்வதென்று தெரியாது மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தவள், பஞ்சுவின் கேள்வி நேரடியாகத் தன்னிடம் இல்லையென்றாலும்… முக வாட்டம் கண்டு மறைமுகமாவது கேட்கத் தோன்றியதே என நினைத்தவள் பஞ்சுவின் அருகில் சென்று தரையில் அமர்ந்தாள்.

அவளின் செயல் அன்னத்திற்கே அதிசயமாக இருந்ததென்றால், பஞ்சுவிற்கு நெஞ்சுவலி வந்ததைப்போல் உணர்ந்தார்.
“என்னடி இது” என்று பார்வையால் தனது மருமகளிடம் பஞ்சு வினவ, “தெரியலையே” என அன்னம் உதடு பிதுங்கினார்.

அவர்களின் பார்வை பரிமாற்றம் புரிந்த போதும் அதனை கருத்தில் கொள்ளாத வாணி,
“பாட்டி உன் மடியில கொஞ்சம் தலை சாய்ச்சக்கவா” என்று வினவ, அவர் ஒப்புதல் வழங்கும் முன்னரே அவரின் மடியில் படுத்திருந்தாள். பஞ்சுவின் கை தானாக அவளின் தலை கோதியது.

அந்நேரம் அங்கு தங்கவேலு தாத்தாவும், விநாயகமும் வர… பாட்டியும், பேத்தியும் இருக்கும் நிலை கண்டு “மழை ஏதும் வருதோ, அடிச்சிக்காம ஒண்ணா உட்கார்ந்திருக்காங்க” என்று மகனிடம் தாத்தா கிசுகிசுத்தார்.
பஞ்சு பாட்டி தாத்தாவை முறைக்க,

“என் பொஞ்சாதி என்னைய பாசமா பாக்குறாடா” என்று மீசையை முறுக்கியவர்,

“என்னத்தா உடம்பு முடியலயா?” என்று வாணியிடம் நேரடியாக வினவினார்.

கதிரை மணம் முடித்து இங்கு வந்ததிலிருந்து வாணியிடம் சண்டையிடுவதற்காவது பஞ்சு பேசியிருக்கார். ஆனால், என்றும் பேசிடாத வீட்டின் பெரியவர் தனது வருத்தத்தை உணர்ந்து கேட்கும்போது பதிலளிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தனது மௌனம் கலைத்து பேசினாள்.

“பணியில் கொஞ்சம் சிரமம் தாத்தா” என்றவளாக எழுந்து அமர்ந்தாள்.
“இவ்வளவுதானா, இதுக்கா வருத்தப்பட்டு உட்கார்ந்துட்ட… நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேனே” என பஞ்சு எழுந்து சேலை தலைப்பை உதறி இடுப்பில் சொருகியவர் அடுக்கலைக்குள் நுழைந்தார்.

“சிரமமா இருந்தா வேலைக்கு போவேனா ஆத்தா” அன்னம் வாஞ்சையுடன் கூறினார்.

“இது நான் ஆசைப்பட்டு படிச்ச படிப்பு அத்தை… சுலுவா விட்டுட்டு வர முடியலிங்களே” என்று வருத்தம் மிகுந்த குரலில் பதிலளித்த வாணி,
“எங்க ஆசிரியர் சொன்ன வேலையை நான் முடிக்கலன்னு வருத்தமா பேசிட்டாருங்க தாத்தா, அதேன் வேறொன்னுமில்லைங்க” என்று தாத்தாவின் முகம் பார்த்துக் கூறினார்.

“வெளியில் சென்று வந்த வீட்டு ஆம்பளைங்களுக்கு மோர் தண்ணீ கூட குடுக்காம, என்னடி உன் மருமவ மூஞ்சிய பார்த்துட்டு இருக்கவ.” பஞ்சு பாட்டியின் குரல் கேட்க அன்னம் அவரிடம் செல்ல, அவர் கொடுத்த சொம்பினை கொண்டு வந்து ஆண்கள் இருவருக்கும் அன்னம் கொடுத்தார்.

