இமை 47
விஜய்க்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து சுமித்ராவுடன் மருத்துவமனை வந்த எழில் முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் விஜய் இருந்த கோலத்தை பார்த்து சில நொடிகள் சுவாசிக்க முடியாமல் மூச்சிற்கு திணற, அவள் நிலை உணர்ந்து, அங்கிருந்த ஒரு பெண் எழிலுக்கு தண்ணீர் கொடுத்தாள்
அதைக்கூட உணராமல் விஜய்யின் அருகில் வந்த எழிலை ஒரு பெருமூச்சுடன் பார்த்த அந்த பெண் தன் அருகில் நின்றிருந்த ஆடவனை முறைத்து பார்க்க அந்த ஆடவனோ அந்த பெண்ணை பார்க்காமல் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்..
தீரா!!” என்று கதறி கொண்டு அவன் காலடியில் விழுந்தவள்.. இத்தனை நாள் தன் மனதில் மறைத்து வைத்திருந்த காதலை விஜய்யிடம் கூற, ஆனால் பாவம் அவன் தான் அவள் பேசுவதை கேட்கும் நிலையில் இல்லை.. அவன் சுவாசம் தடைபட, எழில் வேகமாக அவன் மார்பில் சாய்ந்து அவன் இதய துடிப்பை பரிசோதிக்க.. பதட்டத்தில் அவளால் சரியாக அவன் துடிப்பை உணர முடியாமல் போனது..
தன்னை நோக்கி நீண்ட கரம் தொய்ந்து விழுந்ததாலும், விஜய்யின் இதய துடிப்பை அவளால் சரியாக உணர முடியாததாலும் எழிலுக்கு நிதானமாக சிந்திக்க முடியவில்லை.. விஜய் தன்னை விட்டு சென்றுவிட்டான் என்றே நினைத்தாள்.. பெரும் கதறலுடன் அவன் மார்பில் விழுந்து அழுதவளை, அங்கிருந்தவர்கள் பாவமாக பார்த்தனர்..
“இருக்கும் போது அலட்சியம்.. இப்போ இல்லை என்று தெரிஞ்சும் இழந்ததை நினைச்சு அழுகை.. இதான் மனித இயல்பு.. அவன் உங்களை தேடி வந்த போதெல்லாம் அவனை அலட்சியம் செஞ்சிங்க.. இப்போ நீங்களே அவனை தேடி வந்திருக்கிங்க.. ஆனால் அவனால் உங்களை பார்க்க முடியல.. இனி உங்களால் அவனை பார்க்கவும் முடியாது.. நீங்க சந்தோஷமாக இருங்க சிஸ்டர் இனி இவனோட தொல்லை உங்களுக்கு இல்லை..” விதுரன் பேசிய பிறகு தான் எழில் அங்கிருந்தவர்களை பார்த்தாள் ..
விதுரன், வெண்பா, மலர் ஷக்தி நால்வரும் அங்கிருந்தனர். இவளை அழைத்து வந்த சுமித்ரா வெளியே இருக்கையில் தலை குணிந்து அமர்ந்திருந்தார்.. இவர்கள் அனைவரும் பார்வையில் பட்டாலும் எழில் கருத்தில் பதியவில்லை.. கண் மூடி படுத்திருந்த விஜய் மட்டும் தான் அவள் கவனத்தை நிறைத்திருந்தாள்..
“போன வாரம் கூட அவ்வளவு சந்தோஷமா எங்க கூட வீடியோ கால் பேசினான்.. எனக்கு என் சந்தோஷம் கிடைச்சிருச்சு இனி எனக்கு எதுவும் வேண்டாம் என்று அவ்வளவு நிறைவா பேசிட்டு இருந்தவன், இப்போ இப்படி கிடக்கிறான்.. இதான் சிஸ்டர் வாழ்க்கை எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது.. நாளைக்கு நடக்க போறதை நினைத்து இன்னைக்கு வருத்தப்பட்டுட்டு இருந்தா இன்னைக்கு இருக்குற சந்தோஷத்தை எப்ப அனுபவிக்கிறது?..”
