காவ(த)லன் 11
“மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்…”
ஊசியாய் துளைக்கும் குளிர் காற்று மேனியை தொட்டுச் செல்ல, துப்பட்டாவை தோளை சுற்றி போர்த்தியவாறு தேயிலைத் தோட்டத்தை கடந்து காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்த கலை மனதில் உதித்த பாடலை பாட ஆரம்பித்தாள்.
இரண்டடி பாடியதும் தன் தலையில் தட்டிக் கொண்டவள்,
“அடியேய் கலை இது மூங்கில் தோட்டமில்லடி, இங்கிருக்கிறதெல்லாம் என்ன மரமுன்னு கூட தெரியல… பாக்கவே பயமா இருக்குதே” என தனக்குத்தானே கூறியவள்,
“இதுல உனக்கு லவ் ஃபீல் சாங்கு வேற” என அலுத்துக் கொண்டாள்.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருமுறை சிக்னல் வந்து விட்டதாயென அலைபேசியை பார்ப்பதும் பின்னர் சிக்னலை திட்டுவதுமாக நடந்து சென்று கொண்டிருந்தவளின் காதுகளில் வித்தியாசமான சத்தம் கேட்டது.
“அச்சச்சோ இந்தக் காட்டுல விலங்கெல்லாம் இருக்கா? இப்போ கத்துனது என்ன மிருகமுன்னு தெரியலையே!” என பயந்த கலை மீண்டும் சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்து பார்வையை சுழற்றினாள்.
அருகிலிருந்த புதர் வேகமாக அசைய, பயத்தில் கலை உறைந்து விட்டாள். சிறிது நேரத்தில் அதிலிருந்து முயல் ஒன்று குதித்து ஓடிய பின்னரே அவளுக்கு போன உயிர் திரும்பியது.
‘ஏய் கலை இதுக்கே உயிர் போயிருச்சு, இனி எங்கையும் நிக்காதடி… குதிரைக்கு கடிவாளம் கட்டிய கணக்கா பாதையை மட்டும் பார்த்து போய்க்கிட்டே இரு’ என மனதோடு புலம்பியவள் “பயத்தோடு நடக்கிறேன், எதிர்க்க காட்டெருமை யானையெல்லாம் வராம பார்த்துக்க” என்று ஊரிலுள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிய வேகமாக நடந்தாள்.
திடீரென யானை பிளிரும் சத்தம் காட்டையே அதிர வைத்தது. அதன் அலறல் ஒலி கலையை நடு நடுங்க வைத்தது.
பயத்தில் தன்னையும் அறியாது பாதையை தவற விட்டிருந்த கலை யானையின் பிளிரல் ஒலி கேட்கும் திசையில் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
நிச்சயம் அது மதம் பிடித்தோ அல்லது தனித்து சுற்றும் யானையின் சத்தமில்லை. உயிருக்கு போராடும் யானையின் அலறல். ஏதோ ஆபத்தில் மாட்டிக்கொண்ட யானை வலியில் எழுப்பும் ஓலம். அடர்ந்த மரங்களுக்கு நடுவில் புகுந்து சென்று கொண்டிருந்த கலையின் கண்களுக்கு முன்னால் பத்தடி தூரத்தில் அகன்ற குழி தென்பட்டது.
அக்குழியிலிருந்து தான் யானையின் பிளிரல் சத்தம் வந்து கொண்டிருந்தது.
உடல் முழுக்க பயத்தில் வியர்வையால் குளித்திருந்த போதும் ஒரு உயிர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கலை அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலானாள்.
யாருமற்ற அடர்ந்த காட்டில் அவளால் என்ன செய்ய முடியும். விழி பிதுங்கி நின்றாள்.
குழிக்குள் எட்டிப்பார்த்தாள். யானை முட்டி மோதிக் கொண்டும், மண்ணை அள்ளி தன் தலை மீது போட்டுக்கொண்டும் பிளிரியது.
கோவில் யானையை பார்க்கும்போது எவ்வளவு ஆசையும் பக்தியும் தோன்றுமோ அதே அளவு பயம் அருகில் காட்டு யானையை பார்க்கும் போது தோன்றியது.
உதவிக்கு வனத்துறையினரை அழைக்கலாம் என்றால் அலைபேசி சிக்னலின்றி செயலிழந்திருந்தது.
“சரி ஊருக்குள் சென்றே ஆட்களை அழைத்து வரலாம்” என எண்ணியவள் முன்னோக்கி நடக்கத் துவங்கினாள். பயத்தில் எப்போதோ கலை பாதை மாறியிருந்தாள். ஒரு மணி நேரமாகியும் ஒரே இடத்தைச் சுற்றி வருவதை அப்போது தான் உணர்ந்தாள்.
‘இந்தக் காட்டுக்குள்ளேருந்து வெளியே போக வழியில்லையோ’ சிந்தித்தவளின் பயம் மேலும் அதிகரித்தது.
“அச்சோ இப்படி வழித் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோமே” என்று முணுமுணுத்தவள், “எப்படியாவது அந்த வாயில்லா ஜீவனை காப்பாற்ற வேண்டும்” எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளாக மீண்டும் யானையின் குழியிருக்கும் பகுதிக்கு செல்ல சிறு அசைவுகூட இல்லாது அப்பகுதியில் நிசப்தம் நிலவியது.
அந்த அமைதி அவளை மேலும் அச்சுறுத்தியது. மனம் முழுக்க எழுந்த குழப்பங்கள், சந்தேகங்கள் பலவற்றை ஒதுக்கியவள் குழி இருந்த இடத்திற்கு செல்ல அங்கு குழியின்றி… ஏன் சிறு பள்ளம் கூட இல்லாமல் மண் மேடாகக் காட்சியளித்தது.