அன்னத்தின் பின்னூடு வந்த பஞ்சு, “இதுக்கே இவ்வளவு வருத்தப்பட்டு உட்கார்ந்துட்டா… என்கிட்ட போட்ட சவால்ல எப்புடி ஜெயிக்கிறது” என்று மோவாய் இடித்துக் கூறிய பாட்டி வாணியை மிதப்பாக பார்த்தார்.
அவர் நினைத்தது போலவே அவரின் பேச்சும், பார்வையும் வாணியின் மனநிலையை மாற்றியது.

“இங்கப்பாரு கெழவி சும்மா சொல்லிக்கிட்டு மட்டும் இருந்தாக்கா அதுக்குப்பேரு சவால் இல்லை… உன் பேரன் இங்க வந்துட்டாரு இல்ல, அடுத்த மாசமே வாந்தி எடுத்து உன்னை எனக்கு ஆக்கி போட வைக்க்கிறேன்” என்று சிலும்பியவள் தன்னறைக்கு சென்றாள். குடும்பத்தாரின் மறைமுக அக்கறை அவளுக்கும் பிடித்திருந்தது.

“எங்க அன்னம் அமரி?”
விநாயகம் கேட்ட பின்னர் தான் அன்னத்திற்கு மகளின் நினைவே வந்தது.

“அச்சச்சோ, அவ(ள்)க்கூட படிச்ச புள்ளை வருது… கூட்டியாந்திடுறேன்னு மலைப்பாதைக்கு போனாள். இன்னும் காண்களையே” என்று பதறினார்.

“வீட்டு பொம்பள புள்ளை காணோமே என்ன ஏதுன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல்…”
தாத்தா கோபமாக வீட்டு மூத்த பெண்கள் இருவரையும் பேசிக்கொண்டிருக்க கதிரின் தோள் வளைவில் புதைந்தவளாய் அமரியும், தங்கையை ஆதரவாக அணைத்தவாறு கதிரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவ்வளவு நெருக்கத்தில்… கோழிகுஞ்சியாய் அண்ணனின் மார்பில் சாய்ந்திருந்த அமரியை கண்டதும் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பதறினர்.

என்னாச்சு என்று அனைவரும் ஒரு சேர கேட்க… மீண்டும் கலையின் நினைவில் அமரியின் கண்கள் உடைப்பெடுத்தன. பார்வையால் மற்றவர்களை சமாதானம் செய்த கதிர் தங்கையின் முதுகு வருடி அழுகை நிற்க துணை இருந்தவன் அவளை அவளது அறைக்குச் சென்று படுக்க வைத்து, அமரி உறங்கிய பிறகே வெளியில் வந்தான்.

வந்தவனை அனைவரும் பிடித்துக் கொண்டனர்.

“அவ(ள்) எப்புடி உன்னோட…”

“அமரி யாரையோ கூட்டாளிய கூட்டிட்டு வாறேன்னுதானே போனா(ள்)!”

“என் பேத்தி ஏன் இப்படி அழுது சோந்து கிடக்கா?”

ஆள் மாற்றி ஒருவர் கதிரை பதிலே அளிக்க விடாது வினாக்களை அடுக்கினர்.

அந்நேரம் கதிரின் வீட்டிற்கு காக்கி உடையில் மூர்த்தி வந்தார்.

வெளியில் நின்றவர் எப்படி உள்ளிருப்போரை அழைப்பதென்று யோசிக்கும் தருவாயில், வாயிலில் நிழலாட… அவரை கண்டு விட்ட விநாயகம் பதட்டத்துடனே உள்ளழைத்தார்.

மூர்த்தியை தன்னுடைய வீட்டில் எதிர் பார்த்திடாத கதிர், “வெற்றி ஏதாவது சொல்லி அனுப்பினானா அண்ணா?” என்று வினவினான்.