“நாளைக்கு நாம நினைக்கிறது நடக்கலாம்.. நடக்காமலும் போகலாம்.. அது நடந்தே தீரும் என்று என்ன நிச்சயம்.. ஏன் நாளை என்பது நமக்கு வராமல் கூட போகலாம்.. இது எதுவும் நம்ம கையில இல்லை சிஸ்டர்.. இவனை கல்யாணம் பண்ணுனா பிரச்சனை வரும்னு நீங்களாக ஒரு கற்பனை செஞ்சு, அதுக்காக இவனை தள்ளி வைத்த உங்க வீம்பு, பிடிவாதம் இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாருங்க..” என்று நீளமாக பேசிய ஷக்தியை வலியுடன் திரும்பி பார்த்த எழில்
“நான் செஞ்சது தப்பு தான்.. அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு தான் நான் விலகிப் போனேன்.. ஆனா அவங்க சந்தோசமே நான் தான் என்று நினைக்க மறந்துட்டேன்.. இப்போ நான் அதை உணர்ந்துட்டேன்.. அவங்களை என்கிட்ட பேச சொல்லுங்க அண்ணா.. அவங்க இதய துடிப்பு கேட்க மாட்டேங்குது.. அவங்களுக்கு என்னமோ ஆச்சு.. யாராவது டாக்டரை கூப்பிடுங்களேன்.. கடவுளே நான் என்ன பண்ணுவேன்?.” என்று தவியாய் தவித்த எழில்
“பிளீஸ் அண்ணா இவங்களை எனக்கு எப்படியாவது காப்பாற்றிக் கொடுத்திடுங்க.. நான் இவங்களை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறேன்..” என்று இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட போன எழிலை அவசரமாக தடுத்த ஷக்தியும் விதுரனும், என்ன சிஸ்டர் நீங்க எங்களை போய்..” என்று வருத்தமாக கூறிய இருவரையும் பார்த்து
“எனக்கு உங்களை பார்த்த பிறகு தான் கொஞ்சம் நம்பிக்கை வருது இவங்களுக்கு ஒண்ணும் ஆகல.. நிச்சயமாக நீங்க இவங்களை விட மாட்டிங்க.. எதாவது செஞ்சு அவங்களை காப்பாத்திடுவிங்க..” என்று நம்பிக்கையுடன் கூற
“எங்களை நம்பறது வேஸ்ட் சிஸ்டர் எல்லாம் முடிஞ்சிருச்சு சிஸ்டர்.. அவனுக்கு இனி எங்களால் எதுவும் முடியாது..” என்று ஷக்தி தோள் குலுக்கி சொல்ல.. “இல்லை.. இல்லை உங்களால் இவங்களை காப்பாத்த முடியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. இவங்க உங்க ஃப்ரெண்ட் தானே.. உங்க கிட்ட தான் அவ்வளவு பணம் இருக்குள்ள.. நீங்க பெரிய டாக்டரை வரழைங்க.. எதாவது செய்ங்களேன்.. ஏன் இப்படி நின்ன இடத்தில் சிலை மாதிரி நிக்கறிங்க..” என்று எழில் இருவரையும் திட்ட,
“என்ன?! சிலை மாதிரி நிக்கிறோமா?!. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்களுக்குள் முணுமுணுத்தபடி, “எங்க மேல வச்ச நம்பிக்கையை நீங்க உங்க மேல வைங்க உங்கள் காதல் மேல வைங்க சிஸ்டர்.. இறந்து போன சத்திய மூர்த்தியை அவங்க வொய்ஃப் அந்த எமன் கூட சண்டை போட்டு அவங்க உயிரை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்களாம்..
இறந்து போனவங்களையே காப்பாற்றி கூட்டிட்டு வர சக்தி காதலுக்கு இருக்குன்னா.. சும்மா மயக்கமா நடிச்சிட்டு இருக்குற இவன உங்களால எழுப்ப முடியாதா என்ன?!” என்ற ஷக்தியை திகைப்பாக பார்த்து
“என்ன?!” எழில் ஷக்தி பேசுவது புரியாமல் பார்க்க
“அது வந்து சிஸ்டர்” என்று ஏதோ சொல்ல வந்த ஷக்தியின் காலை மிதித்த விதுரன் பேசாமல் இருக்கும்படி சைகை செய்து விட்டு “உங்க காதல் உண்மை என்று நீங்க நம்பினால் அவனை எழுப்பி விடுங்க என்று சொல்றான்.. இந்த ஷக்தி” என்று சமாளித்த விதுரன், அது சத்திய மூர்த்தி இல்லை.. சத்தியவான்..” என்று ஷக்தியின் காதில் முணமுணுத்த விதுரன் தங்களை பார்த்து கொண்டு இருந்த எழிலிடம் “உங்க திருப்திக்காக நாங்க டாக்டரை வரவழைக்கிறோம் சிஸ்டர்..” என்று விதுரன் மருத்துவரை அழைத்து விஜய்யை காண்பிக்க..
“விஜய்யை பரிசோதித்த மருத்துவர் “அவருக்கு உயிர் இருக்கு.. ஆனா அவருக்கு வாழணும் என்று ஆசை இல்லை போல.. எங்க ட்ரீட்மெண்ட் உடம்பு ஏத்துக்க மாட்டிங்குது அவர் ஏத்துக்கணும் என்றால் முதல்ல அவருக்கு வாழணும் என்று ஆசை வரணும்.. அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாமா ஸ்டேஜ்..” என்ற மருத்துவரை
“டாக்டர்?!..” என்று விதுரனும் ஷக்தியும் ஒரு சேர அழைத்து கண்ணை காட்ட..