“சற்று நேரத்திற்கு முன்பு தனக்கு கேட்ட யானையின் பிளிரல், குழிக்குள் தான் கண்ட நடுத்தர தோற்றமுடைய யானை அனைத்தும் பிரம்மையோ” என அவளே எண்ணுமளவிற்கு இருந்தது.
“ஏதாவது கனவு கண்டோமா? தெரியலயே!” என குழம்பியவள் ‘பாதை ஏதாவது தென்படுகிறதா பார்ப்போம், இல்ல வந்த வழியே திரும்பிடுவோம்… பஸ் நின்ன இடத்துல போயி அமரியை வர வச்சே போய்கிடலாம்” என்று யோசித்து இரண்டடி எடுத்து வைக்க பேச்சுக் குரல் கேட்டு நின்றாள்.
“ஐயா ஒரு யானை சிக்குச்சுங்க, வேலையெல்லாம் முடிஞ்சதும் குழியை மண்ணு கொட்டி நிரப்பியாச்சுங்க… யாராவது வந்து பார்த்தாக்கா கூட, யானை மண்ணை பறிச்ச கணக்காத்தாங்க தெரியும்” எனக் கூறியவன் எதிரில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அங்கிருந்து அகன்றான்.
அவன் யாரென்றேல்லாம் கலைக்குத் தெரியவில்லை, ஆனால் அவனது பேச்சிலிருந்து ஏதோ தீங்கு செயல் காட்டில் நடைபெறுகிறது என்பதை மட்டும் யூகித்தவள் யாரென்றே அறிந்திடாத அந்த மூன்றாவது மனிதனை அவனுக்குத் தெரியாது பின் தொடர்ந்தாள்.
இந்த இடத்தில் கலை செய்த மிகப்பெரிய தவறு தான் தனித்திருக்கிறோம் என்பதையும், தனியாக காட்டில் மாட்டிக்கொண்ட செய்தியை அமரியிடம் கூட தெரிவிக்கவில்லை என்பதையும் மறந்தது.
_______________________
புதிதாக பதவி வகிக்க போகும் வன பாதுகாப்புத்துறை அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தான் கதிர்.
வண்டியில் சென்று கொண்டிருந்தவனை வரவேற்றது காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்னிருந்த பெயர்பலகை.
‘முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம் (Mudumalai National Park).’
ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.
அடவிக்குள் வீற்றிருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.
இங்கு மிகவும் பிரபலமானது மற்றும் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது யானைகள் முகாம்.
அடர்ந்த கானகத்திற்குள்ளே மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் வாழ்கின்றன.
இந்த தேசியப் பூங்காவில் மழைப் பொழிவு அதிகமுள்ள மேற்குப் பகுதியில் ஈர இலையுதிர் காடுகளும், மழைப் பொழிவு குறைந்த கிழக்குப் பகுதியில் உலர் இலையுதிர் காடுகளும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது புதர் காடுகளும் அமைந்துள்ளன.
கலை மாட்டிக்கொண்டது புதர் காட்டிலினுள் தான். விலங்குகள் எப்பவும் தாவரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியையே தங்களது வாழ்விடமாக தேர்ந்தெடுக்கும்.
அலுவலகத்திற்குள் சென்ற கதிர் கையெழுத்திட்டு சக பணியாளர்களிடம் நட்பு விதமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் அக்காட்டிலிருக்கும் பறவகைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை பற்றி கோப்புகளின் மூலம் அறிந்து கொண்டான்.
ஆனால் எண்ணிக்கையின்றி இருப்பதை மனதில் குறித்துக் கொண்டவன்,
“இறுதியாக விலங்குகள், பறவைகளின் கணக்கெடுப்பு எப்போ நடைபெற்றது?” என்று ஒருவரிடம் கேட்க…
“சார் நான் இங்கு பணியேற்று ஒரு மாதம் தானாகிறது” என அவர் சொல்லிய பதிலில் கதிரின் பார்வை மற்றொருவரிடம் சென்றது.
அவரோ தனக்கு தெரியாது எனும் விதமாக தலை சொரிந்து நிற்க, ‘வேண்டிய பதில் இவர்களிடம் கிடைக்காது’ என்று உணர்ந்த கதிர்…
“ஜீப் தயாரா இருக்கா? இந்நேரத்தில் காட்டிற்குள் செல்லலாமா?” எனக் கேட்டுக்கொண்டே யாவரும் விடையளிப்பதற்கு முன்னர் வண்டியில் ஏறியிருந்தான்.
‘இந்த அலுவலகத்தில் இருக்கும் யாருக்கும் சரியான தகவல்கள் தெரியாது போலிருக்கு, சொல்லப்போனால் வெட்டியாக மாதச்சம்பளம் வாங்குகிறார்கள்’ என்று மனதில் முணுமுணுத்த கதிர் உலர் இலையுதிர் காட்டிற்குள் வண்டியை செலுத்தினான்.
“இங்கு வந்தால் உனக்கே அனைத்தும் தெரிய வரும், நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை… இந்த வழக்கு அங்கேயும் தொடரும்.”
வண்டியில் சென்று கொண்டிருந்த கதிரின் நினைவில் வெற்றி அன்று சொன்னது வந்து போனது.
“அங்கு நடந்த அதே தவறு இங்கும் நடக்கிறதோ?” வாய்விட்டு கேட்டுக்கொண்ட கதிர் புதர் காட்டிற்குள் நுழைந்திருந்தான்.