“வண்டியை உங்க வீட்டுல விட்டுட்டு வர சொன்னாரு தம்பி” என்ற மூர்த்தி வண்டியின் சாவியை கதிரிடத்தில் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

சாவியை பார்த்ததுமே வெளியில் சென்று பார்க்காமலே அது அமரியின் வண்டியென்று உணர்ந்த பெரியவர்கள் நடப்பது எதுவும் புரியாது குழம்பினர்.

“என்ன நடந்துச்சுன்னு இப்போ சொல்லப்போறீயா இல்லையாடா… அமரி வண்டி எப்புடி அந்த போலீஸ்காரன் கைக்கு போச்சுது?” தாத்தா மிகுந்த கோபத்தில் வினவினார்.

‘வெற்றி சொல்லுவதை போல் உண்மையை சொல்வதே எந்நேரத்திலும் பாதுகாப்பானது’ என்று உள்ளுக்குள் எண்ணிய கதிர் கலையின் இறப்பு முதல் அமரி ஏன் எவ்வாறு அங்கு வந்தாலென்று அனைத்தையும் கூறி முடித்தான்.
கதிர் சொல்லி முடித்ததும் பஞ்சு அரற்றத் தொடங்கிவிட்டார்.

“அய்யோ இனி போலீசு கேசுன்னு அலையனுமே, இதுல அந்த போலீஸ்காரன் வேற நம்ம பகையாளியாச்சே… என் பேத்தி வாழ்க்கையே போச்சு” என்று ஒப்பாரி வைத்தார்.

பஞ்சு பாட்டி அமரியை நினைத்து கவலைபட்டதை விட வெற்றியை தவறாக நினைத்தது தான் அதிகம். அதை அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்த கதிர்,

“செத்த உன் வாயை மூடுறியா கெழவி, இனியொரு முறை வெற்றியை தப்பா நினைச்சு என்கிட்ட பேசுன… பாட்டின்னு கூட பார்க்கமாட்டேன்” என்றவன்,

“இப்போ உன் பேத்தி வீட்டுக்கு வந்ததே வெற்றியாலதான்.”

“கலையை பிணமாக பார்த்ததும் அமரி அவளை பாக்கதான் கலை வந்ததாகக் கூறி அவளது உடலின் மீது விழுந்து கதறி” என்று சொல்லியவன் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி,

“போலீசுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இது ஒன்னு போதாதா… நானே இதை மறந்துட்டேன், அவந்தான் மத்தவங்க கவனம் அமரி மேல் படுறதுக்குள்ள இங்கிருந்து கூட்டிட்டு போயிடுன்னு அனுப்பிவச்சான்” என வேங்கையை போல் உறுமியவன்…

“இந்த பகை பழிவாங்குறது எல்லாம் என் வெற்றிக்குத் தெரியாது” என்று நண்பனின் குணத்தின் மீதுள்ள நம்பிக்கையில் சற்று திமிராகவேக் கூறினான்.

“அம்மா ரெண்டு மூணு நாளைக்கு அமரியை தனியா வெளியில அனுப்பாதீங்க” என்று அன்னத்திடம் கூறியவன் தன்னறைக்குச் சென்றான்.

விநாயகத்திற்கு நல்லுவின் மீதிருந்த பகை மறந்த வேளையில், வெற்றி செய்த இந்த உதவியால் அவன் மீதும் நல்லெண்ணம் பிறந்தது.

‘வெற்றி நினைத்திருந்தால் அமரியை இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகவேக் காட்டியிருக்க முடியும். கலையின் அலைபேசி இறுதி அழைப்பு மற்றும் அவள் அமரியை பார்ப்பதற்காக வந்த நேரத்தில் இறந்து போயிருக்கின்றாள் இது போதுமே அமரியின் மீது வழக்கு உருவாக்க,’ இதனை யோசித்த தாத்தாவுமே வெற்றியை மனதால் ஏற்க நினைத்தாலும் பகையால் ஒதுக்கி வைத்து…

“இனி இச்சம்பவத்தை பற்றி யாரும் பேசக்கூடாது” என்ற கட்டளையோடு வேறெதுவும் பேசவில்லை.