“சாரி சாரி அவர் கோமா ஸ்டேஜ் போய்ட்டு இருக்காங்க.. முதல்ல அவர்கிட்ட யாராவது பேசுங்க.. எங்க ட்ரீட்மெண்ட் ஏத்துக்க அவர் உடம்பும் மனமும் தயாராக இருக்கணும்..” என்று கூறிவிட்டு தன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி துடைத்தபடி அந்த மருத்துவர் சென்றுவிட,
“பார்த்திங்களா சிஸ்டர் அவனுக்கு வாழவே விருப்பம் இல்லையாம்.. நீங்க பேசுங்க.. உங்க குரல் கேட்டு ஒரு வேளை அவன் விழித்தாலும் விழிக்கலாம்.. உங்கள் காதல் அவனுக்கு உயிர் கொடுத்தாலும் கொடுக்கலாம்.. போங்க சிஸ்டர் அவன் கூட பேசுங்க.. அவன் காதில் உங்க காதலை சத்தமாக சொல்லுங்க என்று விதுரன் சொல்ல..
“விஜய் தன்னை விட்டு செல்லவில்லை என்பதே பெறும் ஆறுதலாக இருக்க, எங்க காதல் உண்மை அண்ணா.. அவரை என்னால காப்பாத்த முடியலேன்னா நானும் அவர் கூடவே போய்ருவேன்.. என்று கண்களை துடைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் விஜய் அருகில் வந்து அமர்ந்த எழில் அவன் காதருகே குணிந்து,
“ஹோட்டல்கார்..!” என்று பட்டினும் மென்மையான குரலில் அழைக்க விஜய்யிடம் எந்த உணர்வும் இல்லை.. நம்ம முதன் முதலில் எங்க பார்த்தோம் என்று நினைவிருக்கா?. அந்த ஹோட்டல்ல நான் அவஸ்தையோடு நின்னுட்டு இருக்கும் போது என் கஷ்டத்தை நீங்க மட்டும் தான் புரிஞ்சு எனக்கு உதவி செஞ்சிங்க.. அப்போவே நீங்க என் ஆழ் மனதில் பதிஞ்சிட்டிங்க நினைக்கிறேன்.. அந்த கேரிங் என்னை அறியாமலே அஷ்வின் கிட்ட தேடிருக்கேன்..
அப்பறம் நம்ம ரெண்டாவது மீட்டிங் அந்த நகை கடையில் சுமித்ரா ஆண்டிக்கு பார்த்து பார்த்து நகை செலக்ட் செஞ்சிங்களே நீங்க ஆண்ட்டி மேல வச்சிருக்க அன்பை உணர்ந்து எனக்கும் இந்த அன்பு வேண்டும் என்று என் மனம் ஏக்கம் கொண்டது.. அப்பறம் சில வருடங்களுக்கு பிறகு காலேஜ்ல ஒரு பாப்பாவை கையில் வச்சு கொஞ்சிட்டு இருந்திங்களே..
அதை பார்க்க கவிதை மாதிரி அழகா இருந்தது.. உங்க கிட்ட பேச தான் ஆர்வமாக வந்தேன்.. நீங்க உங்க ஃப்ரெண்ட் கிட்ட ஏதோ பட்சி பறவை என்று பேசியதை கேட்டதும் சின்ன கோபம் வந்துச்சு அதான் நீங்க கூப்பிட்டதும் அலட்சியமாக திரும்பி பார்த்தேன்…
அஷ்வின் என்னை விட்டு போனதும், எனக்கு நிம்மதியாக தான் இருந்துச்சு ஆனால் அவன் சொன்ன காரணம் என் மனதில் ஆழ பதிஞ்ச தால் தான் நீங்க என்னை தேடி தேடி வரும் போதெல்லாம் கோபமாக பேசி அனுப்பினேன்.. ஆனால் அதெல்லாம் ஏன் என்று இப்போ புரியுது.. யார் மேல் உரிமை இருக்கோ அவங்க கிட்ட தான் நம்ம இயல்பாக இருப்போம்.. யார் மேலயோ காட்ட வேண்டிய கோபத்தை எல்லாம் உங்க கிட்ட காட்டிட்டேன்..