பாதையின் இரு மங்கிலும் உள்ள மரங்களுக்கு நடுவே ஏதேனும் விலங்குகள் தென்படுகின்றனவா என்று நோட்டமிட்டவாறு சென்று கொண்டிருந்தவன் திடீரென வண்டியை நிறுத்தியிருந்தான்.
அவன் சென்று கொண்டிருந்த பாதையின் நடுவே மயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. எந்த பக்கம் செல்வதென்று இரு பக்கமும் தலையை திருப்பி திருப்பி பார்த்தது. அதன் தலை மீதிருக்கும் கொண்டையும், நீண்ட தோகையும் அசைவுக்கு ஏற்றவாறு ஆடுவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மனம் லேசனதாக உணர்ந்தான் கதிர்.
பாதையிலிருந்து விலகி மரங்களுக்குள் மயில் சென்று மறைய கதிரின் பார்வை மயிலைத் தொடர்ந்து சென்றது. மயில் மறைந்ததும் பார்வையை திருப்பியவனின் கவனத்தை புதர் ஒன்று ஈர்த்தது.
புதருக்கு வெளியே மனித காலொன்று நீட்டிக்கொண்டு காட்சியளித்தது. அது யாரோ ஒருவருடைய காலென்று உணர்ந்த நொடி வண்டியிலிருந்து இறங்கியவன் விரைந்து புதரின் அருகில் சென்றான். புதர் செடிகளை விளக்கி பார்த்த கதிர் முற்றிலும் அதிர்ந்தான்.
உடலின் ஆடை முழுக்க ரத்தம் தோய்ந்திருக்க, முகத்தில் கைதடம் பதிந்து கன்றி வீங்கிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் முட்களுக்கு நடுவில் கிடந்தது.
முதல் முறையாக மனித உடலை அவ்வாறு காண்கிறான். உடம்பில் சிறு நடுக்கம், பதட்டம் ஒருங்கே எழுந்தது. மெல்ல முட்கள் மீதேறி உடலருகே சென்றவன் கையின் நாடி பிடித்தும் மூக்கில் கை வைத்து பார்த்தும் உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்தவன்… உயிரற்ற நிலையில் உடலை அங்கிருந்து தூக்குவது காவலர்களுக்கு தடயங்களை கலைத்தது போலாகிவிடும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு வண்டிக்கு அருகில் வந்தான்.
தகவல் பரிமாற்றம் செய்யும் கருவியை (walky talky) உபயோகித்து தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலகர்களிடம் விடயம் தெரிவித்து உடனடியாக விரைந்து வருமாறு பணித்தவன் தனக்கு மேலதிகரியான கிருஷ்ணனிடமும் செய்தி அளித்தான்.
“என்னய்யா நீ வந்ததுமே நடக்காததுலாம் நடக்குது, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்” எனக்கூறிய கிருஷ்ணன் “காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிச்சிடு” என்றவராக இணைப்பை துண்டித்தார்.
“இந்த காட்டுக்குள்ள சிக்னலே இல்லை, இதுல எங்க இருந்து போலீசுக்கு சொல்லுறது” என முணுமுணுத்த கதிர் தகவல் பரிமாற்றம் செய்யும் கருவியின் மூலம் மீண்டும் தனது அலுவலகத்திற்கு அழைத்து “காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, அவர்களையும் வர சொல்லுங்கள்” என்று பணித்தான்.
உயிரற்று சடலமாகக் கிடந்த பெண்ணை பார்க்கையில் கதிருக்குள் ஏதோ இனம் புரியா மாற்றம்.
‘அமரியின் வயது தான் இருக்கும்’ என்று நினைக்கையிலேயே அவனுக்கு வலித்தது. தனது தங்கையின் இடத்தில் வைத்து நினைத்ததாலோ என்னவோ கதிரால் மீண்டும் தைரியமாக அப்பெண்ணின் உடலை கண் கொண்டு காண முடியவில்லை.
“எப்படியும் போலீஸ் வந்து, அவங்க நோண்டாமா எப்படி என்ன அப்படி இப்படின்னு நம்ம உயிரை எடுப்பாங்க… அதுக்கு அவங்க வரதுக்குள்ள ஏதேனும் தடயம் கிடக்குதா பாப்போம்” என்றவனாக அவ்விடத்தை அலசத் தொடங்கினான் கதிர்.
சுற்றியும் பார்வையை கூர்மையாக்கி நடந்து சென்றவன்… ஓரிடத்தில் நின்று, “என்ன நோக்கத்திற்காக இப்பெண்ணை கொலை செய்திருப்பார்கள்” என யோசிக்க அவனால் மேற்கொண்டு மனதில் தோன்றும் காரணங்களை ஜீரணிக்க முடியாது கண்களை இறுக மூடினான்.
ரத்தம் தோய்ந்திருந்த அப்பெண்ணின் உடலை மனக்கண்ணில் கொண்டு வந்து அலசியவன் ‘நிச்சயம் தான் நினைத்த ஒன்று அல்ல’ என நிம்மதி அடைந்தான்.
‘பெண்ணை இச்சை படுத்தாமல் கொல்லுவதற்கு வேறென்ன காரணம் இருக்கக் கூடும்’ என்று தலை குனிந்து நிலம் தேய்த்தவாறு காலை உதறியவனின் கருத்தில் பதிந்தது புதிதாக காணப்படும் மண்ணின் ஈரம். அதாவது அவனின் காலுக்கு அடியிலிருக்கும் ஒரு வட்ட பரப்பு மட்டும் மற்ற காய்ந்த பரப்புகளில் இருந்து வேறுபட்டு இருந்தது.