கதிர் அமரிக்கு என்னவானதென வீட்டினரிடம் சொல்லத் தொடங்கியதுமே பேச்சு சத்தத்தில் அறையிலிருந்து வெளியில் வந்த வாணி அனைத்தையும் கேட்டு விட்டாள்.

‘வேணு யாரென்று தெரியாதெனக் கூறிய அப்பெண் அமரியா’ என யோசித்த வாணி அவ்வீட்டின் மருமகளாக இல்லாமல் பத்திரிகையாளராக யோசித்திருந்தாள்.

குமரனின் வழக்குப் பற்றி எதுவுமே கிடைக்காது மண்டை காய்ந்திருந்த நேரத்தில், அந்த வழக்கோடு இணையும் மற்றொரு வழக்கு பற்றி தகவல் கிடைக்கும்போது வாணி வேண்டாமென்றா நினைப்பாள்.

“இதனை வைத்து, அமரியை மையப்புள்ளியாக வைத்து செய்தி வடித்து இரண்டு நாட்களுக்கு பத்திரிகைக்கு கன்டென்ட்(content) கொடுத்தால் போதும்… இப்போதைக்கு ஆசிரியரிடமிருந்து தப்பிக்கலாம்” என்று தனக்குத்தானே ஆலோசித்து முடிவெடுத்தவள் ஒரு பத்திரிகையாளராக துள்ளி குதித்தாள்.

இவ்விடத்தில் வாணி தன் அண்ணன் வேண்டாமென்று நினைத்த ஒன்றை, தான் செய்யப்போகிறோம் என்பதை முற்றிலும் மறந்தது மட்டுமில்லாது வெற்றி ஏன் அமரிக்கு மட்டும் தனது காவலன் இடத்திலிருந்து விதிவிலக்கு அளித்தான் என்பதையும் யோசிக்க மறந்து விட்டாள்.

மெத்தையில் படுத்திருந்த வெற்றியின் மனம் முழுக்க அமரியே நிறைந்திருந்தாள். அவளின் அழுத முகம், ஓய்ந்த தோற்றம் அவனை இம்சித்தது. கண்களை மூடினால் அவளின் வலி நிறைந்த முகத்தை காண நேரிடுமோ என்று பயந்தே உறங்க இமை மூடாது படுத்திருந்தான். அப்போது அவனின் நினைவலைகள் எங்கெங்கோ சென்று ஒரு அலைபேசியில் வந்து நின்றது.

“சார் நீங்க காட்டுக்குள் செல்ல பயன்படுத்திய வண்டியில் இருந்ததா வனத்துறை காவலர் ஒருவர் கொடுத்தார்” என்று ராம் அலைபேசி ஒன்றை வெற்றியிடத்தில் அளித்தான்.

‘தன்னுடையது பாக்கெட்டிலிருக்கிறதே’ என கால் சராயுவினை ஆராய்ந்தவாறு ராம் அளித்த அலைபேசியை கையில் வாங்கிய வெற்றி அது யாருடையதென்று திறந்து பார்க்க முயலும் வேளையில் இடையூறாக மற்றொரு வேலையொன்று வர அலைபேசியை பாக்கெட்டில் வைத்தவன் அதனை மறந்து போயிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் தனது அலைபேசியோடு சேர்த்து ராம் அளித்த அலைபேசியையும் பாக்கெட்டிலிருந்து எடுத்து மேசை மீது வைத்திருந்தான்.

இப்போது அந்த அலைபேசியின் நினைவு வர எடுத்து திறந்து பார்த்த வெற்றி… திரையில் ஒளிர்ந்த புகைப்படத்தினை கண்டு இன்பமாக அதிர்ந்ததோடு பெரும் குழப்பத்திற்கும் ஆளாகினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
41
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. இந்த வாணி ஏதோ ஏழரைய கூட்ட போறா போல??
      அந்த போன்ல அப்படி யார் போட்டோ இருந்தது அமரியோடதா??