நான் எப்போ எல்லாம் ஆபத்தில் இருக்கேனோ அப்போ எல்லாம் நீங்க தானே வந்து காப்பாத்தி இருக்கிங்க.. நான் ஹாஸ்பிடல் இருக்கும் போது எனக்கு துணையாக இருந்து அக்கறையாக பார்த்தது அஷ்வின்னு தான் நினைச்சேன்.. அந்த அக்கறை பிடிச்சது ஆனால் அது அஷ்வின் மூலமாக வந்தது எனக்கு பிடிக்கல.. ஆனால் அது நீங்க தான் என்று தெரிஞ்சும் என் மனம் என்னையறியாமல் அமைதி அடைந்தது..
இப்படி என்னை அறியாமல் எனக்குள் நடந்த பல மாற்றங்களை நான் உணராமல் இருந்துட்டேன்.. இதெல்லாம் எப்போ உணர்ந்தேன் தெரியுமா..?” என்று கேட்டபடி எழில் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்த
“எப்போ?!” விஜய்யின் குரல் ஆவலாக கேட்க அத்தனை நேரம் கண்களை மூடி கொண்டு அந்த நாட்களை மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து சிறு புன்னகையுடன் பேசி கொண்டு இருந்த எழில் விஜய்யின் குரல் கேட்டு பட்டென்று கண்களை திறந்து விஜய் முகத்தை பார்க்க அவன் சலனமே இல்லாமல் கண்கள் மூடி இருப்பதை பார்த்து பெருமூச்சுடன்
“இந்த ஒரு வாரம் நீங்க என் பேச்சை கேட்டு என்னை கண்டு கொள்ளாமல் இருந்திங்கள்ல அப்போ தான்.. நான் உங்களை எந்த அளவுக்கு தேடியிருக்கேன் என்று உணர்ந்தேன்..”
“ அந்த வாண்டு நேத்ரா கூட உங்களை பத்தி எதுவும் சொல்லலை.. என்னை தேடி வந்த போது தான அம்மு உங்களுக்கு பழக்கம்.. ஆனால் அவ கூட எல்லாம் பேசறிங்க என்ன பார்க்கவே இல்லை நீங்க.. என்று குறைபட்டு கொண்ட எழிலின் குரலில் சிறு மனத்தாங்கல் இருந்ததுவோ..?
“நான் தான் உங்களை வர கூடாது என்னை பார்க்க கூடாது என்று சொன்னேன்.. ஆனால் என்னால தான் இருக்க முடியல.. ரொம்ப கஷ்டமாக இருந்தது.. இப்போவே சொல்லிட்டேன் நம்ம மேரேஜ் அப்பறம் நான் கோப பட்டாலும் நீங்க தான் என்னை சமாதானம் செய்யணும்..” என்று கட்டளையிட்ட எழில்
“சீக்கிரம் சரியாகி எழுந்து வாங்க ஹொட்டல்கார்.. நீங்க நடமாடாத இந்த உலகம் எனக்கு பிடிக்கவே இல்லை.. நானும், அம்முவும் உங்களை ரொம்ப தேடுவோம்.. நீங்க இல்லாம இத்தனை வருஷம் இருந்துட்டேன். ஆனால் உங்க காதலை உணர்ந்த பிறகு நீங்கள் இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுன்னு தோணுது.. பிளீஸ் எங்களுக்காக குணமாகி வாங்க ஹோட்டல் கார்..” என்று விஜய்யின் மார்பில் சாய்ந்து அழுது கொண்டு இருக்க
“சார்.. சார்.. சீக்கிரம் கிளம்புங்க.. எங்க டாக்டர் வராங்க.. ஊருக்கு போன டாக்டர் நாளைக்கு தான் வருவேன்னு சொல்லிட்டு இன்னைக்கே வந்துட்டாங்க.. நான் இந்த ரூம் வாடகைக்கு விட்டேன்னு தெரிஞ்சா என் வேலை போய்ரும் சீக்கிரம் கிளம்புங்க..” என்று பரபரப்பாக சொல்லியபடி அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் வார்ட் பாய் எழிலை துரிதப்படுத்த..
நடப்பதை புரியாமல் குழம்பியபடி எழில் பார்த்து கொண்டு இருக்க, இங்க என்ன சத்தம்?.. இது ஹாஸ்பிடலா இல்லை சந்தை கடையா?. இவ்வளவு சத்தமாக இருக்கு.. ஆமா இவங்க எல்லாம் யாரு?.. இங்க என்ன நடக்குது?..” என்று அந்த வார்ட் பாய்யை பார்த்து அந்த மருத்துவமனையின் பெரிய மருத்துவர் கோபமாக கேட்க
“சார் சந்தேகமே படாதிங்க இது உங்க ஹாஸ்பிடல் தான்.. கொஞ்ச நேரம் மட்டும் நாங்க வாடகைக்கு எடுத்தோம்..” என்று படுக்கையில் இருந்து எழுந்து இயல்பாக கூறிய விஜய்யை பார்த்து உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..
இமை சிமிட்டும்