‘இங்கு என்ன இருக்கும் அதுவும் வட்ட வடிவில் எதற்கு தோண்டியிருப்பார்கள்?’ என்று யோசித்தவாறு பாதத்தினை ஓங்கி அதிக அழுத்தத்துடன் நிலத்தில் தடம் பதிக்க, அப்போது தான் குழி பறித்து மூடப்பட்டதற்கு ஆதராமாக பரப்பு தளர்வுடன் இருந்ததால் பாதம் தரையில் உள்வாங்கியது.
“நாம போற இடமெல்லாம் மர்மமாதான் இருக்குது” என்றவனாக கதிர் சடலம் கிடக்கும் இடத்திற்கு மீண்டும் திரும்பி வருகையில் ஓரிடத்தில் அலைபேசி ஒன்றை கண்டான். அதனை கைக்குட்டை கொண்டு எடுத்து பார்த்தவன் அதன் நெகிழி உறையில் இருந்த படத்தை வைத்து இறந்து போன பெண்ணின் அலைபேசி என்பதை அறிந்தான்.
அலைபேசியை கைகுட்டையிலேயே சுற்றி கால்சட்டை பையில் வைத்தவன் சம்பவ இடத்திற்கு வர இறந்த பெண்ணின் உடல் மீது விழுந்து கதறி துடித்துக் கொண்டிருந்தாள் அமரி.
கண் முன் வலியில் துடித்து அழும் தன்னவளை தேற்ற முடியா கையறு அற்ற நிலையில் நின்றிருந்தான் வெற்றி.
மூர்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பிய வெற்றி வனப்பாதுகாவலர் அலுவலகம் விரைந்தான். காட்டுப்பாதையில் செல்ல ஏற்ற வாகனம் ஜீப். அதற்காகவே இங்கு வந்திருந்தான்.
ஏற்கனவே கதிர் அளித்த தகவலில் பாதி பேர் சம்பவம் நடந்த இடத்திற்கு புறப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பின் வந்த காவலர்களும் அப்போதுதான் சென்றிருந்தனர்.
வெற்றியின் உடையை வைத்தே அவன் யாரென்று அறிந்தவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க, முறையாக அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட வெற்றி காட்டிற்குள் செல்ல வேண்டுமெனத் தெரிவிக்க,
“அலுவலகத்தில் எங்க இருவரைத் தவிர யாருமில்லை, தவறா நினைத்துக் கொள்ளாமல் நீங்களே செல்ல முடியுமா?” என்று ஒருவர் கேட்டதோடு ஜீப்பின் சாவியினையும் வெற்றியிடத்தில் கொடுக்க… வெற்றி கானகத்திற்குள் புகுந்திருந்தான்.
வெற்றிக்குத் தெரியும் இன்று தான் கதிர் பணியில் சேர அலுவலகம் வந்திருக்கிறான் என்று, கதிர் வெற்றியிடம் சொல்லிவிட்டு தான் அழுவலகமே வந்தான். ஆதலால் கதிரும் அங்கு சென்றிருப்பான் என நினைத்து வெற்றி கதிரின் அலைபேசி எண்ணிற்கு முயற்சித்துக் கொண்டே வண்டியை செலுத்த திடீரென எதன் மீதோ மோதியிருந்தான்.
இரு சக்கர வாகனம் ஒன்று கிழே விழுந்ததற்கு அடையாளமாக சத்தமும் கூடவே ஒரு பெண்ணின், “யோவ், யாருய்யா நீ ஜீப் ஓட்டினா கண்ணு தெரியாதோ?” என்கிற வார்த்தைகளும் வெற்றியின் காதில் விழுந்தது.
அப்பெண்ணின் குரல் அவனின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்ய, பட்டென்று வண்டியிலிருந்து கீழே குதித்திருந்தான்.
தனது ஸ்கூட்டிக்கு என்னவானதோ என கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பின் உருவத்தை வைத்தே தனது எழிலை அடையாளம் கண்டிருந்தான் அந்த இரும்பு காதலன்.
______________________________
கலையைத் தேடி தேனீர் கடைக்காரர் சொல்லிய பாதையில் சென்ற அமரி கிட்டத்தட்ட ஊரினை நெருங்கிய பிறகும் கலையை காணாததால், “ஒருவேளை பாதை மாறி சென்று விட்டாளோ?” என எண்ணி மீண்டும் காட்டுப்பகுதிக்கு வர ஓரிடத்தில் கிளை பாதை ஒன்று பிரிந்தது.
“கலை இதில் வழி மாறியிருக்கலாம்” என்று நினைத்தவள் அதில் சென்றவாறு கலையை தேடினாள். கரடுமுரடான மற்றும் முட்கள் நிறைந்த காட்டு பாதை என்பதால் வண்டியின் முன் சக்கரத்தில் முள் குத்தி காற்றிறங்கி ஓரிடத்தில் வண்டி நின்றது.
“இதுவேறவா” என்று நொந்து கொண்ட அமரி வண்டியில் அமர்ந்திருந்தவாறே முன் சக்கரத்தினை எட்டிப்பார்க்க, அலைபேசியை கையில் பிடித்தபடி வண்டியை செலுத்திக் கொண்டு வந்த வெற்றி அவளின் மீது மோதியிருந்தான்.
தான் இடித்தது தன்னுடைய எழில் மீது எனத் தெரிந்ததும் அவளை உச்சி முதல் பாதம் வரை வருடியவன் தன்னவளுக்கு ஒன்றும் ஆகவில்லை எனத் தெரிந்த பிறகே நிம்மதியானான்.
வண்டியை ஆராய்ந்தவள், தான் திட்டிய பிறகும் எதிர் பக்கமிருந்து சத்தம் வராமலிருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க அவள் முன் வெற்றி நின்றிருந்தான்.
வெற்றியை கண்டதும் அவனை ரசித்த அவளின் கண்கள் அவன் அணிந்திருந்த காக்கி உடையை கண்டு தனது ரசனையை நிறுத்திக் கொண்டது.
“நீ போலீசா?”
தன்னையும் அறியாது சத்தமாகக் கேட்டிருந்தாள்.
அவளது கேள்வியில் உள்ளுக்குள் மகிழ்ந்தவன், வெளியில் ஒற்றை புருவம் உயர்த்தி தன்னை விறைப்பாகக் காட்டிக் கொண்டான்.
“இங்க என்ன செய்யுற? அதுவும் இந்த காட்டில்” என அழுத்தமாக வினவினான்.
முதல் முறையாக மூன்றாம் மனிதர் யாரையாவது காணும் போது நாம் முதலில் கேட்கும் கேள்வி “நீங்கள் யார்?” என்பதே அதனை வெற்றி தெரிந்தே தவிர்த்தான் என்றால் அமரிக்கு அவனை பார்த்ததும் மனதில் தோன்றும் சில்லென்ற உணர்வு அனைத்தையும் மறக்கச் செய்தது.
“காட்டுல சந்தனம், செம்மரக் கட்டை கடத்தலாமுன்னு வந்தேன்” என்ற அவளின் பதிலில் உள்ளுக்குள் சிரித்த வெற்றி “இங்க இப்படி தனியாலாம் சுத்தக் கூடாது கிளம்பு” என்றான். அவன் அதனை அதிகாரமாக வெளியில் சொல்லியிருந்தாலும், அக்கறை ஒளிந்திருந்தது.
“பார்த்தா தெரியல, வண்டி பஞ்சர்… எப்படி போறதாம்! பறந்து போறதுக்கு நான் ஆஞ்சநேயர் இல்லை.” கழுத்தை மோவாயில் இடித்துக் கூறியவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
இதழில் புன்னகை தானாக வந்து அமர்ந்த போதும் அதனை இதழ் கடையில் மறைத்தவன்,
“அதுக்குன்னு இப்படிதான் நடு பாதையில வழியை மறைச்சிட்டு நிப்பீங்களோ?” எனக் கேட்டு வேண்டுமென்றே சீண்டினான்.
அதில் அவள் வெற்றியை முறைத்து பார்க்க, “அய்யோ ஆத்தா பயமா இருக்கே, பார்க்க காளியாத்தா கணக்கா இருக்க… கொஞ்சம் கண்ணை சுருக்குத்தா” என்று வெளியில் கேலி செய்த போதிலும் உள்ளுக்குள் அவளின் அகன்ற விழியில் விரும்பியே விழுந்தான்.
பல வருட காதல் மனதில் குடி கொண்டிருக்கும் போது, மனதில் நிறைந்தவளிடம் பேச சந்தர்ப்பம் வாய்த்ததால் எந்த காதலன் தான் வேண்டாமென்று சொல்லுவான்.
‘பார்க்க அழகா இருக்கான்னு சைட் அடிச்சது தப்போ, பார்வையே சரியில்ல… வேணுமுன்னே வம்புக்கு இழுக்குறான்’ மனதில் நினைத்தவள்,
“போலீசா இருந்துகிட்டு இப்படிதான் முன்ன பின்ன தெரியா பொண்ணுகிட்ட பேசுவீங்களோ” எனக் கேட்டாள்.
அமரியுடன் சரிக்கு சரி நின்று வாயடிக்கு அவனுக்கும் ஆசை தான், ஆனால் கடமை நினைவுக்கு வர காவலதிகாரியாக அவளிடம் பேசத் தொடங்கினான்.
“நான் முதலில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல?” குரலில் கடுமை பூசி கம்பீரமாக வினவினான்.
ஒரு நொடி வெற்றியின் கம்பீரத்தில் தொலைந்தவள், ‘இவனுக்கு இந்த முறுக்கு மீசை நல்லாதான் இருக்குது’ என நினைத்தாள்.
அவனவளின் மனக்குரலும் அவனுக்கு கேட்டதோ சத்தமாக வாய்விட்டு சிரித்தான்.
‘சிரிக்கும்போது எம்புட்டு அழகா இருக்கான்’ என்று மனதோடு கூறிக்கொண்ட போதும் “சிரிக்காதே பார்க்க சகிக்கல” எனக் கூறி கீழே விழுந்த தனது வண்டியை தூக்க முயற்சித்தாள். முயன்றாள் அவ்வளவே, அவளால் அசைக்க கூட முடியவில்லை. பாவமாக வெற்றியை பார்த்தாள்.
வெற்றியோ வந்த சிரிப்பை அடக்கி அவளை மேலும் வெறுப்பேற்றாது அமைதியாக சென்று வண்டியை தூக்கி நிறுத்தினான்.
“நன்றி,” இவனுக்கெல்லாம் ஒரு நன்றி வீணாகி விட்டதே எனும் பாவனை அவளது தொனியில் தொக்கி நின்றது.
அமரியின் மனக்குரலே கேட்கும் போது அவளது உடல் மொழிக்கான அர்த்தமா வெற்றிக்கு புரியாது, இருப்பினும் தன்னுடைய விஷமத் தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,
“எங்க போகணும்?” என்றான்.
இம்முறை அமரியும் அவனது கேள்விக்கேற்ற பதிலை அளித்தாள்.
“காட்டுக்கு உள்ளுக்க போவணும்.”
ஏன் எனும் விதமாக வெற்றி புருவம் உயர்த்தினான்.
‘தொர வாய தொறந்து கேட்க மாட்டாரோ!’ அவளே வேண்டாமென்றாலும் அவளது மனம் அவனை விடுவதாக இல்லை போலும். எப்படியோ மனதை அடக்கியவள்,
“என்னோட ஃபிரண்ட், வழித் தவறி போயிட்டா(ள்)ன்னு நினைக்கிறேன்.” தடுமாறித்தான் கூறினாள்.
அமரி சொல்லியதும் வெற்றிக்கு தனக்கு வந்த தகவல் தான் நினைவு வந்தது.
“இப்போது அவளிடம் அதைப்பற்றி சொல்லி கலவரப்படுத்த வேண்டாம். ஒருவேளை அது வேறு யாரோவாகக் கூட இருக்கலாம்” என எண்ணிய வெற்றி,
“சரி என்கூட வா” என்க, அமரி அசையாது நின்றாள்.
வண்டிக்கு அருகில் சென்ற வெற்றி அவளும் பின்னால் வந்திருப்பாளென்று திரும்ப அவள் அங்கேயே நின்றிருக்க, வெற்றி என்ன என்றுக் கேட்டான். அவள் அவளது ஸ்கூட்டியை கைக்காட்ட,
“உன் வண்டிக்கு நான் கியாரண்டி” என்றான்.
“உங்களை எப்படி நான் நம்புறது?”
“நம்பிக்கை இருந்தா வா” என்ற வெற்றி வண்டியிலேறி அதனை இயக்கினான்,
“அடியே அமரி, இவங்களையும் விட்டுப்போட்டு வண்டியை உருட்டிக்கிட்டு இங்க இருந்து போவப்போறியா… இவங்க சொன்ன மாதிரி இப்போ இவங்களோட போயிட்டா வண்டியையும் இவங்களே கொண்டு வந்து விட்ருவாங்க” என்று தனக்குத்தானே யோசித்து ஒரு முடிவுக்கு வந்த அமரி ஓடிச்சென்று வண்டியிலேறி இருந்தாள்.
தனது ஊர் பக்கம் செல்லாது வேறு பக்கமாக அடவிக்குள் செல்லும் வெற்றியிடம், “இதுக்குள்ளார ஏன் போறீங்க?” என்று வினவினாள்.
“இங்க எனக்கொரு வேலை இருக்கு அதை முடிச்சிட்டு உன்னை உங்க ஊருக்குள்ள விட்டுடுறேன்” என்ற வெற்றியிடம் அடுத்து எதுவும் கேட்காது அமைதியாகியவள் மரங்களை வேடிக்கை பார்க்கலானாள்.
சில நிமிட அமைதிக்கு பிறகு,
“போலீசாவே இருந்தாலும் இப்படி முன்ன பின்ன தெரியாத ஆளு கூட தெரியாத இடத்துக்கு நம்பி போகக் கூடாது” என்றான்.
வெற்றியின் வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவன் புறம் திரும்பியவள், “உங்களோட அக்கறைக்கு மிக்க நன்றி” என்றவள் “உங்களை பார்த்தா பொண்ணுங்களை கடத்திட்டு போயி விக்கிறவங்க மாதிரி இல்லை” எனக் கூறினாள்.
யாரென்று அறிந்திடாத போதும் அவன் மீது அவனது எழில் கொண்ட நம்பிக்கை அவனுக்கு ஏதோ புரியா மகிழ்வினைத் அளித்தது.
“எங்க ஊரு பஞ்சாயத்துல உங்களை பார்த்திருக்கேன்” என்று அமரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெற்றி வர வேண்டிய இடம் வந்திருக்க, வண்டியை விட்டு இறங்கியவன்…
“நீ வண்டியிலேயே இரு” என்றவாறு அமரியை நோக்க அவளின் பார்வையோ ஓரிடத்தில் நிலைகுத்தி இருந்தது.
வெற்றியும் அவளின் பார்வை செல்லும் திசையில் செல்ல அங்கு ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டிருந்த பெண்ணின் உடலை கண்டதும், பயந்திருக்கிறாள் என முதலில் நினைத்தவன் அடுத்த நொடி ‘எழில் சொல்லிய அவளது தோழி’ என்று சிந்தித்து அமரியின் பக்கம் வருவதற்குள்,
“கலை” என்று பெருங்குரலெடுத்து ஸ்டெச்சரை நோக்கி ஓடினாள் அமரி.
அவளது கதரலிலும் கேவளிலும் வெற்றியே ஆடிப்போனான்.
அந்தளவிற்கு உள்ளுக்குள்ளிருந்து வெடித்து அழுதாள் அமரி.
தான் வந்தது அறிந்ததும் தனக்கு வணக்கம் வைத்த சக ஊழியர்களோ, வனத்துறையினரோ அவனது கருத்தில் பதியவில்லை. முழுக்க நிரம்பியிருந்தது கலையின் உடலை கட்டிக்கொண்டு துடித்து அழும் அவனது எழில் தான். எப்போதும் கலகலப்பாக பார்த்ததிருந்த அவனது எழிலின் கண்ணீர் முகம் கண்டவனின் மனம் சொல்ல முடியா வேதனையில் மூழ்கியது.
வெற்றியின் செவிகளை நிறைத்தது அமரியின் கதறல் வார்த்தைகள்.
வண்டி நின்றதும் எதிரே காக்கி உடையில் நின்றிருந்த காவலர்கள் பலர் அமரியின் கவனத்தை ஈர்த்தனர். அவர்கள் அனைவரும் எதையோ ஆலோசத்திக் கொண்டிருக்க அமரியின் பார்வை அவர்களை கடந்து முன்னுக்க நின்றிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் அதற்கு அருகில் தரையில் ஸ்டெச்சரில் வீற்றிருந்த இறந்த உடலின் மீது படிய, உலகமே ஒரு நொடி நின்று சுழல… கலை என்று விளித்தவாறு அருகில் ஓடினாள்.
உடனிருந்த காவலர்கள் தடுத்தும் முடியாது போக, பெண் காவலர்கள் இருவர் அமரியின் இருபுறமும் அவளின் கைகளை பிடித்து நிறுத்த முயல, அவற்றையெல்லாம் ஒரே திமிரளில் தகர்த்த அமரி கலையின் உடலுக்கு அருகில் சென்று அவ்வுடல் மீதே விழுந்தாள்.
அமரியை இழுக்கச் சென்ற பெண் காவலர்களை வேண்டாமென்று தனது பார்வையாலேயே வெற்றி தடுத்திருந்தான்.
“அய்யோ கலை”, தலையில் அடித்துக் கொள்வதை தவிர அமரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தோடியது.
“என்னை பார்க்க வந்து இப்படி பார்க்காமல் ஒரேயடியா போயிட்டியே, என்னாச்சு கலை உனக்கு… எழுந்து வா கலை, எனக்கு பயமாயிருக்கு.”
அமரியின் வார்த்தைகளைக் கேட்ட வெற்றிக்கு எழிலுக்கு கலை எவ்வளவு நெருக்கமானத் தோழியென்று தெரிந்தது. அவளின் கண்ணீர் அங்கிருப்போரின் மனதை கணக்கச் செய்தது.
அமரியின் கதறலில் அவளின் வார்த்தைகளை வெற்றியைத் தவிர மற்றவர்கள் கவனிக்கத் தவறினர்.
யாராலும் அமரியின் அழுகையையும் கதறலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அமரி அழுகையில் துடிக்க, வெற்றி என்ன செய்வதென்று தெரியாத தன்னிலையை வெறுத்தவனாக நின்றிருந்தான். நிமிடங்கள் பல கடந்தனவே அன்றி அமரி தனது அழுகையை நிறுத்தவதாக தெரியவில்லை. கலையின் உடலையும் ஆம்புலன்ஸில் ஏற்ற அவள் விடவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய எழிலின் அழுகையை காண முடியாது வெற்றி வேறு புறம் திரும்பி நின்று கொண்டான் என்றால், அவனது இத்தகைய செயல் ராம் மற்றும் அவனுடன் வந்திருந்த மற்ற காவலர்களுக்கு வித்தியாசமாக பட்டது.
பணி நேரத்தில் சிங்கமென கர்ஜித்து இருப்பவன், இப்போது ஒரு சிறு பெண்ணின் அழுகையில் ஸ்தம்பித்து நின்றிருப்பது வித்தியாசமாகத் தானே தெரியும். மற்றவர்களின் பார்வைக்கான பொருள் புரிந்தாலும் அதனையெல்லாம் வெற்றி கண்டுகொள்ள வில்லை.
கலையின் ரத்தம் தோய்ந்த உடலினை கைகளால் தடவி தடவி பார்த்து முகத்தில் அறைந்து அமரி அழ, அவளை ஆறுதல் படுத்த எழும் கைகளை கட்டுப்படுத்துவது வெற்றிக்கு வெகு சிரமமாக இருந்தது.
அந்நேரத்தில் தான் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று பார்க்க குறிப்பிட்ட தூரம் சென்ற கதிர் அங்கு வந்து சேர்ந்தான்.
முதலில் கதிரின் கண்களில் பட்டது அவனது நண்பன். வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்த பின்னரே அமரியின் அழுகை ஒலி கதிரின் செவி நுழைந்து கருத்தில் பதிந்தது. தங்கையின் கதறல் காதை நிறைக்க, தனது கவனத்தை தங்கையின் பக்கம் திருப்பியவன் இரண்டே அடிகளில் அமரியை நெருங்கியிருந்தான்.
அமரியின் தோளை தொட்டு, கலையின் உடல் மீது விழுந்து கிடந்தவளை எழுப்ப முயற்சி செய்ய முடியாமல் போகவே… கால் மடக்கி தரையில் குத்திட்டு அமர்ந்த கதிர் “அமரி” என்றழைக்க, தனது அண்ணனை ஏறிட்டு பார்த்தவள்…
“அண்ணா கலை” என்று அவன் மீதே சாய்ந்து அழுதாள்.
அந்நொடி நண்பனாகவே இருந்தாலும் கதிரின் மீது வெற்றிக்கு சிறு பொறாமை எழுந்தது. இவ்வளவு நேரம் அவளை ஆறுதல் படுத்த துடித்ததை, கதிர் உரிமையாய் ஒரு நொடியில் செய்து விட்டானே. கதிரின் இடத்தில் தானில்லையே, தன்னால் உரிமையாய் அவளது அருகில் கூட செல்ல முடியவில்லையே என்று சிறு கோபம் கூட எட்டி பார்த்தது.
அமரியின் அழுகைக்கு பின்னர் தான் இறந்து போன பெண் தன்னுடைய தங்கையின் தோழியென்று கதிருக்கு தெரிந்தது. அவனுமே என்ன செய்வதென்று புரியாது விழித்திருந்தான்.
‘இப்படியே விட்டால் இவ(ள்) அழுதே மயங்கி விழுந்தாலும் விழுந்திடுவாள்,’ என்று எண்ணிய வெற்றி… “வந்தவனும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கான்” என கதிரை வாய்க்குள்ளே நிந்தித்தான்.
“மேலும் அமரியை பார்க்கத்தான் கலை வந்திருக்கின்றாள் என்பதை யாரும் கவனிக்கவில்லை, அப்படி தெரிந்தால் தனது எழிலை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி காவல் நிலையம் அது இதுன்னு அலைய விட்டுவிடுவார்கள்” என்று பலவற்றையும் யோசித்த வெற்றி கதிரிடம் சென்றான்.
வெற்றி தனக்கு அருகில் வந்ததும் அவன் தன்னிடம் ஏதோ பேச காத்திருப்பது புரிந்தாலும், எப்படி தன் மீது சாய்ந்தழும் தங்கையை விட்டு சொல்வதென்று கதிர் தயங்கினான்.
நண்பனின் நிலையறிந்த வெற்றி பெண் காவலர் ஒருவரை அழைத்து அமரியை கைக்காட்ட, அவரும் வெற்றியின் உத்தரவுபடி அமரியின்ன் அருகில் சென்று ஆதரவாக அவளின் கரம் பற்ற, கதிர் அவரிடம் தங்கையை ஒப்படைத்து வெற்றியிடம் வந்தான்.
“வெற்றி.”
“நீ எழிலை கூட்டிட்டு முதலில் இங்கிருந்து கிளம்பு” என்ற வெற்றி வேறெதுவும் கதிரிடம் பேசாது அங்கிருந்த மருத்துவ பணியாளரிடம் சென்றான்.
அந்நிலையிலும் வெற்றியின் எழில் என்கிற விளிப்பினை கதிர் கவனிக்கத் தவறவில்லை. இதே மற்ற நேரமாக இருந்திருந்தால் அமரி யாரென்றே தெரியாததை போல் நடித்திருப்பான்.
ஆனால் இப்போது வெற்றியுமே எதையும் தெளிவாக சிந்திக்கும் நிலையில் இல்லை. அவனது எழிலின் அழுகையும், ஓய்ந்த தோற்றமும் அவனது சிந்தனையை மூழ்கடித்து இருந்தது.
அமரி முற்றிலும் ஓய்ந்து போயிருந்தாள்.
அமரியை கைத்தாங்களாக அழைத்து வந்து வண்டியில் அமர வைத்த கதிர், வெற்றியிடம் சென்று தான் கண்டெடுத்த கலையின் அலைபேசியை கொடுக்க…
“இனி இந்த வழக்கில் எழில் சம்பந்தப்படவேக் கூடாது” என்று மிகமிக அழுத்தமாக உரைத்தான் வெற்றி.
எதற்காக அவன் அவ்வாறு கூறுகின்றான் என்பது புரிந்தது. இத்தகைய கடினமான நேரத்திலும், தனக்குத் தோன்றிடாத தன் தங்கையின் மீதான வெற்றியின் அக்கறை கதிருக்கு அவனின் காதலின் ஆழத்தை உணர்த்தியது.
சரியென்று தலையசைத்து செல்லும் கதிரின் கையில் தண்ணீர் பாட்டில் ஒன்றை திணித்த வெற்றி அமரியை கண் காண்பித்தான்.
அப்போதுதான் அழுததால் அவளின் தொண்டை வற்றி வறண்டிருக்கும் என்பதே கதிர் உணர்ந்தான். அந்நேரத்திலும் தன்னுடைய நண்பன் தனது தங்கையின் மீது வைத்திருக்கும் காதலில் நெகிழ்ந்தான்.
கதிர் அமரியை கூட்டிக்கொண்டு சென்ற அடுத்த நொடி வெற்றி காவலனாக நிமிர்ந்து நின்றான்.
கலையின் உடலை ஆழ்ந்து ஆராய்ந்தவன், உடல் கிடந்த மார்க் செய்யப்பட்ட இடத்தினையும் ஆராய்ந்து சில தகவல்களை சேகரித்த பின்னரே ஆம்புலன்ஸில் ஏற்ற அனுமதித்தான்.
மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் ஆயத்தமாக, அதனுடன் ராமினை செல்ல பணித்த வெற்றி… “இதோடு சேர்த்து குமரனின் உடற்கூறு ஆய்வு அறிக்கையையும் வாங்கி வாடா” என்றான்.
ஆம்புலன்ஸ் புறப்பட்ட பின்னர் தான் வனத்துறை மேலதிகாரி கிருஷ்ணன் வந்து சேர்ந்தார்.
வெற்றி அவரை கண்டு கொள்ளவே இல்லை.
பெண் காவலர்களை காவல் நிலையம் செல்லுமாறு கூறியவன், மற்றொரு காவலரிடம் “வனத்துறையினர் ஆராய்ந்திருந்தாலும் பரவாயில்லை மீண்டும் ஒருமுறை இவ்விடத்தைச் சுற்றி நன்கு பரிசோதனை செய்யுங்கள்” என உத்தரவிட்டான்.
“என்ன தேடினாலும் விலங்கடிச்சு செத்துப்போன இடத்துல எந்தவொரு தடயமும் சிக்க வாய்ப்பில்லை.” கிருஷ்ணன் வெற்றிக்கு கேட்க வேண்டுமென தன் பணியாளரிடம் சத்தமாகவே கூறினார்.
“விலங்கு அடிச்சு தான் அந்த சிறு பெண் இறந்து விட்டது” என்ற வெற்றி, கிருஷ்ணனை நேருக்கு நேர் பார்த்து “ஆனால் அது இரண்டு கால் விலங்கு” என்று தெரிவித்தான்.
வெற்றி கூறியதில் கிருஷ்ணன் அரண்டு போனார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
42
+1
2
+1
2